இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் மனிதர்களிடமிருந்து மார்க்க நம்பின்கையின்யையும் துரோக மனப்பான்மையையும் நீக்கும்.
மார்க்கம் மனிதனுக்கு நம்பத்தகுந்த தன்மை மற்றும் கடமையுணர்வு பற்றியக் கோட்பாடுகளைக் கற்பிக்கின்றது. குர்ஆனின் அறிவுரைகளைப் பேணாத சமுதாயத்தில் இந்தக் கோட்பாடுகள் நிலைத்து நிற்கும் என எதிர்பார்ப்பது தவறாகும்; இத்தகைய சமுதாய மக்கள் இறைவனை விடடு மற்றவர்களையே, எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்புகின்றனர். தொல்லையும் துன்பமும் நேரும்போதும் நன்மைகள் கிட்டும்போதும் மட்டும் இறைவனின் உதவியை நாடுவார்கள். தன்னுடைய செயல்களுக்குத் தான் கணக்குக் கொடுத்தாக வேண்டுமென்றும், தன்னுடைய தீயச்செயல்களுக்குத் தண்டனை அனுபவித்தாக வேண்டுமென்றும் நம்பாத ஒருவன் தன்னுடைய ஆசாபாசங்களுக்கு அடிமையாகி முற்றிலும் தன்னலம் நாடுபவனாகவே விளங்குவான்.
சமுதாயத்தில் இத்தகைய எடுத்துக்காட்டுகள் ஏராளமாகக் காட்டவியலும். உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், புகழ்பெற்றிருந்து, இப்போது புகழ் மறைந்து மக்களின் கவனத்தைக் கவரும் நிலையில் இல்லாதவர், திவாலாகி விட்ட பணக்காரன் ஆகியோரிடமிருந்து மக்கள் விலகி விடுகின்றார்கள். கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டவன் தன் நண்பர்கள் தன்னை விட்டும் தூர அகன்று தன்னைக் கைவிட்டு விட்ட நிலையில் தன்னந்தனியாகத் தவிப்பான். நன்றி கொன்றவர்களைப் பற்றிய செய்திகள் நாள்தோறும் நாளிதழ்களில் பங்காளிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதைக் காண்கிறோம். வட்டி ஆதிக்கம் செலுத்தும் உறவுகளில் எல்லாவிதமான ஒழுக்கக் கேடுகளையும் ஓழுங்கீனங்களையும் காணலாம்; அன்றாட வாழ்க்கையில் பணமே மிகவும் முக்கியமான அம்சமாக விளங்குகிறது.
நட்புறவிலும் துரோகம் வெகு சாதாரணமாக ஊடுருவி காணப்பெறும் ஒரு சமுதாய நிகழ்வாகி விட்டது. ஒருவரை ஒருவர் நம்பாத சமுதாயத்தில் மக்கள் தங்களின் மிக நெருங்கிய நண்பர்களையும் விட்டு விலகிச் சென்று ஆதாயம் விளையும் புதிய நட்புறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய காரணங்களுக்காக அநேக மக்கள் தங்கள் நண்பர்களை இழந்திருக்கிறார்கள். தாம்பத்திய உறவுகளிலும் இதுவேதான் உண்மை. அற்ப காரணங்களுக்காகக் கணவன் மனைவியை விட்டும், மனைவி கணவனை விட்டும் பிரிந்து சென்று விடுகிறார்கள். தவறாகப் புரிந்து கொண்டதன் காரணமாக, தாங்கள் இழைத்த தீயச் செயல்களை யாரும் பார்க்கவில்லை என்பதற்காக அவை என்றுமே மறைவாகவே இருக்கும் என்று எண்ணி இவ்வளவு பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள். அவர்களை அத்தீயச் செயல்களினின்றும் தடுப்பவர் யாரும் அல்லது தடுப்பது எதுவும் இல்லை. ஆகச் சுருங்கச் கூறுமிடத்து ஒருவரை ஒருவர் நம்பாத சமுதாயத்தில் நம்பிக்கைத்துரோகமும் வஞ்சகமும் நிறைந்து ஒருவரோடு ஒருவர் தீய உள்நோக்கத்துடனேயே பழகுகின்றனர்.
இத்தகைய சமுதாயங்களில் நிலவும் தீமைகள் இவை மாத்திரமல்ல. தன் அழகிற்காகவும் புகழுக்காகவும் ஆயிரம் ஆயிரம் மக்களின் அன்பிற்கும் பாராட்டிற்கும் உரியவர்களாக விளங்கியவர்கள் வயது முதிர்ந்து தங்களின் கவர்ச்சியை இழந்ததும் மக்களின் அன்பையும் பாராட்டையும் இழந்து விடுகின்றனர்; தனிமையில் வறுமையிலும் வாடி மடிகின்றனர். தங்களைச் சுற்றி நின்ற ஆர்வலர்களும் நண்பர்களும் பத்திரிக்கையாளர்களும் தீடீரென மறைந்து விடுவார்கள். இதுதான் அவர்கள் அனுபவிக்கும் மாற்ற முடியாத வாழ்க்கையின் ஒரு கூறு.
இறைவன் மீது நம்பிக்கையில்லாத மக்கள் மனிதன் குரங்கு போன்ற ஒரு விலங்கிலிருந்தும், தொடர்பற்ற ஒரு நிகழ்வின் மூலம் தோன்றினான் என்று நம்புகின்றனர். இதனால் தான் மனிதனுடைய உடல் தோற்றமும் பொருள் வளமுமே முக்கியமாகக் கருதப்பட வேண்டிய அம்சங்களாக விளங்குகின்றன. இந்த அம்சங்கள் இல்லாமல் ஆகும்போது மக்களின் மதிப்பும் மறைந்து விடுகின்றது. இந்தத் தத்துவம், விலங்கிலிருந்து தோன்றிய ஒருவனுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் தர அனுமதிக்காது. ஒருவரிடமுள்ள பொருட் செல்வத்திற்கும் அவருக்கு கிட்டியிருக்கும் புகழுக்குமே மதிப்பும் கெளரவமும் அளிக்கப்படுகிறது. இளைஞர்களும் அழகிற் சிறந்தவர்களும் மக்களிடையே புகழ் வாய்ந்தவர்களுமே உரிய மதிப்பையும் தகுதியையும் பெறுகின்றனர்; சமுதாயம் வயது முதிர்ந்தவர்களை ஒதுக்கிவிடுகின்றது. அவர்களின் உதவி தேவை இல்லை. சமுதாயத்திலுள்ள மற்றவர்களும் மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவன் என்னும் தத்துவத்தை நம்புகின்றனர். இந்தத் தத்துவம், கடமையில் முழு ஈடுபாடு கொள்வதை ஆதரிக்காததால், இந்த மக்கள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். தங்களின் பெற்றோர்கள் தாம் தங்களை ஊட்டி வளர்த்தார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். அவர்கள் சேர்க்கப்படும் முதியோர் இல்லங்களில் அவர்கள் முறையாகவும் நேராகவும் கவனிக்கப்படுவதில்லை.
மார்க்கப் பண்புகளைப் பேணாதவர்கள் தங்களின் பெற்றோர்களிடமும் கூட பாசமின்றியும் கொடுமையாகவும் நடந்து கொள்வார்கள் என்பது தெளிவாகிறது. கடமை உணர்வின்மை மனித உறவுகளை எல்லாம் சீர்குலைக்கிறது. மனித ஆன்மாவில் குழப்பத்தையும் கேட்டையும் விளைவிக்கின்ற இந்தச் சமுதாயக் சீர்கேடு மார்க்கப் பண்புகளைப் பேணுவதன் மூலமே களையப்படும். இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும்போது மக்கள் மற்றவரை பயனற்றவர்களாகக் கருத மாட்டார்கள். மனிதனுக்குச் சிறப்பைத் தருவது நிச்சயமாக அவனுடைய அழகிய தோற்றமும் செல்வ வளமும் பதவியும் அல்ல. அவனுடைய இறையச்சமும் ஓழுக்க மேம்பாடுமே அவனை மதிப்புமிக்கவனாக்கும் பண்புகள். மனிதனுக்கு வழங்கப்பட்ட இம்மை வாழ்வு அவனைச் சோதனைக்குள்ளாக்குவதற்காகவே. இவ்வுலகில் குறுகிய காலம் வாழ்ந்துவிட்டு மனிதன் நிரந்தர வீடாகிய மறுமையை அடைவான். மறுமையில் அவனுடைய ஒழுக்கப் பண்புகளை கணக்கிடப்படும். எனவே நற்பண்புகளே பலனளிக்கும். இறைவன் அவனுடைய அடியார்கள் ஒருவருக்கொருவர் நம்பகமானவர்களாக வாழும்படி வலியுறுத்துகின்றான். இவ்விதம் வாழ்வதன் மூலமே இறைநம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
இஸ்லாமிய ஒழுக்க நெறி சமுதாயத்தில் மேலோங்கும்போது கடமையுணர்வும் நம்பகத்தன்மையும் மிகச் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. குழந்தைகள் பெற்றோரை அன்புடன் போற்றி ஆதரிப்பார்கள். பெற்றோரும், திறமையாளர்களும், கல்வியாளர்களும், நாட்டிற்காக உழைத்தவர்களும் எவ்வளவுதான் வயது முதிர்ந்தவர்களானாலும் வாஞ்சையுடன் பாராட்டப்படுவார்கள். குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் தனியாக விடப்பட மாட்டார்கள். இளைஞர்கள் வயது முதிர்ந்தோரை அடிக்கடி சென்று பார்த்துப் பேசிக் குலவுவார்கள்; அவர்களுக்கு உதவ முன்வருவார்கள். இத்தகைய சமுதாயத்தில் நட்புறவு நீடித்து நிற்கும். மக்கள் சகோதர சகோதரிகளாகப் பழகுவார்கள். நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும், இடர்ப்பாடுகள் துன்பங்கள் நேரும் போதும் ஒருவருக்கொருவர் உதவுவார்கள்; இதுவே இறைவனின் திருப்தியைப் பெறுவதற்குரிய வழி என எண்ணி மகிழ்வுடன் உதவுவார்கள். கணவனும் மனைவியும் இறையுணர்வோடு ஒருவரை ஒருவர் மனதார நேசித்து வாஞசையுடன் வாழ்வார்கள். மறுமையில் நம்பிக்கை கொண்டு ஒருவர்மீது மற்றவர் பற்றும் பாசமும் மாறாது. அவர்களில் ஒருவர் நோயால் பீடிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தாலும் பற்றும் பாசமும் உதவியும் மாறாது. மனைவி வயது முதிர்ச்சியின் காரணமாக கவர்ச்சியை இழந்தாலும் அல்லது தீப்புண்பட்டு முகம் வசீகரத்தை இழந்தாலும் கணவனுக்கு அவள் மீதுள்ள அன்பு குறையாது. இறைநம்பிக்கையால் உருவாகும் உணர்வே இதற்குக் காரணம். துன்பமும் பிரச்சினையும் எழும் காலங்களில் பேணப்படும் பொறுமையும் சகிப்புத் தன்மையும் இறை நம்பிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை அளிக்கும். கீழ்வரும் நபிமொழி இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் கடமையுணர்வை எடுத்துரைக்கிறது.
முஸ்லிம்கள், ஒருவருக்கொருவர் சகோதரர் ஆவர். ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய மாட்டார்; ஒருவரை ஒருவர் கைவிட்டு விடவும் மாட்டார். தன் சகோதரனின் தேவையைக் கவனிப்பவரின் தேவையை இறைவன் நிறைவு செய்வான்; தன் சகோதரனின் கவலையைப் போக்குபவரின் கவலைகளில் ஒன்றை மறுமை நாளில் அல்லாஹ் நீக்கி விடுவான். (புகாரீ, முஸ்லிம்)
இந்த உறவும் பற்றும் எல்லாம் இறை நம்பிக்கையாளர்கள் மேற்கொள்ளும் வணிக மற்றும் இதர உடன்பாடுகளுக்கும் பொருந்துவனவாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும் செய்த உடன்பாட்டைப் பேணுவதும், இறை நம்பிக்கையாளர்களின் நம்பத்தகுந்தப்பண்புகளில் தனிச் சிறப்பான ஓர் அம்சமாகும். குர்ஆனில் அறிவுரைகள் பேணப்படாதச் சமுதாயத்தில் மக்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார்கள் என்றோ கடமையுணர்வோடு செயல்படுவார்கள் என்றோ எதிர்பார்ப்பது மடமையாகும்.
இங்கே ஒரு கருத்து குறிப்பிடப்பட வேண்டும். இறை நம்பிக்கையற்றவர், தனக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும் தான் கொடுத்த வாக்கை எப்பொழுதும் நிறைவேற்றாமல் இருந்ததில்லை என்றும், கடமையைச் செய்யத் தவறியதில்லை என்றும் கோரலாம். அவருடைய வாழ்நாளில் எப்பொழுதுமே பழிபாவத்திற்கு அஞ்சாத நடவடிக்கைகளில் ஈடுபடாதது உண்மையாகவும் இருக்கலாம். ஆனாலும்முன்னர் கூறியது போல் அவர் தன்னுடைய நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்தச் சூழ்நிலையில் அவர் தன்னுடைய இச்சைக்கு இரையாகி விடுவார். ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் இறைவனின் அதிருப்திக்கு ஆளாக என்றுமே துணியமாட்டார்கள். ஆதலால் தன்னிச்கைக்கு இரையாகமாட்டார்கள்.
மூலம் : ஹாரூன் யஹ்யா