S.H.அப்துர் ரஹ்மான், திருச்சி
அன்புள்ள சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர்களே நாம் குர்ஆன், மற்றும் ஹதீஃத்கள் அடிப்படையில் மார்க்கத்தை அறிந்தும், அமல்கள் செய்தும் வருகின்றோம். அல்லாஹ் குர்ஆனில் 4:59, 24:54 வசனங்களில் அல்லாஹ் “அத்தி வுல்லாஹ் வ அதீதிவுர்ரஸூல” என்று தனித்தனியாக குறிப்பிடுகின்றான். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், இன்னும் தூதருக்கும் கீழ்ப்படி யுங்கள் என்று குறிப்பிடுகிறான். அதன்படி அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆனையும், இறைத் தூதரின் வழிகாட்டுதலான ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களையும் பின்பற்றி வாழ்ந்து நம் அமல்களையும் செய்து வருகிறோம். தற்போது சில சகோதரர்கள் ஹதீஃத் தேவையில்லை குர்ஆன் மட்டும் போதும் அதைக் கொண்டே அனைத்து அமல்களை யும் செய்யலாம் என்றும் குர்ஆன் மட்டும் போதாதா என்றும் மக்களை குழப்புகின்றனர்.
இதுபற்றி அந்நஜாத் மே 2012ல் “நேர்வழி நடக்க குர்ஆன் மட்டும் போதும் என்போரே விளக்கம் தாருங்கள்” என்ற தலைப்பில் அபூ அப்துல்லாஹ் இவர்களை பற்றி எழுதியுள்ளார்கள் அதற்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை மீண்டும் மீண்டும் மக்களை குழப்பி வருகின்றனர். அவர்களின் குழப்பங்களும் அதன் மீதான எனது கேள்விகளும் கீழே தரப்பட்டுள்ளன. இவைகளுக்கு விடைகளை அவர்களிடம் கேட்பதின் மூலம் அவர்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம். இன்ஷாஅல்லாஹ்.
குழப்பம் : 1 ஐவேளை தொழுகைகளை இரண்டு ரக்ஆத் ஆக மட்டும் தான் தொழ வேண்டும்.
கேள்வி : 1 நீங்கள் தொழ சொல்லும் ஐவேளைக்கு ஆதாரம் என்ன? இரண்டு ரக்ஆத் தொழு கைக்கு குர்ஆனில் ஆதாரம் என்ன? தொழும் முறையை பாங்கு முதல் ஸலாம் வரை உள்ளதற்கு குர்ஆனில் ஆதாரம் என்ன? (குர்ஆனை மட்டும் கொண்டு ஆதாரம் தரவும்)
குழப்பம் : 2 அல்லாஹ்வை மட்டும் அழைக்கும் பள்ளியில் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் நபிமார்கள் பெயர் உச்சரிப்பதால் ஸலவாத் ஓதக்கூடாது.
கேள்வி : 2 அத்தஹிய்யாத்தில் ஸலவாத்தில் நபிமார்கள் பெயர் கூறப்படுவதால் ஓதக் கூடாது என்று கூறுகிறீர்களே குர்ஆனில் நபிமார்கள் பெயர் வரும் குர்ஆன் வசனங் களை தொழுகையில் ஓதலாமா? இல்லையா?
குழப்பம் : 3 பெருநாள், ஜும்மா தவிர ஐவேளை தொழுகைக்கு ஜமாஅத் இல்லை.
கேள்வி : 3 ஐவேளை தொழுகைக்கு ஜமாஅத் இல்லை என்று குர்ஆனில் எங்கு உள்ளது? குர்ஆனில் நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்று சேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள். (அல்குர்ஆன் : 2:43) ஒன்று சேர்ந்து (ஜமாஅத்தாக) ருகூஉ செய்பவர்களுடன் சேர்ந்து தொழ சொல்கிறது இந்த வசனத்தை மறுக்கிறீர்களா? போரிலும் கூட ஜமாஅத் தொழுகையை தொழும் விதம் பற்றி கூறப்பட்ட இறை வசனத்தை மறுக்கிறீர்களா?
குழப்பம் : 4 ஜகாத் 5ல் ஒரு பங்கு அவ்வப்போது சம் பாதிப்பதில் கொடுக்க வேண்டும் (வருடம் ஒரு முறை அல்ல)
கேள்வி : 4 குர்ஆனில் ஜகாத் சதவீதம் பற்றி கேட்ட போது பதில் தராமல் சென்ற நீங்கள் இந்த அளவை எதில் இருந்து எடுத்தீர்கள்? பதில் தர வேறு வழி இல்லாமல் குர் ஆனில் “கணீமத்” பொருள்களுக்கு உள்ள ஐந்தில் ஒரு பங்கு தான் அது என்று கூறி உங்களுடன் இருப்பவர்களையும் மற்றவர்களையும் ஏமாற்ற நினைக்கின்றீர்களா?
குழப்பம் : 5 ஐவேளை தொழுகையிலும் குர்ஆனை சப்தமாக ஓதவேண்டும் என்று கூறுவது.
கேள்வி : 5 தொழுகையில் தாங்கள் கூறுவது போல் சப்தமாக குர்ஆன் ஓதுவது பற்றி எந்த வசனத்தில் உள்ளது? கீழே உள்ள வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டாம். காரணம் அது தொழுகை நடத்தும் சத்தம் பற்றி தான் குறிப்பிடுகிறது குர்ஆன் ஓதுவது பற்றி அல்ல. (நபியே! இவர்களிடம்) கூறும் : நீங்கள் அல்லாஹ் என்று அழைத்தாலும் சரி, ரஹ்மான் என்று அழைத்தாலும் சரி, நீங்கள் எந்தப் பெயரைக் கூறியும் அழையுங்கள். அவனுக்குரிய பெயர்கள் அனைத்தும் நல்லவைதாம், மேலும் உமது தொழுகையில் உமது குரலை மிகவும் உயர்த்த வேண்டாம், மிகத் தாழ்த்தவும் வேண்டாம், இவ்விரண்டுக்கும் இடையில் மிதமான தொனியைக் கடைப்பிடியும். 17:110 இந்த வசனத்தில் தொழுகையில் “உமது குரலை” என்பதில் ஹதீஃத்களில் தான் இருவேறு கருத்துகள் உள்ளன. ஒன்று குர்ஆனை ஓதுவது என்றும் இரண்டு பிரார்த்தனை தொடர்பாக அருளப்பட்டது என்றும் உள்ளது. குர்ஆன் மட்டுமே என்று கூறும் நீங்கள் எப்படி தொழுகையில் உமது குரலை என்பதற்கு குர்ஆன் ஓதுவது தான் என்று ஹதீஃத் இல்லாமல் எப்படி முடிவு செய்தீர்கள்? அல்குர்ஆன் 7:55 உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்ய சொல்வதை நீங்கள் பார்க்கவில்லையா?
குழப்பம் : 6 இப்லீஸ் வேறு, ஷைத்தான் வேறு வாதிடுவது.
கேள்வி : 6 முதல் மனிதர் ஆதத்திற்கு பணிய மறுத்தவனும், ஆதத்திற்கு மரத்தின் மீது ஆசை காட்டியவனும் வேறா? கீழ்காணும் குர்ஆன் வசனங்கள் அப்படி சொல்கிறதா? பின்னர், “நீங்கள் ஆதத்துக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கட்டளையிட்டபோது அவர்கள் எல்லாரும் பணிந்தார்கள். இப்லீஸைத் தவிர! அவன் கட்டளையை மறுத்தான். மேலும் ஆணவம் கொண்டுவிட்டான்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான். 2:34 பிறகு “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கே நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் இந்த மரத்தின் அருகே நீங்கள் நெருங்காதீர்கள். நெருங்கினால் அக்கிரமம் செய்தவர்களாவீர்!” என்று கட்டளை யிட்டோம். 2:35 ஷைத்தான் அவ்விருவருக்கும் அம்மரத்தின் மீது ஆசை காட்டி, அவர்களை நம் கட்டளையிலிருந்து பிறழச் செய்து விட்டான். மேலும் அவ்விருவரும் எந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்களோ அந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றி விட்டான். மேலும் நாம் கட்டளையிட்டோம். “நீங்கள் எல்லாரும் (இங்கிருந்து) இறங்கி விடுங்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். இன்னும், உங்க ளுக்காகக் குறிப்பிட்ட ஒருகாலம் வரை பூமி யில் தங்குமிடமும் இருக்கிறது. வாழ்க்கை வசதிகளும் இருக்கின்றன”. 2:36
குழப்பம் : 7 ஹதீஃத் என்றால் அல்லாஹ்வின் குர்ஆன் மட்டும் தான் என்றும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை வரலாறு என்று தான் கூறவேண்டும் ஹதீஃத் என்று கூற முடியாது.
கேள்வி : 7 இறை செய்தி குர்ஆன் என்றால் இறை தூதரின் செய்தியை என்னவென்று கூறுவது? குர்ஆனில் “ஹதீஃத்” என்ற வார்த்தை எத்தனை முறை வந்து உள்ளது? அனைத் தும் குர்ஆனை மட்டும் தான் குறிக்கிறதா? வேறு எந்த செய்தியையும் குறிக்கவில் லையா? அல்லாஹ் அழகான செய்திகளை இறை நூலாக இறக்கி இருக்கிறான்… 39:23 அழகான (ஹதீஃத்) செய்திகளை கிதாபாக (குர்ஆன்) இறக்கியதாக கூறப்பட்டுள்ளதால் எல்லா (ஹதீஃத்) செய்திகளும் கிதாப்(குர்ஆன்) ஆகிவிடுமா? (இவ்வாறு அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வுடைய) தூதருக்கு மாறு செய்தவர்கள் பூமி தங்களை ஜீரணித்து விட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் யாதொரு (ஹதீஃதை) செய்தியையும் மறைத்துவிட முடியாது. 4:42 இந்த வசனத்தில் வரும் ஹதீஃத் என்பது குர்ஆனை குறிக்குமா? (நபியே!) மூஸாவின் (ஹதீஃத்) செய்தி உங்களிடம் வந்திருக்கிறதா? 20:9 இந்த வசனத்தில் மூஸாவின் செய்தி என் பது மூஸாவின் குர்ஆனா? (நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண் ணியமுள்ள விருந்தினர்களின் (ஹதீஃத்) செய்தி உங்களுக்கு எட்டியிருக்கின்றதா? 51:24 இந்த வசனத்தில் உள்ள ஹதீஃத் குறித்து விருந்தினர்களின் குர்ஆனா? (நபியே!) அந்தப் படைகளின் (ஹதீஃத்) செய்தி உங்களுக்கு எட்டியதா? 85:17 இந்த வசனத்தில் உள்ள ஹதீஃத் குறிப்பது படைகளின் குர்ஆனையா? ஹதீஃத் என்றால் அல்லாஹ்வின் குர்ஆன் மட்டும் என்பது இல்லை எல்லா செய்திகளையும் குறிப்பிடும் சொல் என்று உண்மையில் உங்களுக்கு புரியவில்லையா?
குழப்பம் : 8 ஜனாஸா தொழுகை இல்லை. ஒருவர் இறந்தால் குளிப்பாட்டி கஃபன் இட்டு அடக்கம் மட்டுமே செய்ய வேண்டும்.
கேள்வி : 8 ஜனாஸா தொழுகைக்கு குர்ஆனில் ஆதாரம் இல்லை என்றால், குளிப்பாட்டுவதற்கும் கஃபன் இடுவதற்கும் குர்ஆனில் ஆதாரம் உள்ளதா? பிறகு எப்படி அதை செய்கிறீர்கள்? ஒரு மனிதன் இறந்துவிட்டால் என்ன செய்வது? எப்படி அடக்கம் செய்வது? குர்ஆனில் 9:84ல் “அவர்களில் இறந்து விட்ட எந்த ஒருவரின் மீதும், நீர் ஒருக்காலும் தொழுகை நடத்தாதீர்! இன்னும் அவர்களுடைய சமாதியிலும் நிற்கவேண்டாம், ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நிராகரித்து பாவிகளாகவே இறந்தார்கள்” இந்த வசனத்தில் நிராகரித்தவர்களுக்கு இறந்தால் தொழுகை நடத்த வேண்டாம் என்றும், கஃப்ரில் நிற்க வேண்டாம் என்றும் ஏன் அல்லாஹ் தன் தூதருக்கு கட்டளையிட்டுள்ளான். முஃமின்களும் தொழுகை இருப்பதால் தானே அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு சென்று தொழவேண்டாம் என்கிறான் கப்ரில் நிற்க வேண்டாம் என்கிறான்?
குழப்பம் : 9 கப்ர் வாழ்க்கை இல்லை என்று வாதிடுவது.
கேள்வி : 9 அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் போது, அவன், “என் இறைவனே! என்னை (உலகுக்கு)த் திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 23:99 “நான் விட்டு வந்ததில் (இனி) நற்செயலைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்); அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையேயாகும். அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு திரை இருக்கிறது. 23:100 இந்த வசனங்களில் கேட்கப்படும் விசாரணை எது? அதில் சொல்லப்படும், எழுப்பப்படும் நாள் வரை உள்ள திரை எது?
குழப்பம் : 10 மெஹராஜ் விண்ணுலக பயணத்தை மறுப்பது. அப்படி நடந்ததாக குர்ஆனில் இல்லை என்பது,
கேள்வி 10: (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன், அவன் (முஹம்மது(ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (17:1) இந்த வசனத்தில் உள்ள பயணத்தை ஏற்கிறீர்களா? “ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கின்றீர்களா?” 53:12 நபி(ஸல்) அவர்கள் எவற்றை கண்டார்? எங்கே கண்டார்? அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும்(ஜிப்ரீல்) இறங்கக் கண்டார். 53:13 நபி(ஸல்) அவர்கள் யாரை இறங்க கண்டார்? “ஸித்ரத்துல் முன்தஹா” (என்னும் வானெல்லையிலுள்ள இலந்தை மரத்துக்கு) அருகில், 53:14 ஸிராத்துல் முன்தஹா எனும் இடம் பூமியில் எங்கு உள்ளது? அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா (என்னும் சுவர்க்கம்) இருக்கிறது. 53:15 ஜன்னத்துல் மஃவா பூமியில் உள்ளதா? அந்த மரத்தை மூடியிருந்தவை அதனை முற்றிலும் மூடிக்கொண்டன. 53:16 அந்த மரம் எங்கே உள்ளது? (அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவும் இல்லை, கடக்கவும் இல்லை! 53:17 யாருடைய பார்வை விலகவில்லை? அவர் தன் இறைவனின் மிகப் பெரிய அத்தாட்சிகளையயல்லாம் மெய்யாகவே கண்டார். 53:18 இறைத்தூதர் கண்ட இறைவனின் அத்தாட்சிகள் எவை? எவை? மேலே உள்ள வசனங்களில் வரும் சம்பவம் எங்கு எப்போது நடைபெற்றது?
குழப்பம் : 11 ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களில் பிழை உள்ளது என்று கூறி அனைத்து ஹதீஃத்களையும் மறுப்பது,
கேள்வி : 11 ஆதாரப்பூர்வ ஹதீஃத்களின் உதவி இல்லாமல் குர்ஆன் மட்டும் வைத்து தொழுகை முறையை உங்களால் விளக்க முடியுமா? ஜகாத் தர வேண்டியது எவ்வளவு என்று விளக்க முடியுமா? இறந்த மனிதனை அடக்கம் செய்வது எப்படி என்று விளக்க முடியுமா?
குழப்பம் : 12 தஜ்ஜாலை மறுப்பது, அதனால் தொழுகை இருப்பில் ஓதும் துவாவை மறுப்பது.
கேள்வி : 12 தஜ்ஜால் பற்றியும் குர்ஆனில் இல்லை. தஜ்ஜால் பாதுகாப்பு துவாவும் குர்ஆனில் இல்லை. சரி தொழுகையில் இருப்பில் அமரும் போது என்ன ஓதுவது என்று குர் ஆனில் உள்ளதா? தொழுகையில் இருப்பில் அமர்வது பற்றியாவது குர்ஆனில் உண்டா? பிறகு எப்படி ஆதாரம் இல்லாமல் இருப்பில் அமர்கிறீர்கள்? இருப்பில் எதும் ஓதாமல் அமைதியாகவே இருந்து விடுவீர்களா?
குழப்பம் : 13 மருத்துவம் செய்து கொள்வதை மறுப் பது நோய் இறைவனால் வந்தது அது துவா வினால் சரியாகும் என்பது,
கேள்வி : 13 அன்றி “நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம்(தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் : 16:69) தேனில் மருத்துவம் (´பா)உண்டு என்று குர்ஆன் வசனம் கூறுகிறதே இந்த வச னத்தை ஏற்கிறீர்களா? மறுக்கின்றீர்களா? மருத்துவம் பார்ப்பதை மறுத்தால், ஹதீஃதை மறுக்கும் நீங்கள் குர்ஆனையும் மறுக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?
குழப்பம் : 14 நகம், முடி வெட்ட கூடாது, சுன்னத் செய்யக்கூடாது. காரணம் இறைவன் எதை யும் காரணம் இல்லாமல் படைப்பதில்லை என்று கூறுவது.
கேள்வி : 14 நகங்களையும் முடியையும் வெட்டாமல் காட்டுவாசி போல் திரிவதா? பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி குளித்துத்)தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை தவாஃபும் செய்யவேண்டும். 22:29 இந்த வசனத்தில் தம் அழுக்குகளை நீக்கி தவாஃபும் செய்ய வேண்டும் என்கிறது. அழுக்குகளை நீக்குதல் என்பதற்கு என்ன விளக்கம் தருவீர்கள்?
குழப்பம் : 15 இஸ்லாத்தில் போர் என்பதே இல்லை.
கேள்வி : 15 குர்ஆனில் வரும் போர் பற்றிய வசனங்களையும், போர் செல்வம் பற்றிய அத்தியாயத்தையும் மறுக்க போகிறீர்களா? இஸ்லாத்தை ஏற்றதற்காக எதிரிகள் நம்மை கொல்ல வந்தால் என்ன செய்வது?
குழப்பம் : 16 அல்லாஹ் மட்டுமே நித்திய ஜீவன் என்று கூறி ஈசா நபி மரணித்து விட்டார் திரும்ப வரமாட்டார் என்று கூறுவது.
கேள்வி : 16 ஈசா நபி நித்திய ஜீவன் என்று எந்த ஹதீஃதில் கூறப்பட்டுள்ளது? நாமும் அப்படி கூறவில்லையே? குர்ஆன் 2:154ல் “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல, அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்” என்று கூறுகிறான். இந்த வசனத்தில் அல்லாஹ் போரில் கொல்லப்பட்டவர்களை நித்திய ஜீவன் என்று கூறுகிறானா?
குழப்பம் : 17 ஒரு கிதாபா(புத்தகமா) பல கிதாபா (புத்தகமா) என்று கேட்டு மக்களைக் குழப்புவது.
கேள்வி : 17 ஒரே இறைவனா? பல இறைவனா? என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஏக இறைவனுடன் கிதாபை(புத்தகத்தை) ஒப்பிடுகிறீர்களா? குர்ஆனில் கிதாப்(புத்தகம்) என்ற சொல் குர்ஆனை மட்டும்தான் குறிக்கிறதா? அல்லது பல கிதாபுகள்(புத்தகங்கள்) பற்றி குறிக்கிறதா? 18:49ல் குற்றவாளிகள் புத்தகம் பற்றியும், 23:62ல் உண்மை பேசும் புத்தகம் பற்றியும், 45:29ல் செயல்கள் பதிவு செய்யும் புத்தகம் பற்றியும் குறிப்பிடவில்லையா? இந்த கேள்விகளுள் பதில் தருவதிலேயே இவர்களின் சுயரூபம் தெரிந்து விடும்.
இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்கா கவேயன்றி நான் படைக்கவில்லை. 51:56 இதன் மூலம் தொழுகை என்பது அவசியம் என்று தெரிகிறது. 2:3,43 வசனங்கள் தொழுகை கடைபிடிப்பதை வலியுறுத்துகின்றன. 2:83,110 வசனங்களில் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் இவர்களால் குர்ஆனிலிருந்து தொழுகை முறையை கண்டிப்பாக காட்டமாட்டார்கள். காரணம் தொழுகை முறைக்கு பல கேள்விகள் உள்ளன.
1. இஸ்லாத்தில் தொழுகை உண்டா?
2. எத்தனை வேளை?
3. ஒவ்வொரு வேளை தொழுகையிலும் எத்தனை ரக்ஆத்துகள்?
4. தொழுகைக்கு முதலில் பாங்கு உண்டா?
5. பாங்கு எப்படி சொல்வது?
6. அதற்கு துஆ உண்டா?
7. இகாமத் உண்டா? 8. இகாமத் எப்படி சொல்வது?
9. தக்பீர் உண்டா? 10. தக்பீர் எங்கே கட்டுவது? தக்பீருக்கு பிறகு துஆ என்ன சொல்வது?
11. அல்ஹம்து உண்டா?
12. துணை சூரா உண்டா?
13. ருகூஉ எப்படி செய்வது?
14. ருகூஉவில் என்ன ஓதுவது?
15. ருகூஉ முடிந்த பின் என்ன சொல்லி நிமிர்வது?
16. ஸஜ்தா எப்படி செய்வது ?
17. ஸஜ்தாவில் என்ன ஓதுவது? etc.,
இது போன்ற தொழுகை முறையை மட்டும் குர்ஆனில் இருந்து தெளிவான ஆதாரத்துடன் பதில் தரட்டும் பதில் கிடைத்த பின் தான் இவர்களுடன் பேசுவது பலன் உண்டா? என முடிவு செய்ய முடியும். இதற்கு பதில் தரவில்லை என்றாலும் அல்லது தொழுகை என்பதே இல்லை என்று கூறினாலும் அதைக் கேட்பவர்களின் நிலை கீழ்க்கண்ட வசனங்களின்படி கவலைக்கிடமாகிவிடும்.
“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்டார்கள்) 74:42 அவர்கள் (பதில்) கூறுவார்கள்; “தொழுபவர்களில் நாங்கள் இருக்கவில்லை. 74:43 இறைவசனப்படி நரகில் நுழை வேண்டியது தான். “இவர்களுக்குப் பின் (வழிகெட்ட) தீய பின்தோன்றல்கள் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். (இழிவான) மனோ இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.” 19:59 தொழுகையை வீணாக்கியவர்களின் நிலை இதுதான்.
இவர்களுடன் வீண் விவாதம் செய்யாமல் இவர்களை புறக்கணிப்பது நல்லது. முதலில் ஹதீஃத்களில் ஸஹாபாக்கள் கூறியது மார்க்கமாகாது என்று ஒரு கூட்டம் கிளம்பியது. பிறகு ஸஹாபாக்களை கண்ணியமின்றி பேசி ஒரு கூட்டம் கிளம் பியது. அதன் மூலம் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்கள், குர்ஆனுக்கும் முரண்படும் என்று தங்கள் மனதிற்கு முரண்பட்ட ஹதீஃத்களை மறுத்து ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது ஹதீஃத்கள் அனைத்துமே கட்டுக்கதைகள். எனவே புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. குர்ஆன் மட்டுமே போதும் என்று கிளம்பியுள்ள கூட்டம் முஹம்மது(ஸல்) ஒரு தூதர். அவர் பணி இறைச்செய்தியை வாங்கித் தருவது மட்டுமே வாழ்ந்து காட்டுவது அல்ல என்று கூறி வருகிறது. குர்ஆனில் இரண்டு வசனம் திணிக்கப்பட்டுள்ளது என்று ஒரு கூட்டம் கிளம்பி யுள்ளது.
இவை அனைத்தையும் பார்க்கும் போது சிறுக சிறுக இஸ்லாம் மீதும், அதன் ஆதாரங்களான குர்ஆன், ஹதீஃத்கள் மீதும் தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. என்னதான் இவர்கள் முயற்சித்தாலும் இவர்கள் வெற்றி பெறப்போவது இல்லை. மனிதர்கள் சூழ்ச்சி செய்யலாம். அல்லாஹ் சூழ்ச்சிகளை முறியடிப்பான். இன்ஷா அல்லாஹ்.
…நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை நினைவு கூர்வீராக. அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். 8:30 இதுபோன்ற குழப்பங்களை விட்டும், குழப்பவாதிகளை விட்டும் நம்மை அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.