சிறப்புமிக்க நடுநிலை சமுதாயம்!
M.S. கமாலுத்தீன், பெங்களூர்.
எல்லாம் வல்ல அல்லாஹ(ஜல்) இந்த உலகத்தில் எத்தனையோ கோடி மனித சமுதாயங்களை படைத்திருக்கிறான். தன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தவர்களை கண்ணியப்படுத்தியிருக்கிறான். வரம்பு மீறியவர்களை அழித்திருக்கிறான். ஆனால் உலக இறுதி நாள் வரை நடுநிலையான சிறந்த சமுதாய மக்கள் என்று திருகுர்ஆனில் புகழ்ந்து சொல்கிற சமுதாயம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி வருகிற முஸ்லிம் சமுதாயம்தான். இதோ அல்லாஹ் சொல்கிறான்; மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (அல்குர்ஆன் 3:110) இந்த சமுதாயத்தின் சிறப்பை பற்றி சொல்வது என்றால் நீண்ட பட்டியல் போடவேண்டும். மிக முக்கியமான சிறப்புகளை மட்டும் கூறுவோம்.
எந்த சமுதாய மக்களுக்கும் வழங்கப்படாத நிறைவு செய்யப்பட்ட மார்க்கம்; பாதுகாக்கப்பட்ட நெறிநூல்; எல்லோரும் ஏற்றுச் செயல்படுத்த கூடிய இலகுவான சட்டதிட்டங்கள்; அழகிய முன்மாதிரியான நபி(ஸல்) அவர்களால் வாழ்ந்து காட்டப்பட்ட அற்புதமான, அனைவராலும் பின் பற்றக்கூடிய வாழ்க்கை முறை. இப்படி இன்னும் பல சிறப்புக்கள் மிக்க இந்த சமுதாயத்தை வல்ல இறைவன் தன் திருமறையில் மற்றொரு இடத்தில் புகழ்ந்து சொல்கிறான். “நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள சமுதாயமாக ஆக்கியுள்ளோம்’ (அல்குர்ஆன் 2:143) எப்படி நடுநிலையோடு வாழ்வது என்பதை தன் தூதர் மூலம் தூய வாழ்க்கை வாழ்ந்து காட்ட சொன்னான். மற்ற சமுதாயத்தவர்களுக்கு எல்லாம் தன்னை பின்பற்றுகிற மக்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் காட்டிய ஆர்வம் அதிச யிக்கத்தக்கது.
தன் சமுதாயத்தவர்கள் மீது நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த அக்கறையைப் பற்றி இறைவன் கூறுகிறான். “நீங்கள் துன்பத்திற்குள்ளாகிவிட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவராக இருக்கின்றார்” (அல்குர்ஆன் 10:128) கருணை மிகுந்த நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாய மக்கள் பல் துலக்கும் வியத்தில் கூட சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் காட்டும் ஆர்வத்தை பாருங்கள். “என் சமுதாயத்தினருக்கு நான் கஷ்டம் அளித்தவனாவேன் என்ற (எண்ணம்) இல்லாதிருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்கும் படி அவர்களுக்கு ஆணையிட்டிருப்பேன்’ என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்கள்: திர்மிதி 22,23, நஸயீ 7,528, இப்னு மாஜ்ஜா 287.
உபதேசம் செய்யும் வியத்தில் கூட தன் சமுதாய மக்கள் சலிப்படைந்து விடகூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். “நாங்கள் சலிப்பு அடைந்திடுவோம் என்பதை நபி(ஸல்) அவர்கள் அஞ்சி உபதேசங்களை அளவோடு செய்வார்கள்’. அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் மஸ்வூத்(ரழி), நூல்: திர்மிதி 3015,3016)
நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் போது, உலகத்திலேயே சிறந்த நடுநிலைச் சமுதாயத்தை உருவாக்கி விட்டு சென்றார்கள். அந்த சிறப்புமிக்க சமுதாயத்தின் வழிவந்தவர்கள் நாம், நம் வாழ்க்கை உலக மக்களுக்கு உதாரணமாக இருக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். முஸ்லிம்கள் தனித்தன்மை இழந்தது தடம் மாறி வாழ்ந்தது தான் காரணம். மாற்று மதத்தவர்களை போல் மனம் போன போக்கில் வாழ ஆரம்பித்துவிட்டது மற்றொரு காரணம்.
சிறப்புமிக்க நடுநிலைச் சமுதாயம் இன்று நரகத்தின் பக்கம் விரைந்து கொண்டிருக்கிறது. தினமணி இதழில் “காலம் உங்கள் கையில்’ ஜோதிட கேள்வி பதில் பகுதி யில், “நான் ஒரு முஸ்லிம், எனது மகளின் பிறந்த தேதி எழுதி உள்ளேன்; அவளுக்கு விவாகம் எப்போது? எனக்கு 68 வயதாகிறது ஆதலால் இந்த கவலை, என்று சென்னையிலிருந்து முஸ்லிம் ஒருவர் கேட்கிறார். முஸ்லிம்கள் ஜோசியம் கேட்பதை பற்றி இறைவன் சொல்கிறான். “ஈமான் கொண் டோரே! மது பானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி (ஜோசியம்) கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்’ (அல்குர்ஆன் 5:90) ஜோசியம் கேட்பது அருவருக்கத்தக்க அசிங்கமான செயல். இதை கேட்பதை தவிர்த்துக் கொண்டால் வெற்றி என்கிறான் அல்லாஹ். வெற்றி என்பது இறைவனிடத்தில் அது சொர்க்கமாகும். சொர்க்கம் பெறாத ஒவ்வொரு முஸ்லிமும் நஷ்டவாளிதான்.
ஜோசியர்களுக்கு மறைவான விஷயம் தெரியுமா? என்றால், தெரியாது. மறைவான விஷயம் தன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்கிறான். அல்லாஹ் (பார்க்க அல்குர்ஆன் 6:59, 27:65) ஜோசியம் கேட்பதை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
“ஒருவன் ஜோசியரிடம் வந்து அவன் சொல்வதை நம்பினால், அவனது 40 நாள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது’. அறிவிப்பவர்: ஹப்ஸா(ரழி), நூல்: முஸ்லிம்
மற்றொரு ஹதீதில், ஜோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்புபவன் முஹம்மதின் மீது அருளப்பட்டதை (குர்ஆனை) நிச்சயம் நிராகரித்து விட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: இப்னு மாஜ்ஜா ஹதீத் எண். 639)
குர்ஆனை நிராகரிப்பது என்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சிந்தித்து பாருங்கள். ஜோசியம் பார்ப்பது கொடிய குற்றம் என்பதை உணர்ந்து, திருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கேட்டு திருந்திக் கொள்ளுங்கள்.
தினமணி இதழில் தன் எதிர்காலம் பற்றி ஒருவர் இரண்டு கேள்வி கேட்டு விட்டு, மூன்றாவது கேள்வியில் “நான் முஸ்லிம் என்பதால் பரிகாரம் செய்ய வேண்டு மானால் அதற்குத் தகுந்தாற்போல் சொல்லவும்” என்கிறார். குடும்பத்துடன் நாகூர் சென்று மகான் சாகுல் ஹமீது ஆண்டவரைத் தரிசித்து விட்டு புது வியாபாரத்தை ஆரம்பியுங்கள். அவரது கருணையினால் தொழில் விரைவில் அபிவிருத்தி அடையும்’ என்று பதில் சொல்லப்படுகிறது. முஸ்லிம் கள் அல்லாஹ்வை முழுமையாக நம்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி பல இடங்களில் சொல்கிறான் அல்லாஹ் (பார்க்க 3:122, 5:11, 10:84, 12:67, 39:38, 58:10, 64:13) இங்கே அல்லாஹ்வை மறுத்து அவுலியாவை நம்பச் சொல்லப்படுகிறது.
