கா.அ. பழுலூல் இலாஹி
இஸ்லாத்தில் குறித்த காலத்தில் செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளின் நேரங்களை சூரிய, சந்திர ஓட்டங்களின் அடிப்படையில் அமைத்து தரப்பட்டுள்ளது. “சூரியனும், சந்திரனும் (அவைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே இயங்குகின்றன” என்கிறது அல்குர்ஆன் 55:5வது வசனம். எனவே காலத்தைக் கணக் கிட முஸ்லிம்கள் சூரியனையும், சந்திரனையும் பயன்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் காலத்தைக் கணக்கிட, முஸ்லிம்கள் சந்திரனை மட்டும்தான் பயன்படுத்தி வருகிறோம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் தொழ வேண்டிய ஐங்காலத் தொழுகைகளுக்கான நேரங்களை சூரிய ஓட்டத்தை கணக்கில் கொண்டுதான் தொழ (அல்குர்ஆனின் 11:114, 17:78, 20:130, 30:17,18, 50:39,40 ஆகிய வசனங்கள் மூலம்) கட்டளையிடப்பட்டுள்ளோம்.
இந்த அடிப்படையில்தான் சூரிய ஓட்டக் கணக்கை பயன்படுத்தி ஐங்காலத் தொழு கைகளை தொழுது வருகிறோம். இப்படி ஒவ்வொரு நாளும் சூரிய ஓட்டக் கணக்கை 5 முறை கட்டாயமாக பயன்படுத்தி வரும் முஸ்லிம்களிடம் காலத்தை கணக்கிட சந்திரனை மட்டும்தான் பயன்படுத்தி வரு கிறோம் என்ற தவறான நம்பிக்கை ஏன் ஏற் பட்டது? சிந்திக்கத் தவறியதால் ஏற்பட்டது.
சிந்திக்கத் தவறினால் அறியாமை எனும் தவறான நம்பிக்கை எந்த ரூபத்திலும் நுழைந்து விடும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். முஸ்லிம்களில் எத்தனை பேர் விளங்கி வைத்துள்ளார்கள்? ஒவ்வொரு நாளும் தொழுகை என்ற வணக்க நேரத்தை (மணியை) கணக்கிட சூரியனை பயன்படுத்தி வரும் முஸ்லிம்கள் நோன்பு, ஹஜ், ஜகாத் போன்ற வணக்கங் களை செய்வதற்காக (நாட்களையும், மாதங்களையும் ஆண்டையும் கணக்கிட) சந்திரனை பயன்படுத்தி வருகிறோம். முஸ் லிம்களின் ஆண்டு என பிற மத மக்களாலும் அறியப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டு 1439 முடிந்து 1440 வந்துள்ளது.
இப்பொழுது முதலில் கணக்கிட துவங்கியது கி.பி. ஆண்டா? ஹிஜ்ரி ஆண்டா? என்ற கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்டால் என்ன பதில் வரும்? ஹிஜ்ரி 1439 முடிந்து 1440 வந்துள்ளது என்பது கூட இதைப் படிக்கும் போதுதான் பலருக்கு ஞாபகம் வரும். அதுவும் மார்க்க வியத்தில் ஈடுபாடு உடையவர்களின் நிலைதான் இது. அப்படியானால் மற்றவர்களின் நிலை பற்றி சொல்லத் தேவை இல்லை. கிறிஸ்தவர்களால் ஏசுநாதர் எனப்படும் ஈஸா(அலை) அவர்கள் பிறப்பை அடிப்படையாகக் கொண்டுதான் கி.பி. ஆண்டு, ஈஸா(அலை) அவர்கள் பிறந்தது முதல் இது கணக்கிட துவங்கப்பட்டு விட்டது என முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களும் நம்பிக்கை வைத் துள்ளார்கள். இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் நடந்த முக்கி யமான நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டதுதான் ஹிஜ்ரி ஆண்டு என்பதை முஸ்லிம்களில் எத்தனை பேர் விளங்கி வைத்துள்ளார்கள்?
