படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை!
சரஹ் அலி
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
மறைமுக தர்மமே மேலானது :
நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே, அவற்றை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது இன்னும் உங்களுக்கு சிறந்தது.
தர்மங்களால் இறைவன் உங்கள் தீமைகளை அழித்துவிடுவான். நீங்கள் செய்கின்றவற்றை ஏக இறைவன் நன்கறிந்தவன் ஆவான். (இறைநூல்: 2:271)
“உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இல்லை. அது நற்பேரற்றதா? அல்லது நற்பேறு பெற்றதா? என்று எழுதப்பட்டிராமல் இல்லை என்று சொன்னார்கள்”.
அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் தலை எழுத்தின் (விதியின்) மீது பாரத்தைப் போட்டுவிட்டு இருந்துவிட மாட்டோமா என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், யார் விதியில் நற்பேறு அற்றவராக இருக்கிறாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார் என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள், நீங்கள் செயலாற்றுங்கள் நல்லவர், கெட்டவர், எல்லோருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும் என்று கூறினார்கள். பிறகு,
நிச்சயமாக உங்கள் முயற்சி பலதரப்பட்டதாகும் :
யார் (பிறருக்கு தான தர்மம்) வழங்கி (இறைவனை) அஞ்சி நடந்தாரோ, மேலும், நல்லறங்களை உண்மைபடுத்தினாரோ, அவருக்கு நன்மை(யின் வழி)யை நாம் எளிதாக்குவோம். யார் கருமித்தனம் செய்து, (தன்னை) தன்னிறைவு பெற்றவனாக கருதினாரோ, மேலும், நல்லறங்களை நம்ப மறுத்தாரோ, அவருக்கு தீமை(யின்வழி)யை எளிதாக்குவோம். அவர் விழும்போது அவரது செல்வம் அவரைக் காப்பாற்றப்போவதில்லை. (அல்குர்ஆன் : 92:4-11) என்ற இறை வசனங்களை ஓதிக் காட்டினார்கள். (முஸ்லிம் : 5150)
இறை திருப்திக்காகத் தர்மம் செய்தல்:
நீங்கள் எந்த நல்ல பொருளை இறைவழியில் செலவு செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாக அமையும். அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவே அன்றி வேறு எதற்காகவும் நீங்கள் செலவு செய்யாதீர்கள். எந்த நல்ல பொருளை இறைவழியில் நீங்கள் செலவிட்டாலும் அதன் பலனானது உங்களுக்கே நிறைவாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். (இறைநூல்: 2:272)
தர்மத்திற்குத் தகுதியுடையோர்:
(பொருளீட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள முடியாதவாறு அல்லாஹ்வின் வழியில் ஈடுபடுத்தப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள் சாரும்) (அவர்களைப் பற்றி) அறியாதவர், அவர்களின் தன்னடக்கத்தால் அவர்களைச் செல்வர்கள் என்றே எண்ணுவர். அவர்களின் (எளிமையான) தோற்றத்தை வைத்து அவர்களை நீர் அறிந்து கொள்வீர். மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்கமாட்டார்கள். எந்த நல்ல பொருளை (இறை வழியில்) நீங்கள் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் அறிவான். (இறைநூல் : 2:273)
மக்களிடம் எதனையும் யாசகம் கேட்கமாட்டேன் என எனக்கு உத்திரவாதம் தருபவர் யார்? அவருக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என இறைதூதர் முகம்மது (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஸவ்பான்(ரழி) சுனன் அபூதாவூத் : 1400.
எவர் ஒருவர் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதை போதுமெனக் கருதினாரோ அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார் என இறைதூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் அமர் பின் அல்ஆஸ்(ரழி), முஸ்லிம்: 1903.
உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும், உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக் கூடியதும், தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது” என்று இறைதூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் சொன்னார்கள். இப்னு உமர் (ரழி), புகாரி: 1429
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உயிர் யாருடைய கைவசமிருக் கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி அதைத் தம் முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதை விடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம், மறுக்கவும் செய்யலாம். அபூஹுரைரா(ரழி), புகாரி: 470
இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். அபூஹுரைரா(ரழி), முஸ்லிம் : 1898
புகழுக்காகத் தர்மம் செய்யாதீர்!
கனிவான சொல்லும், மன்னிப்பும் தர்மம் செய்துவிட்டுப் பின்னர் புண்படுத்துவதை விடச் சிறந்ததாகும். அல்லாஹ் தேவையற்றவனும், சகிப்புத்தன்மையுடையவனும் ஆவான். (இறைநூல்: 2:263)
தமக்குத் தேவை இருந்தும் பிறருக்கு இவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள் யார், தம் உள்ளத்தின் உலோபித்தனத்தில் இருந்து காக்கப்பட்டுவிட்டார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவர். (இறைநூல்:59:9)
மனிதர்கள் நன்மைக்கு அவசரப்படுவதைப் போன்று(அவர்கள் பிரார்த்திக்கும்) தீமைக்கு அல்லாஹ் அவசரப்பட்டால், அவர்களின் ஆயூள் என்றோ முடிக்கப்பட்டிருக்கும். யார் (இறுதி விசாரணை நாளில்) நம்மைச் சந்திப்பதை நம்பவில்லையோ அவர்களை, அவர்களின் சட்டவிரோதச் செயல்களில் உழலும்படி நாம் விட்டுவிடுவோம். (இறைநூல் : 10:11)
உங்களுக்கு எதிராகவோ, உங்கள் குழந்தைகளுக்கு எதிராகவோ உங்கள் செல்வங்களுக்கு எதிராகவோ நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
ஏக இறைவனிடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது (தற்செயலாக) அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான். அது உங்களுக்கு பாதகமாக (எதிராக) அமைந்துவிடும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். (ஜாபிர்(ரழி), 5736)
மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போன்றே (சில சமயம்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான். (இறைநூல்:17:11)
அல்லாஹும் மக்பிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வர்ஜுக்னீ.
இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு கருணை காட்டுவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக! என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். முஸ்லிம் : 5229
நெருக்கடி நேரத்தில் பிரார்த்திக்கும் மனிதன்:
மனிதனுக்குத் துன்பம் நேரும்போது ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு அல்லது அமர்ந்து கொண்டு அல்லது நின்றுகொண்டு (உதவி கேட்டு) நம்மை அவன் அழைக்கிறான். அவனுக்கு நேர்ந்த துன்பத்தை அவனை விட்டு நாம் அகற்றினால், தனக்குத் துன்பம் நேர்ந்தபோது (உதவி கேட்டு) நம்மை அழைக்காதவன் போன்று அவன் நடந்து செல்கிறான். (இறைநூல்: 10:12)
“தீங்கு அவனைத் தீண்டும்போது மிக அகலமான பிரார்த்தனையில் அவன் ஈடுபடுகின்றான்” (இறைநூல் 41:51)