அல்லாஹ்(ஜல்), ஆதி மனிதன் ஆதம்(அலை) முதல் மனித வர்க்கத்தின் நல்வாழ்விற்காக நேர் வழியைத் தன் புறத்திலிருந்து அளித்துக் கொண்டிருந்தான். மனித வர்க்கத்தில் தோன்றிய புரோகிதர்கள் – இடைத்தரகர்கள் அந்த நேர்வழியில் தங்கள் மனித அபிப்பிராயங்களால் ஏற்பட்ட கோணல் வழிகளை இடைச் செருகல்களாக இணைத்தனர். அதனால் ஆரம்பத்தில் ஒரு சமூகத்தினராக இருந்த மனித சமுதாயம் பல பிரிவினராக – பல மதத்தினராக பிரிந்தனர்.
அல்லாஹ் மனித வர்க்கத்திலிருந்தே தனது தூதர்களைத் தேர்ந்தெடுத்து, மனிதரிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக வேதங்களை இறக்கிக் கொண்டிருந்தான். இறுதியில் முஹம்மது(ஸல்) அவர்கள் தனது இறுதி தூதராகத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இறுதி மறை அல்குர்ஆனை அருளினான். அல்குர்ஆனின் தூய நிலை பாதுகாக்கப்பட்டிருந்தும் கூட இந்த இடைத் தரகர்கள் தங்கள் மனதில் உதித்த கோணல் வழிகளை மார்க்கத்தில் நுழைக்கத் தவறவில்லை. அதனால் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிலும் பல பிரிவினரைப் பார்க்கிறோம். மனிதர்களில் பிரிவுகள் ஏற்பட மூலகர்த்தாக்கள் இந்த புரோகிதர்கள் – இடைத்தரகர்கள்தான். தாங்கள்தான் கற்றவர்கள் – அறிந்தவர்கள் என்ற அகந்தையில் சமுதாயத்தை கூறுபோட்டு காலங்காலமாக சுரண்டி வாழ்ந்து வருகின்றனர்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கற்றவர்களான தாருந் நத்வாவினருக்கு இருந்த அகந்தை காரணமாக, அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்து, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது(ஸல்) அவர்களை நபியாகத் தேர்ந்தெடுத்து, அவர்களின் போதனைகள் மூலம் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு பெரிய சமுதாயத்தினரையும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தனது பாட்டனாரின் பாட்டனார் சூசை அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட உலமாக்கள் சபையான தாருந் நத்வாவை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழித்து, ஆலிம்-அவாம் என்று மக்களைக் கூறுபோட்டுச் சுரண்டும் வர்க்கத்தை இல்லாமல் ஆக்கினார்கள். துரதிஷ்டவசமாக அந்தக் கூட்டத்தினர் மீண்டும் இந்த சமுதாயத்தில் நுழைந்து கொண்டு தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி, சமுதாயத்தைக் கூறுபோட்டுச் சுரண்டி வாழ்கின்றனர்.
எனவே மக்களை ஆலிம்-அவாம் என்று கூறுபோட்டுச் சுரண்டும் வர்க்கத்தை அழித்தொழிக்காத நிலையில், அல்லாஹ் கொடுத்த நேர்வழியிலிருந்து அவர்கள் இடைச் செருகல் செய்யும் கோணல் வழிகளை நீக்கி இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்தவே முடியாது. அகந்தை இல்லாத மக்களை ஆலிம்-அவாம் என்று கூறுபோடாத, தங்களுக்கென்று உலமாக்கள் சபை என்று ஒரு தனி சபை அமைத்துக் கொள்ளாத, குர்ஆன், ஹதீஸ் வழி நடக்கும் மவ்லவிகளை இது கட்டுப்படுத்தாது.