ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!
உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி மற்றும் அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி என்ற கிறுக்கல் எழுத்தாளர் திரு. ந.வெற்றியழகன் இருவருக்கும் அந்நஜாத் இதழ் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் எழுதியது.
வாயளவில் எழுத்தளவில் அல்லாமல் உள்ளத்தால் உண்மையை – நேர்வழியை கடைபிடிப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும்.
மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 16-30 2008 உண்மை இதழ்களில் “அறிவுக்கு எட்டாத ஒன்று இருக்க முடியுமா? என்ற தலைப்பில், அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி – 1,2,3 என்ற குறுந்தலைப்பில், “கீழ்த்தரமான கிறுக்கல்” என்று கீழ்த்தரமான கிறுக்கல் நடையில் பல பக்கங்கள் நிரப்பப்பட்டுள்ளான்; வரவேற்கிறோம். விமர்சனங்களைக் கொண்டே சத்தியம்-உண்மை-நேர்வழி நிலைநாட்டப்படும் என்பதில் அந்நஜாத்திற்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் “உண்மை” என்ற பெயரில் இதழ் வெளியிடும் உங்களிடமே உண்மை இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். உங்களிடம் உண்மை இருப்பதாக நீங்கள் நம்பினால், அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி என்று எழுதி இருக்கும் நீங்கள், அந்த இதழுக்கு மாற்றுப் பிரதிகளை அனுப்பாமல் மறைக்க முற்பட்டிருப்பீர்களா? இத்தனைக்கும் அந்நஜாத் இதழின் மாற்றுப் பிரதி உண்மை இதழுக்கு ஆரம்பத்தலிருந்தே தவறாமல் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். உண்மை இதழுக்கு (JLS 75) மட்டுமல்ல விடுதலை இதழுக்கும் (JLS 59) மாற்றுப் பிரதிகள் தவறாமல் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். பத்திரிகை தர்மத்தையே காப்பாற்ற துணிவில்லாத நீங்கள், உண்மையை – நேர்வழியை எங்கே காப்பாற்றப் போகிறீர்கள், முதலில் அந்நஜாத் இதழுக்கு, உங்களின் உண்மை இதழின் மாற்றுப் பிரதியை அனுப்பி, பத்திரிகை தர்மத்தையும், உண்மையையும் நிலைநாட்ட முன் வாருங்கள். பல நினைவூட்டல் கடிதங்கள் எழுதியும் உண்மையையும், பத்திரிகை தர்மத்தையும் நிலைநாட்ட நீங்கள் இதுவரை முன்வரவில்லை. இதுவே உங்களின் பொய் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அந்நஜாத் ஏப்ரல் 1996 இதழில் இடம்பெற்ற ஒரே உண்மைக் கடவுள் பற்றிய (பொய்க் கடவுள்கள் பற்றியல்ல) விமர்சனத்திற்கு அளித்த விளக்கத்தை மறுத்து உண்மை இதழில் (ஜூன் 96, 16-30) இதே திரு.ந.வெற்றியழகன் அளித்த விமர்சனத்தை மீண்டும் படித்துப் பாணருங்கள். பொதுவாக மரியாதை கொடுத்து மரியாதையைப் பெறுவது நல்லவர்களின் நல்ல பண்பு.
அதன் பின்னர் அந்நஜாத் ஏப்ரல், செப்டம்பர், நவம்பர், டிசம்பர் 96 இதழ்களில் இடம்பெற்ற நியாயமான பகுத்தறிவு அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நாத்திகர்களால் பதில் அளிக்க முடிந்ததா? எப்படி மதப் புரோகிதர்கள் கொயபல்ஸ் தத்துவப்படி சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்களோ அதேபோல் நாத்திகர்களும் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
உண்மைக் கடவுளின் பெயரால் பொய்க் கடவுள்களைக் கற்பித்து மக்களை வஞ்சிக்கும் புரோகிதர்களிடம்தான் ஊருக்கு உபதேசம் செய்யும் தீய குணம் உண்டு. அதே தீய குணம் தான் கட்டுரையாளர் ந.வெற்றியழகனிடமும், மற்றும் நாத்திகர்களிடமும் காணப்படுகிறது. கடவுளை கற்பிப்பவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. இதைவிட கடவுள் நம்பிக்கையுடைய வர்களின் மனதைப் புண்படுத்தும் ஒரு இழிசொல் உண்டா? குறைந்தபட்சம் பொய்க்கடவுள்களை கற்பிப்பவன் முட்டாள்; பொய்க் கடவுள்களை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பது நாத்திகர்களின் கோஷமாக இருந்தால் அதில் உண்மையுண்டு; அதை அந்நஜாத் உங்களைவிட ஒருபடி அல்ல, பல படிகள் மேலே போய் மிகக் கடுமையாக விமர்சித்து வருவதை நீங்கள் அந்நஜாத் இதழைத் தொடர்ந்து படித்து வந்தால் அறியமுடியும்.
பல பொய்க் கடவுள்களைக் கற்பித்து அப்பாவி பொது மக்களை வஞ்சித்து, ஏமாற்றிப் புரோகிதர்கள் ஆதாயம் அடைந்து வருவது போல், நாத்திகர்களாகிய நீங்கள் அதற்கு எதிர்மறையில் நின்று ஒரேயொரு உண்மைக் கடவுளை மறுப்பதன் மூலம், மக்களை வஞ்சித்து, ஏமாற்றி ஆதாயம் அடைந்து வருகிறீர்கள். நாங்களோ அந்த ஒரே உண்மைக் கடவுளை மட்டும் ஏற்று, மனிதக் கற்பனைகளாகிய மனு தர்மத்தை மறுத்து, அந்த ஒரே கடவுளின் கருத்தாகிய அல்குர்ஆனின் உபதேசங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.
எங்களது பார்வையில், பொய்க் கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் புரோகிதர்களும், அதைக் காரணம் காட்டி ஒரேயொரு உண்மைக் கடவுளையும் மறுத்து மக்களை ஏமாற்றி வரும் நாத்திகர்களும் சம மதிப்புடையவர்களே. புரோகிதர்கள், நாத்திகர்கள் இந்த இரு சாராரும் சேர்ந்தே உலக் மக்களை வழிகெடுத்து அழிவுப் பாதையில் இட்டும் செல்கிறார்கள் என்பது அசைக்க முடியாத உண்மை. அதனால் மக்களை ஏமாற்றும் புரோகிதர்களை எந்த அளவு சாடுகிறோமோ அதே அளவு நாத்திகர்களையும் சாடும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
அந்த ஒரேயொரு உண்மைக் கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள்; அந்த ஒரே கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என முழங்கி வருகிறீர்களே! இது ஒன்றே நாத்திகர்களை மிக மிக இழிவாக வசை பாடினாலும் அது நியாயமானதே என்று உணர்த்தப் போதுமானதாக இருக்கிறது. ஆதி மனிதனிலிருந்து இதுவரை அந்த ஒரே இறைவனைப் பற்றிய உண்மைச் செய்திகளை மக்களுக்கு அறிவித்தவர்கள். இறைத் தூதர்களான ஆதம், நோவா, ஆப்ரஹாம், டேவிட், சாலமன், மோசஸ், ஜீஸஸ், முஹம்மது (இவர்கள் அனைவர்மீதும் அந்த ஒரே இறைவனின் சாந்தி உண்டாவதாக) போன்ற எண்ணற்ற சான்றோர்கள் அனைவரும் முட்டாள்கள் என்பதுதானே உங்களின் முழக்கம். அவர்களின் போதனையைக் கேட்டு அந்த ஒரே இறைவனை மட்டும் (பொய்க் கடவுள்கள், சமாதிகள், கொடிமரங்களை அல்ல) வணங்குகிறவர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகளே என்பதுதானே நாத்திகர்களின் முழக்கம்.
இறைத் தூதர்களான அந்த மனிதப் புனிதர்களோடு, நாத்திகர்கள் மதித்துப் போற்றும் பெரியார், இங்கர்சால், பிராட்லா, கோவூர் போன்றவர்களை ஒப்பிட முடியுமா? ஏணி வைத்தாலும் எட்டுமா? குடியை ஒழிக்கிறேன் என்று கூறி தனது தோட்டத்திலுள்ள தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டிச் சாய்த்தவர்தானே பெரியார்! தென்னை மரங்களை ஒழித்துவிட்டால் குடிப்பழக்கம் ஒழிந்து விடுமா? அதே எண்ணத்தில்தானே பொய்க்கடவுள்களுடன் அந்த ஒரே உண்மைக் கடவுளையும் ஒழித்துவிட்டால், கடவுள் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒழிந்து விடுவார்கள் என கற்பனை செய்து கொண்டு பிரசாரம் செய்கிறீர்கள்.
நீங்கள் மதித்துப் போற்றும் எந்தப் பகுத்தறிவு சீர்திருத்தவாதியும் இன்றைக்கு சுமார் 1450 ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 23 ஆண்டுகளுக்கு மட்டுமே பாடுபட்டு ஏற்படுத்திய சீர்திருத்தக் கருத்துக்கள் அல்லாமல், புதிதாக ஒரு சீர்திருத்தக் கருத்தை நிலைநாட்டியுள்ளார் என்று பட்டியலிட்டுக் காட்டமுடியுமா? பெரியார் சுமார் 75 ஆண்டுகள் பெரும்பாடுபட்டு இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) நிலைநாட்டாத ஒரே ஒரு புதிய சீர்திருத்தக் கருத்தை நிலைநாட்டினார் என்று உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா?
மதுவை ஒழிக்க தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டிச் சாய்த்தாரே! குடியை ஒழிக்க முடிந்ததா? ஆனால் இன்றைக்கு 1429 ஆண்டுகளுக்கு முன்னர் “நம்பிக்கையாளர்களே நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்.” (அல்குர்ஆன் 5:90)
என்ற இறைவாக்கை இறைத்தூதர் படித்துக் காட்டினாரோ இல்லையோ வீதிகளில் மது ஆறாக ஓடியது; மடாக்குடிகாரர்கள் என்ற பெயர் பெற்ற அந்த மக்கள் தங்கள் வீடுகளில் பீப்பாய், பீப்பாயாக சேமித்து வைத்திருந்த மதுவைக் கொண்டு வந்து வீதிகளில் கொட்டினால்கள். வீதிகள் மது ஆறாகப் பெருக்கெடுத்தது. இன்றைக்கும் இஸ்லாத்தை முறையாக விளங்கிப் பின்பற்றுகிற ஒரு முஸ்லிம் மதுவை. போதை தரும் பொருட்களைத் தொட்டுக் கூடப் பார்க்கமாட்டார்.
புரோகிதப் பார்ப்பணர்கள் ஹிந்து மக்களிடையே புகுத்தியுள்ள தீண்டாமை என்ற மகாகொடிய செயலே, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் செயலே பெரியாரையும், உங்களைப் போன்றோர்களையும் கொதித்தெழச் செய்தது. கடவுளின் பெயராலேயே இக்கொடிய செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன என்ற எண்ணத்திலேயே கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்தீர்கள். பெரியாரது 75 வருட முயற்சிகளும், அதன் பின்னர் உங்கள் அனைவரது அயராத முயற்சிகளும் உரிய பலனைத் தந்தனவா? தீண்டாமை ஒழிந்துவிட்டதா? இன இழிவு நீங்கியதா? இந்த விவரங்களையும், திரு.வெற்றியழகனின் தடுமாற்றங்களையும் அடுத்தடுத்துப் பார்ப்போம். (இறைவன் நாடினால்)