அந்நாஜத் ஆநிரியர் சகோ. அபூ அப்தில்லாஹ் அவர்களின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து ஆகஸ்ட், 2017 முதல் இதழ் வெளிவந்தது. அவரின் விருப்பத்தை அல்லாஹ் நிறைவேற்றினான். அந்நஜாத் வெளிவருமா? என சந்தேகித்தவர்களின் வினாவுக்கு விடையாக இந்நிகழ்வை அமைத்து தந்தான். அல்ஹம்துலில்லாஹ்!
அந்த இதழில் தலையங்கத்திலும், சில ஆக்கங்களிலும் அவரைப் புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தது. விளைவு! “”அவரைப் பின்பற்றும் கூட்டம் ஒன்று” உருவாகி விட்டது என்ற முனங்கலை ஒருவர் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த எண்ணம் வேறு சிலருக்கும் கூட இருக்கலாம்.
ஒவ்வொருவரின் பேச்சுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது அந்நஜாத்தின் வேலை இல்லை, அதற்காக வாசகர்கள் சந்தா செலுத்தவில்லை என சிலர் தெரிவித்துக் கொண்டிருப்பதை அந்நஜாத் அறிந்தே இருக்கிறது; எனினும், முழுக்க முழுக்க மார்க்க அடிப்படையில் செயல்படும் இதழ் மீது சேற்றை வாரி இறைப்பவர்களை, அவர்களின் அறியாமையிலிருந்து விடுவிக்க, குர்ஆன், ஹதீஃதை எடுத்து சொல்ல வேண்டிய கடமை இருக்கிறதே! எனவே, முளையிலேயே இதைக் கிள்ளி எறிவோம். அதற்காக “”அம்மனிதர் அபூ அப்தில்லாஹ்வைப் பற்றி” சிறிது பேசுவோம்.
“அம்மனிதரை” நாங்கள் சாதாரண மனிதராகவே பார்த்துள்ளோம்; பெருமை கொண்டவராக நாங்கள் அவரைக் கண்டதில்லை; உயிருடன் இருக்கும் இன்றைய இயக்கத் தலைவர்கள் பலரை, அவர்களின் தொண்டர்கள், விளம்பரத் தட்டிகள், ஃபிளக்ஸ் பேனர்களின் வாயிலாக புகழும் போது, அதைக் கண்டித்துத் தடுக்காத தலைவர்களைத்தான் இன்றைய காலகட்டத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் இவர்களுக்கிடையே அந்த மனிதர் வாழ்ந்த காலத்தில், அவரை நேருக்கு நேர் புகழ்ந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட ஹதீஃதை கூறி அம்மனிதர் தடுத்ததை நாங்கள் நேரிடையாக பார்த்து இருக்கின்றோம்.
ஆரம்ப காலத்தில் அனைவரும் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மார்க்க கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம், ஒரு காமெடி நடக்கும். முக்கியமானவர்களாகத் தம்மைக் கருதிக்கெண்ட இன்றைய இயக்கங்களிலுள்ள அரபி படித்த மவ்லவி -அரபி படித்த ஆனால் மவ்லவி அல்லாத, இரு சாரார்களிடையே போட்டி ஒன்று மவுனமாக நடக்கும்.
அதாவது தாம் முக்கிய பேச்சாளர் என்றெண்ணி, அரசியல்வாதிகளைப் போல, தாம் கடைசியில் பேசுவதாக கூறுவார்கள். கடைசியில் பேசுபவர் முக்கிய பேச்சாளர், சிறந்த பேச்சாளர் என்ற கருத்தை மக்களிடம் அரசியல்வாதிகள் ஏற்படுத்தி இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள் இவர்கள். இப்படி ஒரு பிரச்சனை முதன் முதலாக ஒரு தடவை ஏற்பட்டபோது, “”அந்த மனிதர்” பந்தா பெருமை எதுவும் இல்லாமல் தாமாகவே முன்வந்து முதலில் பேசுவதற்கு மேடையேறி, பேச வந்ததை பேசி முடித்தும் விட்டார்.
ஆனால் கடைசியில் பேசுவதாக கூறிய முக்கிய மவ்லவி பேசாமலே சென்றுவிட்டார். காரணம் யாதெனில், என்ன பேசவேண்டும் என்ற தயாரிப்புடன் மவ்லவி வந்தாரோ, அதையும் சேர்த்து “”அந்த மனிதர்” பேசி முடித்து விட்டார். கொள்கை அறிமுகம் ஆன ஆரம்ப காலம் அது! பேச்சாளர்களுக்கும் அது ஆரம்ப காலம் தானே! அடுத்து பேசுவதற்கான தலைப்பும் அதற்கான தயாரிப்பும் கைவசம் இருக்காது அல்லவா? ஆகவே பேசாமல் சென்றுவிட்டார்.
பேச்சாளர்கள் இரு வகை; ஒரு வகையினர் சொற்ப கூட்டத்தில் பேசுவதற்கு ஆர்வமாக இருக்க மாட்டார்கள்; பிறருக்கு உபதேசம் செய்வது மட்டுமே நோக்கமாக கொண்ட பேச்சாளர்கள்; எப்படி பேச வேண்டும்? எதை பேச வேண்டும்? மக்கள் தம்மை மேடைகளிலும் டிவியிலும் பார்க்கும்போது எந்த தொப்பி போட்டால் தமக்கு எடுப்பாக இருக்கும்? எந்த ஆடை அலங்காரத்தில் பேச வேண்டும்? என மக்களைக் கவரக் கூடிய விதத்தில் அனைத்தையும் செட்டப் செய்து கொள்வார்கள். காலத்திற் கேற்ற தலைப்பு, அதற்கேற்ற தயாரிப்புகளை அவ்வப்போது தயாரித்து கொள்வார்கள்; ஆனால், தற்போது இந்த நிலைமை மாறி, பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் தங்கள் தயாரிப்புகளை ரெடிமேடாக வைத்திருக்கின்றனர்; ஆகவே, முன்பு போல் பேசத் திணறுவதில்லை;
இரண்டாவது வகையினர், கூட்டத்திற்கு 2 நபர்கள் வந்தாலும் அந்த இருவருக்காக பேச்சை ஆரம்பித்து கடைசி வரை உற்சாகம் குறையாமல் பேசுவார்கள் மார்க்க ஈடுபாட்டுடன் இருப்பார்கள். சாதாரண தோற்றம்; கவர்ச்சி பேச்சு இல்லை; அல்லாஹ்வுக்காக மார்க்கத்தை சொல்லும் ஒரே நோக்குடன் உபதேசம் செய்வார்கள். குர்ஆன், ஹதீஃதிலிருந்து தாம் பெற்றதை, தமது அமல்களிலும் செயல்படுத்துவதால் இவர்களுக்கு தலைப்பும் தயாரிப்பும் தானாகவே வந்து விடும்; அம்மனிதரை நாங்கள் கடந்த 31 ஆண்டுகளில் இப்படித்தான் கண்டிருக்கிறோம்.
அடுத்து, அந்நஜாத் கடந்து வந்த பாதையையும் சற்று பின்னோக்கி பாருங்களேன். சில உண்மைகள் புரிய வரும்; அம்மனிதர் எதிலும் பெருமையை வெளிப்படுத்தியது இல்லை; அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சி, சாமானிய மனிதனாய், குர்ஆன்-ஹதீஃத் கொள்கையில் பிறழாமல், பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் கேலிக்கும் ஆளாகி, எதிர்கொண்ட பிரச்சனைகளை துணிந்து சந்தித்து, கருத்து மாறுபட்டோரிடம் விவாதம் புரிந்து, தேவைப்பட்டோருக்கு விளக்கம் கொடுத்து, பிறரின் ஏற்புடைய விளக்கங்களை ஏற்று, ஏற்க மறுக்கும் விளக்கங்களுக்கு மவுத்தாகும் வரை விளக்கம் கொடுத்துக் கொண்டு, இன்று தமது பாதையில் அந்நஜாத் தைரியமான மன உறுதியுடன் வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது என்றால், அல்ஹம்துலில்லாஹ், இது “”அம்மனிதரின்” திறமை என்று சொல்வதை விட, “”அம்மனிதருக்கு கிடைத்த இறை கிருபை” என்று கூறி அந்த வல்லோனின் கிருபை தொடர்ந்து அந்நஜாத்திற்கு கிட்டிட அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்கின்றோம்.
“எங்களில் எவரும் எங்களுக்குத் தெரியாத எந்த விசயத்திலும் அவரைப் புகழ்ந்து எழுதவில்லை. குர்ஆன், ஹதீஃத் கூறியதன்படியுள்ள விசயங்களை ஆதாரமாக வைத்தே அவரைப் புகழ்ந்துள்ளோம். ஆதமுடைய மக்கள் பாவம் செய்பவர்கள் தான்…” என்ற ஹதீஃதின் அடிப்படையில் “”அம்மனிதரும் அதற்கு உட்பட்டவர் என்றும், தீர்ப்பு நாளின் அதிபதியான அல்லாஹ்வின் தீர்ப்புக்கு எல்லோரையும் போல அவரும் உட்பட்டவர் தான் என்றும் நம்புகிறோம்.” விசாரனை இன்றி சொர்க்கம் செல்லும் பாக்கியம் கிடைக்குமா? என்பது கூட எவருக்கும் தெரியாது. எனவே தான், சென்ற இதழில் அவரது பாவங்கள் மன்னிக்கப்படவும், மறுமையில் கேள்வி கணக்கின்றி உயரிய சுவர்க்கம் கிடைக்கவும் துஆ செய்யும் படித்தான் எழுதி இருக்கிறோம். எனவே “”அவரை கண்மூடி பின்பற்றும் கூட்டத்தினர்” என்று எங்களை சொல்லாதீர்கள் என்று அன்புடன் கேட்கிறோம்.
“நான் சொல்லும் விஷயத்தை அப்படியே நம்பாதீர்கள்.” அது குர்ஆனிலும், ஹதீஃதிலும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, இருந்தால் மட்டுமே அதைப் பின்பற்றுங்கள் என “”அம் மனிதர்” அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்ததை செயல்படுத்த முன்வந்த கூட்டமாக எங்களைப் பாவியுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அடுத்தொரு முக்கிய விஷயம்! அந்நஜாத்தில் வெளிவரும் எந்த விசயத்தைப் பற்றியும் எவரும் விமர்சிக்கலாம். விமர்சனம் மனித உரிமை அல்லவா? குறிப்பாக குர்ஆன், ஹதீஃத் அடிப்படையிலான இஸ்லாமிய பத்திரிக்கைகள் இந்த விமர்சனத்தில் கலந்து கொள்வது எங்களுக்கு பன் மடங்கு மகிழ்வைத் தரும். அவ்வாறு விமர்சனம் செய்ய முன் வருபவர்களிடம் அந்நஜாத் தமது வேண்டுகோள் ஒன்றை முன் வைக்கிறது. அது யாதெனில்: தவறுதல் மனித இயல்பு என்ற அடிப்படையில், அந்நஜாத் தவறான கருத்து எதையும் தெரிவித்தால், உங்களின் விமர்சனத்தை எங்களுக்கு எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களை திருத்திக் கொள்ள நீங்கள் தரும் வாய்ப்பு இது. நினைவிருக்கட்டும்! தங்களின் விமர்சனம் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் மட்டுமே இருத்தல் அவசியம். அதை உங்களது பத்திரிகையில் பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் இருப்பதும் உங்களின் விருப்பம். ஆனால், அந்நஜாத்தின் கூற்று குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் தவறென தங்களின் விமர்சனம் நிரூபித்தால், இன்ஷா அல்லாஹ் எங்களது கருத்தை மாற்றிக் கொள்கிறோம். அது மட்டுமின்றி தங்களின் விமர்சனத்தை அப்படியே அந்நஜாத்தில் வெளியிட்டு எங்களுக்கு தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கள் விமர்சனத்தை படித்த பின்னரும், எங்களது கருத்தை குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் யாம் சரி காண்போமேயானால், அதாவது தங்களின் விமர்சனம் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் சரியில்லை என்று நாங்கள் கருதினால், தங்களின் விமர்சனத்தை அந்நஜாத்தில் விமர்சனமும்-விளக்கமும் பகுதியில் இடம் பெற செய்து அதற்குரிய எங்களது விளக்கத்தை குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் தெரிவிக்கிறோம். வாசகர்களை குழப்ப வேண்டாம் என்ற நன்னோக்கோடு இதை தெரிவிக்கிறோம்..
நினைவிருக்கட்டும்! மீண்டும் ஒரு முறை தெரிவிக்கிறோம்! தங்களின் “”விமர்சனமும் எங்களது விளக்கமும்” குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் மட்டுமே இருந்தல் அவசியம் என்பது நமக்குள் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டும். எங்களது ஆக்கங்கள் குர்ஆன் ஹதீஃதை புரிதலில் தவறி யிருந்தாலும், அதே போல தங்களின் விமர்சனமும் குர்ஆன், ஹதீஃதை புரிதலில் தவறியிருந்தாலும், சுட்டிக்காட்டல் இரு தரப்பிலும் நளினமாக, வரம்பு மீறாமல் இருக்க முயல்வோம்.
இது “”பரிசை எதிர்பாராமல் ஆடும் ஆட்டம் (Friendly Match) ஆக இருக்கட்டும்.
நமது அமல்களுக்கான பரிசை இறைவனிடம் பெறுவது தானே இஸ்லாம்.