குழந்தைக்காக…
- அஸ்ரப்புத்தீன், திருச்சி
அன்புச் சகோதரிகளே! இன்று நாம் உலகில் பல தேவைகளுக்காக பலவித வணக்க வழிபாடுகளிலும், பலவித நேர்ச்சைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இதில் முக்கியமான ஒன்று குழந்தைக்காக, ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி முதல் வருடத்தில் அவளும், அவளது கணவரும், குடும்பத்தார்களும் எதிர்பார்ப்பது குழந்தையை. ஆனால் அவள் குழந்தையை முதல் வருடத்தில் பெறாமல் இருந்தால் அவளைச் சிலர் இந்த கோயிலுக்கு போ, அல்லது ஏர்வாடிக்குப் போய் தொட்டில் கட்டு; நாகூர்க்குப் போய் வெள்ளியால் செய்த குழந்தை வாங்கி உண்டியலில் போடு, அல்லது அந்த பீர் சாயப் இடம் சென்று அவர் மென்று கொடுக்கும் வெற்றிலையைச் சாப்பிடு என்று எல்லாம் சொல்வார்கள். அல்லாஹ்விடம் குழந்தைக்காக பிரார்த்தித்துக் கேட்க வேண்டிய அவள், பெரியோர்கள் சொன்னார்கள் என்று அவர்களின் பேச்சைக் கேட்கிறாள். ஆனால் அல்லாஹ் என்ன சொல்கிறான்? “அல்லாஹ்வை யன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க முடியாது. அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே, உயிருள்ளவர்களல்லர். மேலும் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 16:20,21)
ஆனால் பிரிதொரு இடத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
இன்னும் அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை, பிரசவிப்பதுமில்லை என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 41:4) ஜகரிய்யா(அலை) அவர்கள் கூட குழந்தைக்காக வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள், அவர் எப்படி பிரார்த்தனை செயதார் என்று பார்ப்போம்.
அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தபோது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்) அல்குர்ஆன் 19:3 (அவர்) கூறினார். என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன. என் தலையும் நரையால் (வெண்மையாய்) விளங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாக போய்விடவில்லை. இன்னும் எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப் பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன். மேலும் என் மனைவியோ மலடாக இருக்கிறாள். ஆகவே நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அப்பொழுது அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 19:7)
ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை (என்று இறைவன் கூறினான்) (அதற்கு அவர்) என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வர் உண்டாவான் என்று கூறினார். (அல்குர்ஆன் 19:8)
அதற்கு அல்லாஹ் (அது) அவ்வாறே (நடைபெறும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் எப்பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து நானே உம்மைப் படைத்தேன் என்று இறைவன் கூறினான். (அதற்கவர்) என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக என்று வேண்டினார். நீர் சுகமாக இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும் என்று கூறினான். பின்னர் யஹ்யா பிறக்கிறார், ஆகையால் நாம் அல்லாஹ்வை நம்பி மற்ற எவரையும் இணை வைக்காமல் இருந்தால் எவ்வளவு முதுமை வயதை அடைந்திருந்தாலும் அவன் குழந்தை தருவான். மற்றுமொரு இடத்தில் கூட அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வுக்கே வானங்களினதும், பூமியினதும் ஆட்சி சொந்தமாகும்.
ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கின்றான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண் மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான். நிச்சயமாக அவன் மிக அறிந்தவன்; பேராற்றல் உடையவன். (அல்குர்ஆன் 42:49,50)
ஆகையால் நாம் மாற்றார்கள், உறவினர்கள் சொன்னார்கள் என்று தர்காக்களுக்கும், கோயில்களுக்கும், மரத்திற்கும் சென்று தொட்டில் கட்டுவதை விட்டுவிட்டு குழந்தை வேண்டி மருத்துவம் செய்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை. நல்ல மருத்துவர்களை பார்த்து மருந்துகள் எடுத்துகொண்டு இரவில் தஹஜ்ஜத் வேளையில் எழுந்து அல்லாஹ் விடமே தொழுது, தொழுது உள்ளச்சத்தோடு துஆ கேட்போமாக. அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.