ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களை நிராகரிப்பது குர்ஆனையே நிராகரிப்பதாகும்!

in 2025 பிப்ரவரி

ஆதாரப்பூர்வமான

ஹதீஃத்களை நிராகரிப்பது குர்ஆனையே நிராகரிப்பதாகும்!

அபூ அப்தில்லாஹ்

மறுபதிப்பு :

2025 ஜனவரி  மாத  தொடர்ச்சி….

7:3, 53:4 இந்த இரண்டு வசனங்களை நடுநிலையோடு, உள்ளத்தில் எவ்வித வழிகெட்ட சிந்தனையும் இல்லாமல் படித்து விளங்குகிறவர்கள், இன்னும் மேலே எழுதப்பட்டுள்ள எண்ணற்ற வசனங்கள் கூறுவது போல் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றியே ஆகவேண்டும். அதுவே ஒரே நேர்வழி என்பதை  நிச்சயம்  உணர  முடியும்.

ஹதீஃத் மறுப்பாளர்கள் பல குர்ஆன் வசனங்களுக்கு எவ்வித குர்ஆன், ஹதீஃத் ஆதாரமுமின்றி சுயவிளக்கம் கொடுத்து அவர்கள் வழிகெடுவதோடு, அவர்களை நம்பியவர்களையும் வழிகெடுத்து நரகை நோக்கி நடைபோட வைக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் சுயவிளக்கங்கள் அவர்களின் சுய கற்பனையாக இருக்கும் அல்லது அவர்கள் நம்பிப் பின்பற்றும் முன்னோர்களின் சுய கற்பனையாக  இருக்கும்.

இந்த இரண்டு வகைக் கற்பனைகளைக் கொண்டு சமாளிக்க முடியவில்லை என்றால் உடனே அந்த குர்ஆன் வசனங்களை சைலண்ட் அதாவது நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை என்று கூறித் தங்களின் வழிகெட்ட வீண்வாதத்தை நிலைநாட்ட முற்படுகின்றனர். அல்குர்ஆனில் ஒரு வார்த்தை கூட, ஓர் எழுத்துக் கூட சைலண்ட் தேவையில்லை என்ற நிலையில் இல்லை என்பதை அவர்கள் உணரவேண்டும். 

உதாரணமாக 4:43 வசனம் கூறும் நீங்கள் போதையில் இருக்கும்போது நீங்கள் கூறுவது இன்னதன்று அறிந்து கொள்ளும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்றிருப்பது  5:90,91 குர்ஆன் வசனங்கள் இறங்கிய பின் சைலண்ட் ஆகிவிட்டது என்ற வாதத்தை வைப்பார்கள். அதேபோல் 49:1-5 வரையுள்ள ஐந்து வசனங்களும் இறைத் தூதரின் இறப்பிற்குப் பின்னர் சைலண்ட் ஆகிவிட்டன என வாதிடுவர். இது ஹதீஃத் நிராகரிப்பாளர்களின் அறியாமையும் வீண் விதண்டா வாதமும்  ஆகும்.

இப்போதும் ஒரு மடாகுடிகாரன் எப்போதும் போதையில் இருப்பவன், நான் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகிறேன். அதனால் குடிப்பதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி வேண்டும் என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம். போ போ நீ குடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்று கூறினால் எனக்கு இஸ்லாமும் வேண்டாம், நீங்களும் வேண்டாம் என்று போய்விடுவான். அதற்கு மாறாக இஸ்லாத்தை ஏற்று குடியை உடனே நிறுத்தி னாலும் அவனது உடலில் பல துன்பங்கள் ஏற்பட்டு அவனுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு வெறுப்பும் ஏற்படலாம். அதற்கு மாறாக நீ குடி, ஆனால் தொழுகைக்கு வரும்போது போதை தெளிந்த நிலையில் வந்து கண்டிப் பாகத் தொழு என்று 4:43 குர்ஆன் வசனத் தைத்தான்  அவனுக்குக்  காட்டவேண்டும். 

இந்த நிலையில் ஐங்காலத் தொழுகை நேரத்தில் அவன் போதை தெளிந்தவனாக இருக்க வாய்ப்பு ஏற்படும். அதனால் அவனது உடல் ஆரோக்கியத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்படும். காலக்கிரமத்தில் 5:90,91 இறைக் கட்டளைகள்படி அவன் குடியை விட்டு  முற்றிலும்  விலக  வாய்ப்பு  ஏற்படும்.

ஆம்! 4:43 குர்ஆன் வசனம் சைலண்ட் ஆகவில்லை; இப்போதும் நடைமுறைக்குச் சாத்தியமே என்பது புரிகிறதா? இல்லையா? சிந்தியுங்கள். அதேபோல் 49:1-5 ஐந்து குர்ஆன் வசனங்களும் சைலண்ட் நடை முறைப்படுத்த முடியாது என வீண் வாதம் வைத்து, இதுபோல் குர்ஆனில் செயல்படுத்த முடியாத பல சைலண்ட் வசனங்கள் இருக்கின்றன என வாதிடுகின்றனர். முதல் வசனம் என்ன கூறுகிறது  படித்துப் பாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்விடம் பயபக்தியுடன் நடங்கள். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்,  நன்கறிபவன்.  (49:1)

இந்த முதலாம் வசனத்தில் அல்லாஹ் தன்னுடன் தன் தூதரையும் இணைத்தே கூறுகிறான். அதன் பொருள் என்ன? இதே அடிப்படையில் அடுத்த நான்கு வசனங்களையும் கவனமாக படியுங்கள். இன்று ஹதீத் நிராகரிப்பாளர்கள் போல் வீண் வாதங்களில் ஈடுபடும்போது, ஒருவர் மாறி ஒருவர் குரல் உயர்த்திச் சப்தமிட்டு பேசுவதைப் பார்க்கலாம். அதனால்தான் அல்லாஹ் 6:68 வசனத்தில் இப்படிப்பட்டவர்களைப் புறக்கணித்து விடும்படி கட்டளையிடுகிறான். ஷைத்தான் மறக்கச் செய்தால் நினைவு வந்தபின் அந்த அநியாயக் கூட்டத்தாருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம் என்று கட்டளையிடுகிறான்.

மேலும் 40:35 இறைவாக்கிலும் இதையே வலுயுறுத்துகிறான். ஆம்! நபி இறந்த பின்னரும் இந்த 49:15 வசனங்கள் நடைமுறையில் இருக்கத்தான் செய்கின்றன. அன்று உயிருடன் இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் மார்க்கம் பற்றிக் கூறும் போது, தங்களின் குரல்களை உயர்த்தி நபியின் அப்பேச்சைக் கேட்கவிடாமல் தடுத்தது போல், இன்றும் நபியின் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்கள் எடுத்துரைக்கப்படும் போது வீண் விதண்டாவாதம் செய்யாமல் அதைக் காது கொடுத்துக் கேட்டு அதன்படி நடந்து வெற்றி பெருங்கள் என்றே அவ்வசனங்கள் வலியுறுத்துவதை அறியலாம். ஆக, குர்ஆனின் எந்த வசனமும் ஹதீஃத் மறுப்பாளர்கள் கூறுவது போல் சைலண்ட் என்ற நிலையில் இல்லை. (பார்க்க 6:150) ஆக! ஹதீஃத் மறுப்பாளர்கள் குர்ஆன் வசனங்களில் விதண்டாவாதம்  செய்கின்றனர்.

தமிழகத்தில் காரிஜியாக்களின் வழித் தோன்றல்கள் எப்போது தலை எடுத்தார்கள் என்பதை இப்போது பார்ப்போம். கடந்த 1000 வருடங்களாக முஸ்லிம் சமுதாயம் கபுருசமாதி வழிபாடு, பீர்முரீது வழிபாடு, மத்ஹபு வழிபாடு, ஹனஃபி ஷாஃபி, மாலிக்கி, ஹன்பலி இமாம்கள் வழிபாடு என்ற கொடிய ´ர்க்கில் (பார்க்க 9:31, 18:102-106) மூழ்கி இருந்தார்கள். இப்படிப்பட்ட வழிகேடுகளி லிருந்து விடுபடுவதாக நம்பிக்கொண்டு மிக சமீப காலத்தில் அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஸலஃபி என புதிய வழிகேடுகளைக் கற்பனை செய்து  நடைமுறைப்படுத்து கின்றனர்.

கடந்த 1963லிருந்து 1983 வரை குர்ஆனைத் தினசரி ஒரு பாகம் (ஜுஸ்வு) மாதம் ஒரு குர்ஆன் எனப் பொருள் அறியாமல் கிளிப் பிள்ளைப் பாடமாக ஓதிக் கொண்டிருந்தோம். அதனால் குர்ஆனில் அல்லாஹ் எவற்றை நேரடியாகச் சொல்கிறான் என்பதை அறியாமல், இந்த மவ்லவிகளை நம்பி, அவர்களது கூற்றுக்களை வேதவாக்காகக் கொண்டு, மதகுருமார்களின் கற்பனையான ஷாஃபி மத்ஹபில் விபரம் தெரிந்த காலத்திலிருந்து நிலைத்திருந்தோம். தப்லீஃக் ஜமாஅத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் மவ்லவிகளோடு மிக நெருங்கிப் பழகும்  வாய்ப்பு  நிறையவே  இருந்தது.

அப்போது அவர்களின் பொய்ப்பித்த லாட்டங்களையும், ஒழுக்கக் கேடுகளையும் நேரடியாக, கண்கூடாகப் பார்க்கும் நிர்பந்த நிலை ஏற்பட்டது. அதனால் 1971ல் இருந்து 1981 வரை பெருங் குழப்பத்தில் இருந்தோம். 1981ல் ஹஜ்ஜுக்குப் போகும்போது நாம் உடன் ஹஜ் கிரிகைகளை விபரிக்கும் இமாம் கஜ்ஜாலியின் தமிழ் மொழி பெயர்ப்பை எடுத்துச் சென்றோம். ஜித்தா ஏர்போர்ட்டிலுள்ள அதிகாரிகள் அது என்ன நூல் என்று கேட்டு அறிந்து கொண்டு அந்நூலை அங்குள்ள குப்பைத் தொட்டியில் போட்டார்கள். 

அது எமக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. தாடி வளர்ந்ததிலிருந்து நாம் தாடியைச் சிரைத்தது இல்லை. அதற்கு  மாறாக 21 வயதிலிருந்து தலையை வழித்து மொட்டைபோட்டு வந்தோம். 1981ல் ஹஜ்ஜில் வைத்துத்தான் நபி(ஸல்) அவர்கள், ஹஜ், உம்ரா அல்லாத எந்தச் சமயத்திலும் தலைமுடியை வழித்ததில்லை என்ற உண்மை தெரியவந்தது பெரும்  அதிர்ச்சியைத்  தந்தது.

அதன் பின்னர்தான் குர்ஆனைப் பொருள் அறியாமல், கிளிப்பிள்ளைப் பாடமாக ஓதுவதை விட்டு, அன்றிருந்த அப்துல் ஹமீது பாகவியின் ஒரே மொழி பெயர்ப்பைக் கொண்டு குர்ஆனைப் பொருள் அறிந்து படிக்க முற்பட்டோம். அதுவே எமது வழிகெட்ட போக்கிலிருந்து விடுபட்டு குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்கும் பாக்கியம் எமக்குக் கிடைக்க வழிவகுத்தது. இவற்றை நாம் இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் இந்த அனைத்துப் பிரிவு மவ்லவிகளின் பேச்சை வேத வாக்காகக் கொண்டு வழிகெட்ட, நரகிற்கு இட்டுச் செல்லும் பேரழிவிலிருந்து விடுபட்டு ஒரே நேர்வழி பெற மக்கள் அனைவரும் குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒரே ஜமாஅத்தாக (பார்க்க : 3:103) செயல்பட, குர்ஆனின் போதனைப்படி நடக்க முன்வர வேண்டும். அதுவே அவர்களுக்கு ஈருலக வெற்றியைப்  பெற்றுத் தரும்.

அதனால் நாம் பொருள் அறிந்து குர்ஆனைப் படிப்பதன் மூலம் பெற்ற நேர் வழியை பிரசுரங்கள் மூலம் 1983லிருந்து மக்களிடையே கொண்டு செல்ல முற்பட்டோம். அனைத்து மதரஸாக்களுக்கும், பிரபல மவ்லவிகளுக்கும் கடிதங்கள் எழுதினோம். அதன் உச்சக்கட்டமாக 1984 அக்டோபர் 30ம் தேதி கிறித்தவ குருத்துவ மடத்தில் மதங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதகங்கள், பாதகங்கள் என்ற தலைப்பில் நாம் ஆற்றிய உரை நூல் வடிவில் தமிழகமெங்கம் சென்றடைந்தது. அதைப் படித்த இன்றைய மூத்த தவ்ஹீத்வாதிகள் எனப் பீற்றிக்கொள்ளும் மவ்லவிகள் (4:49, 53:32) குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம். –ஒரே நேர்வழி என்பதை ஒப்புக்கொண்டு நம்முடன் சேர்ந்து பணியாற்ற முன்வந்தனர். அவர்களின் அசல் நோக்கம் எம்மையும் அவர்களின் புரோகித வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்பதே. அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. அல்லாஹ் எம்மைப் பாதுகாத்தான்!

அதனால் ஆத்திரமுற்று 1987 ஜூனில் நம்மை விட்டு வெளியேறி எம்மீது பலவிதமான அவதூறுகளையும், வீண் பொய்ப் பழிகளையும் சுமத்தினர். அவர்களின் ஒரே நோக்கம் அந்நஜாத் தரும் செய்திகள் மக்களிடம் போய்ச் சேராமல் தடுத்து அதை இழுத்து மூடவைக்க வேண்டும் என்பதே. ஆனால் அல்லாஹ் அவனது தனிப்பெரும் கிருபையைக் கொண்டு கடந்த 32 வருடங்களாக தொய்வின்றி அந்நஜாத் வெளிவர அருள் புரிந்து வருகிறான். எனவே அந்நஜாத்தின் நேர்வழிக் கருத்துக்களை மக்களிடமிருந்து இருட்டடிப்புச் செய்ய ஹதீஃத்களில் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களை பலகீனமானவை என்றும் பலவீனமான ஹதீஃத்களை ஆதாரப் பூர்வமானவை என்றும் விதண்டாவாதம் செய்துவருகின்றனர். இந்த அவர்களின் தாஃகூத் என்ற மனித ஷைத்தானியச் செயல்களே ஹதீஃத் மறுப்பாளர்கள் தமிழகத்தில் வளர்ச்சி பெற  காரணமாயிற்று. (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: