பல்சமயச் சிந்தனை!

in 2024 டிசம்பர்

பல்சமயச்  சிந்தனை!

ஆசிரியர் குழு

2024 நவம்பர் தொடர்ச்சி

அவன் என்றே இறைவனைச் சொல்லுகின்றேன் ஏன்?

இறைவனை நான்அவன்என்றே சொல்லி வருவது, உங்களுக்கு ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் தரலாம். எஜமானனாகிய இறைவன் தன் அடிமையாகிய மனிதன், தன்னை அவன் என்று சொல்வதைச் சகித்துக் கொள்கிறான். ஆனால் அவதாரமென்றோ, மகன் என்றோ அவனுக்கு இணை சேர்ப்பதையே அவன் சகித்துக் கொள்வது இல்லை. மானமுள்ள ஒரு ஆண் தன் மனைவி தன்னுடைய இடத்தைத் தான் அல்லாத ஒரு ஆணுக்குக் கொடுத்தால், அவன் தன் உயிருக்குயிரான நண்பனாக இருந்தாலும், எந்த அளவிற்கு அவன் மான உணர்வால் கொதிப்பானோ, ஆத்திரப்படுவானோ, ஒரே வெட்டில் இருவரையும் கொலை செய்யத் துணிவானோ அதைவிடப் பன்மடங்கு, மனிதன் தனக்குக் கூட்டாக யாரையும் சேர்த்தால்  இறைவன் சினமும், ஆத்திரமும் கொள்கிறான். கூட்டுச் சேர்த்தால் மிகக் கடுமையாகத் தண்டிக்கிறான். பஞ்சமா பாதகங்களை எல்லாம் இறைவன் விரும்பினால் மன்னிப்பான். ஆனால் தனக்கு யாரையும் கூட்டுச் சேர்ப்பதை, இறைவன் மன்னிப்பதே இல்லை. இதை மிகத் தெளிவாக இறைவன் தன் இறுதி நெறிநூலில் குறிப்பிட்டுள்ளான். (4:48,116). அதனாலேஅவர்என்று சொன்னால், மனிதனது அறிவியல், பன்மைச் சிந்தனை ஏற்பட்டுத் தனக்குக் கூட்டைக் கற்பித்து விடுவானோ அதனால் மன்னிக்கவேபடாத மாபெரும் குற்றத்திற்கு ஆளாகித், தனது தண்டனையை அடைய நேரிடுமோ என்று இறைவன் மனிதன்மேல் இரக்கப்பட்டுத் தன்னை, “அவன்என்றே  அழைக்கும் முறையைத் தன் இறுதித் தூதர் மூலமாகப் போதித்தான். இந்தப் போதனையின் அடிப்படையிலே நான் இறைவனைஅவன்என்று குறிப்பிடுகின்றேன்.

சிலை  வணக்கம்  எப்படி  ஏற்பட்டது?

இந்த அவதார மோகந்தான், சிலை வணக்கத்திற்கு அடிகோலியது. அவதாரமாக நினைத்து, இறைத் தூதர்களுக்கும், மஹான்களுக்கும் சிலை வடித்து, மாலை, மரியாதை என்று கண்ணியப்படுத்துவதாகத் தொடங்கியே காலப்போக்கில், சாமி என்றும், தெய்வம் என்றும், பல தெய்வ வழிபாட்டில் மக்களைச் சிக்கவைத்தது. நீங்கள் அறியத் தோன்றி உயர்ந்த மனிதராகத் திகழ்ந்து, இந்திய நாட்டின் விடுதலைக்காக உழைத்து, மகாத்மா என்று மக்களால் அழைக்கப்பட்டவர் காந்தி, அவர் அவதார மாக்கப்பட்டுச் சிலையாக வடிக்கப்பட்டு அவருக்கு மாலை மரியாதை செய்தது போய், இன்று கோயில் கட்டப்பட்டுத் தெய்வமாக்கப்பட்டு அவருக்கு அர்ச்சனைகள் நடைபெற்று வருவதை நீங்கள் அறிவீர்கள்.

கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள். சிலைகளை வணங்குபவன் காட்டுமிராண்டி; மதிக்கும் சிலையும் கல்லுதான்; மிதிக்கும் படியும் கல்லுதான். கல்லுக்கு மரியாதை செய்வது அறியாமையின் உச்சகட்டம் என்று பகுத்தறிவு வாதம் பேசிய, நம் பகுத்தறிவுச் சகோதரர்களும், இந்த அறியாமைச் சேற்றில் சிக்கி, இந்தப் போதனைகளைச் செய்த தங்கள் தலைவர்களையே, அதே கல்லைக் கொண்டு சிலையாக வடித்து மாலை மரியாதை களெல்லாம் செய்து, எங்கள் இதய தெய்வம் என்று கூறி வருவதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கிறீர்கள். தங்களது முக்கிய செயல்களில், முதலில் அந்தச் சிலைகளிடம் சென்று மாலையிட்டு மரியாதை செய்தே, தங்கள் செயல்களைத் தொடங்குகிறார்கள். கேட்டால் மரியாதைக்காகச் செய்கிறோம் என்று சொல்வார்கள். இதுவே வருங்காலத்தில் சாமி வணக்கமாக மாறுகிறது என்பதை இந்தப் பகுத்தறிவாளர்களால் பகுத்தறிய முடியவில்லை. 

தாங்கள் மதிக்கும் இந்தத் தலைவர்களை விடச் சிறந்தவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர் களாகவும் சாமி சிலைகளுக்குரியவர்கள் இருந்திருக்கவும் கூடும் அல்லவா? தங்கள் தலைவர் களைச் சிலைகளாக வடித்து அச்சிலைகளுக்கு மாலை மரியாதைகள் செய்தால் அவற்றைச் சரி என்று கண்டால், அவற்றை அவர்கள் பகுத்தறிவு வாதம் ஏற்றுக் கொண்டால், சாமிகளின் சிலைகளுக்கும் மாலை மரியாதை செய்வதில் என்ற தவறு? அதை ஏன் இவர்கள் அவமதிக்கிறார்கள்? செருப்பால் அடிக்கத் துணிகிறார்கள்? இது சரிதானா? நியாயம்தானா? இது சரியான பகுத்தறிவு வாதந்தானா? சிந்தனை செய்யுங்கள். உண்மையில் அவர்கள் பகுத்தறிவாளர்களாக இருந்தால், தங்கள் தலைவர்களின் சிலைகள் முதல் அனைத்துச் சிலைகளையும் அகற்றி, உண்மையான ஒரே இறைவனை யல்லவா மதித்து மரியாதை செய்து வணங்கி நடக்க முற்படவேண்டும். செய்வார்களா? இந்த வழிகேடுகளுக்கு இறுதி நெறிநூலிலும் ஆதாரங்கள் உண்டு. (பார்க்க 71:23,24)

இவ்வேளையில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மைச் சீடரும், மேதையுள்ள சுவாமி விவேகானந்தரின் அறிவுரை. “ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்‘, தீபாவளி இதழில் (பக்கம் 8, அக்டோபர் 1984) வெளியாகி இருப்பதை உங்கள் சிந்தனைக்குக் கொண்டு வருகிறேன்.

இறைவனை வழிபடுவது, அவன் ஒருவனை மட்டுமே வணங்குவது பக்தியா கும். வேறு எந்தப் பொருளையும், தேவர்களையோ, பித்ருக்களையோ வேறு எந்த மனிதனையோ வழிபடுவது பக்தியைச் சேர்ந்தது அன்று. அது பக்தியே அன்று. பல்வேறு தேவதைகளைப் பல வழிகளில் வணங்குவது சடங்குகளோடு கூடிய வழிபாட்டைச் சேர்ந்ததாகும். இந்த வழிபாட்டினால், வழிபடுபவன் மேலான ஓர் இன்பத்தை அடையாலமே தவிர, பக்தியைப் பெறவோ, முக்தி பெறவோ இயலாது. சிந்தித்துத்  தெளிவடைய  வேண்டும்.

இறைவனுக்கு மட்டுமே மார்க்கம் சொந்தம்!

இறைவன் ஒருவனே; அவன் கொடுத்த மார்க்கம் ஒன்றே; இறைவன் அளித்ததே சட்டம். மனிதனுக்குச் சட்டம் இயற்றும் உரிமை இல்லைஎன்பதை எல்லாம் உணர்ந்திருப்பீர்கள். (பார்க்க 39:3)  இன்னொரு உதாரணத்தையும் சொல்லுகிறேன். ரஷ்யன் தயாரிக்கும் ஒரு கருவியை, அந்த ரஷ்யன் காட்டும் முறைப்படியே இயக்குகிறோம். நாம் சுயமாக ஒரு முறை யைத் தேர்ந்தெடுப்பதில்லை. அல்லது அதற்கென்று அமெரிக்கன் முறையை எடுத்துக் கொள்வதுமில்லை. நம்மைப் போன்ற வலுவற்ற மனிதன் தயாரித்த ஒரு கருவியை இயக்க அவனது வழிகாட்டலே அவசியப்படுகின்றது. நாம் நினைத்தபடி இயக்க முடியவில்லை. முயற்சி செய்தால் நாமே அக்கருவியைத் தயாரிக்க முடியும். மனிதனால் தயாரிக்க முடியாத கருவி, இறைவன்  ஒருவனால் மட்டுமே ஆக்கப்பட்ட மனிதக் கருவி. இந்த மனிதக் கருவியை இயக்க வலுவற்ற மனிதனே வழி அமைத்தால், அது சரியாக அமையுமா? அமையாது. அதுவே வழிகேடு. அதுவே மதமாகும். அதனாலே ஏனைய மதங்களை விட்டுவிட்டு இறைமார்க்கம் தேட முற்படுவோம்.

எது  நெறிநூல்?

ஒரே இறைவனை ஏற்று, அவன் கட்டளைகளின்படி நடக்கத் தயார். எது இறைக் கட்டளை என்று எப்படி முடிவு செய்வது?’ என்று நீங்கள் கேட்கலாம். அறிவுப்பூர்வமான கேள்வி.

இறைவனையும், நெறிநூல்களையும் ஏற்றுக்கொள்ளும் நாம், கடைப்பிடிக்க வேண்டிய நெறிநூல் எது? நீக்கப்பட்ட நெறிநூல்கள் எவை? என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இறைத் தூதர்கள் அனைவருக்கும், இறைவனிடமிருந்து அறிவிப்புகள் வந்தன. தொடக்கத்தில் அறி விப்புகள் மட்டுமே இருந்ததால், அவை நூலாக அமையவில்லை. மனித வளர்ச்சி பூரணத்துவத்தை நெருங்கும் சமயத்தில் கட்டளைகள் மிகுதியாகி நூல் அமைப்பு ஏற்பட்டது. முதல் நெறிநூல் மோஸஸ் (அலை)க்குதவ்ராத்என்றும், இரண்டாவது நெறிநூல் தாவூது(அலை)க்குஜபூர்என்றும், மூன்றாவது நெறிநூல் ஜீஸஸ்(அலை)க்குஇன்ஜீல்என்றும் இறுதியாக நான்காவது நெறிநூல் முஹம்மது (ஸல்)க்குகுர்ஆன்என்றும் இறைவனால் அருளப்பட்டன. இங்கு ஒரு செய்தியை நாம் நன்கு கூர்ந்து ஆராய்ந்து விளங்கிக் கொள்ளவேண்டும். முன்னைய நெறிநூலிலுள்ள கட்டளை இருந்தால், முதல் கட்டளை இரண்டாவது கட்டளையால் இறைவனால் மாற்றப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசிலிருந்து முதல் ஆணை வருகின்றது. அடுத்து அதற்கு மாற்றமான ஆணை வந்தால், இரண்டாவதையே செயல்படுத்த வேண்டும். 

உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் முதலில் ஒரு தீர்ப்பை வழங்கி, அதற்குப் பின்னே இரண்டாவது, ஒரு மாற்றமான தீர்ப்பை வழங்கினால், இரண்டாவது தீர்ப்பே செல்லும். அதை மூன்றாவது ஒரு தீர்ப்பு மாற்றலாம். முதல் தீர்ப்பு மாற்றாது. நாம் அனைவரும் ஒத்து ஏற்றுக்கொள்ளும் ஒரு செய்தி இது. இதே அடிப்படையில் நெறிநூல்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னைய மார்க்கங் களுக்குச்சமயங்கள்என்ற பெயரும் உண்டு. அந்தச் சமயத்திற்கு அது கொடுக்கப்பட்டது. அது மாற்றத்திற்குரியது என்பதுவே அதன் பொருளாகும். அதனால் தான் முன்னைய நெறிநூல்களைப் பாதுகாக்கும் பொறுப்பைத்தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்தந்த நெறிநூல்களில் இறைவன்  சொல்லவில்லை.   (இன்ஷா அல்லாஹ் தொடரும்….)   

Previous post:

Next post: