ஹலாலும் – ஹராமும்!!

in 2024 அக்டோபர்

தலையங்கம் :

ஹலாலும்ஹராமும்!!

ஆதி மனிதனின் தேடுதல் அன்று உணவாக மட்டுமே இருந்தது. அவனுக்கு அன்று எது கிடைத்ததோ அதுவே போதுமானதாக இருந்தது. பின்பு நாகரிகமும், அறிவும், ஆற்றலும், விஞ்ஞான வளர்ச்சியும் வளர, வளர விதவிதமான உணவுகளை தேட ஆரம்பித்தான். இன்னும் தேடிக் கொண்டேயிருக்கின்றான்,  முடியவில்லை.

நாகரிக போதையில் மனிதனின் கண்டுபிடிப்புகளான பல்வேறு உணவுகள், பல்வேறு பெயரில் உலா வருகின்றது. அவற்றில் எது நல்லது? எது கெட்டது? என்று தெரியாத அளவிற்கு இப்போது  உணவுகளே  விசமாக  மாறி  வருகின்றது.

அதன்  விளைவு :

பல்வேறு நோய்கள் புதிது புதிதாக பல்வேறான பெயரில் வந்து கொண்டே இருக்கின்றன. நாகரிக உணவால் மருத்துவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனைகளின் எண்ணிக்கை யும், மருந்துக் கடைகளின் எண்ணிகையும் பெருகியுள்ளதே தவிர, அதாவது நோய்கள் குறையவில்லை. நாகரிக உணவால் நோய்கள் மட்டுமே வளர்ந்திருக்கிறது. ஆயினும் மருத்துவ துறையிலும், அறிவியலிலும் வளர்ச்சி அடைந்து விட்டதாக பெருமை பேசுகிறான்.

வழிகாட்டுதலின்றி மனிதனால் வாழமுடியாது என்பதால் இறை வழிகாட்டி நூலையும் (குர்ஆனையும்) இறைத்தூதரின் வழிகாட்டுதலையும் பின்பற்றினால் தான் எது நல்லது? எது கெட்டது என்பதை தெரிந்து கொள்ளமுடியும். 

அதாவது சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த உணவு முறைக்கும் சில உணவுகளைஹலால்என்றும் சில உணவுகளைஹராம்என்றும்  கூறியுள்ளான்.

எனவே,  

ஹலால் எவை?

ஹராம்கள் எவை? 

என்று தெரிந்துக் கொள்ளும் முன்பு ஹலால் மற்றும் ஹராம் என்றால் அதன் அர்த்தத்தை (தாய்மொழியில்) தெரிந்துக் கொண்டால் தான் அதனை விளங்கி செயல்படுத்த முடியும்.

ஹலால்என்றால், இறைவனால் அனுமதிக்கப்பட்டது மற்றும் தூய்மையானது என்பதாகும். அந்த இறைவனின் பெயர் கூறி இறைநூலிலும்/இறைத்தூதரும் வழிகாட்டியபடி அறுக்கப்பட்ட தூய்மையான இறைச்சி (உணவாகும்)  ஆகும்.

ஹராம்என்றால், இறைநூல் மூலம் தடை செய்யப்பட்டதும், தூய்மை அற்றதுமாகும்.

இறைநூல் (குர்ஆன்) ஹராமான பொருள்கள் எவை, எவை என தெளிவாக கூறியுள்ளது. அதுவே ஹலாலான பொருள்களைப் பற்றி கூறும்பொழுது தூய்மையாக பொருள்கள் யாவும் ஹலாலானவை என்று பொதுவாக  கூறியுள்ளது.

இறை நம்பிக்கையாளர்களே! (மூஃமின்களே) நீங்கள் இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்பவர்களாய் இருப்பின் நாம் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தூய்மையானவற்றைத் தாராளமாக உண்ணுங்கள். மேலும் இறைவனுக்கு நன்றியும் செலுத்துங்கள்” (அல்குர்ஆன் 2:172) என்று கூறிய இறைவன் ஹராமானவைகள் (தடை செய்யப்பட்ட/தூய்மையற்ற) பொருள்கள் எவைகள் எனவும் எனவும் தெளிவாக  கூறியுள்ளான்.

அவைகள் :

1. செத்த பிராணி (தானாக இறந்தது/அடிபட்டு  இறந்தது)

2.  இரத்தம்

3.  பன்றி  இறைச்சி

4.அந்த இறைவன் பெயர் கூறாது மற்றவர்களின் பெயர் கூறி அறுக்கப்பட்டவைகள் அனைத்தும்  ஹராமாகும்.

ஒருவர் சுகாதார முறைப்படி சுத்தம் செய்து ஒரு பிராணியை அந்த இறைவன் பெயரைச் சொல்லாமல் அறுத்தாலும் அது ஹலாலாகிவிடாது, இறைவன் அல்லாது வேறொருவரின் பெயரைச் சொல்லி அறுக்கின்றனர் என்றாலும் அது ஹலாலாகி விடாது.

மேலும் ஹலால்ஹராம் என்ற சொல்லை  மொழி பெயர்த்து அதன் பொருளை அறிந்திராத காரணத்தால் தவறான புரிதல், பிரச்சனைகள்  ஏற்படுகிறது.

அது (ஹலால்ஹராம்) முஸ்லிம்களுக்காக கூறப்பட்டது என்று பெரும்பாலோர் நினைக்கின்றார்கள். ஆனால் உண்மை  என்னவென்றால் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் உடல் நலனைப் பேண கூறப்பட்ட  இறைவசனமாகும்.

எனவே ஹலால் என்றால் அந்த இறைவன் பெயர் கூறி இறைத்தூதர் வழிகாட்டுதல்படி அறுக்கப்பட்டு (ஆடு, மாடு, ஒட்டகம், கோழி) நோய் கிருமிகள் உள்ள இரத்தம் வெளியேற்றப் பட்ட தூய்மையான இறைச்சியாகும். அத்தகைய இறைச்சி மட்டுமே இங்கு பயன்படுத்தப் படுகிறது என்பது தான் அதன் முழு பொருளாகும்.

மேற்கண்ட இத்தகைய விளக்கத்தை முஸ்லிம் மார்க்க அறிஞர்களும், முஸ்லிம் சமுதாய இதழ்களும் தெளிவாக விளக்கத்தை மக்களிடையே கூறாததால் அது (ஹலால்ஹராம்) ஏதோ அரபி மந்திரச் சொல்லான மாற்று மத சகோதரர்கள் பெரும்பாலோர்  நினைக்கின்றனர்.

எனவே எங்கெல்லாம்ஹலால்உணவு என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதோ அத்தகைய உணவகங்களில் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு பலகை வைப்பதால் அனைத்து மதத்தினருக்கும் அதன் தமிழ் பொருள் முழுமையாக புரிந்துகொள்ளவும் வாய்ப்பாக  இருக்கும்.

அந்த ஒரே இறைவனின் பெயர் கூறி அறுக்கப்பட்ட நோய் கிருமிகள் உள்ள இரத்தம் வெளியேற்றப்பட்ட தூய்மையான இறைச்சி இங்கு பயன்படுத்தப்படுகிறது

Previous post: