பசுமைப் பூத்த நினைவுகள்
தாடியும் மீலாது மேடையும் கேப்டன் அமீருத்தீன்
ஆசிரியர் குறிப்பு :
தாடி மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு நபி நடைமுறை(ஸுன்னத்), மார்பகம் இல்லாத ஒரு பெண் எப்படி முழுமையான பெண்ணாக இருக்க முடியாதோ அதேபோல் தாடி இல்லாத ஓர் ஆண் முழுமையான ஆணாக இருக்க முடியாது. தாடியை சிரைப்பது மார்க்கத்தில் வெறுக்கப்பட்ட செயல் எனபதில் சந்தேகமில்லை. ஆயினும் தவறைச் சுட்டிக் காட்டுவதற்கும் மார்க்கம் அழகிய வழிமுறையை அமைத்துத் தந்திருக்கிறது. ஆனால் மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று ஆணவம் பேசும் மவ்லவிகள், மவ்லவி அல்லாதவர்களை அவாம்களாக – அன்ஆம்களாக – கால்நடைகளாக நினைத்து அகந்தை பேசுவது வாடிக்கை. மவ்லவி அல்லாத ஓர் அவாம் தனக்கு நிகராக மேடையில் உரையாற்ற வந்திருக்கிறாரே என்ற ஆத்திரத்தில் அவரது வாயிலிருந்து வெளிவந்த பேச்சே அது. சுன்னத்தே (நபிவழி) அல்லாத ஆதத்தான வழக்கம்) தொப்பியை பள்ளிகளில் வலியுறுத்தும் மவ்லவிகள் அங்கே மழுங்க சிரைத்துக் கொண்டு வரிசையில் நிற்கும் பள்ளி நிர்வாகிகளையும், மற்றவர்களையும் கண்டு கொள்வதில்லை. ஏன்? நீண்ட தலைப்பாகை, தொப்பி என காட்சி தரும் பல பள்ளி இமாம்கள் சுன்னத்திற்கு முரணான கசகசா தாடியுடன் காட்சி தருவதையும் பார்க்கலாம். அது பற்றி எல்லாம் கவலைப்படாத மதரஸா ஆசிரியர். மவ்லவி அல்லாத ஓர் அவாம் மேடையில் உரையாற்ற முன் வந்ததே அவரது கோபத்திற்குக் காரணம். தாடி பற்றி வலியுறுத்திய அந்த மவ்லவி நபியவர்களின் சிறிய தகப்பனால் காட்டித் தந்திருந்ததும், நபியவர்கள் தனது உம்மத்திற்குக் காட்டித் தராக பித்அத்தான் மீலாது விழா மேடையில், அதுபற்றியும் விளக்கினரா? இல்லையே. காசுக்காகப் பேசும் புரோகிதர்களின் நிலை இதுதான். அசலான குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான மார்க்கக் கடமைகளைக் கோட்டை விட்டுவிட்டு, நபிவழியில்லாத பித்அத்களில் முனைப்பாக ஈடுபடுவார்கள்! காரணம் அவையே அவர்களுக்கு உலக ஆதாயத்தைப் பெற்றுத்தரும்.
தமிழகத்தில் தெளஹீது எழுச்சி ஏற்பட்டு சுமார் 20 ஆண்டுகள் கடந்துவிட்டன். அதன் காரணமாக இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்களின் சமூக வாழ்க்கையில் மார்க்க அங்கீகார அடையாளத்துடன் நடந்து வந்த எத்தனையோ அனாச்சார மூட வழக்கங்கள் பெருமளவு குறைந்து விட்டன என்று சொன்னால்அது மிகையல்ல. ஆனால் அந்த பாதையில் இன்னும் நாம் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்பது என்னவோ உண்மை.
அப்படி குறைந்துவிட்ட பழக்க வழக்கங்களில் தர்காக்களில் கூட்டம் கணிசமாய் குறைந்து விட்டதை குறிப்பிடலாம். பல ஊர்களில் சந்தனப் பூச்சு கொண்டாட்டங்களும், கொடி ஊர்வல கேளிக்கைகளும் நின்று போனதை சொல்லலாம். பூரியான் பாத்திஹா என்றும், ஆறாம்பிறை பாத்திஹா என்றும் நடந்து வந்த பொருளாதார சுரண்டல் அடியோடு நின்று போனதை சொல்லலாம். மேலும் ரபியுல் அவ்வல் மாதத்தில் அதற்கு முன் வீட்டுக்கு வீடு போட்டி போட்டுக் கொண்டு நடந்து வந்த மெளலிது மஜ்லிசுகள் இப்போது தெருவிற்கு ஒனறு ஊருக்கு ஒனறு என்று குநைந்து விட்டதை நாம் காண முடிகிறது. அவ்விதமே மீலாத் விழாக்களையும் கூறலாம். முன்பெல்லாம் ஊருக்கு ஊர் நடந்து வந்த அந்த கோலாகல திருவிழா இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடப்பதை மட்டுமே நாம் காண்கிறோம். நாளடைவில் அவைகளும் மங்கி மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். ஆயினும் தூய இஸ்லாமிய நெறியை மக்களிடம் பிரச்சாரம் செய்வதிலிருந்து நாம் பின் வாங்கக்கூடாது.
இந்த ஆண்டு ரபியுல் அவ்வல் பிறந்து அதன் பெரும் பகுதி கடந்து விட்டது ஆங்காங்கு மெளலிது மஸ்லிசுகள் நடப்பதையும், மீலாத் விழாக்கள் கொண்டாடப்படுவதையும் நாம் கேள்விப்படவே செய்கிறோம். இந்த தருணத்தில் மார்க்கம் அனுமதிக்காத அந்த விழாவில் கலந்துக் கொள்வதற்கு மார்க்க அனுஷ்டமான முறை இருக்க வேண்டும் என்று வாதிட்ட ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. பசுமைப் பூத்த நினைவாய் என் உள்ளத்தில் பதிந்துவிட்ட அந்த அனுபவத்தை இங்கு உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். அப்போது எனது பகிர்ந்து கொள்கிறேன். அப்போது எனது நிலைமை என்னவென்றால் ஒரு முஸ்லிமிற்கு மார்க்க அனுஷ்டான நடைமுறை அவசியம் இருக்க வேண்டும் என்று நம்பிக்கையுடையவனாக நான் இருந்தாலும், அவைகளை கண்டிப்பாக பேணுவதில் குறைவுடைய வாலிப பருவத்தில் அப்போது நான் இருந்தேன். அதே நேரத்தில் மீலாத் விழா என்ற பெயரில் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடுவது மார்க்கம் அனுமதிக்காத ஒன்று என்பதை அறியாதவனாகவும் அப்போது நான் இருந்தேன்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் எனது சொந்த ஊர் திருவாரூரை ஒட்டியிருக்கும் ஒரு சிற்றூர் கொடிக்கால்பாளையம் என்பது முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதி அது. அப்போது அங்கு ‘பட்டதாரிகள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பு இருந்தது. அவ்வூர் படித்த இளைஞர்கள் அதானை நிறுவி சமூகச் சேவை செய்து வந்தார்கள். ஆண்டுதோறும் வழக்கமாக ரபியுல் அவ்வல் மாதத்தில் கொண்டாடப்பட்ட “மீலாத்விழா’வை அந்த ஆண்டு சங்கத்தின் சார்பாக நடத்தினார்கள்.
பொதுக்கூட்டம் ஒரு சனிக்கிழமை மாலை இஷாவுக்குப்பின் இரவு 9 மணியளவில் துவங்கியது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் வியாபாரிகளான அவ்வூர் மக்களுக்கு இது செளகரியமாக இருந்திருக்கும். தற்போது புதுப்பித்து கட்டப்பட பழமையான பள்ளிவாசலை அடுத்த கடைத்தெரு முச்சந்திப்பில் ஓரமாக மேடை போடப்பட்டிருந்தது. விழாவிற்கு அந்த ஊர் இமாம் காலம் சென்ற உமர் ஆலிம் அவர்கள் தலைமை வகித்தார்கள். பேச்சாளர்கள் பட்டியலில் என்னுடன் திருவாரூர் இமாம் காலம் சென்ற அப்துல் ஹமீது பாக்கவி மற்றும் பொரவாச்சேரி அரபி கல்லூரி ஆசிரியர் ஒருவரும் இடம் பெற்றிருந்தார்கள்.
பொதுக்கூட்டம் துவக்கப்படுவதற்கு முன் வழக்கம்போல் இஸ்லாமியப் பாடல்கள் இசைக்கப்பட்டன. மக்கள் கூட்டம் ஓரளவு கூடியவுடன் கிராஅத் ஓதப்பட்டு விழா முறையாக துவக்கப்பட்டது. முன்னதாக தலைவர் ஒரு நீண்ட தலைமையுரை ஆற்றினார். பின்னர், பொரவாச்சேரி அரபி கல்லூரி ஆசிரியர் நபிகள் நாதர் வழிமுறை என்ற தலைப்பில் பேசும்படி அழைக்கப்பட்டார். அப்போது அந்த ஆசிரியரும் என்னைப் போன்றே 30 வயதை தாண்டிய ஒரு இளைஞர்.
அரபி கல்லூரி ஆசிரியருக்குள்ள அடையாளமாய் நீண்ட அங்கியும் தலைப்பாகையும் அணிந்திருந்தார். கத்தரிக்கப்படாத நீண்ட அடர்ந்த தாடியுடன் விளங்கினார். மேடையிலிருந்த தலைவரும், மற்றொரு பேச்சாளரான அப்துல் ஹமீது பாக்கவியும் நடுத்தர வயதினர். அனுபவமிக்கவர்கள்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை அழகான முறையில் விளக்கிக் கொண்டிருந்தார் ஆசிரியர். அவருடைய மிடுக்கான பேச்சும், சரளமான நடையும் அனைவரையும் கவர்ந்து ஈர்த்தது. ஒரு கட்டத்தில் நபிகளாரின் வழிமுறையை – சுன்னத்தை பேணவேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்தி பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் பேச்சுவாக்கில் என் பக்கம் திரும்பிப் பார்த்தார். அவரது பேச்சை ரசித்து கவனமாய கேட்டுக்கொண்டிருந்த என்னை கண்டதும் அவர் முகத்தில் கடுமை மின்னி மறைந்தது. தன் முன்னே வீற்றிருந்த மக்களை நோக்கி தடாலடியாக ஒரு செய்தியைக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவுடன் தனிப்பட்ட முறையில் என்னை திக்குமுக்காட வைத்தார். ஆசிரியர் கூறிய அந்த செய்தி இதுதான்.
இங்கு நாம் நபிகளாரின் வழிமுறையை சிலாகித்து பேசிக் கொண்டிருக்கிறோம். அவற்றை நாம் கடைபிடிக்க வேண்டிய அவசியம் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். தாடியை பேணி வளர்ப்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண்கள் மீதும் கடமையாகும். ஆனால் நபிகளாரின் எளிதான அந்த சுன்னத்தைக் கூட பேனாதவர்களை நபிகளார் பிறந்தநாள் விழாவுக்கு நீங்கள் அழைக்கிறீர்கள். அவர்களும் கூட வெட்கமில்லாது வந்து விடுகிறார்கள்.
மேற்கண்டவாறு பேச்சின் நடுவே கூறிவிட்டு தாடியின் சிறப்புப்பற்றி பேசலானால். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேடையில் வீற்றிருந்தவர்களில் நான் மட்டுமே தாடியில்லாது மழுக்க வழித்துவனாக இருந்தேன். அவருடைய பேச்சு என்னை சுறுக்கென்று தைத்தது; என் தன்மானம் கேள்விக் குறியானது; மேடையில் தொடர்ந்து உட்கார்ந்திருப்பது எனக்கு சங்சடமாக இருந்தது. அருவறுப்பாய் தோன்றியது. ஆகவே, மேடையை விட்டு கீழே இறங்கி அருகிலிருந்து சங்க கட்டிடத்திற்கு போனேன். கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சகோதரர்கள் அங்கு என்னை சூழ்ந்துக் கொண்டார்கள். பேச்சாளரின் கண்ணியக் குறைவான பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். என்னை சமாதானப்படுத்தினார்கள்.
கொஞ்ச நேரத்தில் என்னை நான் சரிபடுத்திக் கொண்டேன். நண்பர்கள் கொடுத்த தேநீர் அருந்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அவருக்கு அடுத்ததாக என்னைப் பேச அழைக்க வேண்டாமென்றும் எனக்கு கொஞ்ச அவகாசம் தேவைப்படுகிறது என்றும் கேட்டுக் கொண்டவனாக மேடைக்கு திரும்பினேன். ஆசிரியர் பேசி முடித்து விட்டு என் அருகில் வந்து அமர்ந்தார். அடுத்தாக திருவாரூர் இமாம் அப்துல் ஹமீது பாக்கவி அவர்களை பேசும்படி தலைவர் அழைத்தார். அவரும் பேசி முடித்து நான் பேசும் நேரம் வந்தது. தலைவர் என்னை அழைத்தார். முன்னதாக பேசியவர்கள் எழுப்பிய பிரச்சினைப் பற்றி அவர் கண்டுக் கொள்ளவில்லை. ஏதும் நடக்காதது போல் சாவதானமாக தலைவர் நடந்துக் கொண்டது எனக்கு ஏமாற்றமாகவும் அதிருப்பதியாகவும் இருந்தது.
கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு. ஏதோ எதிர்பார்ப்புடன் பின்னால் இருந்தவர்கள் முன்னால் வந்து அமர்ந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அங்கு ஆரவாரம் அடங்கியது. அதுவரை இல்லாத நிசப்தம் நிலவியது. ஆசிரியர் எழுப்பிய விவகாரம் பற்றி நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதை கேட்பதற்கு கூட்டத்தினர் தயாரானது போல் எனக்குத் தோன்றியது. வழக்கமான பீடிகைக்குப்பின் நான் என் உரையை இவ்வாறு தொடங்கினேன்.
அன்பர்களே, எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பை ஒட்டி நான் பேசுவதற்கு முன்னால் இந்த மேடையில் நான் பங்கு பெற எனக்கு தகுதி ஏதும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டியவனாக இருக்கிறேன். ஏனெனில் எனக்கு முன்னால் பேசிய ஒரு பெருந்தகை அதை விவகாரமாக்கி இருக்கிறார். தலைவர் அவர்கள் அதற்கு பதில் கூறுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அவர்கள் அதை கண்டு கொள்ளாததால் அவர் எழுப்பியுள்ள பிரச்சனைக்கு நானே பதில் அளிக்க வேண்டிய ஒரு சங்கடமான சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.
அன்பர்களே. இந்த விழாவில் கலந்து கொள்ள எனக்கு ஏதும் பெரும் தகுதி இருப்பதாக நான் கருதவில்லை. என்னை அழைத்தவர்களும் எனது தகுதி கருதி அழைக்கவில்லை. மார்க்க மேதைகளும் அறிஞர்களும் கலந்து உரையாற்றும் விழாவில் நானும் கலந்துகொணடு தகுதியை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகத்தான் இதனைக் கருதுகிறேன். ஆனால் இங்கிதம் இல்லாத அறிவுரையாலும். கண்ணியக் குறைவான பேச்சாலும். கரடுமுரடான உபதேசத்தாலும் யாருடைய உள்ளத்தையும் நாம் தொடமுடியாது என்பதை மார்க்கம் கற்றவர்கள் விளங்க வேண்டும். தாடி இல்லாத காரணத்தினால் நான் இந்த சபைக்கு வர தகுதி இல்லை என்று கூறப்பட்டது எனக்கு ஒரு வரலாற்கு சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது.
ஸ்பெயின என்ற ஐரோப்பிய நாட்டை முஸ்லிம்கள் வெற்றிக்கொண்டு 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள். அங்கு முஸ்லிம்களின் ஆட்சியை வலிமையாய் நிலைநிறுத்திய பெருமை இரண்டாவது அப்துல் ரஹ்மான் என்ற அரசரை சேரும். அவருடைய அரச சபைக்கு பாக்தாத்திலிருந்து கலீபாவின் பிரதிநிதி ஒருவர் அனுப்பப்பட்டர். அவர் அரும்பு மீசையும் முளைக்காத ஒரு வாலிபர். அவர் அரச சபையில் கலீபா கொடுத்தனுப்பிய தகுதி சான்றுகளை அரசரிடம் கொடுத்தபோது, அவரின் இளமைத் தோற்றத்தைக் கண்டு அவரை லேசாக எடைப்போட்ட அரசர், “ஏன், கலீபாவின் சபையில் தாடி வைத்த பிரமுகர் யாரும் இல்லையா? உம்மை அனுப்பி இருக்கிறார்!” என்று கேட்டார். அரசரின் கேள்வியை புரிந்துக் கொண்ட அந்த இளவல் அரசே, தங்கள் சபைக்கு வருவதற்கு தாடி மட்டுமே தகுதி என்றால் எங்கள் கலீபாவின் அரண்மனைத் தோட்டத்தில் நீண்ட தாடியுடைய ஆடுகள் நிறையவே உண்டு என்று பதில் அளித்தார்.
நான் அவ்வாறு கூறியதும் கூட்டத்தில் பலத்த சிரிப்பு அலை எழுந்தது. அது ஓய சில நொடிகள் பிடித்தது. சிரிப்பு அலை ஓய்ந்ததும் நான் கடுமையான குரலில் சாடினேன்.
‘தாடி இல்லாத காரணத்தால் நான் இந்த சபையிலிருந்து ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் நியாயமிருந்தால், இந்த சமுதாயம் இஸ்லாமிய மேடைகளிலிருந்து கவிஞர் அல்லாமா இக்பாலை விலக்கி இருக்க வேண்டும். பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து நாட்டை துண்டாடிய ஜின்னாவின் பின்னால் முஸ்லிம் சமுதாயம் போயிருக்கக் கூடாது. அவர்களுக்கு எல்லாம் அப்படி எதுவும் ஏற்படாதபோது என்னையும் இந்த சமுதாயம் இந்த மேடையிலிருந்து ஒதுக்க முடியாது” என்று முழங்கினேன்.
இப்படித்தான் இறைத்தூதர் மக்களுக்கு மார்க்கத்தை போதித்தார்களா? பிறரிடம் உள்ள குறையை இப்படித்தான் இங்கிதம் இல்லாமல் இடித்துரைத்தார்களா? சக பேச்சாளரை மேடையில் வைத்துக் கொண்டே கண்ணியக் குறைவாக பேசியவருக்கு தலைவர் பதில் அளித்திருக்க வேண்டும். ஆனால் ஆலிம்கள் ஒரு ஆலிமுக்கும், ஆலிம் அல்லாத ஒருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்று எழுதப்படாத சட்டத்தை பின்பற்றுகிறார்கள் போலும் என்று சாடினேன். அதன் பின் எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் உரையாற்றிவிட்டு அமர்ந்தேன்.
தலைவருக்கு இப்போது ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. தனது முடிவுரையில் தாடி பிரச்சினையை எழுப்பி மீலாத் மேடையை விவகார மேடையாக மாற்றிவிட்டவரை வன்மையாகக் மேடையாக மாற்றிவிட்டவரை வன்மையாகக் கண்டித்தார். பிறரிடம் காணும் குறையை சுட்டிக்காட்டும்போது பக்குவமாக சொல்ல வேண்டும். அவர் அதை ஏற்று தன்னை திருத்திக் கொள்ளும் விதத்தில் தன்மையுடன் மறைமுகமாக சொல்ல வேண்டும். கரடு முரடான வார்த்தைகளால் மனம் புண்பட பேசக்கூடாது. அதுவே இறைத் தூதர் வழிமுறை என்று போதித்தார். ஆனால் அந்த ஆசிரியரோ தலைவர் கூறியது எதைப் பற்றியும் கவலைப்படாதவராக தமது நீண்ட தாடியை நீவிவிட்டுக் கொண்டிருந்தார்.
******************