அமல்களின் சிறப்புகள்…
M. அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றி ஹதீஃத்கள் தமிழாக்கமும் வெளியிட்டோரும், பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல் பதிப்பு : மூல நூலாசிரியர் முன்னுரையிலி ருந்து, 12 வ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… பக்கம் 380ல் 13ஆம் எண் ஹதீஃதின் விளக்கமாக தொடர்ந்து கூறப்பட்டுள்ளவை.
ஒரு மனிதர் ஹஜ்ரத் அபூ உமாமா(ரழி) அவர்களிடம் வந்து, “தாங்கள் உள்ளே வரும் போதும் வெளியில் செல்லும் போதும், நிற்கும்போதும், உட்காரும் போதும் மலக்குகள் தங்களுக்கு துஆ செய்வதாகக் கனவு கண்டேன்” என்று கூறினார். அப்பொழுது அபூஉமாமா(ரழி) அவர்கள் அம்மனிதரிடம், “”நீர் விரும்பினால் உமக்கும் மலக்குகள் அவ்வாறு துஆ செய்வார்கள்” என்று கூறி “ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்யுங்கள்” என்ற பொருள் கொண்ட ஆயத்தை ரஹீமா என்பதுவரை ஓதிக் காட்டினார்கள்.
எமது ஆய்வு :
நபித் தோழர் உமாமா(ரழி) அவர்கள் நேரடியாக கூறுவதாக மேற்கண்ட வாசகம் சொல்கிறது. நபி(ஸல்) அவர்கள் இதனை கூறவில்லை என்பதும் இதிலிருந்து தெளி வாகிறது. அப்படி என்றால் இது ஹதீஃத் அல்ல, நபித் தோழர் கூறிய செய்திகளை அரபியில் “அஸ்ர்” என்ற நிலையில் அதாவது நபித்தோழர்கள் கூறுவதாக, ஹதீஃத் கலா வல்லுனர்கள், ஹதீஃத் புத்தகங்களில் இடம் பெறச் செய்து உள்ளனர். எனவே, “அசி” புத்தகம், இந்த செய்தி இடம்பெறும் ஹதீஃத் நூல் எது என்றும், அறிவிப்பாளர் யார் என்றும் கண்டிப்பாக தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்களது வழக்கமான பாணியில் இப்போதும் அதைத் தெரிவிக்கவில்லை.
அதுதான் போகட்டும்! அபூ உமாமா (ரழி) அவர்கள் அம்மனிதரிடம், “நீர் விரும் பினால் உமக்கும் மலக்குகள் அவ்வாறு துஆ செய்வார்கள்” என்று கூறி “ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிக மாக திக்ரு செய்யுங்கள்” என்ற பொருள் கொண்ட ஆயத்தை ரஹீமா என்பதுவரை ஓதிக் காட்டினார்கள்” என்று அப்புத்தகத் தில் எழுதியுள்ளார்கள் அல்லவா?” குர்ஆன் வசனங்களைக் கூறும்போது அந்த ஆயத்துக்கள் இடம் பெற்றுள்ளஅத்தியாய எண், ஆயத்து எண் ஆகியவைகளை எழுதியவர் அப்புத்தகத்தில் குறிப்பிடுவார்கள் அல்லவா?
ஆனால் பரிதாபம்! அசி புத்தகம் இங்கே அதனை குறிப்பிடவில்லை. ஏன் குறிப்பிடவில்லை தெரியுமா? குறிப் பிட்டிருந்தால், அவற்றை படிப்பவர்கள் அவற்றை குர்ஆனில் தேடினால், இவர்கள் எழுதியவாறு வசனங்கள் குர்ஆனில் இருக்கவே இருக்காது. அப்படியே இருந்தாலும் இறை வசனத்தில் கூறப்பட்டுள்ளவாறு இவர்கள் அமல் செய்யமாட்டார்கள். தன்னிச்சையாக இவர்கள் குர்ஆன் காட்டித் தராத ஒன்றை அமல்கள் என்ற பெயரில் செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் அமல் செய்யும் திக்ர் முறைகளே இதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.
மாறாக, குர்ஆனோ இவர்கள் செய்யும் திக்ர் முறைப் படி திக்ர் செய்யக்கூடாது என்று அறிவித் துக் கொண்டிருக்கிறது. இதனை ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம். “அமல்களின் சிறப்புகள்” (அசி) புத்தகத்தின் ஆசிரியர் தமது கப்ஸா கதைகளுக்கு ஆதாரமாக குர்ஆனுடைய ஆயத்துக்களை எப்படியயல்லாம் திரித்துக் கூறியுள்ளார் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அதேபோல தமது கப்ஸா கதைகளுக்கு ஆதாரமாக ஸஹீஹான ஹதீஃத்களை ஆதாரமாக காட்டுவதில்லை என்பதையும், அது மட்டுமில்லாமல் ஸஹீஹான ஹதீஃத் களையே அவற்றின் கருத்துக்களை சிதைத்து, திரித்து தமது கப்ஸா கதைகளுக்கு ஏற்ப விளக்கம் கொடுத்துக்கொண்டு இருப்பதையும் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
மேலே தெரிவித்துள்ள அப்புத்தகத்தின் விளக்கத்தில், இப்போது அடுத்த கட்டமாக கேவலமான முயற்சி ஒன்றைக் கையாள் வதை கவனியுங்கள். கனவுகள் மூலமாக தமது கப்ஸா கதைகளுக்கு ஆதாரம் காட்ட முன் வருகிறது. அப்புத்தகம், (யாரோ) ஒரு மனிதர் கனவு கண்டாராம். அந்தக் கனவை அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அக்கனவுக்கு விளக்கம் கேட்டதாகக் கூறவில்லை. மாறாக, அபூஉமாமா என்ற ஒரு சஹாபியிடம் வந்து விளக்கம் கேட்டாராம்.
உடனே அந்த நபித் தோழரும் “ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிக மாக திக்ரு செய்யுங்கள்” என்ற பொருள் கொண்ட ஆயத்தை ரஹீமா என்பதுவரை ஓதிக்காட்டினார்களாம். இந்த இறை வசனம் குர்ஆனில் எங்கே இருக்கிறது என்று கூறவேண்டும் அல்லவா? கூறி இருந்தால் அது திக்ரைப் பற்றி கூறவில்லை என்பது தெரியவரும். அபூஉமாமா(ரழி) அவர்கள், “ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்யுங்கள்” என்று பொருள் கொண்ட ஆயத்தை ரஹீமா என்பது வரை ஓதிக் காட்டினார்களாம் என்று அசி புத்தகம் எழுதியிருப்பதால், உங்களில் எவரும் ரஹீமா என்ற வார்த்தையைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள், மீறி தேடினீர்களே யானால், உலக முடிவு நாள் வரை தேடிக் கொண்டுதான் இருப்பீர்கள், ஏனென்றால் “ரஹீமா” என்று ஒரு வார்த்தை குர்ஆன் முழுவதிலுமே இல்லை.
அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றான ரஹீம் என்பதைத்தான் இவர்கள் ரஹீமா என்று பெண்பாலில் அல்லாஹ்வை அழைக்கிறார்கள். அஸ்தஃபிருல்லாஹ் கேட்டால், குர்ஆனை ஓதும்போது, ஆயத்தின் இறுதியில் வரும் வார்த்தையை இவ்வாறு ஓதுவது குர்ஆன் ஓதும் சட்டம் (தஜ்வீத்) என்பார்கள் மார்க்க மேதைகள்(?) மார்க்க அறிஞர் கள்(?) உலமாப் பெருமக்கள்(?) மற்றும் இவர்கள் அனைவருக்கும் ஜால்ரா அடிக்கும் மேதாவிகள்(?) இந்த சட்டம் குர்ஆனை அகில உலகங்களுக்கும் இறக்கி அருள் புரிந்துள்ள அல்லாஹ்வால் இயற்றப்பட்டதா? அல்லது “இந்த தூதரிடம் அழகிய முன்மாதிரி இருப்பதாக” அல்லாஹ் (33:21)ல் கூறியிருப்பதால், இந்த சட்டம் அல்லாஹ்வின் தூதரால் அறிமுகம் செய்யப்பட்டதா? இல்லையே! இந்த சட்டம் மனிதர்களால் இயற்றப்பட்டது என்றால், அர்த்தம் அனர்த்தமாகும் வார்த்தைகளிலாவது இந்த சட்டத்தை பிரயோகிக்காமல் இருக்கலாமே? ஏன் இது நாள் வரை எவருக்கும் இது புரியவில்லை.
அசி புத்தகம் ஆயத்தின் எண்ணைக் குறிப்பிடாததால், ரஹீம் என்பது வரை முடியும் இறைவசனங்கள் சிலவற்றை இங்கே காண்போம். அல்குர்ஆன் 9:117 ரவூஃபுர் ரஹீம் அல்குர்ஆன் 33:73 கஃபூரூர் ரஹீம் அல்குர்ஆன் 39:53 கஃபூரூர் ரஹீம் அசி புத்தகம் கூறுவது போல் மேற் கண்ட வசனங்கள் “திக்ர் செய்யுங்கள் என்ற பொருளில் கூறவே இல்லை என்பதை விளங்கிக் கொள்ள இவ்வசனங்களைப் படித்துப் பார்ப்பீர்களேயானால் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். அவற்றை இப்போது கவனிப்போம். அல்குர்ஆன் 9:117 ரவூஃபுர் ரஹீம் : “நபியையும், முஹாஜிர்களையும், அன்சாரிகளையும் நிச்சயமாக அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் சருகிவிடுவதற்கு நெருங்கிய பின்னர், கஷ்டமான காலத்தில் (நபியாகிய) அவரை அவர்கள் பின்பற்றினர். பின்னரும் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவன், அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
மேற்கண்ட இறைவசனம் அசி புத்தகம் கூறும் திக்ர் செய்வது பற்றியது அல்ல என் பதை விளங்கிக் கொள்வோமாக! அல்குர்ஆன் 33:73 கஃபூரூர் ரஹீம் : “எனவே நயவஞ்சகர்களான ஆண்களையும், நயவஞ்சகர்களான பெண்களையும், இணை வைப்பவர்களான ஆண்களையும், இணை வைப்பவர்களான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்.
நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும், நம்பிக்கையாளர்களான பெண்களையும் (அவர்களின் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். மேற்கண்ட இந்த இறைவசனமும் அசி புத்தகம் கூறும் திக்ர் செய்வது பற்றியது அல்ல என்பதை விளங்கிக் கொள்வோமாக! அல்குர்ஆன் 39:53 கஃபூரூர் ரஹீம் : “தங்கள் மீது அளவு கடந்து (பாவங்கள் செய்து) வரம்பு மீறிவிட்ட என் அடியார்களே! அல்லாஹ்வுடைய அருளை விட்டும் நீங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.
நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவற்றை யும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்” மேற்கண்ட இந்த இறைவசனமும் அசி புத்தகம் கூறும் திக்ர் செய்வது பற்றியது அல்ல என்பதை விளங்கிக் கொள்வோமாக. ஆகவே, தப்லீக் ஜமாஅத் சகோதரர்களே! அல்லாஹ்வும், மேலும் அவனுடைய தூதரும் கூறி இருப்பதை மட்டும் பின்பற்ற வேண்டும் மற்றவைகளை பின்பற்றக் கூடாது என்பதை இனியாவது இன்ஷா அல்லாஹ் அறிந்து செயல்படுவோமாக! (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)