அறிஞர்களே! அறிவு ஜீவிகளே!! ஆலிம்களே!!! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

in 2014 நவம்பர்,2017 செப்டம்பர்

அபூ அப்தில்லாஹ்

இன்றைய இந்திய முஸ்லிம்கள் மிகமிக ஆபத்தான கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டை 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்த முஸ்லிம்கள் அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாமல் பூண்டோடு துடைத்து எறியப்பட்டது போல், நம் தாய்நாடான இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்த முஸ்லிம்களாகிய நாம் பூண்டோடு துடைத்தெரியப்பட படு பயங்கரச் சதிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் சமூகம் அரசியல் தலைவர்களையும், ஆலிம் வர்க்கத்தையும் தங்களுக்கு நேர்வழி காட்டும் நல்லவர்களாக நம்பி அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகின்றனர். ஆனால் இந்தத் தலைவர்களும், ஆலிம்களும் தங்களின் இவ்வுலக ஆதாயத்தைக் குறிக் கோளாகக் கொண்டிருக்கின்றனரே அல்லாமல், சமுதாய நலனில் அக்கறைக் காட்டுவதாக இல்லை.

முஸ்லிம் தலைவர்களின், ஆலிம்களின் சுயநலப் போக்கைச் சரியாகக் கணித்த ஆரிய வர்க்கம், இவர்களை எப்படி வலையில் சிக்க வைக்கலாம் என்று சரியாகக் கணித்து “”பாபரி மஸ்ஜித்” விவகாரத்தைத் தேன் தொட்டு வைத்து ஆரம்பித்தனர். முஸ்லிம் தலைவர்களும், ஆலிம்களும் தங்களின் இவ்வுலக ஆதாயத்தைக் குறியாகக் கொண்டு, முஸ்லிம்களின் இன உணர்வைத் தூண்டிவிட்டு அவர்களைக் கோதாவில் இறக்கினர்.

ஒரு கையை எவ்வளவு வேகமாக வீசினாலும் சத்தம் வராது. அந்தக் கைக்கு எதிர்க்கை மோதினால் தான் வலுவான சத்தம் ஏற்படும். பாபரி மஸ்ஜித் விவகாரத்தை ஆரியர்கள் கிளப்பும் போது, முஸ்லிம்கள் மெளனம் சாதித்திருந்தால், கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் விவகாரம் முற்றி இருக்காது. R.S.S பா.ஜ.கவோ வளர்ந்து ஆட்சியில் அமர வாய்ப்பே ஏற்பட்டிருக்காது. எப்படி ஆரிய-அரசியல் தலைவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்கும் சுயநல எண்ணம் இருந்ததோ, இருக்கிறதோ அதேபோல் முஸ்லிம் தலைவர்களுக்கும், ஆலிம்களுக்கும் இவ்வுலகில் கிடைக்கும் அற்ப பதவி, பணம், சுகம் இவற்றிலிருக்கிற சுயநல எண்ணத்தோடு, அவர்களுக்குப் போட்டியாக இவர்களும் அப்பாவி முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு களத்தில் இறங்கிப் போராடி பாபரி மஸ்ஜித் விவகாரத்தை முற்ற வைத்தனர்.

விளைவு பா.ஜ.க. முதலில் சில மாநிலங்களின் ஆட்சியைப் பிடித்தது. உத்திரப் பிரதேச ஆட்சியைப் பிடித்தது. மாநில ஆட்சியில் அமர்ந்த ஆசையில் மத்திய ஆட்சியையும் பிடிக்க, பாபரி மஸ்ஜிதை இடித்துத் தரைமட்டமாக்கினர். அவர்கள் திட்டத்தைத் தீட்சண்யமாகத் தீட்டி வெற்றி கண்டனர். மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தனர். அதன் விளைவு அரசின் முக்கியத் துறைகள் அனைத்திலும் காவிமனம் படைத்தவர்களை தந்திரமாகப் புகுத்தி விட்டனர். அவர்கள் தங்கள் காவித் தனத்தைக் கனகச்சிதமாக ஆரவாரமின்றி அமைதியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். அடுத்து பா.ஜ.க. அல்லாத ஆட்சி மத்தியில் அமைந்தாலும் இந்தத் துறை அதிகாரிகளை ஒன்றும் செய்ய முடியாது. அந்தச் துணிச்சலும் எந்தக் கட்சி ஆட்சியாளர்களுக்கும் ஏற்படப்போவதில்லை. பாபரி மஸ்ஜித் இடிபட மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி பிரதமர் நரசிம்மராவே துணை போன கதை அனைவரும் அறிந்ததுதானே. எனவே இந்திய வரலாற்றில் புதிதாக படிந்துள்ள காவிச் சிந்தனையை அகற்றுவது இனி அசாத்தியமான ஒன்றே; மிகமிகக் கடின முயற்சியே.

நடந்து முடிந்த மாநிலங்களின் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் காங்கிரஸிடமிருந்து பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அத்துனைக் கொடூரங்களுக்குப் பின்னரும் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. இப்போது 3 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியது. இவற்றைக் கூர்மையாக அவதானித்தால், தந்திரமாக ஆரியர் காவிச் சிந்தனையோடு ஆட்சியைப் பிடித்து விட்டால், அதன் பின்னர் அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றுவது சாத்தியமே இல்லை. சகல அரசியல் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் கைக்கொண்டு ஆட்சியில் ஆணி கொண்டு அறைந்து உட்கார வைத்தது போல் ஒட்டிக் கொள்வார்கள் என்பதை உணர முடியும். வந்தேறிகளான ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இப்படித்தான் தந்திரங்கள், சூழ்ச்சிகள் செய்து மண்ணின் மைந்தர்களான திராவிடர்களிடமிருந்து ஆட்சி அதிகாரங்களையும் பிடுங்கிக் கொண்டு அவர்களை அடிமைகளாக்கித் தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் இப்போது, இப்படிப்பட்ட வாய்ப்புகளையும், வதிகளையும் பா.ஜ.க.வினருக்கு ஏற்படுத்திக் கொடுத்ததே முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஆலிம்களும் என்றால் அது மிகையான ஒரு கூற்று அல்ல. அவர்களும் ஆரியர்களைப் போல் அற்ப உலக ஆதாயங்களுக்காகவும், பதவி சுகத்துக்காகவும், உலக வளமான வாழ்விற்காகவும் விலை போனவர்கள் என்றால் அதுவும் மிகைப்பட்ட ஒரு கூற்றல்ல.

உண்மையான சமுதாய நலனிலும், முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையான மறுமை வாழ்விலும் உறுதியான நம்பிக்கையின் அடிப்படையிலும், அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருந்தால், ஐங்காலத் தொழுகைகளையே பாழ்படுத்திக் கொண்டிருக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு இன உணர்வைத் தூண்டி அவர்களைக் களத்தில் இறக்கி இருப்பார்களா? ஐங்கால தொழுகையை நிலை நிறுத்துவது இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றை நிலை நிறுத்துவதாகும். மஸ்ஜித் அந்த ஐங்கால தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றும் இடமான ஒரு கல் கட்டிடம் மட்டுமே. அந்த ஐங்காலத் தொழுகையையே நிலைநிறுத்தாமல் அதைப் பாழ்படுத்துகிறவனுக்கு, இஸ்லாத்தின் பிரதான தூணையே இடித்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருப்பவனுக்கு, அந்தத் தொழுகையை நிறைவேற்றும் மஸ்ஜித்-கல் கட்டிடத்தைக் காப்பாற்றும் பேர்வழி என்று களத்தில் குதிப்பவனுக்கு ஈமானுடைய உணர்வு இருக்குமா? அல்லது இன உணர்வு இருக்குமா? இன உணர்வுடன் களத்தில் குதிப்பவன் வெற்றி பெற முடியுமா? ஈடேற முடியுமா? ஒருபோதும் முடியாது. இன உணர்வுக்காகப் போராடி மடிபவன் நரகம் புகுவான் என்பது நபி(ஸல்) அவர்களின் மிகக்கடுமையான எச்சரிக்கை. நபி(ஸல்) அவர்களின் இந்தக் கடுமையான எச்சரிக்கையைப் புறந் தள்ளிவிட்டு தொழுகையே இல்லாத முஸ்லிம்களை இன உணர்வுடன் களத்தில் இறக்கியவர்கள் யாராக இருக்க முடியும்? சுயநலவாதிகளாக மட்டுமே இருக்க முடியும்.

அவர்கள் உலக ஆதாயம் கருதியே பாபரி மஸ்ஜிதைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஆதாரம் தருகிறோம். கவனமாகப் படியுங்கள். இன்றும் இந்த 2014ம் ஆண்டில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல மஸ்ஜிதுகள் கவனிப்பாரின்றி பாழ டைந்து கிடக்கின்றன. புல் மண்டிக் கிடக்கின்றன. மாற்று மதத்தினரால் மட்டுமல்ல, முஸ்லிம்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டு ஆட்டுத் தொழுவமாக, மாட்டுத் தொழுவமாக இருந்து வருகின்றன. பாபரி மஸ்ஜித் 450 வருட பள்ளி என்றால், 1000 வருடத்து பழம் பெருமையுடைய பல பள்ளிகள் கவனிப் பாரின்றிப் பாழடைந்து கிடக்கின்றன. இந்தப் பள்ளிகள் விஷயத்தில் இந்த அரசியல் தலைவர்களுக்கும், ஆலிம்களுக்கும் அக்கறை உண்டா? அவற்றைச் செப்பனிட, சீர்திருத்த, அங்குள்ள மக்களை ஐங்கால தொழுகையாளர்களாக ஆக்க ஒரு சிறிய முயற்சியையேனும் செய்ததுண்டா? இல்லவே இல்லை.

அந்தப் பள்ளிகளில் எந்த அரசியல் கட்சியினதும் குறுக்கீடு துளி கூட இல்லை. அவற்றைச் சீர்திருத்த எவ்வித எதிர்ப்பும் ஏற்பட கடுகளவும் வாய்ப்பு இல்லை. ஆயினும் இந்த முஸ்லிம் தலைவர்களும், ஆலிம்களும் இந்த நல்ல முயற்சியில், அல்லாஹ்விடம் வெகுமதியைப் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபடுவதாக இல்லை. காரணம் அவற்றை அரசியலாக்கி வசூல் வேட்டையாட-உலக ஆதாயங்கள் அடைய வழி இல்லை. எனவே அக்கறை துளி அளவும் இல்லை. ஆனால் இந்தப் பள்ளிகளில் ஏதாவதொன்றில் பா.ஜ.க. குறுக்கீடு செய்து ஏதாவது பொய்க் கற்பனையைக் கூறி அரசியல் ஆதாயம் தேட அவர்கள் முற்படட்டும். உடனே முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஆலிம் களும் சுடச்சுட களத்தில் குதித்து விடுவார்கள். ஆம்! இங்கும் இப்போது இவர்களுக்கும் அரசியல் ஆதாயம் தேட-வசூல் வேட்டையாட பா.ஜ.க காயை நகர்த்தி விட்டதல்லவா? இவர்களின் சமுதாயத் தொண்டு(?) என்றால் மக்களை மயக்கி, ஏமாற்றி வசூல் வேட்டை யாடி கொள்ளை அடித்து தங்களின் இவ்வுலக வாழ்க் கையை வளப்படுத்திக் கொள்வதுதான். மதங்களின் அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் இம்மி அளவும் வேறுபாடு இல்லை.

உண்மையிலேயே இவர்களுக்கு சமுதாய நலனில் அக்கறை இருக்குமானால் பா.ஜ.க.வினர் மாநில ஆட்சியைப் பிடித்து பாபரி மஸ்ஜிதை இடித்துத் தரை மட்டமாக்கிய பின்னராவது பாடம் படித்திருக்க வேண்டுமே. அதுதான் இல்லை. பாபரி மஸ்ஜித் தரை மட்டமாகி விட்டது. இப்போது வசூல் வேட்டையாட என்ன செய்வது? உள்ளம் கல்லான சில அரக்கர்கள் மக்களை ஏமாற்றிப் பணம் வசூலிக்க செத்துப் போனவனின் பிணத்தை மக்கள் நடமாடும் பாதையில் கிடத்தி அதைக்காட்டி மக்களிடம் பணம் வசூலிப் பதைப் பார்த்திருப்பீர்கள். அது போன்றதொரு தந்திரத்தைத் தான் இந்த அரசியல் தலைவர்களும், ஆலிம்களும் கடைபிடிக்கிறார்கள். இல்லை என்றால் தரைமட்ட மாக்கப்பட்ட ஒரு மஸ்ஜிதை ஒரு கல் கட்டிடத்தை “”ஷஹீதாக்கப்பட்டது” என்று பிதற்றுவார்களா? ­ஷஹீதாக்கப்பட்டதாக துக்க தினம் கடை பிடிப்பார்களா? “ஷஹீத்’ என்றால் யார்? அல்லாஹ்வுக்காக, தூய எண்ணத்துடன் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடி தன்னுடைய இன்னுயிரை நீத்தவர் “ஷஹீத்’ என்ற அழைக்கப்படுகிறார். பேர், புகழுக்காக இஸ்லாமிய எதிரிகள் பலரை வீழ்த்திய பின்னர் ஒருவன் எதிரிகளால் கொல்லப்பட்டாலும் அவன் “­ஹீத்’ பதவியைப் பெறமாட்டான். நரகில் தூக்கி எறியப்படுவான் என் பது தெள்ளத் தெளிவான ஆதாரபூர்வமான ஹதீஃத். இந்த நிலையில் ஒரு கல் கட்டிடம்-ஒரு மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை ஷஹீதாக்கப்பட்டதாக வர்ணிப்பவர்கள் மக்களை ஏமாற்றும் கல் நெஞ்சர்களாக மட்டுமே இருக்க முடியும்.

மக்கள் மனதில் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் ஒரு சதித்திட்டமே இது. இதில் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட ஆலிம்கள் கைதேர்ந்தவர்கள். பள்ளிகளில் தொழுகையின் அழைப்பான “”பாங்கு” சொல்லும்போது ஓர் அதிசயக் காட்சியைப் பார்க்கலாம். பாங்கு சப்தம் கேட்டதோ இல்லையோ படுத்திருக்கும் வயதானவர்களிலிருந்து ஆண்கள், பெண்கள் அனைவரும் மிக மரியாதையுடன் திடு திடுமென எழுந்து விடுவர். தலையைத் துணியால் மறைத்துக் கொள்வர். துணி இல்லாவிட்டால் ஒரு குச்சியை எடுத்துக் காது இடுக்கில் சொருகிக் கொள்வர். பிற ஆண்களுக்கு முன்னால் தலைவிரிகோலாகச் செல்லும் பெண்கள் முதல் எல்லாப் பெண்களும் அவசர அவசரமாக தலையை மறைத்துக் கொள்வர். இது அவர்கள் தொழுகையின் அழைப்புக்குக் கொடுக்கும் மிகப் பெரிய மரியாதை. அவ்வளவுதான்; மற்றபடி தொழுகைக்கு அழைக்கப்பட்டு விட்டோம். பள்ளி சென்று தொழவேண்டும் என்ற அக்கறை இவர்களில் 99 சதவீதம் பேருக்கு இருக்காது. முஸ்லிம்களிடம் இந்த மூட நம்பிக்கையை வளர்த்து விட்டவர்கள் யார்? சாட்சாத் ஆலிம் வர்க்கமே! ஏன் அப்படிப்பட்ட தொரு மூட நம்பிக்கையை முஸ்லிம்களிடம் இந்த ஆலிம்கள் வளர்த்து வைத்துள்ளார்கள்? இந்த மூட நம்பிக்கையின் அடிப்படையிலான இந்தச் செயலைச் செய்து முடித்து விட்டால் தொழுகைக்குரிய கடமை முடிந்து விட்டது. தொழ வேண்டியதில்லை என்ற நம்பிக்கையில் பள்ளி பக்கவே போக மாட்டார்கள்?

அப்படிப்பட்ட தொழுகையற்ற முஸ்லிம்களைத் தான் இந்த ஆலிம்கள் ஏமாற்றி கத்தம், ஃபாத்திஹா, தர்ஹா சடங்கு, கூடு, கொடி, கந்தூரி, மெளலூது, ஸலாத்து நாரியா என செய்ய வைத்து பிழைப்பு நடத்தலாம். ஐந்து நேரம் ஒழுங்காக விளங்கி நபி வழியில் தொழுபவர்கள் இந்த மூடச் சடங்குகளை எட்டியும் பார்க்கமாட்டார்கள். எனவே மார்க்கத்தைப் பிழைப்பாக்கியுள்ள ஆலிம்களுக்கு தொழுகையற்ற முஸ்லிம்களே பெரும் மூலதனமாகும். அதற்காகவே பாங்கில் கற்பித்துள்ள மூடச் சடங்கு.

தொழுகை அழைப்பான “பாங்கில்’ ஏற்படுத்தியுள்ள இந்த மூட நம்பிக்கையைப் போன்றதொரு மூட நம்பிக்கையை அப்பாவி முஸ்லிம்களிடம் வளர்க்கும் ஒரு தீய திட்டம்தான், கபட நாடகம் தான் “”பாபரி மஸ் ஜித் ஷஹீத்” நாடகம். இவ்வாறு ஒரு மூட நம்பிக்கையை வளர்த்து விட்டால், அதில் மயங்கி இடிபட்ட மஸ்ஜிதுக்காக களத்தில் இறங்கிப் போராடத் தயாராவார்களே அல்லாமல் ஐங்கால தொழுகை பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். பாங்கு சப்தம் கேட்டதோ இல்லையோ திடுதிடுமென எழுந்து தலையை மறைத்து, அல்லது காதில் குச்சியை வைத்து அதற்குரிய கடமையை நிறைவேற்றியாகிவிட்டதே! பின் ஏன் தொழவேண்டும்? அதுபோல் இடிபட்ட மஸ்ஜிதுக்காகக் களத்தில் இறங்கிப் போராடியாகி விட்டதே? பின் ஏன் ஐங்கால தொழுகை தொழவேண்டும்? எனவே இந்த மூட நம்பிக்கையை வளர்த்து விடுகிறார்கள். தொழுகையே இல்லாத முஸ்லிம்கள்தானே பணம் கொழிக்கும் பெரும் மூலதனம்.

ஐங்காலத் தொழுகைகளை விடாமல், தொடர்ந்து நிலைநிறுத்துபவர் பாங்கில் மூடச் சடங்கையோ, “”பாபரி மஸ்ஜித் ­ஹீத்” என்ற மூடச் சடங்கையோ எற்கவும் மாட்டார். கத்தம், ஃபாத்திஹா, தர்ஹா சடங்கு, கூடு, கொடி, கந்தூரி, மெளலூது, ஸலாத்து நாரியா போன்ற நரகில் சேர்க்கும் செயல்களையோ, பாபரி மஸ்ஜிதின் பெயரால் இவர்கள் கற்பனை செய்துள்ள பித்அத்களையோ ஒருபோதும் செய்ய மாட்டார். காரணம் அவர் ஐங்காலத் தொழுகையை ஒழுங்காக நிலைநிறுத்துவதால் அவரது உள்ளத்தில் பிரகாசம் ஏற்பட்டுவிடும். நல்லதையும் தீயதையும் தெளிவாக விளங்கிக் கொள்வார். ஏமாற்றிப் பிழைப்போரின் வலையில் சிக்கமாட்டார். அந்த ஐங்காலத் தொழுகை அவரை சகல தீய காரியங்களை விட்டும் தூய்மையாக்கி விடும். (பார்க்க : 29:45)

பாபரி மஸ்ஜித் இடிபட்டபின் இந்த அரசியல் தலைவர்களும், ஆலிம்களும் கற்பனை செய்துள்ள இன்னொரு மூட நம்பிக்கை “”டிசம்பர் 6 துக்க நாள்”. இந்த டிசம்பர் 6ஐ வருடா வருடம் துக்க நாளாகக் கடைபிடித்து வருகிறார்கள். படைப்புகளிலேயே மிகச் சிறந்த படைப்பான மனிதனே இறந்து விட்டால் கூட வருடா வருடம் என்ன? மூன்று தினங்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை. கணவன் இறந்து விட்டால் மட்டுமே மனைவி நான்கு மாதம் 10 நாள் துக்கம் கடைபிடிக்க வேண்டும். மற்றபடி இஸ்லாத்தில் பிறந்த நாள், இறந்த நாள் என்றெல்லாம் கொண்டாடவோ, துக்கம் கடைபிடிக்கவோ, நினைவுநாள் என்று சடங்குகள் செய்யவோ மார்க்கத்தில் கடுகளவும் அனுமதி இல்லை. இந்த நிலையில் ஒரு மஸ்ஜிதுக்காக-ஒரு கல் கட்டிடத்திற்காக துக்கம் கடைபிடிக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? மக்களை மூட நம்பிக்கையில் மூழ்க வைக்கத்தானே? அதன் மூலம் வரு மானம் ஈட்டத்தானே? எந்த அளவு கல் மனம் படைத்தவர்களாக இருந்தால் முஸ்லிம்களை இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளில் மூழ்கச் செய்ய முடியும்? முகல்லிது ஆலிம்களுக்கும், தவ்ஹீத் ஆலிம்களுக்குமுள்ள வேறுபாடுகள் என்ன? அவர்களும் முஸ்லிம்களை ஒரு வகையில் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். இவர்களும் இன்னொரு வகையில் முஸ்லிம்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். தங்களின் வருமானம் குறைந்து விடக்கூடாது, வசூல் நின்று விடக்கூடாது என்ற தவறான எண்ணத்தில்தான் வருடா வருடம் டிசம்பர் 6ல் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை நினைவுபடுத்தி முஸ்லிம்களின் இன உணர்வை -(ஈமானின் உணர்வை அல்ல) வளர்த்து வருகிறார்கள்.

இவர்களின் இந்தச் சுயநல, சுய ஆதாய செயல்பாடு-மூட நம்பிக்கை, முஸ்லிம் சமுதாயத்திற்கு மேலும் பல கேடுகள் வரவே வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. “”மீலாது ஊர்வலம்” என்ற பித்அத் சடங்கை ஆரம்பித்தவர்கள் முகல்லிது ஆலிம்கள். அதன் விளைவு ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் ஊர்வலங்களை ஆரம்பித்து ஹிந்து முஸ்லிம்களிடையே பெரும் கலவரத்தைத் தோற்றுவித்து எண்ணற்ற முஸ்லிம் களின் உயிர்களையும், சொத்து சுகங்களையும் வருடா வருடம் காவு கொண்டு வருகிறது.

இது போதாதென்று இப்போது புதியதொரு பெரும் நஷ்டத்தை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படுத்த டிசம்பர் 6ஐ துக்க நாளாக இவர்கள் கடை பிடிக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு துக்க நாள் கடை பிடிப்பதைப் பார்த்த, ஹிந்து மத வெறியர்கள் டிசம்பர் 6ஐ மகிழ்ச்சி நாளாகக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். உண்ணா விரதத்திற்குப் போட்டியாக உண்ணும் விரதம் என்பது போல் இது இருந்தாலும், பெருங் கேட்டையே முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும்.

மீலாது ஊர்வலமும், விநாயகர் ஊர்வலமும் வெவ்வேறு நாட்களில் நடப்பவை. இந்த நிலையில் விநாயகர் ஊர்வலங்கள் முஸ்லிம்களுக்குப் பெரும் கேட்டையும், நஷ்டங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் டிசம்பர் 6ல் ஒரே நாளில் முஸ்லிம் மத வெறியர்கள் துக்க நாளும், ஹிந்து மத வெறியர்கள் மகிழ்ச்சி நாளும் கொண்டாடி பேரணி நடத்த ஆரம்பித்தால் அதன் விளைவு என்ன ஆகும்? நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அல்லாஹ்தான் முஸ்லிம்களுக்கு நல்ல புத்தி கொடுத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். மற்றபடி இப்படிப்பட்ட மகிழ்ச்சி நாள் கொண்டாட்டம், துக்க நாள் கடை பிடிப்பு என மக்களை ஏமாற்றி வசூல் வேட்டையாடி தங்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்கிறவர்கள் ஒருபோதும் சத்தியத்தை உணர்ந்து திருந்தப் போவதில்லை. காரணம் மக்களை மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றிப் பிழைப்பவர்கள் அதிலிருந்து அவர்கள் மீளாதவரை, அவர்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கும் வாய்ப்போ, இறைவனிடம் மன்னிப்புப் பெறும் பாக்கியமோ இல்லவே இல்லை என்று அல்குர்ஆன் 2:159-162, 7:146 வசனங்கள் கடுமையாக எச்சரிக்கின்றன.

எனவே எமது அன்பிற்குரிய அரசியல் தலைவர்களே, ஆலிம்களே மக்கள் உங்களைப் பெரிதும் நம்பி இருக்கிறார்கள். நீங்கள் நேர்வழி காட்டுவதாக நம்பி கண்மூடி உங்கள் பின் வந்து கொண்டிருக்கிறார்கள். உங்களை நம்பி உங்கள் பின் வரும் அந்த அப்பாவி மக்களுக்குத் துரோகம் இழைக்காதீர்கள். அவர்களை வஞ்சிக்காதீர்கள். சத்தியத்தைச் சொல்கிறீர்கள் என்று நம்பும் மக்களை அசத்திய வழியில் இட்டுச் செலவதை விட பெரிய துரோகம், அல்லாஹ்வைக் கோபப் படுத்தும் செயல் வேறு எதுவுமே இருக்க முடியாது.

இத்தனைக்கும் காரணம் நீங்கள் தொண்டைத் தொழிலாகக் கொண்டதேயாகும். தொண்டைத் தொண்டாகச் செய்யுங்கள். உங்களின் உலக வாழ்க்கைக்கு ஹலாலான முறையில் தொழில் செய்யுங்கள், வியாபாரங்கள் செய்யுங்கள், விவசாயம் செய்யுங்கள். நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போல் ஆட்டுப் பண்ணை, கோழிப்பண்ணை, மாட்டுப் பண்ணை என பாடுபட முன் வாருங்கள். அதில் அல்லாஹ் உங்களுக்கு அபிவிருத்திச் செய்யப் போதுமானவன். மக்க ளிடம் கையேந்தாதீர்கள். அது இழிவு; கொடுக்கும் வாசலை அல்லாஹ் அடைத்து விடுகிறான். அல்லாஹ் விடம் மட்டுமே கையேந்துங்கள். அவன் மட்டுமே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து தர முடியும். அவன் கொடுக்கும் வாசலை உங்களுக்குத் திறந்துவிட்டால், இப்போது உங்களுக்குக் கிடைப்பதைவிட பன் மடங்கு கிடைக்கப் பெரிதும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் தொழில் மூலம், வியாபாரம் மூலம் கோடி, கோடியாகத் திரட்டுங்கள். அதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சித்து அவர்களை ஏமாற்றிப் பொருள் சேர்க்க ஒருபோதும் முற்படாதீர்கள். அது பெருங்கேடாகவே முடியும்.

மக்களுக்கு குர்ஆனிலும், ஹதீஃதிலும் உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள். அவற்றில் உங்களின் கற்ப னைகளை, யூகங்களை, கதைகளைத் திணிக்க ஒரு போதும் முற்படாதீர்கள். “”ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆனைப் பற்றிப் பிடியுங்கள்” (3:103) என்று அல்லாஹ் கூறுவதை அப்படியே மக்களிடம் மறைக்காமல் கூறுங்கள். “”ஒற்றுமை எனும் கயிற்றைப் பிடியுங்கள்” என்று திரித்துக் கூறி மக்களை வஞ்சிக்காதீர்கள்.

குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்று குர்ஆன், ஹதீஃத் கூறுவதையே கூறுங்கள். குர்ஆன், ஹதீஃதில் இல்லாத இஜ்மா, கியாஸ், லாஜிக், பாலிஸியை மார்க்கத்தின் அடிப்படையாகக் கூறி மனித யூகங்களை மார்க்கத்தில் நுழைக்க வழி வகுக்காதீர்கள். மக்களை ஏமாற்றி வஞ்சிக்காதீர்கள். தீனில்-மார்க்கத்தில் பிரிவுகள், பிளவுகள் இல்லை, ஒரே சமுதாயம் என்று அல்குர்ஆன் கூறுவதை அப்படியே கூறுங்கள். மறைக்காதீர்கள், மத்ஹபு பிரிவுகளுக்கு முகல்லிது ஆலிம்கள் சுய விளக்கம் கொடுத்து யூகத்தைப் புகுத்தி மக்களை வழி கெடுக்காதீர்கள்.

குர்ஆன் மக்களுக்கு விளங்காது, மவ்லவிகளுக்கு மட்டுமே விளங்கும் என்று குர்ஆன் கூறாத பொய்க் கூற்றைக் கூறி குர்ஆன் கருத்துக்களைத் திரித்து வளைத் துக்கூறி மக்களை ஏமாற்றாதீர், வஞ்சிக்காதீர்கள். நாளை அல்லாஹ்விடம் கடுமையாகப் பிடிபடுவீர்கள். குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி கூறி மக்களை நேரான வழியில் இட்டுச் செல்லுங்கள். அதுவே உங்க ளுக்கு மறுமையில் மகத்தான வெற்றியைத் தரும். அல்லாஹ்வை உண்மையிலேயே அஞ்சிக் கொள்ளுங்கள். அதற்கு மாறாக, நாங்கள் எங்கள் மூதாதையர்கள் மற்றும் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ள பெரியார்கள், நாதாக்கள் சென்ற வழியே செல்வோம்; அவர்கள் கடைபிடித் தவற்றையே மார்க்கமாகக் கடைபிடிப்போம், மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. எங்களின் மறு உலக வாழ்க்கை பாழ்பட்டாலும் பரவாயில்லை. இந்த உலகில் நாங்கள் பட்டம், பதவிகளோடு, பேரும், புகழோடு, பெரும் அந்தஸ்தோடு வாழ்ந்தால் போதும் என்பது உங்களின் எண்ணமாக இருந்தால், நன்றாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளுங்கள். அந்த, நீங்கள் விரும்பும் வாய்ப்பு களும் உங்களை கையை விட்டு நழுவிச் செல்ல இருக்கின்றன.

முஸ்லிம் தலைவர்களாகிய, ஆலிம்களாகிய உங்களை மட்டுமல்ல, முஸ்லிம்கள் என்று சொல்லும் அனைவரையும் வேரோடு, வேரடி மண்ணோடு ஸ்பெயினில் ஒழித்துக் கட்டியது போல், இந்திய மண்ணிலும் வேரோடு, வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டும் பெரும் சதி முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த சதி முயற்சியை நீங்களே உரமிட்டு, நீர் பாய்ச்சி வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்கள் சந்ததிகளும், முஸ்லிம்களின் சந்ததிகளும் எதிர்காலத்தில் இந்திய மண்ணில் வாழும் உரிமையை நீங்களே உங்கள் கைகளாலேயே முஸ்லிம் எதிரிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறீர்கள் என்பதையும் உங்கள் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் இவை அனைத்திற்கும் நீங்கள் அனைவரும் கண்டிப்பாகப் பதில் சொல்லியே தீரவேண்டும். அல்லாஹ்வின் கடுமையான பிடியிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது என்பதையும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு நாளை மறுமையைப் பற்றி அக்கறை இல்லை. இவ்வுலக வாழ்க்கைதான் எங்களுக்குப் பெரிது என்பது உங்களின் பதிலாக இருந்தால், இந்தக் கோரிக்கையை நாம் உங்களிடம் நேரடியாக வைத்தோம் என்பதற்கு நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நீங்கள் சாட்சியாக இருங்கள். அல்லாஹ் போதுமானவன்.

 

Previous post:

Next post: