விமர்சனம்: இந்திய தேசிய லீக், தாருல் இஸ்லாம் ஃபவுண்டேன் டிரஸ்ட் போன்றோர், சாதிவாரி கணக்கெடுப்பில் மதம் இஸ்லாம் என்றும் சாதி முஸ்லிம் என்றும் மட்டுமே பதிவு செய்யுங்கள் எனப் பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதற்கு மாறாக தமுமுக, ததஜ அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகையும் பெற மதம்: முஸ்லிம் என்றும், சாதி 1.தக்னி, 2.தூதுகோலா, 3.லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், 4.மாப்பிள்ளா இந்த நான்கு பிரிவுகளில் ஒன்றையும் குறிப்பிடுமாறு பிரசுரம் வெளியிட்டுள்ளனர். இவற்றில் எது குர்ஆன், ஹதீஃத்படி சரி? சையது இப்றாஹீம், திருச்சி
விளக்கம்: எந்தக் கருத்தை யார் வெளியிட்டாலும் அது குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டிருக்கிறதா? என்று பார்த்து விளங்கி நடப்பவர்களே அல்லாஹ்வின் நன்மாராயத்திற்கு உரியவர்கள், அல்லாஹ்வால் நேர்வழியில் செலுத்தப்படுகிறவர்கள், நல்லறிவுடையோர் என்றும் அதற்கு மாறாக அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மத குருமார்கள், தலைவர்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும், அதன்படியே நடக்க வேண்டும் மற்றவர்களின் பேச்சைக் கேட்கவே கூடாது என்று தடுக்கும் ஆலிம்கள், ஆலிம்களே அல்ல; அவர்கள் தாஃகூத் என்று குர்ஆன் கூறும் மனித ஷைத்தான்கள், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவோர் அந்த ஆலிம்களை வணங்குவது கொண்டு கொடிய ´ஷிர்க் வைக்கின்றனர். (பார்க்க 9:31) என்று மிகக் கடுமையாக எச்சரிக்கும் குர்ஆன் ஜுமர்:39:17,18 இறைவாக்குகளை நடுநிலையோடு படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும்.
இந்த அடிப்படையில் இருதரப்பாரின் பிரசுரங்களையும் நடுநிலையோடு படித்துப் பாருங்கள். முஸ்லிம்களிடையே பிரிவுகள் இல்லை. முஸ்லிம் என்று மட்டுமே கூற வேண்டும், அற்ப உலக ஆதாயங்களுக்காக ஈமானை இழந்து மறுமையில் நரகம் புகக்கூடாது என்பதற்கு ஆதாரமாக 4:120,134, 34:5, 30:32, 41:33, 40:39, 17:18, 6:165 போன்ற குர்ஆன் வசனங்களையும், “”எந்த அரபியும் அஜமியை விட சிறந்தவர் அல்லர். எந்த அஜமியும் அரபியரை விட சிறந்தவர் அல்லர். வெள்ளையர் கருப்பரை விடவும், கருப்பர் வெள்ளையரை விடவும் சிறந்தவர் அல்லர். (அஹமது 5/411)
இனவெறியின் பக்கம் அழைப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; இன வெறிக் காகப் போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; இன வெறியின்மீது மரணிப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (அபூதாவூது)
“”எனக்குப் பின் உங்களுடைய உலக வசதி அதிகமாக்கப்படுவதைக் கண்டு நான் அஞ்சுகிறேன்” (புகாரீ 1465, முஸ்லிம் 1052) இந்த உலகம் நம்பிக்கையாளர்களுக்கு சிறைச் சாலையாகும், நிராகரிப்பாளர்களுக்கு சுவர்க்கச் சோலையாகும். (முஸ்லிம் : 5663)
“”எவர் இஸ்லாத்தில் இணைந்து போதுமென்ற தன்மையும் கொடுக்கப்பட்டு அல்லாஹ் வழங்கியுள்ளதை போதுமாக்கிக் கொண்டாரோ அவர் வெற்றி அடைந்துவிட்டார்” (முஸ்லிம்:1746)
“”நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன்; அதில் நிற்போரில் பெரும் பாலானோர் ஏழைகளாகவே இருந்தார்கள். (புகாரீ: 5196)
ஒரு பயணி கொஞ்சம் ஓய்வு பெறுவதற்காக ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து விட்டுச் செல்கி றானோ அதுபோல எனக்கும் இந்த உலகுக்கு முள்ள உறவாகும் (இப்னு மஸ்வூது(ரழி) அஹ்மத் போன்ற ஹதீஃத்களையும் முதல் சாரார் எடுத்துத் தந்துள்ளனர்.
இவை அல்லாமல் குர்ஆன் 13:26, 16:71, 17:30, 28:82, 29:62, 30:37, 34:36,39, 39:52, 42:12,27 போன்ற வசனங்கள் உலகியல் வசதி வாய்ப்புகளை (ரிஸ்க்)கொடுக்கும் முழு அதி காரமும் நம்மைப் படைத்த அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மேலும் “”அல்லாஹ் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது; அல்லாஹ் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது” என்பதிலும் ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இன்னும் குர்ஆன் அன்கபூத்: 29:17ல் “”நீங்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அடிபணிகிறீர்கள்; மேலும் பொய்யை இட்டுக்கட்டுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அடி பணியும் இவர்கள் உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவர்கள். ஆதலால் நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங் கள்; அவனையே அடிபணியுங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள். அவனிடத்திலேயே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். (29:17) என்று அறிவுறுத்தப்படுகிறது.
அல்குர்ஆன் இவ்வளவு தெளிவாக நேரடியாக வழிகாட்டிக் கொண்டிருக்க, இந்த இறை வாக்குகள் அனைத்தையும் நிராகரித்து முஸ்லிம்களை, காஃபிராக்கவும் அதன் மூலம் இவர்கள் பேர் புகழ் பெற்று அற்ப உலக ஆதாயங்களை அடையவே மதகுருமார்களும், அரசியல் குருமார்களும் முற்படுகிறார்கள் என்பதில் ஐயமுண்டா? இது இரண்டாவது சாராரின் நிலை!
அல்லாஹ்வை விட்டு அவுலியாக்களிடம் தஞ்சமடையும் தர்கா மதகுருமார்களுக்கும், அல்லாஹ்வை விட்டு ஆட்சியாளர்களிடம் தஞ்சமடையும் இயக்க மதகுருமார்களுக்கும் வேறுபாடு உண்டா? இரு சாராரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அல்லவா? சாக்கடையிலிருந்து சந்தன நறுமணத்தை எதிர்பர்ப்பது யார் குற்றம்?
சாதிகளாகப் பிரிக்கும் கட்டாயம்?
இப்படி முஸ்லிம்களை பல சாதிப் பிரிவுகளாகப் பிரித்தால்தானே, இவர்களும் பல இயக்கப் பிரிவுகளாகப் பிரிய வசதி ஏற்படும். பின்னர் போராட்டம், ஆர்ப்பாட்டம், பந்த், சாலை மறியல் என 7:86, 29:29 இறைவாக்குகளை நிராகரித்துப் பொதுமக்களக்குப் பெருத்த இடையூறுகளை ஏற்படுத்தி, பிளாக்மெய்ல் செய்து, நாய்க்கு எலும்புத் துண்டை எறிவது போல் அற்பமான ஆதாயங்களைப் பெற்றுத் தங்களைத் தாங்களே மெச்சிக்கொண்டு, பெருமை பேசி தங்களை வளர்த்துக் கொள்ள முடியும். நாங்கள் தான் சாதித்தோம் என ஒவ்வொரு இயக்கத்தினரும் சாதனை விழாவும், அரசுக்கு நன்றி செலுத்தும் விழாவும் நடத்த, மறு உலகை விட இவ்வுலகை அதிகமாக நேசிக்கும் மக்களிடம் வசூல் செய்து பெரும் நிதி திரட்ட முடியும்.
அல்லாஹ்வுக்கே முழுக்க, முழுக்கச் சொந்தமான பெருமையையும், கண்ணியத்தையும் அபகரிக்க அயராது பாடுபடும் இம்மதகுரு மார்களின் நாளைய முடிவைப் பற்றி எண்ணற்ற குர்ஆன் வசனங்களும், ஹதீஃத்களும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இம்மத குருமார்கள் உணர்வு பெற மாட்டார்கள்.
இந்த உண்மையை அவர்கள் எடுத்தெழுதியுள்ள குர்ஆன் 5:2 வசனமே உறுதிப்படுத்துகிறது. அது வருமாறு:
“”நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்; பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வையுங்கள் (தக்வா-பயபக்தி) அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்” (அல்குர்ஆன் 5:2)
இப்போது நடுநிலையுடன் சிந்தியுங்கள்.
இறையச்சம் உண்டா?
இந்த இயக்கத்தினர்களுக்கு உண்மையிலேயே இறையச்சம் இருக்குமானால், மேலே கண்ட அனைத்து குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் 25:30 இறைவாக்குக் கூறுவது போல் நிராகரித்து, 12:106 இறைவாக்கு கூறுவது போல் இறைவனுக்கு இணைவைக்கும் பெருங்கொண்ட மக்கள் கூட்டத்தினருடன் இணைவார்களா? பெருங்கொண்ட மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால் விரும்பும் வழிகேடுகளை நேர்வழியாகப் போதிப்பார்களா?
இறையச்சம் இருக்குமானால் 3:102,103, 105, 6:153,159, 30:32, 42:13,14 இறைவாக்குகளையும் 21:92, 23:52 இறைவாக்குகளையும் நிராகரித்து 23:53-56 இறைவாக்குகள் எச்சரிப்பதைப் புறக்கணித்து 22:78, 41:33 இறைவாக்குகளைக் கண்டுகொள்ளாமல் நிராகரித்து முஸ்லிம்கள் என்று அல்லாஹ் சூட்டிய பெயரை நிராகரித்து ஆளாளுக்குச் சுயமாக தனித்தனிப் பெயர் சூட்டிக்கொண்டு ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பலப் பிரிவுகளாகப் பிரிக்கத் துணிவார்களா?
யார் நேர்வழியில் இருக்கிறார்கள், யார் வழி கேட்டில் இருக்கிறார்கள் என்பதை அல்லாஹ்வே அறிந்தவன் நீங்கள் அறியமாட்டீர் கள். (பார்க்க: 2:142,213, 3:101, 4:68,175, 5:16, 6:39,87,126:153,161, 10:25, 11:56, 14:1, 15:41, 16:76,121, 19:36, 22:54, 23:73,74, 24:46, 34:6, 36:4, 61, 37:118, 42:52, 43:43,61,64, 48:20) உங்களை நீங்களே பரிசுத்தவான்கள்-நேர்வழி நடப்பவர்கள் என்று பீற்றிக்கொள்ள வேண்டாம் என்று 4:49, 53:32 இறைவாக்குகள் எச்சரிப்பதை நிராகரித்து நாங்கள்தான் நேர்வழியில் இருக்கிறோம்.
தவ்ஹீத்வாதிகள் என மார் தட்டுவோர் இறையச்சமுடையவர்களா?
42:21 கூறுவதுபோல் அல்லாஹ் விதிக்காத நிலையில் தர்கா சடங்குகள் செய்யும் இமாம்கள் பின்னால் நின்று தொழுவது ஹறாம், தர்கா சடங்குகள் செய்யும் தகப்பன் ஜனஸா தொழுகையில் மகன் கலந்து கொள்வது ஹறாம், ததஜ மூடக் கொள்கைகளை எதிர்ப்போர் பெற்றோர், சகோதரர்கள், நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வது ஹறாம், ததஜவை எதிர்க்காத முஸ்லிம் அல்லாதவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வது ஹலால், ஆயினும் முஸ்லிம் அல்லாதவர்களின் நூல்களை அச்சிட்டுக் கொடுப்பது ஹறாம், வரதட்சணைத் திருமணங்களில் கலந்து கொள்வது ஹறாம், பெண்வீட்டு திருமண விருந்து சாப்பிடுவது ஹறாம், ததஜ வினர் கூட்டங்கள் அல்லாத மற்றவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வது ஹறாம், ததஜமேடைகளில் மற்ற இயக்கத்தினரை ஏற்றுவது ஹறாம், மற்ற இயக்கத்தினர்களின், குறிப்பாக ஒன்றுபட்ட ஜமாஅத் முஸ்லிமீன் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வது கொடிய ஹறாம், அவர்களின் மேடைகளில் ததஜ பேச்சாளர்கள் ஏறுவது ஹறாம் இத்தியாதி இத்தியாதி ஹறாம்களை, 16:116 இறைவாக்கு கூறுவது போல், பொய்யாக இது ஹலாலானது, இது ஹறாமானது என்று அல்லாஹ்மீது பொய்யை இட்டுக்கட்டி, அல்லாஹ்வுக்கே இணையாளர் ஆகிறவர்கள் இறையச்சம் உடை யவர்களா?
