ஆலிம்களால் அலைக்கலைக்கப்படும் பிறை!
M. சையத் முபாரக், நாகை.
அல்குர்ஆனிலும் சரி; நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் சரி பிறை பற்றி எந்தக் குழப்பமும் இல்லை; பிரச்சனையும் எழவில்லை. மிகத் தெளிவாகவே இருக்கின்றது. ஆலிம் வர்க்கமே பிறை குழப்பத்தை, பிரச்சனையை ஆரம்பித்து தூண்டி வளர்க்கின்றது.
குர்ஆன் ஆதாரம் :
ரமழானில் நோன்பு பிடிப்பது நமது இலக்கு (கடமை) அதற்காக ரமழான் மாதத்தை அடைவது நமது நோக்கம். அதை அடையும் வழி சந்திரநாட்காட்டி (வானவியல் கணக்கு).
“…ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிவதற்காக (இரவும் பகலும் இரு சான்றுகள்)… (அகு.17:12)
“சூரியனும் சந்திரனும் (சரியான) கணக்கில் (சுழன்று) இயங்குகின்றன”. (அ.கு.55:5)
(மேலும் பார்க்க: 2:189, 6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 21:33, 31:29, 36:40)
அனைத்துக் கோள்களும் அல்லாஹ் அமைத்துத் தந்த கணக்கின்படிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆகவே, வானவியல் கணக்கின்படி தயாரிக்கப்பட்ட சந்திர நாட்காட்டியை நாம் பயன்படுத்திப் பயன்பெறுவோம்.
நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் ஆதாரம்:
ஒரு மாதம் மனைவிகளைப் பிரிந்திருப்பேன் என்ற நபி(ஸல்) அவர்கள் 29 நாட்கள் முடிந்து (வீடு) திரும்பினார்கள். ஒரு மாதம் என்று சத்தியம் செய்தீர்களே என்று கேட்டபோது இம்மாதம் 29 நாட்கள்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீதை புகாரி : 1910ல் பார்க்கலாம்.
பிறை பார்த்து நோன்பு பிடியுங்கள்/ நோன்பை விடுங்கள். மறைக்ககப்பட்டால் ஃபானை 30ஆக முழுமைப்படுத்துங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீதை புகாரி 1909ல் பார்க்கலாம்.
இவைகள் கணக்கிடுதலைப் பற்றிதான் பேசுகின்றன.
நாம் உம்மி சமுதாயம், வின்கலையை அறியமாட்டோம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீதை புகாரி 1913ல் பார்க்க முடியும்.
இங்கு நாம் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். வானியல் கணக்கு எனக்கும் என் சமுதாயத்திற்கும் தடுக்கப்பட்டது என்றும், அதனால் நானும் பார்க்கமாட்டேன், எனது உம்மத்தும் பார்க்கக்கூடாது என்றும் நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை.
அப்போது சந்திர கணக்கில் மூட நம்பிக்கைகள் மலிந்து காணப்பட்டதால் நபி (ஸல்) அவர்கள் வானவியல் “கணிப்பை‘ ஏற்கவில்லை. ஆனால், அந்தக்கால யூதர்கள் வானசாஸ்திரத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள் என்று இந்த ஆலிம்கள் சப்பைக்கட்டுக் கட்டுவர். இதனால், நபி(ஸல்) அவர்கள் மீது வீண் பழி சுமத்துகிறோம் என்பதை இந்த ஆலிம் வர்க்கம் உணர்வதில்லை.
அக்காலம், பூமி தட்டையானது; சந்திரனை பாம்பு விழுங்குவதால் ஏற்படுவதே அமாவாசை; சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதற்குக் காரணம் உயர் குடும்பத்தில் ஏற்படவிருக்கும் மரணம் (பார்க்க: புகாரி: 1041,1043) என்பன போன்ற மூடநம்பிக்கைகள் மலிந்த காலம். அதைத்தான் வானியல் அறிவியல் தலைசிறந்தவர்களாக யூதர்கள் இருந்தார்கள் என்று இந்த நவீன ஆலிம்கள் கூறுவார்கள். அப்போது இருந்தது வானியல் கணிப்பு. இப்போது இருப்பதோ வானவியல் கணக்கு. நபி(ஸல்) அவர்கள் உணர்த்தியது இந்த அறிவியல் கணக்கைத்தான்.
ஆலிம்களின் சுயவிளக்கம் :
1. “ரமழானை அடைபவர்/பெறுபவர் / இருப்பவர் அதில் நோன்பு நோற்க வேண்டும்” 2:185
ரமழானை அடைபவர் என்று அல்லாஹ்வே சொல்லிவிட்டதால் ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாளில் ரமழானை அடைவர். அதனால் பெருநாள் 1 நாளில் அல்ல 2 அல்ல 3 நாட்களிலும் வரும் என்று அறிவு ஜீவிகளாக ஆலிம்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.
நாம் (இந்தியா) 26 ரஜப் 1446 (26.01.2025) ஞாயிற்றுக்கிழமை ஃபஜ்ர்க்குப் பின் இருக்கும்போது துபாயில்,சவுதியில் இருப்பவர்கள் 25 ரஜப் 1446 (25.01.2026) சனிக்கிழமையில் தான் இருப்பர். 1டிமணி நேரம் கழித்து துபாயும், 2டிமணி நேரம் கழித்து சவுதியும் அடுத்த நாளை (26.07.1446) அடையும். ஒவ்வொரு பகுதியினரும் ஒரே நேரத்தில் அந்த நாளை அடையமுடியாது; அடையமாட்டார்கள். அல்லாஹ் அமைத்த முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக 24 மணி நேரத்திற்குள் அந்த நாளை அடைந்துவிடுவர். ஆலிம்கள் சொல்வது போல் ஒரு தினத்தை அடைய 2 அல்லது 3 நாட்கள் தேவைப்படாது.
2. “நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்…” (அல்குர்ஆன் 31:20)
மேலும் பார்க்க: 16:12, 29:61, 31:29, 35:13, 43, 39:5.
உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்லியிருப்பதை ஆலிம் கள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
சவுதி 26.07.1446(26.1.2025) ஞாயிற்றுக் கிழமையில் இருக்கும்போது இந்தியா 25.07.1446(26.01.2025) ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் என்கிறார்கள். அதாவது, சந்திரன் தங்கள் வசத்தில் இருக்கிறது. அதனால் சந்திரனை (அந்த நாளை போன்று வசப்படுத்தித் தரவில்லை. ஒவ்வொரு கோள்களையும் அல்லாஹ் வரைமுறைப்படுத் தல். அது சுழன்று செல்லும் கணக்கைத்தான் நமக்கு வசப்படுத்தி தந்திருக்கிறான். அந்தக் கணக்கைத்தான் நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.
3. “நோன்பு என்பது எந்நாளில் நீங்கள் அனைவரும் நோன்பு நோற்கிறீர்களோ அதுவே ஆகும். நோன்பை விடுவது என்பது எந்நாளில் நீங்கள் அனைவரும் நோன்பை விடுகிறீர்களோ அதுவே ஆகும்…” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி:633,731)
மக்கள் ஒற்றுமைக்காக ஆலிம்கள் இந்த ஹதீதைத் தூக்கிப் பிடிக்கின்றனர். நல்ல முயற்சி. ஆனால், இந்த ஹதீதை மற்ற ஹதீது களுடன் இணைத்துப் பார்க்காமல் காஜி என்று முடிவு எடுக்கிறாரோ அன்று பெருநாளைக் கொண்டாடுவோம் என்பது மாதம் 31 அல்லது 32 நாட்களாக அமைந்து, மாதத்தை, நாளை மாற்றும் நிலையாக அமைந்துவிடாதா? அல்லாஹ்விற்கு மாறு செய்வதை அல்லாஹ் எப்படி ஏற்பான்? பார்க்க: 9:37, 41:11-13
4. சிரியாவில் வெள்ளியன்று பிறை பார்த்து, முஆவியா(ரழி)யுடன் மக்கள் அனைவரும் நோன்பு பிடித்த நிலையில், அம்மாத இறுதியில் மதீனா வருகிறார் குரைப்(தாபிஉ) மதீனாவிலுள்ள அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) நாங்கள் சனியன்று பிறை பார்த்தோம். மறு பிறை பார்ப்போம் அல்லது ரமழானை 30ஆக பூர்த்தி செய்வோம் என்றார். முஆவியா(ரழி) பார்த்தது போதாதா? என்று குரைப் கேட்க, நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இப்படித்தான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரழி) கூறிய சம்பவம் முஸ்லிம் 1983ல் பதிவாகியுள்ளது.
இதன்மூலம் ஒரு பகுதியில் பார்த்த பிறையை வேறு பகுதியினர் ஏற்கவில்லை. ஆகவே, தத்தம் பகுதியில் பிறையை சரி என்கின்றனர் பல ஆலிம்கள். வ்வாலுக்கு தயாராக வேண்டிய ரமழானைப் பற்றி ஏன் யோசிக்கவேண்டும் என்ற எண்ணம் இந்த ஆலிம்கள் மண்டையில் உறைக்கவில்லையே? பிறை பார்த்தவுடன் அத்தகவல் சிரியாவிலிருந்து மதீனாவிற்கு வந்து அதை சஹாபாக்கள் மறுத்தார்கள் என்ற ஆதாரத்தை இந்த ஆலிம்கள் தருவார்களா? இவர்களின் நிலை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதையாக அல்லவா இருக்கிறது.
தகவல் உடனடியாக அறியமுடியாத நிலையில் (பூமி விசாலமாக இருந்த நிலையில்) நபி(ஸல்) அவர்கள் தகவலை ஏற்றார்கள். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் தகவலை ஏற்க மறுக்கும் இந்த ஆலிம்களை என்னவென்று சொல்வது? நபி(ஸல்) அவர்களுக்கே இவர்கள் பாடம் நடத்துகிறார்களா?
5. மதீனாவிலிருந்ததா மஸ்ரூக்(தாபிஉ), மக்காவில் இன்று துல்ஹஜ் 10ஆக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அரஃபா நோன்பு பிடிக்கவில்லை. இதனை ஆயிஷா(ரழி) மறுத்து, மக்கள் என்று அறுத்துப் பலியிடுவார்களோ அதுவே அறுத்துப் பலியிடும் நாளாகும் என்று கூறிய சம்பவத்தை பைஹகீ 8209ல் பார்க்கலாம்.
இதன்மூலம் மக்கா வேறு பகுதி, மதீனா வேறு பகுதி என்கின்றனர் ஆலிம்கள். நபி(ஸல்) அவர்கள் இப்படித்தான் எல்லைப் பிரித்திருப் பின் இப்போது மக்கா, மதீனா, ரியாத், தம்மாம் போன்ற பகுதிகளெல்லாம் வெவ்வேறு நாட்களில் அல்லவா பெருநாள் கொண்டாட வேண்டும். ஆனால், அதற்கு மாற்றமாக இந்த பகுதிகளில் எல்லாம் சவுதி அரசு ஒரே நாளில் பெருநாள் கொண்டாடு வதையும், அதை இந்த தத்தம் பிறை ஆலிம்கள் ஆதரித்து வரவேற்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது? நபி(ஸல்) அவர்கள் சொன்ன எல்லையை ஆலிம்கள் தத்தம் வசதிக்கேற்ப விரிவாக்கிக் கொள்ளலாம் என்றா?
6. நாம் விரும்பும் செயலை அமல்படுத்தினால் குழப்பம், பிரச்சனை வரும் என்றால் அதைச் செய்யாமலிருப்பதே நபிவழி என்றும், அதற்கு ஆதாரம் முஸ்லிம்கள் உள்ளத்தில் வெறுப்பு தோன்றிவிடுமே என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லாவிடில் கஃபாவை இடித்துவிட்டு, இப்ராஹீம்(அலை) அவர்கள் கட்டிய அமைப்பில் கஃபாவை கட்டி விடுவேன் என நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீத்களையும் (பார்க்க: புகாரி 1854, 1855,1856) லோக்கல் பிறை ஆலிம்கள் கூறி பிறைப் பிரச்சனையிலுள்ள குழப்பத்தை ஊரில் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி தீர்த்துவிடுவார்களாம். இவர்கள் அகராதியில் பிரச்சனை, குழப்பம் தீர சட்டத்தையே மாற்றுவார்கள் போலிருக்கிறது.
இதைவிட அதிகமான குழப்பத்தை, பிரச்சனையை ஏற்படுத்திய கிப்லா மாற்றம் (அ.கு. 2:143) விவாகரத்து செய்யப்பட்ட வளர்ப்பு மகன் ஜைத்(ரழி)யின் மனைவியுடன் பார்க்கவும். நபி(ஸல்) அவர்களுக்கு நடந்த திருமணம் (அ.கு. 33:37), ஹீதைபிய்யா உடன் படிக்கை (புகாரி 2731, 2732 மற்றும் ரஹீக்குல் மக்தூம் பக்கம் 419) ஆகிய நிகழ்வுகளை நபி(ஸல்) அவர்கள் செயல்படுத்தியது ஏன்?
நிபந்தனையா? சாத்தியமா?
தொழுவது கடமை. அதன் நிபந்தனைகளில் ஒன்றுதான் உளூ செய்தல். உளூ செய்வதற்கான சாத்தியமாக (வாய்ப்பாக, வழியாக) முன்பு இருந்தது தோல் பை அல்லது பாத்திரத் திலுள்ள நீரில் உளூ செய்வது. தற்போது குழாய் நீரிலிருந்து உளூ செய்கிறோம். எதிர்காலத்தில் வேறு வகையான சாத்தியம் வரும். (இன்ஷா அல்லாஹ்)
நோன்பு பிடிப்பது கடமை. அதன் முக்கிய நிபந்தனை ரமழான் மாதத்தை அடைதல். அதற்கான சாத்தியம் முன்பு பிறை பார்த்தல் பிறைத்தகவல் இப்போது அதற்கான சாத்தியம் வானவியல் கணக்கு. நிபந்தனை மாறாது; மாற்றவும் முடியாது. அல்லாஹ்வால் அடுத்து அவனது தூதர்(ஸல்) அவர்களால் வரையறை செய்யப்பட்டு விட்டது. ஆனால், சாத்தியம், வாய்ப்பு, வழி, வசதி என்பது அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மாறக்கூடியது. சாத்தியம் என்பதை இந்த ஆலிம் வர்க்கம் நிபந்தனையாக எடுத்துக் கொள்கிறது. இவர்கள் நிபந்தனைக்கும், சாத்தியத்திற்கும் வேறுபாடு (வித்தியாசம்) தெரியாமல் பாமர மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டுள்ளனர். நாங்கள் மிகச் சிறந்த அறிவாளிகள்; ஆராய்ச்சி செய்பவர்கள்; தாங்கள் சொல்வதே சரி என்று மக்களை நம்ப வைக்கின்றனர். மக்களும், தவ்ஹீத்வாதிகளும், நான்கு இமாம்களைப் பின்பற்றுவதுதான் தக்லீத் ஆராய்ச்சிச் செய்வதில் கரைகண்ட நவீன ஸலஃபி ஆலிம்களைக் கண்மூடி பின்பற்றுவது தக்லீத் இல்லை என்று எண்ணுகின்றனர். பாமர மக்கள் என்றுதான் உணர்ந்துத் திருந்தப் போகிறார்களோ தெரியவில்லை?
சரியான சந்திர நாட்காட்டியைச் செயல்படுத்துவோம்:
மேகம் சூழ்ந்த நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த (திறந்த)பின் சூரியன் தென்பட்டது. (பார்க்க: புகாரி: 1959) கண்களால் பார்க்கும்போது ஏற்படும் தவறு கடிகாரத்தைப் பார்ப்பதால் ஏற்படுவதில்லை. இது அல்லாஹ் நமக்குக் கொடுத்த வெகுமதி அதுபோல, கண்களால் பார்த்து 2ஆம் அல்லது 3ஆம் பிறையை முதல் பிறையாக எடுத்துத் தவறு செய்வதை விட, பிறையைச் சரியான சந்திர நாட்காட்டி மூலம் அறிந்து பின்பற்றுவோம். இதுவே, அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்)
அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) இலகுவாக்கவே நாடுகிறான் (ஏனெனில்) மனிதன் மிகவும் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான். (அ.கு. 4:28)
அல்லாஹ் நமக்கு எளிமைப்படுத்தித் தந்திருக்கும்போது, நாம் ஏன் நம்மைச் சிரமப்படுத்திக் கொள்ளவேண்டும்?
ஸிலிஉழியி பிறை என்றும் பிறை என்றும் மக்களைக் குழப்புவதுடன், உமர்(ரழி) அவர்கள் அமைத்துத் தந்த ஹிஜ்ரி காலண்டரையும் இந்த ஆலிம்கள் குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
மற்ற சமுதாயத்தினர் வெளியிடும் காலண்டர்களில் இப்போது இஸ்லாமிய மாதங்கள் அச்சிடப்படுவதில்லை. ஏன்? என்று கேட்டால், உங்களுக்குள்ளேயே பிறைக் குழப்பம் இருக்கிறதே; எதைப் போடுவது? என்பதால் தவிர்க்கிறோம் என்கின்றனர். விரைவில் முஸ்லிம்கள் அடிக்கும் காலண்டர்களிலும் இஸ்லாமிய மாதங்கள் மறைக்கப்படலாம்.
ஆலிம்கள் இஸ்லாமிய காலண்டருக்கான எந்த முயற்சியும் எடுக்கமாட்டார்கள். இதற்காக அல்லாஹ்விடம் என்ன பதிலைச் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை? மக்கள்தான் விழிப்புணர்வு அடைந்து உலகிற்குச் சரியான இஸ்லாமியக் காலண்டரை வெளியிட்டுப் பின்பற்றவேண்டும். அல்லாஹ் நல்லருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்!!