படைத்தவனை மறந்துவிட்ட முஸ்லிம் சமுதாயம்!
அல்லாஹ்வின் வாக்குறுதிகள் பாரீர்!
“நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் நீங்கள்தான் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்!” ஆல இம்ரான் 3:139
“உங்களில் எவர் விசுவாசம் கொண்டு நற் செயல்கள் புரிகிறார்களோ அவர்களை அவர்க ளுக்கு முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காகப் பொருத்திக் கொண்ட மார்க்க்ததில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; அவர்கள் என்னோடு (எவரையும்) இணை வைக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னர் எவர் மாறு செய்கிறாரோ அவர்கள் பாவிகள் தாம்” அந்நூர்: 24:55
“… விசுவாசிகளுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்”. அர்ரூம் 30:47
“… விசுவாசிகளைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்” யூனூஸ் 10:103
“நிச்சயமாக அல்லாஹ் விசுவாசம் கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்கிறான்….” அல்ஹஜ் 22:38
(மேலும் பார்க்க அல்பகரா 2:247, ஆல இம்ரான் 3:26, அல்ஸஃப்ஃபு 61:13)
அல்லாஹ் வாக்குறுதி மாறாதவன்!
“அல்லாஹ் தன்னுடைய தூதருக்களித்த வாக்குறுதிகளில் தவறி விடுவான் என்று நீங்கள் ஒருபோதும் எண்ணவேண்டாம்.” இப்ராஹீம் 14:47
“…அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது…” யூனூஸ் 10:4
“…. அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது…” லுக்மான் 31:9
“… அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது…” அல்அன்ஆம் 6:34
“உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும், நியாயத்தாலும் முழுமையாகி விட்டது. அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை….” அல்அன்ஆம் 6:115
தன்னுடைய வாக்குறுதிகளில் அணுவளவும் மாறாத அல்லாஹ் விசுவாசிகளின் உன்னத நிலை பற்றியும், ஆட்சி அதிகாரம் கொடுப்பது பற்றியும், அவர்களைக் காப்பாற் றுவது மற்றும் உதவி புரிதல் பற்றியும் இந்த அளவு வாக்குறுதிகள் அளித்திருந்தும், இன்று முஸ்லிம் சமுதாயம் வீழ்ச்சியின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடப்பது ஏன்? ஒட்டு மொத்த மீடியாக்களும் முஸ்லிம் சமுதாயத்தையும், இஸ்லாத்தையும் இழித்தும் பழித்தும் செய்திகளை ஓயாது பரப்புவது ஏன்? அதற்குரிய காரணத்தைப் பாரீர்!
“தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தான்; எனினும் பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கிறான்”. அஷ்ஷீறா 42:30
“அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினைகளின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்?”
அன்னிஸா 4:62
“உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” அல்ஹஜ் 22:10
இப்போது முஸ்லிம்கள் தங்கள் கைகளால் அவர்களே தேடிக் கொண்ட துன்பங்களையே அனுபவிக்கின்றனர். இத்துன்பங்களிலிருந்து விடுதலை பெற வழி இல்லையா? நிச்சயம் இருக்கிறது. அந்தத் துன்பங்களை அல்லாஹ்தான் நீக்க வேண்டும். இதோ அல்லாஹ் கூறுகிறான்; கவனமாகக் கேளுங்கள்.
“(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவ தொரு துன்பத்தை ஏற்படுத்தி விட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கி விட்டால் (அதை எவரும் தடுக்க முடியாது)…” அல்அன்ஆம் 6:17
“அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை…” யூனூஸ் 10:107
துன்பங்களும், துயரங்களும் தொடர்ந்து முஸ்லிம் சமுதாயத்தைத் தீண்டி வருவதற்குக் காரணம் என்ன? மேலே எடுத்தெழுதியுள்ள அல்குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்ப்ப வர்கள் இன்றைய முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் உண்மை விசுவாசிகளாக இல்லை என்ற முடிவுக்கே வரமுடியும்.
அதையும் அல்லாஹ் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான் பாருங்கள் :
“மேலும் அவர்கள் இணை வைப்பவர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்வதில்லை” யூஸூஃப் 12:106
இன்றைய முஸ்லிம் சமுதாயத்தை ஆழ்ந்து நோக்குங்கள். அல்லாஹ் இங்கு கூறியிருப்பது முற்றிலும் உண்மை என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்கும்.
\அல்லாஹ் அல்குர்ஆன் ஆல இம்ரான் 3:103 இறைக்கட்டளையில் அல்லாஹ்வின் கயிரான அல்குர்ஆனைப் பற்றிப் பிடிக்கக் கட்டளையிடுகிறான். பிரிந்து விடக்கூடாது என்றும் எச்சரிக்கிறான். அதற்கு மாறாக இன்றைய முஸ்லிம்கள் அல்குர்ஆனைப் பற்றிப் பிடிப்பதை விட்டு விட்டு மத்ஹபுகளின் பெயராலும், இயக்கங்களின் பெயராலும் புரோகித மவ்லவிகள் பின்னால் செல்கிறார்கள். அல்லாஹ் அல்குர்ஆன் அத்தவ்பா 9:31ல் கிறிஸ்தவர்கள் தங்களின் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் ரப்புகளாக ஆக்கிக் கொண்டு வழிகெட்டுச் செல்கிறார்கள் என்று கடுமையாக எச்சரித்திருப்பது போல், முஸ்லிம்கள் இந்த புரோகித மவ்லவிகளை தங்களின் ரப்புகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பேச்சை வேதவாக்காகக் கொண்டு செயல்படுகின்றனர்.
தர்கா சடங்குகள் செய்வோர் தர்கா புரோகித மவ்லவிகளையும், தரீக்காவில் மூழ்கி இருப்போர் தரீக்கா புரோகித மவ்லவிகளையும், மத்ஹபிலுள்ளோர் மத்ஹபு புரோகித மவ்லவிகளையும், அஹ்ல ஹதீத் என்போர் அஹ்ல ஹதீத் புரோகித மவ்லவி களையும், இயக்கங்களிலுள்ளோர் இயக்க புரோகித மவ்லவிகளையும், தவ்ஹீத்வாதி என பீற்றுவோர் தவ்ஹீத் புரோகித மவ்லவிகளையும், ஸலஃபிகள் என்போர் ஸலஃபி புரோகித மவ்லவிகளையும் தங்களின் ரப்புகளாக்கிக் கொண்டு அவர்கள் சொல்லுவது அவர்களது மனோ இச்சைக்கு ஏற்ப இருப்பதால், அவற்றை வேதவாக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். மற்றபடி நடு நிலையோடு, தன்னம்பிக்கையோடு, சுய சிந்தனையோடு அல்குர்ஆன் வசனங்கள் -இறைவனின் வாக்குகள் தங்களுக்கும் விளங்கும் என்ற உறுதியுடன் 3:103ல் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் அல்குர் ஆனைப் பற்றிப் பிடிப்பதில்லை.
இங்கு நாம் புரோகிதர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மார்க்க சேவையை தங்களின் கடமையான சேவையாகக் கொள்ளாமல், தொண்டை தொண்டாகக் கொள்ளாமல் அதைத் தொழிலாக – வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பவர்களையே, அல்குர்ஆன் யாஸீன் 36:21 இறைவாக்கு மார்க்க சேவைக்கு கூலி வாங்குகிறவர்கள் நேர்வழியில் இல்லை என்று உறுதிபடச் சொல்வதாலேயே இந்தப் புரோகித மவ்லவிகள் நேர் வழியில் இல்லை என்று நாம் உறுதிபடக் கூறுகிறோம்.
அல்லாஹ்வே அவர்கள் நேர்வழியில் இல்லை என அறுதியிட்டு உறுதியாகக் கூறும் போது, அவர்கள் எப்படி இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட முடியும்? ஒருபோதும் காட்ட முடியாது. எனவே முஸ்லிம்கள் அவர்களின் சுயநல, மாய, வஸீகர, உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டால் அன்றி அவர்களுக்கு ஈடேற்றம் இல்லவே இல்லை.
இப்போது மார்க்கத்தைப் பிழைப்பா கக் கொள்ளாமல், தொண்டைத் தொழிலாகக் கொள்ளாமல், ஹலாலான வழியில் உழைத்து சம்பாதித்து அதன் மூலம் தாமும், தம்முடைய குடும்பமும் சாப்பிட்டுக் கொண்டு, அல்லாஹ்வுக்காக மறுமையில் கூலியை எதிர்பார்த்து மார்க்க சேவை செய்ய ஒருசில மவ்லவிகள் முன் வந்துள்ளனர். அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். அவர்களுக் காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். நாம், புரோகிதர்கள், புரோகிதர்கள் என்று தொடர்ந்து சாடி வருவது ஒருபோதும் அப்படிப்பட்டவர்களைக் குறிக்காது. மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டவர்கள், அதை ஆதரிப்பவர்களை மட்டுமே எமது விமர்சனங்கள் குறிக்கும்.
ஆக அந்நஜாத் முஸ்லிம் சமுதாயத்தை இந்தப் புரோகித மவ்லவிகளின் சுயநல, வசீகர, மாயாஜால உடும்புப் பிடியிலிருந்து விடுவித்து அவர்களுக்கு இறைவனது இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனுடன் நேரடித் தொடர்பு எற்படுத்தவே அரும்பாடுபட்டு வருகிறது. அந்நஜாத் தனது பணியின் கடுமையை, கல்லில் நார் உரிக்கும் வேலையின் சிரமத்தை உணர்ந்தே செயல்படுகிறது. இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் மக்கள் சமுதாயத்தை இந்தப் புரோகித வர்க்கத்தின் உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்கவே அரும்பாடுபட்டார்கள். அவர்கள் தங்கள் முயற்சியில் பெருங் கொண்ட மக்களை நேர்வழிக்குக் கொண்டு வரமுடியாமல் திணறினார்கள் என்பதே உண்மையாகும். பெருங்கொண்ட கூட்டத்தைச் சேர்க்க அவர்கள் எவ்வித தந்திரங்களையும் கையாளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை மறுமையில் ஒருசில நபிமார்கள் ஒரு சிலருடனும், வேறு சில நபிமார்கள் தன்னந்தனியாகவும் சுவர்க்கம் நுழைவார்கள் என ஹதீத்களில் காணப்படுகிறது.
ஆனால் அந்த நபிமார்களுக்கு அவர்களுக்கு முன்னால் இறக்கி அருளப்பட்ட வழிகாட்டி நூல் பாதுகாக்கப்பட்டிராததால் அவர்கள் நேர்வழியை அல்லாஹ்விடமிருந்தே “வஹீ’ மூலம் பெற வேண்டியிருந்தது. ஆனால் இறைவனின் இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால், நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் வேறு நபியோ, “வஹீ’ மூலம் நேர்வழியோ வர வேண்டிய தேவையே இல்லை.
இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆன் நேர்வழி காட்ட தாராளமாகப் போதும். அதற்கு இறுதி நபி கொடுத்த விளக்கங்கள் மேலும் உதவியாக இருக்கின்றன. இந்த இரண்டையும் பற்றிப் பிடித்து ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேர்வழி நடக்க முடியும். இந்தப் புரோகித முல்லாக்களின் உதவி அணுவளவும் தேவையில்லை. அவர் களுக்கு தூய இஸ்லாமிய மார்க்கத்தில் அணுவளவும் அதிகாரம் இல்லை என்பதே அப்பட்டமான உண்மையாகும். அவர்களுடைய சட்டங்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்பைக் குறியாகக் கொண்டதாகவே இருக்கும்.
“ஜகாத்’ பற்றி தவ்ஹீத் மவ்லவிகளின் “ஜகாத் ஓர் ஆய்வு’ இதை உண்மைப்படுத்துவதாக இருக்கிறது. இந்த இதழைப் படிப்பது கொண்டு அந்த உண்மையை நீங்களே விளங்கிக் கொள்வீர்கள். ஆக அந்நஜாத் மிகக் மிகக் கடுமையான ஒரு பணியே செய்து வருகிறது. கடந்த 1000 வருடங்களாக செய்யப்படாத ஒரு கடின பணியை மேற்கொண்டுள்ளது. அல்குர்ஆனின் ஆதார அடிப்படையிலேயே அப்பணியைச் செய்கிறது. அல்குர்ஆன் அதன் தூய வடிவில் பதிந்து பாதுகாக்கப்பட்டிருக் காவிட்டால்,, இந்த அசாத்தியத் துணிச்சல் அந்நஜாத்திற்கு ஒருபோதும் எற்பட்டிருக்காது.
அந்நஜாத்திற்குப் பெருங்கொண்ட ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் அந்நஜாத் இப்பணியைத் தொடரவில்லை. அல்குர்ஆனை பொருள் விளங்கிப் படித்து 75இடங்களில் பெரும்பான்மையினர் நரகத்திற்குரியவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அஸ்ஸஜ்தா 32:13 இறைவாக்கைப் படித்துப் பாருங்கள் :
“மேலும் நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும், மனிதர்களையும் கொண்டு நிரப்புவேன்’ என்று என்னிடமிருந்து முன்னரே வாக்கு வந்துள்ளது.”
இன்னொரு இடத்தில் அந்த வாக்கு நிச்சயம் நிறைவேறியே தீரும் என்று அல்லாஹ் உறுதி அளிக்கிறான்.
கடலில் முத்துக் குளித்து அம்பாரமாக எடுக்கும் எல்லா சிப்பிகளிலும் முத்து இருப்பதில்லை. ஒரு நாலு அல்லது ஐந்து “சிப்பிகளில் முத்து இருந்தால் அதுவே அனைத்து செலவுகளையும் ஈடுகட்டி இலாபத்தையும் பெற்றுத்தரும். அதுபோல் அந்நஜாத் முயற்சியால் விரல் விட்டு எண்ணும் ஒரு சிலர் நேர்வழி அடைந்தாலும் அது அந்நஜாத்திற்கும், அதன் வளர்ச்சிக்காகப் பொருளாலும், உடலாலும் உழைப்பவர்களுக்கும் பெருத்த லாபத்தை-நன்மையைப் பெற்றுத் தரும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.
இதற்கு மாறாக இவ்வுலக வாழ்வில் குறியாக இருக்கும் புரோகித மவ்லவிகள் பெருங்கூட்டத்தை எதிர்பார்ப்பதால், நரகில் போய் விழும் அந்தப் பெருங்கூட்டத்தை திருப்திப்படுத்த வழிகேட்டு போதனை களையே நேர்வழியாகப் போதிப்பார்கள். அதன் மூலம் ஆதாயம் அடைவார்கள். அருமைச் சகோதர, சகோதரிகளே அந்நஜாத்தின் இத்தூய கலப்படமில்லாத இஸ்லாத்தை நிலைநாட்டும் பணியை விளங்கியவர்கள்,அதன் அவசியத்தை உணர்ந்தவர்கள், அதன் வளர்ச்சிக்காக தாராளமாகப் பொருளுதவி அளிக்க வேண்டுகிறோம். மேலும் வருடா வருடம் தூய இஸ்லாத்தை புரோகிதர்களின் கலப்படமில்லாது அறிந்து செயல்படும் சகோதர, சகோதரிகளிடமிருந்து ஜகாத் தாகப் பெற்று ஜகாத் நிதியைப் பெறும் தகுதி பெற்றவர்களைக் கண்டறிந்து ஜகாத் பணத்தைக் கொடுத்து வருகிறோம். அந்த வகைக்கும், தாராளமாக அனுப்பித்தர வேண்டுகிறோம். சென்ற வருட வரவு, செலவு கணக்குகள் ஜகாத் மற்றும் சதக்கா பணம் அனுப்பிய சகோதர, சகோதரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. புனித ரமழான் இரவையும், பகலையும் நபிவழியில் உயிர்ப்பிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.