ஈடேற்றம் பெற எண்ணத் தூய்மையும்! நம்பிக்கை உறுதியும்!!
M. சையத் முபாரக், நாகை.
தூய்மையான எண்ணம் :
“…தூய்மையை பெரிதெனக் கருதுவோரையே அல்லாஹ்வும் விரும்புகிறான்.” (அ.கு. 9:108)
“…தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 381)
அல்லாஹ் நம்மிடம் தூய்மையையே எதிர்பார்க்கிறான். ஆகவே, நாம் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். தூய்மையில் அக(மன)த் தூய்மை, புற(உடல் மற்றும் இட)த் தூய்மை என இருவகை இருக்கின்றன. நாம் இங்கு மனத்தூய்மை பற்றிப் பார்ப்போம்.
“சத்திய (இறைநூல்) வழி நின்று மார்க்கக் கடமைகளை மனத் தூய்மை கொண்டு அல்லாஹ்வை வணங்கவேண்டும். (98:5)
“…ஒருவர் ஒரு நன்மை செய்ய மனதால் எண்ணி, அதைச் செய்யாவிட்டாலும் இதை அல்லாஹ் ஒரு நன்மையாக எழுதுகிறான். செய்துவிட்டால் அந்த ஒரு நன்மையை தன்னிடம் பத்து நன்மைகளாக, 700 மடங்காக இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஒருவர் ஒரு தீமை செய்ய நாடி (அல்லாஹ்விற்கு அஞ்சி) அதைச் செய்யாது கைவிட்டால் அதற்கு ஒரு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். அத்தீமையைச் செய்துவிட்டாலோ அதற்காக ஒரே ஒரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 6491)
நமது எண்ணம் தூய்மையானதாக, நல்லதாக இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். நல்ல எண்ணங்களே நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஆணிவேராகும்.
தீய எண்ணம் :
“தீய எண்ணங்களையே நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்கள். மேலும், அழிந்துபோகும் கூட்டமாக நீங்கள் ஆகிவிட் டீர்கள்” (அ.கு. 48:12) (மேலும் பார்க்க : 7:201, 35:8,10,43, 48:6, 49:12, 114:4)
“தீய எண்ணம் (சந்தேகப்படுவது) குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். இது மிகப் பெரும் பொய்யாகும். (பிறர் குறையை) துருவி துருவி ஆராயாதீர். ஓட்டு கேட்காதீர், பொறாமை கொள்ளாதீர்; பிணங்கிக் கொள்ளாதீர்; கோபம் கொள்ளாதீர், அல்லாஹ்வின் அடியார்களே சகோதரர் களாய் இருங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 6064)
(மேலும் பார்க்க : முஸ்லிம் : 5006, 5010)
ஆகவே, நமது மனம், சிந்தனை, எண்ணம் தூய்மையானதாக இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களை நமது மனதில் திரும்பத் திரும்ப நினைத்து அதில் உறுதி கொள்ளவேண்டும். மனதில் திரும்பத் திரும்ப எண்ணுவது உறுதியான நம்பிக்கையாக பரிமாணம் பெறும்.
உறுதியான நம்பிக்கை :
“நீங்கள் எது குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதன் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன்தான் என்னை படைத்தாளும் அல்லாஹ். அவனிடமே நான் பொறுப்பு சாட்டுகிறேன்; அவனிடமே சரணடைகிறேன். (அ.கு. 42:10) (மேலும் பார்க்க : 5:50, 8:49,61, 9:51,129, 10:84,85,129, 11:56, 12:67, 13:30, 16:62, 25:58, 26:217, 29:59, 33:3,4,8, 39:8, 41:36, 64:13, 67:29)
“…இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன்; உன்னையே நம்பினேன், உன்மீதே உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன்…” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 1120) பார்க்க: புகாரி 4854)
நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரழி) அவர்களும் ஹிஜ்ரத் சென்றபோது, ஸவ்ர் குகையில் இருந்தபோது, எதிரிகள் நெருங்கி விட்டனர். “யாராவது பார்த்துவிட்டால்? அதனால் இறைத்தூதருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அபூபக்கர்(ரழி) சொன்னபோது, கவலைப்படாதீர், நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் உறுதியான நம்பிக்கையுடன் கூறியதை அல்குர்ஆன் 9:40ல் பார்க்கலாம். மற்றும் புகாரி: 3653, 3922, 4663லும் பார்க்கலாம்.
ஹிஜ்ரத்தின் போது நபி(ஸல்) அவர்களையும், அபூபக்கர் (ரழி) அவர்களையும் பிடிக்க சுராக்கா பின் மாலிக் நெருங்கிய போது, நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொன்ன நிகழ்வை புகாரி 3615, 3652ல் பார்க்கலாம்.
ஃபிர்அவ்ன் படையினருக்கும் கடலுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட மூஸா(அலை) அவர்களின் சமூகத்தினர் பயந்து “நாம் வசமாக சிக்கிக் கொண்டோம்‘ என்று கூறியபோது மூஸா(அலை) அவர்கள் “என் னுடன் இருக்கிறான் என்னைப் படைத்தவன்; அவனே எனக்கு வழிகாட்டுவான்‘ என்று கூறிய சம்பவம் அல்குர்ஆன் 26:52-67ல் காணலாம்.
சூனியக்காரர்கள் மூஸா(அலை) அவர்களின் மூலமாக அல்லாஹ்வின் அத்தாட்சியைக் கண்டதும் ஈமானில் உறுதி கொண்டதை 7:115-126 வசனங்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.
யாருமே இல்லாத எதுவுமே கிடைக்காத இடத்தில் (மக்காவில்) பச்சிளம் குழந்தை இஸ்மாயீலையும் அவரது அன்னையையும் (அதாவது தனது மனைவியையும்) தன்னந் தனியாக விட்டுவிட்டு இப்ராஹீம்(அலை) திரும்பியபோது “அல்லாஹ்தான் இப்படிக் கட்டளையிட்டானா? அப்படி என்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்‘ என்று உறுதியான நம்பிக்கையுடன் இஸ்மாயீலின் அன்னை கூறிய வரலாற்றை புகாரி 3364ல் நாம் தெரிந்து கொள்ளலாம்.
நல்ல எண்ணங்களால் உருவாகும் உறுதியான நம்பிக்கைக்கு அல்லாஹ் எவ்வளவு ஆற்றலைத் தருகிறான். அதனால் நாம் எண்ணங்களை அதனால் ஏற்படும் நம்பிக்கைகளைக் குறைவாக மதிப்பிடக் கூடாது.
நாம் நமக்கும் தீயதை எண்ணாமல், மற்றவர்களுக்கும் தீமையை எண்ணாமல் இருக்கவேண்டும். நமது எண்ணங்கள் மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உள்ளத்தை, உடலை, வாழ்வை நாசமாக்கும் தீய எண்ணங்களை மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு, நல்ல எண்ணங்களை அல்லாஹ்வின் மீது அதிகமாக நம்பிக்கையோடு மனதில் திரும்பத் திரும்ப உறுதியாக எண்ணினால் அது ஆழ்மனதில் நன்கு படியும். அது நிறைவேறுவதற்கான சக்தியை அல்லாஹ் தருவான். டி.வி.யில் அடிக்கடி வரும் விளம்பரங்களுக்கு அடிமைப்படும் குழந்தைகள் அதனை விரும்பி கேட்பது போல, திரும்ப திரும்ப மனதில் நினைக்கும் நல்ல எண்ணங்கள் உறுதியான நம்பிக்கை யாக மாறி அல்லாஹ்வின் அருளால் வெற்றியை, ஈடேற்றத்தைத் தரும்.
“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக் கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ் வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணந்து கொள்வார். எனவே இவர்களின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகிறது‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரழி) அறிவித்தார். புகாரி: 54
“எந்த ஆன்மாவை (அல்லாஹ்) தூய்மை படுத்தினானோ அவன் வென்றுவிட்டான். மாசடையுமாறு எந்த ஆத்மாவை (அல்லாஹ்) விட்டுவிட்டானோ அவன் இலக்கைத் தொலைத்துவிட்டான். (அ.கு. 91:9,10)
அல்லாஹ் நமது எண்ணங்களைத் தூய்மையாக்கி, உறுதியான நம்பிக்கைக் கொள்ளச் செய்து, கலப்பற்ற செயல்களாக நமது செயல்களை அழகாக்கி ஈடேற்றம் பெறச் செய்வானாக! அல்ஹம்துலில்லாஹ்!