ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2014 ஏப்ரல்

பிப்ரவரி 2014 தொடர்ச்சி….
M.T.M. முஜீபுதீன், இலங்கை

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண் மக்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக அன்புடை யவன். (அல்குர்ஆன் : 33:59)

மனிதர்கள் உடை அணிவது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆபாசங்களைத் தவிர்ப்பதற்காக வும், அந்நிய ஆண்களின் துன்புறுத்தலிலிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, கால நிலை மாற்றத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் ஆகும். அவதானியுங்கள்.

இன்னும் அல்லாஹ் தான் படைத்துள்ளவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களையும் ஏற்படுத்தினான். மலைகளிலிருந்து உங்களுக்குக் குகைகளையும் ஏற்படுத்தினான். இன்னும் வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடிய சட்டைகளையும் உங்களுடைய போரில் உங்களைப் பாதுகாக்கக் கூடிய கவசங்களையும் உங்களுக்காக அமைத்தான். நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பதற்காக, இவ்வாறு தன் அருட்கொடையை உங்களுக்குப் பூர்த்தியாக்கினான். (அல்குர்ஆன் : 16:81)

இஸ்லாமியப் பெண்கள் தங்கள் அழகலங்காரங்களில் சாதாரணமாக வெளியில் தெரிகின்றவை தவிர்த்த ஏனைய பகுதிகளை அந்நிய ஆடவர்களுக்குக் காட்டாத விதத்தில் உடை அணிவர். அன்று மதீனாவில் வாழ்ந்த விசுவாசம் கொண்ட பெண்கள் வெளியில் செல்லும்போது தம் மானத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டும், அல்லாஹ்வின் கட்டளையை மீறாத முறையிலும், தமது சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கமைய பின்வருமாறு உடை அணிந்து வெளியே சென்றனர். அவ்உடை அமைப்பாவது,

ஆள் அடையாளம் தெரியும் நிலையில் தமது முகம் தவிர்த்து, முழு உடலையும் மறைத்த படி வெளியில் சென்றனர் பெண்கள்.
நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு முஸ்லிம் பெண்களிடம் ஏற்பட்ட உடை அமைப்புக்களாவன:
1. தமது இடது கண் தவிர்ந்த மற்ற உடல் பகுதிகளை மறைத்துச் சென்ற பெண்கள்.
2. தம் இரு கண்கள் தவிர்ந்த மற்ற பகுதிகளை மறைத்துச் சென்ற பெண்கள்.
3. தம் முகத்தின் அரை மேல் பகுதியையும், கைமணிக்கட்டு தவிர்ந்த மற்ற பகுதிகளை மறைத்துச் சென்ற பெண்கள்.
4. மக்கள் அதிகம் ஒன்று கூடுகின்ற புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் சந்தர்ப்பங்களில்.
மேலே உள்ள 1 முதல் 3 வரை அமைப்புகளில் உடை அணிந்தவர்களும் அவசியம் முகத்தை மறைக்காது செல்லப் பணிக்கப்பட்டுள்ளனர்.

கீழ்வரும் புகாரி : 23ம் பாடத்தில் ஆயிஷா(ரழி) அவர்கள் கூறுவதாக வந்துள்ள செய்தியை அவதானியுங்கள்.
ஆயிஷா(ரழி) அவர்கள் இஹ்ராமோடு இருந்த போது மஞ்சள் நிற உடையணிந்து கொண்டார்கள். “பெண்கள் தங்கள் வாய்களை துணியால் மூடவோ, முகத்தை முழுவதும் மூடவோ கூடாது; குங்கமப் பூச்சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது” என ஆயிஷா(ரழி) கூறினார்கள். “”நகைகள், கறுப்பு மற்றும் ரோஜா நிற ஆடை, காலுறை ஆகியவற்றை பெண்கள் அணி வதில் தவறில்லை” என்று சொன்னார்கள்.
(புகாரி: பாகம்-2.அத்தியாயம்: ஹஜ் பாடம் 23)

சில பெண்கள் தற்காலத்தில் பல இடங்களுக்கு உடை அணிந்து செல்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லா மனித கண்களுக்கும் உடை அணியாதவர்களாகக் காட்சி கொடுக்கின்றனர். தொலைக் காட்சி நிறுவனங்களும்,பத்திரிகைகளிலும், தற்போதைய சினிமா படங்களிலும், விளையாட்டுக் களியாட்டு நிகழ்ச்சிகளிலும் பெண்களின் ஆபாச உடைகளுட னான காட்சிகளை சர்வ சாதாரணமாகக் காணலாம். சிலர் தமது ஊடக சாதனங்களுக்கூடாக புகைத்தல், மது பாவனை, பெண்களின் ஆபாசக் காட்சிகளையும் மிகவும் தந்திரமான முறைகளில் மக்கள் மத்தியில் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களிடம் ஏன் நீங்கள் பணத்திற்காகப் பெண்களை மானபங்கப் படுத்துகிறீர்கள் என்று கேட்கின்றபோது அவர்களின் பதில் விசித்திரமாக அமைகின்றது. அவர்கள் சொல்லும் காரணம் யாதெனில் தமது வணக்க ஸ்தலங்களிலும், அரசர்களின் மாளிகைகளிலும் சித்திரங்களாகவும், சிலைகளாகவும் வடித்து வைத்துள்ளதை விடவா நாம் பெண்களின் ஆபாசங்களை வெளிக்காட்டி விட்டோம் என்று கேட்கின்றனர். திரும்ப அவர்களிடம் உங்களில் பலர் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று பெண்களை வலியுறுத்துகிறார்களே அந்த நல்ல கலாச்சாரம் எங்கிருந்து வந்தது எனக் கேட்பின், அவர்கள் கொடுக்கும் பதில் பின் வருமாறு அமைகின்றது.

ஆதிகாலத்தில் இருந்து பெண்கள் கற்புடன் ஒழுக்கமாக வாழவேண்டும் என பெயர் தெரியாத மிக உயர்ந்த மக்கள் வலியுறுத்தியே வந்துள்ளனர். இறைநெறி நூல்களும் இருந்திருக்கின்றன. அத்துடன் கடவுள் இருப்பதாகவும் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. வானவர்கள், கண்களுக்குக் காணாத சாத்தான்கள் பற்றிய நம்பிக்கைகள் இருந்தே வந்திருக்கின்றன. பாவம் செய்வோர் நரகமும், நன்மை செய்வோர் சுவர்க்கமும் அடைவதாக எழுதப் படாத, எழுதப்பட்ட நம்பிக்கைகள் இவ்வாறாகச் சமூகங்களில் இருந்தே வந்திருக்கின்றன. எனினும் அவர்களின் இறை நம்பிக்கையில் குருமார்களின் மெளட்டீக நம்பிக்கைகளும், அரசர், தலைவர்களினால் உருவாக்கப்பட்ட ஆபாசங்களும் உள் நுழைந்துள்ளன.

ஆகவே அவர்களிடம் இருந்த இறைநெறி வழிகாட்டிகள் மாசுபடிந்து போலிகள் நிறைந்த வேதத் தொகுப்புகளாக மாறியுள்ளன எனக் கூறுகின்றனர். இதனால் தம்மிடம் பெண்களைக் கண்ணியப் படுத்தும் கலாசாரம் இருப்பினும், உண்மையான சத்தியமார்க்கம் நம்மிடம் இல்லை என்கின்றனர். ஆகவே எம்மவர்கள் ஒழுக்க விழுமியங்களைப் பற்றியும் பெருமையாக கதைக்கின்றனர். ஆபாச முறையில் நடந்தால் பாவமில்லை எனவும் நினைக்கின்றனர். இதுவே, தமது சமுதாயத்தில் பெண்களை ஆபாசமாகப் பார்ப்பதற்கான காரணம் எனச் சொல்லித் தப்பிக்க முயல்கின்றனர். அத்துடன் அவர்கள் தமது மதங்களில் ஒழுக்கமாக வாழ்வதற்குப் போத னைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் தமது மதங்களில் கட்டாயப்படுத்தல் இல்லை என்கின்றனர். போதைப் பொருட்களை உட்கொள்வதை மார்க்கம் தடுக்கின்றது என்கின்றனர். ஆனால் விரும்பியோர் குடிக்கலாம் என்கின்றனர். இவ்வாறு அவர்கள் சொல்வதற்குக் காரணம் அவர்களின் இறைநெறி நூல்கள் மாற்றங்களுக்கு உட்பட்டுத் தூய்மை அற்றுப் போனதாகும். பெண்கள் தமது அங்கங்கள் வெளியே தெரியும் விதமாக, ஆபாசமாக உடை அணிவதை இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாள் நெருங்கும்போது சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்தும் இருப்பார்கள். நிர்வாணமாகவும் இருப்பார்கள். (நூல்: புகாரி , முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் தான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர், பசுமாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, மக்களை அடித்து இம்சிப்பார்கள்.
(இரண்டாவதுபிரிவினர் யாரெனில்) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக் கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் இரு பக்கம் சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.
அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள் (ஏன்) சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் (முஸ்லிம் : 4316)

அத்துடன் இஸ்லாம் ஆண்களுக்குத் தங்கம், பட்டு போன்ற ஆடைகளை அணிவதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் பெண்களுக்குத் தங்க ஆபாரணங்களும், பட்டுப் புடவையால் உடை அணியவும் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் தங்கத்தைச் சேமிப்பாக வைத்திருப்போர் வருடா வருடம் 2.5 வீதம் ஜக்காத் (ஏழைகளுக்குரிய வரி) வழங்கவும் பணித்துள்ளது. இதனால் தங்கம், வெள்ளி, செல்வப் பொருட்கள் பயன்படாது தேங்கு வதைத் தடுத்துள்ளது. (இஸ்லாமிய பொருளாதாரம் என்ற பகுதியில் பார்க்கலாம்). முஸ்லிம் பெண்கள் வெளியே உரிய துணையுடன் செல்லும்போது ஆள் அடையாளத்திற்காக முகத்தையும், மணிக் கட்டு வரை கைகளையும் தவிர்ந்த மற்றப் பகுதிகளை மறைத்துக் கொள்வது அவசியமாகும்.

அந்நிய வீட்டுப் பெண்களைக் கண்ணியப்படுத் தும் மார்க்கம் இஸ்லாம்:
ஓர் அந்நிய மனிதனின் வீட்டுக்குச் செல்லும் ஓர் ஆண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் வரையறுத்துள்ளது. இதன் மூலம் இஸ்லாம் குடும்பப் பெண்களின் மானத்தைக் கண்ணியப்படுத்தியுள்ளது. இதனால் குடும்பங்களில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. குடும்பங்களில் தோன்றுகின்ற பிரிவினைகள் நீங்கிவிடும். இதனால் குடும்ப வாழ்க்கை எப்போதும் ஒற்றுமையாக அமைகின்றது. மற்ற சமூகங்களைவிட முஸ்லிம் மக்கள் கூடியளவில் ஒற்றுமையாக வாழ்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அல்குர்ஆன் இயம்புவதை அவதானியுங்கள்.

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாத வரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள். (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும். நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகின்றது)

அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள். அன்றியும், “”திரும்பிப் போய்விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட் டால், அவ்வாறே திரும்பி விடுங்கள். அதுவே உங்க ளுக்குப் பரிசுத்தமானதாகும். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 24:27,28)

ஓர் அந்நிய வீட்டுக்கு ஒருவர் போகின்ற போது அனுமதி பெறாது வீட்டினுள் பிரவேசிக்காதீர்கள் என வலியுறுத்தப்படுகின்றது. இதனால் வீட்டிலுள்ள கற்புள்ள பெண்கள் பல அவதூறுகளில் இருந்து பாது காக்கப்படுகின்றனர். சில தீய செயற்பாடுடைய ஆண்கள் அடுத்த வீடுகளிலுள்ள பெண்களுடன் தப்பாக நடந்து கொள்ள முயலும் நிகழ்வுகள் உலகில் ஏராளம் நடைபெறுகின்றன. இதனை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கின்றது. அவதானியுங்கள்.

நான், “”அல்லாஹ்வின் தூதரே! மிகப் பெரிய பாவம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “”அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கே நீ இணை கற்பிப்பதாகும்” என்று சொன்னார்கள். “”பிறகு, எது பெரிய பாவம்?” என்று கேட்டேன். அவர்கள், “”உன் குழந்தை உன்னுடன் அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு உண்ணும் என்பதற்காக அதை நீயே கொலை செய்வதாகும்” என்று சொன்னார்கள். நான், “”பிறகு எது?” என்று கேட்டேன். “”உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று சொன்னார்கள். (புகாரி: 6812)

ஆகவே, ஒவ்வொரு ஆண் மகனும் இவ்வாறான தீய செயல்களைத் தவிர்த்து வாழ்வது அவசியமாகும். ஆகவே 1450 வருடங்களுக்கு முன் பெண் கள் ஆண்களின் விருப்பங்களைத் தீர்க்கும் பாவைக ளாகவே அதிகமான ஆண்களினால் கணிக்கப் பட்டனர். பெண்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும் என்பது மிகக் கேலிக்குரிய விசயமாகவே கணிக்கப்பட்டது. மக்கள் அவ்வாறாக நடந்தமைக் கான பிரதானக் காரணம் அல்லாஹ்வினால் ஏற்கனவே வழங்கப்பட்ட இறைநெறி நூல்கள் மாசு படுத்தப் பட்டிருந்தமை ஆகும். இன்று மேலைத் தேசங்களில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளின்படி பெண்கள் தனது வாழ்க்கையில் நூறுக்கும் அதிகமான ஆண்களுடன் தொடர்பு கொண்டுள்ள தாகப் புள்ளி விபரங்கள் வெளிப்படுகின்றன.

ஆனால் அங்கு வாழும் அதிகமான மக்கள் ஈசா (அலை) அவர்களை விசுவாசிப்பதாகக் குறிப்பிடு கின்றனர். ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்க ளின் வழி காட்டலின்படி முஸ்லிம்கள் தமது உயிரி லும் மேலாக மதிக்கும் ஈசா(அலை) அவர்கள் இவ் வகையான தீமைகளுக்கு எதிரானவர்களாகவே இருந்தார்கள். ஈசா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை) அவர்களும் மிகவும் சிறந்த கற்புடைய நல்ல பெண்ணாகவே வாழ்ந்தார்கள் என்பதே உண்மை யாகும். தற்போது ஈசா(அலை), மூஸா(அலை) போன்றோரின் உண்மையான வரலாறுகளை இறுதி நெறிநூலான அல்குர்ஆனைப் பார்ப்பதன் மூலமே அறிந்து கொள்ள முடியும். இவற்றை அவதானித்துச் சிந்திப்போர் உண்டா? சிந்தியுங்கள்.

பயணிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க பணிக்கும் மார்க்கம் இஸ்லாம்:
சிலைகளை தெய்வமாக வழிபடும் சமுதாயங்களில், தனியாக வெளியே பயணம் செய்யும் பெண் களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ஏற்பாடுகள் குறை வாகவே உள்ளன. இதனால் அச்சமூகங்களில் தனியாக பயணிக்கும் பெண்கள் பல உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படும் வாய்ப்புகள் அதிக மாகக் காணப்படுகின்றன. இதனால் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். பல சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களின் பொருட்கள் கொள்ளையிடப்படுகின்றன; மானப் பங்கப்படுத்தப்படும் சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுகின்றது. அச்சமூகங்களில் உள்ள பெண்களிடமிருந்து நல்ல ஒழுக்கப் பண்புகள் மறைவதற்குக் காரணமாக அமைகின்றது. பெண்கள் பிழை யான காதல் தொடர்புகளுக்கு உட்படுத்தப்படுகின்ற னர். பெண்கள் திருமணத்திற்கு முன் கர்ப்பமடையும் வாய்ப்புகளும், தவறான சிசு கலைப்புகளும், குழந்தைக் கொலைகளும், குழந்தைகள் அநாதையாக்கப்படும் வாய்ப்புகளும், அங்கீகார மில்லாத தாய்களின் தற்கொலைகளும், அவ் வாறான அபலைப் பெண்கள் கொலை செய்யப்படும் வாய்ப்புகளும், பெண்கள் விலை மாதர்களாக மாற்றப்படும் சந்தர்ப்பங்களும், பல தீய நோய் களைப் பரிமாற்றும் கருவிகளாக பெண்கள் ஆளாக்கப்படும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளைச் செய்தித் தொடர்புகள் நிறைந்த இக்காலத்தில் மறுக்க முடியுமா? கண்ணிய மிக்க மனித சமுதாயமே சிந்தியுங்கள்.

உலகில் சிலர் பெண்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பை ஆண்களுக்குக் கொடுக்காதது ஏன் என வினா எழுப்புகின்றனர். இது நகைப்புக்குரிய வாதமாகவே எண்ணத் தோன்றுகின்றது. உதாரண மாக ஆடு, மாடு, ஒட்டகங்களுக்கு பாதுகாப்பு கொடுப் பதை விடுத்து, ஓநாய்களுக்கும், புலி, சிங்கம் போன்ற மிருகங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்வது போல் அமைந்துள்ளது. ஓநாய், புலி, சிங்கம் போன்ற மிருகங்களும் தமது பிள்ளைகளுக்கு ஆபத்து நேரும் காலத்தில் பாதுகாப்புக் கொடுப்பதை நாம் இயற்கையின் நியதி யாகக் காணுகின்றோம். தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய சக்தியில்லாத சிறு ஆண் பிள்ளை களுக்கும் பெற்றோரின் பாதுகாப்பு அவசியமாக இருப்பதைக் காணுகின்றோம். யாருக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்பது மனிதர்களைப் படைத்த அல்லாஹ்வுக்கே அதிகம் தெரியும்.

இதன் காரணமாகவே அல்லாஹ் பெண்களுக்கே பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் பணித்துள்ளான். இதன் அடிப்படையில் பெண் களுக்குத் திருமணம் செய்ய முடியாது எனத் தடுக்கப் பட்டுள்ள பெற்றோர் மூலமான உறவுகள், செவிலித் தாய் மூலமான உறவு, திருமணத்தின் மூலம் எழும் உறவுகள் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கும்படி அல்லாஹ்வின் இறுதி இறைநெறி நூலான அல்குர் ஆனும், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழி முறைகளும் வழிகாட்டுகின்றன.

ஒரு பெண் தனியாக பயணம் செய்யக் கூடாது. அனுமதிக்கப்பட்ட பாதுகாப்புடனே ஒரு நாள், அல்லது சில சந்தர்ப்பங்களில் மூன்று நாட்களுக்கு மேல் பயணம் செய்தல் வேண்டும். பின்வரும் நபி மொழிகள் இதனைக் குறிப்பிடுகின்றன. அவதானி யுங்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
“”எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது.” ( புகாரி: 1086)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“”அல்லாஹ்வையும் இறுதித் தூதரையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணமுடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது”.
( புகாரி : 1088)

பெண்கள் பாதையில் பயணிப்பதற்கு இஸ்லாம் மார்க்கம் அனுமதி வழங்க வேண்டும் என இயம்பு வதை அவதானியுங்கள். அத்துடன் பெண்கள் பாதையில் பயணம் செய்யும் போது ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அல்குர் ஆன் விளக்குவதைப் பாருங்கள்.

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த் திக்கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தளங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். அது அவர் களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல் லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் : 24:30)

பெண்கள் பாதையில் செல்லும்போது ஆண்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும் என அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் வலியுறுத்து கின்றான். அன்று சாலைகளில் அமர்ந்திருக்கும் ஆடவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கின்றார்கள்.

(ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் “”நீங்கள் சாலை களில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “”அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பேசிக் கொள்கின்றோம்” என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “(அங்கு) நீங்கள் அமர்ந்து தான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “”சாலையின் உரிமை என்ன? அல்லாஹ்வின் தூதரே!” என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், “”(அந்நிய பெண்களைப் பார்க்காமல்) பார்வைகளைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப் பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள். ( புகாரி : 6229)

( இன்ஷா அல்லாஹ் தொடரும்….)

Previous post:

Next post: