தலையங்கம் :
திரைப்படங்கள் படமா? பாடமா?
உலக அளவில் இஸ்லாமியர்களை தீவிர வாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதில் ஊடகங்கள் (MEDIA) எல்லா நாடுகளி லும், எல்லா காலங்களிலும் முன்னிலை வகுக்கின்றன. அதுபோல் திரைப்படங்களும், அவ் வப்பொழுது செய்து வருவதை அனைவரும் அறிவோம்.
சினிமா என்பது சக்தி வாய்ந்த ஊடகமாக (POWERFUL MEDIA) இருக்கின்றது. சுமார் 100 மேடை பேச்சாளர்களால் செய்ய முடியாததையும், சில புத்தகங்கள் செய்ய முடியாததை யும் கூட ஒரு சில சினிமா செய்துவிடும். அதில் நஞ்சை விதைப்பவர்களும் உண்டு, நல்ல கருத்தை விதைப்பவர்களும் உண்டு. சமீபகாலமாக இஸ்லாமிய சமுதாயத்தின் மீது திட்ட மிட்டு சிலர் வன்முறையை தூண்டும் படங்களை சிலர் எடுப்பதும், இஸ்லாமியர்களை தீயவர்களாகவும், நாட்டுபற்று இல்லாதவர்களாகவும் காட்டுவது நடந்து வருகிறது.
அதில் சமீபத்தில் திரையிடப்பட்ட புதிய தமிழ் படங்களும் இதில் அடங்கும். இதற்கு முன்பாக பல திரைப்படங்களும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களாகவும், இன்னும் கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களாகவும், காண்பிக்கப்பட்டு வருவதும் காலம், காலமாக நடந்து வருகிறது. அத்தகைய திரைப்படங் களுக்கு இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதும், சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தை அறிவித்தும் அத்தகைய படங்களுக்கு விளம்பரமும் தேடிக் கொடுக்கின்றார்கள். அதாவது பாமர மக்களின் (இஸ்லாமியர்களின்) உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அத்தகைய படங்களின் நடிகர், நடிகைகளுக்கும், இயக்குனர்களுக்கும் விளம்பரம் தேடிக் கொடுக்கின்றனர்.
அதன் விளைவு;
அவர்கள் வசூலையும், நடுநிலையான சமூக சிந்தனையாளர்களின் ஆதரவையும் பெறுகிறார்கள். மேலும் இதில் அரசியலும் கலந்து அரசியல்வாதிகளும், அத்தகைய சில கட்சிகளின் தலைவர்களும் ஆதாயம் அடைகின்றார்கள் என்பதுதான் நடக்கிறது.
சினிமா துறை என்பது வருவாயை முதற்கண் நோக்கமாக கொண்ட ஒரு வியாபார கூட மாகும். அதில் கலை சேவை என்பதும், கருத்தை சொல்கிறோம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே.
அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுமேயானால் அதனைக் கொண்டு படிப்பினை பெறுவார்கள். அதற்கு திரைப்படத் துறையில் உள்ள நடுநிலைவாதிகளும், இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்களும், ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முன்வரவேண்டும். அவ்வாறு புறக்கணித்து விட்டால் தவறான முறையில் இஸ்லாமியர்களை சித்தரிப்பதை தவிர்ப்பார்கள்.
திரைப்படங்கள் மூலம் பாடம் கற்க வேண்டிய இழிநிலை இஸ்லாமியர்களுக்கு ஒரு போதும் இல்லை. ஏனெனில் அத்தகைய படங்கள் ஒருசில நாட்கள் பேசு பொருளாக இருக்கும் படமாக மட்டுமே இருந்து கடந்து போய்விடும்.
இதுபோன்ற திரைப்படங்களை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றுவிட்டால் அவர்கள் எதிர்பார்த்தது நடக்காமல் ஏமாற்றம் அடைவார்கள். அவ்வாறு செய்தால் மட்டுமே இறைவனின் உதவியும் கிடைக்கும். இல்லை என்றால் இஸ்லாமிய சமூகம் தண்டனைக்கும், இழிவுக்கும் ஆளாக நேரிடும்.
எனவே இறைநூலில் கூறிய கீழ்கண்ட வசனத்தை நினைவு கூறுங்கள்.
“இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (உயிர் இழப்புக்களாலும்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு முன்னர் இறைநூல் கொடுக்கப்பட்டவர்களாலும், இணை வைப்பவர்களாலும் அதிகமான நோவினையை (வசைமொழியை) நிச்சயமாக நீங்கள் செவியேற்பீர்கள்.
மேலும் இத்தகைய காலங்களில் பொறுமையை மேற்கொண்டு, இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்தும் நடப்பீர்களானால் நிச்சயமாக இதுவே உறுதிமிக்க செயலாகும்.
(அல்குர்ஆன் 3:186)