அமல்களின் சிறப்புகள்….
தொடர் : 62
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை
தப்லீக் ஜமாஅத்தினருக்கு அவசர எச்சரிக்கை :
தப்லீக் ஜமாஅத் சகோதரர்களே! அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தில் உள்ள செய்திகளை சிறிது சிறிதாக இதுவரை 61 தொடர்களில் ஆய்வு செய்துள்ளோம். அந்த செய்திகள், அல்லாஹ் இறக்கியருளிய புனித குர்ஆனிலும், நபிவழி ஹதீஃதிலும் இல்லாதவை என்பதை ஆய்வில் கண்டறிந்து, அசி புத்தகம் பொய் கூறுவதை நிரூபித்தோம்.
இப்போது இந்த 62ஆம் தொடரில் ஆய்வு செய்யப்படும் செய்தியும் அதன் விளைவும் வழமையான பொய்யாகவே இருக்கிறது. அந்த பொய்க்கு எதிரான ஆயத்து குர்ஆனில் இருக்கும்போதே அசி புத்தகம் பொய் சொல்லி இருக்கும் துணிச்சல் வியக்க வைக்கிறது.
குர்ஆனில் இல்லாத ஒரு செய்தியை அல்லாஹ் கூறியதாக அதுவும் அந்த செய்தியை, நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஃதைக் காட்டுகிறது. அசி புத்தகம். இதன் மூலமாக அல்லாஹ்வின் மீதும், ஹதீஃதைக் கூறிய நபி(ஸல்) அவர்களின் மீதும், ஹதீஃதுகளை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரில் செவிமடுத்து உலகிற்கு அறிவித்த நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சஹாபாப் பெருமக்கள் மீதும் களங்கம் ஏற்படுத்த முயற்சித்திருப்பதைக் காண முடிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், ஒட்டுமொத்தமாக இஸ்லாம் மார்க்கத்தைக் கறைபடிந்ததாக உலகிற்குக் காட்டும் முயற்சியை அசி ஆசிரியர் கையில் எடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
அந்த சம்பவம் என்னவென்று கூறுகிறேன். உணர்ச்சிவசப்பட்டு விடாதீர்கள், கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், வல்லமை மிக்க உண்மை யாளனாகிய அல்லாஹ்வை, பொய் சொல்பவனாகக் காட்டுகிறது அசி புத்தகம்! அதுவும் எப்படித் தெரியுமா? அல்லாஹ் சொல்லாத ஒரு செய்தியை அல்லாஹ் சொன்னதாகக் கூறி, அப்படியயன்றால் அச்செய்தி குர்ஆனில் இருப்பதாக எண்ணிக் கொள்வார்கள் என்று எண்ணவைத்து, அல்லாஹ்வை பொய்யனாக காண்பிக்க முயற்சித்துள்ளார் அசி ஆசிரியர் ஜக்கரிய்யா, நவூதுபில்லாஹ்! அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம்!
உண்மையில் நடந்திருப்பது என்ன வென்றால், ஜக்கரிய்யா பொய்யாக சொன்ன அச்செய்திக்கு எதிராக, அப்போதே அதாவது 1442 ஆண்டுகளுக்கு முன்பாகவே அல்லாஹ் குர்ஆனில் ஆயத்தை இறக்கியிருக்கிறான். இப்போதாவது அசி புத்தக ஆசிரியரின் சதித்திட்டம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறோம். புனித குர்ஆன் என்ன கூறுகிறதோ, அதற்கு எதிர் கருத்தை கூறுவது மட்டுமே ஜக்கரியாவின் கொள்கை என்பதை புரிந்திருப்பீர்கள்.
ஜக்கரியாவின் இந்தக் கொள்கை மூலம், குர்ஆன் தெரிவிக்காததைத் தெரிவித்ததாகக் கூறி புனித குர்ஆனும் பொய் சொல்வதாக மாபெரும் அபாண்டம் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த அபாண்டத்தை ஒரு பொய்யான ஹதீஃதின் மூலம் தெரியப்படுத்தி இருப்பதால், நபி(ஸல்) அவர்களும் பொய் சொன்னதாகவும், அந்த ஹதீஃதை அறிவித்த முஃமின்களின் தாய் ஆயிஷா (ரழி) அவர்களும் பொய் சொன்னதாக இஸ்லாத்திற்குள்ளும் வெளி உலகிற்கும் பறைசாற்றி தம்பட்டம் அடித்து வருகிறார் அசி புத்தகத்தில்,
அசி புத்தகம் கூறும் அந்த செய்தி என்ன?
அந்த செய்தியை மிகவும் கவனமாகப் பாருங்கள். அசி புத்தக பக்கம் 395ல், “மலக்குகளும் அறியாத வகையில் இரகசியமாக செய்யப்படும் (திக்ரே கஃபீ) என்ற திக்ராகிறது. எழுபது மடங்கு இரட்டிப்பான நன்மைகள் உடையதாகும். கியாமத்து நாளில் மக்கள் அனைவரும் விசாரணைக்காக ஒன்று கூட்டப்படும் நேரத்தில் கிராமன் காத்திபீன் என்ற மலக்குகள் நன்மை தீமை பதிவு செய்யப்பட்ட செயலேடுகளைக் கொண்டு வருவார்கள். அப்பொழுது அல்லாஹுதஆலா இன்ன அடியா னுடைய செயல்களைப் பாருங்கள். அவற்றில் ஏதேனும் விடப்பட்டிருக்கிறதா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், “யா அல்லாஹ்! நாங்கள் எதனையும் எழுதாமலோ, பதிவு செய்யாமலே விட்டுவிடவில்லை என்று கூறுவார்கள். அப்பொழுது அல்லாஹுத ஆலா, “உங்களுக்குத் தெரியாத ஓர் அமல் நம்மிடம் இருக்கிறது. அதுதான் அந்த மனிதன் செய்து வந்த திக்ரே கஃபீ என்னும் இரகசியமான திக்ராகும் என்று கூறுவான்” என ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதாக, அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்தது “முஸ்னத் அபூயஃலா’ என்ற நூலில் இருப்பதாக அசி புத்தகம் எழுதியிருக்கிறது.
முஸ்னத் அபூயஃலாவில் எந்த தலைப்பில் எத்தனையாவது எண்ணில் இந்த ஹதீஃத் இடம் பெற்றிருக்கிறது என்ற விவரங்களைத் தராத நிலையில், அவர் கூறிய பொய்யை உண்மையயன்று நம்பவைக்க, இன்னுமொரு பொய்யைக் கூறி திசை திருப்புகிறார்! அது யாதெனில், “ஷிஅபுல் ஈமான்’ என்ற நூலில் “மலக்குகளும் செவியுறாத முறையில் செய்யப்படும் திக்ராகிறது, மலக்குகள் செவியுறும் முறையில் செய்யப்படும் திக்ரை விட எழுபது மடங்கு உயர்ந்த தாகும்’ என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாக இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள் என்று கூறுகிறது அசி புத்தகம்.
காமெடியை பார்த்தீர்களா? அல்லாஹ்வின் சொல் குர்ஆனில் இல்லை, ஹதீதே குத்ஸியில் இல்லை, ஆனால், முஸ்னத் அபூ யஃலாவில் இருக்கிறதாம். இமாம் பைஹ கீயின் “ஷிஅபுல் ஈமான்’ என்ற நூலிலும் இருக்கிறதாம். அப்படியானால் அபூயஃலா அவர்களுக்கும், பைஹகீ அவர்களுக்கும் வஹியின் தொடர்பு இருந்தது என்று ஜக்கரியா நினைத்துக் கொண்டாரா? ஒன்றுமே தெரியாத அப்பாவி போல பொய்யை சொல்லி நம்ப வைக்கும் நடிப்பில் ஜக்கரிய்யா கில்லாடி!
எமது ஆய்வு :
மேற்கண்ட இரண்டு நூல்களில் அல்லாஹ்வும், மலக்குகளும் உரையாடியதாகக் கூறப்படும் அந்த செய்தி, பச்சைப் பொய் என்பதை ஆய்வு செய்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியமேயில்லை. ஏனென்றால் புனித குர்ஆன் வசனங்களிலிருந்தே அது பொய் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
அல்லாஹ் சொல்லி இருப்பதாக அசி புத்தகம் தெரிவித்திருப்பது, குர்ஆனில் இருக்கிறதா என்பதை இப்போது முதலில் நடுநிலையோடு ஆராய்வோம்! “கியாமத்து நாளில் மக்கள் அனைவரும் விசாரணைக்காக ஒன்று கூட்டப்படும் நேரத்தில் கிராமன் காத்திபீன் என்ற மலக்குகள் நன்மை தீமை பதிவு செய்யப்பட்ட செயலேடுகளைக் கொண்டு வருவார்கள். அப்பொழுது அல்லாஹுதஆலா, “இன்ன அடியானுடைய செயல்களைப் பாருங்கள். அவற்றில் ஏதேனும் விடப்பட்டிருக்கிறதா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், “யா அல்லாஹ்! நாங்கள் எதனையும் எழுதாமலோ, பதிவு செய்யாமலோ விட்டுவிடவில்லை’ என்று கூறுவார்கள். அப்பொழுது அல்லாஹுதஆலா, “உங்களுக்குத் தெரியாத ஓர் அமல் நம்மிடம் இருக்கிறது. அதுதான் அந்த மனிதன் செய்து வந்த திக்ரே கஃபீ என்னும் இரகசியமான திக்ராகும்’ என்று கூறுவான்’ என்ற செய்தி முழு குர்ஆனிலும் இடம் பெறவேயில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குர்ஆனில் கூறப்படவில்லை என்று நாம் சொல்லும் அதே நேரத்தில் அதிசயம் ஒன்று குர்ஆனில் இருப்பதை சொல்லியாக வேண்டியிருக்கிறது. அது யாதெனில், அசி புத்தகம் கூறும் அக்கருத்துக்கு எதிரான ஆயத்தைக் குர்ஆன் தந்திருக்கிறது என்பதே!
குர்ஆனில் கூறப்பட்டுள்ள வசனங்களை எவரும் மேற்கோள் காட்டினால், தயவு செய்து அவை குர்ஆனில் இருக்கிறதா என்று குர்ஆனை திறந்து பாருங்கள் அய்யா! திறந்து பாருங்கள்! அந்த பழக்கம் மட்டும் நம்மிடம் வந்துவிட்டால், கண்டகண்ட செய்திகளையயல்லாம் குர்ஆனில் இருப்பதாக எவனும் கூறிவிட முடியாது. அப்படி எவனும் கூறினால், அவன் எல்லோரிடமும் பிடிபட்டுவிடுவான். குர்ஆனைத் திறந்து பார்க்கும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இல்லாததால்தான், அபூ அப்தில்லாஹ் போன்றவர்கள் சமுதாயத்திற்குத் தேவைப்பட்டார்கள். அபூ அப்தில்லாஹ் என்று குறிப்பாகக் கூறுவதன் காரணம், குர்ஆனை எல்லோருக்கும் புரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் பட்டம் பெற்ற மவ்லவிகள் மத்தியில், பட்டம் பெறாத அந்த மனிதர் தான் தன்னந்தனியனாய் குர்ஆனை ஒவ்வொருவரும் திறந்து படிக்குமாறு காலமெல்லாம் தலைதலையாய் அடித்துக் கொண்டிருந்தார்.
அதற்காக, தாம் எழுதிய பெரும்பாலான ஆக்கங்களில் இறை வசனத்தை எழுதாமல், மக்களை, குர்ஆனை திறந்து பார்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து, அவர் கூறும் செய்தி குர்ஆனில் எத்தனையாவது அத்தியாயத்தில் எத்தனையாவது ஆயத்தாக இடம் பெற்றிருக்கிறது என்பதை மட்டும் குறிப்பிட்டு வந்தார் என்றாலும், எம்மைப் போன்ற சோம்பேறிகளுக்கு அப்போது அது பாரமாய் தெரிந்தது. அதன் அருமையை இப்போது உணர்கிறோம். எனவே, இப்போதாவது குர்ஆனை திறந்து பார்த்து தெரிந்து கொள்வோம். அப்போது தான் ஜக்கரியாவின் சுயரூபம் வெளிப்படும்.
“நிச்சயமாக உங்கள்மீது பாதுகாவலர்கள் (மலக்குகள்) இருக்கின்றனர்” (அல்குர்ஆன்: 82:10) “அவர்கள் கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்” (அல்குர்ஆன்: 82:11) “நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்”. (அல்குர்ஆன்: 82:12)
“நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்” என்ற ஆயத்தின் மூலம், உலகிலுள்ள அத்தனை மக்களின் செயல்களையும் அவரவர்கள் மீது நியமிக்கப்பட்ட கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்களாகிய மலக்குகள் அறிந்துகொள்ள முடியும் என்று அகிலங்களின் இறைவன் அல்லாஹ் கூறியிருக்க, அசி ஆசிரியர் ஜக்கரியாவோ நெஞ்சழுத்தத்துடன், மலக்குகள் அறியமாட்டார்கள் என்கிறார். அதுவும் மலக்குகளும் அறியாத வகையில் இரகசியமாக செய்யப்படும் திக்ராம் அந்த வீணாய்ப்போன “திக்ரே கஃபீ” அது மாதிரி திக்ர் இஸ்லாத்தில் எங்கே அய்யா இருக்கிறது? அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் அதைக் கற்றுத் தந்திருக்கிறார்களா? இல்லையே!
இஸ்லாத்தை ஏற்காத காஃபிர்கள் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும், இறைநூல் குர்ஆனையும் குறை சொன்னபோதெல்லாம் உலக முஸ்லிம்கள் வெகுண் டெழுந்தனர். ஆனால் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தை இழிவுபடுத்தும் பொய்யன் ஜக்கரிய்யாவை என்ன செய்து விட்டார்கள்? இந்த ஆள் ஜக்கரிய்யாவுக்கு இவ்வளவு பெரிய துணிச்சல் எப்படி வந்தது? தப்லீக் ஜமாஅத்தினர், இந்த நபருக்கு ஆதரவு கொடுத்து அணைத்துக் கொண்டது எப்படி? மத்ஹப் மற்றும் பிரிவினைவாதிகள் கூறுவது போலவே, குர்ஆனையும் ஹதீஃதையும் பின்பற்றுகிறோம் குர்ஆனையும், ஹதீஃதையும் பின்பற்றுகிறோம் என்று பொய்யை சொல்லிச் சொல்லி முஸ்லிம்களை மூளைச்சலவை செய்திருக்கிறார்கள் என்பது இப்போதாவது புரிகிறதா?
ஒவ்வொரு மனிதனும் செய்வதை மலக்குகள் அறிகிறார்கள் (82:12) என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால், மலக்குகளுக்குத் தெரியாத ஓர் அமல் இருக்கிறது என்று அல்லாஹ் கூறியதாக பொய் சொல்கிறார் ஜக்கரிய்யா, அது மட்டும் இல்லாமல் அந்த அமல்தான் திக்ரே கஃபீ என்னும் இரகசியமான திக்ர் என்று அல்லாஹ் மலக்குகளிடம் கூறினானாம். அல்லாஹ் சொல்லாததை சொன்னதாக ஜக்கரியா தைரியமாகக் கூறுகிறார். அந்த ஜக்கரியா உண்மையாளராக இருந்திருந்தால் அல்லாஹ் அப்படி கூறியதற்கு சான்றாக குர்ஆன் வசனத்தையோ அல்லது ஹதீஃதே குத்ஸியையோ காண்பித்திருக்க வேண்டும். காண்பிக்காத போது, அந்த ஜக்கரிய்யா அல்லாஹ்வுக்கு பயப்படாத ஒரு பொய்யன் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.
“மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுடையது’ (அல்குர்ஆன் : 72:18) என்று அல்லாஹ் அறிவித்த பின்னும், மஸ்ஜிதுகளிலேயே அமல்களின் சிறப்புகள் புத்தகத்தை வைத்து படிக்கவும் செய்கிறார்கள் என்றால், இந்த தைரியம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? இந்த மவ்லவிகளை “ஆலிம்கள்’ “கண்ணியமிக்க உலமாக்கள்’ என்று புகழ்ந்து விட்டால் போதும் உச்சி குளிர்ந்து போய் விடுவார்கள். அதன் பிறகு நாம் என்ன வேண்டுமானாலும் பயான் செய்யலாம், எதை வேண்டுமானாலும் எழுதி புத்தகம் வெளியிடலாம், எழுதிய அந்த புத்தகத்தை பள்ளிவாயில்களில் வைத்து பயபக்தியுடன் தஃலீம் செய்துவிடலாம் என்று ஜக்கரியா ஏற்கனவே முடிவெடுத்து, தப் லீக்காரர்களை செயல்பட முடுக்கிவிட்டிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதை நாம் சும்மா எழுதிவிடவில்லை, அன்றாட நடைமுறையில் இதை தினமும் நேரிடையாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
“புகழ்பவனின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஏன் கூறினார்கள்? புகழப்படும் மனிதர்கள் உச்சி குளிர்ந்து, புகழ்ந்தவன் பேசும் பொய்களை எதிர்க்க திராணியற்றுப் போய் விடுகின்றனர். தொழுகை முடிந்ததும் தொழுகை நடத்திய மவ்லவியைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு தங்களது கப்சா கதைகளை தப்லிக்காரர்கள் கூறி பயான் செய்யும்போது இடையிடையே “உலமாக்களை கண்ணியப்படுத்த வேண்டும், அவர்களுக்குத்தான் மஸாயில்கள் தெரியும், நமக்குத் தெரியாததை இமாம்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று சகட்டுமேனிக்கு அவர்களைப் புகழ்ந்து தள்ளிவிடுகின்றனர். இதைத் தொழுகையாளிகள் ஒவ்வொருவரும் கவனித்து இருப்பீர்கள். இன்றளவும் இப்படித்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த தப்லீக் ஜமாஅத்தினரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே எதிர்க்கத் திராணியற்றுப்போன இந்த மவ்லவிகள்தான், ஆரம்பத்திலே எதிர்த்திருந்தால், அவர்கள் இந்நேரம் இருக்குமிடம் தெரியாமல் போயிருப்பார்கள். ஆனால் இன்று மவ்லவிகள் அவர்களின் கூற்றை மறுக்கவும் முடியாமல், வெளிப்படையாக எதிர்க்கவும் முடியாமல் அதாவது மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் வாய்மூடி மெளனியாக இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் வளர்ந்து விட்டனர். வளர்ந்து விட்ட இந்த தரு ணத்தில், முன்பெல்லாம் தப்லீக் ஜமாஅத்தினரின் பயான்களை அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த மவ்லவிகள் கூட இப்போதெல்லாம் அங்கே உட்காருவதே இல்லை. பயம் கவ்விக் கொண்டது. என்ன பயம்? புலி, வலது பக்கம் போனால் என்ன, இடது பக்கம் போனால் என்ன, நம்மீது விழுந்து பரண்டாமல் இருந்தால் சரி என்ற நினைப்பில், அவர்கள் நம்மை ஜமாஅத்துக்கு கூப்பிடாமல் இருந்தால் சரி என்று மவ்லவிகள் அவர்களை நினைத்து பயப்பட ஆரம்பித்து விட்டனர்.
மவ்லவிகளே! உங்களுக்குள்ளே மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் கர்வம், ஆணவம், அகம்பாவம், பெருமை அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு, மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியின் துணைக் கொண்டு குர்ஆனைப் புரிந்து படிப்பதற்கான வழிவகைகளை செய்ய முன்வாருங்கள். இல்லையேல் மக்களில் வசதி படைத்த நன் நெஞ்சுடையோர் தாய்மொழியின் துணைக் கொண்டு குர்ஆனைப் புரிந்து படிப்பதற்கான வழிவகைகளை அரபிக் கல்லூரிகளில் ஏற்படுத்த நீதிமன்றத்தின் துணையை நாடுங்கள். அல்லது கல்வியாளர்களைக் கொண்டு (மவ்லவிகள் அல்ல) இஸ்லாமியக் கல்லூரிகளை நிறுவி, சிறந்த பாடத்திட்டத்துடன் கல்வி தர முன்வாருங்கள். ஆலிம் அவ்வாம் என்ற பாகுபாடற்ற அறிவார்த்தமான இஸ்லாமிய சமுதயாம் உருவாக வழிவகை செய்ய முன்வருவோர், இதன்மூலம் மறுமையில் அல்லாஹ்விடம் உயர் பதவிகளை அடைவது நிச்சயம்.
இப்போது சொல்லுங்கள், அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் நேசிக்கும் மார்க்கம் அறிந்த ஓர் உண்மை அடியான், அசி புத்தகத்தில் அல்லாஹ்வைப் பொய்யனாக்கும் அந்த செய்தியைப் படித்தவுடன் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? எப்படி கஷ்டப்பட்டிருக்கும்? இஸ்லாத்தைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற சதியை ஜக்கரிய்யா திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பதால், அடியானின் மனக் கஷ்டம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல! அதனால் தான் தமது ஈனச் செயல்களுக்கு ஆதரவு இருப்பதாக அபூயஃலா இப்படிச் சொன்னார். பைஹகீ அப்படிச் சொன்னார். பாரசீகக் கவிதை இப்படி பாராட்டுகிறது என்று பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறார் கல் நெஞ்சக்காரன் ஜக்கரிய்யா.
தங்களுக்குத் தாங்களே அறிவாளிகள் (உலமாக்கள்) என்று பீற்றிக் கொள்ளும் மவ்லவிகள், அல்லாஹ் இறக்கி அருள் புரிந்திருக்கின்ற மாபெரும் பொக்கிஷமான பரிசுத்த குர்ஆனை திறந்து பார்த்து ஓதியது கிடையாதா? ஓதியிருந்தாலும் அப்போது அது அரபி மொழியில் மட்டும் இருந்ததால் அர்த்தம் தெரியாமல், விழி பிதுங்கிக் கொண்டு இருந்தீர்களா?
அல்லாஹ்வை பொய்யனாக்கி பெருமைக் கொள்ளும் இந்த அசி ஆசிரியரையும், அவரைப் பின்பற்றும் தப்லீக் ஜமாஅத்தினரையும் சர்வ சுதந்திரமாக இஸ்லாம் என்ற கோட்டைக்குள் உலாவர அனுமதித்திருக்கும் மவ்லவிகள், மார்க்கம் தெரிந்தவர்கள்தானா என்று உண்மை அடியான் கேட்கத்தானே செய்வான்?
“அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையை சொல்பவனை விட பெரும் அக்கிரமக்காரன் யார்? அத்தகையோர் மறுமையில் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். “இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்’ என்று சாட்சி சொல்வோர் கூறுவார்கள், இத்தகைய அநியாயக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்”. (அல்குர்ஆன்: 11:18)]
அகிலங்களை படைத்த அல்லாஹ்வைப் பொறுத்தவரை, அந்த அநியாயக்காரர்களின் மீது அல்லாஹ் சாபமிடுகிறான். அந்த அநியா யக்காரர்கள் விஷயத்தில் மனிதர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும் என்பதை அல்லாஹ் கூறி இருப்பதைப் பாருங்கள்.
“யார் இறைநூலில் உள்ள உண்மைகளை நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிக்கும் காபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். (அல்குர்ஆன்: 2:161)
மனிதர்களின் சாபம் உண்டாகும் என்று அல்லாஹ் கூறி இருப்பதால், நாம் அனைவரும் மரணம் அடைந்து விட்ட அவர்மீது சாபமிட கடமைப்பட்டுள்ளோம். வாழும் போதும் பலரை நேர்வழியிலிருந்து தடம் பிறழச் செய்தார். மரணித்த பிறகும் அசி புத்தகம் மற்றும் அவரது இதர நூல்களின் மூலம் இன்னும் பலரை தடம் புரளச் செய்து கொண்டிருக்கிறார். எனவே மரணித்து விட்ட ஜக்கரிய்யா அவர்களை சபிப்போமாக.
“(அல்லாஹ்வின் கட்டளைகளை) செவிமடுத்தோம், கட்டுப்பட்டோம், எங்களை மன்னிப்பாயாக, உன்னிடமே வரவேண்டி இருக்கிறது” என்று 2:285ஆவது ஆயத்தில் அல்லாஹ் கட்டளையிட்ட பிறகும் கூட, அந்த ஆயத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தாத சில அறிவுஜீவிகளுக்கு மண்டையில் ஞானம்(?) கொப்பளிக்க ஆரம்பித்து, அதன் காரணமாக சிந்திக்க ஆரம்பித்து, கீழ்க் கண்டவாறெல்லாம் வினா தொடுக்கவும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
“ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்” என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள் அல்லவா? (அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி), புகாரி : 2442, ஹதீஃதின் சுருக்கம்) மேலும், “(மற்றவரின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள்” என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள் அல்லவா? (அபூஹுரைரா(ரழி), புகாரி: 6724, ஹதீஃதின் சுருக்கம்) மேலும், மரணித்து விட்டவர்களைப் பற்றி கெட்டது பேசவேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடுக்கவில்லையா? என்றெல்லாம் வினாக்களை அடுக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்த கல்வி அறிவு அவ்வளவுதான்.
இவர்கள் அத்தனை பேருக்கும் பதில் ஒன்றுதான். ஒரு மனிதனின் சொந்த வாழ்க்கையில் அவரது நடத்தை & தன்மையில் (CONDUCT & CHARACTER) அவர் செய்த அவரின் குறைகள் சம்பந்தப்பட்டவைகளுக்குத்தான் மேல் கூறிய இறைவசனங்களும் இன்னும் இதுபோன்ற ஏனைய இறை வசனங்களும் மற்றும் ஹதீஃது களும் பொருந்தும்.
இஸ்லாம் மார்க்கம் அல்லாஹ்வுடையது. (அல்குர்ஆன் : 3:19) அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ் கூறியதற்கு மாற்றமாக எதையும் சொல்வதற்கு அல்லாஹ்வுடைய தூதருக்கே அதிகாரம் இல்லாதபோது அசி ஆசிரியருக்கு அந்த அதிகாரத்தை யார் தந்தது?
“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை, ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரசூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்”. (அல்குர்ஆன் : 33:36)
அசி ஆசிரியர் குர்ஆனிலுள்ள வசனங்களை நிராகரித்து விட்டார். அவர் மரணிக்கும் வரை அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டு தன்னை அவர் சீர்திருத்திக் கொண்டதாகவும் தெரியவில்லை. இது எமது யூகம் அல்ல. நேர்வழிக்கு அவர் மாறி இருந்தால், குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் எதிர்வினையாற்றிய அவரது அமல்களின் சிறப்புகள் போன்ற ஆக்கங்களை தடை செய்ய யாருக்கேனும் வஸியத் செய்து இருப்பார். அப்படி அவர் வஸியத் செய்திருந்தால், இந்நேரம் அசி புத்தகம் தடை செய்யப்பட்டிருந்திருக்கும். அப்புத்தகம் தடை செய்யப்படாமல் இன்றுவரை தப்லீக் ஜமாஅத்தினரிடையே புழக்கத்திலிருந்து வருவதால் அந்த புத்தகத்தை தடை செய்ய அசி ஆசிரியர் வஸியத் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அதனால் மரணிக்கும் வரை அவரது நிலையில் நேர்வழி கிடைத்ததற்கான அறிகுறிகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
பள்ளிவாயிலில் தினமும் செய்யப்படும் தஃலீம்களில் அசி புத்தகத்திற்கு மாற்றாக வேறொரு புத்தகம் தஃலீம் செய்யப்பட்டு வருகிறதே என சிலர் வாதிக்கலாம். வஸியத் செய்யப்பட்டிருந்தால், அசி ஆசிரியர் மரணத்திற்கு பிறகு இந்த மாற்றம் உடனே ஏற்பட்டிருந்திருக்க வேண்டும். மாறாக அவர் மரணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகே, மாற்று புத்தகம் ஒன்றை தஃலீம் செய்வதற்கு பள்ளிகளில் வைத்துள்ளனர். அந்த புத்தகமும் அமல்களின் சிறப்புகள் புத்தகத்திற்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. “பழைய மொந்தையில் புதியகள்” என்ற சொல்லாடலுக்கேற்ப, குர்ஆன் மற்றும் ஹதீஃதுகளுக்கு மாற்றமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
அசி புத்தகம் கக்கிய விஷத்தை தொடர்ந்து பார்த்து வருகிறீர்கள். அல்லாஹ்வை பொய்யனாக, புனித குர்ஆனை பொய்யான நூலாக சித்தரிக்கும் அசி புத்தகத்தை தூக்கி சாக்கடையில் எறிந்து விட்டு, அல்லாஹ் இறக்கிய குர்ஆனையும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற ஹதீஃதுகளையும் பின்பற்ற, உண்மை மார்க்கம் இஸ்லாத்திற்குள் நுழைந்து கொள்ளுமாறு தப்லீக் ஜமாஅத் சகோதரர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
அந்தோ பரிதாபம்! எவனாலும் அல்லாஹ்வைக் களங்கப்படுத்த முடியாது என்பதையும், அவன் பாதுகாத்து வரும் குர்ஆனையும், அவனது கட்டுப்பாட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களையும் அவர்களிடமிருந்து செவியேற்று அறிவிக்கப்பட்ட ஹதீஃதுகளையும் எவனொருவனாலும் களங்கப்படுத்த முடியாது என்பதையும் அறியாதவர்களாய் இருக்கிறார்கள் அந்த ஈனர்கள். அதனால்தான் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.
நீங்கள் அல்லாஹ்வையும், புனித குர்ஆனையும் உண்மையில் நேசிப்பவர்களாய் இருந்தால், உண்மையின் பக்கம் வருவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. அது உண்மையானால், உங்களின் உயிர்மூச்சு, இழிவுப்படுத்தப்பட்ட பிறகும் உங்களால் எப்படி வெறுமனே சும்மா, வாழா இருக்க முடிகிறது? உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோசம், சுயமரியாதை ஆகிய பண்புகள் இல்லாமல் போய்விட்டதா? அப்படியானால், உங்களைக் கிள்ளிப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். பாவம்! நீங்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்பதை! நீங்கள் இழந்த அத்தனை பண்புகளும் இப்போதாவது உங்களுக்கு செயல்பட்டாக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் வந்தாக வேண்டும்! அல்லாஹ் நாடினால் வந்தும் விடுவீர்கள். எனவே, வீறு கொண்டு எழுங்கள்! உண்மையை உணருங்கள்! உண்மையின் பக்கம் வந்து விடுங்கள்! அல்லாஹ்வின் கஜானாவிலிருந்து அதிகமதிகம் பெற்றுக் கொள்வோம்.
இத்தொடரின் முடிவுரையாக, சில இறை வசனங்களை உங்கள் முன் வைக்கிறோம். தெளிவு பெறுவீர்கள் என்று நம்புகிறோம்.
“நிச்சயமாக நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு அளிக்கமாட்டான். அன்றி அவர்களை நேர்வழியிலும் செலுத்தமாட்டான்”(அல்குர்ஆன்: 4:168)
“நரகத்தின் வழியைத் தவிர, அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள், இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது” (அல்குர்ஆன் : 4:169)]
“அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழியில் நடத்தமாட்டான்” (அல்குர்ஆன்: 9:109)