பல்சமயச் சிந்தனை!
ஆசிரியர் குழு 2025
ஜனவரி தொடர்ச்சி…
சந்தேக நிவர்த்தி :
நியாயமான சந்தேகம்; தெளிவாக்கப் பட வேண்டியதே. சந்தேகத்தை விளங்கிக் கொண்டால் செய்தி எளிதாகிவிடும். உலக ஆதாயத்திற்காக மனிதர்களால், சுயநல நோக்கோடு ஏற்றுக் கொள்ளப்பட்டவை மதங்கள் என்று பார்த்தோம். மார்க்கத்தைத் திரித்து மதங்களாக ஆக்கும் ஒரு (புரோகிதர் கள்) கூட்டம் உலக ஆரம்பத்திலிருந்தே இருக்கிறார்கள். உலகம் முடியும் வரை இருப்பார்கள். இக்கூட்டத்தாரால் முந்தைய தூதர்களின் மார்க்கம் மதங்களாக ஆக்கப்பட்டது போல், இறுதித் தூதரின் நிறைவு செய்யப்பட்ட மார்க்கமும் மதமாக ஆக்கப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? முஸ்லிம் மதவாதிகளின் கொள்கைகள் பற்றி, நான் தொடக்கத்திலேயே கிறுக்கப்பட்ட புழக்கத்திலுள்ள புதிய நோட்டு என்று குறிப்பிட்டு விளக்கினேன்.
இறுதி நெறிநூல் உறுதியாக இருக்கும் நிலையில், பல மதப் பிரிவுகளை மதவாதிகள் உண்டாக்கி இருக்கிறார்கள் என்றால், முந்தைய மதவாதிகள் மக்களை எந்த அளவிற்கு வழிகெடுத்திருப்பார்கள்? சிந்திக்க. ஆனால் ஒரு வேறுபாடு. முந்தைய புரோகிதக் கூட்டத்தார் இறைவன் சொன்னதாகவும், இறைத்தூதர்கள் சொன்னதாகவும் சொல்லாததைச் சொல்லி நம்ப வைத்தார்கள்; இறைத் தூதர்களை விட ஒருபடி மேலே சென்று, அவர்களால் செய்ய முடியாததைச் செய்தார்கள். ஆம்!
இறைவன் அறிவித்ததை இறைத் தூதர்கள் தவிர்த்து, தங்கள் விருப்பப்படி எதையும் மக்களுக்கு அறிவிக்கவில்லை. அந்தத் துணிவும் அவர்களுக்கு இருக்கவில்லை. இக்கூட்டத்தாரோ அதைத் துணிச்சலுடன் செய்தார்கள். மக்களுக்கும் அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று பார்ப்பதற்கு “உரைகல்‘ இருக்கவில்லை. பதிவு செய்யப்பட்ட உண்மையான நெறிநூல் அவர்களிடம் இல்லை. நம்பிச் செயல்பட்டார்கள்; பல பிரிவினர்களாகப் பிரிந்தார்கள். உலக அமைதியைக் கெடுத்தார்கள். “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்‘ என்று ஒரு பழமொழியைக் கூறுவர். இக்கூட்டத்தார் இதைப் பயன்படுத்தி உலக ஆதாயம் அடைந்தார்கள்; மறுமையை இழந்தார்கள்.
இது முந்தைய புரோகிதக் கூட்டம். ஆனால் பாதுகாக்கப்ப்டட நெறிநூல் கொடுக்கப்பட்ட பின்னர் தோன்றிய இக்கூட்டத்தார், வேறு ஒரு தந்திரத்தை கையாண்டார்கள். காரணம் இறைவன் சொன்னான் என்றோ, இறுதித் தூதர் சொன்னார் என்றோ சொல்ல முடியாது. “உரைகல்‘ இருக்கிறது. அதனால் அவர்கள் அகப்பட்டுக் கொள்வார்கள். ஆகவே இறுதித் தூதருக்குச் சுமார் 150 ஆண்டுகள் கழிந்தபின் தோன்றிய பெரியார்களின் பெயரால், அவர்களை மையமாக வைத்து, அவர்களை அளவு கடந்து புகழ்ந்து, அவர்கள் சொன்னதே மார்க்கம் என்று மக்களை நம்பவைத்து, அவர்கள் சொல்லாததை எல்லாம் அவர்கள் சொன்னதாகச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
கொயபல்ஸ் தத்துவம் :
“கொயபல்ஸ் தத்துவம்‘ என்று சொல்வார்கள். இல்லாததை (பொய்யை) திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால், அதை உள்ளதாக (உண்மையாக) மக்கள் நம்பி விடுவார்களாம். இந்த அடிப்படையில் மார்க்கத்தில் இல்லாததை எல்லாம், மார்க்கத்தில் உள்ளதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி சொல்லி மக்களை நம்பவைத்து, சமயங்களைத் தோற்றுவித்தார்கள். சிறிதளவிற்குத் தெரிந்த ஒருவன் இதற்கு ஆதாரமில்லையே என்று கேட்டால், உடனே அவனை, நீ நிரம்பப் படித்துவிட்டாயோ? அவர்களை விட இறுதி நெறிநூலையும், தூதரின் வழியையும் தெரிந்துவிட்டாயோ என்று அவனை மட்டந்தட்டி, மக்களுக்கு நடுவே அவனைச் செல்லாக்காசாக ஆக்கி விடுவார்கள்.
ஆனால் இந்த வாதம் இறைவனால் சபிக்கப்பட்ட அபூலஹப், அபூஜஹீல் ஆகிய வழிகேடர்களின் வாதமே அல்லாமல், நேர்வழி நடந்தவர்களின் வாதம் அன்று என்பதை உணர மாட்டார்கள். இறுதித் தூதரின் சொல்படி, முஸ்லிம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இறுதி நெறிநூலும், இறுதித் தூதரின் வழிமுறைகளுமே அடிப்படை! அல்லாமல் வேறு யாருடைய சொல்லும் அடிப்படை இல்லை. இவை இரண்டுக்கும் ஒத்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்; மாறுபட்டால் அஞ்சாது ஒதுங்கிவிடலாம். இதுவே மார்க்கம். மனிதன் சொல்படி நடப்பதே மதம் ஆகும்.
மனிதரில் பிரிவுகள் எப்படித் தோன்றின?
மக்களில் பல பிரிவுகள் ஏற்பட, பொறாமை, மனித விருப்பு வெறுப்பே காரணமாகும். (பார்க்க 2:213). உதாரணத்திற்கு அண்மைக்கால வரலாற்றைக் கூறுகின்றேன். பவுலால் ஜீஸஸ்(அலை) பெயரைச் சொல்லிக் கிறிஸ்தவ மதம் தோற்றுவிக்கப்பட்டது. கருத்து வேறுபட்டால், அதிலும் பல பிரிவுகள் ஏற்பட்டன. மார்ட்டின் லூர்தருக்கு ஒருசில எண்ணங்கள் தோன்றின. அன்று இங்கிலாந்து அரசர், தனக்கு இரண்டாவது திருமணம் முடிக்க அனுமதி மறுத்த போப்பின் மீது கோபம். அதனால் மார்ட்டின் லூர்தரை ஆதரித்தார். புரட்டஸ்டாண்ட் மதம் தோன்றியது; வளர்ந்தது. இப்படிப்பட்ட பின்னணிகளிலேயே பல சமயங்கள், மதங்கள் தோன்றின.
ஒரே கொள்கைதானா?
ஒரே கொள்கையில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அனைவரும் ஒரே கொள்கையிலே இருக்கிறார்களா? என்பது ஒரு வினா. இதற்கொரு உதாரணம் சொல்ல வேண்டின், தமிழ்நாட்டில் பெரியார் தி.க. என்று பெயரில் ஒரு இயக்கத்தைத் தோற்று வித்தார். அவரோடு கருத்து வேறுபட்ட அண்ணா, தி.மு.க.வை உண்டாக்கினார். அதிலிருந்து எம்.ஜி.ஆர். அ.இ.அ.தி.மு.க. ஏற்படுத்தினார். பின்னர் எஸ்.டி.எஸ். அ.தி.மு.க.வைத் தோற்றுவித்தார். இன்னும் எத்தனை தோன்றுமோ? அறியேன். ஆனால் நம் சிந்தனை அதுவன்று. இதில் வியப்பளிக்கும் செய்தி. அனைவரும் பெரியார் கொள்கையில் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதே ஆகும். உண்மையில் இவர்களில் எவராவது ஒருவரே பெரியார் கொள்கையில் இருக்கமுடியும். அல்லது அனைவருமே பெரியார் கொள்கை விட்டு தங்கள் தங்கள் கொள்கையில் இருக்கலாம். இதுதான் முடியும். ஆனால் அனைவரும் உறுதியாகப் பெரியார் கொள்கையில் இருக்க முடியாது. இருப்பது உண்மையானால், அனைவரும் ஓர் அணியில்தானே இருக்க முடியும் பல அணிகளில் இருக்க முடியாதே. வேறு கண்கொண்டு பார்க்காதீர்கள். நீங்கள் எளிதாக விளங்கிக்கொள்ள இதை எடுத்துச் சொன்னேனேயல்லாமல், வேறு எந்த நோக்கமுமில்லை. இதுபோலவே இறைத்தூதர்களின் போதனையில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, மதவாதிகள் தங்கள் தங்கள் விருப்பப்படி கொள்கைகளை உண்டாக்கிக்கொண்டு, பல மதங்களைத் தோற்றுவித்தார்கள். சுமார் 50 ஆண்டுகளுக்குள் ஒரே கொள்கையில் இத்தனைப் பிரிவுகள் என்றால், பல நூறு ஆண்டுகளின் கொள்கையில் எத்தனைப் பிரிவுகள் உண்டாகி இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இஸ்லாத்தின் பெயரால் பல பிரிவுகள் :
இறுதித் தூதருக்கு முன்னால் இருந்த மக்கள் செய்த அதே தவற்றை இறுதித் தூதரின் மக்களும் செய்யத் தொடங்கினார்கள். மார்க்கத்திற்கு அடிப்படையான இறுதி நெறிநூலையும், இறுதித் தூதரின் போதனைகளையும் கைவிட்டு, பெரியார்களின் பெயர்களைச் சொல்லியே மக்களை வழி கெடுத்தார்கள். அவர்கள் சொல்வது போல், இறுதித் தூதரின் மறைவுக்குச் சுமார் 150 ஆண்டுகளுக்குப் பின்னே தோன்றிய நான்கு பெரியார்களின் பெயரால் சொல்லப்படுபவை களை எல்லாம் மார்க்கத்தில் சேர்த்தால், “இன்றைய தினம் மார்க்கத்தை முழுமையாக்கி, என் அருட்கொடைகளை நிறைவு செய்து, இஸ்லாத்தை மார்க்கமாகச் சம்மதித்தேன்‘ (5:3) என்ற இறை வசனத்தை நிராகரிக்க வேண்டியே வரும். அல்லது அந்த நான்கு பெரியார்களுக்கும், இறை வெளிப்பாடு வந்ததாக ஒப்புக்கொள்ள வேண்டிவரும். இவை எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளா? அவை மேற்படி கூட்டத்தாரின் கற்பனைகளேயன்றி வேறில்லை. இக்கூட்டத்தாரே இஸ்லாத்தின் பெயரால் பல பிரிவுகளை உண்டாக்கினார்கள்.
உண்மையான இஸ்லாம் மார்க்கம், இறுதித் தூதரின் 40ஆவது வயதிலிருந்து 63 ஆவது வயதுவரை, இறைவன் தன்னிடமிருந்து மார்க்கமாகக் கொடுத்ததே ஆகும். இறுதித் தூதரின் 40ஆவது வயதுக்கு முன் இடம் பெற்ற செயல்களே மார்க்கத்தில் சேர்க்கப்படாதபோது, இறுதித் தூதரின் மறைவுக்குப் பிறகு, இறை வெளிப்பாடு முற்றுப் பெறுவதற்குப் பிறகு அதுவும் 150 ஆண்டுகள் கழித்து மார்க்கத்தில் புதிதாக ஒன்றைச் சேர்க்க முடியுமா? ஒருகாலும் முடியாது.
அந்த நான்கு பெரியார்களும், உண்மையில் மார்க்கத்தில் புதிதாக ஒன்றையும் இவர்கள் சொல்வது போல் இணைக்கவில்லை. உங்கள் சந்தேகத்திற்குரிய மத்ஹபுகள், தரீக்காக்கள், தஸவ்வுப் என்ற பெயரால் நடக்கும் கோலங்கள், இயக்கங்கள் அனைத்தும், மார்க்கத்தைச் சார்ந்தவை அல்ல. உண்மையில் இறுதித் தூதரின் மறைவுக்குச் சுமார் 400 ஆண்டுகள் கழித்து, அவை ஒரு கூட்டத்தாரால் கற்பனையாக வடிவமைக்கப்பட்ட மதங்களாகும். பெரியார்களின் அடக்க இடங்கள் புதைகுழிகளே, அல்லாமல் அவை பள்ளிவாசல்கள் அல்ல அங்குத் தொழுகைக்கும் இடம் இல்லை. மறுமையின் சிந்தனையையும், மரணத்தின் அச்சத்தையும் மனிதருக்கு உண்டாக்கி, நேர்மையாக ஒழுக்கமாக மனிதனை வாழத் தூண்டும் நோக்கோடு, மக்களின் பொது அடக்க இடங்களுக்குச் செல்ல மார்க்கத்தில் அனுமதி உண்டேயல்லாமல், அந்த இடங்களுக்குச் சென்று(தர்கா) வழிபாடு செய்யவோ, சடங்குகள் செய்யவோ கண்டிப்பாக அனுமதி இல்லை. மாறாக அது வெளிப்படையான வழிகேடாகும்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)