யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்…..
அபூ ஹனிபா, புளியங்குடி
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் ஹஜ்ஜும், உம்ராவும் நடைபெறுமா?
நவழீன கால மார்க்க அறிஞர்கள் என்று சொல்லப்படுகின்ற அல்லாமா இக்பால், மவ்லானா மவ்தூதி இம்ரான் ஹூசைன் போன்றோர்கள் யஃஜூஜ், மஃஜூஜ் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஃத்களுக்கு இதுவரை யாரும் கொடுத்திராத நவீன விளக்கங்களை கொடுத்து வருகிறார்கள். அவர்களுடைய விளக்கங்கள் சரியானதா? தவறானதா? அவர்களின் விளக்கங்களை ஏற்க மறுக்கும் நம்மைப் போன்றவர்களிடம், அவர்கள் வைக்கும் கேள்விகளையும், அதற்கான வைக்கும் கேள்விகளையும், அதற்கான பதிலையும், இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் ஹஜ்ஜும், உம்ராவும் நடைபெறும் :
புகாரி : 1593 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் உம்ராவும் செய்யப்படும் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அறிவித்தார். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்” என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஷுஅபாவின்அறிவிப்பு கூறுகிறது. மேலேயுள்ள முதல் அறிவிப்பே பொரும்பாலோரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹதீஃதை ஆதாரமாக காட்டி யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்கள் வந்த பிறகும் ஹஜ்ஜும், உம்ராவும் நடைபெறும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே செர்லியிருக்கும்போது, ஈஸா(அலை) அவர்கள் வந்த பிறகு தான் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் திறந்துவிடப்படுவார்கள் என்றிருந்தால், அன்றைய தினம் ஈஸா நபியும், முஸ்லிம்களும் தூர் மலையின் மேல் இருப்பார்களே! மேலும் மற்ற பகுதிகளில் இருக்கக்கூடிய முஸ்லிம்கள் தங்கள் கால்நடைகளுடன், வீடுகளிலும், கோட்டைகளிலும் ஒழிந்து கொள்வார்களே, அப்போது எப்படி ஹஜ்ஜும், உம்ராவும் நடைபெறும்? என்று கேள்வி கேட்கிறார்கள். மேலும் இந்த ஹதீஃதுக்கு நாங்கள் புரிந்து கொண்ட விளக்கம் தான் சரி. வெள்ளையர்களும், மங்கோலியர்களும் தான் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர். அவர்கள் வந்த பிறகும் ஹஜ்ஜும், உம்ராவும் இயல்பாக நடைபெறுகிறது.
முற்கால அறிஞர்களின் விளக்கத்தை மட்டும் அப்படியே பின்பற்றினால் நாம் வழிகேட்டிற்கு செல்லவேண்டியது தான். அதனால் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப குர்ஆனட் வசனங்களுக்கும், ஹதீஃத்களுக்கும் விளக்கம் காண வேண்டும். அப்போது தான் குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஃத்களுக்கும் சரியான விளக்கம் கிடைக்கும் இல்லை என்றால் நாம் வழிகேட்டில்தான் கிடக்க நேரிடும் என்று கூறுகிறார்கள். இவர்களின் இந்த விளக்கம் சரியா? தவறா? என்பதை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
போர் நடக்கும் காலங்களில் ஹஜ், உம்ரா நடக்குமா?
பொதுவாக போர் நடக்கும் காலங்களில் ஹஜ்ஜும், உம்ராவும் நடக்குமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அல்குர்ஆன் 2:217 (நபியே) புனிதமான மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும். அக்காலத்தில் போர் செய்வது பெருங்குற்றமாகும்.
புனதமான மாதங்களில் போர் செய்வது பெருங்குற்றம் என்று அல்லாஹ் சொல்கிறான். அதற்கு காரணம், புனிதமான மாதங்களில் ஒன்றான ஹஜ்ஜுடைய மாதங்களில் போர் ஏற்பட்டால் ஹஜ் கிரிகைகள் பாதிக்கப்படும். ஹஜ் செய்வதற்கு என்றே சில நடைமுறைகள், இபாதத்துகள் இருக்கின்றன. அவை அனைத்தும் பாதிக்கப்படும். அதனால்தான் அந்த மாதங்களில் போர் புரிவதை அல்லாஹ் தடுத்துள்ளான். இந்த நிலையில் ஹஜ்ஜுடைய மாதத்தில் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் திறந்து விடப்பட்டால் ஹஜ் நடைபெறுமா? நிச்சயமாக நடைபெறாது ஏன் என்றால்?
பொதுவாக யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் மங்கோலியர்களாகவோ, வெள்ளை இனத்தவர்களாகவோ, யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ எடுத்துக் கொண்டாலும், ஹஜ்ஜுடைய மாதங்களில் அவர்கள் கஅபாவை முற்றுகையிட்டு கஅபாவை கைப்பற்றிக் கொண்டால் ஹஜ் நடைபெறுமா? அல்லது நடைபெற விடுவார்களா? நிச்சயமாக நடைபெறவிடமாட்டார்கள். ஏன் என்றால் இஸ்லாத்தை பொய்ப்பிக்க வேண்டும் என்று நோக்கத்தோடு திரியும் ஒரு கூட்டத்தாரிடம் அதன் அஸ்திவாரமே கையில் கிடைத்தால் சும்மா விடுவார்களா? ஒரு காலமும் விடமாட்டார்கள். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு அல்அக்ஸா பள்ளிவாசல், இன்றைக்கு யூதர்களின் கைப்பிடியில் சிக்கித்தவிக்கும் அல்அக்ஸா பள்ளிவாசலின் நிலை என்ன? அங்கே தொழுவதற்கு அனுமதிக்கிறார்களா? எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள்?
ஹஜ்ஜுடைய மாதங்களில் போர் ஏற்பட்டால் ஹஜ் தடைபடும் என்பதற்காகத்தான் அல்லாஹ் அந்த மாதங்களில் போர் செய்வதை தடை செய்துள்ளான். (அல்குர்ஆன் : 2:217) சாதாரண மனிதர்கள் போர் செய்தாலே ஹஜ்ஜும், உம்ராவும் தடைபடும் என்னும்போது மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்றான யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வரும் நேரத்திலா ஹஜ்ஜும், உம்ராவும் நடைபெறும்? நிச்சயமாக நடைபெறாது, ஏன் என்றால்? யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் திறந்து விடப்படும்போது ஈஸா நபியும் அவர்களோடு இருக்கின்ற முஸ்லிம்களும் தூர் மலையின் மேல் இருப்பார்கள். மற்ற பகுதிகளில் இருக்கக்கூடிய முஸ்லிம்கள் வீடுகளிலும், கோட்டைகளிலும் ஒளிந்து கொள்வார்கள். அப்படி இருக்க எப்படி ஹஜ்ஜும், உம்ராவும் நடைபெறும்.
ஆக யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்கள் மங்கோலியர்களாக, யூதர்களாக, கிறித்தவர்களாக யாராக இருந்தாலும் அவர்கள்ட நபி ஈஸா(அலை) அவர்கள் காலத்தில் வெளி வந்தாலும் அல்லது இன்றே அவர்கள் வெளிப்பட்டு விட்டார்கள் என்றாலும் அவர்கள் கஅபாவை முற்றுகையிட்டு போர் புரிந்தால் அந்த நேரத்தில் நிச்சயமாக ஹஜ்ஜும், உம்ராவும் நடைபெறாது.
அப்படி என்றால் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் ஹஜ்ஜும், உம்ராவும் நடைபெறும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்களே அதற்கு விளக்கம் என்ன என்று கேட்கலாம்?
இரண்டு பகுதிகள் கொண்ட ஹதீஃத் :
இந்த ஹதீஃத் இரண்டு பகுதிகளை கொண்டதாக இருக்கிறது. முதல் பகுதிக்கான விளக்கம். நபி ஈஸா(அலை) அவர்கள் தஜ்ஜாலை கொல்வார்கள். பின்னர் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்களை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் உலகில் பல பாகங்களுக்கும் பரவி விடுவார்கள். அப்போது கடும் பஞ்சம் ஏற்படும். அந்த நேரத்தில் ஒருவருக்கு ஒரு மாட்டினட் தலை கிடைப்பது உங்களுக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதற்கு சமமாக இருக்கும். பின்னர் ஈஸா நபியும் அவர்களோடு இருக்கின்ற முஸ்லிம்களும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்களின் பிடரிகளில் புழுக்களை அனுப்புவான். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மடிவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான். அவை இந்த பூமியை சுத்தப்படுத்தும். பின்னர் ஈஸா நபியும் முஸ்லிம்களும் தூர் மலையில் இருந்து இறங்கி வருவார்கள். பின்னர் இயல்பான வாழ்க்கை நடைபெறும். (முஸ்லிம் : 5629) இயல்பான வாழ்க்கை நடைபெற்றால் அப்போது இயல்பாக ஹஜ்ஜும், உம்ராவும் நடைபெறும் என்பதற்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்து அழிக்கப்பட்ட பிறகு என்பதுதான் பொருள் என்றைக்கு கஅபா கவனிப்பற்று விடப்படுகிறதோ, ஹஜ் நடைபெறவில்லையோ அன்றைக்கு மறுமைநாள் ஏற்படும் என்பது ஹதீஃதின் இரண்டாவது பகுதிக்கான விளக்கம்.
ஆக ஹதீஃதின் இரண்டு பகுதிகளுக்கும் விளக்கத்தை தேடினால் மட்டுமே ஹதீஃதிற்கான சரியான விளக்கம் கிடைக்கும். ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றொரு பகுதியை விட்டு விட்டால் தவறான விளக்கத்தைத்தான் தரும். இன்றைக்கு நவீன கால அறிஞர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களும் ஒரு பகுதிக்கு விளக்கத்தை தேடி அதற்கு விளக்கம் கிடைக்காமல் தங்களுடைய மனோ இச்சையின் அடிப்படையில் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆக புகாரி 1593 ஹதீஃதின் மூலமாக நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்கள் வந்த பிறகும் ஹஜ்ஜும், உம்ராவும் நடைபெறும் என்றால் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் அழிக்கப்பட்ட பிறகு என்பதையும், ஈஸா(அலை) அவர்கள் வந்த நேரத்தில் தான் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்கள் திறக்கப்படுவார்கள் என்பதையும் விளங்க முடிகிறது. மேலும் வெள்ளை இனத்தவர்கள், மங்கோலியர்கள் போன்றவர்கள்ட யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்கள் இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது.
மேலும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்கள் தொடர்பாக வரக்கூடிய பல ஹதீஃத்களுக்கு நவீன கால மார்க்க அறிஞர்கள் தவறான விளக்கங்களை கொடுத்து முஸ்லிம்களை வழிகெடுக்கிறார்கள். அவர்களுடைய விளக்கங்கள் அனைத்தும் தவறு என்பதை குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஃத்களின் வாயிலாக இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம்.