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத் தவிர(மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்’ (அல்குர்ஆன் 4:48,116) இணை வைப்பது பெரும் பாவம் என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் “பெரும் பாவங்களில் மிகப் பெரிய பாவத்தை உங்களுக்கு (எதுவென்று) அறிவித்துத் தரட்டுமா?’ என மும்முறை கூறிவிட்டு “அல்லாஹ்விற்கு இணை வைப்பது’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல் ரஹ்மான் பின் அபீபகரா (ரழி), நூல்: முஸ்லிம் 4651, திர்மிதி 1964.
மற்றொரு ஹதீதில் “அழிவை உண்டாக்கும் ஏழு விஷயங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு, இறைவனுக்கு இணை வைப்பதை தவிர்க்கச் சொல்கிறார்கள். அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம் 47
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! சுவனத்தையும், நரகத்தையும் கடமையாக்கி வைக்கக்கூடியது எது?’ எனக் கேட்டார். அல்லாஹ்விற்கு எதையும் இணை வைக்காது யார் இறப்பெய்தி விட்டாரோ அவர் சுவனம் புகுந்து விட்டார். அல்லாஹ்வுக்கு இணை வைத்து ஒருவர் இறந்து விட்டால் அவர் நரகம் புகுந்து விட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர்பின் அப்துல்லாஹ்(ரழி), நூல்:முஸ்லிம் 52
“என் உம்மத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காது இறப்பெய்தி விடுகிறாரோ அவருக்கு இன்ஷா அல்லாஹ் என் பரிந்துரை கிடைக்கும்’. அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்:முஸ்லிம்: 95
அற்பமான உலக வாழ்க்கைக்காக அழிவில்லாத மறுமை வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளத்தான் வேண்டுமா? சிந்தியுங்கள் முஸ்லிம்களே!
அல்லாஹ் நம்மை உற்றுநோக்கிய வனாக இருக்கிறான். நம்முடைய சொல்லும் செயலும் குர்ஆன், ஹதீத்படி இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மறுமை வாழ்ககை நமக்கு வெற்றியாக அமையும். இல்லையயனில் மறுமையில் மிகப்பெரிய நஷ்டம் நமக்கு காத்திருக்கிறது உஷார்! நாம் சிறப்பு மிக்க நடுநிலை சமுதாயம், உலக மக்களுக்கு சாட்சியாக நம்மை அல்லாஹ் நாளை கொண்டு வரபோகிறான். நம் செயல்கள் மூலம் நம்மை சிறப்பாக்கி கொள்கிறோம். இம்மார்க்கத்தில் விலக்கப்பட்டவையும், அனுமதிக்கப்பட்ட வையும் மிகத் தெளிவாக தன் திருமறையில் இறைவன் கூறுகிறான். அவற்றை அறிந்து, அதன்படி நடந்து மற்றவர்களையும் அதன்படி நடக்க வல்ல இறைவனை வேண்டுவோம். சிறப்புமிக்க நடுநிலைச் சமுதாயத் தின் தனித்தன்மையை நிலை நிறுத்த முஸ் லிம்களே முன்வாருங்கள்!
குறிப்பு : இந்தக் கட்டுரையை படிக்கும் சகோதரர்கள் குர்ஆன் ஹதீதை பக்கத்தில் வைத்துக் கொண்டு படிக்கவும், தமிழாக்கம் செய்யப்பட்டு இதுவரை வெளிவந்துள்ள ஹதீத்களிலிருந்து ஆதாரம், ஹதீத் எண் தந்துள்ளோம். அவற்றை சரிபார்த்து விளங்கி பின்பற்ற வேண்டுகிறோம். இப்படி நாம் செய்தால்தான் குர்ஆன், ஹதீதோடு தொடர்பு இன்னும் அதிகமாகும், ஆர்வம் ஏற்படும்.