M.T.M. முஜீபுதீன், இலங்கை
2019 பிப்ரவரி தொடர்ச்சி…..
உதாரணமாக ஒரு மனிதன் தமது மனைவி சிறு பிள்ளைகளை விட்டு தூரப் பிரதேசம் ஒன்றுக்கு செல்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தனது சகோதரரிடம் ஒரு கோடி ரூபாயை வழங்கு கிறான். தனது கால்நடைப் பண்ணையையும், விவசாய நிலங்களையும் அவனிடம் ஒப்படைக்கிறான். பின் தனது சகோதரரிடம் எனது பணத்தில் 97.5 சதவீதத்தினை நீ உனது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள். ஆனால் அப்பணத்தில் 2.5 சதவீதத்தை எனது குடும்பச் செலவுகளுக்காக கொடுப்ப துடன், எனது தோட்டம், பண்ணைகளிலிருந்து வரும் வருமான விளைவுகளையும் பயன்படுத்திக் கொள்.
ஆனால் ஜகாத்துக் குரிய பகுதியை எனது குடும்பத்தின் செலவுகளுக்கு கொடுத்து விடு என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஒப்படைத்து விட்டுச் செல்வதாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவனது சகோதரன் அவனது ஒப்பந்தத்திற்கு மாறு செய்கிறான். அவனுடைய குடும்பத்திற்கு நிபந்தனையின்படி ஜகாத் பணம் கொடுத்து உதவுவதில்லை. இதனால் சகோதரரின் குடும்பத்தில் பசியும், பட்டினியும், நோய்களும் ஏற்படுகின்றது. குழந்தைகளில் சில மரணிக்கின்றன, சிலர் நோய்களுக்கு உட்படுகின்றனர். சிலர் கல்வி இன்றி ஒழுக்கக்கேடான தொழில்களிலும், களவுகளிலும் ஈடுபடுகின்றனர்.
அவன் திரும்பி வரும்போது குடும்பம் ஜகாத் உதவி கிடைக்காததால் அழிந்து, சீரழிந்து இருப்பதைக் காணுகின்றான். தனது சகோதரரின் நம்பிக்கைத் துரோகத்தினை பார்த்து அவன் மனம் எந்த அளவு வேதனை அடையும். அவன் தனது சகோதரனுக்கு என்ன தண்டனையை வழங்க எண்ணுவான். இக்கொடுமையை சிறிது சிந்தித்துப் பாருங்கள். அந்த மனிதனே இத்தனை வேதனையும், கோபமும் அடைவானாயின், படைத்த இறைவன், தனது ஏழை அடியானுக்கு செல்வந்தர்களிடம் தான் ஒப்படைத்த செல்வங்களில் ஜகாத் வழங்காதவர்களை பார்த்து அடையும் கோபத்தை கவனியுங்கள்.
அதனை அல்குர்ஆனும், நபி(ஸல் அவர்களின் ஹதீஃத்களும் விவரிப்பதைப் பாருங்கள். அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான் அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும் வானங்கள் பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத் துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ் வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையயல்லாம் அறிகிறான். (அல்குர்ஆன் : 3:180)
முன்னைய சமுதாயங்களில் வாழ்ந்த பாதிரிமார்களும், சந்நியாசிகளும் ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மக்களின் சொத்துக்களை தவறான முறையில் சாப்பிட்டார்கள். அத்துடன் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுத்தார்கள்.
அவ்வாறு தடுத்தவர்களைப் பற்றியும், ஜகாத் கொடுக்க மறுப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிற தண்டனை பற்றியும் அல்லாஹ் அல்குர்ஆனில் விவரிப்பதைப் பாருங்கள். ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளும், சந்நியாசிகளும் அநேக மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக் கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்ததை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களு டைய நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் (இன்னும்,) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது.
ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் : 9:35) இறையச்சமுடைய நல்லடியார்களே, ஜகாத் கொடுக்காது மறுத்தவர்களுக்கு மறுமையில் நரகில் அப்பொருட்கள் மூலமாக கொடுக்கப்படும் தண்டனையை கவனியுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை, முன்பு ஒருபோதும் இருந்திராத அளவுக்குக் கொழுத்த நிலையில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார்.
அந்த ஒட்டகங்கள் குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும். மாடுகளின் உரிமையாளர் அவற்றுக் குரிய கடமைகளைச் செய்யாதிருந்தால், மறுமை நாளில் அவை ஏற்கனவே இருந்ததை விடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும், கால்களால் மிதிக்கும். இவ்வாறே ஆடுகளின் உரிமையாளர்கள் அதற்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால், அவை முன்பு இருந்ததை விடப் பெரியதாக மறுமை நாளில் வரும்.
இவற்றுக்காக அவர் விசாலமானதொரு மைதானத்தில் அமர்வார். அவை தம் கொம்புகளால் அவரை முட்டும் கால் குளம்புகளால் மிதிக்கும். அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது. பொன், வெள்ளி போன்ற கருவூலச் செல்வங்களை உடையவர் அவற்றுக்கான கடமையைச் செய்யாமலிருந்தால், அவருடைய செல்வங்கள் மறுமை நாளில் கொடிய நஞ்சுடைய பெரிய பாம்பாக மாறி, தமது வாயைத் திறந்த நிலையில் அவரைப் பின் தொடரும். அவரிடம் அது பெரிய பாம்பாக மாறி, தமது வாயைத் திறந்த நிலையில் அவரைப் பின்தொடரும். அவரிடம் அது வந்த தும் அவர் இங்கிருந்து வெருண்டோடுவார்.
அப்போது “நீ சேமித்து வைத்த உமது கருவூலத்தை நீயே எடுத்துக் கொள். அது எனக்கு வேண்டாம்” என்று அது அவரை அழைத்துக் கூறும். அதனிடமிருந்து தம்மால் தப்ப முடியாது என்று அவர் அறியும்போது, தமது கையை அதன் வாய்க்குள் நுழைப்பார். அது அவரது கையை ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கும். (முஸ்லிம்:1806) ஆகவே அல்லாஹ்வை விசுவாசம் கொண்ட சமுதாயமே! உரிய முறையில் கணக்கிட்டு உங்கள் செல்வங்களிலிருந்து ஜகாத்தை முறையாக கொடுத்து விடுங்கள். இதுவே மறுமையின் தண்டனையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சிறந்த நடைமுறையாகும். அத்துடன் ஏழை மக்களைப் பொருளாதார இடர்களிலிருந் தும் பாதுகாப்பதற்கான வழியுமாகும்.
சமநீதிக்கு வழிகாட்டும் விருப்பக் கொடையான “ஸதகா” : செல்வந்தர் தமது செல்வங்களிலிருந்து ஜகாத் கொடுத்தல் வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளது இஸ்லாம் மார்க்கம். அத்துடன் அதற்கு மேலதிகமாக கட்டாயம் அல்லாத நன்மையை எதிர்பார்த்து செய்யப்படும் கடமையாக ஸதகா உள்ளது. இதனால் வருமான ஏற்றத் தாழ்வுகள் நீங்குவதுடன், மனித ஒற்றுமையும் வலுப் பெறுகின்றது. அல்லாஹ் தான தர்மங்களைப் பற்றி அல்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.
யார் தங்கள் பொருட்களை, தான தர்மங்களில் இரவிலும், பகலிலும் இரகசிய மாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:274)
தான தர்மம் செய்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கூலி இருக்கிறது. மேலும் அல்லாஹ் கூறுவதை கவனியுங்கள். ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பாராமுகமாக்கிவிட வேண்டாம் எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள். உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருட்களிலிருந்து தான தர்மம் செய்து கொள்ளுங்கள் (அவ்வாறு செய்வது மரணிக்கும் சமயம்): “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (அல்குர்ஆன் : 63:9,10)
தான தர்மங்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்வதை கவனியுங்கள் :
“தேவை போக எஞ்சியதை தர்மம் செய் வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப் பீராக!” (புகாரி : 1426)
மேலும் அல்லாஹ்வின் தூதர் தான தர்மங்களைப் பற்றி விளக்குவதைப் பாருங்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உயர்ந்த(கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்)கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவை போக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார்(பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடத்தில் தன்னைப் பிறரி டம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கி விடுவான்”. (புகாரி : 1427,1428)
பின்வரும் ஹதீஃதை கவனியுங்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது(தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக் கொள்வான். (எனவே) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்” எனக் கூறினார்கள். (புகாரி : 1434) (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)