குஜராத் தேர்தல் முடிவுதரும் படிப்பினை!
நாடு முழுவதும் பெருத்த ஆவலுடனும் ஆராவரத்துடனும் எதிர்பார்த்த குஜராத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. மோடியின் தலைமையில் மீண்டு பா.ஜ.க. அரசு பதவி கட்டிலில் அமர்ந்து விட்டது. பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மற்றும் பல முக்கியத்தலைவர்களுக்கு பாபரி மஸ்ஜித் இடிப்பில் இருந்த முக்கிய பங்கு குஜராத் மட்டுமல்ல அகில இந்தியா மற்றும் அகில உலகமும் அறிந்த உண்மை. ஆயினும் அவர்கள் மத்திய அரசின் ஆட்சியில் அமர்ந்து தமது காவிக் கொள்கையை அரசின் அனைத்துத்துறைகளிலும் புகுத்த வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மத்தியில் அமர்ந்திருப்பது காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், அரசுத் துறைகளிலும், நீதித் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவது காவிக் கொள்கையினரே என்பதை சமீபத்திய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
மோடியின் அட்டூழியங்கள், சதித் செயல்கள், நரவேட்டைகள் அனைத்தும் அவற்றை செய்தவர்களின் ஒப்புதல் வாக்கு மூலங்கள் மூலம் அம்பலப்பட்டுப் போயின. தூக்கில் தொங்க வேண்டியவர்கள், சிறையில் வாட வேண்டியவர்கள், மீண்டும், மீண்டும் ஆட்சிக் காலத்தில் அமர்ந்து மேலும் மேலும் அராஜக, அட்டூழிய அக்கிரமச் செயல்களை செய்யும் வாய்ப்பு எதனால் ஏற்படுகிறது?
அல்குர்ஆன் ஆலஇம்ரான் 3:26 தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. அது வருமாறு: (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவுபடுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருள்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கிறாய்!” (3:26)
இந்த இறைவாக்கின் மூலம் அல்லாஹ்வே மிகமிகக் கொடியவனான மோடிக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்துள்ளான் என்பதில் மாற்றுக் கருத்துடையவர்கள் உண்மையான முஸ்லிமாக – இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது. முஸ்லிம்களின் விரோதியான மோடியை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி முஸ்லிம்களுக்கு மேலும் துன்பங்கள் ஏற்படுவதாக இருந்தால் அதற்குக் காரணம் என்ன? அதையும் நமது எஜமானன் அல்லாஹ் அன்னிஸா 4:62லும், அர்ரூம் 30:41லும் நம் கைகள் தேடிக்கொண்டவற்றின் பலனையே அனுபவிப்பதாகக் கூறுகிறான்.
அன்ஃபால் 8:25-ல் “நீங்கள் வேதனைக்குப் பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்கிறவர்களை மட்டும் தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை” என்று எச்சரிப்பதன் மூலம், வேதனை இறங்குவதற்குக் காரணமானவர்களை எச்சரித்து அவர்களைத் திருத்தப்பாடுபட வேண்டும் என்பதை உணர்த்துகிறான் அல்லாஹ்.
இன்றோ முஸ்லிம்கள், நாளை மறுமையில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடுவதாக ஃபுர்க்கான் 25:30-ல் கூறுவது போல அல்குர்ஆனின் போதனைகளை முற்றிலும் புறக்கணித்து வாழ்பவர்களாக இருக்கின்றனர். இதற்குக் காரணம் முஸ்லிம்கள் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் மவ்லவி புரோகிதர்கள் அவர்களின் தவறான சுய விளக்கங்களைக் கொடுத்து அவர்களை திசை திருப்பி வழிகேட்டில் இட்டுச் செல்வதேயாகும்.
உதாரணமாக அல்லாஹ், ஆல இம்ரான் 3:186-ல் கூறுகிறான் என்று பாருங்கள்; அது வருமாறு:
“உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன்னர் நெறிநூல்கள் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக்காரியங்களிலும் (நன்மையைத் தேடித்தரும்) மிக வீரச் செயலாகும்.” (3:186)
இவ்வளவு தெளிவாக நேரடியாக அல்லாஹ் கட்டளையிட்டிருந்தும், புரோகித மவ்லவிகள் என்ன செய்கிறார்கள்? முஸ்லிம்களை ஈமானுடைய உணர்வை இழந்து இன உணர்வுக்கு ஆளாகி இனவெறியோடு பலவித போராட்டங்களில் ஈடுபட வைக்கிறார்கள். இனவெறி கொண்டு ஒரு முஸ்லிம் போராடி மடிந்தால் அவன் நரகவாதியே என்ற நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையையும் நிராகரித்து விடுகிறார்கள்.
ஹிந்து மத வெறியைத் தூண்டி முதலில் உ.பி.யிலும், பின்னர் மத்தியிலும் , பல மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க.வுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் புரோகித மவ்லவிகளும், அவர்களுக்கு ஜால்ரா போட்ட சில அரசியல் தலைவர்களும், அவ்விரு சாரார் பின்னால் அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் போதனைகளைப் புறக்கணித்து விட்டு இனவெறி கொண்டு சென்ற முஸ்லிம்களுமே என்று சொன்னால் அது தவறான கூற்று அல்ல.
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பாபரி மஸ்ஜித் விவகாரத்தை, முஸ்லிம்களின் கெளரவப் பிரச்சினை, இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்வா சாவா? என்பதை முடிவு செய்யும் முக்கிய பிரச்சினை என முஸ்லிம்களிடையே இனவெறியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் இவர்கள்தான்.
1990 மார்ச் அந்நஜாத் இதழ் பக்-27 முதல் 36 வரை ஹுதைபிய்யா உடன்படிக்கையை முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய தவறான முடிவாக ஷைத்தான் காட்டினான்: அதற்கு மாறாக நபி(ஸல்) அவர்கள் தமது சுய விருப்பத்தை அதில் புகுத்தாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றியது, இவை அனைத்தையும் விளக்கி, இதுபோல் பாபரி மஸ்ஜித் விவகாரத்திலும் அல்லாஹ்வின் கட்டளைப்படி குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று தெளிவாக எழுதியிருந்தோம். அப்போது எந்த மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சியும் இல்லை; பாராளுமன்றத்தில் வெறும் இரண்டு எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். பாபரி மஸ்ஜிதும் இடிபடவில்லை. பாபரி மஸ்ஜித் பற்றி பா.ஜ.க.வினரின் பேச்சுகளுக்கு முஸ்லிம்கள் எவ்வித பதிலும் அளிக்காமல் மெளனம் சாதித்திருந்தாலும் பாபரி மஸ்ஜித் விவகாரம் முற்றியும் இருக்காது. இடிபட்டும் இருக்காது. பம்பாய், கோத்ர, குஜ்ராத், கோயம்புத்தூர் போன்ற பல இடங்களில் முஸ்லிம்களின் உயிருக்கும், பொருளுக்கும், கற்புக்கும் பெருத்த சேதமும் ஏற்பட்டிராது. இவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடந்தது என்பதில் ஐயமில்லை. இதற்கு அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணான முஸ்லிம்களின் செயல்பாடுகளும் காரணம். இதைப் படிப்பினையாகக் கொண்டு முஸ்லிம்கள் தெளபா செய்து மீள வேண்டும் என்ற நன்னோக்கத்துடனேயே இவற்றை இங்கு பதிவு செய்கிறோம்.
ஒரு கையை எவ்வளவு வேகமாக வீசினாலும் ஓசை எழாது. ஒரு கையுடன் ஒரு கை மோதும் போதுதான் ஓசையும், இழப்பும் ஏற்படும், பா.ஜ.க.வினரின் முறையற்ற வெறியைத் தூண்டும் பேச்சுகளுக்கு 3:186 இறைக் கட்டளைக்கு முரணாக முஸ்லிம்களும் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற போக்கில், பா.ஜ.க.வினரைப் போலவே இவர்களும் இனவெறிக்கு ஆளாகி செயல்பட்டதாலேயே முஸ்லிம்களுக்கு பேரிழப்பு ஏற்பட காரணமாயிற்று.
பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் டிசம்பர் 6ஐ இவர்கள் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக துக்க நாள், கருப்புதினம் என கடைபிடிப்பதும், பாபரி மஸ்ஜிதுக்காக குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக பலவித போராட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் என நடத்துவது அனைத்தும் இனவெறி காரணமாகவே அல்லாமல், ஈமானுடைய உணர்வின் அடிப்படையில் அல்ல என்று நாம் சொல்லும் போது, நம்மீது கடுமையாக ஆத்திரப்படுகிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் ஈமானுடைய அடிப்படையில் இருந்தால் எப்படி அவர்களால் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறாக, நபி(ஸல்) அவர்களின் போதனைகளுக்கு மாறாக இந்தப் புரோகித மவ்லவிகளின் சுய விளக்கங்களைக் கேட்டு செயல்பட முடிகிறது. அவர்களின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் 3:186 இறைக் கட்டளையின் நேரடிக் கருத்துக்கு முரணாக இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் இனவெறிக்கு ஆளாகித்தான் செயல்படுகிறார்கள் என்பதற்கு மேலும் தெளிவான ஒரு ஆதாரம் தருகிறோம். பாபரி மஸ்ஜித் போன்ற பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்படுகின்றன. அந்தந்த பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் ஐ வேளையும் கூட்டாக ஜமாஅத்தாகத் தொழுவதற்காகவும், மற்றும் அவர்களின் அனைத்துக் கருமங்களிலும் ஆலோசனைகள் செய்து நடைமுறைப்படுத்துவதற்காகவுமே.
இந்த அடிப்படையில் அனைத்து வேளைகளிலும் அப்பகுதி முஸ்லிம்களால் நிறைந்து காணப்பட்டால் மஸ்ஜிதை யாராலும் இடித்து தரை மட்டமாக்க முடியுமா?
இதே பாபரி மஸ்ஜிதை எடுத்துக் கொள்ளுங்கள்; அதனுள்ளே விஷமிகள் சிலையைக் கொண்டு வைத்த நாளின் காலை பஜ்ரில், அந்த பகுதி முஸ்லிம்களில் இளைஞர்கள், நடுத்தர வயதினர், வயோதிகர் என அனைவரும் குறைந்தது அந்த மஹல்லாவில் உள்ள முஸ்லிம்களில் ஒரு கால் பங்கினராவது காலை பஜ்ர் தொழுகைக்கு வந்திருந்தால் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்குமா? பள்ளிவாசல்கள் தொழ ஆளில்லாமல் பாழடைந்து கிடப்பதால் தானே மற்றவர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது.
இந்த புரோகித மவ்லவிகளும், தலைவர்களும் இறையச்சம் உடையவர்களாக இருந்தால் இவர்களின் இந்த முயற்சிகள் அனைத்தையும் திருப்பி அனைத்து பள்ளிகளையும், தொழுகையாளிகளைக் கொண்டு நிரப்பட்டும். எதிரிகளால் பள்ளிகள் இடிக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட துக்க தினம், நினைவு தினம்,ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை மறியல்கள் இவற்றை, நடத்தாவிட்டால் பாபரி மஸ்ஜிதை இடித்தது போல் இன்னும் பல பள்ளிகளை காவிக் கொள்கையுடையோர் இடித்துத் தள்ளிவிடுவர் என்று முஸ்லிம்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்களின் இப்படிப்பட்ட செயல்கள் பாபரி மஸ்ஜித் இடிபடுவதை தடுக்க முடிந்ததா? அல்லது கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் நடத்தி வரும் இப்படிப்பட்ட குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல்கள் மீண்டும் பாபரி மஸ்ஜித் கட்டப்பட உதவியதா? இல்லையே! அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு முரணாகச் செயல்பட்டு முஸ்லிம்களுக்கு நல்லது செய்து விட முடியும் என்று நம்புகிறவர்கள் உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக இருக்க முடியுமா?
எல்லோரும் விளங்கிக் கொள்ள ஓர் உதாரணம் தருகிறோம். பாபரி மஸ்ஜிதுக்காக வருந்தி இப்படிப்பட்ட செயல்பாடுகளில் துடிப்புடன் ஈடுபடுபவர்களில் எத்தனை பேர் விடாது ஐவேளைத் தொழுகைகளையும் ஜமாஅத்துடன் பேணித் தொழுபவர்கள் என்று கணக்கிடுங்கள். ஜமாஅத்தை பேணாவிட்டாலும் ஐங்காலத் தொழுகைகளையும் பேணித் தொழுபவர்கள் எத்தனை பேர்? பஜ்ர் தொழுகை முதல் ஐந்து நேரத் தொழுகைகளும் விடாது தொழுபவர்கள் எத்தனை பேர்? தொழுகையில் பேணுதல் இல்லாதவர்கள் எத்தனை பேர்? மறந்தும் தொழுபவர்கள் எத்தனை பேர்? மறந்தும் தலையை சுஜுதில் வைக்காதவர்கள் எத்தனை பேர்? என ஒரு புள்ளி விவரக்கணக்கு எடுத்துப் பாருங்கள்.
தொழுகையை விட்டு விட்டுத் தொழுகிறவர்கள், தொழுகையில் பேணுதலற்றவர்கள், தொழுகையே இல்லாதவர்கள் இப்படிப்பட்ட போராட்டங்களில் பேரார்வத்துடனும், துடிப்புடனும் ஈடுபடுகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? அவர்களின் இச்செயல்பாடுகள் ஈமானுடைய உணர்வினால் அல்ல; இன உணர்வினால் வெறியால் உந்தப்பட்டு, ஷைத்தானுக்கு வழிபட்டு செயல்படுகின்றனர் என்பது தெரிய வரும்.
ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்துடன் பேணி ஒருவன் தொழுது வருவானேயானால் அல்லாஹ் அன்கபூத் 29:45 ல் கூறுவது போல் அத்தொழுகை அனைத்துத் தவறான செயல்களை விட்டும் அவனைப் பாதுகாத்து விடும். தப்லீக் ஜமாஅத்தினரைப் போல நபிமார்களையும், அவுலியாக்களையும், நாதாக்களையும் தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் பொருட்டாக ஆக்காமல், அல்லாஹ்வை மட்டும் தங்களின் எஜமானனாகவும், பாதுகாவலனாகவும் கொண்டு ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழும் ஒருவன் நிச்சயமாக துக்கதினம், நினைவு தினம், போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற குர்ஆன், ஹதீஸ் மறுக்கும் செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டான்.
ஒருத்தருடைய இறப்புக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்கக் கூடாது; மனைவி கணவனுக்காக 4 மாதம் 10 நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்கக் கூடாது, நபி(ஸல்) அவர்களுக்கே பிறந்த நாள் என்றோ, நினைவு நாள் என்றோ கடைபிடிக்கக் கூடாது என்று மார்க்கம் தெளிவாகச் சொல்லிக் கொண்டிருக்க, பாபரி மஸ்ஜித் ஷஹீத் என்றோ டிசம்பர் 6ஐ துக்கதினம் என்றோ கடைபிடிக்க மார்க்கம் அனுமதிக்குமா என சிந்திக்க வேண்டும். நம்முடைய எண்ணத்தில் அது துக்க தினம் என்றால், பா.ஜ.க.வினர் அதை மகிழ்ச்சி தினம் என இனிப்பு வழங்கி கொண்டாடுவதை தடுக்கும் உரிமை நமக்கு உண்டா? நடுநிலையோடு சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். கட்டுப்பாடுடன் நடக்கக் கடமைப்பட்ட முஸ்லிம்களே கட்டுப்பாட்டை மீறி நடக்கும் போது, எவ்வித கட்டுப்பாடும் இல்லாத பா.ஜ.க.வினரை கட்டுப்படுத்த முற்படுவது அறிவுடைமையா? துஷ்டனுக்குப் புத்தி சொன்னால் துன்பம் வரும் என்ற அடிப்படையை விளங்காதவர்கள் தங்களை மேதைகள் என எண்ணுவதுதான் பெரும் விந்தையாகும். சிந்திக்க வேண்டுகிறொம்.
குஜராத் தேர்தல் மிகமிக நெருக்கமாக இருக்கும் நிலையில், டிசம்பர் 6-ல் முஸ்லிம்கள் இப்படிப்பட்ட செயல்பாடுகளால், நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்கள் கூடும் இடங்களில், பிரயாணங்களில் ஏற்படுத்தப்பட்ட மிகக் கடுமையான சோதனைகள், கெடுபிடிகள், நாட்டுக்கு ஏற்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் வீண்செலவுகள் இவை அனைத்தையும் நடுநிலையோடு சிந்தித்துப் பார்க்கவும் நடுநிலை ஹிந்து சகோதரர்களுக்கு, முஸ்லிம்களின் இந்த முறையற்ற போக்கை அடக்க மீண்டும் மோடியே ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்குமா? இல்லையா? இல்லை என்றால், கோத்ரா ரயில் எரிப்புக்கும், அதைக் காரணம் காட்டி குஜராத் முழக்க கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கொலை வெறித்தாக்குதல்களுக்கும் மோடியே பிரதான காரணம் என்பதை அவரால் தூண்டிவிடப்பட்டு பல கொடூர செயல்களில் நேரடியாக ஈடுபட்ட கொடியவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, அது அம்பலப்பட்டு, நாடு முழுவதும் அச்செய்தி பரப்பப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அந்த மோடியே வெற்றி பெற்றுள்ளார் என்றால் அதன் பொருள் என்ன?
முஸ்லிம்களின் இப்படிப்பட்ட குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல்பாடுகளால் அவர்கள் தங்கள் கைகளால் தேடிக் கொண்டவற்றை (பார்க்க, 4:62,30:41) ருசித்துப் பார்க்க அல்லாஹ்தான் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளான் என்றால் அதை இவர்களால் மறுக்க முடியுமா?
இவர்களால் செய்யப்படும் இந்த குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல்பாடுகளால் கிடைக்கும் சில அற்ப உலக ஆதாயங்களைப் பெரிதுபடுத்திக் காட்டி தங்களின் இத்தீய செயல்களை நியாயப்படுத்துகின்றனர் இந்தப் புரோகித மவ்லவிகளும் அவர்களின் பின்னால் செல்பவர்களும், நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை என்றும் கூறி தங்களை நல்லவர்களாகக் காட்ட முற்படுகின்றனர். இதையும் அல்லாஹ் 4:62-ன் பிற்பகுதியில் எடுத்துச் சொல்லி கண்டிக்கின்றான். அவர்கள் செய்யும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட முயற்சிகள் சுய விளக்கங்களைச் சொல்லி, அம் முயற்சிகளால் அற்பமான சில உலக ஆதாயங்கள் கிடைப்பதாகச் சொல்கின்றனரே? அல்லாஹ் அல்குர்ஆன் பகரா 2:219-ல் என்ன சொல்லி சிந்திக்க சொல்கிறான் என்று பாருங்கள்.
(நபியே!) மதுவையும், சூதையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும்பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களும் உண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலுமுள்ள பலனைவிடப் பெரிது………” (2: 219)
இப்போது சிந்தியுங்கள்! மதுவிலும், சூதிலும் கூட சில நன்மைகள் இருப்பதாக அல்லாஹ் கூறியே அவற்றை ஹராமாக்கி இருக்கிறான். அதுபோல் இவர்கள் செய்யும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல்பாடுகளால் கிடைக்கும் சில அற்பமான நன்மைகளைக் காட்டி அவற்றைச் செய்யத் தூண்டுவது, வழிகேடர்கள் மதுவிலும், சூதிலும் இருக்கும் அற்பமான பலன்களை எடுத்துக் காட்டி மக்களை மதுவிலும், சூதிலும் ஈடபட உற்சாகப்படுத்துவது போன்றதுதான்.
உதாரணமாக 1986-லிருந்து பாபரி மஸ்ஜித் விவகாரமாக இவர்களின் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரண்பட்ட செயல்பாடுகளினால் ஏற்பட்டுள்ள நன்மைகளையும் பட்டியலிடட்டும். அதுபோல் அச்செயல்பாடுகளினால் ஏற்பட்டுள்ள கலவரங்கள், உயிர் நஷ்டங்கள், பொருள நஷ்டங்கள், கற்பழிப்புகள் இவை அனைத்தையும் பட்டியலிடட்டும்; அயோத்தி, பம்பாய், கோத்ரா, குஜராத் முழுக்க, கோயம்புத்தூர், நாகூர் இன்னும் பல இடங்களில், ஏற்பட்ட கலவரங்களினால் ஏற்பட்ட அனைத்துவகையான நஷ்டங்கள், துன்பங்கள், அமைதியற்ற நிலை இவை அனைத்தையும் பட்டியலிட்டு சீர்தூக்கிப் பார்க்கட்டும்.
அல்லாஹ் மது, சூதில் சொல்வது போல், இவர்களின் இந்த டிசம்பர் 6, துக்க நாள், நினைவு நாள், போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலைமறியல் இத்தியாதி, இத்தியாதி குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல்பாடுகளினால் ஏற்பட்ட நன்மைகளை விட தீமைகள் பல்லாயிரம் மடங்கு இருப்பதை அவர்களாலும் மறுக்க முடியாது.
இவர்களின் குர்ஆன் ஹதீஸுக்கு முரண்பட்ட இந்த செயல்பாடுகள் நீடித்தால், முஸ்லிம்களின் எதிரிகளான பா.ஜ.க.வினரை மத்தியிலும்,மாநிலங்களிலும் ஆட்சியில் அமர்த்த இவர்களே ஓயாது பாடுபடுகிறார்கள் என்பது தான் அதன் பொருளாகும்.
என்னதான் குன்றிலிட்ட தீபமாக, எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் குர்ஆன், ஹதீஸை விளக்கினாலும், இந்த அற்பமான உலகில் கிடைக்கும் பட்டம், பதவி, பவிசு, கூட்டம், பணம், காசு, விளம்பரம் இவற்றில் ஆசை வைத்து இவற்றைக் குறியாக வைத்து செயல்படும் புரோகித மவ்லவிகளும், தலைவர்களும் அவர்கள் செய்வது தவறு என்று அவர்களின் மனச்சாட்சியே உறுத்தினாலும் அவர்கள் இத்தீய செயல்களிலிருந்து விடுபட மாட்டார்கள். இதை அல்லாஹ் பல குர்ஆன் வசனங்கள் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறான். அல்குர்ஆன் யாஸீன் 36:21 இப்படிப்பட்டவர்கள் நேர்வழியில் இருக்க முடியாது என்று உறுதியிட்டுச் சொல்கிறது. எனவே அவர்களைத் திருத்தி நேர்வழிக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.
ஆனால், அவர்கள் சொல்வதுதான் மார்க்கம், நேர்வழி என நம்பி, தங்களின் சுய சிந்தனையை அவர்களிடம் அடகு வைத்து விட்டு, மவ்லவிகள் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் அவர்கள் பின்னால் செல்லும், உலகில் அது கொண்டு பின்னால் செல்லும், உலகில் அது கொண்டு எவ்வித கூலியையோ, பட்டம் பதவிகளையே, ஆடம்பர சொகுசு வாழ்க்கையையோ குறிக்கோளாகக் கொள்ளாமல் இஃலாசுடன் – தூய மனதுடன் செயல்படும் சகோதர சகோதரிகளையே சிந்தித்து விளங்க வேண்டுகிறோம்.
மனிதர்களில் எவரது சுய விளக்கத்தையும் ஏற்காமல் அல்குர்ஆனில் ஆயாத்தும் முஹ்க்கமாத்தில் எது சொல்லப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ஏற்று அதன்படி நடக்க வேண்டுகிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் தான் நாடியோருக்கு மட்டும்தான் நேர்வழி காட்டுவான். அந்த நல்லடியார்களின் சிறு கூட்டத்தில் அல்லாஹ் நம்மையும் இணைத்தருள்வானாக.