வாசகர் விமர்சனம்

Filed under 1987 மே,விமர்சனங்கள்! விளக்கங்கள்!! by

“நபி(ஸல்) அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தலையை மறைத்த நிலையிலே இருந்திருக்கின்றனர்” என்ற ஹதீஸ் பலவீனமானதா? தொப்பி தலைப்பாகை கட்டுரையில் நபிகள் முன்மாதிரியை விட நபித்தோழுர்களின் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அமைந்துள்ளன. ஏன்?

நஜாத்தீ. ரியாத், சவூதி அரேபியா.

நீங்கள் குறிப்பிட்டது போன்ற ஹதீஸ் எந்த நூலில் உள்ளது என்பதைக் தெரிவியுங்கள்! நாங்கள் பார்த்த வரை அப்படி ஒரு ஹதீஸ் தென்படவில்லை.

அந்தக் கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்! உங்கள் இரண்டாவது சந்தேகம் சரியானதல்ல என்று தெரியும். நாம் குறிப்பிட்டுள்ள 12 ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் . நபி(ஸல்) அவர்களின் செயல் மட்டும் மார்க்கம் அல்ல.

அவர்கள் சொன்னதும் மார்க்கம். அவர்கள் செய்ததும் மார்க்கம். மற்றவர்கள் ஒரு காரியத்தைச் செய்யும் போது நபி(ஸல்) அவர்களின் சொற்களடங்கியது. மற்றும் சில அவர்களின் செயல்கள் அடங்கியது. இன்னும் சில அவர்களின் அங்கீகாரம் அடங்கியது. ‘ஷுரைக்’ பற்றி வருகின்ற ஒரு ஹதீஸ் தவிர மற்ற ஹதீஸ்கள் அனைத்திலும் நபி(ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

—————–

சென்ற “ஷாபான் இதழில்” தந்தை காபிராக இருந்தாலும் அவரது மகன் என்றே முஸ்லிமான மகனைக் குறிப்பிட வேண்டும் என்று எழுதி இருந்தீாகள். உதாரணமாக நம் நமிழ்நாட்டில் பாலகிருஷ்ணனின் மகன் முஸ்லிமாக இருந்தால் கூட “உமர் இப்னு பாலகிருஷ்ணன்” என்றா குறிப்பிட வேண்டும்?

(N.B. பாலகிருஷ்ணன் என்பது இந்துக் கடவுளின் பெயர். காயல் O.E.D. அமீரலி. பாத்திமா டைமண்ட், திருச்சூர்.)

ஆமாம்! அப்படித்தான் குறிப்பிட வேண்டும். “அவர்களில் தந்தைமார்களுடன் இணைத்தே பிள்ளைளை அழையுங்கள்” திருக்குர்ஆனின் வசனம் பொதுவாகத்தான் உள்ளது. “அப்துஷம்ஸு” (சூரியனின் அடிமை) என்பது போன்ற இஸ்லாம் அனுமதிக்காத பெயர்களைக் கொண்ட தந்தைமார்களின் பால் சேர்த்து பல சஹாபாக்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

பால கிருஷ்ணன் என்பவருக்குப் பிறந்தவன் முஸ்லிமானவுடன் “பாலகிருஷ்ணனுக்குப் பிறக்கவில்லை” என்று ஆகிவிட முடியாது. வேறு பொய்ப் பெயர்களால் அவன் தந்தையைக் குறிப்பிடப்படும் போது அவனது தாயின் கற்பு சந்தேகிக்கப்படத்தக்கதாகவும் மாறி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

—————–

அல்லாஹ் 33 : 56 வசனத்தில் நபியின் மீது ஸலவாத் கூறச்சொல்கிறான். ஆனால் நீங்கள் நபியை திக்ரு செய்யக்கூடாது என்று ஒரு ஊரில் பேசியுள்ளீர்கள்! இது ஏன்?

காயல் O.E.D. அமீர் அலி, திருச்சூர்.

அல்லாஹ் ஸலவாத் கூறச் சொல்கிறான். நாங்களும் ஸலவாத் கூறுகிறோம். அல்லாஹ் நபியை திக்ரு செய்யச் சொன்னால் நாமும் திக்ரு செய்வோம். ஆனால் அப்படிச் சொல்லவில்லையே! இரண்டும் வெவ்வேறு காரியங்கள் அல்லவா? “சாப்பிடுங்கள்” என்று ஒருவர் உங்களிடம் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் சாப்பிடச் சொல்லி விட்டதால் நான் “படுத்துக் கொள்வேன்” என்று கூற முடியுமா? “சாப்பிடுங்கள்” என்ற சொல்லுக்கு படுத்துக் கொள்ளுங்கள் என்று பொருள் கொள்ள இயலுமா?

எனவே திக்ரு என்பது வேறு. ஸலவாத் என்பது வேறு.

——————-

தொப்பியும் தலைப்பாகையும் என்ற கட்டுரையில், “தொப்பி அணிய வேண்டும் என்று ஹதீஸில் குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்தீர்கள். ஆனால் “மலஜலம் கழிக்கும் போது மலையை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று ஹதீஸ் உள்ளதே! (அதிரை) A.M. அப்துல் காதிர், சென்னை.

நீங்கள் கூறுகின்ற அந்த ஹதீஸ் எந்த நூலில் எந்தப் பாடத்தில் உள்ளது என்பதைத் தெரிவியுங்கள்! ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அப்படிக் கூறுமானால் நாம் அந்நஜாத்தில் அதைத் தெளிவுபடுத்துகிறோம். சிரமம் பாராது அந்த ஹதீஸைத் தெரிவியுங்கள்!

——————-

நீங்கள் கேள்விக்கு பதில் கூறும்போது சில பதிலை “பிராக்கெட்” செய்து விடுகிறீர்களே இது ஏன்?

S. பாரூக், பேட்டை.

குர்ஆன், ஹதீஸ்களில் நேரடியாக இல்லாத சில வார்த்தைகளைக் கூறும்போது அடைப்புக் குறிக்குள் போட்டு அடையாளம் காட்டுகிறோம். உதாரணமாக சென்ற மார்ச் இதழில் 26ம் பக்கத்தில் ஒரு ஹதீஸைக் குறிப்பிடும்போது ” ஒரு மனிதன் தனிமையில் இருக்கிறான் (அப்போதுமா மறைக்க வேண்டும்) என்று கேட்டேன்”. என்று எழுதியுள்ளோம். இதில் அடைப்புக் குறிக்குள் உள்ள “அப்போதுமா மறைக்க வேண்டும்” என்ற சொல்லை அந்த ஸஹாபி கூறவில்லை. “ஒரு மனிதன் தனிமையில் இருக்கிறான்” என்று மட்டுமே கூறினார். இந்த ஹதீஸின் முற்பகுதி, பிற்பகுதியைக் கவனித்தால் “அப்போதுமா மறைக்க வெண்டும்” என்ற கேள்வியைத் தான் அவர் கேட்கிறார் என்று எவரும் விளங்கலாம். என்றாலும் அரபி மூலத்தில்அந்த வார்த்தை நேரடியாக இல்லாததால் நாம் அடைப்புக் குறிக்குள் போடுகிறோம். இதுதூன் காரணம்.

——————

குமரி மாவட்டத்தில் தவ்ஹீது பிரச்சாரத்திற்காக “இஸ்லாமிய இறைப் பணி இயக்கம்” என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டபோது அதன் துவக்க விழாவில் நீங்களும் கலந்து கொண்டீர்கள்! “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு பெண் பால் இல்லை. பன்மை இல்லை. ஆனால் இறைவன் என்ற சொல்லுக்குப் பெண் பால் உண்டு. அவ்வாறு இருக்க “இறைப்பணி” என்று பெயரிடலாமா? M. அபூநபீல், B.A., தேங்காய்ப்பட்டினம்.

அல்லாஹ் என்ற சொல்லுக்கு ஈடாக எந்த மொழியிலும் வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கின்ற சொற்களிலேயே அல்லாஹ்வைக் குறிக்க “இறைவன்” என்ற சொல்லை பயன் படுத்துகிறோம். ‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச்சொல் எதுவுமிருந்தால் தெரிவியுங்கள்! சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்போம்.

—————–

நீங்கள் நாகர்கோவிலில் பேசும் போது, இமாம் மஹதி(அலை) நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் பிறப்பார் என்று கூறினீர்கள் . என் நண்பர் அப்படி ஹதீஸ் இல்லை என்கிறார்? அது சரி?

நாம் சொன்னது தான் சரியானது. நாம் கூறிய கருத்துக்கான ஹதீஸ் வருமாறு.

“மஹ்தி(அலை) என் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், பாத்திமா(ரழி) அவர்களின் சந்ததியிலிருந்தும் தோன்றுவார்” என்று நபி(ஸல்) கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா(ரழி) நூல் : அபூதாவுது.

மிகவுமி உறுதியான, பலமான ஸனதுடன் அறிவிக்கப்படுகின்ற ஹதீஸ் மிகத் தெளிவாக இரண்டாவது கருத்துக்க இடமின்ற இந்தக் கருத்தை சொல்கின்றது. உங்கள் நண்பரிடம் இதைக் கூறுங்கள்.

——————-

இரண்டு ஆண்கள் ஒரே போர்வையில் படுக்கக் கூடாது என்ற ஹதீஸை வெளியிட்டிருந்தீர்கள். குளிர் அதிகமாக உள்ள பகுதிகளில் குளிர் தாங்க முடியாத போது, வேறு போர்வை எதுவும் இல்லாத போது ஒரே போர்வையில் போர்த்திக் கொள்ளலாமா? M.A. ஜியாவூத்தின், நாச்சியார் கோவில், துபை.

எந்த சட்டங்களுக்கும் நிர்பந்தமான நிலையில் விலக்கு உண்டு. “எந்த ஆன்மாவும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் கஷ்டப்படுத்த மாட்டான்” என்று குர்ஆனின் 2 : 286 வசனம் கூறுகின்றது. பன்றியின் மாமிசத்தைக் கூட உயிர் காக்க வேறு வழியில்லை என்னும் போது அந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தலாம் என்பதையும் குர்ஆன் கூறுகின்றது. 2 : 173, 5 : 3, 6 : 145, 16 : 115 வசனங்களையும் பார்க்க.

———————-

இறந்தவர்களுக்காக ரொட்டி சுட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் ரொட்டி கனமாக இருந்தால்தான் அடிதாங்கும் என்றும் கூறுகிறார்களே! இதற்கு ஆதாரம் உண்டா?

A. முஹம்மது ஷகீல், ஷார்ஜா.

இப்படிச் சொல்லி மக்களைள ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு அடிக்கலாம் அல்லவா? அந்த அடியைத் தாங்குவதற்காக கனமான ரொட்யை சாப்பிட்டு அந்த முல்லாக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதைத் தான் இப்படி சொல்லி இருப்பார்கள். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

——————-

‘யாராக இருந்தாலும் ஆதாரம் கேளுங்கள்’ என்று எழுதி இருந்தீர்கள்! குர்ஆனில் மக்கீ, மதனீ என்று கூறுவதற்கு ஆதாரம் உண்டா? மவ்லவி A.R. முஹம்மது அஸ்அது, அம்மாபட்டினம்.

இதில் என்ன ஆதாரம் கேட்கிறீர்கள்? மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது என்று பொருள் மதனீ என்றால் மதீனா வாழ்வில் இறங்கியது என்று பொருள். மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் ‘பார்ஸீ’ என்று சொல்லவில்லையா? அவை எங்கே இறங்கின என்ற சரித்திரக் குறிப்பை உணர்த்துவதற்கு அப்படிக் கூறுகிறோம்.

———————

குர்ஆனில் “படைத்தோம்: கற்பித்தோம்” என்று பன்மையாக அல்லாஹ் கூறுவதன் காரணம் என்ன?

M.A. ஹாஜீ முஹம்மது, B.A., நிரவி.

சில இடங்களில் ஒருமையாகவும், சில இடங்களில் பன்மையாகவும் அல்லாஹ் கூறுகிறான். தன்னிலை பன்மையாய் ஒருவரே பயன்படுத்துவது அரபு மொழியிலும் , வேறு சில மொழிகளிலும் வழக்கில் இருந்தது. இருக்கின்றது. அது தான் காரணம், (உ.ம்) நாம் சொல்வது புரிகிறதா?

(அதாவது நான் சொல்வது புரிகிறதா?)

நீங்கள் எழுதும் கருத்துக்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மட்டுமே உள்ளன. இஜ்மாஃ, கியாஸ் அடிப்படையில் இல்லையே! ஏன்?

குர்ஆனுக்கு வெளிப்படையான அர்த்தம் அந்தரங்கமான அர்த்தம் இருக்கும்போது நீங்கள் வெளிப்படையான அர்த்தத்தை மட்டுமே கையாளுவதின் மர்மம் என்ன?

நீங்கள் முஜ்தஹியா? முகல்லிதா?

அதிரை S.S. முஹம்மது ஷைகு அப்துல்லா.

குர்ஆன், ஹதீஸுக்கு இஜ்மாஃ, கியாஸ் உட்பட எல்லாம் அடக்கம் என்ற அடிப்படையில் எழுதுகிறோம் பலமுறை இதைத் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

“இய்யாக நஃபுது” என்ற வசனத்திற்கு உன்னையே வணங்குகிறோம் என்பது வெளிப்படையான அர்த்தம். உன்னைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம் என்பது உள் அர்த்தம். இரண்டையுமே நாங்கள் சொல்கிறோம். சிலரது பாஷையில் “உன்னையே வணங்குகிறோம்” என்பதற்கு “மற்றவர்களையும் வணங்குவோம்” என்பது உள் அர்த்தம் என்றால் இதை எப்படி ஏற்க முடியும்?

ஒரு வார்த்தை நேரடியாக எதைச் சொல்கிறதோ அது வெளிப்படையான அர்த்தம். அதை சிந்திக்கும் போது எதை உணர்த்துமோ அது உள் அர்த்தம். ஆக உள் அர்த்தம் உள்ள அர்த்தமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக “இதா ஜா அ நஸ்ருல்லாஹி” என்ற அத்தியாயத்தில் “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது அவனைப் புகழச் சொல்கிறான். இது வெளிப்படையான அர்த்தம். இதே அத்தியாயத்தில் கவனமாக சிந்தித்து “நபி(ஸல்) அவர்களின் பணி முடிவடைந்து விட்டது. அவர்கள் விரைவில் மரணமடைவார்கள்” என்று இப்னு அப்பாஸ்(ரலி) விளங்கியது உள் அர்த்தம். ஆக இப்படித்தான் உள் அர்த்தம் உண்டே தவிர எவருக்கும் புரியாத வார்த்தைகளைச் சொல்லி மக்களை மடையர்களாக்கும் உள் அர்த்தம் குர்ஆனில் இல்லை.

தரீகத், ஹகீகத், மஃரிபத் என்று ஏதேதோ சொல்லி அவை என்னவென்று கேட்கும் போது உங்களுக்கெல்லாம் புரியாது என்று மக்களை மடையர்களாக்கும் தத்துவத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை எங்களைப் பொறுத்தவரை குர்ஆன், ஹதீஸில் நேரடியாகக் கூறப்படும் கருத்து – அதில் சிந்தித்து விளங்கும் கருத்து ஆகிய இரண்டு அடிப்படையிலும் தான் எழுதுகிறோம்.

முகல்லிதா? (குருட்டுத் தனமாக நம்புபவரா?) முஜ்தஹிதா? (சிந்திப்பவரா) என்று கேட்டிருக்கீறீர்கள்.

நாங்கள் குருட்டுத்தனமாக எதையுமே நம்ப மாட்டோம். சிந்தித்துத்தான் நம்புவோம்.

——————-

ஒருவர் ஏரோப்ளேனில் செல்கிறார் அவருக்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டால் எப்படித் தொழுவது? குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் காட்ட இயலுமா? V.M. ஷைகு உஸ்மான், கடையநல்லூர்.

நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? நீங்கள் ஒப்புக்கொண்டுள்ள பிக்ஹு நூல்களில் இதற்கு ஆதாரம் காட்டமுடியுமா? ஏரோப்ளேனைப் பற்றி உங்கள் பிக்ஹு நூல்களில் கூறப்பட்டுள்ளதா? குர்ஆன், ஹதீஸில் ஏன் உங்களுக்கு இவ்வளவு அவநம்பிக்கை.

கிப்லாவை நிர்ணயம் செய்யவே முடியாத அளவுக்கு நிலமை தோன்றினாலும் , குர்ஆன் அதற்கும் வழிகாட்டாமல் இல்லை. எங்கு நோக்கினும் அது அல்லாஹ்வின் திசையே (2:115) என்று அல்லாஹ் கூறுகிறான். இது போன்ற நேரங்களில் இப்படி ஒரு சலுகையை அல்லாஹ் வழங்கி இருக்கிறான்.

——————-

எவ்வளவோ முயற்சி செய்தும் கிப்லாவை நிர்ணயம் செய்ய முடியவில்லை. இப்போது என்ன செய்வது? ஹதீஸ் அடிப்படையில் பதில் தருக! அப்துல்லா, கோட்டாறு.

“எங்கு நோக்கினும் அது அல்லாஹ்வின் திசையே” என்ற கருத்தை திருக்குர்ஆனின் 2 : 115 வசனம் தெளிவுப்படுத்துகின்றது. “எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை” என்ற கருத்தை குர்ஆன் 2 : 286 வசனம் கூறுகிறது. நமது சக்திக்கு அப்பாற்பட்டு விட்டபோது ஏதேனும் ஒரு திசையில் தொழலாம்.

——————–

தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு என்று குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உண்டா? உண்டு எனில் அந்தப்பாதங்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ள என்ன தடை?

ஸையிது முஹம்மது முஹ்யித்தீன், B.E., சவூதி அரேபியா.

