சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் நடைபெறும் வரம்பு மீறல்கள்!

in 2012 ஏப்ரல்

M.சையித் முபாரக், நாகை.

சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் பல வரம்புமீறல்கள் நடைபெற்று வருகின்றன. அதில் பாங்குக்குமுன் திக்ர், ஸலவாத்து கூறுதல்; ஜமாஅத் தொழுகைக்குப் பின் கூட்டு துஆ செய்தல்; வாரம் ஒருநாள் இஷா தொழுகைக்குப் பின் கூட்டு திக்ர் எனும் பெயரில் சப்தமிட்டு திக்ர் செய்தல், பல பெரியார்கள் பெயரில் மெளலிது ஓதுதல் போன்றவற்றை நாம் முன்னரே அறிவோம். (பார்க்க: 7 : 55,205)

அவை அல்லாத வேறுசில வரம்புமீறல்களான கிப்லா திசையை முன்னோக்குவதை விட்டுவிட்டு வேறு(மேற்கு) திசையை முன்னோக்குவது, ஜமாஅத் தொழுகையில் உட்கார்ந்து தொழுபவர்கள் வசதிக்காக ஸப் (வரிசை)களை மேலிருந்து கீழாக (அதாவது மேற்கிலிருந்து கிழக்காக) அமைப்பது, தொப்பி அணிந்தே தொழ வேண்டும் என்பதை வற்புறுத்தும் விதமாக (வலியுறுத்தும் விதமாக) ப்ளாஸ்டிக் மற்றும் ஓலைத் தொப்பிகளை பள்ளிவாசலில் வைத்திருப்பது, பள்ளிவாசல் திறப்பு விழா அன்று பல லட்ச ரூபாய்களை வீண் விரயம் செய்வது, பள்ளிவாசல் திறப்பதற்கு முதல் நாள் மட்டுமே பெண்களைப் பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பது போன்ற வரம்பு மீறல்களை நாம் இங்கு பார்ப்போம்.

கிப்லாவை முன்னோக்குதல்:
நமது பகுதிகளில் கிப்லாவின் திசை மேற்கு என்பதைக் கணித்து நமது முன்னோர்கள் பள்ளிவாசல்களை நிர்மாணித்துத் தொழுது வந்தனர். அதற்கான நன்மைகளை அல்லாஹ் (ஜல்) அவர்களுக்கு அளிப்பான். ஆனால், இன்று சுன்னத் ஜமாஅத் கட்டும் சில பள்ளிவாசல்களில் கிப்லா திசையை காம்பஸ் (திசை காட்டி) மூலம் கணக்கிட்டு மேற்கிலிருந்து சிறிது சாய்வாக அதாவது வடமேற்குத் (கிப்லா) திசையில் பள்ளிவாசல்களை நிர்மாணித்துத் தொழுது வருகின்றனர். இதை பழைய பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும், பொதுமக்களும் நன்கு அறிந்தே உள்ளனர். ஆனால், தமது பள்ளிவாசல்களின் தொழும் திசையை கிப்லாவிற்கு நேராக மாற்றாமல் மேற்குத் திசை நோக்கியே தொழுது வருகின்றனர். “”மேற்குத் திசை” தான் கிப்லா என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர் போலும். இது தொழுகையின் நிபந்தனைகளின் ஒன்றான கிப்லாவை முன்னோக்குதல் என்ற வரம்பை மீறுகின்ற செயல் இல்லையா? இந்த வரம்பு மீறலை அல்லாஹ் மறுமையில் தூக்கிக் கடாசிவிட்டு நம்மை நரகத்தில் அல்லவா எறிவான் என்ற பயம் சிறிது கூட இல்லாமல் இருக்கின்றார்கள். இந்த நிர்வாகத்தினரும், பொதுமக்களும். இது பற்றி ஒருவரிடம் பேசியபோது, அவர் கூறினார். ஒரு அவ்லியா கூறினாராம். நான் (கிப்லா திசை யான) மேற்குத் திசை நோக்கியும் தொழு வேன். கிழக்கு திசையிலும் தொழுவேன். அது மட்டுமல்ல வடக்கிலும், தெற்கிலும் கூட தொழுவேன். ஏனென்றால், அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் அல்லவா? என்று. இந்த ஸூபியிஸக் கொள்கையைக் கொண்டவர் அவ்லியாவாம். இதையெல்லாம் கேட்டு அவரை, அவரைப் போன்றோரைப் பெருமைப்படுத்தும், மரியாதைச் செய்யும் நம் மக்களின் அறிவுக் கூர்மைதான் என்னே?

“”…யார்(தம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள், யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிகால்கள் மீது திரும்பிச் செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்மாணித்தோம். இது அல்லாஹ் நேர்வழிக் காண்பித்தோர்க்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக மிகக் கடினமாகவே இருந்தது….” (அல்குர்ஆன் 2:143)
(மேலும் பார்க்க அல்குர்ஆன் 2:142-145)

மக்கள் குபாவில் சுப்ஹு தொழுகையில் இருந்தபோது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “”சென்ற இரவு (நாள் காலையிலிருந்து ஆரம்பமாகிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் (வசனம்) அருளப்பட்டது. (தொழுகையில் இது வரை முன்னோக்கி வந்த பைத்துல் முகத்திஸை விட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே (மக்களே!) கஅபாவை நீங்கள் முன்னோக்கித் தொழுங் கள்” என்று கூறினார். அப்போது மக்களின் முகம்(பைத்துல் முகத்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறி விப்பைக் கேட்டவுடன்) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி), ஆதாரம்:புகாரி : 4490

கிப்லாவை முன்னோக்கித்தான் நமது தொழுகைகளைத் தொழ வேண்டுமே தவிர, மேற்கை நோக்கி அல்ல என்பதை எப்பொழுது தான் உணர்ந்து திருந்தப் போகிறார்களோ?

ஸஃப்பில் நடக்கும் வரம்பு மீறல்:
சு.ஜ.பள்ளிவாசல்களுக்குள் நுழைந்தவுடன் நாம் வந்திருப்பது பள்ளிவாசலா? சர்ச்சா? என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த அளவிற்கு ஸஃப்பின் (வரிசைகளின்) இரு ஓரங்களிலும் மேலிருந்து கீழாக, உட்கார்ந்து தொழுபவர்களின் வசதிக்காக, மாணவர்கள் எழுத, படிக்க அமரும் டேபிள் (டெஸ்க்) சேர் போடப்பட்டுள்ளன. சில பள்ளிவாசல்களில் இந்த டேபிள் சேர் முதல் ஸஃப்பின் இரு ஓரங்களில் இருந்தும் போடப்பட்டிருக்கும். வேறு சில பள்ளிவாசல்களில் இவை மூன்றாம் ஸஃப்பிலிருந்துப் போடப்பட்டிருக்கும். ஒரு ஜமாஅத் தொழுகை யில் 1 1/2 ஸஃப்தான் மஃமூம்கள் (இமாமைப் பின் தொடர்ந்து தொழுபவர்கள்) தொழுவதாக வைத்துக் கொண்டால் அதில் உட்கார்ந்துத் தொழுபவர்கள் 6 பேர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் முதல் வரிசையிலிருந்து டேபிள் சேர் போடப்பட்டிருந்தால், மீதி 4 பேர்கள் தனித்துத் தொழுபவர்களாகி விடுவர். மூன்றாம் ஸஃப்பிலிருந்து டேபிள் சேர் போடப்பட்டிருந்தால் அவர்கள் 6 பேர்களும் தனித்துத் தொழுபவர்களாவிடுவார்கள். ஏனெனில், ஸஃப் என்பது வலமிருந்து இடமாக நிற்கக் கூடியது. ஆனால், டேபிள் சேர்களோ மேலிருந்து கீழாகப் போடப்பட்டிருக்கும். அவர்கள் அமர்ந்துத் தொழுவது வலமிருந்து இடமாக எனும் நிபந்த னையை மீறி, மேலிருந்து கீழாக வரிசை அமைத்துத் தொழுகின்றனர். இது அவர்கள் ஜமாஅத் தொழுகையில் சேர்ந்துத் தொழவில்லை தனித்துத் தொழுகின்றனர் என்பதையே உணர்த்துகிறது.
“”உங்கள் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்; இல்லையயனில் இறைவன் உங்கள் முகங்களை மாற்றிவிடுவான்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள்.
அறிவிப்பாளர்:நுஃமான் பின் பUர்(ரழி) ஆதாரம்: புகாரி 717.

அனஸ்(ரழி) அவர்கள் மதீனா வந்தபோது, “”நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நடைமுறைக்கு மாற்றமாக எங்களிடம் எதையேனும் கண்டீர்களா?” எனக் கேட்கப்பட்டது. “”நீங்கள் வரிசைகளை ஒழுங்குப்படுத்திக் கொள்வதில்லை என்பதைத் தவிர வேறு எந்தத் தவறையும் உங்களிடம் நான் காணவில்லை” என அனஸ்(ரழி) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:புஷைர்பின் யஸார்(ரழி) ஆதாரம்: புகாரி 724.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுவித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். பள்ளியின் ஒரு மூலையில் அவர் (சுப்ஹின் சுன்னத்) இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) சேர்ந்துக் கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும், இன்னாரே! இவ்விருத் தொழுகையில் எதைக் கருதி வந்தீர்? நீர் தனியாகத் தொழவா? அல்லது எம்முடன் சேர்ந்துத் தொழவா? என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர்: அப்தல்லாஹ் பின் சர்ஜிஸ்(ரழி) ஆதாரம்: முஸ்லிம் 1285.

தனித்துத் தொழுதுவிட்டுச் சேர்ந்துத் தொழு தவர்க்கே இந்தக் கண்டிப்பு என்றால் சேர்ந்துத் தொழுவதாக நினைத்துக் கொண்டு தனித்துத் தொழுபவர்களின் நிலை என்ன? ஆகவே, மேலிருந்து கீழாக ஸஃப் அமைத்துத் தொழுபவர் களுக்கு ஜமாஅத்தில் தொழுத நன்மை கிடைக் காது. தனித்துத் தொழுவதன் நன்மையாவது கிடைக்குமா? என்றால், நபி(ஸல்) அவர்கள் கண்டித்துக் கூறுவதால் அதுவும் கிடைக்காது என்றே உணர முடிகிறது. நாளை மறுமையில் இது தண்டனைக்குரிய குற்றமாகக் கூட அமைந்து விடலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)

நின்று தொழ முடியாதவர்கள் ஸஃப்பில் கிடைக்கும் இடத்தில் ஸ்டூல் அல்லது சேர் போட்டு அமர்ந்து ஸஃப்பில் இணைந்து கொள்ள வேண்டும். இதுதான் ஸப்பில் சேர்வதற்கான முறையே தவிர, மேலிருந்து கீழாக நிரந்தரமாகப் போடப்பட்டிருக்கும் டேபிள் சேர்களில் அமர்வது அல்ல. இது பற்றி ஒரு பள்ளிவாசல் இமாமிடம் பேசியபோது, அவர் என்ன கூறினார் தெரியுமா? மேலிருந்து கீழாகப் போடப்பட்டிருக்கும் டேபிள் சேர் வரிசைகளில் அமர்ந்தால் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொண்ட நன்மை கிடைக்கும் என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறுகின்றனர் என்றார். ஒரு சமயம் அந்த இமாம் உட்கார்ந்துத் தொழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, வேறொருவர் இமாமத் செய்ய இவர் ஸஃப்பில் சேர் போட்டுத் தொழுதார். டேபிள் சேரில் அமராமல் ஸஃப்பிள் இடையில் சேர் போட்டு உட்கார்ந்தது ஏன்? எங்களுக்கு ஒரு சட்டம், உங்களுக்கு ஒரு சட்டமா? என்று உட்கார்ந்து தொழுதவர்களில் ஒருவர் கூடக் கேட்க வில்லை என்பதுதான் ஆச்சரியமான ஒன்று. உட்கார்ந்துத் தொழுபவர்கள் ஸுஜூது செய்யும்போது நன்றாகக் குனிவதை இந்த சேருடன் கூடிய டேபிள் (டெஸ்க்) தடுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது நன்றாகக் குனிவதைத் தடுத்து, ஸுஜூதில் நிறைவைத் தராது. மேலிருந்து கீழான வரிசைகளில் உட்கார்வது வரிசைகளைப் பேணுவதற்கு எதிரானது. பள்ளி நிர்வாகிகளின் இந்தத் தவறானப் போக்கிற்கு உட்கார்ந்துத் தொழுபவர்களான நீங்களும் துணை நின்று உங்களின் தொழுகைகளைப் பாழாக்கிக் கொள்ளப் போகிறீர்களா? இல்லை திருத்திக் கொள்ளப் போகிறீர்களா?

பள்ளிவாசல்களில் (ப்ளாஸ்டிக் மற்றும் ஓலைத்) தொப்பிகளை வைத்திருப்பது:
தொப்பி அணிந்தே தொழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தொழுமிடத்திற்கு அருகில் கூடைகளில் ப்ளாஸ்டிக் அல்லது ஓலைகளால் தயாரிக்கப்பட்ட தொப்பிகளை நிரப்பி வைத்துள்ளனர். இது தலையை மறைத்தால் தொழுபவர்களுக்கு நன்மைகளை அள்ளித் தரும் என்ற காரணத்திற்காகவா? பள்ளிவாசல் நிர்வாகிகளின் இந்த நல்ல எண்ணத்தைக் கண்டு அனைவரும் மெய் சிலிர்த்து அல்லவா போகவேண்டும்? நன்மைகளைத் தரும் கிப்லாவை முன்னோக்குதல், ஸஃப்பைச் சீராக்குதல் போன்றவைகளை விட்டுவிட்டு நன்மைகளைத் தராத, தீமைகளைத் தந்தாலும் தரக்கூடிய தொப்பி அணிதல் போன்ற செயல்களைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடும் இப்படிப்பட்ட நிர்வாகிகளை மெச்சிக் கொள்ளத்தானே வேண்டும்.

தொழுகையில் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் தோள்களிலிருந்து முழங்கால்களுக்குச் சிறிது கீழ்வரைதான், தலையும் சேர்த்து அல்ல. ஆண்களும் தலையை மறைக்கத்தான் வேண்டும் என்பது சட்டமாக இருந்திருந்தால் (உம்றா மற்றும் ஹஜ்-க்கான) இஹ்ராம் அணிந்த பெண்கள் தலையை மறைத்திருப்பது போல ஆண்களும் தலையை மறைக்க வேண்டும் என்ற சட்டம் இறங்கியிருக்கும் (அல்லாஹ் மிகவும் அறிந்தவன்). தொழும் நேரங்களில்கூட இஹ்ராம் நிலையில் ஆண்கள் தலையை மறைப்பதில்லை (மறைக்கக் கூடாது) என்பதிலிருந்து தலையை மறைப்பது அவசியமில்லை என்பதை உணரலாம்.

தொழுகையில் தலையை மறைப்பது அவசியம் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால், ப்ளாஸ்டிக் தொப்பி தலையை எங்கே மறைக்கிறது? ஜன்னல் வழியாக வெளியில் உள்ளவைகளைப் பார்க்கும்போது, வெளியில் உள்ளவைகள் தெளிவாகத் தெரிவதைப் போல, இந்தத் தொப்பிகளை அணிந்தால், தலையிலுள்ள முடிகள் அல்லது வழுக்கையைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இதைப் போன்ற அமைப்பில் (டிசைனில்) மேல் மற்றும் கீழாடைகள் தயாரித்தால், அது உடம்பை மறைக்கும் என்று இந்தப் பள்ளிவாசல் நிர்வாகிகள் அணிந்து வருவார்களா? இதிலிருந்து தலையை மறைக்க இவர்கள் இதை அணியவில்லை. முன்னோர்கள் தலையில் எதையோ கவிழ்த்து வைத்தனர். நாமும் எதையோ கவிழ்த்து வைப்போம் என்ற ரீதியில் தான் செயல்படுகின்றனரே தவிர உண்மையை உணர்ந்துச் செயல்படவில்லை என்பதை அறியலாம்.

