ஆதாரப்பூர்வமான
ஹதீஃத்களை நிராகரிப்பது குர்ஆனையே நிராகரிப்பதாகும்!
அபூ அப்தில்லாஹ்
மறு பதிப்பு :
மனித சமுதாயம் ஆரம்பத்திலிருந்தே செய்து வரும் மாபெரும் குற்றச்செயல், அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இணை, துணை, மனைவி, மக்கள், தேவை எதுவுமே இல்லாத தன்னந்தனியனான ஏகன் இறைவனுக்குப் படைப்பினங்களை இணையாக்கும். (´ர்க்) கொடிய செயலாகும். இப்பெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்று அல்குர்ஆன் 4:48,116 ஆகிய இரு இடங்களில் திட்டமாகக் கூறிக் கடுமையாக எச்சரிக்கிறான். இணை வைப்பது (´ர்க்) என்றால் அல்லாஹ்வுடன் மலக்குகள், ஜின்கள், மனிதர்கள், இதர படைப்பினங்களில் யாரையும், எதையும் இணை, துணை தெய்வங்களாகக் கொள்வது மட்டுமே என்றே பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 2:186, 7:3, 9:31, 18:102-106 இறைவாக்குகள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் ஸலஃபிகள், இமாம்கள், அவுலியாக்கள், சாதாத்துகள், அகாபிரீன்கள் என இடைத்தரகர்களை, அதாவது இப்படிப்பட்டவர்கள் விளக்கியதையே எடுத்து நடக்க வேண்டும் என்று நம்பிச் செயல்படுவதும் இறைவனுக்கு இணை வைக்கும் மிகக் கொடிய செயலே என்பதை விளங்காமலேயே 99.9% முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த வேதனைக்குரிய செயலாகும்.
அல்லாஹ் மன்னிக்காத இந்தப் பெருத்த வழிகேடு, நபி(ஸல்) அவர்கள் மறைந்த மிகக் குறுகிய காலத்திலேயே இறுதி உம்மத்தான இந்த முஸ்லிம் சமுதாயத்தினுள்ளும் நுழைந்து விட்டது. இதோ படித்துப் பாருங்கள்.
ஷாஹ் வலியுல்லாஹ்வின் ஹுஜ்ஜதுல் லாஹில் பாலிகா பக்கம் 155ல் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் வேதனை உங்கள் மீது உண்டாகும் என்ற அச்சம் உங்களுக்கு இல்லையா? நான், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லுகிறேன். நீங்களோ அந்த மனிதர் சொன்னார். இந்த மனிதர் சொன்னார் இவ்வாறு காணப்படுகிறது. உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என அஞ்சுகிறேன்; நான் அல்லாஹ் சொல்கிறான். அவனது தூதர் சொல்கிறார்கள் என்றால் நீங்கள் அபூபக்கர் சொல்கிறார், உமர் சொல்கிறார் என்கிறீர்கள்.
ஆக, நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு நபி தோழர்களின் காலத்திலேயே வி மிகள் மனிதக் கருத்துக்களை மார்க்கத்தில் புகுத்த முற்பட்டுவிட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறதா? இல்லையா? ஆம்! மார்க்கத்தை மதங்களாக்கி அவற்றையே கொடிய ஹராமான வழியில் தங்கள் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இம்மவ்லவிகளின் ஆபாக்களான– புரோகிதர்களான –மதகுருமார்களான முன்னோர்கள் இரவில் கள்ள நோட்டுக்களை அச்சடித்துப் பகலில் மக்களிடையே புழக்கத்தில் விடுவது போல் ஹதீஃத்கள் என்ற பெயரால் கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும் புனைந்து மக்களிடையே பரப்பினர்.
பிரதம ஷைத்தானும், தாஃகூத் என்ற இந்த மனித ஷைத்தான்களுக்குத் துணை போவதால் இப்படிப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீத்களே மக்களிடையே வேகமாகப் பரவின. ஆதாரப்பூர்வ மான ஹதீத்கள் சில ஆயிரங்களே இருக்கும் நிலையில் இந்த தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களால் கற்பனை செய்யப்பட்ட ஹதீத்கள் பல லட்சங்களைத் தாண்டும். நபி(ஸல்) அவர்களே குர்ஆனின் வசனங்கள் 6236க்கும் மேல் விளக்கம் கொடுக்காமல் அவசியப்பட்ட சில வசனங்களுக்கு மட்டுமே மேல் விளக்கம் கொடுத்துள்ள நிலையில் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான மதகுருமார்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு 6,236 குர்ஆன் வசனங்களுக்கும் சுயவிளக்கம், மேல் விளக்கம் கொடுத்து பெருங்கொண்ட மக்களை(பார்க்க: 32:13, 11:118,119) நரகை நோக்கி இட்டுச் செல்கிறார்கள். இட்டுக்கட்டப்பட்ட கற்பனை செய்யப்பட்ட பலகீனமான ஹதீத்களே சமுதாயத்தில் மலிந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில் ஹதீத்கள் என்ற பெயரால் பொய்யான செய்திகள் சமுதாயத்தில் மலிந்து காணப்படுவதை அறிந்த சில நல்லடியார்கள் பெரும் முயற்சிகள் செய்து ஊர் ஊராகப் பயணித்து பலரைச் சந்தித்து அவர்களுடன் பேசி, ஹதீத்களில் ஆதாரபூர்வமான பலமான ஹதீத்கள், பலவீனமான ஹதீஃத்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்கள் என உரிய ஆதாரங்களுடன், ஹதீஃத் அறிவிப்பாளர்களின் வரிசை (இஸ்னாது) அவர்களின் தராதரம், உண்மை நிலையை அறிந்து பதிவு செய்தார்கள்.
அந்த வகையில் புகாரீ, முஸ்லிம், முஅத்தா மாலிக், திர்மிதி, நஸாயீ, அபூ தாவூது, இப்னு மாஜா போன்ற ஹதீத் நூல்கள் உருவாயின. இந்த நூல்களைத் தொகுத்தவர்களில் யாரும் தங்கள் நூல் ஸஹீஹ் என்று பெருமைப்பட்டுக் கொண்டதாக நாம் அறிந்தவரை ஆதாரம் இல்லை. ஆனால் பின்னால் வந்த வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்ட மதகுருமார்களே ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸஹீ ஹைன், ஸிஷாஹ் சித்தா என சுயமாகப் பெயரிட்டு, கொயபல்ஸ் தத்துவப்படி மக்களிடையே மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்லி வந்து பொய்ச் செய்திகளை உண்மை போல் மக்களிடையே வலம் வரச் செய்துள்ளார்கள். இப்போதும் செய்து வருகிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா? அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலம் இறக்கப்பட்டு உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு வருகிற குர்ஆன் மட்டுமே நூற்றுக்கு நூறு ஸஹீஹாகும். குர்ஆன் பதிவில் குறை காண்பவர்கள் அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்பாத வழிகெட்டவர்களாக மட்டுமே இருக்க முடியும். அறிஞர்களால் தொகுக்கப்பட்ட புகாரீ, முஸ்லிம் மற்றும் இதர ஹதீத் நூல்கள் அனைத்திலும் ஆதாரபூர்வமான செய்திகளும் உண்டு. பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் உண்டு. சமீப காலத்தில் சில அறிஞர்கள் பெரும் முயற்சிகள் செய்து, ஆய்வுகள் செய்து ஆதாரபூர்வமான ஹதீத்கள், பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என அறிவிப்பாளர் வரிசை அவர்களின் தராதரம், நம்பகத்தன்மை என அனைத்தையும் தெளிவுபடுத்தி நூல் வடிவில் தந்தும் உள்ளனர். இவை அனைத்தையும் அந்நஜாத் ஆரம்பித்த ஆரம்பக் காலங்களிலேயே தெளிவுபடுத்தி எழுதி இருக்கிறோம். தனி நூலாகவும் வெளியிட்டிருக்கிறோம். ஹதீத் கலை அறிஞர்கள், ஆய்வாளர்கள் இவர்களின் தகவல்களை சரிபார்த்து ஏற்பதே சரியாகும். அவர்களின் சுய கருத்துக்கள் ஒருபோதும் மார்க்கம் ஆகாது. இதில் தெளிவாக இருப்பது முஃமின்களின் கடமை.
நபியின் நடைமுறைகள் (சுன்னத்) உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட வில்லை. நபியின் மறைவுக்குப் பிறகு, ஒரே மார்க்கத்தைப் பல மதங்களாக்கி கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்க்கும் ஆலிம் வர்க்கத்தின் முன்னோர்கள் பல லட்சக்கணக்கான பொய் ஹதீத்களை கற்பனை செய்து மக்களிடையே புழக்கத்தில் விட்டுவிட்டார்கள். அதனால் உண்மையான ஹதீத்களைத் தேர்வு செய்யமுடியவில்லை எனக் கூறி ஹதீத்களை நிராகரிக் கலாமா?
குர்ஆன் மட்டுமே போதும், ஹதீத்கள் தேவையில்லை என்று நிராகரிக்கலாமா? ஒருபோதும் கூடாது அது அல்லாஹ்வின் சுன்னத்தையே நிராகரிப்பதாகும். நரகிற்கு இட்டுச் செல்வதாகும். எப்படி என்று பாருங்கள். 33:62 இறைவாக்கைப் படித்துப் பாருங்கள்.
அல்லாஹ் ஏற்படுத்திய வழி எதற்கு முன் சென்றவர்களிலும் இதுவேதான் அல்லாஹ்வின் (அவ்) வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். (33:62)
முன் சென்ற சமுதாயங்களுக்கு அல்லாஹ் கொடுத்த வழி என்ன? அந்தச் சமுதாயங்களின் நபிமார்களுக்கு நேர்வழியை வஹி மூலம் அறிவித்தான் அல்லாஹ். அவை சமுதாயத்திற்கு ஏற்றால் போல் தற்காலிகமானவையாகவும், இரத்துச் செய்யப்பட வேண்டியவையாகவும் இருந்ததால் அவை உடனுக்குடன் பதிந்துப் பாதுகாக்கப்பட வில்லை. அந்த நபிமார்கள் மறைந்தார்களோ இல்லையோ, அண்ணன் எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும் என வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த ஒரே நேர்வழியைப் பல கோணல் வழிகளாக்கி, கொடிய ஹராமான வழியில் ஒரு ஜான் வயிற்றை நிரப்பும் மதகுருமார்கள் என்ற போலிப் பெயரில் மறைந்திருந்த தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள், இறைவன் கொடுத்த நேர்வழிச் செய்திகளில், இறைவன் சொன்னான். இறைத்தூதர் சொன்னார் என்று பொய்ச் செய்திகளைத் தந்திரமாக நுழைத்து சமுதாயத்தில் பரவவிட்டார்கள். அவற்றையே இறைவாக்காக (முல்லாக்களின் பாஷையில் வேதவாக்காக) கொண்டு பெரும்பான்மையினர் செயல்பட்டு நரகை நோக்கி நடைபோட்டார்கள். இப்போதும் நடைபோடுகிறார்கள். இந்த நிலையில் நேர்வழி நடந்து சுவர்க்கம் புக ஆசைப்படும் அன்றைய மக்களுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டல் என்ன தெரியுமா?
மனிதக்கரம் பட்டு மாசு பட்டு வேதங்களாக்கப்பட்ட அந்த வேதங்களிலிருந்தே சரியான நேர்வழியைக் கண்டறிந்து அதன்படிச் செயல்பட வேண்டும் என்பதே. இதுவே அல்லாஹ்வின் சுன்னத். இறை நெறிநூல்கள் மனிதக்கரம் பட்டு மாசு பட்டு வேதங்களாகிவிட்டன என்று கூறி அவற்றைப் புறக்கணித்துவிட்டு, முன் சென்ற நபிமார்களின் சமுதாயத்தினர் தங்கள் மனம் போன போக்கின்படி நடக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை. இதுவே 33:62 இறைவாக்குக் கூறும் அல்லாஹ்வின் சுன்னத்துகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த சுன்னத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றே அல்லாஹ் இந்த வசனத்தில் கூறியுள்ளான்.
முன்னைய நபிமார்களுக்கு இறக்கி அருளப்பட்ட நெறிநூல்களுக்கு (வேதங்கள்) மாறாக அல்குர்ஆன் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டதற்கு ஒரே காரணம் மார்க்கம் முழுமையடைந்து விட்டது. இதன் பின்னர் நபி(ஸல்) ரசூல் என்று இறைத் தூதரோ, இறைவன் புறத்திலி ருந்து புதிய நெறிநூலோ இல்லவே இல்லை. உலகம் அழியும் வரை குர்ஆன் மட்டுமே மனித குலத்தினருக்கு ஒரே நேர்வழி காட்டும் நெறிநூலாக இருப்பதால் மட்டுமே. குர்ஆன் அல்லாஹ் கட்டளையிட்டுப் பதிந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. (பார்க்க: 15:09) இந்த உண்மையை 5:3, 3:19,85 குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே ஒப்புக் கொள்வார்கள்.
அதே சமயம் இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறி இருப்பதன் அடிப்படையில் (பார்க்க: 2:124,155,249, 3:152,154,186,4:6, 5:48,94, 6:165, 7:141,163, 168, 8:17, 10:30, 11:7, 14:6, 16:92, 18:7, 21:35, 27:40, 33:11, 37:106, 44:33, 47:4,31, 68:17, 76:2, 89:15,16)
d முன்னைய நபிமார்களின் சமூகங்களுக்குக் கலப்படமாகி மாசுபட்ட வாழ்க்கை வழிகாட்டி நூல்களில் (வேதங்கள்) அல்லாஹ்வால் இறக்கப்பட்டவற்றை மட்டும் கண்டறிந்து அவற்றின் வழிகாட்டல்படி நடப்பது கடமையாக இருந்தது போல், இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால், அந்தச் சோதனை வாழ்க்கையில் தனது சுன்னத்தில் மாற்றம் இல்லாத அல்லாஹ் (33:62) நபியின் சுன்னத்தை அறியத்தரும் ஹதீஃத்களில் வைத்துள்ளான். கலப்படமான, மனிதக் கரம் பட்டு மாசுபட்ட ஹதீஃத்களி லிருந்து ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களைக் கண்டறிந்து அவற்றை எடுத்து நடப்பது முஸ்லிம் களின் நீங்காக் கடமையாகும். ஒட்டுமொத்த ஹதீஃத்களையும் நிராகரிப்பது குஃப்ராகும் – வழிகேடாகும்.
இப்படி நாம் கூறினால் அது பெரும் தவறாகும். ஆனால் பல குர்ஆன் வசனங்கள் இந்த உண்மையைக் கூறுகின்றன. 3:32,132, 4:59, 5:92, 8:1,20,46, 20:90, 24:54,56, 47:33, 58:13, 64:12,16. இந்த வசனங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் என்று நேரடியாகக் கூறுகின்றன. மேலும் 3:50, 26:108,110,126,131, 144,150, 453:63, 71:3 இந்த வசனங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் நடங்கள் எனக்குக் கீழ்ப்படியுங்கள் என்று நபிமார்கள் சொன்னதை அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்து குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.
மேலும் 3:31 இறைவாக்கு என்ன கூறுகிறது என்று படித்துப் பாருங்கள்.
(நபியே!) நீர் கூறும். நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
இன்னும் 33:21 குர்ஆன் வசனம் என்ன கூறுகிறது என்று படித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (33:21)
3:31 இறைவாக்கு அல்லாஹ்வின் நேசத்தைப் பெற நபியைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லையா? உங்கள் பாவங்களை மன்னிப்பதாகவும் கூறவில்லையா?
33:21 இறைவாக்கு அல்லாஹ் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று கூறவில்லையா?
இன்னும் 2:213 இறைவாக்கில், மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை இறைவன் இறக்கி வைத்த (வஹி) அறிவிப்புகளைக் கொண்டு நபிமார்களே தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறவில்லையா?
இன்னும் 16:44 இறைவாக்கு அல்லாஹ் வால் அருளப்பட்டதை (குர்ஆனை) தெளிவுபடுத்து வதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இதை அருளினோம் என்று கூறுகிறதா? இல்லையா?
இன்னும் 16:64 இறைவாக்கு, அவர்கள் எதில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர்(நபி) அவர்களுக்குத் தெளிவாக்குவதற்காக உம்மீது இந்த நூலை (குர்ஆன்) இறக்கினோம் என்றிருப்பதைப் படித்துப் பார்க்கவில்லையா?
இவை அல்லாமல் குர்ஆனில் சுமார் 341 இடங்களில் ரசூல் என்று ரசூலைப் பற்றியும், சுமார் 57 இடங்களில் நபி என நபியைப் பற்றியும் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளதையும் நேரடியாகப் படித்துப் பார்க்கவில்லையா?
இவ்வளவுத் தெளிவாக நேரடியாக அல்லாஹ் நபியைப் பின்பற்றுவது பற்றிக் கூறி இருந்தும் இவையயல்லாம் குர்ஆனில் இருப்பது உண்மைதான். ஆயினும் அந்த நபியும் குர்ஆன் படிதான் நடக்கக் கடமைப்பட்டுள்ளார். எனவே ஹதீஃத்கள் தேவை இல்லை; குர்ஆன் மட்டும் நேர்வழி நடக்கப் போதும் என்று அவர்களின் சுய கருத்தைக் கூறுகின்றனர். இப்போது சிந்தியுங்கள். இறைவனின் இறுதித் தூதர், இறைவனுடன் வஹி மூலம் நேரடித் தொடர்பிலும், இறை வனது நேரடிக் கண்காணிப்பிலும் (52:48) தவறு செய்தால் உடனுக்குடன் வஹி மூலம் திருத்தப்பட்டவரும் (66:1,2) அதல்லாமல் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க அல்லாஹ் வாலேயே அனுமதிக்கப்பட்டு அதிகாரம் பெற்றவர். (பார்க்க 2:213, 16:44,64)
அப்படிப்பட்டவர் குர்ஆனுக்கு விளக்கம் கொடுத்துப் பின்னர் பதிவான ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் தேவை இல்லையாம். குர்ஆன் மட்டும் போதுமாம். ஆனால் இப்படிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லாத 17:85 இறைவாக்குக் கூறுவது போல் அற்பப் புத்தியுள்ள மனிதர்கள் குர்ஆனுக்குக் கொடுத்த இப்போதுள்ள மனிதர்கள் கொடுக்கும் விளக்கங்கள் நேர்வழியாம். இதுவே ஹதீஃத்களை மறுப்போரின் நம்பிக்கை. இவர்கள் எந்தளவு மாபெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
ஹதீஃத் நிராகரிப்பாளர்களின் இன்னொரு வாதம். நபி குர்ஆனின் வழிகாட்டல்படிதான் நடந்தார். அவை அனைத்தும் குர்ஆனில் இருக்கின்றன. பின்னர் ஹதீஃத்களின் தேவை என்ன? என்பது தான் இவர்களின் வாதம் எப்படிப்பட்ட மடைமை வாதம் என்பதைக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குங்கள்.
2:129, 151,231, 3:48,81,164, 4:54,113, 5:110, 31:12, 33:34, 38:20, 43:63, 54:5, 62:2.
இந்த வசனங்களில் காணப்படும் ஹிக்மத் என்றால் என்ன? குர்ஆனிலேயே மேற்கண்ட பெரும்பாலான வசனங்களில் “கிதாப வல் ஹிக்மா‘ என்ற குர்ஆனையும், ஹிக்மத்தையும் தனித்தனியாக அல்லாஹ் கூறியுள்ளான். அதுவும் குர்ஆனில் உள்ளது தான் என்றால் அதைத் தனியாகப் பிரித்து குர்ஆனிலிருந்து வேறுபடுத்தி ஏன் காட்ட வேண்டும்? சிந்திக்க வேண்டாமா?
ஏற்கனவே உள்ளத்தில் ஊறிப்போயிருக்கும் வழிகெட்டக் கருத்துக்களை சில நிமிடங்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு நடுநிலையோடு மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களைப் படித்து விளங்கினால், உடனுக்குடன் பதியப்படாமல் பின்னர் பதிந்துப் பாதுகாக்கப்பட்டு வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களும் ஆக இரண்டும் கட்டாயம் நேர்வழி நடக்கத் தேவை என்பதை எளிதாக விளங்க முடியும்.
நீங்கள் ஹதீஃத்களையும் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். ஆனால் குர்ஆனைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதற்குப் பல குர்ஆன் வசனங்கள் இருக்கின்றனவே என எதிர்வாதம் வைக்கின்றனர்.
இதோ குர்ஆனைப் பற்றிக் கூறும் வசனங்கள் :
2:185,4:82, 5:101, 6:19, 7:204, 9:111, 10:15, 37,61, 12:3, 15:1,87,91, 16:98. 17:9, 17:41,45,46, 17:60, 78,82,88,89, 18:54, 20:2,114, 25:30,32, 27:1,6,76,92, 28:85, 30:58, 34:31, 36:2,69, 38:1, 39:27, 41:26, 43:31, 46:29, 47:24, 50:1,45, 54:17, 22,32,40, 55:2, 56:77, 59:21, 73:4,20, 76:23, 84:21, 85:21, 12:2, 13:31, 17:106, 20:113, 39:28, 41:3,44, 42:7, 43:3, 72:1, 75:17,18 ஆக 70 இடங்களில் குர்ஆன் பதம் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒரே ஒரு வசனத்திலாவது குர்ஆனை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? இல்லையே! அப்படி இருந்தால் ஹதீஃதை நிராகரிப்போர் காட்டட்டும் பார்க்கலாம்.
அதற்கு மாறாக அத்தீவுல்லாவஹ வ அத்தீவுர் ரசூல் அதாவது அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். அவனின் தூதருக்கும் வழிப்படுங்கள் என்று கூறும் பல குர்ஆன் வசனங்களை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இத்தனை இடங்களில் குர்ஆனில் அல்லாஹ் கூறி இருக்கும் அவசியம் என்ன? சிந்திக்க வேண்டாமா? மேலும் அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் நடங்கள் என்னைப் பின்பற் றுங்கள் என்று நபிமார்கள் கூறியுள்ள பல வசனங்களையே மேலே குறிப்பிட்டுள் ளோம். இத்தனை இடங்களில் குர்ஆனில் அல்லாஹ் கூறி இருக்கும் அவசியம் என்ன? சிந்திக்க வேண்டாமா? மேலும் அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் நடங்கள் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபிமார்கள் கூறியுள்ள பல வசனங்களையும் மேலே குறிப்பிட்டுள்ளோம்.
இவை மட்டுமா? இன்னும் பாருங்கள். 33:36ல் அல்லாஹ்வும் அவனது தூதரும் முடிவு செய்த பின்னர் அதில் வேறு அபிப்பிராயம் கொள்வது முஃமினான ஆணுக்கும், பெண்ணுக்கும் அனுமதியே இல்லை. அது பகிரங்கமான வழிகேடு என்று கூறும் இடத்திலும் ரசூலையும் சேர்த்துச் சொல்கிறானே அல்லாமல், அல்லாஹ்வின்பால் அதாவது குர்ஆனின்பால் திரும்புங்கள் என்று இறைவன் கூறவில்லை. இன்னும் பாருங்கள். 4:59ல் அல்லாஹ்வையும் அவ னது தூதரையும் உங்களில் அதிகாரம் வகிப்பவர்களையும் பின்பற்றுங்கள். உங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அப்போது அல்லாஹ்வின் பாலும், அவனது தூதரின்பாலும் திரும்புங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறானே அல்லாமல் அப்போதாவது தூதரை விட்டு அல்லாஹ்வின்பால் திரும்புங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடவில்லையே ஏன்?
குர்ஆன் அல்லாஹ்வின் கலாம்–பேச்சு, குர்ஆன் வசனங்களில் ஹதீஃத்களில் ஐயங் களைக் கிளப்பி விவாதம் செய்வோர் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கின்றனர் என்பதைக் கீழ்க்காணும் வசனங்களை நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள். (5:101, 6:25,68, 8:6, 13:13, 15:91, 18:56, 22:3,8, 40:4,35,56,69, 42:35)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)