குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?
தொடர்-6
3:7 வசனத்தின் சரியான பொருள்:
அவன்தான் (இந்) நெறிநூலை உம்மீது இறக்கினான். இதில் தீர்க்கமான (ஒரே பொருள்)வசனங்கள் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும் எஞ்சியவை பல்பொருள் பெறத்தக்கவை (தீர்க்கமற்றவை)யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள் குழப்பங்களை நாடு, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத்தேடி அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால் இவற்றின் உண்மைக் கருத்துக்களை (முடிவு-Final Verdict) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார். அறிவில் தேர்ந்தவர்களோ “நாங்கள் இவற்றில் (பூரணமாக) நம்பிக்கை கொண்டோம். இவை அனைத்துமே எங்கள் இரட்சகனிடமிருந்து வந்தவைதாம்” என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர வேறெவரும் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (3:7)
3:7 வசனத்தின் தவறான பொருள்:
அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) “முதஷாபிஹாத்” (என்னும் ஆயத்துக்கள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக “முதஷாபிஹ்” வசனங்களின் விளக்கத்தை தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களையும் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறியமாட்டார்கள். அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான்; நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (3:7)
“முத்தஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வையும், கல்வியில் திறமை மிக்கோரையும் தவிர மற்றவர்கள் அறியமாட்டார்கள்” என்ற இந்த 3:7 வசனத்தின் தவறான விளக்கம் பெரும் விபரீதங்களை உண்டாக்குகின்றது.
1. இஸ்லாத்தின் அடிப்படைகளை அலட்சியம் செய்கிறது.
2. அல்லாஹ்வும் விளங்க வேண்டிய கீழ் நிலையிலேயே இருக்கின்றான் என்று சொல்லி, அல்லாஹ்வின் அந்தஸ்தை மனித அந்தஸ்திற்குத் தாழ்த்துகின்றது.
3. அல்லாஹ் மட்டுமே அறிகிற உண்மைப் பொருளை மனிதர்களும் அறிவார்கள் என்று சொல்லி மனிதர்களின் அந்தஸ்தை அல்லாஹ்வின் அந்தஸ்திற்கு உயர்த்துகிறது.
இறையுணர்வு மிக்கவன் இவற்றைத் தாங்கிக் கொள்ள மாட்டான். எனவே 3:7 வசனத்தை வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்து அது முஹக்கமாத் வசனந்தான். அதில் பொருள் தடுமாற்றமில்லை. அதில் ஒரே பொருள் மட்டுமே எடுக்க முடியும். “முதஷாபிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான். கல்வி அறிவில் சிறந்தவர்கள். நாங்கள் இவற்றில் நம்பிக்கைக் கொள்கிறோம். இவை அனைத்தும் எங்கள் ரப்பிடமிருந்து வந்தவைதாம் என்று கூறுவர் என்ற விளக்கங்களை நிலைநாட்டும் நிர்பந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே இந்த 3:7 வசனத்தை நான்கு தலைப்புகளில் நாம் விரிவாக ஆராய்வோமாக!
அவையாவன:
1. 3:7 குர்ஆன் வசனத்தை, குர்ஆனைக் கொண்டே விளங்குவது.
2. 3:7 குர்ஆன் வசனத்தை ஹதீஸுகளைக் கொண்டு விளங்குவது
3. 3:7 குர்ஆன் வசனத்தை அரபி இலக்கண இலக்கிய அடிப்படையில் விளங்குவது
4. இறுதியாக அவர்கள் எடுத்து வைத்துள்ள வாதங்களை வரிக்கு வரி அலசி அவற்றின் விபரீதங்களைத் தெளிவு படுத்துவது.
1. குர்ஆனைக் கொண்டே குர்ஆனை விளங்குவது:
குர்ஆன் தனக்குத்தானே சுய விளக்கம் கொண்டதாக அமைந்துள்ளது குர்ஆனின் ஓர்அற்புதமே. இறையுணர்வுடன் குர்ஆனை அணுகுகிறவன் அதிலிருந்து தெளிவு பெற முடியும். இப்போது நாம் 3:7 குர்ஆன் வசனத்தை குர்ஆனைக் கொண்டே விளங்க முற்படுவோம். 3:7 வசனத்தில் மூன்று முக்கிய பதங்கள் இடம்பெற்றுள்ளன. அவையாவன:
1. “முஹ்க்கமாத்”
2. “முத்தஷாபிஹாத்”
3. “தஃவீல்”
இந்த முக்கிய மூன்று அரபி பதங்களும் எந்ததெந்த கருத்துக்களில் குர்ஆனில் பிரயோகப்படுத்துப்பட்டுள்ளன என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டால் 3:7 வசனத்தை மிகத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி விளங்கிக் கொள்ள முடியும்.
1.முஹ்க்கமாத்: “முஹ்க்கமாத்” என்ற பதம் அல்குர்ஆனில் 47:20ல் ஒருமையிலும், 3:7ல் பன்மையிலும் இடம் பெற்றுள்ளது.
ஈமான் கொண்டவர்கள் “”(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்பட வேண்டாமா? என்று கூறுகிறார்கள். ஆனால் திட்டவட்டமான (சந்தேகத்திற்கு இடமில்லாத) ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு, அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதோ அவர்கள் மரணாவஸ்தையில் மயங்கிக் கிடப்பவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்.
(அவர்களுக்குக்) கேடுதான்” (47:20)
இங்கு “சூரத்துன் முஹ்க்கமத்துன்” என்ற பதம் திட்டவட்டமான (சந்தேகத்திற்கு இடமில்லாத) ஓர் அத்தியாயம் என்ற பொருளில் இடம் பெறுகிறது. இந்த வசனம் தெளிவாக – குறிப்பாக- பொருள் தடுமாற்றமில்லாத ஒன்றுக்கு “முஹ்க்கமத்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது. அதே அடிப்படையில் 3:7 வசனத்தில் இடம் பெற்றுள்ள “ஆயாத்தும் முஹ்க்கமாத்” என்ற பதம் தெளிவான – குறிப்பான-பொருள் தடுமாற்றமில்லாத வசனங்கள் என்ற பொருளையே தருகின்றது என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. மேலும் தெளிவு பெற கீழ்வரும் வசனங்களை ஆராய்வோம். 10:35, 37:154, 68:36 வசனங்களில் “முஹ்க்கமாத்” பதத்தைச் சார்ந்த “தஹ்க்குமூன்” “கைஃபதஹ்க்குமுன்” எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்-தீர்ப்பளிக்கிறீர்கள்-தீர்மானிக்கிறீர்கள் என்ற பொருளில் “தஹ்க்குமூன்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படித் தீர்மானமாக முடிவு செய்யப்பட்ட ஒன்றையே “முஹ்க்கமாத்” என்று கூறப்படுகிறது. இதனை இன்னும் தெளிவாக 22:52 வசனம் உறுதிப்படுத்துகிறது.
“எந்தத் தூதரையும், நபியையும் அனுப்பினாலும் அவர் அறிவித்த செய்தியுடன் ஷைத்தான் எதையும் சேர்க்காது இருந்ததில்லை. ஷைத்தான் சேர்ந்தவற்றை அகற்றிய பின் அல்லாஹ் தன் வசனங்களை உறுதிப்படுத்துகிறான்” (22:52)
இங்கு அல்லாஹ் தன் வசனங்களை உறுதிப்படுத்துகிறான் என்பதில் “யுஹ்க்கிமுல்லாஹு ஆயாத்திஹி என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த “யுஹ்க்கிமு” என்ற பதமும் “முஹ்க்கமத்” பதத்தைச் சார்ந்ததே. அதாவது ஷைத்தான்கள் பல கருத்துக்களைச் சேர்த்து இறை வசனங்களைக் குழப்ப முற்படும்போது, அல்லாஹ் அந்த குழப்பத்தை நீக்கி தனது வசனங்களைக் குழப்பத்திற்கிடமில்லாமல் உறுதி செய்கிறான் என்பது தெளிவாகிறது. இதனை இப்படியும் சொல்லலாம். பல விளக்கங்களைப் பெற முடியாத – பொருள் தடுமாற்றத்தைத் தராத-குறிப்பான-ஒரே பொருளைத் தரும் வசனங்கள் முஹக்கமாத் வசனங்கள் என்று கூறப்படுகின்றன. “இது நெறிநூலாகும். இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், நன்கறிபவனும், ஞானமிக்கோனுமாகிய (இறை)வனிடம் இருந்து (வந்து)ள்ளவை” (11:1) என்ற இறைவசனமும் இதனை உணர்த்துகிறது. இங்கும் “உஹ்க்கிமத் ஆயாத்துஹு” என்ற “முஹ்க்மத்” பதத்தைச் சார்ந்த பதமே இடம் பெற்றுள்ளது.
இந்த இறை வசனங்கள் அனைத்தையும் பார்க்கும்போது குர்ஆனிலிருந்து நாம் விளங்குவது “ஆயாத்தும் முஹ்க்கமாத்” என்றால் – பல பொருளைப் பெற முடியாத-பொருள் தடுமாற்றத்தைத் தராத -தெளிவான-குறிப்பான -இறைவனால் தீர்ப்புச் செய்யப்பட்டு விட்ட ஒரே பொருளைத் தரும் வசனங்களாகும் என்பதாகும்.
அடுத்து இங்கு இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “சட்ட திட்டங்கள் கூறக்கூடிய வசனங்களே “முஹ்க்கம்” என்று தவறாகப் பொருள் கொண்டுள்ளனர். இது பெருந்தவறாகும். சட்டதிட்டங்கள் பற்றிக் கூறும் வசனங்கள் அனைத்தும் “முஹ்க்கம்” வசனங்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம், உறுதிபடத் தெரியாத ஒன்றைச் சட்டமாக்கிச் செயல்படுத்த முடியாது. செயல்படுத்தும் விஷயங்களில் திட்டமான ஞானம் வேண்டும்.
“எதைப் பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்”. (17:36)
ஆனால் அனைத்து “முஹ்க்கம்” வசனங்களும் சட்ட திட்டங்களுக்குரியவை அல்ல. சட்டப் பிரச்சினைகளைக் கூறாத “முஹ்க்கம்” வசனங்களுமுண்டு. “கரகங்கள் எல்லாம் கருப்பு” என்றால் “கருப்பாயிருப்பவை அனைத்தும் காகங்கள்” என்று சொல்லுவது எப்படித் தவறோ, அதே போல் “சட்ட திட்டங்களுக்குரிய வசனங்கள் அனைத்தும் “”முஹ்க்கம் வசனங்கள்” என்பதால் “”முஹ்க்கம் வசனங்கள் அனைத்தும் சட்டதிட்டங்களுக்குரியவை”” என்று சொல்லுவதும் தவறாகும்.
உதாரணமாக,
அன்றியும், “”குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோர் விருந்து) பிரிந்து நில்லுங்கள்”” (என்று குற்றவாளிகளிடம் மறுமையில் கூறப்படும்). (36:59)
இந்த வசனம் மறுமையில் நிச்சயமாக நிகழப்போகும் நிலையைப் பற்றி சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லும் ஒரு “முஹ்க்கம்” வசனமாகும். இந்த வசனத்தில் பொருள் தடுமாற்றமோ, ஒன்றுக்கு மேல் பொருள் பெறப்படும் நிலையோ இல்லை. ஆயினும் இந்த வசனத்திலிருந்து எந்தச் சட்ட திட்டமும் எடுக்கப் படுவதில்லை. இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டி இந்த உலகில் இவர்களெல்லாம் நல்லவர்கள், இவர்களெல்லாம் கெட்டவர்கள் என்று தீர்ப்பளித்து மக்களை இரு பிரிவினராகப் பிரிக்க முடியாது.
இந்த உலகில் தொழுகையில் பேணுதலற்ற ஒருவர், பொய் சொல்லும் ஒருவர், அல்லாஹ் மீது ஆணையாக என்று சொல்லி பொய்ச் சத்தியம் செய்து மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தும் ஒருவர், புறம் பேசி திரியும் ஒருவர் தமது பேச்சுத் திறமை, வாதத் திறமை இவற்றைக் கொண்டு, தான் ஒரு நல்லவர் போல் நடிக்கலாம். மக்களும் அவரை நல்லவராக நம்பலாம். இந்தஉலகில் யாரும் அவரைக் கெட்டவர் என்று தீர்ப்பளித்து நல்லவர்களிலிருந்து பிரித்துவிட முடியாது. அப்படிப்பட்ட ஒருவர் தனது தவறுகளை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, அல்லாஹ்விடமும் மனமுருகி, பாவமன்னிப்புக் கோரி “தெளபா” செய்யாத நிலையில் மரணித்து விடுவாரானால், இந்த 36:59 வசனப்படி நாளை மறுமையில் நல்லவர்களிலிருந்து பிரிக்கப்பட்டு கெட்டவர் என தீர்ப்பளிக்கப்படுவார் என்பது உறுதி. ஆதம்(அலை) முதல் உலகம் அழியும் வரை தோன்றும் கோடானு கோடி மக்கள் முன் அவமானப்பட்டு சிறுமைப்பட்டு இழிவடைந்து நரகம் புக நேரிடும். இந்த உலகில் இன்று ஒரு சிலரிடம் நல்ல பெயர் வாங்குவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை இந்த வசனத்தின் மூலம் உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள இந்த வசனம் ஒரு வாய்ப்பைத் தருகிறது.
இப்படி, இறையுணர்வு (தக்வா) மிக்கவர்கள் தங்களின் போக்கை மாற்றி வெற்றியுடைய வாழ்க்கை வாழ வழிவகுக்கும் பல “முஹ்க்கம்” வசனங்கள் குர்ஆனில் காணப்படுகின்றன. அவை சட்ட திட்டங்களுக்குரிய வசனங்கள் அல்ல. கட்டளைக்குரிய வசனங்கள் என்று முஹ்க்கமாத் வசனங்களைச் சொல்வதால், சட்ட திட்டங்களுக்குரிய வசனங்கள் என்று கொள்ள முடியாது. பின்பற்றப்பட வேண்டிய வசனங்கள் என்று கொள்ளலாம். ஆக முஹ்க்கமாத் வசனங்கள் பற்றிய ஒரு தெளிவான தீர்வைப் பெறுகிறோம்.
2. “முத்தஷாபிஹாத்”
அடுத்து நாம் விளங்க வேண்டிய அரபி பதம் “முதஷாபிஹாத்” ஆகும். “முத்தஷாபிஹாத்” என்ற பதம் குர்ஆனில் 3:7லும், “முத்தஷாபிஹின் என்று 6:99, 6:141லும், முத்தஷாபிஹன் என்று 2:25, 6:141, 39:23லும் முஷ்தபிஹன் என்று 6:99லும், “தஷாபஹத்” என்று 2:118லும், “தஷாபஹ” என்று 2:70, 3:7, 13:16லும் “ஷிப்பிஹ” என்று 4:157லும் இடம்பெறுகிறது.
மேலே குறிப்பிட்ட எல்லா இடங்களிலும், வெவ்வேறானவற்றை ஒன்றுபோல் தோற்றமளிக்கச் செய்யும் ஒன்றைக் குறிக்கவே இப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 39:23 தவிர மற்ற இடங்களில் பொருள் தடுமாற்றத்தையோ, பார்வை தடுமாற்றத்தையோ தந்து, சந்தேகத்தில் ஆக்குபவற்றைக் குறிக்கவே இந்த “முத்தஷாபிஹாத்” பதமும், அதனைச் சார்ந்த பதங்களும் இடம் பெற்றுள்ளன. இதிலிருந்து “ஆயாத்தும் முத்தஷாபிஹாத்” என்ற பதம் பல பொருள்களை முரண்பாடில்லாமல் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள குர்ஆன் வசனங்களைக் குறிக்கிறது என்பதும் தெளிவாகப் புரிகிறது.
அதாவது “முஹக்கமாத்” வசனங்களுக்கு நேர் எதிரிடையான நிலையிலுள்ள வசனங்கள் “முத்தஷாபிஹாத்” வசனங்களாகும். “முத்தஷாபிஹாத்” வசனங்களிலுள்ள பொருள் தடுமாற்றம் தீர்க்கப்பட்டு குறிப்பான ஒரே பொருள் பெறப்படுமானால் “முத்தஷாபிஹாத்” வசனங்கள் அவற்றின் நிலையை இழந்து முஹ்க்கமாத் வசனங்களின் நிலைக்கு வந்து விடுகின்றன. உதாரணமாக, வார்த்து எடுத்ததுபோல் இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். அவர்கள் இருவரும் தனித்தனிப் பெயரை உடையவர்கள். இப்போது அந்த இருவரையும் பார்ப்பவர்களுக்கு பார்வை தடுமாற்றம் ஏற்பட்டு இவர் இன்ன பெயரை உடையவர். இவர் இன்ன பெயரை உடையவர் என்று கூறுவதில் சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. இப்படிப்பட்ட நிலையையே “முத்தஷாபிஹாத்” என்ற பதம் குறிக்கிறது. இந்த நிலையில் அந்த இருவரும் தங்கள் தங்கள் பெயரைச் சொல்லி விடுகிறார்கள். இப்போது இவர் இன்னார் தான். இவர் இன்னார்தான் என்ற சந்தேகத்திற்கு இடமில்லாத நிலையையே முஹ்க்கமாத் என்ற பதம் குறிக்கிறது.
இப்போது நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். பொருள் தடுமாற்றத்தை தரும் “முத்தஷாபிஹாத்” வசனங்களுக்குத் திட்டமான உறுதியான பொருளைத் தந்து அவற்றை “முஹ்க்கமாத்” நிலைக்கு மாற்றும் வல்லமை “வர்ராஸுகூனஃபில் இல்மி” என்று சொல்லக்கூடிய கல்வியில் திறமை மிக்கோர்களுக்கு உண்டா? அதாவது அல்குர்ஆனிலுள்ள “முஹக்கமாத்” முத்தஷாபிஹாத்” என்ற இருவகையான வசனங்களில் “முத்தஷாபிஹாத்” வசனங்களையும் “முஹ்க்கமாத்” வசனங்களின் நிலைக்கு மாற்றி முழு குர்ஆனையும் “முஹ்க்காத்” வசனங்கள் அடங்கியதாக ஆக்கும் வல்லமை கல்வியில் திறமை மிக்கோருக்கு உண்டா? நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அல்லாஹ் இறக்கியுள்ள குர்ஆனின் நிலையை மாற்றும் வல்லமையை அவர்கள் பெற்று விடுவார்கள். அதாவது அல்லாஹ்வின் நிலைக்கு அவர்கள் உயர்ந்து விடுவார்கள். இது இப்னு அரபியின் அத்வைத (சூபிஸ) கொள்கைக்கு ஆதரவு அளிப்பதாக இருக்கிறது. இது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மிகக் கொடியகுற்றத்தை ஏற்படுத்துமா? இல்லையா? என்பது சிந்தனையாளர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்றாகும்.
இன்னொருவிஷயம் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். 3:7 வசனம் மட்டுமே “முத்தஷாபிஹாத்” வசனங்கள் பற்றிச் சொல்லுகிறது. மேலே நாம் குறிப்பிட்டுள்ள வசனங்களில் “முத்தஷாபிஹாத்” பதம் வந்திருக்கிறதேயல்லாமல் எந்த வசனமும் “முத்தஷாபிஹாத்” வசனங்கள் பற்றிச் சொல்லவில்லை. 39:23 வசனம் முதஷாபிஹ் வசனங்கள் பற்றிச் சொல்லுவதாக குறிப்பிடுவது தவறு. அந்த வசனம் இதோ:
“”அல்லாஹ் மிக அழகான விஷயங்களை நெறிநூலாக இறக்கியருளினான்: இவை (முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும் (முத்தஷாபிஹ்), (மனதில் பதியுமாறு) திரும்பத்திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் ரப்புக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய மேனிகள் இவற்றைக் கேட்கும்போது சிலிர்த்து விடுகின்றன. பிறகு அவர்களின் மேனிகளும், உள்ளங்களும் இறை நினைவில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம் அவன் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகின்றான். ஆனால் எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23)
3:7 வசனத்தில் ஒரே வசனத்தில் முரண் இல்லாமல் பல பொருள் பெறப்படுவதை “முத்தஷாபிஹாத்” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 39:23ல் முழு குர்ஆனிலுள்ள சுமார் 6236 வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல் ஒத்திருப்பதை “முத்தஷாபிஹாத்” என்றும், மனதில் பதியுமாறு திரும்பத் திரும்பத் கூறப்படுவதை “மஸானீ” என்றும் கூறப்பட்டுள்ளது. முழு குர்ஆனிலுள்ள சுமார் 6236 வசனங்களும் முரண்பாடில்லாமல் ஒன்றுக்கொன்று ஒத்திருப்பதைப் பார்க்கும் மனிதனின் மேனி சிலிர்த்து, அல்லாஹ்வின் வல்லமையையும், அல்குர்ஆனின் அற்புதத்தையும் உளமாற ஒப்புக்கொண்டு இறை நினைவால் உள்ளம் இளகுவதைக் குறிப்பிடும் 39:23 வசனத்தை முத்தஷாபிஹாத் வசனங்கள் பற்றியது என்று கூறி, முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை கல்வியறிவில் திறமைமிக்கோர் அறிவதன் காரணமாகவே அவர்களின் மேனி சிலிக்கிறது என்று கூறுவது விதண்டாவாதமே ஆகும் ஷிர்க்காகும்.
39:23 வசனத்தில் “வர்ராஸிகூன ஃபில் இல்மி” என்பவர்களைப் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை. “யக்வ்ன ரப்பஹும்” என்று பொதுவாக தங்கள் ரப்பை அஞ்சுபவர்களைப் பற்றியே சொல்லப்பட்டிருக்கிறது என்பதையாவது அவர்கள் கவனிக்க வேண்டாமா? அவர்களது கூற்றுப்படி கல்வியில் திறமை மிக்கோர் மட்டுமின்றி, தங்கள் ரப்பை அஞ்சும் அனைவரும் “முத்தஷாபிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை அறிந்து அவர்களின் மேனி சிலிர்க்கிறது என்று பொருள் ஏற்பட்டு, கல்வியில் திறமை மிக்கோர் மட்டுமே அறிகிறார்கள் என்ற அவர்களின் கூற்றுக்கே அவர்கள் முரண்படுவதும் அவர்களுக்குத் தெரியவில்லையா?
ஒரே வசனத்தில் பல பொருள்கள் முரண்பாடில்லாமல் பெறப்படும் நிலைக்கும், முழு குர்ஆனின் சுமார் 6236 வசனங்களும் முரண்பாடில்லாமல் ஒத்திருக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசம் இவர்களுக்குத் தெரியவில்லையா? 3:7 வசனத்தில், ஒரே வசனத்தில் பெறப்படும் பல பொருள்களினால் ஏற்படும் தடுமாற்ற நிலையும், 39:23 வசனத்தில் முழு குர்ஆனிலுள்ள சுமார் 6236 வசனங்களும் முரண்பாடில்லாமல் காட்சியளிப்பதினால் ஏற்படும் ஆச்சரிய நிலையும் ஒன்றாகுமா? “முத்தஷாபிஹாத்” என்ற பதம் இருந்து விட்டால், இவர்கள் இஷ்டப்படி பொருள் கொண்டு விட முடியுமா?
3. தஃவீல்:
மூன்றாவதாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய அரபி பதம் “தஃவீல்” ஆகும். இப்பதம் சிறிய உச்சரிப்பு வித்தியாசங்களுடன் 3:7, 4:59, 7:53, 10:39, 12:6,21,36,37, 44,45,100,101, 17:35, 18:78, 82 ஆகிய குர்ஆன் வசனங்களில் காணப்படுகின்றது. இவற்றில் 10:39, 12:6,21,26,44,45,100,101, 18:78,82 ஆகிய வசனங்களில் தஃவீல் எனும் பதம் விளக்கம் என்ற பொருளிலும், 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் முடிவு என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளதை அறிகிறோம்.
இப்போது அவர்கள் சர்ச்சை செய்யும் இடமான 3:7 வசனத்தில் “தஃவீல்” என்ற பதம் என்ன பொருளில் இடம் பெற்றுள்ளது என்பதைத் தீர்க்கமாக நாம் அறியக் கடமைப்பட்டிருக்கிறோம். அதற்கு முன் குர்ஆனில் காணப்படும் 3:7 வசனத்தைத் தவிர இதர எல்லா வசனங்களிலும் இந்த “தஃவீல்” என்ற பதம் மனிதர்களுடன் இணைத்துச் சொல்லபபடும் நிலையில், இந்த 3:7 வசனத்தில் மட்டும் “வமா யஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹ்” என்ற அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லப்படுகிறது என்பதை நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த இடத்தில் அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லப்படும் “தஃலீல்” என்ற பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொள்ளுவது பொருந்துமா? முன் பக்கங்களில் இதனை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம். இங்கு தஃவீல் என்ற அரபி பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொடுத்தது மட்டுமல்லாமல், “முத்தஷாபிஹாத்” தொடர் கட்டுரை முழுவதும் “முத்தஷாபிஹாத்” வசனங்களை விளங்குவது என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 3:7 வசனத்திலுள்ள “தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம் என்பது பொருள் அல்ல. 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் உள்ளது போல் (இறுதி) முடிவு (ய்ஷ்ஐழியி Verdஷ்உமி) என்ற பொருள் மட்டுமே கொள்ள முடியும் என்பது உறுதியாகி விட்டால், அவர்களின் “முத்தஷாபிஹாத்” கட்டுரைத் தொடர் முழுவதுமே அடிப்படையின்றி பொருளற்றதாகிவிடும்.