சொர்க்கம் எங்கே இருக்கிறது? சொர்க்கம் ஏன்? யாருக்காக?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
பொதுவாக சொர்க்கத்தைப் பற்றியான கருத்து பல்வேறாக நிலவுகிறது.
அவை :
1. வானில் இருக்கிறது.
2. இறைவன் எங்கே இருக்கின்றானோ அங்கே இருக்கிறது,
3. தூய்மையான இடத்தில் உள்ளது,
4. நாம் வாழ்வதே சொர்க்கத்தில்தான்,
5. சொர்க்கம் இருப்பதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
6. சொர்க்கம்–நரகம் என்பதெல்லாம் அழகிய கற்பனையே!
இதில் எது உண்மை?
இறை நம்பிக்கையாளர்கள் (ஈமான் கொண்டவர்கள்) மறைவானவற்றை நம்புவதும், நம்பவேண்டும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கையாகும். இதில் முஸ்லிம்களில் எந்த பிரிவை சார்ந்தவர்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அத்தகைய மறைவானவற்றில் ஆறு வியங்கள் அடங்கும்.
அவைகள் :
1. இறைவன் இருக்கின்றான், அவன் ஒருவன் தான் என நம்புவது,
2. வானவர்களை (மலக்குகளை) நம்புவது,
3. இறைநூல்கள் இறைவனால் அருளப் பட்டது தான் என்று நம்புவது.
4. இறைத்தூதர்களை (நபிமார்களை) நம்புவது.
5. விதியை நம்புவது,
6. மரணத்திற்குப் பிறகு மறுமை வாழ்க்கையில் இவ்வுலக வாழ்க்கைக்கு ஏற்ப சொர்க்கம்–நரகம் கிடைக்கும் என்று நம்புவது.
மேற்கண்ட ஆறு வியங்களில் ஆறாவதாக குறிப்பிட்ட சொர்க்கம் இருக்கின்றது என்று நம்புவதால் அது எங்கே இருக்கிறது? என்று பார்ப்போம். அல்லது சிலர் கூறுவது போல் சொர்க்கம்–நரகம் அழகிய கற்பனையா?
முஸ்லிம்களின் நம்பிக்கை மற்றும் இஸ்லாமிய கொள்கை (அ(க்)கீதாபடி ஏழு(7) வானத்திற்கு மேலே சொர்க்கம் இப்போ உள்ளது. பார்க்க வசனம் 71:15. அதில் எட்டு வகையான (8 வாசல் அல்ல) சொர்க்கம் உள்ளது. அதுமட்டுமல்ல இறைத் தூதரான முகம்மது நபி(ஸல்) அவர்கள் மிஆராஜ் (விண்ணுலக பயணம்) பயணத்தின் போது (7) ஏழு வானத்தை கடந்து சென்று சொர்க்கத்தையும், நரகத்தையும் பார்த்ததாகவும் தெளிவான ஹதீத் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில சந்தர்ப்பங்களில் சொர்க்கத்தை பார்த்ததாகவும் தெளிவான ஹதீத் நூல்கள் மூலம் தெரியவருகிறது.
மேலும் பார்க்க : (17:60, 53:13)
எனவே சொர்க்கம் வானத்தில் இல்லை, வானத்திற்கு மேலேதான் இப்பொழுது உள்ளது என்பது தெளிவான ஒன்றாகும். சொர்க்கத்தில் (8) எட்டு வகை உள்ளன என்பதும் தெளிவான ஒன்றாகும்.
மேற்கண்ட வசனப்படி இப்பொழுது உள்ள அந்த சொர்க்கத்திற்கு யார் உடனே செல்வார்கள் என்றால் உயிர்தியாகிகள் மற்றும் நல்லடியார். (பார்க்க வசனம் 9:111)
ஆனால் மறுமை நிகழ்ச்சிக்குப் பிறகு இப்பொழுது இருக்கின்ற சொர்க்கத்திற்குள் நுழைவோமா என்றால் இல்லை. என்ன இது கேள்விப்படாத ஒன்றாகவும், புது வித குழப்பமாகவும் இருக்கிறது என சிலர் நினைக்கலாம்.
அதற்குக் காரணம் : இறைநூலினை (குர்ஆனின்) மொழிபெயர்ப்பை புரிந்து படிக்காததாலும் மற்றும் சிந்திக்காமல் அரபியில் மட்டும் படிப்பதாலும் இது ஆச்சரியமாக இருக்கின்றது. ஆனால் உண்மை என்னவென்றால் இப்போ இருக்கின்ற எதுவும் அன்று இருக்காது.
எவ்வாறு என்றால் இறைநூலில் கீழ்க்கண்ட வசனங்களில், 14:48, 21:104, 39:67 இறைவன் கூறியுள்ளான்; வானம், பூமி அனைத்தும் அழிக்கப்பட்டு பின்னர் வேறு விதமாக படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு என்றால் இப்பொழுது இருக்கின்ற சொர்க்கமும் நரகமும் கூட அழிக்கப்பட்டுவிடுமா?
நிச்சயமாக அழிக்கப்பட்டுவிடும்.
ஏன் என்றால் இறைவனுக்கே உள்ள தனி சிறப்பு அது. அதாவது முதலில் எதையயல்லாம் அவன் படைத்தானோ அதை அழித்துவிட்டு மீண்டும் படைக்கும் ஆற்றல் உள்ளவன் இறைவன். பார்க்க வசனம் : 2:27, 17:4951, 29:20, 30:27, 31:28, 36:79, 36:81, 40:57, 79:27.
இதை நாமாகக் கூறவில்லை. இறைவன் தன் வழிகாட்டி நூலில் (அல்குர்ஆனில்) கீழ்க் கண்ட வசனங்களில் அனைத்தையும் வேறு மாதிரியாக மாற்றுவேன் என்று கூறியுள்ளான். பார்க்க வசனம் : 10:4, 10:34, 27:64, 29:19, 30:11, 30:27, 85:13. (மேலும் மறுமை நிகழ்வையும், மறுமை வாழ்வையும் தெரிந்து கொள்ள அத்தியாயம் (81,82,83,84) ஆகியவற்றை படித்தால் தெரிந்து கொள்ளலாம்)
உலகம் அழிக்கப்பட்ட பின்பு அனைவரும் மீண்டும் எழுப்பப்படுவோம்.
“பூமியிலிருந்தே உங்களைப் படைத்தோம், இதிலேயே (பூமியிலேயே) உங்களை வாழச் செய்வோம், மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்” (அ.கு.20:55)\ (பார்க்க வசனம் : 7:25, 18:4749, 30:25, 71:17,18)
அவ்வாறு எழுப்பப்பட்ட மனிதர்களை வெறுமனே விட்டுவிடப் போவது இல்லை. நல்லவர்களுக்கு சொர்க்கமும், தீயவர்களுக்கு நரகமும் கொடுக்கப்படும். இது இறை நியதி.
அது எங்கே?
நிச்சயமாக புதியதாக படைக்கப்பட இருக்கின்ற நிரந்தரமான சொர்க்கம் பூமியில் தான் என்பதையும் இறைநூல் கூறுகிறது. பார்க்க வசனம் : 89:22, 14:48
சொர்க்கம் ஏன்? யாருக்காக?
மனிதர்களில் இறைவனுக்காக யார் யாரெல்லாம் உயிர் தியாகம் செய்தும், பொறுமையாகவும் இருந்தார்களோ அவர்களை அடையாளம் காட்டவே சொர்க்கத்தையும், நரகத்தையும் இறைவன் படைத்துள்ளான். அது மட்டுமல்ல அதுவே நிரந்தரமான சொர்க்கம். (2:82, 2:214, 43:71)
அந்த சொர்க்கம் எப்படி இருக்கும் :
1. அங்கே இறைவனை காண்பார்கள். (2:46)
2. அழகான குடியிருப்புக்கள் (மாளிகை) உண்டு. (9:72)
3. நல்ல சந்ததிகள் பெற்றோருடன் இருப்பார்கள். (13:23)
4. வானவர்கள் வாழ்த்துக் கூறி அழைத்துச் செல்வார்கள். (39:73)
5. தூய்மையான (ஹுருளின்களின்) துணை கிடைக்கும். (2:25)
6. சொகுசுக் கட்டில்களில் இருப்பார்கள். (35:56)
7. வெயில் தெரியாது. (4:57)
8. கடும் குளிரும் தெரியாது. (76:13)
9. கள்ளம் கபடம் யாரிடமும் இருக்காது. (முற்றிலுமாக நீக்கப்படும்) (7:43,15:47)
10. பெண்களுக்கும் சொர்க்கம் உண்டு. (3:195)
11. நீரூற்றுக்கள் இருக்கும். (2:25)
12. நினைத்தவை யாவும் கிடைக்கும். (16:31)
13. வீண் பேச்சுக்கள் இருக்காது. (19:62)
14. ஒருவரை ஒருவர் ஸலாம் கூறிக்கொண்டே இருப்பார்கள். (14:23)
15. பசி இருக்காது. (20:118)
16. தாகம் இருக்காது. (20:119)
17. அனைத்து வகை கனிகளும் உண்டு. (56:20)
18. இரு வேளைகளும் உணவு உண்டு. (19:62)
19. தூய மது வழங்கப்படும். (47:15)
20. பணி புரிய சிறுவர்கள் இருப்பார்கள்.(52:24)
21. பட்டாடைகள் உண்டு. (18:31)
22. மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள். (75:22)
24. இரண்டு வகை சொர்க்கம். (55:46,53, 55:62)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதனின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்‘ என்று அல்லாஹ் கூறுகிறான். (அ.கு.32:17)
அத்தகைய சொர்க்கத்தை முஸ்லிம்கள் அனைவரும் அடைய பிராத்திப்போம்.