“”ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழும் வேளை உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”
(அல்குர்ஆன் 7:31)

இந்த குர்ஆன் வசனப்படி, எங்களை நாங்கள் அழகாக்கிக் கொள்ளவே தலையில் தொப்பி அணிகிறோம் என்று அவர்கள் கூறலாம். அந்தத் தொப்பி நமக்குக் கண்ணியத்தை, மரியாதையை, அழகைத் தந்தால் அதை அணிவதில் எந்தத் தவறும் இல்லை. அதை நாமும், ஏன் அனைவருமே அணிந்துத் தொழலாம். ஆனால், அந்த அழகை இந்தப் ப்ளாஸ்டிக் மற்றும் ஓலைத் தொப்பிகள் நமக்குத் தருமா? ஒருவர் நம்மை விருந்திற்கு அழைத்தால் நம்மை எவ்வாறு அலங்கரித்து அழகுப்படுத்திக் கொண்டு செல்கிறோம்; நம்மை மற்றவர்கள் கெளரவமாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக, ப்ளாஸ்டிக் மற்றும் ஓலைத் தொப்பிகளை அணிந்து நாம் அந்த விருந்தழைப்பிற்குச் செல்வோமா? இந்தத் தொப்பிகளை அணிந்துச் சென்றால் மற்றவர்கள் நம்மைக் கேவலமாக, அசிங்கமாகப் பார்ப்பார்கள் என்பதற்காக நாம் இவற்றை அணிந்து செல்ல மாட்டோம். அப்படியிருக்க, அழைப்புகளில் எல்லாம் மிக மிகச்சிறந்த மேலான அழப்பான அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுப் பள்ளிவாசலுக்குச் செல்லும் நாம் இந்தப் ப்ளாஸ்டிக், ஓலைத் தொப்பிகளை அணிந்து கொள்வது நமக்கு அழகைத் தருமா? அவலட்சணத்தைத் தருமா? இந்தத் தொப்பிகளை அணிவது அல்லாஹ்வின் சொற்களுக்கு மாற்றமானதா? இல்லையா? நம்மைப் பற்றி அல்லாஹ்(ஜல்) என்ன நினைப்பான் என் பதைச் சிந்தித்துப் பாருங்கள். இந்தத் தொப்பி களை அணிந்து பள்ளிவாசல்களில் தொழுவது சரியானதுதானா? வேஷமிட்டு நடிப்பதாக ஆகாதா?

பலர் மாற்றி மாற்றி அணியும் இந்தத் தொப்பிகளால் “”பொடுகு” போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையா? இஸ்லாம் காட்டித் தராத இந்தத் தொப்பிகள் அணிவது பற்றிச் சிந்தியுங்கள்.

(மார்க்கத்தில் ஏவப்படாத நபி(ஸல்) அவர் களது காலத்தில் யூத, கிறித்தவ, குறைஷ் பழக்கத்தில் (ஆதத்) இருந்த தொப்பி தலைப் பாகைக்கு இந்த அளவு மிக முக்கியத்துவம் கொடுக்கும் மவ்லவிகள், முத்தவல்லிகள், மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான, சிரைப்பது ஹராம் என அவர்களின் மத்ஹபு பிக்ஹு நூல்களிலேயே எழுதப்பட்டுள்ள நிலையில் தாடியைச் சிரைத்துப் பொட்டச்சி போல் காட்சி அளிக்கும் முத்தவல்லிகளையும், முக்கியப் பிரமுகர்களையும், கசகசா தாடி இமாம்களையும் கண்டிப்பதில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. மவ்லவிகள் மார்க்கம் அல்லாததை மார்க்கமாக்குவார்கள், மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாக்குவார்கள் என்று நாம் அடிக்கடி எழுதுவதற்கு இது நல்லதோர் ஆதாரமாகும். (ஆ-ர்) )

பள்ளிவாசல் திறப்பு விழா:
பள்ளிவாசல் திறப்பதை இவர்கள் கடை, வீடு குடி புகுவதற்கு ஒப்பாக நினைக்கிறார்கள். ஆனால், வீடு குடிபுகுவது என்பது வேறு. பள்ளி வாசல் திறப்பது என்பது வேறு. வீடோ, கடையோ ஒருவர் திறக்கிறார் என்றால், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு, அவர் இடத்திற்குச் செல்ல, அங்கு சென்று பொருட்களை வாங்க, தெரிந்தவர்களுக்கு தனது இடத்தை அடையாளப்படுத்திக் கொள்ள அழைக்கிறார். அதை ஏற்று நாமும் செல்கிறோம். இது இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்ட ஒன்றுதான். ஆனால், பள்ளிவாசலுக்கு இந்த அறிமுகம் தேவையில்லை. பாங்கே பள்ளிவாசல் இருக்குமிடத்தைத் தெரிவித்து விடும். அதன் ஒலி மூலமோ அல்லது வேறு யாரிடமாவது கேட்டோ பள்ளிவாசலுக்குச் சென்று தொழுது விடலாம். இதற்காகப் பள்ளி வாசலை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. பாங்கு பள்ளிவாசலுக்கு வரச் சொல்லும் அழைப்புத்தானே. இது பருவமடைந்த ஆண்களைப் பள்ளிவாசலுக்கு அழைக்கும் பொது அழைப்பு. அனைவரும் வந்தே ஆக வேண்டிய அழைப்பு. அப்படியிருக்க, பள்ளிவாசலை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? பள்ளிவாசல் திறப்பு விழா என்று அழைப்பு விடுவதோ, அதற்காக மக்கள் வருவதோ தவறான மற்றும் வரம்பு மீறிய செயலாகும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார்கள்.

“”மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவி, மஸ்ஜிதுல் அஃஸா தவிரப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.”
அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரழி)
ஆதாரம்: புகாரி 1189.

ஆகவே, ஒரு பள்ளிவாசல் திறப்பு விழாவிற்காகப் பள்ளிவாசலை நாடி வருவது தவறான தும் வரம்புமீறுதலும் ஆகும். அந்தப் பள்ளிவாசலைச் சுற்றியுள்ளவர்கள் அங்கு வந்து ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். (கடமையாகும்) பள்ளிவாசல் திறப்பதற்கு முதல் நாள் இரவு பெண்களுக்கும், மறுநாள் ஜும்ஆவிற்கு வரும் ஆண்களுக்கும் சாப்பாடு கொடுத்து பல லட்ச ரூபாய்களை வீண் விரயம் செய்கின்றனர்.

கடமையானத் தொழுகைகளைத் தொழுவதற்குப் பெண்களைப் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்காத இந்த சு.ஜ.நிர்வாகிகள் பள்ளிவாசல் திறப்பதற்கு முதல்நாள் இரவு பெண்கள் அங்கு வந்து 2 ரக்காஅத்கள் தொழுதால், அது ஏதோ மிகச் சிறப்புக்குரிய தொழுகை என தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு, பெண்களையும் ஏமாற்றிச் செயல்படுகின்றனர். ஆண்கள் கூட கடமையல்லாத் தொழுகைகளை வீடுகளில் தொழுவது சிறந்தது என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருக்கிறார்கள். அப்படியிருக்க, பெண்கள் அங்கு வந்து 2 ரக்கா அத்கள் சுன்னத் தொழுவது சரியா? பெண்கள் அங்கு வந்து 2 ரக்காஅத் தொழுதுவிட்டு, அவர்கள் தரும் சாப்பாட்டை ஏதோ மிகப்பெரும் பரகத்தைப் பெற்றுச் செல்கிறோம் என்ற எண்ணத்தில் வாங்கிச் செல்கின்றனர். அந்த “பரகத்’ நிறைந்த சாப்பாட்டை வாங்குவதற்கு மாத விடாய்ப் பெண்களும் பள்ளிவாசலுக்குள் வருகின்றனர். அவர்கள் பள்ளிவாசலுக்குள் வருவது தடை என்பதை அறிந்தோ அல்லது அறியாமலோ, குளிப்புக் கடமையானப் பெண்களும் பள்ளிவாசலுக்குள் வருவது வரம்பு மீறியச் செயல்தானே. இதைப் பள்ளிவாசல் நிர்வாகிகளும், பெண்களும் உணர்ந்துத் திருந்துவார்களா?

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டிய போது அதற்குத் திறப்பு விழாச் செய்து, சாப்பாடுக் கொடுத்ததற்கு எந்தச் சான்றாவது இருக்கிறதா? ஆதாரம் இல்லாமல் இதைப் போன்றச் செயல்களைச் செய்வது தவறு இல்லையா? ஆகவே, இவை போன்ற வரம்பு மீறல்களைத் தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்(ஜல்)வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்களின் வழி முறைளைப் பேணி நமது செயல்களை அமைத்துக் கொள்வோமாக!

Previous post:

Next post: