ஐயம் : நபி(ஸல்) இரவுத் தொழுகை 8+3 என தொழுதிருக்க ஓர் ஆலிம் 8+3 போக விடிய விடிய நஃபில்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம் என்று கூறுகிறார். அவ்வாறு தராவீஹ் (தஹஜ்ஜுத்) தொழுத பின் பல நஃபில்கள் தொழலாமா? ராஹிலா, உசிலம்பட்டி.
தெளிவு : எண்ணற்ற மவ்லவிகள் நபி(ஸல்) 20+3 தொழுதார்கள் எனப் பொய்யாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி வஞ்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், 10,000/-, 15,000/-, 20,000/-, என ரேட் பேசி மார்க்கத்தை அற்ப காசுக்கு விற்றுக் கொண்டி ருக்கும் நிலையில், இந்த ஆலிம் நபி(ஸல்) தொழுதது 8+3 மட்டும்தான் என்று ஒப்புக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதே. பர்ழான-கடமையான தொழுகை, ஜும்ஆ தொழுகை, இரு பெருநாட்கள் தொழுகை, ஜனாசா தொழுகை இவை தவிர வேறு சுன்னத்தான தொழுகைகளையோ, நஃபிலான தொழுகைகளையோ ஜமாஅத்தாக தொழுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
புகாரீ 731வது ஹதீஸ் தெள்ளத்தெளிவாக, நேரடியாக இவ்வாறு கூறுகிறது. அதாவது நபி(ஸல்) கட்டளையிடுகிறார்கள்: “ரமழான் இரவுத் தொழுகையை உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்! கடமையான தொழுகை தவிர மற்றத் தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்’ இதுதான் நபி(ஸல்) அவர்களின் தெளிவான நேரடியான கட்டளை. பிறை விஷயத்தில் கடமையோ, சுன்னத்தோ, இபாதத்தோ இல்லாத நிலையில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து 2ம் பிறையையோ, 3ம் பிறையையோதான் முதல் பிறையாகக் கொள்ள வேண்டும். இதுவே நபி(ஸல்) அவர்களின் அசலான கட்டளை என்று பிதற்றும் இந்த மூட முல்லாக்களிடம் புகாரீ 731வது ஹதீஸில் காணப்படும் நபி(ஸல்) அவர்களின் தெளிவான நேரடியான கட்டளை என்ன ஆனது? ஆம்! மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டால் மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாக ஆக்குவார்கள்; மார்க்கம் அல்லாததை மார்க்கம் ஆக்குவார்கள் என்று நாம் அடிக்கடிக் கூறி வருவது உண்மையா? இல்லையா?
அதைக் கண்டு கொள்ள ஒரு சிறு பரீட்சை: மார்க்கம் கடமையாக்காத நிலையில் ரமழான் இரவுத் தொழுகையை தராவீஹ் என்ற பெயரால் 20+3 தொழ வைக்கிறீர்கள். உங்கள் பின்னால் தொழும் உங்களை நம்பியுள்ள அப்பாவி மக்கள் அதில் பெருத்த நன்மை அல்லாஹ்விடம் கிடைக்கும் என்று நம்பித்தான் தொழுகிறார்கள். அவர்கள் தொழுவதற்காக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. அதேபோல் தொழவைக்கும் நீங்களும் அவர்களைப் போல் அல்லாஹ்விடம் பெருத்த நன்மை கிடைக்கும் என்று நம்பித் தொழ வைப்ப தற்கு கூலி-சம்பளம் வாங்காமல் இந்த தராவீஹ் தொழுகையை தொழ வையுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். அதற்கு எத்தனை பேர் அந்த 20+3 ரகாஅத்துகளை தொழவைக்க முன் வருவார்கள்? ஒருவரும் முன்வரமாட்டார் என்பதே உண்மை.
இதிலிருந்தே இந்த மூட முல்லாக்கள் அல்லாஹ்வின் அச்சம் சிறிதும் இன்றி எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்துவிட்டு அற்ப உலக ஆதாயத்திற்காகவே 8+3 நபி(ஸல்) தனியாகத் தொழுததை, 20+3 என்று அதிகப்படுத்தியும், அதை ஜமாஅத்தாகவும் தொழவைக்க, தங்களின், தங்கள் புரோகித முன்னோர்களின் கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். அதேபோல், பொருள் ஒரு வருடம் தேங்கி இருந்தால் தான் ஜகாத் கடமை, அது எப்படி தேங்கி இருக்கும் காலமெல்லாம் வருடா வருடம் இருக்கும் கடமை என்ற ஆதாரபூர்வமான செய்திகள், நபி(ஸல்) அவர்கள் கூறியவை அல்ல; உமர் (ரழி) அலீ(ரழி) இருவரின் சொந்தக் கருத்து அதனால் அவற்றை ஏற்க முடியாது; ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் அது தூய்மையாகி விடுகிறது. எனவே வருடா வருடம் அப்பொருளுக்கு ஜகாத் கடமை இல்லை எனத் தனது சுயக் கருத்தை வெளியிடும் ததஜ தலைவர், நபி(ஸல்) ரமழான் இரவுத் தொழுகையை வீடுகளில் தொழுது கொள்ள கட் டளையிட்டிருக்க (புகாரீ 731) அதற்கு மாறாக உமர்(ரழி) சோம்பேறிகளுக்காக ஏற்படுத்தியதை ஏற்று தங்கள் ததஜ பள்ளிகளில் இஷாவுக்குப் பிறகு ஜமாஅத்தாகத் தொழ ஏற்பாடு செய்வதும், சுன்னத் ஜமாஅத் மவ்லவிகளைப் போல் அற்ப இவ்வுலக ஆதாயத்தை ஹராமான வழியில் தேடும் நோக்கமே என்பது குன்றிலிட்ட தீபமாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகிறது.
அந்த ஆலிம் நபி(ஸல்) தொழுதது 8+3 மட்டுமே என்று ஒப்புக் கொண்டதற்கு மகிழ்ச்சி. அல்லாஹ் அதற்குரிய நற்கூலியை அவருக்குக் கொடுப்பானாக. ஆனால் சுன்னத் என்றால் அது கண்டிப்பாக நபி(ஸல்) தொழுது காட்டியதாக இருக்க வேண்டும். நபி(ஸல்) சொல்லாத, செய்யாத, அங்கீகரிக்காத ஒன்றை சுன்னத் என்று சொல்வது நபி(ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டுவதாகும். நரகத்தில் தங்கள் இடத்தைத் தேடிக்கொள்ள நேரிடும். எனவே சுன்னத் 8+3 மட்டும். அதைத் தனியாகத் தான் தொழவேண்டும் என்பது நபி(ஸல்) அவர்களின் தெளிவான கட்டளை; ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இல்லை.
நஃபில் தொழுகை என்றால் அது உபரியாகத் தொழுவதாகும். விரும்புகிறவர்கள் தங்களின் உடல் நலத்திற்கும், மனைவி மக்களின் கடமை களை நிறைவேற்றுவதில் எவ்வித குறைவும் ஏற்படாத நிலையிலும் தனியாகத் தொழுவதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களையும் அப்படித் தொழவேண்டும் எனக் கட்டளை இட அனுமதி இல்லை. அவரவர்களின் சுய விருப்பமாக அது இருக்க வேண்டுமே அல்லாது, யாருடைய கோரிக்கைக்காக அது இருக்கக் கூடாது.