அபூ ஃபாத்திமா
அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: “அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்( மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க) கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின் வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.” (அல்குர்ஆன் 42:21)
(நபியே! நீர் கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ள வற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:16)
இந்த இரண்டு குர்ஆன் வசனங்களும், அல்லாஹ்வுக்கு மட்டுமே மார்க்கம் சொந்தம்! அவனே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான்! ஒன்றை மார்க்கமாக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது!
அதற்கு மாற்றமாக, மனிதர்களால் மார்க்க மாக்கப்பட்டதை அதாவது, ‘பித்அத்’துக்களை எடுத்து நடப்பவர்கள் அல்லாஹ்வுக்கு இணை(ஷிர்க்) வைக்கிறார்கள்!
அந்த ‘பித்அத்’துக்களை உண்டாக்கியவர்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக ஆக்கி விட்டார்கள்!
இது இணை (ஷிர்க்) வைக்கும் மன்னிக்ப்படாத குற்றமே என்பனவற்றை தெள்ளத் தெளிவாக அறிவுறுத்துகின்றன.
1. “எனக்கு முன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களுக்கும், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியினுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்ததாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினானவான். இதன் பின்னர், ஒரு கடுகளவேனும் ஈமான் ்என்பது கிடையாது”, என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
ஆதாரம் : இப்னு மஸ்ஊத்(ரழி), நூல்: முஸ்லிம்
2. “வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்(ஜல்)வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத ‘பித்அத்’கள். ‘பித்அத’கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்(ரழி), ஜாபிர்(ரழி),
நூல்கள் : புகாரீ, முஸ்லிம், நஸயீ.
3. “உங்களிடையே இரண்டை விட்டுச் சொல்கிறேன். அவற்றைப் பற்றி பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்(ஜல்)வின் வேதம். இரண்டு எனது வழிமுறை,”
அறிவிப்பாளர்: மாலிக் இப்னு அனஸ்(ரழி), நூல்: முஅத்தா
4. அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்: “எவரர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும சரியே” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரீ, முஸ்லிம்
5. நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது அதில் அழிந்த நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டான்.”
அறிவிப்பாளர்: உமர்(ரழி); நூல் : ரஜீன்.
6. ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார்கள்: மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அங்கு புற்ப்பட்டனர். குராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தனர். பின்னர் நிப(ஸல்) அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்களும் அதனைப் பார்த்த பின்னர் அதனைப் பருகினர். இதன் பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் “அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே! என்று கூறினர். (முஸ்லிம், திர்மிதீ)
7. “எவர்ட மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள்மீது அல்லாஹ்வினதும் , மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது” என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
அறிவிப்பாளர்: அலீ(ரழி),நூல்: அபூதாவூது, நஸயீ.
8. நபி(ஸல்) அவர்கள், நபித்தோழர் பராஉ பின் ஆஸஃப்(ரழி) அவர்களுக்கு, இரவில் படுக்கப்போகும் பொழுது ஓதும் துஆ ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “……….வநபிய்யி கல்லதீ அர்ஸல்த………” என்று கற்றுக் கொடுத்ததை, நபித்தோழர் “…வரசூலி கல்லதீ அர்ஸல்த….” என்று ஓதிக் காண்பித்த போது, நபி(ஸல்) அவர்கள், இல்லை வநபிய்யி கல்லதீ அர்ஸல்த…” என்றே (தான் ஓதிக் காட்டியபடியே) ஓதுமாறு கூறினார்கள். (புகாரீ)
‘நஸய்யி கல்லதீ, என்பதை ‘ரசூலிகல்லதீ’ என்று சொன்னதையே நபி(ஸல்) அவர்கள் அனுமதமிக்காமல், அதைக் கண்டித்து திருத்தி இருக்குமபோது, ஒருவர் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை, அது அழகானது என்றுகூறி செய்ய முற்பட்டால் அவருடைநிலை என்ன என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
மேற்காணும் குர்ஆனின் வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளும், மார்க்கத்தில் புதிதாக அணு அளவும் இணைக்க முடியாது என்பதை வலியுறுத்துகின்றன என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் உண்மை விசுவாசிகள் விளங்கிக் கொள்ள முடியும் . இனி பித்அத் விஷயமாக நபிதோழர்களுடைய அறிவுரைகளைப் பார்ப்போம்.
1.”நான் உங்களிடம் அல்லாஹ் கூறுகிறான், அல்லாஹ்வுடைய ரசூல்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறுகிறேன்.
நீங்களோ அபூபக்கர் சொன்னார்; உமர் சொன்னார் என்று கூறுகிறீர்கள். எனவே உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்.
3. ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டமாக “திக்ரு”, ஸலவாத்து ஒதிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள், “நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவனாக இருக்கிறேன். நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் யாரும் இவ்வாறு திக்ரு, ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத பித்அத்தைச் செய்கிறீர்கள்” என்று கூறி அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.
4. ஒருவர் தும்மியதற்கு பிறகு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தபடி ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று சொல்வதோடு ‘வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் என்று இணைத்துக் கொண்டார். இதனை ‘பித்அத்’ என்று கண்டித்து திருத்தினார்கள் இப்னு உமர்(ரழி) அவர்கள்.
5. “பித்அத்”கள் அனைத்தும் வழிகேடுகள் தான். மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது (ஹஸன்) என்று கருதினாலும் சரியே” என இப்னு உமர்(ரழி) கூறியுள்ளார்கள்.
6. “பின்பற்றபவனாக இரு. புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே,” என இப்னு அப்பாஸ் (ரழி) உபதேசம் செய்துள்ளார்கள்.
7. “நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீர்கள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை.” என ஹுதைபா(ரழி) அறிவித்துள்ளார்கள்.
8. “அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரழி) அவர்கள் ‘பிஸ்மியை’சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்ததாகவும், அதைக் கண்ட அவருடைய தகப்பனார், மகனே! நான் நபி(ஸல்) அவர்கள், அபூபக்கர் சித்தீக்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோருக்குப் பின்னே தொழுதிருக்கிறேன்; அவர்களில் யாரும் ‘பிஸ்மியை’ சப்தமிட்டு ஓதியதை நான் கேட்டதில்லை. எனவே, மார்க்கத்தில் இல்லாத ‘பித்அத்’ நீ செய்வதாக நான் கருதுகிறேன் என்று கண்டித்துள்ளார்கள்.”
இச்செய்தியை அவர்களே அறிவிக்கிறார்கள். நூல் : திர்மிதீ, நஸயீ, அஹ்மத்
அடுத்து, தாபிஈன்களில் தலை சிறந்தவரும் சீரிய கலீஃபாவுமான உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்களின் ‘பித்அத்’ விஷயமான எச்சரிக்கையையும் தருகிறோம் அது பின்வருமாறு உள்ளது.
“அல்லாஹ்வின் ஏவல்களைக்கொண்டும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளைக் கொண்டும் மார்க்கத்தைப் போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை(பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.”
இமாம்களின் நல் உபதேசங்கள்:
இதற்கு மேலும் இது விஷயத்தில் சந்தேகிப்பவர்கள் இமாம்களின் பெயரால் மத்ஹபுகளை அமைத்துக் கொண்டிருக்கும் முகல்லிதுகளேயாகும். ஆனால் அந்த மரியாதைக்குரிய இமாம்கள்” எங்களை தத்லீது செய்யாதீர்கள் – எங்கள் பெயரால் மத்ஹபுகளை அமைக்காதீர்கள்”. என்றே தெளிவாகக் கூறி இருக்கின்றார்கள். அந்த இமாம்களின் கூற்றுக்கு முரணாக மத்ஹபுகளை அமைத்திருப்பது போல், இங்கும் அந்த மத்ஹபுகளை அமைத்திருப்பது போல், இங்கும் அந்த இமாம்களின் தெளிவான உபதேசங்களுக்கு விரோதமாகவே ‘பித்அத்’களை உண்டாக்கி செய்து வருகின்றனர். இதோ அந்த மரியாதைக்குரிய இமாம்களின் நல் உபதேசங்கள்.
1.இமாம் அபூஹனீபா(ரஹ்) கூறியுள்ளார்கள்:
“நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபி தோழர்களின் நடைமுறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய் இருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்து ‘பித்அத்’களும் வழிகேடுகளேயாகும்.”
2. இமாம்கள் மாலிக்(ரஹ்) கூறியுள்ளார்கள்:
மார்க்கத்தில் ‘பித்அத்’ உண்டாக்கி அதற்கு ‘பித்அததுஹஸனா’ என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன் நபி(ஸல்) அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்து விட்டார்கள் என்று கருதுகிறான். ஏனென்றால், அல்லாஹ், ‘அல்யவ்ம அக்மல்த்து வக்கும் தீனக்கும்….., என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக இல்லாதது இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.
3. இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறியுள்ளார்கள்:
“எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி, அதை ‘பித்அத்’து ஹஸனா (அழகிய பித்அத்) என்று சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே (மதம்) உண்டாக்கி விட்டான்.”
4. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பால்(ரஹ்) கூறியுள்ளார்கள்.
“எங்களிடத்தில் சுன்னாவின் அடிப்படையாவது: ரசூல்(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப்பின்பற்றி ‘பித்அத்’களை விடுவதேயாகும். ஏனென்றால் ‘பிதஅத்’க்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும்.
நூல்: அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ
மேற்கூரிய மரியாதைக்குரிய நான்குஇமாம்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறோம் என்று சொல்பவர்கள். அவர்களின் மணியான இந்த உபதேசங்களுக்கு நேர் முரணாக ‘பித்அத்’களில் ஏன் தான் மூழ்கி இருக்கிறார்களோ? நாம் அறியோம். அது மட்டுமல்ல, ‘பித்அத்’களை வகை வகைகளாக தரம் பிரித்துக் கொண்டு தாங்களும் குழப்பிப் போய், மக்களையும் குழப்புவது அதைவிட விந்தையாக இருக்கிறது.
அடுத்து,’பித்அத்’களை நியாயப்படுத்த அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்வோம்!
காலமாறுதலினால், விஞ்ஞான வளர்ச்சியினால், ஏற்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை காரணமாகக் காட்டி, இவையெல்லாம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாதவைதானே! புதுமைகள் தானே! ‘பித்அத்’ ஹஸனா தானே! என்று நியாயம் கற்பித்து மார்க்கத்திலும் புதுமைகளை நுழைக்க முற்படுகிறார்கள்.
உதாரணமாக, நவீன வாகனங்களைப் பயன்படுத்துவது, நவீன கட்டிடங்களில் வாழ்வது, நவீன கல்விக் கூடங்கள் கட்டுவது, நவீன கருவிகளை பயன்படுத்துவது, இவற்றையெல்லாம் ‘பித்அத் ஹஸனா’ என்று பெயர் சூட்டுகின்றனர். இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை என்று கூறி மார்க்கத்திலும் “பித்அத் ஹஸனாவை” உண்டாக்குகின்றனர். ஆழ்ந்து சிந்திப்பவர்கள் இக்கூற்றில் உள்ள தவறை உணர்ந்து கொள்ள முடியும்.
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து ‘வஹீ’ மூலமாகவும், அவனது அங்கீகாரத்தின் மூலமாகவும் போதித்த மார்க்கத்தில், மனித அபிப்பிராயத்தில் நலவாகத் தெரியும் விஷயங்களைப் புகுத்துவதையே ‘பித்அத்’ என்று கண்டித்துள்ளார்களேயல்லாமல், இவயைல்லாத உலகக்காரியங்களில் உலகிலேயே நிதர்சனமாக இலாபத்தைப் பெறும், அதே சமயம் குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரண் இல்லாத நவீன கண்டு பிடிப்புகளைப் பற்றி பித்அத் என்று கூறவில்லை இதற்கு ஆதாரமான ஹதீஸ்களைக் கீழே தருகிறோம்.
நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில் அங்கு நடந்து வந்த ஒரு விவசாய முறையைத் தடுத்து விட்டார்கள். அதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இது விஷயம் நபி(ஸல் அவர்களுக்குத் தெரிந்ததும், நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களின் மார்க்கம் பற்றி நான் கட்டளையிடுவேனாயின் அதை ஏற்று நடங்கள். அன்றி நான் என்து ஆலோசனையைக் கொண்டு ஒன்றைக் கூறினால், உங்கள் நோக்கப்படி செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தனர்.
அறிவிப்பவர்:ராபிஃஇப்னு கதீஜ்(ரழி), முஸ்லிம்
இதேபோல் விடுதலைப் பெற்ற பரீரா(ரழி) தனது அடிமைக் கணவர் முகீஸை(ரழி) வேண்டாம் என்று அறிவித்த போது, முகீஸின்(ரழி) மனவேதனையைக் கேட்டு, நபி(ஸல்) அவர்கள் வருந்திழ பரீராவை(ரழி), முகீஸோடு(ரழி) வாழும்படி சொன்னதற்கு, இது மார்க்கக் கட்டளையா? என்று பரீரா(ரழி) கேட்டனர். எனது சிபாரிசு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். நபி(ஸல்) அவர்களின் சிபாரிசை பரீரா(ரழி) ஏற்றுக் கொள்ளவில்லை நபி(ஸல்) அவர்களும் அதற்காக அவர்களைக் கண்டிக்கவில்லை.
அறிவிப்பவர்:ராபிஃஇப்னு அப்பாஸ்்(ரழி), நூல்: புகாரீ, அபூதாவூது, நஸயீ, திரிமிதீ
“பத்ரு போரின் போது முஸ்லிம்கள் தங்கள் முகாமை எந்த இடத்தில் அமைத்துக் கொள்வது என்ற விஷயத்தில், நபி(ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு மாற்றமாக வேறு இடத்தை ஹப்பாப் இப்னுல் முந்திர் என்ற நபித்தோழர் தேர்ந்தெடுத்து, இது முகாம் அமைப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் என்று சொன்னபோது அதை நபி(ஸல்) அவர்கள் ஏற்று தன் கருத்தை, மாற்றிக் கொண்டார்கள்” காரணம், நபி(ஸல்) அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த இடத்தில் தான் முகாம் அமைக்க வேண்டுமென்பது இறைக்கட்டளை அல்ல. இதை நபி(ஸல்) அவர்கள் தன் கருத்தை மாற்றிக் கொண்ட தன் மூலம் விளங்க முடிகிறது”.
மேற்காணும் ஹதீஸ், ஆதாரங்கிலிருந்து உலகக் காரியங்களில் நிதர்சனமாக, பலனைப் பெறும் விஷயங்களை செய்வது ‘பித்அத்’ ஆகாது. விபரம் அறியாதவர்களே இவற்றை பித்அத் என்று கூறுகிறார்கள் என்பது தெளிவாகின்றது.
‘பித்அத் போல் தோன்றும் காரியங்கள்
அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் காலத்தில் தான் குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்பட்டது, உதுமான (ரழி) காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டன; குர்ஆனை எளிதாக ஓத அரபி லிபியில் அகர, இகர உகர குறிகள் இடப்பட்டன உமர் (ரழி) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை மீண்டும் ஜமாஅத்தாக ஆக்கியது, இவற்றை ஆதாரமாகக் காட்டி, இவற்றிற்கு ‘பித்அத்’ ஹஸனா’ என்று பெயரிட்டு பித்அத்தை நியாயப்படுத்த முற்படுகின்றனர். அறிவாளிகளும் இவற்றில் தடுமாறவே செய்கின்றனர் எனவு இவற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து விளங்குவோம்.
1.குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்படுவது
நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலேயே குர்ஆனின் முதல் அத்தியாயத்தில் இருந்து 114-ம் அத்தியாயம் வரை முறையாக நபி(ஸல்) அவர்களாலேயே கோர்வை செய்யப்பட்டன என்பதே உண்மையாகும். புதிதாக சில வசனங்கள் இறங்கியவுடன் நபி(ஸல்) அவர்கள் அவற்றை ஓதிக்காட்டி இன்ன அத்தியாயத்தில், இன்ன வசனத்திற்கும் இன்ன வசனத்திற்கும் இடையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தெளிவாகக் கூறி அவ்வாறே பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு அத்தியாயத்தினுடைய ‘பிஸ்மி’ முதற்கொண்டு நபி(ஸல்) அவர்களின் கட்டளையின் படியே எழுதப்பட்டன. 9ஆம் அத்தியாயமான சூரத்துத்தவ்பாவிற்கு ‘பிஸ்மி’ எழுதும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இன்றுவரை ‘பிஸ்மி’ எழுதப்படாமலே இருக்கிறது. இன்று யாரும் அதுவும் ஒரு அத்தியாயம் தானே பிஸ்மி தவறுதலாக விடப்பட்டு இருக்கின்றது என்று கூறி 9-ஆம் அத்தியாயத்திற்கு ‘பிஸ்மி’ எழுத முற்பட்டால் அது ‘பித்அத்’ ஆகும. ஆக மார்க்க அடிப்படையில் குர்ஆனில் எவ்வித கூடுதல், குறைதல் ஏற்படவில்லை, என்பதே உண்மையாகும்.
நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலேயே, இவ்வாறு நிறைவு செய்யப்பட்டு, நபி தோழர்கள் சிலர் சிலரிடம் இருந்த சில சில வசனங்கள் அனைத்தையும் அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒன்று திரட்டப்பட்டு ஒரே நூலாக ஆக்கப்பட்டது. உஸ்மான்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல பிரதிகள் எடுக்கப்பட்டன. இதனால் ‘வஹீ’ மூலம் அறிவிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களிலோ அவற்றின் கருத்துக்களிலோ புதிதாக(பித்அத்) ஒன்றும் இணைக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். முறையோடு சிந்திப்பவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். இதே போல் அன்று தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் எழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள் இன்று அழகிய காகிதத்தில் எழுதப்படுகின்றன. இதற்கு மேலும் முன்னேறி குர்ஆன் வசனங்கள் காரிகளின் இனிமையான குரல்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அவற்றை நாம் கேட்டு விளங்கிச் செயல்பட எளிதாக ஆக்கப்பட்டுள்ளது.
நாளை கம்ப்யூட்டரில் கொடுக்கப்பட்டு, தேவைப்படும் வசனத்தை, தேவைப்படும் நேரத்தில் மிக எளிதாக எடுத்துப் பார்த்து விளங்கிச் செயல்பட இன்னும் நவீன வசதிகள் ஏற்படலாம். எனவே இவற்றையெல்லாம் ‘பித்அத்’ எனச் சொல்வது, நபி(ஸல்) அவர்கள் எவற்றை ‘பித்அத்’ என்று குறிப்பிட்டார்கள் என்பதை முறையாக விளங்கிக் கொள்ளாததேயாகும்.
2. உஸ்மான்(ரழி) அவர்கள் காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டதின் நோக்கம், பரந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் உள்ள மக்களுக்கு முறையாக கோர்வை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் எளிதில் அவர்களுக்கு கிடைத்து, அவர்கள் அவற்றை பார்வையிட்டு விளங்கிச் செயல்பட் வேண்டும் என்பதேயாகும். அதல்லாமல், நபி(ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ மூலம் அறிவிக்ப்பட்டு, மறுமையில் இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுத்தும் மார்க்க காரியங்களைப் போல் செய்ப்பட்டது அல்ல, ‘பரக்கத்’ உண்டாகும் என்ற நம்பிக்கையில் செய்யப்பட்டதும் அல்ல. எனவே, இச்செயலையும் ‘பித்அத்’ என்று குறிப்பிடுவது அறியாமையேயாகும்.
3. குர்ஆன் நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், அகர இகர உகர குறிகள் இல்லாமல், எழுதப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களது காலத்திற்குப் பிறகு இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி, அஜமி(அரபி அல்லாதவர்கள்)களும் குர்ஆனை ஓதும் நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் எளிதாகவும், முறையாகவும் குர்ஆனை ஓதி விளங்கி, செயல்படும் நோக்கத்தோடு குர்ஆனுக்கு அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டன. உண்மையில் இது அரபி லிபியில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றமேயல்லாமல் மார்க்கத்தில் ஏற்பட்ட அல்லது குர்ஆனில் ஏற்பட்ட ஒரு புதுமை (பித்அத்) அல்ல. அரபி தெரிந்தவர், அந்தக் குறிகள் இடப்படாத குர்ஆனை எப்படி ஓதுகின்றாரோ, அதே போல் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஓர் அஜமி (அரபி அல்லாதவர்) அந்த குறிகள் இடப்பட்ட குர்ஆனை ஓதவும், விளங்கிச் செயல்படவும் செய்கிறார். எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ மூலம் அறிவிக்கப்பட்டதில் எவ்வித மாற்றமமும் இதனால் ஏற்படவில்லை. ஆகவே, இதனையும், பித்அத் என்று கூறுவது தவறேயாகும்.
4. உமர் (ரழி) அவர்களும்,ரமழான் இரவுத்தொழுகையும்
உமர்(ரழி) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை தராவிஹ் என்று பெயரிட்டு, அதனை 20 ரகாஅத்துகளாக்கி ஜமாஅத்தாகவும் ஆக்கியதாக முஸ்லிம் சமுதாயம் காலங்காலமாக நம்பி வருகின்றது! சொல்லி வருகின்றது! ஆனால் இவற்றிற்கு ஹதீஸில் நம்மால் எந்தவித ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை. நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் இத்தொழுகையை ரமழான் இரவுத் தொழுகை என்ற பெயரால் 8 ரகாஅத்துகள் தொழுது வந்ததற்கு மூன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அதேபோல்,உமர்(ரழி) அவர்கள் உபைஇப்னு கஃபு(ரழி), தமீமுத்தாரி(ரழி) ஆகிய இரு நபிதோழர்களுக்கு 8 ரகாஅத்துக்கள் தொழ வைக்க கட்டளையிட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸும் காணப்படுகிறது. நபி(ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் ஜமாஅத்தாக இத்தொழுகையை தொழுது விட்டு, நான்காவது இரவு அது பர்ழாக ஆக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே, அவர்கள் ஜமாஅத் செய்வதை விட்டதாக தெளிவான அறிவிப்பு புகாரியில் காணப்படுகிறது. மற்றபடி நபி(ஸல்) அவர்களே, உபை இப்னு கஃபு(ரழி) அவர்கள் பெண்களுக்கு இத்தொழுகையை 8 ரகாஅத்து ஜமாஅத்தாக நடத்த அங்கீகாரம் அளித்ததற்குரிய ஸஹீஹான ஹதீஸ் காணப்படுகின்றது. ஆகவே, உமர்(ரழி) அவர்கள் இத்தொழுகையில் செய்த ஒரே மாற்றம் ரசூல்(ஸல்) அவர்கள் 3 நாட்கள் ஒரே ஜமாஅத்தாக செய்து காட்டிய சுன்னத்தைப் பின்பற்றி மீண்டும் அதை அமுல்படுத்தியதாகும். சிறு சிறு ஜமாஅத்துகளாக நடந்து வந்த இத்தொழுகையை ஒரே இமாமின் கீழ், ஒரே ஜமாஅத்தாக ஆக்கியது மட்டுமேயாகும்.
மேற்கண்ட விபரங்களையெல்லாம் முறையாக சிந்திப்பவர்கள் உமர்(ரழி) அவர்கள் மார்க்கத்தில் புதிதாக (பித்அத்) ஒன்றையும் ஏற்படுத்ததவில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். மற்றபடி, உமர்(ரழி) அவர்கள் இத்தொழுகையில் செய்த ஒரே மாற்றம் ரசூல்(ஸல்) அவர்கள் 3 நாட்கள் ஒரே ஜமாஅத்தாக செய்து காட்டிய சுன்னத்தைப் பின்பற்றி மீண்டும் அதை அமுல்படுத்தியதாகும். சிறு சிறு ஜமாஅத்துகளாக நடந்து வந்த இத்தொழுகையை ஒரே இமாமின் கீழ், ஒரே ஜமாஅத்தாக ஆக்கியது மட்டுமேயாகும்.
மேற்கண்ட விபரங்களையெல்லாம் முறையாக சிந்திப்பவர்கள் உமர்(ரழி) அவர்கள் மார்க்கத்தில் புதிதாக (பித்அத்) ஒன்றையும் ஏற்படுத்தவில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். மற்றபடி, உமர்(ரழி) அவர்கள் “தராவீஹ்” என்று பெயரிட்டார்கள். 20 ரகாஅத்துகளாக ஆக்கினார்கள் என்பதற்கு ஹதீஸிலோ, சரித்திர, நூற்களிலோ எவ்வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு சொல்வதெல்லாம் அவர்கள் மீது வீண் பழி சுமத்துவதேயாகும். மார்க்கத்தில் இல்லாததை புதிதாக அவர்கள் உண்டாக்கவில்லை என்பதை உறுதியுடன் சொல்ல முடியும். மேலும், அவர்கள் “நிஃம் ஹாதிஹில் பித்ஆ” என்று கூறியதாக ஹதீஸில் காணப்படுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட பித்அத்தாக அறிஞர்களால் கணிக்கப்படவே இல்லை. நடைமுறையில், ஆச்சரியத்தோடு சொல்லப்பட்ட ஒரு வார்த்தையாகவே கணிக்கப்படுகின்றது. காரணம், நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத புதிய எந்த ஒரு விஷயமும் உமர்(ரழி)அவர்களின் இந்த நடவடிக்கைகளில் ஏற்படவில்லை என்பதேயாகும்.
