அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் அந்நஜாத் தனது இலட்சியப் பயணத்தை உங்கள் அனைவரின் முழு ஆதரவுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் அந்நஜாத்தால் எடுத்து வைக்கப்பட்ட குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம். மனித அப்பிராயங்களுக்கும், ஊகங்களுக்கும் மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்ற தெளிவான கொள்கையை ஏற்றுக் கெரள்ளும் காலம் கனிந்து வருகின்றது. இந்தக் காலக்கட்டத்தில் கொள்கைச் சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.
கலப்படமற்ற தூய இஸ்லாம் மக்களிடையே வேகமாகப் பரவி வருவதால், கலப்பட இஸ்லாத்தை மக்களுக்குப் போதித்து உலக ஆதாயம் அடைந்தவர்கள், தங்களின் தொழிலுக்கு ஆபத்து வந்து விட்டதே என்று கதி கலங்கி, தங்களின் புரோகிதத் தொழிலை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சிகள் செய்து வருகின்றனர். அவர்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்திருக்கும் சகோதரர்களை ஏவிவிட்டு வன்முறையைத் தூண்டுகின்றனர். இதனால் சில இடங்களில் கொள்கைச் சகோதரர்கள் துன்பத்திற்கு ஆளாகிவருகிறார்கள் எனினும் நாம் பொறுமை காட்டக் கடமைப்பட்டுள்ளோம். அந்தச் சகோதரர்கள் அறியாமையால் அவ்வாறு செயல்படுகிறார்கள். எனவே அவர்களின் ஹிதயாத்திற்காக நாம் துஆ செய்வதோடு பொறுமையைக் கடைபிடிக்க வேண்டுகிறோம்.
மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை. எனவே நாம் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் குர்ஆன், ஹதீஸை மக்கள் முன் எடுத்து வைக்கக் கடமைப்பட்டுள்ளோமேயல்லாமல், அவர்களை குர்ஆன், ஹதீஸ்படி நடந்துதான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தப்படும் அதிகாரம் நமக்கு இல்லை என்பதைத் தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வே “விரும்பியவர் விசுவாசிக்கலாம்; விரும்பியவர் நிராகரிக்கலாம்; நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களுக்கு நரக நெருப்பை சித்தப்படுத்தியுள்ளோம்” (அல்குர்ஆன் 18:29), என்று தெளிவாக அறிவித்துவிட்டான். எனவே நாம் நிர்பந்தத்தை உண்டாக்குவது முறையாகாது.
அடுத்து கொள்கைச் சகோதரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், எந்த குர்ஆன், ஹதீஸை செயல்படுத்த மக்களிடம் வேண்டுகிறோமோ அதை முதலில் நாம் செயல்படுத்திக் காட்ட வேண்டும். இது விஷயத்தில் நமது சகோதரர்களிடையே பெரும் குறைபாடுகள் இருப்பதாக அறிகிறோம். குறிப்பாக குர்ஆன், ஹதீஸைப் பற்றி பேசும் சகோதரர்கள் தங்கள் ஐங்கால தொழுகைகளில் அக்கறை செலுத்துவதில்லை என்ற செய்தி நமக்குக் கிடைக்கின்றது. நாம் மாபெரும் “தஃவா” பணியைச் செய்து கொண்டிருப்பதால், இரவும், பகலும் அதிலேயே மூழ்கி இருப்பதால் தொழுகையை விடுவது குற்றமில்லை என்று கருதுகிறார்கள் போலும்.
அன்புச் சகோதர்களே! சகோதரிகளே!! தெளிவாக அறிந்துக் கொள்ளுங்கள், நாம் செய்யாத ஒன்றை மக்களுக்கு உபதேசிக்க நாம் வெட்கப்பட வேண்டும்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 61:2,3)
நாம் செயல்படாததை மக்களுக்குச் சொல்வதால் பெரும் வெற்றி நிச்சயமாகக் கிடைக்காது. நமது உபதேசங்களைக் கொண்டு ஒரு சிலர் ஹிதாயத் பெற்று நேர்வழிக்கு வந்தாலும் அதனால் நமக்கு அணுவளவும் நன்மை கிட்டாது. நாளை நமது உபதேசத்தைக் கேட்டு திருந்தியவர்கள் சுவர்க்கத்திலும், அந்த உபதேசத்தைச் செய்த நாம் நரகத்திலும் இருக்க நேரிடும். இது எவ்வளவு பெரிய துர்பாக்கிய நிலை என்பதைச் சிந்திக்க வேண்டும். காரணம், தொழுகை அற்றவனின் இதர செயல்களில் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது.
“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்டார்கள்.)
அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை” (அல்குர்ஆன் 74 : 42,43)
“நிராகரிப்பிற்கும இறை நம்பிக்கைக்கும் இடையில் தொழுகையைக் கைவிடுவதுதான் பாகுபாடாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ
“நமக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள உடன் படிக்கையின்படி தொழுகையை எவர் கைவிடுகிறாரோ அவர் நிச்சயமாக நிராகரிப்பவராகிவிட்டார்” என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா(ரழி), நூல்: திர்மிதீ, நஸயீ.
நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறு எந்தச் செயலைக் கைவிடுவதையும் நிராகரிப்பு (குஃப்ர்) என்று கணித்து வரவில்லை. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஷகீக்(ரஹ்), நூல்: திர்மதீ
தொழுகையின் சிறப்பையும், அவசியத்தையும் அதைக் கைவிடுவதால் ஏற்படும் கேடுகளையும மக்களுக்கு, மேடையில் எடுத்து முழங்கிக் கொண்டு நாம் தொழுகையில் பேணுதல் இல்லாமல் இருப்பதும், தனி மனித வழிபாட்டின் கெடுதல்களைத் தெளிவாக மேடைகளில் முழங்கிக் கொண்டு, சொந்த வாழ்க்கையில் தனிமனித வழிபாட்டிற்கு வித்திடுவதும், இன்றைய நவீன அரசியல்வாதிகளின் போக்கே அல்லாமல் உண்மை விசுவாசிகளின் நடைமுறையாக இருக்க முடியாது. இன்றைய அரசியல்வாதிகள் தான் மேடைகளில் மக்களைக் கவர்வதற்காக ஒழுக்க சீடர்களைப் போல் பேசிக் கொண்டு, சொந்த வாழ்க்கையில் ஒழுக்கக் கேடுகளையே கொள்கையாகக் கொண்டிருப்பவர்கள். இந்த இழிவான நயவஞ்சகமான நிலை நமக்கு வேண்டாம்.
மக்களுக்குப் போதிப்பவற்றை எடுத்து நடப்பதில் நாம் முதன்மையானவர்களாகத் திகழ வேண்டும்.
அடுத்து அந்நஜாத் குர்ஆன், ஹதீஸை எடுத்துச் சொல்லும் ஏடு என்று மக்களிடையே அறிமுகப்படுத்துவதாக அறிகிறோம். வழிகேட்டில் இருக்கும் எல்லாப் பிரிவினரும் குர்ஆன், ஹதீஸைச் சொல்வதாகத் தான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மக்களிடையே நமக்கு செல்வாக்கு வந்துவிட்டால் மார்க்கம் என்றால் குர்ஆன், ஹதீஸைத் தூக்கிப்பிடிப்பதற்குப் பதிலாக அந்நஜாத்தை தூக்கிப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுவிடும், இதுவும் நமது அசல் நோக்கத்திற்கு எதிரானதுதான். சத்திய முயற்சியில் ஈடுபட்ட இயக்கங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வியது இந்தக் தவறைக் செய்ததனால் தான். இந்த மாபெரும் தவறை நாம் ஒரு போதும் செய்யக் கூடாது.
“அந்நஜாத்” குர்ஆன், ஹதீஸை எடுத்துச் சொல்லும் ஏடு என்று அறிமுகப்படுத்துவதை விட்டு, குர்ஆன்,ஹதீஸை மக்கள் நேரடியாகப் பார்த்து விளங்கிச் செயல்படுவதற்குத் தடையாக இருக்கும் அனைத்து முட்டுக்கட்டைகளையும் அகற்றிட பாடுபடும் ஏடு என்று அறிமுகப்படுத்துங்கள்.
உண்மையில் குர்ஆன், ஹதீஸை உலக மக்கள் அனைவரும் ஏற்று, விளங்கிச் செயல்படத் தடையாக இருக்கும் நாஸ்திக, ஆஸ்திக அடிப்படையிலான எல்லாவித முட்டுகக்கட்டைகளையும் தெளிவாக விளக்கி, அவற்றை அகற்றிவிட்டு மக்கள் அனைவரும் குர்ஆன், ஹதீஸை ஏற்று தக்லீது (கண் மூடி பின்பற்றல்) இல்லாமல் நேரடியாக விளங்கிச் செயல்பட வைப்பது, மக்களிடையே பேசப்படும் அனைத்து மொழிகளிலும், குர்ஆனையும், ஹதீஸையும் தெள்ளத் தெளிவாக வெளியிடுவது, முஸ்லிம் சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் புரோகிதர்களை திருத்தி அது முடியாவிட்டால் அவர்களை ஒழித்து ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை சமைப்பது இவையே அந்நஜாத்தின் மாறாத இலட்சியங்களாக இருக்கின்றன. அவை நிறைவேற துஆ செய்யும்படி அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.