அமல்களின் சிறப்புகள்….
தொடர் : 61
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.
சென்ற இதழில் ஆய்வு செய்தவை :
மார்க்கம் காட்டித் தராதவைகளில் சிந்தனை செய்து, மார்க்கத்தில் இல்லாத சூஃபிஸம், மக்ரிபா, முராக்கபா என்ற பெயர்களில் புதிய கலாச்சார சீர்கேட்டை இஸ்லாத்தில் நுழைத்து, அவைகளையயல்லாம் “சிந்தனையின் சிறப்பு” எனும் தலைப்பில், அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தக ஆசிரியர் எழுதி இருப்பதை, கடந்த சில இதழ்களில் ஆய்வு செய்து, அசி புத்தகம் எழுதி இருப்பது பொய் என்று நிரூபித்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் நீள்கிறது.
அசி புத்தகம் கூறும் அடுத்த செய்தி :
இவ்வாறாக மார்க்கத்திற்கு எதிரான கலாச்சார சீர்கேட்டை தமது தாறுமாறான சிந்தனைகளால் ஏற்படுத்தி, அந்த சிந்தனைகளுக்கு சிறப்பு(!) இருப்பதாகக் கூறி, அந்த சிறப்புகள் பல ரிவாயத் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது என்று பீற்றிக் கொள்ளவும் செய்கிறது அசி புத்தகம் தமது 394ஆம் பக்கத்தின் கடைசி பத்தியில்!
எமது ஆய்வு!
ரிவாயத் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், ரிவாயத் என்றால் “ஹதீஃத்’ என்று மார்க்கத் தொடர்பு அதிகம் இல்லாத சாதாரண மக்களை நினைக்கச் செய்து விடுகிறார். ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஜக்கரியா! ஒவ்வொரு வாக்கியத்தையும் இஸ்லாத்திற்கெதிராக சிந்தனை செய்து வடிவமைத்து இருக்கிறார். அவர் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அந்த ரிவாயத்தையும் தங்களுக்குத் தாங்களே “சான்றிதழ்” கொடுத்துக் கொண்ட அவலத்தையும் கீழே பாருங்கள்.
அசி புத்தகம் பக்கம் 395ல் காட்டியிருக்கும் சான்றிதழ் :
முஸ்னத் அபூயஃலா என்ற நூலில் எழுதப்பட்டுள்ளதாவது: மலக்குகளும் அறியாத வகையில் இரகசியமாக செய்யப்படும் (திக்ரே கஃபீ) என்ற திக்ராகிறது, எழுபது மடங்கு இரட்டிப்பான நன்மைகள் உடையதாகும்.
அசி புத்தகம் பக்கம் 395/2வது பத்தியிலுள்ள சான்றிதழ் :
மேலே கூறிய விஷயத்திற்கு சப்பைக் கட்டு கட்டுவதற்கு அடுத்த ரிவாயத்தை(!) அள்ளி வீசுகிறார், அசி ஆசிரியர்! இமாம் பைஹகீ(ரஹ்) அவர்கள், “ஷிஅபுல் ஈமான்’ என்ற நூலில், அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக எழுதியுள்ளதாவது, “மலக்குகளும் செவியுறாத முறையில் செய்யப்படும் திக்ராகிறது. “மலக்குகள் செவறும் முறையில் செய்யப்படும் திக்ரை விட எழுபது மடங்கு உயர்ந்ததாகும்”என்று சொல்கிறது அசி புத்தகம்.
எமது ஆய்வு :
(மலக்குகளும் அறியாத வகையில் இரக சியமாக செய்யப்படும் (திக்ரே கஃபீ) என்ற திக்ராகிறது என்று அசி புத்தகம் எழுதி இருப்பதைப் பற்றி நாம் நிறைய எழுத வேண்டி இருப்பதால், இன்ஷா அல்லாஹ், அடுத்த இதழில் அதை ஆய்வு எழுதுவோம்)
தமிழில் ஒரு சொல்லடை உண்டு! “கேக்குறவன் கேனையனா இருந்தா, சொல்பவன் கேழ்வரகில் நெய் வடிகிற தென்பானாம்!” அதுபோல, தப்லிக் ஜமாஅத்தில் உள்ளவர்களை லூசு பயல்களாக நினைத்துக் கொண்டு, எதை சொன்னாலும் மண்டையை ஆட்டிக் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு அவர்களை மூளைச் சலவை செய்துவிட்டோம் என்ற மமதையில், அசி புத்தகம் புதிய புதிய விசயங்களை அவர் களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. திக்ரே கஃபீ என்று ஒரு திக்ராம்.
அசி ஆசிரியர் கூறும் இந்த ரிவாயத் உண்மையாக இருந்திருக்குமேயானால், முஸ்னத் அபூயஃலாவில் எத்தனையாவது எண்ணில் இந்த ரிவாயத் இடம் பெற்றிருக்கிறது என்பதை அசி ஆசிரியர் கண்டிப்பாக இடம் பெறச் செய்திருப்பார். தான் கூறுவது தாமே புனைந்த பொய் என்பதால் ரிவாயத் எண், பக்க எண் ஆகியவைகளைக் கொடுக்க அவரால் முடியாது? கொடுக்க முடியாத தமது வழக்கத்தை எங்குமே அவர் விட்டுக் கொடுத்ததுமில்லை ஸஹீஹான ஹதீஃதுகளை எழுதியிருக்கும் சொற்ப சந்தர்ப்பங்களில் கூட ஹதீஃது எண்ணை தந்ததுமில்லை. அவர் தமது வழக்கத்தில், இயல்பாகவே இப்படி இருப்பதைப் போல காட்டிக் கொள்பவராகத்தான் இருக்கிறார்.
பொதுவாகவே, மார்க்கப் பற்றாளர்களான தாபியீன்கள், தபஉ தாபியீன்கள் ஹதீஃதுகளைக் குறிப்பிடும்போது, படிப்பவர்கள் அவற்றை சரி பார்க்க தோதுவாக, ஹதீஃது நூலின் பெயர், அறிவிப்பாளர் பெயர், ஹதீஃதின் தரம் ஆகியவைகளைக் குறிப்பிடுவார்கள். ஹதீஃத் எண் குறிப்பிடப்படாவிட்டாலும், ஹதீஃதை சரிபார்த்துக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. அப்படி இருந்த இந்த இயல்பான நிலையை, ஏமாற்றுக்காரர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை, ஹதீஃது நூலின் பெயர், ஹதீஃதின் தரம் ஆகியவைகளை வழக்கமாக தந்திராத ஜக்கரிய்யா அவர்கள், இப்போது ஹதீஃத் எண்களையும் தராமல் ஹதீஃத் என்ற பெயரில் பொய்யான செய்திகளை தரமுடியும் என்பதை, தமது அமல்களின் சிறப்புகள் நூலின் மூலம் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். அதனால் தமக்குத் தாமே பாராட்டுப் பத்திரம் வாசிக்க ஆரம்பித்து விட்டார்.
அசி ஆசிரியர் குறிப்பிட்டுள்ள “அபூயஃலா’ அவர்களைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம். அவர் அறிவித்த செய்தி ஒன்றை தமது ஹதீஃத் நூலில் இப்னு மாஜ்ஜா அவர் கள் இடம்பெறச் செய்துள்ளதை கீழே தந்துள்ளோம். படித்துப் பாருங்கள்.
“தன்னை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்காகப் பாடுபடுபவர், மரணத்திற்குப் பின்னும் அறிவாளி ஆகிவிடுகிறார். அல்லாஹ்வைப் பற்றி தன்னுடைய இச்சைக்கேற்ப, மனம் போன போக்கில் ஈடுபடுபவன், பயனற்றவனாக ஆகிவிடுகிறான்”
அபூயஃலா அவர்களின் மேற்கண்ட சொல், பிற்காலத்தில் பயனற்ற ஆட்கள் தோன்றலாம் என யூகம் செய்து, சொல்லி இருப்பது போல இருக்கிறதல்லவா? அந்த யூகத்திற்கு சரியாகப் பொருந்தி இருக்கிறார் அசி புத்தக ஆசிரியர் ஜக்கரிய்யா, எனவே, இது ஜக்கரிய்யாவையே சுட்டிக்காட்டி சொல்லி இருப்பது போல பொருந்தி வருகிறது. இப்படிப்பட்ட அபூயஃலா அவர்கள், அசி ஆசிரியரின் தில்லுமுல்லுக்கு உடந்தையாகி, அசி ஆசிரியருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்க மாட்டார் என்ற முடிவுக்கு எவராலும் சுலபமாக வரமுடியும். ஆயத்துக்களையும், ஹதீஃதுகளையும் மட்டும் உண்மையில் மேற்கோள் காட்டுபவராக இருந்திருந்தால், வேறு நபர்கள் தமக்கு சர்டிபிகேட் தந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவேண்டிய அவசியம் அசி ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்காதல்லவா?
அசி ஆசிரியர் கூறும் இறை வசனங்கள், ஹதீஃதுகள் மற்றும் அசி ஆசிரியரின் ரிவாயத்துக்கள் எல்லாவற்றிலும் பொய்யைக் கலந்திருப்பதால்தானே, தமது கூற்றை பிறர் ஆதரித்ததாக மோசடி சான்றிதழ் தருகிறார். அதுவும் மார்க்கப் பற்றாளர்களின் பெயரில்! இதன்மூலம், அந்த அறிஞர்களையும் இவரது களவாடித் தனத்துக்கு உடந்தை ஆக்குகிறார் அசி ஆசிரியர்! அவர் காண்பிக்கும் சான்றிதழ்களும் பொய்! சரியான ரவுடித்தனம் அல்லவா இந்த செயல்!
தான் செத்த பிறகும், தன் எழுத்துக்களின் மூலமாக மார்க்கத்தில் இப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறார்! இவர் நல்லவர், இவரது அமல்களின் பட்டோலை மூடப்படாமல் இருக்கும் என்று இவரின் ஆதரவாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அந்த நினைவை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள், ஏனெனில், நீங்கள் நினைப்பது போல இப்போதும் அசி ஆசிரியரின் பட்டோலை மூடப்படாமல் இருக்குமேயானால், அவர் போதித்த கெட்டவைகளின் மீது இவருடைய பக்தகோடிகள் இன்னும் அமல் செய்து கொண்டிருப்பதால், அத்தனை தீய அமல்களும் அசி ஆசிரியருக்கும் எழுதப்பட்டுக் கொண்டிருந்தால், அவரின் நிலை என்னவாகும்? கந்தலாகி விடுமே!
அசி ஆசிரியர் தமக்குத் தெரிந்த பல சஹாபாக்களின் பெயர்களையும், ஏறக்குறைய எல்லா ஹதீஃது புத்தகங்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக் கொண்டு, தமது எண்ணத்தில் தோன்றிய கற்பனைகள், யூகங்கள் அனைத்தையும் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஃதுகள் என்று கூறி, அவைகளை தலைப்பு வாரியாகப் பிரித்து தொழுகையின் சிறப்புகள், திருக்குர்ஆனின் சிறப்புகள், ரமழானின் சிறப்புகள், தப்லீகின் சிறப்புகள், திக்ரின் சிறப்புகள், சஹாபாக்களின் வரலாறுகள் என்ற அனைத்தையும் உள்ளடக்கி, ஒட்டுமொத்தமாக அமல்களின் சிறப்புகள் என்ற புத்தகத்தை கண்டோர் வியக்கும் வண்ணம் பிரமாண்ட சைசில் தயாரித்து, தமது கோடான கோடி பக்தர்கள் அவரவர் வீட்டில் தஃலீம் செய்தே ஆகவேண்டும் என்பதை கட்டாயக் கொள்கையாக வலியுறுத்தி, அதன் மூலம் கோடான கோடி புத்தகங்களை விற்பனை செய்து இன்றளவும் மார்க்கத்தின் பெயரால் தமது வாழ்க்கைக்கு வளம் தேடிக் கொள்ளும் வழியையும் ஏற்படுத்திக் கொண்டார்.
தம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வழிகேடுகளையும் எழுதிவிட்டு, தமது ஆதரவாளர்களிடம் நல்ல பெயர் பெற வேண்டும் என்பதற்காக அவர் வழக்கமாகப் போடும் வேஷத்தை இப்போதும் போடுவதைப் பாருங்கள்.
அசி புத்தகம் பக்கம் 395 கடைசி பத்தியில் நல்ல பிள்ளை வேடம்:
ஒரு வினாடியும் அல்லாஹ்வை மறவாமல் சதாவும் இரகசியமாக திக்ரு செய்பவர்கள் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள். அவர்கள் தங்களுடைய வெளிப்படையான அமல்களுக்குரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்வதுடன் சதாவும் சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதால், எல்லா நேரங்களிலும் எழுபது மடங்கு நன்மைகளையும் அதிகப்படியாகப் பெற்றுக் கொள்கிறார்கள். இது தான் ஷைத்தானை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி விடுகிறது.
மேலே உள்ளதைப் படித்தவுடன் ஆஹா! ஓஹோ! என்று புகழத் தோன்றுகிறதோ? மார்க்கம் காட்டித் தராத இந்த அமல்களுக்கு இறைவனிடம் எந்த பிரயோசனமும் கிடைக்காது என்பது மட்டும் அல்ல. அத்தனை அமல்களும் இறைவனால் நிராகரிக்கப்படும் என்பது கூட தெரியாதவர்களாய் இருக்கிறார்கள்.
சிந்தனையின் சிறப்பு சம்பந்தமாக அசி புத்தகத்திலுள்ள அடுத்த சில விஷயங்களை வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்கிறோம். அவைகளை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அவை பொய் என்பதை படித்தவுடன் வாசகர்களாகிய நீங்களே அறிந்து கொள்வீர்கள். அந்த அளவுக்கு திடீர் திருப்பங்கள் நிறைந்த பச்சைப் பொய் கதைகளை தாராளமாக வழங்கி இருக்கிறார் அசி ஆசிரியர்.
அசி புத்தகம் பக்கம் 396ல் எழுதியிருக்கும் கப்ஸா :
ஹஜ்ரத் ஜூனைத் பக்தாதி(ரஹ்) அவர்கள் ஒருநாள் ஷைத்தான் நிர்வாணமாக இருப்பதைக் கண்டார்கள். மக்களுக்கு மத்தியில் நிர்வாணமாக இருப்பது உனக்கு வெட்கமாக இல்லையா? என்று அவனிடம் கேட்டபோது, இவர்கள் என்ன மனிதர்கள்? ஷோனிஸிய்யாவுடைய மஸ்ஜிதில் அமர்ந்து இருக்கிறார்களே அவர்கள்தாம், மனிதர்கள், அவர்கள்தாம் என்னுடைய உடலை மெலியச் செய்து என் ஈரலை கருகச் செய்து விட்டார்கள் என்று கூறினான்.
ஹஜ்ரத் ஜூனைத் பக்தாதி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், நான் ஷோனிஸிய்யா மஸ்ஜிதிற்கு சென்று பார்த்தபோது அங்கு சில பெரியார்கள் தங்களின் தலைகளை முழங்கால்களின் மீது வைத்தவர்களாக முராக்கபாவில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் என்னைக் கண்டதும், “அந்த தீயவனின் பேச்சைக் கேட்டு ஏமாந்துவிட வேண்டாம்’ என்று கூறினார்கள்.
இதேபோன்று மஸூஹி(ரஹ்) என்பவர்களும் ஷைத்தான் நிர்வாணமாக அலைவதைக் கண்டு, “மனிதர்களுக்கு மத்தியில் இவ்வாறு நிர்வாணமாக அலைவது உனக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டபோது, “அல்லாஹ்வின் மீது ஆணையாக இவர்கள் எல்லாம் மனிதர்களே அல்லர். இவர்கள் மனிதர்களாக இருந்தால், குழந்தைகள் பந்து விளையாடுவதைப் போல இவர்களை நான் விளையாட முடியாதே. என் உடலை நோயுற செய்தவர்கள்தான் மனிதர்கள் என்று கூறியபின், சூபியாக்களில் ஒரு கூட்டத்தினரைச் சுட்டிக் காட்டினான்.
அபூஸயீத் கஸ்ஸாஸ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் கனவில் ஷைத்தா னைக் கண்டேன். அவன் என்னைத் தாக்கினான். நான் ஒரு தடியால் அவனை அடிக்க ஆரம்பித்தேன். அவன் அதனை சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. அப்பொழுது “இவன் இதனால் எல்லாம் பயப்படமாட்டான். மனதின் ஒளியைக் கொண்டுதான் பயப்படுவான்” என்று ஒரு அசரீரி கேட்டது. விட்டலாச்சாரியார் கதை போல இருக்கிறதல்லவா?
அசி புத்தகம் பக்கம் 396, 397ல் எழுதியிருக்கும் கப்ஸா:
திக்ரில் மிகச் சிறந்தது திக்ரே கஃபீ எனப்படும் இரகசியமான திக்ராகும். உணவில் மிகச் சிறந்தது போதுமான அளவுள்ள தாகும் என்று ரசூல்(ஸல்) அவர்கள் அருளிய தாக, ஸஃது(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதே ஹதீஃதை உபாதா(ரழி), அவர்களும் அறிவித்துள்ளார்கள். “போதுமான உணவு என்பது உயிர் வாழப் போதாத குறைந்த உணவோ, அல்லது பெருமையடிப்பதிலும், பாவங்கள் புரிவதிலும் அதிக உணவோ இல்லாமல் நடுத்தரமான முறையில் உள்ள உணவாகும்’. இப்னு ஹிப்பா(ரஹ்), அபூயஃலா (ரஹ்) இருவரும் இந்த ஹதீஃத் சரியான ஆதாரமுடையது என்று கூறியுள்ளார்கள். ஹதீஃத் நூலின் பெயரும் இல்லை, ஹதீஃத் எண்ணும் இல்லை, எனவே, வழக்கம் போல சான்றிதழ் சமர்ப்பிக்கிறார் ஜக்கரிய்யா!
அசி புத்தகம் பக்கம் 397ல் எழுதியிருக்கும் ரிவாயத்து :
ஒரு ஹதீஃதில், “”நீங்கள் அல்லாஹ்வை திக்ரே காமில் மூலம் நினைவு கூர்வீர்களாக” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, “திக்ரே காமில்’ என்றால் என்ன என்பதாக ஒரு ஸஹாபி கேட்டார். “அது திக்ரே மக்பீ எனப்படும் இரகசியமாக திக்ராகும்’ என பதிலளித்தார்கள்.
ஏற்கனவே திக்ரே கஃபீ மிகச் சிறந்தது என்றார். இப்போது புதிது புதிதாக “திக்ரே காமில்’ என்றும், “திக்ரே மக்பீ’ என்றும் கூறுகிறார். இதற்கு முன் கூறப்பட்ட அறிவிப்பில் உங்களைப் பைத்தியக்காரர் என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக திக்ரு செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது என்று அசி ஆசிரியர் கூறிவிட்டு, இவை இரண்டும் சந்தர்ப்பங்களை கவனித்து மாறுபடக்கூடிய தனித் தனி விஷயங்களாகும் என்றும், யாருக்கு எந்த நேரத்தில் எந்த திக்ரு பொருத்தமானது என்பதை ஆன்மீக வழிகாட்டியான ஷைகு(?) தீர்மானிப்பார் என்கிறார்.
சிந்தனையின் சிறப்பின் இறுதியாக, அநியாயத்தின் உச்சகட்டத்திற்கு சென்றுவிட்ட அதி புத்தகம், புனித குர்ஆனுக்கு எதிர் கருத்தைக் கூறி அதன் மூலம் அதை அல்லாஹ்வே சொன்னதாகக் காண்பித்து, வல்லமை மிக்க உண்மையாளன் அல்லாஹ்வையே பொய்யனாக்கி, அவன் அகிலத்தாருக்கு இறக்கி அருள் புரிந்த பரிசுத்த குர்ஆனையும் பொய்யாக்கி காண்பிக்கின்ற அக்கிரமத்தை செய்து விட்டனர். இஸ்லாத்தில் இருந்து கொண்டு அவர்கள் செய்து வருகின்ற இப்படிப்பட்ட கீழ்த்தரமான அக்கிரமங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் விரிவாகக் காண்போம்.