ஹதீத்கள் பற்றிய ஒரு விளக்கம்…

in 2024 அக்டோபர்

ஹதீத்கள் பற்றிய ஒரு விளக்கம்

அபூ அப்தில்லாஹ்

மறுபதிப்பு :

குர்ஆனுடைய வழக்கிலும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறை வழக்கிலும்ஹதீத்என்ற பதம் புழக்கத்திலிருப்பதையே நம்மால் அறியமுடிகிறது. அல்குர்ஆனில்ஹதீத்என்று 18 இடங்களிலும்ஹதீஸன்என்று 5 இடங்களிலும்அஹாதீஸ்என்று பன்மையில் 5 இடங்களிலும் வந்துள்ளது. அவற்றை ஆராயும்போது விசயம் (4:42, 78, 77:80, 4:140, 79:15, 8:68, 7:185) வேத அறிவிப்பு (18:6, 39:23) வரலாறு 51:24, 20:9 (வீணான) பேச்சு (31:6) (சாதாரண) பேச்சு (33:53) செய்தி (45:6, 52:34, 53:59, 56:81, 68:44, 85:17, 88:1, 66:3) சொல் (4:87) (இட்டுக்கட்டப்பட்ட) செய்தி (12:111) கனவு (12:6,21,101) (பழங்)கதை (23:44, 34:19) இப்படி பல பொருள்களில் பயன்படுத்தப் பட்டுள்ளதை  அறிகிறோம்.

பதிந்து பாதுகாக்கப்படாமல் வாய்வழிச் செய்தியாக தலைமுறை தலைமுறையாக வரும் செய்திகளும்ஹதீத்என்றே கூறப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. இறைநூலை ஆராயும்போது மிகமிக ஆரம்பகால இறைநூல்கள் எழுத்து வடி வைப் பெறாமல் வாய்வழிச் செய்தியாகவே தலைமுறை தலைமுறையாக மக்களி டையே நடைமுறையில் இருந்திருக்க முடியும்; செயல்படுத்தப்பட்டிருக்க முடியும். தெளராத், இன்ஜீல் போன்ற இறைநூல்கள் உடனுக்குடன் பதிவு செய்து பாதுகாக்கப்படாவிட்டாலும் சில தலைமுறைகள் வாய் வழிச் செய்தியாக மக்களிடையே நடைமுறையில் இருந்து, பின்னர் பதிவைப் பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. அதாவது எழுத்து வடிவைப் பெற்றுள்ளன. ஆனால் இறுதி நெறிநூல் அல்குர்ஆனுக்குப் பிறகு வேறு நபியோ, நெறிநூலோ இல்லாததால், உலகம் அழியும் வரை எவ்வித இடைச் செருகலுக்கும் ஆளாகாமல் அதன் பரிசுத்த நிலை பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதால், அது இறக்கப்பட்டவுடன் சுடச்சுட உடனடியாகப் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையும் விளங்கமுடிகிறது. அதே சமயம் இந்த குர்ஆன் வசனங்களுக்கு இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் 62:2, 16:44, 64 இறைக்கட்டளைப்படி விளக்கம் கொடுத்து வந்ததால் அந்த மேலதிக விளக்கங்களும் அல்குர்ஆனோடு, இன்ஜீல் நெறிநூலில் கலந்தது போல் கலந்துவிடாதிருக்க அவை உடனுக்குடன் பதிவு செய்து பாதுகாக்கப் படவில்லை என்பதையும் நம்மால் உணர முடிகிறது. அவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படாததால் அவற்றில் இடைச் செருகல்கள் மனிதக் கரங்கள் கொண்டு ஏற்பட்டுவிட்டன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆக நபி(ஸல்) அவர்களின் அல்குர் ஆனுக்கு மேலதிக விளக்கங்களான ஹதீத்களில் கலப்படங்கள் ஏற்பட்டுவிட்டன. அவற்றின் தூய்மையை இழந்துவிட்டன. எனவே அவற்றை நிராகரித்து விடலாம்  என்ற  வாதம்  தவறாகும்.

எப்படி முன்னய வேதங்கள் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படாததால் அவற்றில் மனிதக் கரங்கள் புகுந்து விளையாடிவிட்டன; அவற்றின் தூய நிலை மாசு பட்டுவிட்டது என்ற காரணத்தைச் சொல்லி அவற்றை அந்த சமூகங்கள் நிராகரிக்க முடியவில்லையோ, அவற்றில் அல்லாஹ்வால் இறக்கப்பட்டவற்றைக் கண்டறிந்து அவற்றை எடுத்து நடப்பது அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்ததோ அதேபோல், அல்குர்ஆனுக்கு நபி(ஸல்) அவர்களின் மேலதிக விளக்கங்களான ஹதீத்கள் உடனுக்கு டன் பதிந்து பாதுகாக்கப்படாத காரணத்தால் அவற்றில் இடைச்செருகல்கள் ஏற்பட்டுவிட்டன; அவை மாசுபடுத்தப்பட்டு விட்டன; எனவே அவற்றை எடுத்து நடக்கமுடியாது என்று கூறி நிராகரிக்க அல்குர்ஆன் முஸ்லிம்களை அனுமதிக்க வில்லை. அவற்றிலுள்ள மனிதக் கலப்படங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்கிவிட்டு, அவற்றிலுள்ள  ஆதாரப்பூர்வமான நடைமுறைகளை எடுத்து நடப்பது முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட கடமையாகும். எனவே ஆதாரபூர்வமான ஹதீத்களை நிராகரிப்பவன் அல்குர்ஆனையே நிராகரிக்கின்றான். எனவே தெளிவான வழிகேட்டில் அவன் செல்கிறான். அல்குர்ஆன் தெள்ளத் தெளிவானது; விளங்குவதற்கு எளிதானது என்று கூறும் அல்லாஹ்வே அந்த குர்ஆனை மக்களுக்கு விளக்கி செயல்படுத்திக் காட்ட நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆனை மக்களுக்குத் தெளிவுபடுத்தும்படி அல்குர்ஆனில்  கட்டளையும்  இட்டுள்ளான். 

இந்த நிலையில் நபியின் நடைமுறையை நிராகரிப்பது குஃப்ராகும். ஆக இப்படி ஹதீத்களைப் பற்றி பெரும்பாலான முஸ்லிம்கள் பெரும் தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றார். நபி(ஸல்) அவர்களது காலத்திற்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து புரோகித முல்லாக்களால் கற்பனை செய்யப்பட்டவையே ஹதீத்கள். எனவே அந்த ஹதீத்கள் தேவை இல்லை. குர்ஆன் மட்டும் போதும் என்று கூறும் சில கூட்டத்தினர்; இவர்களின் வாதம் வினோதமானது. திருகுர்ஆன் யாருக்கு இறக்கியதோ, யார் அந்த குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க உரிமை பெற்றுள்ளதாக அந்த குர்ஆனே கூறுகிறதோ அந்த இறுதி நபி(ஸல்) அவர்களின்  விளக்கத்தை  ஏற்கமாட்டோம். 

ஆனால் பின்னால் வந்த ரசத் கலீஃபா, டாக்டர் சகோதரர்கள், இன்னும் சிலர் குர்ஆனுக்குக் கூறும் சுய விளக்கத்தையே ஏற்போம் என்ற மடமை வாதத்தை வைப்பவர்கள். இப்படி நபி(ஸல்) அவர்களின் விளக்கத்தை விட்டு, சொந்த விளக்கமோ, அல்லது தாங்கள் மதிக்கும் மனிதர்களின் சுயவிளக்கமோ பெரிது என்று மதித்து நடக்கும் வீணர்கள். இவர்கள் வழிகேட்டின் வட துருவத்தில் இருக்கிறார்கள் என்றால், ஹதீத்கள் என்று கூறப்படும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட குப்பைகளை எல்லாம் வேத வாக்காகக் கொண்டு ச´ர்க், பித்அத்களில் மூழ்கி இருக்கும் பெருங்கூட்டம். இவர்கள் வழிகேட்டின் தென் துருவத்தில் இருக்கிறார்கள். இது அல்லாமல் ஆதாரபூர்வமான ஹதீத்கள் இருக்க அவை விட்டு சந்தேகத் திற்குரிய ஹதீத்களைப் பிடித்துத் தொங்கக் கூடிய புரோகிதர்களும் இருக்கிறார்கள். இவர்கள் வள்ளுவர் கூறுவது போல் கனி இருக்கக்  காயைத்  தேடி  உண்பவர்கள்.

ஆயினும் எப்படி முன்னைய நபிமார்களின் சமுதாயங்கள் தங்களின் நெறிநூல்களில் இடைச்செருகல்கள் காணப்பட்டாலும் அவற்றில் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதைக் கண்டறிந்து அவற்றை எடுத்து நடப்பது அவர்கள் மீது கடமையாக இருந்ததோ அதேபோல் நபி(ஸல்) அவர்களின் ஹதீத்களிலும் பல இடைச்செருகல்கள்  காணப்பட்டாலும் அவற்றில் நபி(ஸல்) அவர்களின் உண்மையான சொல், செயல், அங்கீகாரங்களைக் கண்டறிந்து அதன்படி நடப்பது நம்மீது கடமையாகும். ஆயினும் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ள அல்குர்ஆன் வசனங்களுக்கு இருக்கும் முழுமையான நம்பகத்தன்மை ஹதீத்களுக்கு இருப்பதாக நாம் சொல்ல முடியாது. ஆயினும் நபி(ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நடைமுறைகளான ஹதீத்கள் அல்குர்ஆனுக்கு அல்லாஹ்வின் கட்டளைப்படி, அல்லாஹ் வின் கண்காணிப்பில் இறுதி நபி கொடுத்த, அல்லாஹ்வால் முற்றிலும் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக விளக்கங்களாகும். இதை அல்குர்ஆனில் 62:2, 16:44,64, 53:2,3,4, 5:48, 52:48 ஆகிய இறைக் கட்டளைகளை முறைப்படி ஓதி விளங்குகிறவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

எனவே நாம் ஹதீத்களை அல்குர்ஆன் வசனங்களுடன் ஒத்துப் பார்த்து, அலசி ஆராய்ந்து அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைக்கு முரண் இல்லாதவர்களையே அல்குர்ஆனுக்கு மேலதிக விளக்கமாக உள்ள வைகளையே ஆதாரப்பூரவமான ஹதீத்களாக எடுக்க வேண்டும். ஆதாரப்பூர்வமான ஹதீத்களை தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவற்றை நடைமுறைப்படுத்தியதி லிருந்து அவை வாய் மொழியாக வந்து சில காலங்கள் கழித்து பதியப்பட்டு எழுத்து வடிவைப் பெற்றது வரை இடையில் வரும் வாய்வழி அறிவிப்பாளர்கள் யார்? யார்? அவர்களின் நம்பகத்தன்மை இவற்றை, அறிய வேண்டிய  அவசியம்  ஏற்படுகிறது. 

இவற்றை அக்காலத்தவர் தீர விசாரித்து விளங்கி தாங்கள் அறிந்தவற்றை எழுத்து வடிவில் பதிந்து வைத்திருப்பவற்றையே நாமும் அலச வேண்டியுள்ளது. இந்த ஆய்விற்கு அல்குர்ஆனையே நாம் அடிப்படையாகக் கொள்ள முடியும். குர்ஆனுடைய வழிகாட்டலுக்கு முரணாக இமாம்களுடைய ஏகோபித்த முடிவு (இஜ்மா) என்றோ இமாம்களின் அனுமானம் (கியாஸ்) என்றோ எதையும் ஆதாரமாக நாம் கொள்ள முடி யாது. அந்த அடிப்படையில்எதைப் பற்றி உமக்கு (த்தீர்க்க) ஞானமில்லையோ அதை (ச் செய்யத்) தொடர வேண்டாம்….” (17:36) என்ற இறைக்கட்டளைப்படி சந்தேகமானதைச் செயல்படுத்த முடியாது. சந்தேகத்தின் அடிப்படையில் விட்டுவிடுவதற்குக் காரணம் சொல்லப்பட வேண்டும் என்பதற்கு இதுவரை யாருமே குர்ஆன் ஆதாரம் தரவில்லை. ஹதீத்களை வல்லுநர் களின் ஏகோபித்த (இஜ்மா) முடிவு என்றே சொல்லி வருகின்றனர். குறைந்தபட்சம் ஹதீத்களை வல்லுநர்களின் ஏகோபித்த முடிவை (இஜ்மா) மார்க்கமாக ஏற்கலாம் என்பதற்காகவாவது குர்ஆன் ஆயத்தோ, ஹதீதோ தரவேண்டும். அதைவிட்டு தங்களின் யூகங்களை வண்டி வண்டியாக தருவது கொண்டு ஒன்றை மார்க்கமாக்க முடியாது.

மார்க்கத்தில் ஒன்றைச் செயல்படுத்த கட்டாயம் ஏற்பட்டு, அது சந்தேகத்திற்குரியதாக இருந்தால் நிச்சயமாக அதைச் செயல்படுத்தக் கூடாது; இதுதான் 17:36 கூறும் நேரடிக் கட்டளை. நாளை மறுமையில் நாம் அல்லாஹ்வுக்குப் பதில் சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறோமே அல்லாமல் ஹதீத்கலை வல்லுநர்களுக்கு அல்ல. உதாரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒன் றைச் செய்யாது விட்டுவிட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நாளை மறுமையில் அல்லாஹ் நம்மை விசாரிக்கும்போது, அந்தக் காரியத்தை ஏன் செய்யவில்லை? என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம். நாம் உடனடியாகயா அல்லாஹ் உனது கலாமின் 17:36ல் சந்தேகமானதைச் செய்ய வேண்டாம் என்று நீ கட்டளையிட்டுள்ளாய்; உனது கட்டளையைச் சிரமேற்கொண்டு நான் அக்காரியத்தைச் செய்யாமல் விட்டுவிட்டேன்என்று பதில் சொல்லுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது பற்றி அல்லாஹ் நம்மிடம் மீண்டும் கேள்வி கேட்க வழி இருக்கிறதா? இல்லையே?

அதற்கு மாறாக சந்தேகமானதை விட்டுவிட காரணம் சொல்லப்பட வேண்டும் என்ற ஹதீத்கலா வல்லுநர்களின் ஏகோ பித்த முடிவை (இஜ்மா) ஏற்று அக்காரியத்தை விட்டுவிடாமல் செய்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் நாளை மறுமையில் அல்லாஹ் நம்மை விசாரிக்கும் போது, அந்த சந்தேகத்திற்குரிய காரியத்தை ஏன் செய்தாய்? என்று கேட்கிறான் அல்லாஹ் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் எப்படி பதில்  சொல்வோம்? 

யா அல்லாஹ்! நீ சந்தேகமானதை விட்டு விடும்படிதான் 17:36ல் கட்டளையிட்டுள்ளாய்; ஆனால் ஹதீத்கலை வல்லுநர்கள் ஏகோபித்து(இஜ்மா) சந்தேகமானதை விட்டுவிட காரணம் சொல்லப்பட வேண்டும் என்று கூறியுள்ளதை ஆதாரமாக வைத்து அக்காரியத்தைச் செய்தேன்என்று பதில் சொல்லுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனடியாக ஹதீத்கலா வல்லுநர்களின் ஏகோபித்த (இஜ்மா) முடிவை ஏற்று நடக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளை விட்டிருக்கிறேனா? என்று அடுத்து அல்லாஹ் நம்மை மடக்கிக் கேட்க வழி இருக்கிறதா? இல்லையா? அப்படி அல்லாஹ் கேட்டால் நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்? விழி பிதுங்கி நிற்கவேண்டிய நிலை ஏற்படுமா? இல்லையா? இஜ்மா, கியாஸ் போன்ற தந்திரங்கள் எல்லாம் இந்த புரோகித முல் லாக்கள் மக்களை அல்லாஹ்வின் நேர்வழி யிலிருந்து வழிகேட்டிற்கு இட்டுச் செல்ல ஷைத்தானின் தூண்டுதலால் கற்பனை செய்தவையே  அல்லாமல்  வேறில்லை.

நமது எஜமானன் அல்லாஹ்; அவனே நமது அதிபதி; நாளை மறுமையில் விசாரணையின் அதிபதியும் அவன்தான். தீர்ப்பு அளிப்பவனும் அவனே என்பதை தங்களின் மனதில் இருத்திக் கொண்டவர்கள், அல்குர்ஆனிலுள்ள அவனது கட்டளைகளைப் பார்ப்பார்களா? அல்லது இமாம்களின் பெயரால், நாதாக்களின் பெயரால், மார்க்க மேதைகளின் பெயரால், நாடறிந்த அல்லா மாக்களின் பெயரால், இஜ்மாவின் பெயரால், கியாஸின் பெயரால் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணாகச் சொல்லப்படும் கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், மனித யூகங்களையும் ஏற்றுச் செயல்படுவார்களா? நிதானமாகச் சிந்தித்து விளங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அல்லாஹ்வின் கட்டளைகள் இக்காலத்திற்கும் பொருத்தமானவை அல்ல; மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்கிறார்கள். மக்களின் டேஸ்ட் வேறு விதமாக இருக்கிறது; அவர்களின் டேஸ்டுக்கு ஏற்ப மார்க்கம் சொல்லவேண்டும். அதுதான் அவர்களிடம் எடுபடும் என்ற சொந்தப் புத்தியில் செயல்படுகிறவர்களை ஒருபோதும் மார்க்க அறிஞர்களாக அல்லாஹ்  ஏற்கமாட்டான்.

முஸ்லிம்களை இரவும் பகலைப் போன்ற வெள்ளை வெளேர் என்ற நிலையில் அல்லாஹ்வின் வழிகாட்டலைக் கொண்டு அல்லாஹ்வின் இறுதி நபி(ஸல்) விட்டுச் சென்றிருக்க, மார்க்க அறிஞர்கள் என்போர் வீண், கற்பனைகளையும், மனித யூகங்களையும் கொண்டு வந்து மார்க்கத்தில் ஏன் நுழைக்கிறார்கள் என்றால், அவற்றைக் கொண்டுதான் அவர்களின் பிழைப்பை நடத்த வேண்டியுள்ளது. சந்தேகமான, பலவீனமான, இட்டுக்கட்டப் பட்ட ஹதீத்கள் இல்லை என்றால் இவர்களது பாடுபடு திண்டாட்டமாகி விடும். எனவே கபுரு வழிபாடு புரோகிதர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீத்களையும், மத்ஹபு புரோகிதர்கள் பலவீனமான ஹதீத்களையும், மத்ஹபு புரோகிதர்கள் சந்தேகமான ஹதீத்களையும் ஒருபோதும் விட்டொழிக்க முன்வரமாட்டார்கள். காரணம் அவை புரோகிதர்களின் ஜீவாதாரமாகும். இவை இல்லாமல் புரோகிதமில்லை.

இந்த புரோகிதர்களின் முன்னோர்கள் (ஆபாக்கள்) திட்டமிட்டு உருவாக்கிய வையே இப்பொய்ச் செய்திகளான பலவீனமான,  இட்டுக்கட்டப்பட்ட  ஹதீத்கள்.

அதனால்தான் குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுகிறவர்கள் இந்த புரோகிதர்களை மிகக் கடுமையாகச் சாடுவதோடு ஹதீத்களே தேவை இல்லை என்று வீம்பு பிடிக்கின்றனர். ஹதீத்கள் என்று பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பவை அனைத்தும் இந்தப் புரோகிதர்களின் கட்டுக் கதைகள், புருடாக்கள், கற்பனைகள் என்று கூறி சகட்டுமேனிக்கு ஹதீத்களை நிராகரிக்கின்றனர். ஆனால் குர்ஆனுடைய வெளிச்சத்தில் அவர்களின் கூற்று முற்றிலும் உண்மை அல்ல. இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான, சந்தேகத்திற்குரிய ஹதீத்கள் அல்லாமல் மிகமிக ஆதாரபூர்வமான ஹதீத்களும் உண்டு. அவற்றை நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் கண்டிப்பாக எடுத்து நடக்க வேண்டும் என்பதையே விளங்க முடிகிறது.

Previous post:

Next post: