தீனை நிலை நாட்டுங்கள்; பிரிந்து விடாதீர்கள்

in 2010 மார்ச்

 தீனை நிலைநாட்டுங்கள்! (இயக்கங்களாக) பிரிந்து விடாதீர்கள்!! 42:13

“தீனை நிலை நாட்டுங்கள்; பிரிந்து விடாதீர்கள்” என்ற முழக்கத்தோடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஜனவரி 2010, 30, 31 தேதிகளில் திருச்சிக்குப் பக்கத்திலிருக்கும் நெடுங்கூர் சனமங்கலத்தில் ஒரு மாநாட்டுக்குப் பொது அழைப்பு விட்டிருந்தனர். அல்குர்ஆன் அஷ்ஷீறா 42:13லுள்ள “நூஹுக்கு எதனை அவன் (அல்லாஹ்) உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான்; ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக் கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், “நீங்கள் தீனை (மார்க்கத்தை) நிலை நாட்டுங்கள், அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்” என்பதே; இணை வைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது. தான் நாடியவர்களை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (அல்குர்ஆன் 42:13)

இதுதான் அந்த மாநாட்டின் மையக் கருத்து. எனவே நாமும் மிகுந்த ஆவலுடன் அதில் சனி, ஞாயிறு இரு நாட்களும் பங்கு கொண்டோம். இந்த 42:13 இறைவாக்கு என்ன கூறுகிறது? இறைத் தூதர் நூஹ்(அலை) காலத்திலிருந்து இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காலம் வரை தீனில் எவ்வித மாற்றமும் இல்லை; அதாவது மனிதக் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் முற்றிலுமாக அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும், வழிகாட்டல்களுக்கும் மட்டுமே அடிபணிய வேண்டும். அப்படியே எடுத்து நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் நூஹ் (அலை) காலத்திலிருந்து இறுதித் தூதர் காலம் வரை தீனில் எவ்வித மாற்றமும் இல்லை எனும்போது 1431 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுவரை, ஏன்? உலகம் இறுதி வரை தீனில் மாற்றம் இருக்க முடியாது என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. இதை 5:3, 3:19,85, 102,103,105, 6:153,159, 7:3, 33:21,36,66-68, 42:14, 59:7 இறைவாக்குகளும் உறுதிப்படுத்துகின்றன.

அதாவது முஸ்லிம் உம்மத்-சமுதாயம் அல்குர்ஆனை ஜமாஅத்தாக -ஒன்றிணைந்து பற்றிப் பிடித்து ஓரணியில் இருக்க வேண்டும் என்பதே. இப்படிப்பட்ட ஓர் அரிய முயற்சியில் ஜமாஅத்தே இஸ்லாமியினர் ஈடுபட்டுள்ளனர் என நாம் பெரிதும் எதிர்பார்த்து அங்கு சென்றோம். ஆனால் அங்கு எமக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் எத்தனை மத்ஹபுகள், மஸ்லக்கள், இயக்கங்கள், அமைப்புகள் என பிரிந்து கிடந்தாலும் பரவாயில்லை; அது பாதகமும் இல்லை; எவற்றிலெல்லாம் முஸ்லிம்கள் ஒத்த கருத்தில் இருக்கிறார்களோ அவற்றில் மட்டுமாவது ஒன்றிணைந்து செயல்பட்டால் போதும் என்றே அங்கு வலியுறுத்திப் பேசப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே, நபி தோழர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன. அதனால் இப்போதும் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என பேசப்பட்டது. முஸ்லிம்களிடையேயுள்ள பல்வேறு பிரிவுகளை-பிளவுகளை நியாயப்படுத்தி இவ்வாறு பேசப்பட்டது. நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மை தான். ஆனால் அதைக் காரணம் காட்டி அவர்களிடையே பிரிவுகள், பிளவுகள் ஏற்படவில்லையே என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

தூரத்திலுள்ள ஊருக்கு நபி தோழர்கள் சிலரை நபி(ஸல்) அனுப்பும்போது அங்கு போய் அஸர் தொழுங்கள் எனக் கட்டளையிட்டார்கள். அஸர் நேரம் வந்தவுடன் சிலர் இடையில் தொழுதனர். சிலர் குறிப்பிட்ட ஊருக்குப் போய் தொழுதனர். அதன் பின்னர் அதை வைத்து அவர்கள் இரண்டு மத்ஹபுகளாகப் பிரிந்தனரா? இல்லையே. இது போல் பல முறை பல விசயங்களில் நபி தோழர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை தான். அதே சமயம் அவற்றைக் காரணமாக வைத்து முஸ்லிம்களிடையே பிரிவுகளை, பிளவுகளை ஏற்படுத்தவில்லையே! ஒரு முறை முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே பிணக்கு ஏற்பட்டு, ஓ அன்சாரிகளே என அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் அழைக்க, உடனே முஹாஜிர்களில் சிலர் ஓ முஹாஜிர்களே என அழைக்க, இந்தக் கூப்பாட்டைக் கேட்ட நபி(ஸல்) தமது கூடாரத்திலிருந்து வெளிவந்து என்ன கூறினார்கள்? அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்துக் கூப்பாட்டை செவியுறுகிறேன் எனக் கடுமையாகக் கண்டித்தார்கள் என்பதற்கே ஆதாரம் கிடைக்கிறது. யார் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியில் இருக்கிறார்களோ அவர்கள் அய்யா முல் ஜாஹிலிய்யா காலத்தவர்களே. அபூ ஜஹீல் வர்க்கமே என்பது உறுதியாகத் தெரிகிறது. அதனால் தான் முஸ்லிம் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் புரோகிதர்கள் அபூ ஜஹீலின் வாரிசுகள் எனக் கடுமையாக விமர்சிக்கிறோம்.

ஆம்! 3:103 இறைவாக்கு என்ன கூறுகிறது? அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்தவரான குறைஷ்கள் பல பிளவுகளில் பிரிவுகளில் சின்னாபின்னப்பட்டு நரக விளிம்பில் நின்றார்கள். அல்குர்ஆனே அவர்களை ஒன்றுபடுத்தியது என்று கூறவில்லையா? மனிதர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்குத்தான் அல்லாஹ் அல்குர்ஆனையும், அதற்கு முன்னைய நெறி நூல்களையும் இறக்கியதாக 2:213, 16:64, 3:105, 45:17 போன்ற பல இடங்களில் கூறி இருக்க அல்குர்ஆன் இறைவாக்குகளை விளங்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட முடியுமா? அதுவும் அல்லாஹ்வே அவர்களிடையே ஏற்பட்ட போட்டி பொறாமையின் காரணமாகவே கருத்து வேறுபாடுகள் கொண்டனர் என்று தெளிவாகக் கூறி இருக்க, அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்டுள்ள பிளவுகளையும் பிரிவுகளையும் அல்லாஹ் ஏற்பானா? அதற்குரிய ஆதாரம் எதுவும் இருக்கிறதா இவர்களிடம்? இல்லையே!

சில்லரை கருத்து வேறுபாடுகளைக் கண்டு கொள்ள வேண்டாம்; அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அடிப்படை விசயங்களில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று மேடையில் முழங்கினர். அதாவது ஒரே மேடையில் நின்று ஒன்றுபட வேண்டாம்; பல மேடைகளில் நின்று கொண்டு ஒன்றுபட்டுச் செயல்படுவோம் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது நடைமுறையில் சாத்தியமா? எனச் சிந்தியுங்கள்.

முஸ்லிம்கள் இன்று தரீக்கா, தர்கா, மத்ஹபு, மஸ்லக், கழகங்கள், ஜமாஅத்துகள், அமைப்புகள் என பிளவுபட்டு நிற்பதே அவர்களின் இவ்வுலக சுயநலம் காரணமாகவே. தங்களின் அற்ப இவ்வுலக சுயநலம் என்பதை மறைத்து சில்லரை கருத்து வேறுபாடுகளைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அதுவும் புரோகித முன்னோர்கள் திட்டமிட்டே லட்சக் கணக்கான ஹதீஸ்களைக் கற்பனை செய்து வைத்துள்ளனர். 17:36ல் அல்லாஹ் சொல்வது போல் தீர்க்கமான அறிவில்லாத நிலையில் ஒன்றைப் பின்பற்றாமலும், “சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகமற்றதின்பால் சென்றுவிடு” என்ற புகாரீ, வியாபாரம் பாடத்தில் காணப்படும் நபி(ஸல்) அவர்களின் கட்டளையை அப்படியே ஏற்றும், “உங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டால், குர்ஆனின் பாலும், ஆதாரபூர்வமான நபிவழியின்பாலும் திரும்பி விடுங்கள்” என்று தெளிவாக, நேரடியாகச் சொல்லும் 4:59 இறைக் கட்டளைக்கு அடிபணிய முஸ்லிம்கள் முன்வந்தால் கருத்து வேறுபாடுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். ஆனால் பிரித்தாளும் சூழ்ச்சியின் படி சமுதாயத்தைப் பிளவுபடுத்தியே உலக ஆதாயங்களை அடைந்து வரும் புரோகிதர்கள் இதற்கு ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். சமுதாய ஒற்றுமையை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். சமுதாய ஒற்றுமைக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள்.

இந்த உண்மையை 42:13 இறைவாக்கே உண்மைப் படுத்துகிறது. இணைவைப்பவர்கள் நீங்கள் அழைக்கும் ஒற்றுமையின் பக்கம் வரவே மாட்டார்கள். அது அவர்களுக்கு பெரும் சுமையாகத் தெரிகிறது என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறுகிறது. இதைச் சொன்னவுடன் புரோகிதர்கள் இந்த இறைவாக்கு முஸ்லிமல்லாத காஃபிர் முஷ்ரிக்குகளைக் குறிக்கிறது. முஸ்லிம்களை அல்ல எனச் சொல்லி மக்களை ஏமாற்றி விடுவார்கள். ஆனால் சமுதாய ஒற்றுமை சாத்தியமில்லை என்போர் முஸ்லிம்களாக இருந்தாலும் இணை வைப்பவர்களே! (பார்க்க 49:14, 12:106)

முஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதால் ஒருவன் முஸ்லிமாகி விட முடியாது. பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் முஸ்லிமாகத் தான் பிறக்கின்றன. அது வளர்ந்து விபரம் தெரிந்து செயல்பட ஆரம்பிக்கும் போது அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து நடந்தால் முஸ்லிம்; முன்னோர்களைப் பின்பற்றி இறைக் கட்டளைகளை நிராகரித்தால் முஷ்ரிக், காஃபிர்; 49:14, 12:106 இறைவாக்குகள் இதை உண்மைப்படுத்துகின்றன. முஸ்லிம் பெயரில் முஸ்லிம் சமுதாயத்திலும், காஃபிர்-நிராகரிப்பவர்கள், முஷ்ரிக்குகள் இருக்கிறார்கள். இந்த உண்மையை அன்று மாநாட்டு மேடையிலும் எடுத்துச் சொல்லப்பட்டது.

7:3, 33:21,36,66,67,68 இறைவாக்குகள் 2:39 சொல்வது போல் நிராகரித்து அதாவது நேரடியாக குர்ஆன், நபிவழியை அறிந்து, விளங்கிச் செயல்படாமல், இறந்து போன அல்லது உயிரோடிருக்கும் ஒரு இமாமை, மவ்லவியை(?), அறிஞரை நம்பிப் பின்பற்றினால் அப்படிப்பட்டவர்களும் நிராகரிப்பவர்களே. அல்லாஹ் சொன்னது விளங்காது, நபி சொன்னது விளங்காது, இமாம், அறிஞர்கள் போன்ற மனிதர்கள் விளக்கியே விளங்க முடியும் என்று நம்புகிறவர்கள் 42:21 மற்றும் 49:16 கூறுவது போல் அல்லாஹ்வுக்கு இணை வைத்து முஷ்ரிக் ஆகின்றனர். அதிலும் குறிப்பாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களைப் பின்பற்றுகிறவர்கள் நாளை மறுமையில் நிச்சயமாக அந்தப் பட்டியலில் தான் இடம் பெறுவர்.

42:13 கூறும் “நீங்கள் தீனை (மார்க்கத்தை) நிலை நாட்டுங்கள், அதில் நீங்கள் பிரிந்துவிடாதீர்கள்” என்ற அழைப்பு அன்றைய புரோகிதர்களான தாருந் நத்வாவின் அபூ ஜஹீல் வகையறாக்களுக்கு அவர்களின் இணை வைப்பு காரணமாக எப்படி சுமையாகத் தெரிந்ததோ, அதே போல் இன்றும் மார்க்கத்தைப் பிழைக்கும் வழியாகக் கொண்டு, அதனால் அல்லாஹ்வின் பல நேரடிக் கட்டளைகளை நிராகரித்தும், 42:21, 49:16படி இணை வைத்தும் செயல்படுவதால் இந்த அழைப்பு இப் புரோகிதர்களுக்கு பெரும் சுமையாகத்தான் தெரியும். சமுதாய ஒற்றுமைக்கு அவர்கள் ஒரு போதும் உடன்படவே மாட்டார்கள்.

ஒரு உமர்(ரழி) போல், ஒரு அலீ(ரழி) போல் ஒரு சிலர் புரோகிதத் தொழிலை கைவிட்டு தாருந்நத்வாவிலிருந்து வெளியேறியது போல், தாருந்நத்வாவில் மிக உயர்ந்த பதவியிலிருந்த உமர்(ரழி) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத அடிமை பிலால்(ரழி) அவர்களை “ஸய்யிதனா”-எங்கள் தலைவரே என மனமார அழைத்தது போல், இன்று மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுள்ளவர்கள் அதைக் கை விட்டு ஹலாலான வழியில் உழைத்துச் சாப்பிட முன்வந்தால் மட்டுமே இந்த 42:13 இறைவாக்கின்படி நடக்க முன்வருவார்கள். அப்படி நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. பிளவுகளிலும், பிரிவுகளிலும் இருந்து கொண்டே ஏற்றுக் கொள்ளும் அடிப்படை விசயங்களில் ஒன்றுபட்டுச் செயல்படுவோம் என்பது சாத்தியமும் இல்லை. அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் போகவும் முடியாது.

அதற்கு மாறாக மார்க்கத்தில் நமது சுய கருத்துக்களைப் புகுத்தாமல் குர்ஆன், நபி வழியில் இருப்பதை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தால், அல்லாஹ் 42:13ல் சொல்வது போல் “தான் நாடியவர்களை தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அல்லாஹ்வை உறுதியாக நம்பி அவனை முன்னோக்குகிறவர்களை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்” என்பதில் அணுவளவும், சந்தேகமில்லை. அப்படி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் கூட நேர்வழிக்கு வராவிட்டாலும் அழைத்தவர் நட்டப்படமாட்டார். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொண்டு அவரை சுவர்க்கம் அனுப்புவது உறுதி என்பதற்கு சில நபிமார்கள் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் சுவர்க்கம் போவார்கள் என்ற முஸ்லிமில் காணப்படும் நபிமொழிகள் ஆதாரமாக இருக்கின்றன.

நேர்வழியை மக்களிடம் எடுத்து வைப்பது மட்டுமே நபிமார்களின், பிரசாரகர்களின் கடமை. மக்களை நேர்வழிக்குக் கொண்டுவர மனிதக் கற்பனையால் உருவாகும் தந்திரங்களைக் கைக்கொள்ளக் கூடாது என 5:92,99, 16:35,82, 24:54, 29:18, 36:17. 64:12 போன்ற எண்ணற்ற இறைவாக்குகள் குன்றிலிட்ட தீபமாக கூறிக் கொண்டிருக்க, இப்புரோகிதர்கள் தங்கள் சுய கருத்துக்களை மார்க்கத்தில் புகுத்தி மக்களை நேர்வழிக்குக் கொண்டு வருகிறார்களா? அதற்கு மாறாக ஷைத்தானின் ஏஜண்டாக இருந்து மக்களை நரகில் தள்ளி கோணல் வழிகளில் இட்டுச் செல்கிறார்களா? இதைச் சிந்திக்க வேண்டாமா?
முஸ்லிம் மதப் புரோகிதர்கள் எண்ணற்றப் பிரிவுகளில் முஸ்லிம்களை நேர்வழியில் அழைத்துச் செல்வது உண்மையானால், அதே போல் யூதப் புரோகிதர்கள், கிறித்தவப் புரோகிதர்கள், ஹிந்துப் புரோகிதர்கள் என அனைத்து மதப் புரோகிதர்களும், தங்களை மாபெரும் நேர்வழி காட்டிகளாக நம்பி அவர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களை அவர்கள் நம்புவது போல் நேர்வழியில்தான் அழைத்துச் செல்கிறார்கள் என்பதும் உண்மை தான் என்று நம்ப வேண்டும். முஸ்லிம் மதப் புரோகிதர்கள் அப்படி நம்புகிறார்களா? அல்குர்ஆன் வழிகாட்டல்படி அவர்கள் கோணல் வழிகளில் செல்கிறார்கள் என்று முஸ்லிம் மதப் புரோகிதர்கள் சொல்வார்களானால், அதே அல்குர்ஆன் உரைகல்லில் தங்கள் செயல்பாடுகளையும் உரைத்துப் பார்க்கட்டும். அப்போது மற்ற மதங்களின் புரோகிதர்கள் அவர்களை நம்பியவர்களை கோணல் வழிகளில் அழைத்துச் செல்வது போல், இவர்களும் தங்களை நம்பி தங்கள் பின்னால் வரும் முஸ்லிம்களை கோணல் வழிகளில் அழைத்துச் செல்வதை அவர்களே புரிந்து கொள்ள முடியும்.

அதேசமயம் அல்லாஹ் அல்குர்ஆன் 2:41,42,44, 75,79, 109,146, 6:20 போன்ற பல இடங்களில் கூறி இருப்பது போல் யூத, கிறித்தவ புரோகிதர்களைப் போல் முஸ்லிம் புரோகிதர்களும் நேர்வழியை-சத்தியத்தை நன்கு அறிந்த நிலையில்தான் அல்லாஹ் 2:159ல் கூறி இருப்பது போல் சத்தியத்தை-நேர் வழியை மறைக்கிறார்கள்.

ஒவ்வொரு நபியுடைய காலத்திலும் அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள், மக்களை எதிர்க்கத் தூண்டியவர்களை தீனை-மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டு கூலிக்கு மாரடிக்கும் புரோகிதர்களே. அப்புரோகிதர்களின் மாய, சூன்ய, வசீகரப் பிடியிலிருந்து விடுபட்டவர்களே நபிமார்கள் போதித்த நேர்வழிப்படி நடக்க முன் வந்தார்கள். இது தெளிவான வரலாறு. மதப் புரோகிதர்களை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்கிறவர்கள் இன்றும் பெருத்த வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். இதே நிலைதான் முஸ்லிம் புரோகிதர்களை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்பவர்களின் நிலையும். முஸ்லிம் புரோகிதர்கள் ஒருபோதும் மக்களுக்கு சத்தியத்தை-நேர்வழியை எடுத்துச் சொல்லமாட்டார்கள் என்பதற்கு எண் ணற்ற அல்குர்ஆன் வசனங்கள் இருக்கும் நிலையில் அவர்கள் 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு அடி பணிவார்களா?

இந்த நிலையில் அப்புரோகிதர்களைக் கொண்டு முஸ்லிம் சமுதாய ஒற்றுமை சாத்தியமாகுமா? ஒருபோதும் சாத்தியமில்லை. எனவே “தீனை நிலைநாட்டுங்கள்; அதில் பிரிந்து விடாதீர்கள்” என்ற முழக்கம் மேடை முழக்கமாக மட்டுமே இருக்க முடியும்; நடைமுறையில் வராது. மக்களை அழகிய முறையில் அழையுங்கள் என அழகாக மேடையில் பேசப்பட்டது. முஸ்லிம்களுக்கு குஃப்ர் ஃபத்வா கொடுப்பது அழகிய முறையில் அழைப்பதாகுமா? இன்றுள்ள பெரும்பாலான மேடைப் பேச்சாளர்கள் அல்குர்ஆன் 2:44 கூறுவது போல் தங்களை மறந்து ஊருக்கு உபதேசம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

அல்குர்ஆன் அரபி கற்ற புரோகிதர்களுக்கு மட்டுமே விளங்கும்; மற்றவர்களுக்கு விளங்காது என்றும், அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் இப்புரோகிதர்கள் வஞ்சனையாகப் பேசுவதால்தான், அல்குர்ஆன் குறிப்பிட்ட முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் தான், அதிலும் குறிப்பாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்ற தவறான சிந்தனை முஸ்லிம்களிடமும், பிற மக்களிடமும் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா?

குர்ஆன், நபிவழி ஆதாரங்கள் மிகமிகத் தெளிவாக இருக்கும் நிலையில், சின்ன சின்ன விஷயங்களை விவகாரமாக்கி மோதிக் கொள்கிறார்கள் என்றால் அதற்குப் பிரதான காரணம், தங்களின் பிளவு பிரிவு இயக்கங்களை நிலைநாட்ட வேண்டும் என்ற கெட்ட நோக்கமே. அடிப்படைக் கோளாறு 21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு முரணாகப் பல இயக்கங்களாக பிரிந்து கிடப்பதே. தங்கள் இயக்கங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற தீய நோக்கிலேயே இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஸ் களைக் கொண்டு சச்சரவிட்டு, கருத்து வேறுபாடு கொண்டு பிளவு படுகின்றனர்.

இதற்கு உதாரணமாக ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தையே சொல்ல முடியும். தொப்புளுக்கு கீழ் தொழுகையில் கைகட்டுவது அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் கூஃபி என்ற பொய்யன் இட்டுக்கட்டிய ஒரு பொய்யான ஹதீஸ் என்பது அந்த இயக்கத்திலுள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். ஹனஃபிகளின் ஆதரவை இழந்து தங்கள் இயக்கம் பலவீனப்பட்டுப் போய்விடக் கூடாது என்றே அறிந்த நிலையில் அந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை நடைமுறைப்படுத்துகின்றனர்.

அதேபோல் அல்குர்ஆன் 7:55ல் துஆ பிரார்த்தனை பணிவாகவும் அந்தரங்கமாகவும் இருக்க வேண்டும்; வரம்பு மீறக் கூடாது என அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் கட்டளை தெளிவாக, நேரடியாக இருந்தும் அதை மீறி சப்தமாக கூட்டு துஆ எப்படிச் செய்கிறார்கள்? பெரும்பான்மை மக்களின் ஆதரவை தங்கள் இயக்கம் இழந்து விடக்கூடாது என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா? தங்களின் இப்படிப்பட்ட தவறுகளை நியாயப்படுத்தவே சின்ன சின்ன விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது என்ற வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

மார்க்கம் என்ன சொல்கிறது? சின்ன விஷயங்களுக்கு அதற்குரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். பெரிய விஷயங்களுக்கு அதற்குரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். தூங்கும்போது ஓத வேண்டிய சுன்னத்தான ஒரு துஆவில் நபி(ஸல்) அவர்கள் “பிநபிய்யிக்க” என்று கற்றுக் கொடுத்த இடத்தில் நபிதோழர் “பிரசூலிக்க’ என்று மாற்றிச் சொன்னதையே நபி (ஸல்) கண்டித்துத் திருத்தினார்கள் என்பதை அறிகிறோம். குர்ஆனிலும், நபிவழியிலும் இருப்பதை அப்படியே எடுத்து நடக்க வேண்டுமே அல்லாது தங்களின் பிரிவு இயக்கத்தை நிலைநாட்ட அல்குர்ஆனில் சுயவிளக்கங்களைப் புகுத்துவதும், பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களை வைத்து முரண்டு பிடிப்பதுமே சமுதாயப் பிளவுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

இந்த இயக்கத்தினர் தங்களின் இயக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதற்கு அவர்கள் மாநாட்டில் வெளியிட்ட சிறப்பு மலர் பக்கம் 150ல் அவர்களின் மேடையில் பேச அனுமதிக்கப்படுகிறவர்களிடம்  4 தகுதிகள் இருக்கின்றனவா என்று உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த நான்கில் முதலாவது உரையாற்றும்போது ஜமாஅத்தை சரியான முறையில் அறிமுகம் செய்ய உங்களால் இயலுமா? என்று கேட்டு அந்தத் தகுதி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக எழுதியுள்ளனர். எந்த ஜமாஅத்தை? 1941-கற்பனை செய்யப்பட்ட ஜமாஅத்தையா? அல்லது 1431 வருடங்களுக்கு முன்னர் நபி(ஸல்) முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்ற ஜமாஅத்தையா? இல்லை! 1941ல் கற்பனை செய்யப்பட்ட ஜமாஅத்தை அறிமுகம் செய்து அதை வளர்க்கவே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறதா? இல்லையா? தீன் நம்பிக்கைச் சார்ந்தது மட்டுமல்ல; மேடைகளில் பேசுவது மட்டுமல்ல; செயலில் நிலை நாட்ட வேண்டும் என்று மாநாட்டு மேடையில் பேசப்பட்டது. அதையே நாமும் வற்புறுத்துகிறோம்.

அன்று வெற்றி கிடைத்தால் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினார்கள். இன்றைய பிரிவு இயக்கத்தினரோ தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள். இஸ்லாத்தை விட அவர்களின் இயக்கமே அவர்களுக்கு அதி முக்கியத்துவமாகத் தெரிகிறது. முஸ்லிம் அல்லாத அனைத்து சமூகங்களும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் என்ன? முஸ்லிம் சமுதாயம் பல பிளவுகளில் சிதறிக்கிடப்பது காரணமில்லையா?

அல்லாஹ்வின் கை ஜமாஅத்தின் மீது இருக்கின்றது என்றால் அது எந்த ஜமாஅத்? நபி (ஸல்) நடைமுறைப்படுத்தி விட்டுச் சென்ற ஜமாஅத்தா? அவர்களின் மறைவுக்குப் பிறகு இவர்களாகக் கற்பனை செய்து உருவாக்கிக்கொண்ட ஜமா அத்தா? அப்படி எண்ணற்ற ஜமாஅத்துகள் இருக்கின்றனவே! இவற்றில் எந்த ஜமாஅத்தின் மீது அல்லாஹ்வின் கை இருக்கும்? சிந்திக்க வேண்டாமா?

தனித்தனி அமைப்புகள் காண்பது வகுப்புவாதமே! எண்ணிக்கையைப் பெருக்குவது தாவா அல்ல; சத்தியத்தைத் துணிந்து எடுத்துச் சொல்வதே தாவா. (பார்க்க அல்குர்ஆன் 5:67) தனித்தனி இயக்கங்களை நிலைநாட்ட செய்யப்படும் தவறுகளை நியாயப்படுத்தி நேர்வழியில் இல்லாத மக்களை மயக்கும் நிலையில் பேச முடியும். நமது தந்தை ஆதம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையை விட ஷைத்தானின் மயக்கும் அறிவுரைதானே அழகாகவும், சரியாகவும் தெரிந்தது. அவரது சந்ததிகளான நாம் ஷைத்தானின் தோழர்களின் மயக்கும் பேச்சில் கட்டுண்டு கிடப்பது ஆச்சரியமா? மலர் பக்கம். 26 மெளதூதியைப் போன்ற திறமையான ஒரு சீர்திருத்தவாதியின் உரத்த குரல், சமுதாயத் தலைவர்களுக்கு முன் ஒரு காட்டுக் கூச்சலாகவே தென்பட்டது. இனவாத உணர்வுகளின் காரணமாக மெளதூதி எடுத்து வைத்த கொள்கை விளக்கம் அவர்களுக்கு உரைக்கவில்லை. இது அன்று மட்டுமா? இன்றும் அதே நிலை தான்.

குர்ஆன், நபிவழிக் கருத்துகளை முஸ்லிம்களில் அதிகமானோர் இனவாதம் காரணமாக ஏற்பதாக இல்லை. பக்கம் 24. இறைக்கட்டளைக்கு எதிரான எல்லாச் சட்டங்களும், சடங்குகளும், நடைமுறைகளும் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவையே. மேலும் பக்.33லிருந்து 38 வரையுள்ள மெளதூதியின் ”முழுமையான மார்க்கக் கண்ணோட்டம்” பலமுறைப் படித்து உணர்ந்து அதில் நிலைத்திருக்கிறோமா என மாநாடு நடத்தியவர்கள் சிந்தித்துணர கடமைப் பட்டிருக்கிறார்கள்.
பக்கம் 45. இஸ்லாத்தில் நபி(ஸல்) அவர்கள் தவிர வேறு எவருக்கும் மார்க்க ரீதியான அதிகாரபூர்வமான அந்தஸ்து இல்லை. மத்ஹபுகள், இயக்கங்கள், ஸலஃபி மார்க்கமாகுமா? பக்கம் 65. ஒரு கம்யூனிஸ்ட், ஒரு சோ­லிஸ்ட், ஒரு தேசியவாதி, ஒரு நாத்திகர் போன்றவர்கள் தம் கொள்கைகளை எவ்வித குற்ற உணர்வுமின்றி சற்றும் தயங்காமல் வெளிப்படையாக எடுத்துரைக்கின்றனர் எனில் ஒரு முஸ்லிம் சத்தியத்தின் அழைப்பைச் சமர்ப்பிக்க வெட்கப்படுவதும், தயங்குவதும், அதற்குச் சூழ்நிலையைக் காரணம் காட்டுவதும் மிக வியப்புக்குரிய ஒன்றாகும்.

ஆம்! அசத்திய கோணல் வழி முயற்சிகள் அனைத்திற்கும் ஷைத்தான் உறுதுணையாக இருந்து உற்சாகமூட்டுவதால் அவர்கள் எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுகிறார்கள். அதற்கு மாறாக சத்திய நேர்வழி முயற்சிக்கு ஷைத்தான் தனது அனைத்துப் படைகளையும் கொண்டு முட்டுக் கட்டை போடுவதால் முஸ்லிம்களுக்கு வெட்கம், தயக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டல் இவை அனைத்தும் ஏற்படுகின்றன. ஷைத்தானையும், அவனது படைகளையும் முறியடித்து 5:67ல் அல்லாஹ் சொல்வது போல், மக்களில் யாருக்கும் அஞ்சாமல் சத்தியத்தை எடுத்துச் சொல்பவர்களே உண்மையான தாவா பணி செய்கிறவர்கள். சூழ் நிலையைக் காரணம் காட்டி சத்தியத்தைச் சொல்லத் தயங்குகிறவர்கள் தாவா பணியைச் செய்யவில்லை. இதை ஜமாஅத்தே இஸ்லாமி அன்பர்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல விஷயங்களில் மக்களுக்கு அஞ்சி, குழப்பம் ஏற்படுகிறது என இவர்களாக கற்பனை செய்து கொண்டு சத்தியத்தை மூடி மறைக்கிறார்கள். அவற்றில் ஒன்று ஆங்கில மாதத்தின் முதல் தேதி போல், ஒரு கிழமை போல், வெள்ளி ஜும்ஆ போல் சந்திர மாதத்தின் முதல் தேதி அதாவது முதல் பிறை 24 மணி நேரம் மட்டுமே இருக்கும். இரண்டு நாள், மூன்று நாள் ஒருபோதும் வராது என்ற உண்மை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், தங்களின் இயக்கத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி, குழப்பம் ஏற்படும் என நொண்டிக் காரணம் சொல்லி சத்தியத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சத்தியத்தைச் சொல்வதால் குழப்பம் ஏற்படும்; குழப்பம் கொலையை விட கொடியது என்று சொல்லி 2:191 இறைவாக்கைப் படித்துக் காட்டுவதை விட ஒரு பெரிய மோசடி பிரிதொன்று இருக்க முடியாது. ஓரிறைவனுக்கு மட்டுமே அடி பணிய வேண்டும்; அல்லாஹ்வுக்கு அடியானுக்கு மிடையில் இடைத்தரகர் இல்லை என்று நபி (ஸல்) சத்தியத்தைச் சொன்னபோது ஏற்பட்ட குழப்பத்தை விட பெரியதொரு குழப்பம் ஏற்பட்ட வரலாற்றை யாரும் காட்ட முடியுமா? அன்று நபி(ஸல்) அவர்களுடைய சத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட குழப்பங்களோடு இவர்கள் சொல்லும் குழப்பம், குழப்பமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

2:191 எதைக் குழப்பம் கொலையை விட கொடியது என்கிறது? சத்தியத்தை அழித்து அசத்தியத்தை நிலை நாட்டப் போராடுகிறார்களே அது தான் குழப்பம்; குழப்பம் கொலையை விட கொடியது என்கிறது. இந்த உண்மையை 2:190லிருந்து 193 வரை படித்து விளங்குகிறவர்கள் உணர முடியும். “ஃபித்னா (குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்” என்ற 2:193 இறைவாக்கு இந்த உண்மையை குன்றிலிட்ட தீபமாக விளக்குகிறது.

சத்தியத்தை நிலைநாட்ட சத்தியத்தை எதிர்ப்பவர்களுடன் கடுமையாகப் போராடுங்கள் என்றே அல்லாஹ் கட்டளையிடுகிறான். இவர்களோ அதற்கு மாறாகக் கூறுகிறார்கள். அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்ற சத்தியத்தைச் சொல்வதால் குழப்பம் ஏற்படுகிறது; குழப்பம் கொலையை விட கொடியது எனக் கூறி சத்தியத்தை எடுத்துச் சொல்வதிலிருந்தும் பின்வாங்கி தங்களின் இயக்கத்தை நிலை நாட்ட முற்படுகின்றனர். இயக்கத்தினரிடம் இஸ்லாத்தை நிலைநாட்டுவதைவிட தங்களின் இயக்கத்தை நிலைநாட்டுவதே அதிமுக்கியமாகத் தெரிகிறது என்பது இதிலிருந்தே ஊர்ஜிதமாகிறதா? இல்லையா? சொல்லுங்கள்.

பக்கம் 67. மெளதூதி கூறுகிறார்:
ஃபிக்ஹ் தொடர்பான விஷயங்களில் நான் முன்பே எழுதியது, இனி நான் எழுதப் போவது, கூறப்போவது அனைத்தும் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவருடைய தீர்வு எனும் அந்தஸ்தில் ஆகாது. மாறாக, அது என்னுடைய சொந்தக் கருத்து போன்றாகும். இவ்விஷயங்களில் நான் என்னுடைய சொந்தக் கருத்தை அமைப்பின் மற்ற அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் மீது திணிக்க விரும்பவில்லை. அதேபோல் அமைப்பின் புறத்திலிருந்து என்னுடைய கல்வி, ஆராய்ச்சி, கருத்தை வெளியிடும் உரிமை ஆகியவற்றில் கட்டுப்பாடு விதிப்பதையும் நான் விரும்பவில்லை”

அல்குர்ஆன் 7:3ல் அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணிந்து அதன்படி ஒவ்வொருவரும் சுயமாக குர்ஆன், நபி வழியைப் படித்து விளங்கி அதன்படி நடக்க வேண்டும். மார்க்க விஷயங்களில் யாரையும் அவர் அமீராக இருந்தாலும் தக்லீது-கண் மூடிப் பின்பற்றக் கூடாது என்பதை மெளதூதி திட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆயினும் ஜமாஅத்தின் கட்டுக் கோப்பு குலையாமலிருக்க குர்ஆன் நபிவழிக்கு உட்பட்ட அனைத்துக் காரியங்களிலும் அது எளிதாக இருந்தாலும், கடினமாக இருந்தாலும், மனது விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், உலக அளவில் நட்டத்தைத் தந்தாலும், லாபத்தைத் தந்தாலும் அமீருக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

நபி தோழர்கள் கருத்து வேறுபாட்டின் காரணமாக உம்மத்தைப் பிளவுபடுத்தி தனித் தனி அமைப்பு, இயக்கம் காணவில்லை. சமுதாயத்தைப் பிளவுபடுத்துவது இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயல் என்பதை அனைத்து இயக்கத்தினரும் உணர்ந்து தவ்பா செய்து மீள வேண்டும். கோணல் வழிகளில் வீம்புடன் செல்கிறவர்கள் 30:32 கூறுவது போல் அவர்களின் கோணல் வழிகளைக் கொண்டு ஆனந்தம் அடையலாம். உலகில் பட்டம், பதவி, பணம், காசு, ஆள் அம்பு என சொகுசு வாழ்க்கை வாழலாம். அவர்களின் இறுதி முடிவை அல்லாஹ் 3:105,6:159ல் கூறுவது போல் அல்லாஹ்விடமே விட்டுவிட்டு,நேர்வழி நடக்க விரும்புகிறவர்கள் 6:153ல் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ் கொடுத்துள்ள அந்த ஒரே நேர்வழியைக் கடைப்பிடித்து சமுதாய ஒற்றுமை காப்பார்கள்.
பக்கம் 103,104ல் காணப்படும் “அருள் நெறிக்கு ஓர் அழகிய விளக்கம்” என்ற ஆக்கத்தை கருத்தூன்றி மீண்டும் மீண்டும் படித்து அதன் சாரையும் சத்தையும் மனதில் கொண்டால், அதன்படி நடந்தால் நிச்சயம் அல்லாஹ் நேர்வழியை அவனது அருட்கொடையாகத் தருவான். அதில் காணப்படும் சுயநலக்காரர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களே. பக்கம் 116ல் மெளதூதி அவர்கள் “இஸ்லாம் புரோகித மதமன்று” என்று நேரடியாக அறிவித்துள்ளதை எடுத்துப் போட்டவர்கள், சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாக முஸ்லிம்களிடையே புகுந்துகொண்ட புரோகிதர்களை எப்படி ஆதரிக்க முடியும்? ஆச்சரியம் தான்!

பொருள் அறிந்து படிக்க வேண்டிய குர்ஆனை பொருள் அறியாமல் ஓதி வந்தவருக்கு, அறிவுக்குப் பொருந்தாத அல்லாஹ்வின் சிறப்புக்களும், ஆற்றல்களும் அவரது கேலிச் சிரிப்பிற்கும், பொழுது போக்கிற்கும் துணை போயின. மெளதூதியின் “அல்ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ படித்த பின்னரே தெளிவடைந்தேன் என்றும், உலகத்தைப் பற்றி உணர்ந்து கொள்ளாத உலமாக்கள் ஒருபுறம், உலகியல் கல்வியிலே மூழ்கி இறைவனையும் மார்க்கத்தையும் மதிக்காத பட்டதாரிகள் கூட்டம் இன்னொரு புறம் எனக் கூறப்பட்டுள்ளது. மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு, குர்ஆன் பொது மக்களுக்கு விளங்காது என புருடா விட்டதால் இந்த நிலை. மக்கள் மார்க்கத்தை விட்டுத் தூரமான நிலையையும், அரபு திமிர் பேசும் அபூஜஹீல் வர்க்கத்தினர் தீனையும், உலகையும் முறையாக அறியாத அவலத்தையும் பக்கம் 144 முதல் 147 வரையுள்ள ஆக்கம், மெளதூதியின் நேர்வழிச் சிந்தனை தெளிவு படுத்துகின்றன. மெளதூதி புகழ் பாடுகிறவர்கள் அவரின் அறிவார்ந்த கருத்துக்களை கைவிட்டது தான் வேதனையிலும் வேதனை.

பக்கம் 148ல் தனிநபர் புகழ்ச்சி ஜமாஅத்தில் இல்லை என புகழாரம் சூட்டுகிறவர்கள், அல்லாஹ் கொடுத்த பேரியக்கத்தைவிட தங்களின் தனி இயக்கத்தைத் தூக்கிப் பிடிப்பதுதான் வேதனை. 149ம் பக்கத்தில் “வாய்ப்புக் கேடாக இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று ஒற்றுமையின்றி சிதறிக் கிடக்கிறது. அல்லாஹ்வின் நெறிநூலாகிய கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டிருந்தால், இந்திய முஸ்லிம்கள் ஒரே ஜமாஅத்தாக விளங்கியிருப்பார்கள். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அமீரின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உன்னத சமுதாயமாகத் திகழ்ந்திருப்பார்கள். வேற்றுமைகளை வேரறுத்து, ஒற்றுமையின் வழி சென்று, இந்தச் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் எண்ணற்ற நன்மைகளைப் புரிந்திருப்பார்கள் என்று அமீரே ஜமாஅத்தாக இருந்த சகோ. முஹம்மது யூசுஃப் தனது பொறுப்பை ஒப்படைக்கும் போது ஆற்றிய உரையில் கூறியிருப்பதோடு, குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் தீனை நிலைநாட்டும் பணியை தமது இலட்சியமாகக் கொண்டு, இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அமைப்பின் கீழ் அணி திரளும் நாள் விரைவில் மலர வேண்டுமென வல்லோனை இறைஞ்சுகிறேன் என்று துஆ செய்துள்ளார். (பக்கம் 149)

ஒரே அமைப்பின் கீழ் அணி திரளுவதாக இருந்தால், அது எந்த அமைப்பாக இருந்தால் சாத்தியப்படும். 1941ல் ஏற்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமியா? அல்லது மிகச் சமீப காலத்தில் ஏற்பட்ட ஸலஃபி, முஜாஹித், ஜாக், தமுமுக, ததஜ, இதஜ போன்ற அமைப்புகளில் ஒன்றிலா? அல்லது நபி(ஸல்) மரணித்த பின்னர் தோன்றிய ஷிஆ, சுன்னத் வல் ஜமாஅத், ஹனபி, ஷாபி, மாலிக்கி, ஹன்பலி, காதிரியா, ஷாதுலியா போன்ற அமைப்புகளில் ஒன்றிலா? எது சாத்தியம்? நிச்சயமாக மனிதர்கள் கற்பனை செய்துள்ள இந்த அமைப்புகளில் எதைக் கொண்டும் முஸ்லிம் சமுதாய ஒற்றுமை ஒரு போதும் சாத்தியமில்லை. அது மட்டுமல்ல; இந்த ஒற்றுமை முயற்சியால் சமுதாயத்திற்கு இவ்வுலகிலும் எவ்வித பயனுமில்லை; நாளை மறுமையிலும் அதற்காக உழைத்துப் பாடுபட்டவர்களுக்கு எவ்வித பயனுமில்லை.

ஆனால் அதற்கு மாறாக அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்ஷபடுத்தி, முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்றுள்e “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ல் முஸ்லிம்களை ஒன்றிணைக்க முயற்சி செய்யும்போது, இந்த ஹி. 15ம் நூற்றாண்டில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை அல்லாஹ் நாடியிருந்தால் நிச்சயம் அந்த முயற்சி பலன் அளிக்கும். மீண்டும் முஸ்லிம் சமுதாயம், தான் இழந்துவிட்ட மேன்மையையும் (3:139) ஆட்சி அதிகாரத்தையும் (24:55) அடையும்.
ஆயினும் அந்த மாற்றத்தை அடைய முஸ்லிம்கள் அயராது உழைப்பதை அல்லாஹ் விதியாக்கி இருக்கிறான். இதோ அல்குர்ஆன் 13:11 கூறுகிறது. கவனித்துக் கேளுங்கள்.

“”எந்த ஒரு சமுதாயத்தவரும் தமது நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத் தடுப்பவர் எவருமில்லை. அவர்களுக்கு அவனைத் தவிர துணை செய்வோர் எவரும் இல்லை” (13:11)
முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து முயற்சித்தால் நிச்சயம் அல்லாஹ் உதவி செய்பவனாகவே இருக்கிறான்.ஒருக்கால் அல்லாஹ்வின் நாட்டத்தில் இந்த ஹி.15ம் நூற்றாண்டில் இஸ்லாத்தின் மறுமலரச்சி இல்லை என்றாலும், முயற்சித்தவர்களுக்கு நாளை மறுமையில் நிச்சயமாக அதற்குரிய நற்கூலி உண்டு. முறையாக அல்லாஹ்வின் கட்டளைப்படி தங்களின் தந்திரங்களையும், சமயோசிதத்தையும் கலக்காமல் உள்ளதை உள்ளபடி எடுத்து வைத்திருந்தால் நிச்சயம் சுவர்க்கம் புக முடியும். சில நபிமார்கள் பின்பற்றுவோர் ஒருவரும் இல்லாமல் சுவர்க்கம் நுழைவார்கள் என்ற நபி மொழி இதை உறுதிப்படுத்துகிறது. (முஸ்லிம் 330,331,332)

அனைத்து முஸ்லிம்களையும் ஒன்று சேர்ப்பது சாத்தியமே இல்லை என்று சில சுயநலப் புரோகிதர்கள் முஸ்லிம்களை இம் முயற்சியில் பலவீனமடையச் செய்வார்கள். முஸ்லிம் அனைவரும் ஒன்று சேர்வார்கள் என்பது சாத்தியமில்லைதான். ஒரு பெருங் கூட்டம் நரகை நிரப்புவார்கள் என்றிருக்கும் போது அதற்கு மாறாக அது சாத்தியமில்லை தான். ஆயினும் முஸ்லிம்களில் ஒரு கூட்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படி “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற நிலையில் 3:103 இறைக் கட்டளைப்படி ஒற்றுமையாக அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதிலுள்ள வழி காட்டல்படி நடக்க முன்வந்தாலே போதும். அல்லாஹ்வின் அருள்கொண்டு மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கும் ஆதாரம் இருக்கிறது.

முஸ்லிம்கள் இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம். இப்றாஹீம்(அலை) அவர்களைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு யூதர்களும், கிறிஸ்தவர்களும் பெரும் வழிகேட்டில் சென்று விட்டார்கள். அவர்கள் இப்றாஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். அதே சமயம் மூத்த மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களின் வழி வந்தவர்களும் பல்கிப் பெருகினர். இப்றாஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றி அவர்களின் வழிகாட்டல்படியே நடக்கிறோம் என்று கூறிக் கொண்ட இஸ்மாயீல், இஸ்ஹாக் வழி வந்தவர்களோடு இறுதித் தூதரை ஏற்று அல்குர்ஆனின் வழிகாட்டல்படி நடக்க முன்வந்தவர்களை ஒப்பிட்டால், அவர்கள் சுமார் 0.001% கூட தேற மாட்டார்கள்.

இப்போது இஸ்ஹாக்(அலை) அவர்கள் வழிவந்த யூத, கிறிஸ்தவர்களை விட்டு விடுவோம். இப்றாஹீம் (அலை) அவர்களின் “இஸ்லாம்’ மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று கூறிக்கொண்டிருந்த இஸ்மாயீல்(அலை) வழி வந்தவர்களோடு, இறுதித் தூதர் பின்னால் அணி திரண்டவர்களை ஒப்பிட்டால் அவர்கள் சுமார் 0.01% கூட தேற மாட்டார்கள்.

ஆயினும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நரகிற்குரிய 99.99% நிராகரித்து விட்டு 0.01% தேர்ந்தெடுத்து தன் அருட்கொடைகளை வாரிக்கொடுத்தான். ஆம்! நபி (ஸல்) அவர்களின் தலைமையில் அவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து நடந்தார்கள். அதனால் அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். இவ்வுலகிலும் பெரும் வெற்றியைக் கொடுத்து, அமைதியைக் கொடுத்து ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்து, உலகில் ஆக உயர் அந்தஸ்தைக் கொடுத்து மறுமையிலும் மிக உயர்ந்த பதவிகளோடு சுவர்க்கத்தைக் கொடுப்பதாக வாக்களித்துள்ளான். அதே போல் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில், அதாவது அல்லாஹ்வையும், இறுதித் தூதரையும், அல்குர்ஆனையும் ஏற்ற நிலையில், ஷைத்தானின் ஏஜண்டுகளான புரோகிதர்களின் வசீகரப் பிடியில் சிக்கியுள்ள முஸ்லிம்களில் ஒரு சிறு தொகையினர் அவர்களின் சூழ்ச்சி வலையை கிழித்தெறிந்து விட்டு, அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடி “ஜமாஅத் துல் முஸ்லிமீன்’ என்ற பேரியக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு தங்களுக்குள் ஓர் அமீரைத் தெரிவு செய்து அவரின் தலைமையில் அல்குர்ஆன், நபிவழியைப் பற்றிப் பிடித்து ஓரணியில் ஒன்றுபட்டு செயல்பட ஆரம்பித்துவிட்டால் 13:11, 3:139, 24:55 இறைவாக்குகளில் வாக்களித்துள்ளபடி அல்லாஹ் இந்த முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் ஆக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி விடுவான். இன்ஷா அல்லாஹ்.

இன்றைய முஸ்லிம்களின் நிலை மிகக் கேவலமாக இருக்கிறது. தலித்களை விட கீழான நிலையிலேயே இருக்கிறார்கள். முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் 12:106 கூறுவது போல் இணை வைக்கிறவர்களாக இருக்கும் நிலையில் அல்லாமல் அல்லாஹ் மீது நம்பிக்கைக் கொள்பவர்களாக இல்லை. முதலில் முஸ்லிம்களுக்கு “´ஷிர்க்’ பற்றிய தெளிவான அறிவு இல்லை. பெரும்பாலோர் சிலைக்குரியவர்களை வஸீலாவாகக் கொள்வது தான் குற்றம்-´ஷிர்க், கபுரிலுள்ளவர்களை வஸீலா வாகக் கொள்வது குற்றமில்லை-ஷிர்க் இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். இன்னொரு பெருங்கூட்டம் முன் சென்ற நல்லடியார்களிடம் முறையிடுவது தான் குற்றம்; ஷிர்க். அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது ஷிர்க் அல்ல என்று கூறுகின்றனர்.

இன்னொரு பெருங்கூட்டம் அல்லாஹ் அல்குர்ஆனில் நேரடியாகச் சொல்லியுள்ளது விளங்காது; அல்லாஹ்வின் தூதர் நடைமுறைப்படுத்திக் காட்டியது விளங்காது; முன் சென்ற இமாம்கள், நல்லடியார்கள் விளக்கியபடிதான் நாம் மார்க்கத்தை விளங்க வேண்டும். அதுவே நேர்வழி எனக் கூறி ஷிர்க்-இணை வைக்கின்றனர். இன்னொரு கூட்டம் கலஃபிகளான பின்னோர்கள் விளக்கிச் சொன்னபடி நாம் நடப்பது தான் குற்றம்; ஸலஃபிகளான முன்னோர்கள் விளக்கியபடி நடப்பதுதான் நேர்வழி எனக் கூறி 7:3, 33:21, 36,66,68, 59:7 ஆகிய இறைக்கட்டளைகளுக்கு முரணாக ஷிர்க்-இணை வைக்கின்றனர்.
தங்களை தவ்ஹீத்வாதிகள் – தவ்ஹீத் ஜமாஅத் என பெருமையுடன் பறைசாற்றிக் கொள்வோர் மேலே எடுத்துக் காட்டிய ´ஷிர்க்-இணை வைப்புகளிலெல்லாம் கொடிய ஷிர்க்-இணை வைப்பில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் மட்டுமே ஏகத்துவத்தை நிலைநாட்டி நேர்வழியில் இருக்கிறோம். எங்கள் பள்ளிகள் மட்டுமே ஏகத்துவத்தை நிலை நாட்டும் பள்ளிகள், மற்ற பள்ளிகள் அனைத்தும் “மஸ்ஜிதுல் ழிரார்” என்னும் தொழத் தகுதியற்ற பள்ளிகள்.
தர்கா சடங்குகளில் ஈடுபடுவோர் ஷிர்க்-இணை வைக்கின்றனர். அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று 4:49, 53:32, 3:128, 20:51,52 ஆகிய இறைக் கட்டளைகளுக்கு முரணாகச் செயல்படுகின்றனர். 42:14,21 போன்ற எண்ணற்ற இடங்களில் அல்குர்ஆன் கூறுவதுபோல் அல்லாஹ் தீர்ப்பை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருப்பது தவறு; நாங்கள் இவ்வுலகிலேயே அல்லாஹ்வுக்குரிய அந்த தனி அதிகாரத்தை எங்கள் கையில் எடுத்து குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுக்கிறோம் என்று 42:21படி இறைவனுக்கு இணையாளர்கள் ஆகியும், 49:16 இறைவாக்குப்படி இறைவனுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தும் ´ஷிர்க்குகளில் எல்லாம் கொடிய ஷிர்க்கை-இணை வைப்பை அரங்கேற்றி வருகின்றனர்.

ஆக அல்லாஹ் 12:106ல் சொல்வது போல் முஸ்லிம்களில் மிகமிகப் பெரும்பான்மையோர் இணை வைத்த நிலையிலேயே அதாவது ஷிர்க் செய்தபடியே நம்பிக்கை- ஈமான் கொண்டுள்ளனர். அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் இறந்த வர்களையோ, உயிரோடிருப்பவர்களையோ இடைத் தரகர்களாகக் கொள்ளாமல் அல்குர்ஆனையும், நபிவழியையும் படித்து அறிந்து, பிறர் சொன்னால், எழுதினால் அவர்களின் சுய விளக்கங்களை நிராகரித்து, அவற்றிற்குரிய குர்ஆன், நபிவழி ஆதாரங்களைப் பார்த்து உறுதிப்படுத்தி செயல்படுகிறவர்களை நேர்வழி நடப்பவர்கள். அவர்கள் ஒருபோதும் 4:49, 53:32 இறைக் கட்டளைக்கு முரணாக நாங்கள்தான் நேர்வழி நடக்கிறோம்; நாங்கள் தான் தவ்ஹீத்வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத் என மறந்தும் சொல்ல மாட்டார்கள்.
ஓர் உண்மையான தாயி-நபிமார்கள் செய்த அழைப்புப் பணியை தூய உள்ளத்தோடு அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து செய்வதுடன் 41:33ல் அல்லாஹ் கட்டளையிடுவது போல் தன்னை முஸ்லிம்களில் உள்ளவன் முஸ்லிம் ஜமாஅத்தில் உள்ளவன் என்று மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது உண்மையான, பலன் தரும் அழைப்புப் பணியாக இருக்கும். உலகியல் ஆதாய நோக்குடன் செய்யப்படும் அழைப்புப்பணி அல்லாஹ்வால் ஏற்கப்படாது என்பதை ஒவ்வொரு தாயியும் விளங்குவது அவசியம். உலகியல் ஆதாயங்களுக்காக தாவா பணியை ஒருபோதும் செய்யக் கூடாது. மீறி செய்தால் முகம் குப்புற இழுக்கப்பட்டு நரகில் எறியப்படுவோம் என்பதை ஒவ்வொரு தாயியும் மனதில் இருத்த வேண்டும்.

பக்கம் 215ல் காணப்படும் “பிரிந்து விடாதீர்கள்” என்ற ஆக்கத்தில் காணப்படும் குர்ஆன் வசனங்கள், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை கட்டுரையாளரின் சுயவிளக்கத்தைப் புறக்கணித்து விட்டு படித்துச் சிந்தியுங்கள். அவர் தனது சுய விளக்கங்களைக் கொண்டே இயக்கப் பிரிவுகளை நியாயப்படுத்தியுள்ளார் என்பதைத் தெளிவாக விளங்க முடியும். ஆதித் தந்தை ஆதமுக்கு அல்லாஹ்வின் கட்டளை குறிப்பிட்ட மரத்தை நெருங்காதே என்பதாகும். அதற்கு ஷைத்தானின் சுய விளக்கம், அம்மரத்தின் கனியை புசித்து விட்டால் மரணமே இல்லை; நித்திய அரசாங்கம் கிடைத்து விடும் என்பதாகும். ஆதத் திற்கு அல்லாஹ்வின் கட்டளையைவிட ஷைத்தானின் சுய விளக்கம் சரியாகத் தெரிந்தது. அதே நிலையில்தான் ஆதத்தின் சந்ததிகளாகிய நாமும் இருக்கிறோம். அல்லாஹ்வின் கட்டளைகளைவிட ஷைத்தானின் பிடியில் சிக்கிய மனிதர்கள் கொடுக்கும் சுய விளக்கமே சரியாகத் தெரிகிறது.

“”பிரிந்து விடாதீர்கள்” என்பது அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை. அதற்கு மாறாக மத்ஹபுகள், இயக்கங்கள் இருக்கப்போய் தான் அவை கருத்து வேறுபாடுகளைக் குறைக்கின்றன. இயக்கங்கள் இல்லையெனில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு கருத்து எனும் நிலை தோன்றும். இயக்கங்கள் அத்தகைய சிதறிய கருத்துக்களை ஒருங்கிணைக்கின்றன… தீனின் உணர்வுகளைச் சரியான முறையில் விளங்கிக் கொள்கின்ற எந்த இயக்கமும் பிரிவினையின் பக்கம் அழைக்காது… அனைவரும் ஒரே இயக்கத் தின் கீழ் அணி திரள வேண்டும் என விரும்புவது யதார்த்தத்திற்கு எதிரானது. விரும்பினாலும் நடக்காத விஷயம். (பக்கம் 216)

ஆதத்திற்கு ஷைத்தானின் சுய விளக்கம் அழகாகவும் சரியாகவும் தெரிந்தது போல் இந்த மனித சுயவிளக்கமும் முஸ்லிம்களுக்கு அழகாகவும் சரியாகவும் தெரியலாம். மனிதன் பலகீனமானவனும், அவசரக்காரனும் தானே. தலைப்பு என்ன போட்டிருக்கிறார். அல்லாஹ் 42:13ல் கட்டளையிடும் பிரியாதீர்கள். அல்லாஹ் கொடுத்த இஸ்லாமிய பேரியக்கம் ஒற்றுமைப் படுத்துமா? மனிதக் கற்பனையில் உருவான இயக்கங்கள் ஒற்றுமைப்படுத்துமா? இந்தச் சாதாரண சிந்தனை கூட இல்லாதவர்களை எதில் சேர்ப்பது? கேவலம் தங்கள் கற்பனையில் சரி கண்ட இயக்கங்களை நியாயப்படுத்த இப்படியா தடுமாறுவது. அங்கு மேடையில் பேசிய பேச்சாளர்கள் தங்கள், தங்கள் இயக்கத்தைத் தூக்கிப் பிடித்த அளவிற்கு தீனை-இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்பதைக் கவனித்தவர்களும் உண்டு.

அனைவரும் ஒரே இயக்கத்தின் கீழ் அணி திரள்வது யதார்த்தத்திற்கு எதிரானதாம். நடக்காத விஷயமாம். இவரது அறிவில் நடக்கும் என்று பட்டால்தான் அதற்காக முயற்சிப்பாராம். நூஹ் (அலை) 950 வருடங்கள் பாடுபட்டும் ஒரு சிலர் தானே நேர் வழியை ஒப்புக்கொண்டார்கள். சில நபிமார்கள் ஒருவர் கூட இல்லாமல் தன்னந் தனியாக சுவர்க்கம் செல்வதாக ஹதீஸில் வந்துள்ளதே. அந்த நபிமார்களின் முயற்சி வீண் முயற்சி என்பார்களோ? அல்லாஹ்வின் கட்டளை எதுவாக இருந்தாலும் அதை அறிவு சரி காணாவிட்டாலும் அப்படியே செய்வது நாம் அலலாஹ்வின் அடிமை என்பதை நிலை நாட்டுமா? நமது அறிவு ஏற்காததால் சுய விளக்கம் கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்து 42:21, 49:16 இறைக் கட்டளைகளில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ் விதிக்காததை விதித்து அல்லாஹ்வுக்கு அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படுவதா? சொல்லுங்கள்.

ஆம்! அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடை யில் இடைத் தரகர் இல்லாமல் அல்லாஹ்வை மட்டுமே ஒரே இறைவனாக ஏற்பது மனித குலத்திற்கு எப்படி ஏற்புடையதாக இல்லையோ, நபிமார்களின் அந்த போதனையை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்க¼ளா, நடைமுறையில் இல்லாத, நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றை, நம்முடைய முன்னோர்கள், மூதாதையரிடம் கேள்விப்படாத ஒன்றை, ஆச்சரியமான ஒன்றையல்லவா! இவர்கள் கூறுகிறார்கள் என நபிமார்களை எள்ளி நகையாடினார்களோ அதே போல்தான் அதே வரிசையில்தான் 42:13ல் “தீனை நிலைநாட்டுங்கள்; அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதும். அல்லாஹ் கட்டளையிட்டு நபி(ஸல்) நடைமுறைப்படுத்திய “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற பேரியக்கத்தில்-இறை அளித்த இயக்கத்தில் மனிதர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது யதார்த்தத்திற்கு எதிரானது; நடக்காத விஷயம், நடைமுறையிலில்லாத, நடைமுறைச் சாத்தியமற்ற, நம் முன்னோர், மூதாதையரிடம் கேள்விப்படாத ஆச்சரியமான ஒன்றை அல்லவா இவர்கள் கூறுகிறார்கள் என்று, கூறுகிறவர்களை எள்ளி நகையாடக் கூடிய நிலையில்தான் இன்றைய அறிஞர்கள் இருக்கிறார்கள்.

ஆம்! அன்று மெளதூதியின் நேர்வழிக் கருத்துக்களை அன்றைய அறிஞர்கள் காட்டுக் கூச்சலாக எள்ளியது போல், அல்லாஹ்வின் 42:13 கட்டளைப்படி முஸ்லிம்கள் பிரியாமல் ஒரே தலைமையில் ஓரணியில் ஒற்றுமையாகச் செயல்படவேண்டும் என்று கூறுவது இன்றைய அறிஞர்களுக்கு காட்டுக் கூச்சலாகத் தான் தெரியும். அதனால்தான் அதை யதார்த்தத்திற்கு எதிரானது; நடக்காத விஷயம் என துணிந்து எழுத முடிகிறது.
240ம் பக்கம் “பிரிவினை ஏன்?” என்ற தலைப்பில் மிக அழகாக நான்கு காரணங்களைக் கூறியுள்ளனர்.

புதிய புதிய நூதன விஷயங்களைப் (பித்அத்) புகுத்துவதனாலேயே தீனில் பிளவுகள் ஏற்படுகின்றன. இந்த நூதன விஷயங்கள் பலவிதமாக இருக்கலாம். அவையாவன.
1. தீனில் இல்லாத ஒரு விஷயத்தை அதில் சேர்த்து விடுவது.
2. தீனில் இருக்கின்ற ஒரு விஷயத்தை அதிலிருந்து நீக்கிவிடுவது.
3. தீனின் மூலாதார மொழிகளுக்கு(இறை வசனங்கள், நபிமொழிகள்) விதவிதமான பொருள்களைக் கற்பித்து நூதனக் கொள்கைகளை ஏற்படுத்துவது.
4. தீனின் கருத்துக்களை உருமாற்றிச் சிதைத்து விடுவது.

இத்தகையச் செயல்களால்தான் நபிமார்களின் சமூகங்களில் பிளவுகளும் குழுக்களும் ஏற்பட்டன. அந்தக் குழுக்கள் பின்னர் வளர்ச்சியுற்று தனித்தனி மதங்களாகவும் ஆகிவிட்டன. எனவே தான் இறை மறை நீங்கள் பிரிந்து விடாதீர்கள்! என்றும் ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றும் வலியுறுத்திக் கூறுகிறது. (பக்கம் 240)

இக்கருத்துக்களில் “ஒற்றுமை என்னும் கயிறு” என்பதைத் தவிர அனைத்தும் மணியான வாசகங்கள். “ஹப்லுல்லாஹ்”-அல்லாஹ்வின் கயிற்றை ஜமாஅத்தாக ஒன்றுபட்டு பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள் என்றிருப்பதை மத்ஹபுகளை நியாயப்படுத்தி முகல்லிது புரோகிதர்கள் ஒற்றுமை எனும் கயிறு எனத் தவறாக திரித்துச் சொல்வார்கள். அதுவே இங்கும் இடம் பெற்றுள்ளது.

ஆம்! முன்னைய நபிமார்களின் சமுதாயங்கள் பிளவுபட்டு குழுக்களாகி அதாவது தனித் தனி இயக்கங்களாகி அவையே பின்னால் பல மதங்கள் ஆகின என்பது உண்மைதான். முன்னைய நபிமார்களின் நெறிநூல்கள் பதிந்து பாதுகாக்கப்படாதது போல், இறை நெறிநூல் அல்குர்ஆனும் பதிந்து பாதுகாக்கப் படாதிருந்தால் இறுதித் தூதரின் சமுதாயமும் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகி இருக்கும்; அல்லாஹ் பாதுகாத்தான். அல்குர்ஆன் ஓர் எழுத்து கூட மாற்றமில்லாமல் கடந்த 1431 ஆண்டுகளாக ஏன் உலகம் அழியும் வரை பாது காக்கப்பட்டுள்ளதால், இந்த இயக்கவாதிகளின் தவறான போக்கைச் சுட்டிக் காட்ட முடிகிறது. எனவே இயக்கங்கள் அனைத்தும் தீனில் இல்லாத ஒன்றை அதில் சேர்த்து விடுவது (பித்அத்) என்று 1-ல் கூறியிருப்பது போல் கோணல் வழிகளை; நேர்வழி இல்லவே இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆனால் “வேற்றுமையில் ஒற்றுமை” என்பது இறுதித் தூதரையும், இறுதி வழிகாட்டி நெறி நூல் அல்குர்ஆனையும் ஒப்புக்கொண்டு பெயரளவிளாவது முஸ்லிமாக இல்லாமல், சிலை வணங்கிகளாக, யூதர்களாக, கிறிஸ்தவர்களாக, மேலும் பலபல மதங்களில் இருப்பவர்களாக இருக்கும் ஆதத்தின் சந்ததிகளான, அல்லாஹ் 4:1ல் கூறுவது போல் நமது இரத்த உறவுகளை மதித்து சகோதர பாசத்துடன் நடப்பது நமது கடமை. அல்குர்ஆன், நபிவழி கூறும் நேர்வழியை அழகாக நளினமாக எடுத்துரைப்பது மட்டுமே நமது கடமை. அவர்கள் அந்த நல்லுரையை ஏற்காமல் அவர்களது பெற்றோர்களின் மதங்களிலேயே நிலைத்திருந்தாலும் அவர்களுடன் மனித நேயத்துடனும் அன்பாக, அழகாகப் பழகி அனுமதிக்கப்பட்ட வழிகளில் அவர்களுக்கு நம்மாலான உதவி ஒத்தாசைகளைச் செய்வது ஒவ்வொரு உண்மை முஸ்லிமின் கடமையாகும்.

அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்தால் இஸ்லாம் பக்கத்து வீட்டுக்காரருக்கு கொடுக்கப் பணிக்கும் அனைத்து உரிமைகளையும் கொடுக்க வேண்டும். அவர்களது நல்லது கெட்டதுகளில் கலந்து அவர்களை மகிழ்விப்பவர்களாக இருக்க வேண்டும். அதுவே பன்முகம் கொண்ட நமது தாய் நாட்டிலிருக்கும் அனைத்து மதங்கள், ஏன் நாத்திகர்கள் உட்பட அனைவருடனும் மனித நேயம் போற்றி வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதாகும். ஆனால் குர்ஆனையும், நபி வழியையும், ஏற்ற முஸ்லிம்களிடையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது அர்த்தமில்லா பிதற்றலாகும். குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு நேர் முரணாகும். முஸ்லிம்கள் அனைவரும் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடப்பது கடமையாகும். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறி தரீக்காக்களாக, மத்ஹபுகளாக, இயக்கங்களாக பல்வேறு பிரிவுகளில் இருப்பது குற்றமாகும். நாளை நரகம் புக விரும்புவோர் அப்படிப் பல பிரிவுகளாகப் பிரியலாம்.
ஆனால் நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்களுக்கு அப்படிப் பிரிய அனுமதி இல்லை. குர்ஆன், ஹதீஸில் இருப்பதை உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்வது மட்டுமே கடமை. கேட்பவர்கள் அதன்படி நடக்க முன் வராவிட்டால் அது அவர்களின் தவறாகும். சொன்னவர் நாளை மறுமையில் குற்றம் பிடிக்கப்படமாட்டார். அதனால் கேட்டவர் அதன்படி நடக்க முன்வரவில்லை என்பதால் சொன்னவர்கள் ஆத்திரப்படுவதோ, அவர்கள் வேறு நாம் வேறு என்று அவர்களுக்கு குஃப்ர் ஃபத்வா கொடுப்பதோ, சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தனித்தனி மத்ஹபு, இயக்கம் காண்பதோ குர்ஆன், ஹதீஸுக்கு முற்றிலும் முரணாகும்.

ஆக குர்ஆன், நபிவழியில் இருப்பதை உள்ளதுபடி எடுத்து நடக்க முன்வந்தால் கருத்து வேறுபாடுகள் வரவே வராது. அப்படி வந்தாலும் 2:213, 16:64, 4:59 சொல்வது போல் அக்கருத்து வேறுபாடுகளை குர்ஆன், ஹதீஸ் கொண்டு தீர்க்க முடியும். அப்படியே தீர்க்க முடியாவிட்டாலும் பிளவுகள் ஒருபோதும் வராது. இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்களை எவ்விதத் தயக்கமும் இல்லாமல் தூக்கி எறியும் துணிவு முஸ்லிம்களுக்கு ஏற்பட வேண்டும். இதுவே சமுதாய ஒற்றுமைக்குள்ள ஒரே வழி.

எனவே “வேற்றுமையில் ஒற்றுமை” முஸ்லிம்களிடையே இருக்க முடியாது. முஸ்லிம் அல்லாதவர்களுடன் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் அழகிய முறையில் செயல்படுவது குர்ஆன், ஹதீஸ் போதனையே. அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.

மாநாடு, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற நோக்கில் தனித்தனி பிரிவு, இயக்கங்களாக இருந்து கொண்டு ஏற்றுக் கொண்ட விஷயங்களில் ஒன்றுபட்டுச் செயல்படுவது என்ற அவர்களின் விருப்பப்படி நிறைவேறாவிட்டாலும் சரிதான். ஆனால் “தீனை நிலைநாட்டுங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள்” என்ற 42:13 இறைக் கட்டளைப்படி மாநாடு தனது நோக்கை எட்டவில்லை என்பது தான் உண்மை. மத்ஹபு, இயக்கப் பிரிவினர்களுக்கு மட்டுமே பிரத்தியேக அழைப்புக் கொடுத்து மாநாடு நடத்தியதே இதை குன்றிலிட்ட தீபமாக உணர்த்துகிறது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
 
தீனை நிலைநாட்டுங்கள்! (இயக்கங்களாக) பிரிந்து விடாதீர்கள்!! 42:13

“தீனை நிலை நாட்டுங்கள்; பிரிந்து விடாதீர்கள்” என்ற முழக்கத்தோடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஜனவரி 2010, 30, 31 தேதிகளில் திருச்சிக்குப் பக்கத்திலிருக்கும் நெடுங்கூர் சனமங்கலத்தில் ஒரு மாநாட்டுக்குப் பொது அழைப்பு விட்டிருந்தனர். அல்குர்ஆன் அஷ்ஷீறா 42:13லுள்ள “நூஹுக்கு எதனை அவன் (அல்லாஹ்) உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான்; ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக் கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், “நீங்கள் தீனை (மார்க்கத்தை) நிலை நாட்டுங்கள், அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்” என்பதே; இணை வைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது. தான் நாடியவர்களை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (அல்குர்ஆன் 42:13)

இதுதான் அந்த மாநாட்டின் மையக் கருத்து. எனவே நாமும் மிகுந்த ஆவலுடன் அதில் சனி, ஞாயிறு இரு நாட்களும் பங்கு கொண்டோம். இந்த 42:13 இறைவாக்கு என்ன கூறுகிறது? இறைத் தூதர் நூஹ்(அலை) காலத்திலிருந்து இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காலம் வரை தீனில் எவ்வித மாற்றமும் இல்லை; அதாவது மனிதக் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் முற்றிலுமாக அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும், வழிகாட்டல்களுக்கும் மட்டுமே அடிபணிய வேண்டும். அப்படியே எடுத்து நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் நூஹ் (அலை) காலத்திலிருந்து இறுதித் தூதர் காலம் வரை தீனில் எவ்வித மாற்றமும் இல்லை எனும்போது 1431 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுவரை, ஏன்? உலகம் இறுதி வரை தீனில் மாற்றம் இருக்க முடியாது என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. இதை 5:3, 3:19,85, 102,103,105, 6:153,159, 7:3, 33:21,36,66-68, 42:14, 59:7 இறைவாக்குகளும் உறுதிப்படுத்துகின்றன.