49:16 சொல்வது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கும் இவர்கள் இறையச்சம் உடையவர்களா? ஈமான் உள்ளத்தில் நுழையாதவர்களும் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள 49:14-ல் அல்லாஹ் அனுமதித்துள்ள நிலையில், முஸ்லிம்களாக முஸ்லிம் சமுதாயத்தில் வாழ்ந்து மரித்து முஸ்லிம் மையவாடியில் தொழவைத்து அடக் கப்படுகிறவர்களை காஃபிர்கள் என்று அல்லாஹ்வே தீர்ப்பளிப்பதை மறுமைக்கென்று ஒத்தி வைத்த நிலையில் (42:21), இவ்வுலகி லேயே தீர்ப்பளிப்பவர்கள் இறையச்சம் உடையவர்களா?
யார் நமது தொழுகையைத் தொழுகிறாரோ, நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, (குறைந்தபட்சம்) நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம்; அவருக்கு அல்லாஹ் வின் பொறுப்பும், அவனுடைய தூதரின் பொறுப்பும் உண்டு. எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பைப் பாழடித்து வஞ்சித்து விடாதீர்கள் (புகாரீ 391,392,393) என்ற நேரடிக் கட்டளையைப் பாழடிப்பவர்கள் இறையச்சம் உள்ளவர்களா?
பள்ளியில் முஷ்ரிக், வீதியில் முஸ்லிம்!
பள்ளியில் முஷ்ரிக், காஃபிர், ஆனால் அரசியல் ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல் இவற்றிற்கு அவர்கள் முஸ்லிம்கள் என இரட்டை வேடம் போடும் நயவஞ்சகர்கள் இறையச்சம் உடையவர்களா? இப்படி இவர்களின் இறையச்சம் அற்ற நிலையை மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
நன்மைகளிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளாத நிலையிலும், பாவங்களிலும், வரம்பு மீறல்களிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் நிலையிலும் 5:2 இறைவாக்கை இவர்கள் எடுத்து எழுதி இருப்பது யாரை ஏமாற்ற?
தர்க்காக்களையும், தர்கா சடங்குகளையும், தரீக்காக்களையும், தரீக்கா சடங்குகளையும், மத்ஹபுகளையும், மத்ஹபு சடங்குகளை எதிர்த்து எழுதிவிட்டால், பேசிவிட்டால் மட்டும் இவர்கள் நேர்வழி நடப்பவர்களாக-தவ்ஹீத்வாதிகளாக ஆகிவிட முடியுமா?
2:186, 50:16, 56:85 இறைக் கட்டளைகளை நிராகரித்து தர்காவில் சென்று செத்தவர்களிடம் கையேந்துகிறவர்களுக்கும், அரசிடம் சென்று உயிரோடிருப்பவர்களிடம் கையேந்தும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவுலியா கொடுத்தார் என்று அவர்கள் நம்புவதற்கும் அரசு கொடுத்தது என்று இவர்கள் நம்புவதற்கும் வேறுபாடு உண்டா?
தகுதியுள்ளவர்களிடமே பொறுப்புக்கள் ஒப்படைக்க வேண்டும் என்ற இறைத் தூதரின் நேடிக் கட்டளை தெளிவாக இருக்கும் நிலையில் அதற்கு மாறாக தகுதி குறைந்தவர்களுக்காக அரசிடம் கையேந்தத் தூண்டுபவர்கள் இறையச் சமுடையவர்களா?
மதகுருமார்களே காரணம்!
இன்று முஸ்லிம் சமுதாயம் ST, SC சமூகங்களைவிட கேடுகெட்ட நிலையில் இருப்பதற்கு யார் காரணம்? இந்த மதகுருமார்கள்தானே! அல்லாஹ் மனித குலத்திற்கே தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ள மார்க்கத்தைச் சொல்லும் குர்ஆனின் மொழிபெயர்ப்புகளைப் பார்த்து விளங்க முடியாது. அரபி கற்ற மவ்லவிகளுக்கு மட்டுமே விளங்கும் என கடைந்தெடுத்த பொய்யைக்கூறி மக்களை ஏமாற்றி வஞ்சிப்பது இந்த மதகுருமார்கள்தானே!
கிறித்தவ வெள்ளையன் நமது நாட்டைப் பிடிக்க முன் சுமார் 800 ஆண்டுகள் முஸ்லிம் மன்னர்களே ஆண்டுவந்தனர். அக்கால கட்டத்தில் முஸ்லிம்களே முக்கிய பதவிகளில் (Key posts) இருந்து ஆட்சியை வழிநடத்தினர். இந்த நிலையில் வெள்ளையன் ஆட்சியைப் பிடித்தான். அப்போது இந்த சுய நல மதகுருமார்கள் குறுக்கிடாமல் இருந்திருந்தால் அந்த அதிகாரிகள் ஆங்கில மொழியைக் கற்று அப்பதவிகளில் நீடிக்க வாய்ப்பிருந்தது. இந்த வக்கிர புத்தி கொண்ட மதகுருமார்கள் எப்படி முஸ்லிம்களை வஞ்சித்தார்கள் தெரியுமா? ஆங்கில ஆட்சியில் பதவியில் இருப்பது ஹறாம், ஆங்கில மொழி கற்பது ஹறாம் என்று கூமுட்டை ஃபத்வாவைக் கொடுத்து முஸ்லிம்களை ஆட்சிப் பதவிகளிலிருந்து வெளியேற்றியவர்கள் இம்மத குருமார்கள்தானே!
அந்த இடங்களை மேல்ஜாதி இந்துக்கள் ஆங்கில மொழி கற்று நிரப்பினர். இன்றும் அவர்களே அரசு பதவிகளில் ஆதிக்கம் செலுத்து கின்றனர். விளைவு முஸ்லிம்கள் குர்ஆனை விட்டுத் தூரப்படுத்தியதால் மார்க்கம் அறியாதற்குறிகளாகவும் (அவாம்) ஆட்சிப் பதவிகளிலிருந்து அகற்றப்பட்டதால் வறியவர்களாகவும் SC,ST களை விட கேடுகெட்ட நிலையில் தள்ளப்பட்டார்கள். இந்த உண்மை சச்சார் கமிஷனே பகிரங்கப் படுத்தியுள்ளது.
அன்று கிறித்தவ வெள்ளையன் ஆட்சியில் பதவி வகிப்பது ஹறாம் என்று கூமுட்டை ஃபத்வா கொடுத்த இம்மதகுருமார்கள் இன்று எந்த முகத்துடன் காவி உள்ளம் கொண்ட இந்துக்களின் ஆட்சியில் பதவிகளைப் பெற இந்துக்களைப் போல் சாதிப் பிரிவைக் குறிப்பிட்டாக வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள்.
ஏன் இந்த நாடகம் தெரியுமா?
அரசில் பதவி ஆசை காட்டி இம்மையை மறுமையை விட அதிகம் நேசிக்கும் பெருங் கொண்ட மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறும் குறுகிய சுயநல நோக்கமே அல்லாமல் மக்கள் நலம் நாடி அல்ல, தங்களின் வழி கெட்ட இயக்கங்களை நிலைநாட்ட இதுவழி வகுக்கும் என்ற தீய நோக்கமே அல்லாமல் வேறல்ல. மலையைக் கில்லி எலியைப் பிடிப்பது போல் முஸ்லிம்ளின் பெரும் பணத்தைப் பாழாக்கி அரசிடமிருந்து 3.5 இட ஒதுக்கீடு பெற்றதாக நான், நீ என்று பெருமை பேசி ஆடம்பர விழாக்கள் எடுத்தார்களே? அந்த 3.5 இட ஒதுக்கீடு பலனை முஸ்லிம்கள் அடைந்துள்ளார்களா? அந்த அடிப்படையில் முஸ்லிம்களில் எத்தனை பேர் அரசு பதவி பெற்றுள்ளார்கள்? விகிதாச்சாரம் என்ன? இயக்க இன வெறியர்கள் அரசிடமிருந்து வெள்ளை அறிக்கையை பெற்றுத் தருவார்களா?
இவர்களின் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான முயற்சிகள் முஸ்லிம்களுக்கு இவ்வுலகில் பெரும் நட்டத்தையும், மறுமையில் நரகத்தையும் பெற்றுத் தருமே அல்லாது ஒரு போதும் ஈடேற்றம் தராது.
முஸ்லிம்களே எச்சரிக்கை!
முஸ்லிம்களே எச்சரிக்கை! இவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்காதீர்கள். முஸ்லிம்களை சாதிவாரியாகப் பிரிக்கத் துணை போய் ஈமானை இழக்காதீர்கள்! அரசு கணக் கெடுப்பில் மதம் அல்ல மனித குல மார்க்கம் இஸ்லாம் என்றும், சாதிகளற்ற முஸ்லிம்கள் என்று மட்டுமே பதிவு செய்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து நடப்பதன் மூலம் இம்மை மறுமை ஈருலகிலும் வெற்றிபெற முன்வாருங்கள்; அல்லாஹ் அருள்புரிவானாக.