அநீதி இழைப்பவர்களுக்கும், நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும் இறையருள் தூரமே!

in 2024 டிசம்பர்

அநீதி இழைப்பவர்களுக்கும், நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும் இறையருள் தூரமே!

S.H. அப்துர் ரஹ்மான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவன் பெயரால்

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.

(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.

வீணானதைப்  புறக்கணிப்பார்கள்.

கொடுத்து தூய்மை செய்வதை நிறை வேற்றுவார்கள்.

தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர்  அல்லர்.

இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே  வரம்பு  மீறியவர்கள்.

தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.

மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள்.

உயர்ந்த சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக  இருப்பார்கள்.

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.

பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். 

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அந்த இறைவன்  பாக்கியசாலியாவான்.

இதன்  பிறகு  நீங்கள்  மரணிப்பவர்கள்.

பின்னர் விசாரணை நாளில் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்.

உங்களுக்கு மேலே ஏழு வழிகளைப் படைத்துள்ளோம். இப்படைப்பு பற்றி நாம் கவனமற்று  இருக்கவில்லை.

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

அதன் மூலம் பேரீச்சை, மற்றும் திராட்சைத் தோட்டங்களை உங்களுக்காக உருவாக்கினோம். அவற்றில் ஏராளமான கனிகள் உங்களுக்கு உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்.

தூர்ஸினாயிலிருந்து வெளிப்படும் ஒரு மரத்தையும் (படைத்தோம்) அது எண்ணெயையும், உண்பவருக்கு குழம்பையும் முளைக்கச் செய்கிறது.

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன.  அவற்றை  உண்ணுகின்றீர்கள்.

அவற்றின் மீதும், கப்பலின் மீதும் சுமக்கப்படுகிறீர்கள்.

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப் பினோம். அவர்என் சமுதாயமே! அந்த இறைவனை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா? என்று கேட்டார்.”

அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள்இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அந்த இறைவனை நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லைஎன்றனர்.

இவர் ஒரு பைத்திரயக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்” (என்றனர்). 

என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!”  என்று அவர் கூறினார்.   

நமது மேற்பார்வையிலும் நமது அறிவிப் பின்படியும், கப்பலைச் செய்வீராக! நமது உத்தரவு வந்து தண்ணீர் பொங்க ஆரம்பித்தால் ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், யாருக்கு எதிராகக் கட்டளை முந்தி விட்டதோ அவர்களைத் தவிர ஏனைய உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக்கொள்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார் கள்  என்று  அவருக்கு  அறிவித்தோம்.

நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும்அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அந்த இறைவனுக்கு புகழனைத்தும்எனக் கூறுவீராக!

என் இறைவா பாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாக! தங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன்என்று கூறுவீராக!

இதில் பல சான்றுகள் உள்ளன. நாம் சோதிப்பவர்களாவோம்.

அவர்களுக்குப் பின் மற்றொரு தலை முறையை உருவாக்கினோம்.

அந்த இறைவனை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?” என்று (எச்சரிக்க) அவர்களிலிருந்தே  அவர்களுக்குத் தூதரை அனுப்பினோம்.

இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்து வதையே இவரும் அருந்துகிறார்  என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறை வனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யயனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கி னோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நீங்கள் நஷ்டமடைந் தவர்கள்.

நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும் புகளாகவும், ஆகிவிடும்போது உயிர்ப்பிக் கப்படுவீர்கள்என்று உங்களுக்கு எச்சரிக்கிறாரா?

நடக்காது! உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடக்காது.

நமது இவ்வுலக வாழ்க்கை தவிர வேறு இல்லை. வாழ்கிறோம், மரணிக்கிறோம் நாம்  உயிர்ப்பிக்கப்படுவோர்  அல்லர்.

இவர் அந்த இறைவனின் மீது இட்டுக் கட்டிய மனிதரைத் தவிர வேறு இல்லை. நாங்கள் இவரை நம்புவோராக இல்லை (என்றனர்).

என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!”  என்று அவர் கூறினார். 

சிறிது காலத்தில் அவர்கள் கவலைப் படுவோராக ஆவார்கள்என்று (இறைவன்) கூறினான்.

உண்மையாகவே அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. உடனே அவர்களைக் கூளங்களாக ஆக்கினோம். அநீதி இழைத்த கூட்டத்தினருக்கு (இறையருள்) தூரமே!

அவர்களுக்குப் பின்னர் வேறு பல தலை முறையினரை உருவாக்கினோம்.

எந்தச் சமுதாயமும் தன்னுடைய காலக்கெடுவை முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

பின்னர் நமது தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அதன் தூதர் வந்தபோது அவரைப் பொய்யரெனக் கருதினர். ஆகவே அவர்களில் சிலருக்குப் பின் வேறு சிலரைத் தொடரச் செய்தோம். அவர்களைப் பழங்கதைகளாக ஆக்கினோம். நம்பிக்கை கொள்ளாத கூட்டத்திற்கு (இறையருள்) தூரமே!  (23:1-44)

Previous post:

Next post: