மறுபதிப்பு :
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அகில உலக அளவில் தப்லீஃக் பணி நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே: இந்தப் பணி மூலம் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களிடையே ஓரளவு மறுமலர்ச்சி ஏற்பட்டு வருவதையும் யாரும் மறுக்கமாட்டார்கள்.
ஆயினும் தப்லீஃக் பணியில் பயன்படுத்தப்படும் தஃலீம் தொகுப்புகளில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட பல சம்பவங்கள் இடம் பெற்றிருப்பதால், எதிர்பார்க்கும் அளவுக்கு மக்களிடையே மறுமலர்ச்சியை நம்மால் பார்க்க முடியவில்லை. நமது குறுகிய பார்வையிலேயே 200க்கும் அதிகமான முரண்பட்ட கருத்துக்களைப் பார்க்கிறோம். அவை அகற்றப்பட்டு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான தஃலீம் தொகுப்பு அமைக்கப்படுமானால் நல்லதொரு மறுமலர்ச்சியை முஸ்லிம் சமுதாயத்தில் எதிர் பார்க்கலாம். இந்த நல்ல நோக்கோடு ஹஜ்ரத்ஜீ அவர்களிடம் கடந்த 19.3.88 சனிக்கிழமை கீழ்காணும் கடிதத்தை நேரில் டில்லி சென்று கொடுத்துள்ளோம். அவர்களிடம் இருந்து முஸ்லிம் சமுதாயத்திற்குப் பலன் தரும் ஒரு முடிவை எதிர்பார்க்கிறோம்.
அனுப்புனர் : பெறுநர் :
அந்நஜாத் : ஹஜ்ரத்ஜீ அவர்கள்
51-பீ, ஜாபர்ஷா தெரு, திருச்சி-8. தப்லீஃக் மர்கஸ், நிஜாமுத்தீன், புதுடெல்லி.
அஸ்ஸலாமு அலைக்கும்!
மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய ஹஜ்ரத்ஜீ அவர்கள் கவனத்தில் கொண்டு ஆவன செய்வதற்காகக் கீழ்க்கண்டவைகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் முஸ்லிம்களை, தொழுகையை முறையாகவும், நிலையாகவும் நிறைவேற்றி இதர வழிபாடுகளிலும் ஈடுபடச் செய்ய தப்லீஃக் என்ற பெயரில் நடைபெற்றுவரும் சேவை பிரசித்தமானது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கூட அறியாமல், மௌட்டீகத்திலும் வழிகேட்டிலும் உழன்று, இஸ்லாத்தை விட்டு அகன்று நின்ற பெரும்பான்மை முஸ்லிம்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, அவர்களை வீடும், ஊரும், நாடும் விட்டு பல்வேறு ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பிரயாணம் செய்யும் மனப்பான்மையை வளர்க்கச் செய்தது தப்லீஃக் செய்த மிகப்பெரும் சாதனை ஆகும். பாராட்டிற்குரிய சிறந்த செயல். அல்ஹம்துலில்லாஹ்!
தொழுகையும், இதர வழிபாடுகளும் நிறைவேற்றப்படும்போது, அவை ‘இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்து இருத்தல் அவசியம். தப்லீஃக் இயக்கத்தால் தூண்டப்பட்டு இவைகளை நிறைவேற்றுபவர்களைப் பொறுத்த வரையில் இது காணப்படவில்லை. தொழுகையையும், மற்ற வழிபாடுகளையும் நிறைவேற்றுபவர்களில் பெரும்பாலானோர் தவறானக் கொள்கைகளாலும், நோக்கத்தாலும் உந்தப்பட்டவர்களாக இருக்கின்றனர். தொழுகையும், இதர வழிபாடுகளும் அல்லாஹ் ஈந்த அல்குர்ஆனின் அடிப்படையிலும,; ரசூல்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இவைகளின் அடிப்படையிலும் மாத்திரம் அமைந்தால் அல்லாமல், அவை இஸ்லாமிய முறையில் நிறைவேற்றப்பட்டதாக கருதவியலாது.
வழிகேட்டிலிருந்து “தப்லீஃக்” பணியால் மீட்கப்பட்டவர்கள் தாம் உண்மை இஸ்லாத்தை பின்பற்றி வாழ்கின்றோம் என்று கருதுகிறார்கள். ஆனால், அந்தோ அவர்களுக்கு ஊட்டப்பட்டவை குர்ஆன், ஹதீது இவைகளின் அடிப்படையில் உருவாகாத தவறான கருத்துக்களும், நோக்கங்களுமே ஆகும், இது உண்மையில் அமைய வேண்டுவதற்கு மாறாகவுள்ளது. அவர்கள் நம்பியுள்ள கோட்பாடுகளும், நோக்கங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. தப்லீஃக் தஃலீம் ஹல்காக்களில் வாசிக்கப்படும் கருத்துக்களில் பெரும்பாலானவை குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முற்றிலும் முரண் ஆனவை.
எனவே தப்லீஃக் ஜமாஅத் கற்பித்தவைகளின்படி செயல்படுபவர்களின் அமல்கள் இஸ்லாமிய ரீதியில் இல்லாமல் இருப்பதால் மற்ற முஸ்லிம்களையோ, இதர மதத்தினரையோ கவருவதில்லை. மாறாக மாற்று மதத்தினரிடையே, இஸ்லாத்தைப் பற்றி தவறான அபிப்பிராயங்கள் உருவாகக் காரணமாகின்றன. மற்ற மதங்களின் கொள்கைகளுக்கேற்ப சமுதாய பிரச்சினைகளினால் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் மாத்திரமே (சூபிஸத்தைப் பின்பற்றி) இறைவழிபாடு பூரணமாக நிறைவேற்றப்பட இயலும் என்ற கருத்துக்கள் எடுத்து கூறப்படுகின்றன. கராமாத்துக்களும், அவை போன்ற நிகழ்ச்சிகளும் கூறப்பட்டு அவைகளுக்கு பிரதானமும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகின்றன. எழுபது வருடங்களாக, தப்லீ.ஃக் உலகம் முழுவதும் செயல்பட்டு வந்த போதிலும், பொதுவாக மற்ற மதத்தினரை இஸ்லாத்தின்பால் ஈர்க்கத் தவறிவிட்டது.
எனவே தஃலீம் ஹல்காக்களில் வாசிக்கப்படும் நூற்கள் மாற்றப்பட்டு குர்ஆன், ஹதீதுகளின் போதனைகளை மட்டும் உள்ளடக்கியதாக வைக்கப்பட வேண்டும்..
நாங்கள் இங்கே எடுத்துரைப்பவைகள், தீர ஆராயாமல் மேல் எழுந்த வாரியாக எழுதப்பட்டவை அல்ல. பல வருடங்களாக பணியில் ஈடுபட்டோம். இஸ்லாத்தின் மறுமலர்ச்சியைக் காணும் ஆவலில், உண்மையான அறிவைத் தேட முனைந்தோம். கல்வியாளர்களோடு கலந்து ஆலோசித்தோம். நாங்கள் அணுகியவர்கள் எழுப்பிய சந்தேகங்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நிவர்த்தி செய்ய முயன்றோம். உண்மையை அறிய முனைந்த நாங்கள் தஃலீம் நூற்களில் பரவலாக ஊடுருவி விட்டக் குறைகளைக் கண்டோம். மேலும் குர்ஆன், ஹதீது இவ்விரண்டை மாத்திரமே எடுத்து இயம்பும் ஏடாக அந்நஜாத்தை தமிழ் மொழியில் வெளியிட்டு, முறையான கல்வி கற்காத பாமர மக்களிடம் அது ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியைக் கண்டோம். எனவேதான் இவைகளை எழுத முனைந்தோம்.
உலகம் முழுவதும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் குர்ஆன், ஹதீது இவ்விரண்டின் அடிப்படையில் பரப்ப, தப்லீஃக் ஜமாஅத்திற்கு எல்லாவிதமான அனுகூலங்களும், சாத்தியங்களும் உண்டாகி இருப்பதால், நாங்கள் இக்கோரிக்கையை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். விமர்சிக் வேண்டும் என்பதற்காக குறைகள் கூறப்படவில்லை. எங்களுடைய அவாவும், இறைவனிடம் வேண்டும் துஆவும் இவையே. குர்ஆன் ஹதீது இவைகளின் அடிப்படையில் தூய இஸ்லாம் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, அவர்கள் அல்லாஹ்வை வழிபட்டு, அவனது ரசூல்(ஸல்) அவர்களை மட்டுமே வழிப்பட்டு நடக்க வேண்டும். தப்லீஃக் ஜமாஅத் அதனை உருவகப்படுத்திய மவ்லானா இல்யாஸ்(ரஹ்)அவர்கள் விரும்பியபடி, அதன் தூய வடிவில் நிறைவான நிலையில் செயல்பட வேண்டும் என்ற ஆர்வமே எங்களை இவைகளை எழுதத் தூண்டியது.
எனவே, இன்று வாசிக்கப்படும் தஃலீம் நூற்கள் மாற்றப்பட்டு, குர்ஆன், ஹதீது இவைகளை மாத்திரம் உள்ளடக்கி எழுதப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டால் நிச்சயமாக ஒரு புரட்சி ஏற்படும். முஸ்லிம்களிடையே குர்ஆன், ஹதீதுகளை நேரடியாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ள இந் நூற்றாணடின் கால கட்டத்தில், முஸ்லிம்களுக்கு இது ஒரு பெரும் உதவியாக அமையும்; பிற மதத்தினரையும், இன்ஷா அல்லாஹ்; கவர்ந்து இழுக்கும். எங்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்ற பதில் கிடைக்கும் என நம்புகின்றோம்.
இவண், K.M.H அபூ அப்தில்லாஹ்,
ஆசிரியர் & வெளியிடுபவர்