இப்படி கேட்கும்போதுதான் சற்று யோசிக்க ஆரம்பிப்பார்கள்? இன்று என்ன தேதி? இது என்ன மாதம்? என்று முஸ்லிம்களிடம் கேட்டால் பட் என ஆங்கில தேதியை மாதத்தை பதிலாகச் சொல்லி விடுவார்கள். இன்று பிறை என்ன? இது என்ன மாதம்? என்று கேட்டால் உடன் பதில் வருமா? அதுவும் பெண்களிடம் கேட்டால் என்ன பதில் வரும். ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தையே ஹஸன் ஹுஸைன் பிறை என்று சொல்லக் கூடியவர்களாகத்தான் இன்றும் பலர் இருக்கிறார்கள். அந்த முஸ்லிம்களிடம் போய் முதலில் கணக்கிட துவங்கியது கி.பி. ஆண்டா? ஹிஜ்ரி ஆண்டா? என்று கேட் டால் என்ன பதில் சொல்வார்கள்? கடந்த 10ஆண்டுகளாக இந்தக் கேள்வியை நாம் கேட்டு வருகிறோம்.
நாம் கேள்வி கேட்ட வர்களில் பிரபலமான மெளலவிகள் உட்பட அனைவரும் கி.பி. ஆண்டுதான் முதலில் துவங்கியது என பட் பட் என பதில் தந்தார்கள். நீங்களும் கேட்டுப் பார்த்து அனுபவ ரீதியாக தெரிந்து கொள்ளுங்கள். கி.பி. 2019, ஹிஜ்ரி 1440. எனவே கி.பி ஆண்டுதான் முதலில் உள்ளது என்று கூறுவார்கள். நாம் கேட்பது “எது முந்தையது’ என்பது அல்ல. அதாவது ஹிஜ்ரத் முந்தையதா? கிறிஸ்துவின் பிறப்பு முந்தையதா? என்று நாம் கேட்கவில்லை. முதலில் கணக்கிட துவங்கியது எந்த ஆண்டு என்றுதான் கேட்கிறோம். இப்படி கேட்கும்போது சற்று யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
கி.பி. ஆண்டின் நாட்களை குறிப்பிட்டு கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் கி.பி. எத்தனையா வது ஆண்டு பிறந்தார்கள் என கேள்வி கேட்டு முஸ்லிம்களே பரிசு கொடுக்கும் அறியாமை இப்பொழுது பரவி வருகிறது. வினாடி வினா என்ற பெயரால் இந்த அறியாமையை முஸ்லிம்களே முஸ்லிம்களிடம் வேகமாக பரப்பி வருகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு என்பதெல்லாம் கணக்கில் இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு என் பது இருந்திருந்தால் நிச்சயம் ஹதீஃத்களில் இடம் பெற்றிருக்கும். ஹதீஃத் நூல்கள் எத்தனையோ உள்ளன.
அவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இது பற்றி குறிப்பிடப்பட்டி ருக்கும் ஒரு இறைத்தூதரின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு வரும் ஆண்டு இருந்திருந்தால், அதை இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ள சம்பவங்களையும், அவர்களுக்கு முந்தைய நூற்றாண்டின் சம்பவங்களையும் கி.பி. ஆண்டின் நாட்களை குறிப்பிட்டே நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பார்கள். எந்த ஒரு சம்பவத்தையும் நபி(ஸல்) அவர்கள் கி.பி. ஆண்டின் நாட்களை குறிப்பிட்டு கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் உறுதியாக அறிந்துகொள்ள வேண்டும்! அது வரலாறுகளெல்லாம் முறையாக எழுதப்படாத காலம் என்பதுதான் உண்மை. சொல், செயல், அங்கீகாரங்கள் ஆகியவற்றுடன் உலகில் முதல் முதலாக தொகுக்கப்பட்ட வரலாறு நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறுதான். இதைத் தான் ஹதீஃத்கள் என்றும் சுன்னா என்றும் கூறுகிறோம்.
நபி(ஸல்) அவர்களின் வரலாற் றுக்கு மட்டும்தான் எவை எவையயல்லாம் ஆதாரங்கள் என முறையாக ஆதாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. நபி(ஸல்) அவர்களின் வரலாற்றின் பொய்மை கலந்துவிடக் கூடாது என்பதற்காக சுமார் 5 லட்சம் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை ஆய்வு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட நூல்களில் கூட நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி(ஸல்) அவர்களுடன் சம்பந்தப்படுத்தி எது கூறப்பட்டாலும் அதற்கு குர்ஆன், ஹதீஃத்கள் ஆதாரம் இருந்தால்தான் ஏற்கவேண்டும்.
குர்ஆன், ஹதீஃத்களின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு இருந்த தற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு இருந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும். சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளுக்கு பெயர் ! நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அரபுகளில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். ஏசு கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கி.பி. ஆண்டு முறை அன்றே இருந்திருந்தால் அன்றைய அரபு கிறிஸ்தவர்கள் அதை கண்டிப்பாக பயன்படுத்தி இருப்பார்கள்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு மட்டுமல்ல வரிசையாக கணக்கிடும் முறையில் எந்த பெயரிலும் ஆண்டுகள் இருக்கவில்லை.12 மாதங்கள் இருந்தன. அதுவும் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் முஹர்ரம் முதல் துல்ஹஜ் வரையிலான மாதங்கள்தான் இருந்தன. அப்பொழுது இருந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூட ஜனவரி, பிப்ரவரி என்று மாதங்களை கணக்கிட்டதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. யூதர்களாக, கிறிஸ்தவர்களாக இருந்த அரபுகள் உட்பட எல்லாஅரபுகளும் முஹர்ரம், ஸஃபர் என முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் மாதங்களைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.
இதற்குத்தான் குர்ஆனிலும், ஹதீஃத்களிலும் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு ஆண்டு கணக்கில் கூறுவதாக இருந்தால் போன வருடம் முஹர்ரம், 2 வருடத்திற்கு முந்தைய துல்ஹஜ் என்றுதான் கூறுவார்கள் அல்லது பிரபலமான மறக்கமுடியாத மிகப் பெரிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளுக்கு பெயர் சொல்வார்கள். யானை ஆண்டில் பிறந்தார்கள்! உதாரணமாக “பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட ஆண்டில் எனது மகள் பிறந்தாள்” “ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட மறு ஆண்டில் தான் எனக்கு கல்யாணம் நடந்தது” என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோல், பிரபலமான மறக்க முடியாத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளுக்கு பெயராகச் சொல்வார்கள்.
அப்ரஹா என்ற மன்னன் கஃபதுல்லாஹ்வை அழிக்க யானைப்படையை அல்லாஹ் கூட்டம் கூட்டமான பறவைகளைக் கொண்டு அழித்தான். இதை அல்குர்ஆனின் 105வது அத்தியாயத்தின் மூலம் அறிகிறோம். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரபுகள் யானை ஆண்டு அமைத்துக் கொண்டார்கள். யானைப்படை நிகழ்ச்சி நடந்த சில மாதங்களில் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள். இந்த அடிப்படை யில்தான் நபி(ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வலில் பிறந்தார்கள் என்று வரும் ஹதீஃத்களில் ஆண்டைப் பற்றி குறிப்பிடும் பொழுது யானை ஆண்டு என்ற குறிப்பு மட்டுமே உள்ளது. இதைத் தவிர ஆண்டுகள் பற்றி வேறு எந்தக் குறிப்புகளும் ஹதீஃத்களில் கிடையாது. எனவே நபி(ஸல்) அவர்கள் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள் என்ற குறிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய எந்த வரலாற்று நூல்களிலும் கிடையாது. கி.பி. ஆண்டு உட்பட எந்த பெயரிலும் ஆண்டுகள் வரிசையாக எண்களுடன் கணக் கிடும் முறை அப்பொழுது இருக்கவில்லை.
ஆண்டுகள் வரிசையாக கணக்கிடும் முறையை எப்பொழுதிலிருந்து துவக்கலாம்? வாரத்தின் 7 நாட்கள் பெயர் வாரியாக வரிசையாக உள்ளன. வருடத்தின் 12 மாதங்கள் பெயர் வாரியாக வரிசையாக உள்ளன. மாதங்களின் நாட்களும் வரிசையாக எண்ணி கணக்கிடப்படுகின்றன. அதுபோல் ஆண்டுகளும் வரிசையாக எண்ணி கணக்கிடப்பட வேண்டும் என்ற ஏற்பாட்டை 1400 ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் செய்யவில்லை. இந்த ஏற்பாட்டை உலகில் முதன் முதலில் செய்தது ஒரு முஸ்லிம்தான். அந்த முஸ்லிம் வேறு யாருமல்ல. அவர்தான் 2ம் கலீஃபா உமர்(ரழி) அவர்கள். உமர்(ரழி) அவர்கள்தான் தனது ஆட்சி காலத்தில் ஆண்டுகள் வரிசையாக கணக்கிடப்பட வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந் தார்கள். அதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார்கள். ஆண்டுகள் வரிசையாக கணக்கிடும் முறையை எப்பொழுதிலி ருந்து துவக்கலாம் என்று ஆலோசித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் நபியான ஆண்டிலிருந்து துவக்கலாம்; மிஃராஜ் சென்ற ஆண்டிலிருந்து துவக்கலாம்,
இப்படி நபி(ஸல்) அவர் கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வர லாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டு அந்த ஆண்டிலிருந்து துவக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை ஸஹாபா பெருமக்கள் ஆலோசனைகளாக வழங்கினார்கள். ஹிஜ்ரி என்ற பெயருக்கு காரணம் ! அனைத்தையும் பரிசீலித்த கலீஃபா உமர்(ரழி) அவர்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா?
நபி(ஸல்) அவர்கள் மக்காவை துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார் களே அந்த ஆண்டிலிருந்து துவங்கலாம் என முடிவு செய்தார்கள். நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டதால்தான் அதற்கு ஹிஜ்ரி என பெயர் வந்தது. ஹிஜ்ரி என்ற பெயருக்கு நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் காரணம் என்ற உண்மை வரலாற்றை இன்றும் தெரியாத முஸ்லிம்கள் ஏராளமாகவே உள்ளனர்.
அப்படி இருக்க உலகில் முதன் முதலாக கணக்கிடத் துவங்கப்பட்ட ஆண்டு ஹிஜ்ரி ஆண்டுதான் என்ற உண்மையை எப்படித் தெரிவார்கள்? ஹிஜ்ரி ஆண்டுதான் முதன் முதலில் துவங்கியது என்றால் 1582ல் உண்டான கி.பி. ஆண்டு எப்படி உலகெங்கும் பரவியது? உலகப் பொது ஆண்டாக கி.பி. ஆண்டு ஆனது எப்படி? ஆகிய கேள்விகள் வரலாம்.
எனவே இதையும் விளக்கக் கடமைப்பட் டுள்ளோம். சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜைனர் கள் என ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் மதம் சார்ந்த ஆண்டுகள் உள்ளன. தமிழ், தெலுங்கு என மொழி சார்ந்த ஆண்டுகளும் உள்ளன. இருந்தாலும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதத்தவர்களாலும் நாத்திகர் களாலும் அனைத்து மொழியினராலும் பயன்படுத்தும் உலகப் பொது ஆண்டாகத் தான் கி.பி. ஆண்டு உள்ளது. அன்றைக்கு ஏற்பட்ட தாக்கம்தான் இன்றைக்கும் உள்ளது! உலகப் பொது ஆண்டாக கி.பி. உள்ளது போல்தான் உலகப் பொது மொழியாக ஆங்கிலம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன; இருந்துள்ளன. “கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்தது தமிழ்” எனப்படும் தமிழ் மாதிரி பழமை வாய்ந்த மொழிகளும் உள்ளன. இருந்தபோதிலும் உலகப் பொது மொழியாக ஆங்கிலம்தான் உள்ளது. கார ணம், உலகில் வெள்ளையர்களின் ஆட்சி ஆதிக்கம் வந்த பிறகு அவர்கள் பேசக்கூடிய ஆங்கில மொழி ஆதிக்கத்தையும் ஏற்படுத்தினார்கள். இது மனித இயல்புகளில் உள்ள ஒன்றுதான். ஹிந்தியை இந்திய பொது மொழியாக ஆக்க வேண்டும் என்று வட நாட்டில் உள்ள ஹிந்திக்காரர்கள் விரும்புவதை பார்க்கிறோம்.
உலகின் பாதிக்கு மேலான பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்தது. அதனால் ஆங்கில மொழியை உலக மொழியாக ஆக்கினார்கள். எனவே உலகம் முழுவதும் பரவிய ஆங்கில மொழி தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு ஏற்பட்ட தாக்கம்தான் இன்றைக்கும் உள்ளது. அகில உலகத்துக்கும் ஒரு பொது மொழி மாதரி ஆங்கிலம் ஆகி விட்டது. ஹிஜ்ரி மாதிரியான ஆண்டுக் கணக்கை உருவாக்கினார்கள்!
உலக முழுவதும் தங்கள் ஆட்சி என்ற ஆதிக்கத்தையும், மொழி ஆதிக்கத்தையும் செலுத்திய ஆங்கிலேயர்கள் சரித்திரங்களி லும் தங்கள் ஆதிக்கம் வர கவனம் செலுத்தி னார்கள். 1977க்கு முந்தைய இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் அவர்கள் விருப்பப்படி காலப் பெட்டகம் புதைக்கப்பட்டது. அடுத்து வந்த மொரார்ஜி தேசாய் ஆட்சி அந்த காலப் பெட்டகத்தை தோண்டி எடுத்தது. சரித்திரங்களை நிர்ணயிப்பதில் இன்றுள்ள மாநில ஆட்சியாளர்களும் கூட தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதை பாடப் புத்தகங்களில் ஏற்படுத்தி வரும் குழப்பங்கள் மூலம் கண்கூடாகவே பார்க்கிறோம்.
5 ஆண்டுகள் என கால நிர் ணயித்திற்கு உட்பட்ட, தட்டிக் கேட்க மத்திய அரசும், கேள்வி கேட்க எதிர் கட்சிகளும் உள்ள மாநில ஆட்சியாளர்களே வரலாறுகளை நிர்ணயிப்பதில் தங்கள் ஆதிக் கத்தை செலுத்தி வருகிறார்கள். அப்படியா னால் கால நிர்ணயம் இல்லாத, உலகின் பாதிக்கு மேலான பகுதியை ஆண்டவர்கள் சரித்திரங்களை நிர்ணயிப்பதில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த எண்ணியதில், செலுத்தியதில் ஆச்சரியம் இல்லை. சரித்திரங்கள் முறையாக அமைக்க ஆண்டுகள் கணக்கு அவசியம். எனவே ஹிஜ்ரி மாதிரி யான ஆண்டுக் கணக்கை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் தொடர்ந்து தொகுத்து வர முடியும்! வெள்ளையர்களான ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள்.
அதனால் கி.பி. (கிறிஸ்துவுக்குப் பின்) கி.மு.( கிறிஸ்துவுக்கு முன்) என சரித்திரங்களை நிர்ணயித் தார்கள். வெள்ளையர்களின் ஆங்கில மொழி இன்றும் உலகின் பொது மொழி யாக ஆதிக்கும் செலுத்தி வருவது போல் வெள்ளையர்களான கிறிஸ்தவர்கள் நிர்ண யித்த சரித்திர குறிப்புகள்தான் இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்து வருகின்றன. யாராக இருந்தாலும் 2 அல்லது 3 தலைமுறைக்கு முந்தைய அதாவது 100 ஆண்டுகளுக்குட் பட்ட வரலாற்றைத்தான் சரியாக தொகுக்க முடியும்.
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு என்று உணர்ந்துள்ள காலத்தில் உள்ளவர்களால் முறையாக எழுதப்பட்டு வரும் வரலாற்று தொகுப்பு என்றால், தலைமுறை தலைமுறையாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் தொடர்ந்து தொகுத்து வர முடியும். வகுக்கப்பட்ட கணக்கே தவிர தொகுக்கப்பட்ட வரலாறு கிடையாது! இந்த அடிப்படையில் ஒரு விளக்கத்திற் காக, கி.பி. ஆண்டு 2018 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது என்று வைத்துக்கொள்வோம்.
அப்படியானால் கி.பி ஒன்றிலிருந்து உள்ளவைதான் தொகுக் கப்பட்ட வரலாறு என கூற முடியும். கி.மு. (கிறிஸ்துவுக்கு முன்), கி.மு. 500, கி.மு. 1000, கி.மு. 2000 என்றுள்ளவற்றை எப்படி தொகுக்கப்பட்ட உண்மையான வரலாறு எனக் கூற முடியும்? அவை யாவும் தோராயமாக வகுத்து எழுதப்பட்ட வரலாறுகளே தவிர வேறில்லை. அது மாதிரிதான் ஒவ் வொரு ஆண்டிலும் ஹிஜ்ரி ஆண்டுக்கும், ஆங்கில ஆண்டுக்கும் வித்தியாசப்படும் நாட்களை கணக்கிட்டு வகுத்து ஆங்கில வருட கணக்குப்படி நபி(ஸல்) அவர்கள் 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள் என எழுதி வைத்துள்ளார்கள்.
எனவே நபி(ஸல்) அவர் கள் கி.பி. 570ம் ஆண்டில் பிறந்தார்கள் என்பது வகுக்கப்பட்ட கணக்கே தவிர தொகுக்கப்பட்ட வரலாறு கிடையாது. மூல நூல்களில் எந்த ஆதாரமும் கிடையாது, கிடைக்காது! கி.பி. என்பது இயேசு கிறிஸ்து பிறந்ததிலிருந்து கணக்கிடத் துவங்கப்பட்டது போல் காட்ட அதன் பெயரில் கிறிஸ்து(வுக்குப் பின்) என அமைத்தார்கள். இருந்தாலும் அது வெள்ளையர்களான ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டதுதான் என்ற உண்மை மக்கள் சொல்லிலிருந்து இன்றும் மறையவே இல்லை.
