பொறுமை (சப்ர்)

in 2024 அக்டோபர்

பொறுமை (சப்ர்)

M. ரஹ்மத்துல்லாஹ்

மறுபதிப்பு :

1. காலத்தின் மீத சத்தியமாக,

2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலிருக்கிறான்.

3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு சாலிஹான(நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள்நஷ்டத்திலில்லை)  (அல்குர்ஆன் அல்கரீம் 103:1-3)

மேற்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் உணர்த்துவதைப்  பாருங்கள்.

நஷ்டத்திலில்லாதவர்களை பட்டியலிடுகின்றான்.

1.  ஈமானுடன் சாலிஹான நல்லமல்கள் செய்வது,

2.  (குர்ஆன், ஹதீத்) சத்தியத்தைக் கொண்டு உபதேசம் செய்வது,

3.  பொறுமையைக் கொண்டு உபதேசம் செய்வது.

மனிதன் மட்டும் இவைகளை சரியான முறையில் கடைபிடித்தால், உலக அமைதி என்ற கனவு நனவாகிவிடும். உலக அமைதிக்கான அடிப்படை விதிகளை காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகிறான். இம்மை, மறுமை ஈருலக நஷ்டங்களையும் தவிர்ப்பதற்கான சிறந்த முறையை தெளிவுறுத்துகின்றான்.

பொறுமைஇந்த குணம் வார்த்தையாகவே பெரும்பாலோரிடத்தில் உள்ளது: சொற்பமானவர் களிடமே இந்த குணத்தை காணுகிறோம். பொறுமை இறைவனிடத்திலிருந்து வருகின்ற ஓர் (ரஹ்மத்) அருள். பொறுமைக்கு எதிரான குணங்கள் உணர்ச்சி வசப்படுதல் அல்லது கோபம் இவை ஷைத்தானின்  புறத்திலிருந்து  வருவன.

கோபம்தான் பல இன்னல்களுக்கான விதைகள். இன்று நாட்டில் நடக்கும் திடீர்ச் சண்டைச் சச்சரவுகளுக்கு மூலக்காரணமே கோபம்தான். ஒரு கணம் பொறுமையுடன் சிந்தித்தால் மனிதன் இவைகளை தடுக்க முடியும்.

நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடுகின்றான். (புகாரி, முஸ்லிம்) என்பது நபிமொழி, இதற்குத்தான் கோபத்தை தடுக்க ஒரு கணம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட ரசூல்(ஸல்) கூறினார்கள். மேலும்ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுஎன்ற நாம் அறிந்த பழமொழியும் உண்டு. கோபத்தால் புத்தி பேதலித்து சிந்திக்காமல் செயல்பட்டு, பின்னர் வருந்தும்படியான சூழ்நிலைகளும் உருவாகி விடுகின்றன.

திடீரென சிந்திக்காமல் உணர்ச்சிவசப்படுவதால், பின்னர் வருத்தப்படுகின்றான். () எதையேனும் இழந்து விடுகின்றான். உதரணமாக ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து உணர்ச்சிவசப்படுபவன் சிந்திக்காமல் பலாத்காரத்திற்கு துணிந்து விடுகின்றான். பின்னர் வருந்துகின்றான். அல்லது தேர்விலோ, தன் குறிக்கோளிலோ தோல்வியடைபவன் ஒரு நிமிட முடிவில் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலைக்குத் துணிந்து விடும் சம்பவங்கள் நம்மைச் சுற்றி ஏராளமாக நடந்து கொண்டிருக்கின்றன. தன் மனங்களில் ஷைத்தானின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சிந்தனை தடை பட்டு உணர்ச்சி வசப்படுகின்றான். இதுவும் ஒரு வகை கோபத்தின் வெளிப்பாடுதான்.

இத்தகைய தீய செயல்களுக்குக் காரணம் அவர்களின் அந்த ஒரு நிமிட முடிவுதான். அந்த நிமிடம் பொறுமையாக கழித்துவிட்டால்  துன்பப்பட வேண்டிய அவசியமில்லை.

கோபத்தை தணிக்க, “உங்களில் ஒருவருக்கு தாம் நின்று கொண்டிருக்கும்போது கோபம் ஏற்பட்டால் உடனே உட்கார்ந்து கொள்வாராக! கோபம் அவரை விட்டும் நீங்கிவிட்டால் சரி; இல்லையேல், உடனே படுத்துக்கொள்வாராக‘, என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதர்(ரழி) திர்மிதி)

கோபம் மனிதனின் உணர்வுதான்; ஆனால் மாற்றமுடியாத ஒரு குணம் அல்ல. எல்லோருக்கும் பொறுமையும் இருப்பதில்லை. நம்மையும் மீறி, நாம் கோபப்படும் சந்தர்ப்பங்களும் வருகின்றன. அதையும் நாம் பொறுமை சாதித்து மாற்ற முயற்சிக்க வேண்டும். நாம் நம் குடும்பத்தாரிடம் ஆரம்பித்து வெளிமக்கள் தொடர்பு வரை சாந்தமாக பொறுமையுடன் பழக முயற்சிக்க வேண்டும்.

பொறுமையின் மற்றொரு பெயர் சகிப்புத்தன்மை என்றும் கூறலாம். நம் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் இந்த தன்மை தாராளமாக இருந்ததை வரலாறு மூலம் அறிகிறோம். எடுத்துக்காட்டாக நபி(ஸல்) அவர்களின் மீது தொடர்ந்து குப்பைக் கொட்டிய அந்த பெண்மணியைப் பற்றிய நிகழ்ச்சி நாம் அனைவரும் அறிந்ததே. அதை நபி(ஸல்) பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்.

மேலும் கூறினார்கள். “எவன் (தன் வாழ்வில்) துன்பங்கள் நேரும்போது அதை சகித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறானோ; அவனுக்கு அல்லாஹ் சகிப்புத்தன்மையை வழங்கி விடுகின்றான். (துன்பங்களை) சகித்துக் கொள்ளும் தன்மையை விட சிறந்த ஒரு அருட்கொடையை எவனும் பெற்றதில்லை‘. (அபூ சயீத் அல் குத்ரீ(ரழி) புகாரி, முஸ்லிம்)

பொறுமையுடன் சகித்துக் கொள்வது இறைவனின் மாபெரும் அருட்கொடையல்லவா? இந்த அருட்கொடையை நம் துஆவில் அன்றாடம் இறைவனிடம் கேட்டுப் பெற முயற்சி செய்வோமாக.

“(பயபக்தியுடையோர் எத்தகையோ ரென்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராக இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்‘. (அல்குர்ஆன் 3:134) கோபத்தை அடக்குபவர்களை அல்லாஹ் (ஜல்) நேசிக்கின்றான் என்பது இவ் வசனத்தின் மூலம் தெரிகிறது. கோபத்தை அடக்க பொறுமைதான் வேண்டும். மேலும், “நம்பிக்கையுடையோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களிடம் இருக்கின்றான்‘. (அல்குர்ஆன் 2:152)

எத்தகைய சூழ்நிலையையும் பொறுமையுடன் நாம் அணுகினால் நிச்சயமாக அல்லாஹ் வெற்றி தருவான். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருப்பதாக உறுதி கூறும் வேளையில் நிச்சயமாக பொறுமையுடையோருக்கு உதவியும் செய்பவனல்லவா? ஆதலால், இறைவா! நாங்கள் கோபப்படும் சந்தர்ப்பங்களில் கூட ஷைத்தானை விரட்டி உன் புறத்திலிருந்து வரும் அருட்கொடையான பொறுமையை ஆண், பெண் முஸ்லிம்களான எங்கள் அனைவருக்கும்  தந்தருள்வாயாக.  ஆமீன்!

Previous post:

Next post: