நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
ஜூன் மாத தொடர்ச்சி
“போர்க்களத்தில் ஒரு நபித்தோழரின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யப்பட்ட நபி(ஸல்) அவர்கள்”
“பத்ரில்’ களம் அமைப்பதற்காக அங்கிருந்த ஆரம்ப நீர் நிலைக்கு அருகில் நபி(ஸல்) அவர்கள் வந்திறங்கியபோது அப்பகுதியில் முகாமிட்டார்கள். அப்போது போர்த் தந்திரங்களை நன்கறிந்த வீரராகிய “ஹுபாப் பின் அல் முன்திர்(ரழி)அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இந்த இடத்தில் தாங்கள் தரித்தது அல்லாஹ்வின் உத்தரவா? அல்லது இது உங்கள் சார்பான யோசனையும் போர்த் தந் திரமுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது எனது ஒரு யோசனையும் போர்த் தந்திரமும் தான் என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதரே இது நாம் தங்குவதற்குரிய பொருத்தமான இடமல்ல, நீங்கள் மக்களை அழைத்துக்கொண்டு புறப்படுங்கள் நாம் முன்னோக்கிச் சென்று குறை´களுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று தங்குவோம். பின்பு மற்ற அனைத்து நீர் நிலைகளையும் நாம் அழித்து விடுவோம், மேலும் ஒரு நீர்த் தடாகத்தை ஏற்படுத்தி அதைத் தண்ணீரால் நிரப்பி விடுவோம் நாளை போர் நடக்கும்போது நாம் குடிப்பதற்கு மாத்திரம் தண்ணீர் இருக்கும் அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்காது என்று கூறினார்.
முன்திர்(ரழி) அவர்களது அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட நபி(ஸல்) அவர்கள் “நிச்சயமாக நீர் மிக நல்ல யோசனை கூறினீர்” என்றார்கள். பின்னர் அவர்கள் கூறியது போன்றே செய்யப்பட்டது. (தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர் 4:40, 41 ரஹூக் அல் மக்தூம் : 263, 264)
மக்கா வாழ்வில் “தனக்கும் மார்க்கத்திற்கும் முஸ்லீம்களுக்கும் உதவி செய்த நிராகரிப்பாளரான ஒருவரை பத்ர் களத்தில் வைத்து நினைவு கூர்ந்த நபி(ஸல்) அவர்கள்”
நபித்துவ மக்கா வாழ்வில் பெரிதும் ஆதரவாக இருந்த சிறிய தந்தை “அபூ தாலிப்” அவரது மரணத்திற்குப் பிறகு குறை´கள் கடுமையான வேதனைகளை நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அவர்களது தொல்லைகளைத் தாங்க முடியாதவர்களாக அங்கிருந்து துரத்தப் பட்டவர் போன்று மக்காவுக்கு மிக அருகிலுள்ள நகரமான தாயிபிற்கு தமது அடிமை “ஜைது இப்னு ஹாரிஸாவுடன்’ கால்நடையாகவே சென்றார்கள்.
ஆனாலும் தாயிபிலும் சொல்லொன்னா சிரமங்களுக்கும் மத்தியில் அங்கும் புறக்கணிக்கப்பட்டவர்களாக தமது ஊரை நோக்கி வந்தார்கள் எனினும் ஊருக்கு அண்மையில் வந்தபோது மக்காவிற்குள் நுழைய அஞ்சிய காரணத்தால் அருகிலுள்ள ஹிரா குகையில் தங்கிக் கொண்டு தனக்கு அடைக்கலம் தந்து பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக தூது அனுப்பினார்கள் பலர் மறுத்தாலும் அதில் “முத் இம் இப்னு அதீ’ என்பர் “ஆம்’ நான் அடைக்கலம் தருவேன் என்று கூறி உடனே தனது ஆயுதங்களை அணிந்து கொண்டு தனது ஆண் பிள்ளைகள் மற்றும் அவரது கூட்டத்தாரையும் ஆயுதம் அணியச் செய்து கஃபாவுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு நான்கு மூலைகளிலும் தனது ஆண் மக்களையும் தமது மற்ற ஆதரவாளர்களான ஆயததாரிகளையும் நிற்க வைத்து விட்டு நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்துவிட்டன் அதனால்தான் உங் களை இங்கு அழைத்து வந்தேன் என்று அவர்களுக்கு அறிவித்தார். பிறகு நபி (ஸல்) அவர்களை எல்லையிலிருந்து அழைத்துவர ஒருவரை அனுப்பினார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் ஜைது இப்னு ஹாரிஸாவுடன் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வந்தார்கள். “முத் இம் இப்னு அதீ’ தனது உயரமான ஒட்டகத்தின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு குறை´ஷகளே! நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன் உங்களில் எவரும் முஹம்மதை எந்த வழியிலும் நோவினை செய்யக் கூடாது என்று அறிவிப்புச் செய்தார். அதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்லத்தை முத்தமிட்டு விட்டுக் கஃபாவை வலம் வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டுத் தமது வீட்டிற்குச் சென்றார்கள்.
அதுவரையிலும் “முத்இம் இப்னு அதீ’ வும் அவரது மக்களும் மற்ற ஆதரவாளர்களும் ஆயுதமேந்திப் பாதுகாப்பிற்காக நபி (ஸல்) அவர்களைச் சுற்றிலும் நின்று கொண்டு இருந்தார்கள். (புகாரி: 4024, 3139, ஃபத்ஹுல் பாரீ, உம்ததுல் காரீ, ரஹீக் அல் மக்தூம். 169,170) இதனை நினைவு கூர்ந்த நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போரில் பிடி பட்ட கைதிகளைப் பற்றிப் பேசும் போது கூறினார்கள். முத்யிம் இப்னு அதீ அவர்கள் உயிரோடிருந்து, இந்த அசுத்தம் பிடித்தவர் களை (பிணைத் தொகை வாங்காமலே) விட்டு விடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால் நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டு விட்டிருப்பேன் என்றார். (ஜுபைர் இப்னு முத்யிம்(ரழி) புகாரி: 3139, 4024)