கிறிஸ்து பெயரால் ஆண்டுகள் துவங்கி தலைமுறைகள் பல உருண்டோடி விட்டன. ஆனால் அது ஆங்கில வருடம் என்றும் இங்கிலீஷ் வருடம் என்றும்தான் இன்றும் உலக மக்களால் அழைக்கப்படுகிறது. கிறிஸ்து வருடம் என்று சொல்லும் வழக்கம் நடைமுறையில் இல்லவே இல்லை. 400 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கூட கி.பி. என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது.
கி.பி. என்பதற்கு 5 நூற்றாண்டுகளுக்கு முந்தைய நூல்களில் எந்த ஆதாரமும் கிடையாது, கிடைக்காது. எனவே குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களில் இல்லாதவற்றை இஸ்லாத்தின் பெயரால் இணைத்து வினாடி வினாக்களில் கேள்வி கேட்கக்கூடாது. இஸ்லாத்தில் இல்லாத வரலாற்றை, நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத கி.பி. ஆண்டை இருப்பதாக இட்டுக்கட்டிக் காட்டும் தீமைக்கு முஸ்லிம்களே துணை போவது நியாயமா? எனவே முஸ்லிம்கள் துணை போவதை விட்டும் தவிர்க்க வேண்டும். பொறுப்புணர்வுள்ளவர்கள் தடுக்க வேண்டும்.
குறிப்பு : கிரிகோரியந்காலண்டர் முறை இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் என்ற மருத்துவரால் முன் வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24, 1582-ல் பாதிரி பதின்மூன்றாம் கிரிகோரியன் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட் காட்டிக்கு “கிரிகோரியன் நாட்காட்டி” என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இந்த நாட்காட்டியின்படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட (கணக்கிடப்பட்ட அல்ல) ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. கிரிகோரியன் நாட்காட்டியானது ஜூலியன் நாட்காட்டியின் சராசரி ஆண்டை விட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள் நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது. அதாவது கி.பி.1752ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப்பட்டது. ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த் இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன.
1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும், அமெரிக்காவும் 1752ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும், இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரி கோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது ரஷ்யா அது ஏற்று கொண்டது 1918ல் தான் அதனை அடுத்து கிரீஸ் ஆகும். 1923 பிப்ரவரி 15ல் தான் இந்நாடு கிரிகோரி யன் நாட்காட்டியை அங்கீகரித்தது. இந்நாட்காட்டியானது பூமி சூரியனைச் சுற்றுவதற்கான நேரத்தில் தசம இலக்கங்களை சரிசெய்ய தீர்வில்லாத சிக்கல் கொண்டிருப்பதால் இந்நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்கள் இடையே உள்ளது.
நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திற்குப் பின்னர்தான் ஹிஜ்ரி ஆண்டு துவங்குகிறது. அப்படியானால் அதற்கு முன்னால் நிகழ்ந்த நபி(ஸல்) அவர்களின் பிறப்பு, பெற்றோர்களின் இறப்பு, கதீஜா(ரழி), அப்துல் முத்தலிப், அபூதாலிப் இறப்பு, நபித்துவம் போன்றவற்றை எப்படிக் குறிப்பிடுவது என்ற ஐயம் முஸ்லிம்களுக்கு ஏற்படலாம். அவற்றை ஹிஜ்ரத்துக்கு முன் ஹி.மு. என்று கணக்கிட்டுக் குறிப்பிட முடியும். கி.பி. 639ல் துவக்கி வைக்கப்பட்ட ஹிஜ்ரி ஆண்டு நாள்காட்டியை விட 943 ஆண்டுகள் கழித்து 1582ல் ஆரம்பிக்கப்பட்ட கிரிகோரியன் காலண்டர் உலகம் முழுவதும் பிரபலம் ஆனதற்கு காரணம் கிறிஸ்துவ உலகமும் மற்றும் ஆங்கிலேயர்களின் முயற்சி யும், ஹிஜ்ரி வருடம் பற்றிய முஸ்லிம்களின் அறியாமையும் தான். இதை உணர்ந்து முஸ்லிம்கள் சரியான கணக்கீட்டு காலண்டரை முழு உலகிற்கும் பொதுவாக தர முன்வர வேண்டும். இன்ஷா அல்லாஹ்.