உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும்

in 2025 பிப்ரவரி

உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும்

அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும்

அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்.

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2025  ஜனவரி  தொடர்ச்சி

ஒரு வருடம் வெறுத்திருந்தால் அவரது செயல் அவரின் இரத்தத்தை ஒட்டிக் கொலை செய்வது போலாகும்: “ஒருவர் தனது சகோதரனை ஒரு வருடம் வெறுத்திருந்தால் அவரது செயல் அவரின் இரத்தத்தை ஓட்டுவது (கொலை செய்வது) போலாகும்என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: அபூஹிராஷ் ஹத்ரத் இப்னு அபூஹத்ரத் அஸ்லமி, அல்லது அஸ்ஸுலமி(ரழி) அபூதாவூத்:4915, ரியாளுஸ்ஸாலிஹீன்: 1596) 

இவற்றுக்கான தண்டனையாக மூன்று நாட்களுக்கு மேல் ஒருவர் வெறுத்திருந்து அதே நிலையில் அவர் இறந்துவிட்டால் அவர் நரகில் நுழைவார்:

தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதி இல்லை மூன்று நாட்களுக்கு மேல் ஒருவர் வெறுத்து; அவர் இறந்துவிட்டார் அவர் நரகில் நுழைவார் என்றுஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைர(ரழி), புகாரி, முஸ்லிம், அபூதாவூத், 4914, ரியாளுஸஸாலிஹீன்:1595)

நிச்சயமாக இறைவிசுவாசிகள், சகோதரர்களாவர். எனவே உங்களின் சகோதரர்களிடையே நீங்கள் சமாதானத்தை உண்டாக்குங்கள். (49:10) அதாவது; அனைவரும், தீனில்இறை மார்க்கத்தில் சகோதரர்கள்தாம். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் அவருக்கு  அநீதி இழைக்கமாட்டார். அவரை எதிரிகளிடம் ஒப்படைக்கமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)  அவர்கள்  கூறியிருக்கிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக் கின்றான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவித்தார். (புகாரி: 2442, 6951, முஸ்லிம் : 2580, தஃப்சீர் இப்னு கஸீர்: 8:586-591)

உறவுமுறைகளைப் பேணாவிடில் ஏற்படும் விளைவுகள் :

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜுபைர் பின் முத்இம் (ரழி), புகாரி: 5984)

மன்னிப்பு  வழங்கப்படுவதில்லை :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமை யும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ் வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தமது (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமை கொண்டுபேசிக் கொள்ளாத இரு மனிதரைத் தவிர, அப்போதுஇவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டு வையுங்கள்! இவ்விருவரும் சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டு வையுங்கள்!!! என்று (மூன்று முறை) கூறப்படும். இதை அபூஹுரைரா(ரழி), அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் : 5013, முஸ்னத் அஹ்மத், ரியாழுஸ்ஸாலிஹீன் :1593)

உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை சுவர்க்கம்  நுழையமுடியாது:

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம்(ரழி), புகாரி: 5984) 

மற்றொரு ஹதீதில்; அத்துமீறலுக்கும், உறவை முறிப்பதற்கும், உலகிலேயே தண்டனை:

மறுமையில் தண்டனை கிடைப்பதுடன், இம்மையிலும் துரிதமாகத் தண்டனை அளிப்பதற்கு ஏற்ற பாவம் அநியாய அத்துமீறலும், உறவை முறிப்பதுமாகத்தான் இருக்கமுடியும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா(ரழி), திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத், இப்னு ஹிப்பான், தஃப்சீர் இப்னு கஸீர்: 4:486-489, 3:135-149) இன்னொரு ஹதீதில், “உறவை முறித்து வாழ்பவன் இடம்பெற்றுள்ள ஒரு சமூகத்தின் மீது (மழை போன்ற) இறையருள் இறங்காதுஎன்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (அல் அதபுல் முஃப்ரத், புகாரி: 5984இன் சிறு குறிப்பு.15ஆவது)

மேலே குறிப்பிட்டஅநியாய அத்துமீறலும், உறவை முறிப்பதுமான, இவ்விரு குற்றங்களை யும் இறைத்தூதர் ஆதம்(அலை) அவர்களின் மூத்த மகன் காபீல் செய்துள்ளார். அதனால் அவர் இவ்வுலகிலேயே தண்டிக்கப்பட்டார்.    (தஃப்சீர் இப்னு கஸீர்: 3:135-149)

பதிலுக்குப் பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுகின்றவர்  அல்லர்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களின் சிலர் இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அவர்களின் பொன்மொழி என்றும், வேறு சிலர் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள். (புகாரி:5991) அவர் பேசினால்தான் பதிலுக்கு நானும் பேசுவேன்; அவர் சலாம் சொன்னால்தான் நானும் பதில் சொல்வேன் என்ற வகையில் நடந்து கொள்கின்றவர் உறவைப் பேணியவருக்கான நன்மைகளை அடையமுடியாது. இது பதில் நடவடிக்கை என்றே கருதப்படும். மாறாக உறவை முறித்துக்கொண்டவரிடம் வலியச் சென்று உறவாடுபவருக்கே உறவைப் பேணியதன்  சிறப்புகள்  கிடைக்கும். ஈமான் எனும் இறை விசுவாசம் பறிக்கப்பட்டு ஒரு மோசமான முடிவை நோக்கி நாம் போகாதிருக்க மாட்டோம் என்பதற்கு எம்மிடம் என்ன உத்தரவாதம் இருக்கிறது. இதுகுறித்து நாம் அஞ்சக் கூடாதா? எனவே அவர்கள் அழுதவர்களாக முகங்குப்புற விழுவார்கள். அது அவர்களுக்கு இறையச்சத்தை அதிகப்படுத்தும் (17:109) எனும் சிறந்த நிலைக்கு நாம் அனைவரும் திரும்பவேண்டும்.

அஞ்சி நடந்தோரை நரகிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பான்:

உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தில் நுழையாமல் இருக்கமுடியாது. (இது) உம்முடைய இறைவனால் தீர்மானிக்கப் பட்ட உறுதியான முடிவாகும். பிறகு (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதியாளர்களை முழந்தாளிட்டவர்களாக அதிலேயே நாம் (நிரந்தரமாக) விட்டு விடுவோம். (19:71,72) இறை நம்பிக்கை கொண்டு இறைவனை அஞ்சி நடந்தோரை அவர்களின் நல்லறங்களுக்கு ஏற்ப இறைவன் காப்பாற்றுவான். (இப்னு மஸ்ஊத்(ரழி), உம்மு முபஷ்´ர்(ரழி), திர்மிதி, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் தபரீ, தப்சீர் இப்னு அபீ ஹாத்திம், இப்னு கஸீர்: 5:635-641) அல்லாஹ்வைத் தூய்மையாக அஞ்சிய அத்தகைய நல்லோர்களின் கூட்டத்தில் நம்மையும்  அல்லாஹ்  சேர்த்தருள்வானாக.

Previous post:

Next post: