பிறப்பும், இறப்பும் ஒரு முறையா? இரு முறையா?

in 2025 ஜனவரி

பிறப்பும், இறப்பும் ஒரு முறையா? இரு முறையா?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

எதைவிட்டு நீங்கள் வெருண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்தித்தே தீரும். பிறகு, மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிபவனிடம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு இறைவன் அறிவிப்பான் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 62:8) பொதுவாக மரணத்தை பெரும்பாலோர் விரும்புவதில்லை, அதுமட்டுமல்ல இந்த கட்டுரையில் மரணத்தைப் பற்றி கூறியிருப்பதால் இதைப் படிக்க விரும்பாமல் கடந்து போக நினைப்பவர்களும் கூட இருக்கலாம். அதற்கு காரணம்;

மரணம் என்பது வருத்தத்திற்குரியது மேலும் மரணம் என்பது துன்பமானது 

என நினைப்பதே ஆகும். அதனால் தான் இறைவனும் எதை விட்டு நீங்கள் வெருண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களை சந்திக்கும்  என்று  கூறுகிறான். 

ஆயினும் எங்கிருந்தாலும் மரணம் ஒருநாளைக்கு வரும் என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். அதனால்வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் சாவோம்என்பது தான் பெரும்பாலோரின்  நிலை.

மேலும் மனிதர்களின் வினோத செயலில் இதுவும் ஒன்று. அதாவது, மரணத்தை சந்தித்தவர்கள் யாரும் வருந்துகிறோம் என்று போஸ்டர் போடுவது இல்லை. “மரணத்தை சந்திக்கப் போகிறவர்கள் தான் வருந்துகிறோம்என்று போஸ்டர் போடுகிறார்கள்.

மரணத்தை பொருத்தவரை

போனால் போகட்டும் என்று எல்லோரின் மரணத்தையும் விட்டுவிடமுடியாது. அதற்காக வந்தவர்கள் எல்லாம் இங்கு (பூமியில்) தங்கிவிடவும்  முடியாது.

இந்த பூமியில் எலும்புக்கும், சதைக்கும் தான் மருத்துவம் உண்டு. மரணத்திற்கு மருந்து இல்லை என்பதுதான் மரணத்தின் நிலைப்பாடு. எனவேதான் இறைவன் கூறுகிறான்.

நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை வந்தே தீரும்…” நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே! (அல்குர்ஆன் 4:78)

மரணித்தவர்களில் மூன்று நிலையுள்ளது.

அவை : 1. வந்தான், இருந்தான், சென்றான்.

2. வந்தான், இருந்தான், வாழ்ந்தான்

3. வந்தான் வாழ்ந்தான், வாழ்கின்றான்.  என்பதாகும்.

இதில் யாரெல்லாம் சென்றார்கள், வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள் என்பது ஓரளவு நமக்கு தெரிந்தாலும் அது இறைவனுக்கு மட்டுமே முழுமையாக தெரிந்த ஒன்றாகும்.

இருப்பினும் இறந்தும் சிலர் புகழோடு வாழ்கின்றார்கள் என்றும் அதுபோல் இறந்தும் சிலர் இழிநிலையோடு வாழ்கின்றார்கள் என்றும் இறைவன் கூறியுள்ளான்.

உதாரணமாக :

நபி இப்ராஹிம்(அலை) அவர்களும், நபி முஹம்மது(ஸல்) அவர்களும் இறந்தும் புகழோடு வாழ்கின்றார்கள். அதுபோல் பிர்ஃஅவ்ன் மற்றும் அபூஜஹீல் இருவரும் இழிநிலையோடு இறந்தார்கள் என்பதாக அறிகிறோம். இன்னும் ஏராளமான மனிதர்கள் இரண்டு நிலையிலும் உண்டு. இறைநூலில் (அல்குர்ஆனில்) அறிவித்து தந்ததை மட்டும் இங்கு  குறிப்பிட்டுள்ளோம்.

இதிலிருந்து நல்லடியார்களின் மரணம் துன்பமானது அல்ல, இன்பமானது என்பதை தெரிந்துகொள்ளலாம். 

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டு மேயன்றி வேறில்லை. (இறைவனை) அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக மறுமைவீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (.கு. 6:32)

ஆனால் பெரும்பாலோர் பிறப்புஇறப்பு பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்றால் ஒருமுறைதான் பிறப்பு ஒருமுறைதான் இறப்பு வரும் என்பதாக, உண்மை என்னவென்றால் ஒவ்வொரு மனிதருக்கும் இருமுறை பிறப்பும், இருமுறை மரணமும் நடக்கின்றது. இது சிலருக்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம், நாம் ஒருமுறைதானே பிறந்தோம், ஒருமுறை தானே மரணிப்போம் என்பதாக, ஆனால் நம்மை (மனிதனை) படைத்த ரப்பு இருமுறை இரண்டும் நடப்பதாக இறைநூலில் கூறியுள்ளான்.

அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்றிருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டி னான். பின்னர் உங்களை மரணமடையச் செய்தான்”. (அல்குர்ஆன் 2:28)

இது ஒருமுறை (முதல்முறை) உயிர் கொடுக்கப்பட்டுவிட்டு பின்னர் மரணிக்க செய்ததை கூறுகிறது. (இது நம் அறிவுக்கு எட்டாத நிலை) அடுத்து அதே வசனத்தில் (2:28) பின்னர் உயிர்பிப்பான் (இது உலகில் நாம் வாழ வந்ததை குறிக்கிறது) அவனிடமே மரணித்த பின்பு கொண்டுவரப்படுவீர்கள்இது மரணத்திற்கு பிறகு மறுமைநாளில் எழுப்பப்படுவதை  கூறுகிறது.

ஆக இரண்டு முறை உயிர் கொடுத்ததையும், இரண்டு முறை மரணித்ததையும் இதன்மூலம் அறியலாம். அதுமட்டுமல்ல மற்றொரு வசனத்தின் மூலம் அது எவ்வாறு நடந்தது என்பதையும் இறைவன் கூறுகிறான்.

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை (வாரிசுகளை) உமது இறைவன் வெளியாக்கி அவர்களை சாட்சிகளாக்கி நான் உங்கள் இறைவன் அல்லவா? என்று  கேட்டான்.

ஆம் என்று நாம் (அதாவது ஆதமிலிருந்து உலகில் இறுதிநாள் வரை தோன்றி, மறைய இருக்கின்ற அத்தனை உயிர்களும்) சாட்சி கூறினோம். (அல்குர்ஆன்7:172)

மேலும் மற்றொரு வசனத்தில், “இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:38)

இறைவன் படைத்தபோது ஆதம்(அலை) மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்தபோதும் அவ்விருவரையும் இறங்கிவிடுங்கள் என்று இறைவன் கூறாமல்அனைவரும் வெளியேறுங்கள்என்று கூற என்ன காரணம். 

ஏற்கனவே இறைநூலில் வசனம் 7:172ல் இதைப் பற்றி கூறியுள்ளான். அதாவது உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் ஆதமுடைய முதுகிலிருந்து வெளியாக்கிநான் உங்கள் இறைவன் அல்லவா?’ என்று கேட்ட செய்தி இடம் பெற்றுள்ளது. 

அதன்படி இன்று உலகில் வாழ்கின்றவர்களும், இதற்கு முன்பு வாழ்ந்து மறைந்தவர் களும், இனி பிறக்கப் போகின்ற அனைத்து உயிர்களும் (ஆன்மாக்களும்) முதல் மனிதருக்குள் இருந்தவர்கள் ஆவார்கள் என்பதைதான் குறிப்பிட்டுஅனைவரும் வெளியேறுங்கள்என்ற வார்த்தையை இறைநூலில் குறிப்பிட்டுள்ளான். இதுவொரு அறிவியல் உண்மையை வெளிப்படுத்தும் வசனமும் ஆகும்.

மேலும் ஆதம், ஹவ்வா இருவரும் ஷைத்தானின் தூண்டுதலால் தவறான செயல்களால் சுவன வாழ்வை இழந்து பூமிக்கு இறக்கப்பட்டாலும், நேர்வழி கிடைக்க செய்து மீண்டும் சிறப்பாக வாழ வழி வகையை இறைவன் செய்துள்ளான். அதனால் தான் என்னுடைய நேர்வழியை யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு அச்சமும் இல்லை, கவலைப்படவும் மாட்டார்கள் என்றும் இறைவன் (2:38ல்) கூறியுள்ளான்.

Previous post:

Next post: