தொப்பியும், தொழுகையும்!
K. ரஹிமுத்தீன், குண்டூர், திருச்சி.
மறு பதிப்பு :
அன்பு இஸ்லாமிய தோழர்களே, கடந்த 40 வருடங்களுக்கு முன் தொழுகையின்போது தொப்பி அணிவது, அணியாமல் தொழுவது போன்ற பிரச்சனைகள் எந்தப் பள்ளிவாசலிலும் எழவில்லை. இன்றும் இந்த தொப்பி விவகாரம் ஒருசில பள்ளிவாசலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன என அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டாலும் ஜமாஅத்துல் உலமாக சபைக்கு கீழ் இயங்கும் பள்ளிவாசல்கள் நான்கு மத்ஹப்களை பின்பற்றுபவர்களுக்குச் சொந்தமானது என பகிரங்கமாகவே விளம்பரம் செய்யப்பட்டுள் ளது. இதிலிருந்து அல்லாஹ்வுக்கும், நபி(ஸல்) அவர்களுக்கும் இவர்கள் எந்த அளவுக்கு கட்டுப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. ஓர் இம்மி அளவும் அல்குர்ஆனையும், சஹீ ஹதீது களையும் பின்பற்றுவதில்லை. பள்ளிவாசலுக்குத் தொழ வருபவர்களுக்கு முன் உதாரண மாக இருக்க வேண்டிய நிர்வாகத்தினர் கேலிக்கூத்துக்கு ஆளாகியுள்ளனர்.
உதாரணம் :
1. ஜுமுஆ தொழுகைக்கு மட்டுமே வரும் பள்ளிவாசலின் நிர்வாகி தொழுகிறாரோ இல்லையோ அவரது பார்வை எப்போதும் பள்ளிவாசலின் வாசல் பகுதியையே நோக்கி யிருக்கும். உள்ளே வருபவர்கள் தொப்பி அணிந்து வருகின்றனரா இல்லையா? என்பதை பார்த்தபின் தொப்பி அணியாத நபரை நோக்கி சென்று அட்டைப் பெட்டிகளில் வைக்கப் பட்டிருக்கும் தொப்பியை எடுத்துச் சென்று தலையில் வைத்து அழுத்து வதும், அந்த நபரை கோபப் பார்வை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. தொப்பி அணிவது ஆகக் – வழமை மட்டுமே. ஆனால் அதே நிர்வாகி சுன்னத்தான காரியத்தை பின்பற்றுவதில்லை. ]
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். கெண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிபவர்கள் நரகவாதிகள் மற்றும் என்னை சார்ந்தவனில்லை என்று கூறியிருந்தும் தனது (பேண்டை) கீழாடையை கெண்டை காலுக்குக் கீழே அணிந்து வருகிறார். (சில நபர்கள் பேண்டை கெண்டை காலுக்கு மேலே மடித்து விட்டு தொழும் நிலையில்) பேண்டை இவர் மடித்தும் விடுவதில்லை. இந்த நிலையில் சுன்னத்தான தாடி வைப்பதும் இல்லை,யூத கலாச்சாரத்தை பின்பற்றி அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டவர்களின் வழிமுறையில் கொஞ்சமும் பிசகாமல் தாடியை மழித்து வைத்துள்ளார். மற்ற நிர்வாகிகளும் இதே நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர் களுக்கு சொல்லித்தரும் நிலையில் இருக்க வேண்டியவர்கள் மற்ற தொழுகை யாளியின் கோபப் பேச்சுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஒரு நிர்வாகி தொழுகையின் போது தற்காலிக தொப்பியை அணிவதும், சுஜூது, சஜ்தா செய்யும்போது அந்த தொப்பி கீழே விழுந்து பந்து போல் ஓடுவது தினசரி நடக்கும் சுபுஹு தொழுகையின் கூத்து: இவர்கள்தான் நிர்வாகி கள். இப்படி சுன்னத்தான செயல்களைக் கேலிக் கூத்தாக்கி வருபவர்கள் திருந்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கலாம். இல்லையேல் மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொள்ளவும்.
2. பள்ளிவாசலுக்கு தொழ வரும் நபர்களில் சிலர் தற்காலிக தொப்பி அணிந்து அது விழுந்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரும் செயலை செய்யாமல் நிரந்தர தொப்பி அணிவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லது நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை தொப்பி அணிவது/அணியாமல் இருப்பது) தொடர்ந்து கடைபிடிக்கவும்.
3. பள்ளிவாசலுக்கு தொழ வரும் ஒருசிலர் ஒளு செய்ய நஜீசுடன் இருக்கும் பேண்டை மடிப்பதால் ஓளூவும், தொழுகையும் பாழாகிறது. ஆகவே நிரந்தரமாக கெண்டைக் காலுக்கு மேலே ஆடை அணியும் பழக்கத்தினைக் கடைபிடித்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து விலகிட வேண்டுகிறேன்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை பார்த்து பலரும் கீழ்க்கண்டவாறு எண்ணுகிறார்கள் அதாவது மேடையேறும் நடிகர்கள் மேக்கப் (அலங்கார) மேனாகவும் எண்ணுகிறார்கள். ஆகவே மேற்கண்ட நடிப்புகளையும், மேக்கப் வேலைகளையும் தவிர்த்து அல்குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் அனைவரும் பின்பற்றி முழு ஈமானுடன் தொழுது அல்லாஹ்வின் அருள் பெறவும், அனைவருக்கும் துஆ செய்தவனாகவும் முடிக்கிறேன். இதில் ஏதேனும் அல்குர்ஆனுக் கும், சஹீஹ் ஹதீஃதுக்கும் முரணாக இருந்தால் சரியான அல்குர்ஆன் வசனங்களையும், சஹீஹ் ஹதீஃதுகளையும் கொண்டும் என்னை தெளிவு படுத்தவும், திருந்துகிறேன். இதில் ஏதேனும் எழுத்துப் பிழை இருந்தால் திருத்தி வாசிக்கவும், சுட்டிக்காட்டவும்.
குறிப்பு : அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் இதனைக் கடைபிடித்து இதனை பயான் செய்யும்போது மக்களுக்கு தெளிவாக்கவும் மற்றும் தாங்களும் (கடைபிடிக்காதவர்கள்) தெளிவடையவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கவும்.
ஆதாரங்கள் :
1. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன், என்மீது (நான் சொன்னதாக) வேண்டு மென்றே பொய்யுரைக்கின்றானோ, அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்(ரழி), புகாரி: 3461
2. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) எவர் பொய்யுரைக்கிறானோ அவன் நரகம் தான் செல்வான். அறிவிப்பவர்: அலீபின் அபீதாலீப்(ரழி), முஸ்லிம்: 2
3. யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ, அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி), முஸ்லிம் : 147
4. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளர விடுங்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) முஸ்லிம் : 434
5. உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்தவுடன் இரண்டு ரகாஅத்துகள் தொழாமல் (தஹ்யத்துல் மஜ்ஜித்) உட்கார வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி:444
6. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன் வேஷ்டியை (கீழாடையை) பெருமைக்காக (தரை கூட்ட) இழுத்துச் செல்பவர்கள் நரகவாதி, அவனை அல்லாஹ் தன் அருட்பார்வையால் பார்க்கமாட்டான். அறிவிப்பாளர்கள்: அபூஸயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் புகாரி: 5887, 5787, முஸ்லிம்: 2087, அபூதாவூத்: 638, சமுரா(ரழி) அவர்கள் அஹ்மத் 19309, அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள், புகாரி: 3665, முஸ்லிம்: 2085, அபுதர்(ரழி) அவர்கள். முஸ்லிம் : 106.
7. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தங்க மோதிரத்தை (தங்கத்தை) அணிய வேண்டாமென்று ஆண்களுக்கு தடை விதித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), புகாரி:5864
8. உலக (இம்மை மீது) ஆசை அதிகரித்த வரின் எண்ணங்கள் செல்லும் திசை பணம் இருக்கும் பக்கமேயாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸயீ.
9. எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார். எனக்கு மாறு செய்பவர் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் ஆவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), புகாரி: 7280
ஆசிரியர் குறிப்பு :
மார்க்கம் கற்ற மாமேதைகள் என மார் தட்டும் மவ்லவிகள் குர்ஆனையும் பின்பற்றுவதில்லை, ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களையும் பின்பற்றுவதில்லை, நான்கு இமாம்களின் வழி காட்டலையும் பின்பற்றுவதில்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள் நரகில் கொண்டு சேர்க்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்ததை நிராகரித்து பித்அத்களை அரங்கேற்றுவதில் மிகமிகக் குறியாகவும், வெறியாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தொப்பி விவகாரமும் நல்லதொரு ஆதாரமாகும்.
தொப்பி அணிவதும் சுன்னத்தும் அல்ல, பித்அத்தும் அல்ல, ஆதத் ஆகும். ஒருவர் வழமையாக தொப்பி அணிந்தே காணப்படுகிறார். அவர் தொப்பியோடு தொழலாம். வழமையாக தொப்பியின்றித் திரிபவர் தொப்பியின்றித் தொழுவதே சிறப்பு. தொழுகைக்கென்று தொப்பி அணிய வற்புறுத்துவது பாவம். அது தொப்பி அணிந்து தொழ வற்புறுத்துப வரையே சாரும்.
இந்த மவ்லவிகள் முஸ்லிம்களை பித்அத்தை செய்யவைத்து அவர்களை நரகில் தள்ள எந்தளவு வெறித்தனமாகச் செயல்படுகிறார்கள் பாருங்கள்! தாடியை வளர விடுவதும், மீசையைக் கத்தரிப்பதும் எனது எஜமானின் (அல்லாஹ்வின்) கட்டளை என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க, அதைக் கண்டுகொள்ளாமல் சு.ஜ. மவ்லவிகள் பித்அத்தான முறையில் தொப்பி அணிவதை வற்புறுத்துகிறார்கள். அதற்கு மாறாக ததஜவினரின் பித்அத்தைப் பாருங்கள். எப்போதும் தொப்பியுடன் காட்சி தரும் ஓர் இமாம் தொழ வைக்கும்போது தொப்பியைக் கழற்றி மிம்பரில் வைத்துவிட்டுத் தொழவைக்கும் காட்சியையும் பார்த்தோம். சு.ஜ.வினர் தொப்பிப் போட்டுத் தான் தொழவேண்டும் என்பது எப்படி பித்அத்தோ–வழிகேடோ அதேபோல் ததஜாவினர் தொப்பி போடாமல் தொழனும் என்பதும் பித்அத்தே–வழிகேடே. மவ்லவிகள் அனைவரும் முஸ்லிம்களை வழிகெடுத்து நரகில் தள்ளவே மிக ஆர்வமாக உள்ளனர்!!