நீங்கள் குறிப்பிட்டது போல் ஒரு ஹதீஸ் உண்டு. முஆவியா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ” நான் போரில் கலந்து கொள்ள விரும்புகிறேன். அதுபற்றி உங்கள் ஆலோசனையைப் பெற வந்துள்ளேன்” என்று கூறினேன். “உனக்குத் தாய் இருக்கிறார்களா?” என்று நபி(ஸல்) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். “நீ உன் தாய்க்கு சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்கள் : நஸயீ, தப்ரானி)

இதுதான் அந்த ஹதீஸ், இந்த ஹதீஸில் தாய்க்குச் செய்யும் சேவையைத் தான் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி இலக்கியமாகப் பயன்படுத்துவது அரபிகளிடம் சர்வ சாதாரணம் உண்மையில் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்று எப்படி கற்பனை செய்ய முடியும்?

வந்து கேட்டவரிடம், “உன் தாயின் பாதத்தைத் தொட்டு முத்தமிட்டுவிட்டு போரில் ஈடுபடு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக தாய்க்குப் பணிவிடை செய்யச் சொல்கிறார்கள். அதன் மூலம் சொர்க்கத்தைப் பெற சொல்கிறார்கள்.

“கால்களைத் தொட்டு முத்தமிட்டுக் கூடாது” என்பது பற்றி தடைகளை நாம் முன்பே எழுதி விட்டோம். அந்தத் தடைகள் வராமல் இருக்குமானால் நீங்கள் கருதுவதற்கு சிறிதளவாவது இடமிருக்கும். தெளிவான தடை இருக்கும் போது ஏன் சுற்றி வளைத்துக் கொண்டு நியாயப்படுத்துவானேன்?

———————

நபி(ஸல்) அவர்களுக்கு எழுதவும் தெரியாது. படிக்கவும் தெரியாது என்று எழுதியுள்ளீர்கள்! திருக்குர்ஆனின் 29 : 48 வசனத்தில் (நபியே) நீர் இதற்கு முன்னர் எந்த வேதத்தையும் ஓதியவரல்ல. உம்முடைய வலக்கையால் நீர் அதனை எழுதியவருமல்ல” என்று அல்லாஹ் கூறுகிறான். இதற்கு முன்னர் என்று அல்லாஹ் கூறுவதால் வஹீ வந்த பின் அவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாகி விட்டார்கள் என்று தானே பொருள்.

காமராஜர் போன்றவர்கள் எழுதப் படிக்கத் தெரியாமலிந்து பதவிக்கு வந்தபின் எழுதப் படிக்க கற்றுக்கொண்டு விட்டார்கள். மேலும் பத்ருப் போரில் சிறை பிடிக்கப்பட்ட காபிர்கள் முஸ்லிம்களுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்து விடுதலையானார்கள் என்று வரலாறு கூறுகிறது. அவ்வாறிருக்க பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நபி(ஸல்) தான் மட்டும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார்கள் என்று வரலாற்றில் எழுதியுள்ளதை நம்ப சிரமமாக உள்ளதே! உண்மை இதற்கு மாற்றமாக இருப்பது போல் தான் எனக்குத் தோன்றுகின்றது.

எனது ஐயத்தைப் போக்குங்கள்!

பேராசிரியர் T. அப்துர் ரஹ்மான் சி.ஐ.டி. நகர், சென்னை -3.

பலரும் நீங்கள் எழுதியவாறே மொழி பெயர்ப்புச் செய்துள்ளனர். ஆனால் அதே வசனத்தின் மூலத்தை உற்று நோக்கும்போது நபி(ஸல்) அவர்களுக்கு அறவே எழுதப் படிக்கத்தெரியாது என்றே கூறப்படுகின்றது. அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக கொஞ்சம் விபரமாகவே அதை நாம் பார்ப்போம்.

“(நபியே!) நீர் இதற்கு முன்னர் எந்த வேதத்தையும் ஓதியவரல்ல” இந்த மொழி பெயர்ப்புச் சரியானது தான். “வமாகுன்த” என்ற கடந்த கால வினைச் சொல்லை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். ஆனால் அதற்கு அடுத்த பகுதியில் “வலா தகுத்து ஹுபியமீனிக” என்பதற்கு உரிய மொழி பெயர்ப்புத்தான் தவறுதலாகச் செய்யப்படுகின்றது. “உனது வலக்கரத்தால் நீர் எழுதவும் மாட்டீர்!” என்று “வருங்கால எதிர்மறை வினை” இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அந்த ஆயத்தின் பொருள் இப்படித் தானிருக்க வேண்டும்.

“இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்தையும் ஓதியவருமல்ல. (இனியும்) உமது வலக்கரத்தால் அதை நீர் எழுதவும் மாட்டீர்.”

இப்படித்தான் குர்ஆன் கூறுகிறது. ஒரு போதும் அவர்களுக்கு அந்த ஆற்றவை அல்லாஹ் வழங்க விரும்பவில்லை. காரணம் என்ன? அதையும் அல்லாஹ்வே அதே வசனத்தில் கூறுகிறான்.

“(உமக்கு அந்த ஆற்றல் இருந்துவிட்டால்) அப்போது வீணர்கள் (இந்த வேதத்தில்) ஐயம் கொள்வார்கள்.

எழுதவும், படிக்கவும் தெரியாத ஒருவர் மூலமாக உலகத்துக்கே சவால் விடக்கூடிய இந்த வேதம் வரும்போது தான், அந்த வேதம் இறைவனிடமிருந்து வந்தது என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்க முடியும். இல்லை எனில் எங்கோ படித்துவிட்டு இவர் தானாக இயற்றுகிறார் என்று பிரச்சாரம் செய்ய இடம் ஏற்படும்.

நபி(ஸல்) அவர்களின் பலவீனமாக எதை நீங்கள் கருதுகிறீர்களோ, அதுதான் அவர்களின் பலமாக அமைந்துள்ளது.

‘உம்மீ” என்ற பலவீனம் அவர்களிடம் இல்லாவிட்டால், அவர்களைத் தூதர் என்று நம்புவதும், குர்ஆனை இறைவேதம் என்று ஒப்புக்கொள்வதும் பலருக்கு சிரமமாகவே தோன்றும்.

( நபியே!) இதற்கு முன்னர் எந்த வேதத்தையும் நீர் ஒதியவருமல்ல (இனி) உமது வலக்கரத்தால் அதை எழுதவும் மாட்டீர். அப்போது வீணர்கள் ஐயம் கொள்ள நேரிடும் (29 : 48)

வீணர்களின் ஐயத்தை நீக்குவதற்காகவே இந்தத் தகுதியை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கவில்லை என்று திருமறை காரணமும் கூறுகிறது.

இந்த வரலாற்றில் உண்மைக்கு மாற்றமானது எதுவுமில்லை என்றே நாம் நம்ப வேண்டும். (இன்னும் பல ஹதீஸ்களும் இதற்கு ஆதரவாக உள்ளன)

——————-

நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது “ரஸுலுல்லாஹ்” என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே! குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? இதில் எது உண்மை?

K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.

இரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.

எழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

——————–

குர்ஆனை மிகவும் நாம் எளிதாக ஆக்கியுள்ளோம் என்று 54 : 17 வசனம் கூறுகின்றது. ஆனால் சில மவ்லவிகள் “குர்ஆன் நமக்கெல்லாம் புரியாது” என்கிறார்களே! எது சரி!

ச.எண், 755, நாகர்கோவில்.

(நபியே) நீர் குர்ஆனை ஒதும்போது உமக்கும், மறுமையின் மிக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குமிடையே மறைக்கப்பட்ட ஒரு திரையை நாம் ஏற்படுத்தி விடுவோம். (அல்குர்ஆன் 17 : 45)

“அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும், மறுமை வாழ்க்கை ஒன்று உண்டு” என்ற நம்பிக்கை இல்லாமல் இம்மையைக் குறிக்கோளாகக் கொண்டவர்களுக்குத் தான் குர்ஆன் புரியாது. மறைக்கப்பட்ட திரை போடப்பட்டு விடும்.

மற்றவர்கள் முயற்சித்தால் குர்ஆனைப் புரிந்து கொள்ள முடியும் அதுவும் மிக எளிதாக.

ஆமாம்! அல்லாஹ் சொன்ன வசனத்தையும் எழுதிவிட்டு, சில மவ்லவிகள் கூறுவது சரியா? அல்லாஹ் கூறுவது சரியா? என்று எப்படிக் கேட்டீர்கள்? அல்லாஹ் சொன்னது உங்களுக்குத் தெரிய வரும்போது இந்த சில மவ்லவிகளின் சொல்லை நீங்கள் தூக்கி எறிந்து விட வேண்டியது தானே!

————————

கடந்த 5-4-87 கல்கி கீழ்க்கண்ட செய்தி வந்துள்ளது.

“கிள்ளை என்ற ஊரில் “பூவராக சுவாமி”யின் சிலை எடுத்துச் செல்லப்பட்டபோது, அங்குள்ள முஸ்லிம்கள் அந்த சிலைக்கு பட்டு வஸ்திரம் சாத்தினார்கள். அதற்குப் பதிலாக பூவராக சுவாமியின் நிர்மால்ய மாலை, ஹஸரத் சையத்ஷா ரஹ்மத்துல்லா வலியுல்லா ஷுத்தார் அவர்களின் சமாதிக்கு சாத்தி பயபக்தியுடன் பாத்தியா ஓதினார்கள். தர்காவின் வாசலில் சிவிகை நின்றதும் தர்காவில் சர்க்கரைப் பிரசாதம் வினியோகம் செய்தனர், பெருமாளுக்கு தீபராதனை செய்தார்கள்.

என்று செய்தி வந்துள்ளதே! இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? கல்கியின் ஜெராக்ஸ் காப்பியையும் இத்துடன் இணைத்துள்ளேன். M. நூர் முஹம்மது, த.பெ.எண. 15327, ரியாத்.

இதில் நினைப்பதற்கு என்ன இருக்கிறது? அல்லாஹ்வுக்கு இணைவைக்கக் கூடாது. சமாதிகளானாலும், சிலைகளானாலும் எல்லாம் இந்த விஷயத்தில் ஒன்று தான், என்று நாம் பலமுறை எழுதி வந்துள்ளோம். அது உண்மைதான் என்பதற்கு நிதர்சனமான ஆதாரம் தான் கிள்ளை நிகழ்ச்சி. சமாதி வணக்கத்தின் இறுதிக்கட்டம் இதுதான்.

“சுன்னத்வல் ஜமாஅத்” என்று கூறிக்கொண்டு கப்ரு வணக்கத்தை நியாயப்படுத்துவோர் இதை எண்ணிப் பார்க்கட்டும்!

இதற்கும் பாத்தியா ஓதி தங்கள் சுன்னத் வல்ஜமாஅத் என்பதை மேலும் உறுதி செய்து விட்டார்கள். இதற்கு ஆத்திரப்படுவதை விடுத்து, இதன் ஆணிவேராகிய தர்கா வழிபாட்டை ஒழியுங்கள்! தானாக இது ஒழிந்து விடும்.

(இதே கல்கி இதழை காயல் O.E.D. அமீர்வலி அவர்களும் அனுப்பியுள்ளார்.)

————————————————————————————————

‘குர்ஆனில் முரண்பாடில்லை’ என்று தெளிவுபடுத்துபவர்களுக்கு ஓராண்டு ‘அந்நஜாத்’ கொடுத்தால் நிகராகுமா?

A. முஹம்மத் கெளஸ், பரங்கிப்பேட்டை.

நிச்சயமாக நிகராகாது தான், அல்லாஹ்விடம் தான் மகத்தான பரிசைப் பெறப் போகிறார்களே! ஆர்வமூட்டுவதற்காக எங்களால் இயன்ற ஒரு சிறு அன்பளிப்பு . அவ்வளவுதான்.

——————

“உருமாற்றம் செய்யப்பட்டவைகளுக்கு அல்லாஹ் சந்ததிகளை ஏற்படுத்த மாட்டான்” என்ற நபிமொழியை எழுதி இருந்தீர்கள். ஆனால் திருக்குர்ஆனின் 5:60 வசனமும், 7:166 வசனமும், 2:65 வசனமும் சிலரை பன்றிகளாகவும், குரங்குகளாகவும் உருமாற்றம் செய்ததாகக் குறிப்பிடுகின்றன. பன்றி, குரங்குகளுக்கு சந்ததிகள் இருப்பதை நாம் இன்றும் காண்கிறோம். இந்தக் குர்ஆன் வசனங்களுக்கு நீங்கள் எடுத்துக்காட்டிய நபிமொழி முரண்படுவது போல் தோன்றுகிறதே! K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.

பனீ இஸ்ராயீல்கள் உருமாற்றம் செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் நபி(ஸல்) அவர்கள் கூறியதும் உண்மைதான். இப்போது நாம் சந்திக்கின்ற பன்றிகள், குரங்குகள் உருமாற்றம் செய்யப்பட்டவர்களின் சந்ததிகள் அல்ல. ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகின்ற குரங்குகள், பன்றிகளின் சந்ததிகளைத் தான் நாம் காண்கிறோம். உருமாற்றம் செய்யப்பட்டவர்கள் அவர்களின் ஆயுள் முடிந்ததும் அழித்து விட்டனர். அதே மார்ச் இதழில் 66 ஆம் பக்கத்தில் “இப்போது இருக்கக் கூடிய குரங்குகள் உருமாற்றம் செய்யப்பட்ட பனீ இஸ்ராயீல்கள் அல்ல” என்று நாம் தெளிவாகவே எழுதியுள்ளோம்.

———————

“அந்நஜாத்” நடத்திய மாநாட்டில் இரு நாட்களிலும் மஃக்ரிபு தொழுகையுடன் இஷா தொழுகையையும் சேர்த்தே ஜமாஅத்தாக தொழுதீர்கள் எனக் கேள்விப்பட்டு மிகவும் வேதனைப்பட்டேன். குர்ஆன், ஹதீஸ்படி நடக்கும் நீங்கள் மக்ஃரிபுடன் இஷாவையும் சேர்த்து தொழுதது தவறு எனக் கூறுகிறேன்.

சப்போஸ்ட் மாஸ்டர் A. ஷேக் இலியாஸ், சுசீந்திரம்.

வெளியூர்ப் பிரயாணம் மேற் கொள்வோருக்கு அல்லாஹ்வின் தூதர் அப்படி ஒரு சலுகையை வழங்கியுள்ளனர். ஹதீஸின் அடிப்படையிலேயே மாநாட்டுக்கு வந்த வெளியூர் அன்பர்கள் தொழுதனர். அல்லாஹ்வின் தூதர் சரி என்று சொன்னதை தவறு என்று கூற எவருக்கும் அதிகாரமில்லை.

———————

இறைவன் தன் தூதர்களாகிய நபிமார்களை அரேபியர்களாகவே தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன?

காயல் O.E.D. அமீரலி, திருச்சூர்-1.

உங்கள் கேள்வியே தவறானது. அல்லாஹ் பல மொழி பேசுவோரிலிருந்து தூதர்களை அனுப்பிக் கொண்டே வந்திருக்கிறான், இப்றாஹிம்(அலை) இஸ்மாயில்(அலை) ஜக்கரியா(அலை) யூசுப்(அலை)இன்னும் குர்ஆனில் கூறப்படுகின்ற பல நபிமார்கள் அரபியர் அல்ல.

எந்தத்தூதரையும் அவரது சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தான் அனுப்பியுள்ளோம்.

(அல்குர்ஆன் 14 : 4)

———————-

மார்ச் 87 ‘அந்நஜாத்’ இதழில் நபி இப்றாஹிம்(அலை) அவர்களின் தந்தை காபிர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். வரலாற்றுக் குறிப்புக்களில் அன்னாரின் தந்தையின் பெயரை அறிய முடியவில்லை என்றும் அக்கால வழக்கப்படி தந்தை என்று அழைக்கப்பட்டவர் ஆஸர் என்றும் அவராலேயே இபுறாஹீம் நபி வளர்க்கப்பட்டார்கள் என்றும், சிறிய தந்தை அல்லது பெரிய தந்தை உறவு உள்ளவர் என்றும் விஷயம் அறிந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள். இது உண்மையானால் உங்கள் கூற்று பொய்யானதாகி விடும்.

விளக்கம் தேவை! மேலை நாசர் , பிரதிநிதி “கனியமுதம்” மாத இதழ் சென்னை -53.

‘ஆஸர்’ என்பவர் இப்றாஹீம்(அலை) அவர்களின் தந்தைதான். அல்லாஹ் ‘தந்தை’ என்று கூறி இருக்கும் போது வரலாற்றுக் குறிப்புகளில் இல்லை என்று வாதம் செய்வது விந்தையாக உள்ளது. 6:74, 9:114, 43:26, 60:4, 26:86, 21:52, 26:70, 37: 85, 19: 42 ஆகிய வசனங்களைக் கவனிக்கும் போது மிகத் தெளிவாக ‘ஆஸர்’ தான் அவர்களின் தந்தை என்பது புலனாகும்.

——————

சீனிவாசன் கேள்வி கேட்டது உங்களிடம் நீங்கள் பதில் சொல்லாமல் வாசகர்களிடம் கேட்பது நபி வழியா?

A. ரஹ்மத்துல்லா, சேரன்மாதேவி.

வாசகர்களின் திறனை வளர்ப்பதும், அவர்களுக்கிடையே போட்டி ஏற்படுத்துவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுப்பார்களா? சாதாரணமாகச் சிந்தித்தாலே இது விளங்கும்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் “இலைகள் உதிராத மரம் ஒன்று உண்டு. அது மூமினுக்குப் பொருத்தமான உவமையாகும். அந்த மரம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று நபி(ஸல்) அவர்கள் தோழர்களிடம் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களே சொல்லுங்கள்!” என்று கேட்க நபி(ஸல்) அவர்கள் “அது பேரீச்ச மரம் தான்” என்று விளக்கம் தந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) நூல் : புகாரி.

நபி(ஸல்) அவர்கள் தனக்குத் தெரிந்திருந்த ஒரு விஷயத்தையே நபித் தோழர்களிடம் கேட்டு அவர்களை சோதித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் வாசகர்களிடம் போட்டியை ஏற்படுத்துகின்றோம். இதில் என்ன தவறு?

அந்நஜாத் மார்ச் இதழில் அச்சுப் பிழையின் காரணத்தால் பல திருக்குர்ஆன் வசன எண்கள் மாறுபட்டிருக்கின்றன. அதிலுள்ள எண்களின்படி தேடிப்பார்த்தால் கூறப்பட்ட கருத்தைப் பெற முடியவில்லை. எனவே திருத்தம் வெளியிடுங்கள். K.M. அப்துல் ஹமீது, துபை U.A.E.,

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, இன்ஷா அல்லாஹ் இனி அப்படிப்பட்ட தவறுகள்நிகழாவண்ணம் கவனித்துக் கொள்கிறோம்.

பக்கம் பிழை திருத்தம்

4,5 13 : 14 23: 14

27 60 : 89,90 60 : 8,9

32 41 : 71 43 : 71

54 6 : 123 6 : 163

ஏப்ரல் 87 இதழ் பக்கம் 36 ல் சில திருத்தங்கள் வெளியிட்டுள்ளோம். வாசகர்களள் அதனையும் திருத்திக் கொள்ளுங்கள்.

———————-

“மதீனாப் பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம்” என்று அடிக்கடி பிரசுரங்கள் வெளிவருகின்றதே! இதைப் பற்றி மார்க்கத்தின் கருத்தென்ன? K.P. குத்புத்தீன், லெப்பைக்குடிக்காடு

இது போன்ற பைத்தியக்காரத்தனத்துக்கெல்லாம் என்ன விளக்கம் எழுதுவது. முதலில் ‘மக்காவில் நடந்த உண்மை’ என்று இந்தப் பிரசரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன, ‘மக்காவில் ரவ்லா’ எங்கே இருக்கிறது ? என்று சிந்தனையாளர்கள் கேள்விகளை எழுப்பியபின் , இப்பொது மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற பிரசுரங்களை பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாகக் கிழித்து எறியுங்கள்! பொறையாரில் நடந்த மாநாட்டில் மேடையிலேயே பகிரங்கமாக நாங்கள் அதைக் கிழித்து எறிந்தபோது நல்ல தெளிவு மக்களிடம் ஏற்பட்டது.

————————-

நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு ஹதீஸ்களிலும், நபி(ஸல்) அவர்கள் உடும்பு சாப்பிடவில்லை என்றே உள்ளது. ஆரம்பத்தில் உடும்பு அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டதாக துர்ருல் முக்தாரில் கூறப்படுகின்றது. “அசுத்தமானவைகளை அவர்களுக்கு ஹராமாக்குவார்” (7 : 157) என்ற வசனம் இறங்குவதற்கு முன்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது என்றும் துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது! கவனியுங்கள்!

மவ்லவி அப்துல் வஹ்ஹாப் நூரி, ஆவணியாபுரம்.

உங்கள் முதல் பாராவில் தவறான ஒரு கருத்தை – அடிப்படையை எடுத்து வைக்கின்றீர்கள் . நாங்கள் எடுத்து வைத்த இரண்டு ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் உடும்பு சாப்பிடவில்லை என்று உள்ளதை மட்டும் ஏன் கவனிக்கின்றீர்கள்? நபி(ஸல்) அவர்களின் செயல் மட்டும் தான் மார்க்கம் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அந்த ஹதீஸ்களில் இன்னொரு நபித் தோழர் உடும்பை உண்ணும்போது அங்கீகாரம் தருகிறார்களே” அந்த அங்கீகாரம் மார்க்கம் இல்லையா? அதை ஏன் நீங்கள் கவனிக்கத் தவறுகிறீர்கள். காலித் இப்னுல் வலீத்(ரழி) அவர்கள் “இது ஹராமா?” என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாக பதில் தந்தார்களே. அந்தப் பகுதியை ஏன் நீங்கள் கவனிக்க மறந்தீர்கள்? செயலும் சொல்லும் வேறுபட்டால் சொல்லையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்களும் ஒப்புக் கொண்டுள்ள ஒரு அடிப்படைக்கு மாற்றமாக இந்தப் பிரச்சினையை மட்டும் ஏன் அணுகுகிறீர்கள்?

முன்னர் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் தடை செய்யப்பட்டதா? அல்லது முன்னர் தடை செய்யப்பட்டுப் பின்னர் அனுமதிக்கப்பட்டதா? இது அடுத்த பிரச்சனை. நாங்கள் “முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஒரு காரணமும் இருந்தது. அந்தக் காரணம் சரியில்லை என்று பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியவந்தது. அதன்பிறகு தடையை நீக்கினார்கள்” என்று ஆதாரங்கள் அடிப்படையில் எழுதியிருந்தோம்.

“முன்னர் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் தடுக்கப்பட்டது” என்று உங்கள் வாதத்துக்கு எந்த நியாயமான காரணத்தையும் எடுத்து வைக்கவில்லை, துர்ருல் முக்தாரில் உள்ளதாக மட்டும் குறிப்பிட்டால் போதுமா? அந்த ஆயத் இறங்குவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்டது என்று கூறுவதற்கும் எந்த ஆதாரத்தையும் நீங்கள் எடுத்து வைக்கவில்லை. உடும்பை அசுத்தமானது (கபாயிஸ்) என்று எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்?

உடும்பைச் சாப்பிட காலித் இப்னுல்வலீத் அவர்களுக்கு அனுமதியும் அங்கீகாரமும் நபி(ஸல்) அவர்கள் வழங்கியுள்ளார்கள் என்பதை நாம் முன்பே தெரிவித்துள்ளோம். காலித் இப்னுல் வலீ(ரழி) அவர்கள் இஸ்லாத்தை தழுவியதே ஹிஜ்ரி ஏழுக்கும், எட்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தான். அதன்பின்னர் தான் அவர் ஒரு சந்தர்ப்பத்தில் ‘இது ஹராமா’? என்று கேட்கிறார், நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை’ என்றனர்.

ஆக குறைந்தபட்சம் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டது சர்வ நிச்சயம். அதற்குப் பிறகு தடுத்ததாக நீங்கள் ஆதாரங்களைக் காட்ட வேண்டும். அப்போதுதான் உங்கள் கருத்தை ஏற்க முடியும். ஆனால் அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நன்கு நீங்கள் சிந்தியுங்கள்! உண்மையை உணர்வீர்கள்.

———————

“குழப்பவாதிகள் ஜாக்கிரதை” என்ற நூல் பற்றி என் எதுவும் எழுதாமலிருக்கிறீர்கள்?

மஹ்மூத் அல்ஹஸன், கோட்டாறு.

மறுப்பு எழுத அதில் என்ன வாதத்தை எடுத்து வைத்து விட்டார்கள்? அவ்வளவும் பச்சைப் பொய்! ‘ஷரஹ் பிக்ஹுல் அக்பரி’ல் மவ்லானா மவ்தூதி எழுதுவதாக ‘ரசூல்’ குறிப்பிடுகிறார். மவ்லானா மவ்தூதி(ரஹ்) அவர்கள் அப்படி ஒரு நூலே எழுதவில்லை.

மவ்தூதி(ரஹ்) மவ்லவி பட்டம் பெறவில்லையாம்! பல மவ்லவி பட்டம் பெற்ற ‘ரசூல்’ இப்படி விமர்சிக்கிறார். 13-5-54 அன்று ‘ரசூல்’ ஐ ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட ஷாஜஹான் இதழில் மவ்லவிகள் தான் மார்க்கத்தைச் சொல்ல வேண்டுமா? என்று கேட்டு ஒரு கட்டுரை வெளியிட்டவர்தான் இந்த ரசூல். (அந்தக்) கட்டுரை இதே இதழில் இன்னொரு இடத்தில் பிரசுரமாகியுள்ளது. நியாயவுணர்வு கொண்ட எவருமே நம்பமுடியாத அளவுக்கு பச்சைப் பொய்களை எழுதியவருக்கு என்ன பதில் கூறுவது?

———————

அல்லாஹ் அண்ணலார் மூலம் எடுத்துக் காட்டிய ஏவல் விலக்கல்களை எடுத்துரைப்பதுதான் சன்மாக்கப்பணி, மாறாக அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த பெருமானாரின் பெற்றோர் பற்றிய இரகசியத்தை விமர்சிப்பது ஷிர்க் ஆகாதா?

மேலை நாசர், கனியமுதம் பிரதிநிதி, சென்னை -53.

உங்கள் கேள்வியில் இரண்டு தவறுகள் உள்ளன. ஏவல் விலக்கல்களை விமர்சிப்பது மட்டும்தான் சன்மார்க்கப்பணி என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஏவல் விலக்கல்களுக்கு அப்பாற்பட்ட சுவர்க்கம்,நரகம்,கப்ருடைய நிலைமை இன்னும் இதுபோன்ற பிரச்சனைகளை எடுத்துரைப்பது சன்மார்க்கப்பணியாகாதா? அல்லாஹ்வும், அவனது தூதரும் எடுத்துச் சொன்ன அனைத்தையும் எடுத்துரைப்பது தான் சன்மார்க்கப்பணி. ஏவல் விலக்கல்களுக்கு அப்பாற்பட்ட மூஸாநபி, அவர்களின் தந்தையின் நிலமை இவை எல்லாம் சன்மார்க்கப் பணியில்லையா?

அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்ததை நாம் விமர்சிப்பது தவறு தான். நீங்கள் கூறியது போல் ஷிர்க் தான். ஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்ததை அவன் தனது திருத்தூதருக்குக் கற்றுக் கொடுத்து, அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த ரகசியம், பகிரங்கப்படுத்தபடுமானால் அதை எடுத்துக் சொல்வது எப்படி ஷிர்க் ஆகும்?

அல்லாஹ்வும், அவனது ரசூலும் அம்பலப்படுத்தியதை மறைப்பது தான் குற்றமாகும். ‘பத்துப் பேர் சுவனம் செல்வார்கள்’ என்ற ரகசியம் அல்லாஹ்வின் தூதர் மூலமாக நமக்க அறிவிக்கப்படும் போது அதை எடுத்துச் சொல்வது தவறா? தன் தாயைப் பற்றியும், தன் தந்தையைப் பற்றியும் உள்ள ரகசியத்தை அல்லாஹ் அவனது தூதருக்கு அறிவிக்க, அவனது தூதர் நமக்கு அறிவித்துவிட்டபின் இதில் ரகசியம் என்ன இருக்கிறது. ஆதாரப்பூவமான – மறுக்க முடியாத நபிமொழிகள் பல நபி(ஸல்) அவர்களின் தாய் தந்தையரைப் பற்றித் தெளிவாகக் கூறுகின்றன. ‘முஸ்லிம்’ என்ற கிரகந்தத்தில் அந்த நபிமொழி இடம் பெற்றுள்ளது. அதைத்தான் நாங்கள் எழுதினோம். இதுவும் சன்மார்க்கப்பணி தான்.

இன்னும் சொல்வதாக இருந்தால் இஸ்லாத்தின் மிகப் பெரும் அடிப்படையையே இந்த ரகசியம்(?) நமக்குத் தெளிவாக்கவில்லையா? எவராக இருந்தாலும், அவர்கள் இந்தக் கொள்கையை ஏற்று நல்ல அமல்கள் புரிந்தால் மட்டுமே ஈடேற முடியும். நான் நபியின் தந்தை நபியின் மகன் என்று மட்டும் கூறிக்கொண்டு அல்லாஹ்விடம் தப்பிக்க இயலாது என்ற பேரூண்மையை இது நமக்கு உணர்த்தவில்லையா?

அந்நஜாத்: மே, 1987 – ரமலான், 1407

No responses yet

Leave a Reply