விமர்சனங்கள்! விளக்கங்கள்!!
விமர்சனம்: “ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் இமாமையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து அந்த இமாம் நான்தான், என்னைப் பின்பற்றுபவர்கள்தான் அந்த ஜமாஅத் என்று கூறி தக்லீத் செய்ய வைக்கும் அபூ அப்துல்லாஹ் என்ற அமீரை ……… அவர் விரிக்கும் தக்லீத் வலைகளை கிழித் தெறிந்து இஸ்லாம், முஸ்லீம் என்ற நிலையிலேயே செயல்படுவோம்” என்று ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகி இருக்கிறதே! இதற்கு என்ன விளக்கம்? ஈசா, பெட்டவாய்த்தளை, கமால், திருச்சி.
விளக்கம்: பொய்யன் பீ.ஜை.யால் இப்படியொரு தவறான கருத்து விதைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் எந்த ஜமாஅத்திலும் இல்லை; இஸ்லாம், முஸ்லிம் என்ற நிலையிலேயே செயல்பட வேண்டும் என்று சிலர் கூறி வருவதால், இதைத் தெளிவுபடுத்தும் கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. பிரசுரம் வெளியிட்ட சகோதரர் அந்நஜாத்தை நுனிப் புல் மேயாமல் முழுக்கவனத்துடன் படித்து வந்தால் இப்படியொரு அபத்தமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார். 1986 லிருந்து இன்று வரை ஒரு சந்தர்ப்பத்தில் கூட நான் கூறுவதுதான் நேர்வழி; என்னைப் பின்பற்றுகிறவர்கள் தான் நேர்வழியில் இருக்கிறார்கள். எனது ஜமாஅத்து தான் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று ஒருபோதும் நான் கூறியதில்லை. அப்படி ஒரு வழிகெட்ட போதனையை நான் கூறி இருந்தால், ஷைத்தானின் துணையுடன் ஒரு பெருங்கூட்டத்தை என்னாலும் சேர்த்திருக்க முடியும். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சூட்டிய பெயர் “முஸ்லிமீன்”, நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி நமக்காக விட்டுச் சென்ற ஜமாஅத் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” முஸ்லிம்கள் அனைவரும் அதில் போய் இணைய வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறேன். ஆயினும் 17:41ல் அல்லாஹ் கூறுவதுபோல் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்களுக்கு இது வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை.
பீ.ஜை. அந்நஜாத்தின் ஆசிரியராக இருந்த பதினைந்து(15) மாதங்களிலும் “”அந்நஜாத்தையும் தக்லீது செய்யாதீர்கள்; குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பார்த்து அதன்படி நடங்கள்” என்று பின் அட்டையில் வெளியிட மறுத்து வந்தார். ஆனல் நான் அந்நஜாத்தின் ஆசிரியர் பொறுப்பேற்றதிலிருந்து அந்நஜாத்தைக் கண்டிப்பாக தக்லீது செய்யாதீர்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைப் பார்த்தே எடுத்து நடங்கள் என்று தொடர்ந்து எழுதி வருவதும் சகோதரரின் கண்களில் படவில்லை போலும்.
“”ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ அரசில் பதிவு செய்ய வேண்டும் என சில சகோதரர்கள் வற்புறுத்திய போதும், மற்ற இயக்கத்தினரைப் போல் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஐ நாம் பதிவு செய்து சொந்தம் கொண்டாட முடியாது. அது முஸ்லிம்கள் அனைவருக்குமாக அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனது இறுதித்தூதர் நடைமுறைப்படுத்திக் காட்டிய ஜமாஅத் என்று நான் தெளிவுபடுத்திய பின்னரும், ஒரு சிலர் அதை ஏற்காமல் நம்மை விட்டுப் பிரிந்து சென்று அவர்களாக “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ அரசில் பதிவு செய்து கொண்டு, “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ரிஜிஸ்ட்டர்ட் ஜமாஅத் என்று செயல்பட்டு, பின்னர் அது காணாமல் போனதையும் சகோதரர் அறியாமல் இருக்கிறார்.
அப்போது வேறு சில சகோதரரர்கள் நீங்கள் தான் முதலில் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்று ஆரம்பித்தீர்கள். எனவே அவர்களை எதிர்த்து வழக்குத் தொடருங்கள் என வற்புறுத்திய சமயத்திலும், “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” நான் ஆரம்பித்த ஜமாஅத் அல்ல; இறுதி இறைத்தூதர் முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்ற ஜமாஅத். எனக்கு உரிமை இல்லாத “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஐ உரிமை கோரி நான் வழக்குத் தொடர முடியாது என்று கூறி மறுத்துவிட்டதையும் சகோதரர் அறியாமல் இருக்கிறார் போலும். ”தக்லீத் வலையை கிழித்தெறிவோம்” என முழக்கமிடும் சகோதரர் பொய்யன் உதிர்த்தவற்றை அப்படியே தக்லீது செய்வதுதான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அவர்தான் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத், அதுவும் ஒரு பிரிவு ஜமாஅத்துதான் என்று வாந்தியெடுத்ததை அப்படியே விழுங்கியவராக முகல்லிதாக சகோதரர் இப்படி ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளார்.
அதுபோல் “அமீர்” என்பவர் ஆட்சி அதிகாரம் உள்ளவர் என்று உளறியதையும் அப்படியே தக்லீது செய்து தக்லீது மறுப்புப் பிரசுரம் வெளியிட்டுள்ளார். அவருக்கும் அவரைப் போன்ற அறிவீனமான சிந்தனையுடையவர்களுக்கும் விளக்கம் கொடுப்பது நமது கடமை என்பதால் அதைத் தெளிவு படுத்துகிறோம்.
அல்குர்ஆன் அந்நிசா 4:59 இறைக் கட்டளை “அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; அவனது தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவருக்கும் வழிப்படுங்கள்” எனத் தெளிவாக நேரடியாகக் கட்டளையிடுகிறது. உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் இந்த கட்டளைக்கு 2:285, 4:46-ன் பிற்பகுதி, 5:7, 24:51-ல் காணப்படும் எச்சரிக்கைப்படி “கேட்டோம். வழிப்பட்டோம்” என்று அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். பொய்யனும், அவரை தக்லீது செய்கிறவர்களுமே 2:93, 4:46 முற்பகுதியில் காணப்படுவது போல், சுய விளக்கம் கூறி கேட்டோம் மாறு செய்வோம்” என்று செயல் பட முடியும்.
இந்த அடிப்படையில் தான் அந்த பொய்யன் ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீராக முடியும் எனப் பிதற்றுகிறார். சகோதரரும் அதை அப்படியே ஏற்று வெளிப்படுத்தியுள்ளார். மற்றபடி சிறிது சிந்தித்தாலும் அல்லாஹ்வால் அவனது தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆட்சி அதிகாரம் இருந்ததா? விரல்விட்டும் எண்ணும் அளவில் ஒரு சிலருக்கு மட்டும்தானே ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டது. அப்படியானால் ஆட்சி அதிகாரம் கொடுக்கப்படாத பெரும்பாலான நபிமார்கள் தங்களின் சமூகத்திற்குத் தலைமை தாங்கவில்லையா? அமீராக இருக்கவில்லையா? அவர்களை நபியாக ஏற்றவர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவில்லையா? சில நபிமார்கள் பின்னால் வெகுசிலர் தானே அணி வகுத்தார்கள். அவர்களை அல்லாஹ் நேர்வழி நடப்பவர்களாக ஏற்கவில்லையா? என்று சிந்தித்தாலும், நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த 13 வருடங்களாக ஆட்சி அதிகாரம் இல்லாதவர்களாகத்தான் இருந்தார்கள். அப்போது நபி தோழர்கள் அவர்களை அமீராக ஏற்று ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக இருக்க வில்லையா? என்று சிந்தித்தாலும் ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீராக இருக்க முடியும் என்ற வாதம் எந்த அளவு அடி முட்டாள்த்தனமான வாதம் என்பதை விளங்க முடியும்.
இந்த பொய்யன் போன்றோர் தான் 49:16-ல் அல்லாஹ் குத்திக்காட்டுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்க முற்பட்டு 4:59-ல் அல்லாஹ் அதிகாரம் பெற்றவர்-அமீர் என்று சொல்லியிருப்பதை திரித்து வளைத்து ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீர்கள் என பிதற்ற முடியும். அப்படி மூளையில்லாமல் பிதற்றி 42:21 அல்லாஹ்வின் எச்சரிக்கைப்படி அல்லாஹ்வுக்கு இணையாளர் ஆகும் கொடிய ஷிர்க்குடைய, அல்லாஹ் மன்னிக்காத பெரும் குற்றத்தைச் செய்ய முடியும். இதற்கு சகோதரரும் துணை போயிருப்பது தான் நமக்கு வேதனையளிக்கிறது. 1999 மார்ச் அல்முமீனில் பொய்யன் பீ.ஜை.யின் “அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” என்ற கட்டுரையிலுள்ள அபத்தங்களையும், உளறல்களையும் 2008 மே அந்நஜாத் இதழில் தெளிவாக விளக்கி இருக்கிறோம். அந்த இதழை சகோதரர் முறையாக-கவனமாகப் படித்து விளங்கி இருந்தால் இப்படி ஒரு அறிவீனமான கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார். அந்த இதழிலும் அதன் 3-ம் பக்கத்தில் அந்நஜாத்தில் உள்ளதை மட்டும் படித்துவிட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை அல்குர்ஆனில் பார்க்காமல் விடுவதால், இரண்டு தவறுகள் ஏற்பட்ட வாய்ப்புண்டு. ஒன்று அந்நஜாத், அபூ அப்தில்லாஹ் என்று தனி மனித வழிபாட்டிற்கு அது வழிவகுக்கும்; அல்லது இரண்டாவது அல்குர்ஆனின் வசனங்களையும் மனிதக் கருத்தாக எண்ணி புறக்கணிக்கும் நிலை (பார்க்க 25:30) உருவாகும். இரண்டுமே பெரும் ஆபத்தை விளைவிப்பவையே! அல்குர் ஆனுடன் நேரடித் தொடர்பை அவசியம் ஏற்படுத்திக் கொள்வோமாக! என்று தெளிவாக எழுதியுள்ளோம். இந்த நிலையில் சகோதரர் தனது அறிவை யாரிடம் கடன் கொடுத்தார்?