இவ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் கலீஃபாக்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இந்த நடைமுறைகளை ஆதாரமாகக் காட்டி, ‘பித்அத் ஹஸனா’வை நியாயப்டுத்த யாரும் முற்பட்டால் அவர்களுக்கு நாம் கூறும் இன்னொரு விளக்கமாவது வவருமாற: நபி(ஸல்) அவர்கள் எனது சுன்னத்தையும், கடவாய்ப் பற்களால் பற்றிப்பிடிப்பது போன்ற எனது சுன்னத்தைப் பற்றிப்பிடித்து நேர்வழி நடக்கும் எனது கலீஃபாக்களின் சுன்னத்தையும், பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற கருத்துப்பட வரும் ஸஹீஹான ஹதீஸ் ஒன்று காணப்படுகின்றது. இதில் நபி(ஸல்) அவர்கள் எனது சுன்னத்து என்று குறிப்பிட்டது ‘வஹீயின் தொடர்போடு இருந்த, நபி(ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகும். நேர்வழி நடக்கும் கலீஃபாக்களின் சுன்னத்து என்று குறிப்பிட்டது, நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரத்திற்கு மாற்றமில்லாத கலீஃபாக்களின் நடைமுறையாகும். இந்த அடிப்படையில், கலீஃபாக்களுடைய இச்செயல்களுக்கு நபி(ஸல்) அவர்களின் ஒப்புதல் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது. மேலும், அந்த நடவடிக்கைகள் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரத்திற்கு முரணாக இல்லை என்பதும் தெளிவான விஷயமாகும்.
இந்த நிலையில், இவர்கள் கலீஃபாக்களின் இந்த நடவடிக்கைகளை ‘பித்அத் ஹஸனாவிற்கு ஆதாரமாகக் காட்டி, இவர்கள், மார்க்கத்தில் புதுமைகளை (பித்அத்) உண்டாக்க, இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? கலீஃபாக்களின் நடைமுறைக்கு மேலே உள்ள ஹதீஸ் ஆதாரமாக இருப்பது போல், இவர்களின் நடைமுறைகளுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸை காட்ட முடியுமா? அப்படி எந்த ஒரு ஹதீஸும் இல்லை என்பதே உண்மையாகும். மேலே காணப்படும் ஹதீஸ் விஷேசமாக நேர்வழி நடக்கும் கலீஃபாக்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அனுமதி என்பதை தெள்ளத் தெளிவாக குறித்துக் காட்டுகின்றது எனவே, அவர்களின் இந்த வாதமும் தவறேயாகும்.
‘குத்பா’ அரபி அல்லாத மொழிகளில் செய்வது பித்அத்தா?
இன்னொரு முக்கிய விஷயம், நமது தமிழகத்தின் பல பகுதிகளில் குத்பாக்கள் தமிழில் செய்யப்பட்டு வருகின்றன. இது பித்அத்து ஹஸனா என்று காரணம் கூறி இதன் மூலம் மற்ற பித்அத்துக்களை நியாயப்படுத்த முற்படுகின்றனர். முன்பு வெளியான “பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பத்வாத் தொகுப்பு – ஒர் அறிமுகம்” என்ற நூலிலும் இதை பித்அத் என்றே குறிப்பிடுகின்றனர். அதே சமயம் எங்கு அந்த வழக்கம் இருக்கின்றதோ, அங்கு அதை நிறுத்தினால் பிரச்சனை ஏற்படும் என்றிருந்தால் அப்படியே விட்டு விடுவதில் தவறில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தான் நமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. பித்அத் என்றால் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது பித்அத்து தான்! இருந்தாலும் பரவாயில்லை! என்பது மார்க்கத்தில் மனித அபிப்ராயத்தை நுழைப்பதாகும்.
உண்மையில் பிற மொழிகளில் குத்பா செய்வது பித்அத்தே இல்லை. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவரர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம் (அல்குர்ஆன் 14:4) என்ற வசனத்தின் படி குத்பா என்பது மக்களை நோக்கி, மக்கள் விளங்குவதற்காக செய்யப்படும் உபதேசம் ஆகும். வெள்ளிக்கிழமை 2 ரகாஅத் பர்ழு தொழ வைக்கப்படுவதால் எஞ்சியுள்ள 2 ரகாஅத்துக்கு பகரமாக இந்த குத்பா செய்யப்படுகிறது என்ற தவறான எண்ணம் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. தொழுகை அல்லாஹ்வுக்காக தொழப்படுகின்றது. குத்பா உபதேசம் மக்களுக்காக – மக்கள் விளங்கிச் செயல்படுவதற்காக மக்களை நோக்கி செய்யப்படுவதாகும். அதனால் தான் இமாம் குத்பா செய்யும் போது கிப்லாவை முன் நோக்காமல், மக்களை முன் நோக்கி நிற்கிறார். நபி(ஸல்) அவர்கள் போற்றிய மூன்று தலைமுறையினருடைய காலத்திலோ, இப்பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலக் கட்டங்களில் இருந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அரபிமொழி தெரிந்தவர்களாக இருந்தமையால் அவர்கள் விளங்கக்கூடிய மொழியான அரபியில் குத்பா – உபதேசம் இடம் பெற்றதே உண்மையாகும். – ஆக குத்பாவின் பிரதான நோக்கம் எந்த மக்களை நோக்கி குத்பா உபதேசம் செய்யப்படுகின்றதோ அந்த மக்கள், அந்த குத்பாவை உபதேசத்தை, விளங்க வேண்டும் என்ற சாதாரண விஷயம் அனைவருக்கும் புரிந்ததே!
குர்ஆன் ஒரே நூலாகா தொகுக்கப்பட்டது, அதனை பல பிரதிகளாக எடுத்து, அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டது, எப்படி பித்அத் இல்லையோ மக்கள் இவ்வுலகில் எளிதாக குர்ஆனை ஓதி விளங்கிச் செயல்படுவதை நோக்கமாக கொண்டு செய்யப்பட்டிருக்கின்றனவோ, அதே போல் கதீப் – உபதேசிப்பவர், செய்யும் குத்பாவை – உபதேசத்த எதிரில் உள்ள மக்கள் எளிதில் விளங்கி செயல்படுவதை நோக்கமாகக் கொண்டே குத்பா -உபதேசம், அரபி அல்லாத மொழிகளில் செய்யப்படுகின்றது. எனவே, அதனையும் பித்அத் என்று சொல்லுவது தவறேயாகும்.
முடிவுரை: மேலே நாம் பார்த்த விளக்கங்கள் எந்த வகையிலும் மார்க்கத்தில் புதிதாக (பித்அத்) ஒன்றை உண்டாக்க முடியாது! உண்டாக்கக் கூடாது! என்பதை தெளிவுபடுத்துகின்றன. இதற்கு மேலும், பித்அத்துக்களுக்கு புதிய புதிய விளக்கங்கள் கொடுத்துக் கொண்டு, வகை வகையாக பிரித்துக் கொண்டு, பித்அத்தை நியாயப்படுத்த முற்படுவது மார்க்க முரணான செயலே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆதத்தினுடைய சந்ததிகளை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்க்க ஷைத்தான் பயன்படுத்தும் இரண்டு மிகப் பயங்கரமான ஆயுதங்கள் ‘ஷிர்க்கும்’ (இணை வைத்தல்), பித்அத் (புதுமைகள்) மேயாகும். எனவே, முஸ்லிம்கள் இவற்றில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்(ஜல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வழிகேடான முயற்சிகளை மேற்கொண்டு தாங்கள் உண்மையிலேயே அழகான காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்கிறார்களே! அவர்கள் தாம் தம் செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள்! (அல்குர்ஆன் 18:103,104) என்ற குறிப்பிடுவது போல், ஷைத்தான் வழிகேடான இச்செயல்களை புண்ணியம் தரும் செயல் என்று நம்பி வழிகெடச் செய்துள்ளான். அதன் முடிவையும் அல்லாஹ் மிக பயங்கரமாக எச்சரிக்கிறான். அதாவது “அவர்களது செயல்கள் யாவும்(நற் செயல்கள் உட்பட) வீணாகும். இறுதித் தீர்ப்பு நாளன்று நாம் அவர்களுக்காக நிறுக்கும் தராசையும் நாட்டமாட்டோம் -நரகமே அவர்களுக்குக் கூலியாகும்.” (அல்குர்ஆன் 18:105,106-ன் சுருக்கம்)
எனவே, பித்அத்தான (புதுமையான) செயல்களை இவை அழகானவை தானே! நன்மை தரக்கூடியவை தானே! சின்ன விஷயம்தானே! என்று இவர்களே, தம்மை தாமே திருப்தி செய்து கொண்டு பித்அத்துக்களில், இவர்கள் மூழ்குவது ஷைத்தானின் சூழ்ச்சியேயாகும்; அல்லாஹ் எச்சரிப்பது போல் நரகம் புக நேரிடும்.
உண்மையான உள்ளசத்துடனும், தெளிவான சிந்தனையுடனும் அறிந்த விஷயங்களில் அல்லாஹ்வை அஞ்சி முறையாக மார்க்கக் கடமைகளை நிறைவேற்றி வருபவர்கள் மட்டுமே ஷைத்தானின் இந்த மாய வலைகளிலிருந்து அல்லாஹ்வின் அருள் கொண்டு தப்ப முடியும் அந்த பாக்கியம் பெற்ற கூட்டத்தில் அல்லாஹ் நம் அனைவரையும் இணைத்தருள்வானாக! ஆமீன்!