அதாவது முஸ்லிம் உம்மத்-சமுதாயம் அல்குர்ஆனை ஜமாஅத்தாக -ஒன்றிணைந்து பற்றிப் பிடித்து ஓரணியில் இருக்க வேண்டும் என்பதே. இப்படிப்பட்ட ஓர் அரிய முயற்சியில் ஜமாஅத்தே இஸ்லாமியினர் ஈடுபட்டுள்ளனர் என நாம் பெரிதும் எதிர்பார்த்து அங்கு சென்றோம். ஆனால் அங்கு எமக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் எத்தனை மத்ஹபுகள், மஸ்லக்கள், இயக்கங்கள், அமைப்புகள் என பிரிந்து கிடந்தாலும் பரவாயில்லை; அது பாதகமும் இல்லை; எவற்றிலெல்லாம் முஸ்லிம்கள் ஒத்த கருத்தில் இருக்கிறார்களோ அவற்றில் மட்டுமாவது ஒன்றிணைந்து செயல்பட்டால் போதும் என்றே அங்கு வலியுறுத்திப் பேசப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே, நபி தோழர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன. அதனால் இப்போதும் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என பேசப்பட்டது. முஸ்லிம்களிடையேயுள்ள பல்வேறு பிரிவுகளை-பிளவுகளை நியாயப்படுத்தி இவ்வாறு பேசப்பட்டது. நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மை தான். ஆனால் அதைக் காரணம் காட்டி அவர்களிடையே பிரிவுகள், பிளவுகள் ஏற்படவில்லையே என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

தூரத்திலுள்ள ஊருக்கு நபி தோழர்கள் சிலரை நபி(ஸல்) அனுப்பும்போது அங்கு போய் அஸர் தொழுங்கள் எனக் கட்டளையிட்டார்கள். அஸர் நேரம் வந்தவுடன் சிலர் இடையில் தொழுதனர். சிலர் குறிப்பிட்ட ஊருக்குப் போய் தொழுதனர். அதன் பின்னர் அதை வைத்து அவர்கள் இரண்டு மத்ஹபுகளாகப் பிரிந்தனரா? இல்லையே. இது போல் பல முறை பல விசயங்களில் நபி தோழர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை தான். அதே சமயம் அவற்றைக் காரணமாக வைத்து முஸ்லிம்களிடையே பிரிவுகளை, பிளவுகளை ஏற்படுத்தவில்லையே! ஒரு முறை முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே பிணக்கு ஏற்பட்டு, ஓ அன்சாரிகளே என அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் அழைக்க, உடனே முஹாஜிர்களில் சிலர் ஓ முஹாஜிர்களே என அழைக்க, இந்தக் கூப்பாட்டைக் கேட்ட நபி(ஸல்) தமது கூடாரத்திலிருந்து வெளிவந்து என்ன கூறினார்கள்? அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்துக் கூப்பாட்டை செவியுறுகிறேன் எனக் கடுமையாகக் கண்டித்தார்கள் என்பதற்கே ஆதாரம் கிடைக்கிறது. யார் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியில் இருக்கிறார்களோ அவர்கள் அய்யா முல் ஜாஹிலிய்யா காலத்தவர்களே. அபூ ஜஹீல் வர்க்கமே என்பது உறுதியாகத் தெரிகிறது. அதனால் தான் முஸ்லிம் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் புரோகிதர்கள் அபூ ஜஹீலின் வாரிசுகள் எனக் கடுமையாக விமர்சிக்கிறோம்.

ஆம்! 3:103 இறைவாக்கு என்ன கூறுகிறது? அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்தவரான குறைஷ்கள் பல பிளவுகளில் பிரிவுகளில் சின்னாபின்னப்பட்டு நரக விளிம்பில் நின்றார்கள். அல்குர்ஆனே அவர்களை ஒன்றுபடுத்தியது என்று கூறவில்லையா? மனிதர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்குத்தான் அல்லாஹ் அல்குர்ஆனையும், அதற்கு முன்னைய நெறி நூல்களையும் இறக்கியதாக 2:213, 16:64, 3:105, 45:17 போன்ற பல இடங்களில் கூறி இருக்க அல்குர்ஆன் இறைவாக்குகளை விளங்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட முடியுமா? அதுவும் அல்லாஹ்வே அவர்களிடையே ஏற்பட்ட போட்டி பொறாமையின் காரணமாகவே கருத்து வேறுபாடுகள் கொண்டனர் என்று தெளிவாகக் கூறி இருக்க, அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்டுள்ள பிளவுகளையும் பிரிவுகளையும் அல்லாஹ் ஏற்பானா? அதற்குரிய ஆதாரம் எதுவும் இருக்கிறதா இவர்களிடம்? இல்லையே!

சில்லரை கருத்து வேறுபாடுகளைக் கண்டு கொள்ள வேண்டாம்; அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அடிப்படை விசயங்களில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று மேடையில் முழங்கினர். அதாவது ஒரே மேடையில் நின்று ஒன்றுபட வேண்டாம்; பல மேடைகளில் நின்று கொண்டு ஒன்றுபட்டுச் செயல்படுவோம் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது நடைமுறையில் சாத்தியமா? எனச் சிந்தியுங்கள்.

முஸ்லிம்கள் இன்று தரீக்கா, தர்கா, மத்ஹபு, மஸ்லக், கழகங்கள், ஜமாஅத்துகள், அமைப்புகள் என பிளவுபட்டு நிற்பதே அவர்களின் இவ்வுலக சுயநலம் காரணமாகவே. தங்களின் அற்ப இவ்வுலக சுயநலம் என்பதை மறைத்து சில்லரை கருத்து வேறுபாடுகளைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அதுவும் புரோகித முன்னோர்கள் திட்டமிட்டே லட்சக் கணக்கான ஹதீஸ்களைக் கற்பனை செய்து வைத்துள்ளனர். 17:36ல் அல்லாஹ் சொல்வது போல் தீர்க்கமான அறிவில்லாத நிலையில் ஒன்றைப் பின்பற்றாமலும், “சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகமற்றதின்பால் சென்றுவிடு” என்ற புகாரீ, வியாபாரம் பாடத்தில் காணப்படும் நபி(ஸல்) அவர்களின் கட்டளையை அப்படியே ஏற்றும், “உங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டால், குர்ஆனின் பாலும், ஆதாரபூர்வமான நபிவழியின்பாலும் திரும்பி விடுங்கள்” என்று தெளிவாக, நேரடியாகச் சொல்லும் 4:59 இறைக் கட்டளைக்கு அடிபணிய முஸ்லிம்கள் முன்வந்தால் கருத்து வேறுபாடுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். ஆனால் பிரித்தாளும் சூழ்ச்சியின் படி சமுதாயத்தைப் பிளவுபடுத்தியே உலக ஆதாயங்களை அடைந்து வரும் புரோகிதர்கள் இதற்கு ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். சமுதாய ஒற்றுமையை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். சமுதாய ஒற்றுமைக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள்.

இந்த உண்மையை 42:13 இறைவாக்கே உண்மைப் படுத்துகிறது. இணைவைப்பவர்கள் நீங்கள் அழைக்கும் ஒற்றுமையின் பக்கம் வரவே மாட்டார்கள். அது அவர்களுக்கு பெரும் சுமையாகத் தெரிகிறது என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறுகிறது. இதைச் சொன்னவுடன் புரோகிதர்கள் இந்த இறைவாக்கு முஸ்லிமல்லாத காஃபிர் முஷ்ரிக்குகளைக் குறிக்கிறது. முஸ்லிம்களை அல்ல எனச் சொல்லி மக்களை ஏமாற்றி விடுவார்கள். ஆனால் சமுதாய ஒற்றுமை சாத்தியமில்லை என்போர் முஸ்லிம்களாக இருந்தாலும் இணை வைப்பவர்களே! (பார்க்க 49:14, 12:106)

முஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதால் ஒருவன் முஸ்லிமாகி விட முடியாது. பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் முஸ்லிமாகத் தான் பிறக்கின்றன. அது வளர்ந்து விபரம் தெரிந்து செயல்பட ஆரம்பிக்கும் போது அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து நடந்தால் முஸ்லிம்; முன்னோர்களைப் பின்பற்றி இறைக் கட்டளைகளை நிராகரித்தால் முஷ்ரிக், காஃபிர்; 49:14, 12:106 இறைவாக்குகள் இதை உண்மைப்படுத்துகின்றன. முஸ்லிம் பெயரில் முஸ்லிம் சமுதாயத்திலும், காஃபிர்-நிராகரிப்பவர்கள், முஷ்ரிக்குகள் இருக்கிறார்கள். இந்த உண்மையை அன்று மாநாட்டு மேடையிலும் எடுத்துச் சொல்லப்பட்டது.

7:3, 33:21,36,66,67,68 இறைவாக்குகள் 2:39 சொல்வது போல் நிராகரித்து அதாவது நேரடியாக குர்ஆன், நபிவழியை அறிந்து, விளங்கிச் செயல்படாமல், இறந்து போன அல்லது உயிரோடிருக்கும் ஒரு இமாமை, மவ்லவியை(?), அறிஞரை நம்பிப் பின்பற்றினால் அப்படிப்பட்டவர்களும் நிராகரிப்பவர்களே. அல்லாஹ் சொன்னது விளங்காது, நபி சொன்னது விளங்காது, இமாம், அறிஞர்கள் போன்ற மனிதர்கள் விளக்கியே விளங்க முடியும் என்று நம்புகிறவர்கள் 42:21 மற்றும் 49:16 கூறுவது போல் அல்லாஹ்வுக்கு இணை வைத்து முஷ்ரிக் ஆகின்றனர். அதிலும் குறிப்பாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களைப் பின்பற்றுகிறவர்கள் நாளை மறுமையில் நிச்சயமாக அந்தப் பட்டியலில் தான் இடம் பெறுவர்.

42:13 கூறும் “நீங்கள் தீனை (மார்க்கத்தை) நிலை நாட்டுங்கள், அதில் நீங்கள் பிரிந்துவிடாதீர்கள்” என்ற அழைப்பு அன்றைய புரோகிதர்களான தாருந் நத்வாவின் அபூ ஜஹீல் வகையறாக்களுக்கு அவர்களின் இணை வைப்பு காரணமாக எப்படி சுமையாகத் தெரிந்ததோ, அதே போல் இன்றும் மார்க்கத்தைப் பிழைக்கும் வழியாகக் கொண்டு, அதனால் அல்லாஹ்வின் பல நேரடிக் கட்டளைகளை நிராகரித்தும், 42:21, 49:16படி இணை வைத்தும் செயல்படுவதால் இந்த அழைப்பு இப் புரோகிதர்களுக்கு பெரும் சுமையாகத்தான் தெரியும். சமுதாய ஒற்றுமைக்கு அவர்கள் ஒரு போதும் உடன்படவே மாட்டார்கள்.

ஒரு உமர்(ரழி) போல், ஒரு அலீ(ரழி) போல் ஒரு சிலர் புரோகிதத் தொழிலை கைவிட்டு தாருந்நத்வாவிலிருந்து வெளியேறியது போல், தாருந்நத்வாவில் மிக உயர்ந்த பதவியிலிருந்த உமர்(ரழி) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத அடிமை பிலால்(ரழி) அவர்களை “ஸய்யிதனா”-எங்கள் தலைவரே என மனமார அழைத்தது போல், இன்று மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுள்ளவர்கள் அதைக் கை விட்டு ஹலாலான வழியில் உழைத்துச் சாப்பிட முன்வந்தால் மட்டுமே இந்த 42:13 இறைவாக்கின்படி நடக்க முன்வருவார்கள். அப்படி நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. பிளவுகளிலும், பிரிவுகளிலும் இருந்து கொண்டே ஏற்றுக் கொள்ளும் அடிப்படை விசயங்களில் ஒன்றுபட்டுச் செயல்படுவோம் என்பது சாத்தியமும் இல்லை. அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் போகவும் முடியாது.

அதற்கு மாறாக மார்க்கத்தில் நமது சுய கருத்துக்களைப் புகுத்தாமல் குர்ஆன், நபி வழியில் இருப்பதை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தால், அல்லாஹ் 42:13ல் சொல்வது போல் “தான் நாடியவர்களை தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அல்லாஹ்வை உறுதியாக நம்பி அவனை முன்னோக்குகிறவர்களை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்” என்பதில் அணுவளவும், சந்தேகமில்லை. அப்படி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் கூட நேர்வழிக்கு வராவிட்டாலும் அழைத்தவர் நட்டப்படமாட்டார். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொண்டு அவரை சுவர்க்கம் அனுப்புவது உறுதி என்பதற்கு சில நபிமார்கள் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் சுவர்க்கம் போவார்கள் என்ற முஸ்லிமில் காணப்படும் நபிமொழிகள் ஆதாரமாக இருக்கின்றன.

நேர்வழியை மக்களிடம் எடுத்து வைப்பது மட்டுமே நபிமார்களின், பிரசாரகர்களின் கடமை. மக்களை நேர்வழிக்குக் கொண்டுவர மனிதக் கற்பனையால் உருவாகும் தந்திரங்களைக் கைக்கொள்ளக் கூடாது என 5:92,99, 16:35,82, 24:54, 29:18, 36:17. 64:12 போன்ற எண்ணற்ற இறைவாக்குகள் குன்றிலிட்ட தீபமாக கூறிக் கொண்டிருக்க, இப்புரோகிதர்கள் தங்கள் சுய கருத்துக்களை மார்க்கத்தில் புகுத்தி மக்களை நேர்வழிக்குக் கொண்டு வருகிறார்களா? அதற்கு மாறாக ஷைத்தானின் ஏஜண்டாக இருந்து மக்களை நரகில் தள்ளி கோணல் வழிகளில் இட்டுச் செல்கிறார்களா? இதைச் சிந்திக்க வேண்டாமா?
முஸ்லிம் மதப் புரோகிதர்கள் எண்ணற்றப் பிரிவுகளில் முஸ்லிம்களை நேர்வழியில் அழைத்துச் செல்வது உண்மையானால், அதே போல் யூதப் புரோகிதர்கள், கிறித்தவப் புரோகிதர்கள், ஹிந்துப் புரோகிதர்கள் என அனைத்து மதப் புரோகிதர்களும், தங்களை மாபெரும் நேர்வழி காட்டிகளாக நம்பி அவர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களை அவர்கள் நம்புவது போல் நேர்வழியில்தான் அழைத்துச் செல்கிறார்கள் என்பதும் உண்மை தான் என்று நம்ப வேண்டும். முஸ்லிம் மதப் புரோகிதர்கள் அப்படி நம்புகிறார்களா? அல்குர்ஆன் வழிகாட்டல்படி அவர்கள் கோணல் வழிகளில் செல்கிறார்கள் என்று முஸ்லிம் மதப் புரோகிதர்கள் சொல்வார்களானால், அதே அல்குர்ஆன் உரைகல்லில் தங்கள் செயல்பாடுகளையும் உரைத்துப் பார்க்கட்டும். அப்போது மற்ற மதங்களின் புரோகிதர்கள் அவர்களை நம்பியவர்களை கோணல் வழிகளில் அழைத்துச் செல்வது போல், இவர்களும் தங்களை நம்பி தங்கள் பின்னால் வரும் முஸ்லிம்களை கோணல் வழிகளில் அழைத்துச் செல்வதை அவர்களே புரிந்து கொள்ள முடியும்.

அதேசமயம் அல்லாஹ் அல்குர்ஆன் 2:41,42,44, 75,79, 109,146, 6:20 போன்ற பல இடங்களில் கூறி இருப்பது போல் யூத, கிறித்தவ புரோகிதர்களைப் போல் முஸ்லிம் புரோகிதர்களும் நேர்வழியை-சத்தியத்தை நன்கு அறிந்த நிலையில்தான் அல்லாஹ் 2:159ல் கூறி இருப்பது போல் சத்தியத்தை-நேர் வழியை மறைக்கிறார்கள்.

ஒவ்வொரு நபியுடைய காலத்திலும் அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள், மக்களை எதிர்க்கத் தூண்டியவர்களை தீனை-மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டு கூலிக்கு மாரடிக்கும் புரோகிதர்களே. அப்புரோகிதர்களின் மாய, சூன்ய, வசீகரப் பிடியிலிருந்து விடுபட்டவர்களே நபிமார்கள் போதித்த நேர்வழிப்படி நடக்க முன் வந்தார்கள். இது தெளிவான வரலாறு. மதப் புரோகிதர்களை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்கிறவர்கள் இன்றும் பெருத்த வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். இதே நிலைதான் முஸ்லிம் புரோகிதர்களை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்பவர்களின் நிலையும். முஸ்லிம் புரோகிதர்கள் ஒருபோதும் மக்களுக்கு சத்தியத்தை-நேர்வழியை எடுத்துச் சொல்லமாட்டார்கள் என்பதற்கு எண் ணற்ற அல்குர்ஆன் வசனங்கள் இருக்கும் நிலையில் அவர்கள் 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு அடி பணிவார்களா?

இந்த நிலையில் அப்புரோகிதர்களைக் கொண்டு முஸ்லிம் சமுதாய ஒற்றுமை சாத்தியமாகுமா? ஒருபோதும் சாத்தியமில்லை. எனவே “தீனை நிலைநாட்டுங்கள்; அதில் பிரிந்து விடாதீர்கள்” என்ற முழக்கம் மேடை முழக்கமாக மட்டுமே இருக்க முடியும்; நடைமுறையில் வராது. மக்களை அழகிய முறையில் அழையுங்கள் என அழகாக மேடையில் பேசப்பட்டது. முஸ்லிம்களுக்கு குஃப்ர் ஃபத்வா கொடுப்பது அழகிய முறையில் அழைப்பதாகுமா? இன்றுள்ள பெரும்பாலான மேடைப் பேச்சாளர்கள் அல்குர்ஆன் 2:44 கூறுவது போல் தங்களை மறந்து ஊருக்கு உபதேசம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

அல்குர்ஆன் அரபி கற்ற புரோகிதர்களுக்கு மட்டுமே விளங்கும்; மற்றவர்களுக்கு விளங்காது என்றும், அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் இப்புரோகிதர்கள் வஞ்சனையாகப் பேசுவதால்தான், அல்குர்ஆன் குறிப்பிட்ட முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் தான், அதிலும் குறிப்பாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்ற தவறான சிந்தனை முஸ்லிம்களிடமும், பிற மக்களிடமும் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா?

குர்ஆன், நபிவழி ஆதாரங்கள் மிகமிகத் தெளிவாக இருக்கும் நிலையில், சின்ன சின்ன விஷயங்களை விவகாரமாக்கி மோதிக் கொள்கிறார்கள் என்றால் அதற்குப் பிரதான காரணம், தங்களின் பிளவு பிரிவு இயக்கங்களை நிலைநாட்ட வேண்டும் என்ற கெட்ட நோக்கமே. அடிப்படைக் கோளாறு 21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு முரணாகப் பல இயக்கங்களாக பிரிந்து கிடப்பதே. தங்கள் இயக்கங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற தீய நோக்கிலேயே இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஸ் களைக் கொண்டு சச்சரவிட்டு, கருத்து வேறுபாடு கொண்டு பிளவு படுகின்றனர்.

இதற்கு உதாரணமாக ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தையே சொல்ல முடியும். தொப்புளுக்கு கீழ் தொழுகையில் கைகட்டுவது அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் கூஃபி என்ற பொய்யன் இட்டுக்கட்டிய ஒரு பொய்யான ஹதீஸ் என்பது அந்த இயக்கத்திலுள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். ஹனஃபிகளின் ஆதரவை இழந்து தங்கள் இயக்கம் பலவீனப்பட்டுப் போய்விடக் கூடாது என்றே அறிந்த நிலையில் அந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை நடைமுறைப்படுத்துகின்றனர்.

அதேபோல் அல்குர்ஆன் 7:55ல் துஆ பிரார்த்தனை பணிவாகவும் அந்தரங்கமாகவும் இருக்க வேண்டும்; வரம்பு மீறக் கூடாது என அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் கட்டளை தெளிவாக, நேரடியாக இருந்தும் அதை மீறி சப்தமாக கூட்டு துஆ எப்படிச் செய்கிறார்கள்? பெரும்பான்மை மக்களின் ஆதரவை தங்கள் இயக்கம் இழந்து விடக்கூடாது என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா? தங்களின் இப்படிப்பட்ட தவறுகளை நியாயப்படுத்தவே சின்ன சின்ன விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது என்ற வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

மார்க்கம் என்ன சொல்கிறது? சின்ன விஷயங்களுக்கு அதற்குரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். பெரிய விஷயங்களுக்கு அதற்குரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். தூங்கும்போது ஓத வேண்டிய சுன்னத்தான ஒரு துஆவில் நபி(ஸல்) அவர்கள் “பிநபிய்யிக்க” என்று கற்றுக் கொடுத்த இடத்தில் நபிதோழர் “பிரசூலிக்க’ என்று மாற்றிச் சொன்னதையே நபி (ஸல்) கண்டித்துத் திருத்தினார்கள் என்பதை அறிகிறோம். குர்ஆனிலும், நபிவழியிலும் இருப்பதை அப்படியே எடுத்து நடக்க வேண்டுமே அல்லாது தங்களின் பிரிவு இயக்கத்தை நிலைநாட்ட அல்குர்ஆனில் சுயவிளக்கங்களைப் புகுத்துவதும், பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களை வைத்து முரண்டு பிடிப்பதுமே சமுதாயப் பிளவுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

இந்த இயக்கத்தினர் தங்களின் இயக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதற்கு அவர்கள் மாநாட்டில் வெளியிட்ட சிறப்பு மலர் பக்கம் 150ல் அவர்களின் மேடையில் பேச அனுமதிக்கப்படுகிறவர்களிடம்  4 தகுதிகள் இருக்கின்றனவா என்று உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த நான்கில் முதலாவது உரையாற்றும்போது ஜமாஅத்தை சரியான முறையில் அறிமுகம் செய்ய உங்களால் இயலுமா? என்று கேட்டு அந்தத் தகுதி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக எழுதியுள்ளனர். எந்த ஜமாஅத்தை? 1941-கற்பனை செய்யப்பட்ட ஜமாஅத்தையா? அல்லது 1431 வருடங்களுக்கு முன்னர் நபி(ஸல்) முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்ற ஜமாஅத்தையா? இல்லை! 1941ல் கற்பனை செய்யப்பட்ட ஜமாஅத்தை அறிமுகம் செய்து அதை வளர்க்கவே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறதா? இல்லையா? தீன் நம்பிக்கைச் சார்ந்தது மட்டுமல்ல; மேடைகளில் பேசுவது மட்டுமல்ல; செயலில் நிலை நாட்ட வேண்டும் என்று மாநாட்டு மேடையில் பேசப்பட்டது. அதையே நாமும் வற்புறுத்துகிறோம்.

அன்று வெற்றி கிடைத்தால் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினார்கள். இன்றைய பிரிவு இயக்கத்தினரோ தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள். இஸ்லாத்தை விட அவர்களின் இயக்கமே அவர்களுக்கு அதி முக்கியத்துவமாகத் தெரிகிறது. முஸ்லிம் அல்லாத அனைத்து சமூகங்களும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் என்ன? முஸ்லிம் சமுதாயம் பல பிளவுகளில் சிதறிக்கிடப்பது காரணமில்லையா?

அல்லாஹ்வின் கை ஜமாஅத்தின் மீது இருக்கின்றது என்றால் அது எந்த ஜமாஅத்? நபி (ஸல்) நடைமுறைப்படுத்தி விட்டுச் சென்ற ஜமாஅத்தா? அவர்களின் மறைவுக்குப் பிறகு இவர்களாகக் கற்பனை செய்து உருவாக்கிக்கொண்ட ஜமா அத்தா? அப்படி எண்ணற்ற ஜமாஅத்துகள் இருக்கின்றனவே! இவற்றில் எந்த ஜமாஅத்தின் மீது அல்லாஹ்வின் கை இருக்கும்? சிந்திக்க வேண்டாமா?

தனித்தனி அமைப்புகள் காண்பது வகுப்புவாதமே! எண்ணிக்கையைப் பெருக்குவது தாவா அல்ல; சத்தியத்தைத் துணிந்து எடுத்துச் சொல்வதே தாவா. (பார்க்க அல்குர்ஆன் 5:67) தனித்தனி இயக்கங்களை நிலைநாட்ட செய்யப்படும் தவறுகளை நியாயப்படுத்தி நேர்வழியில் இல்லாத மக்களை மயக்கும் நிலையில் பேச முடியும். நமது தந்தை ஆதம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையை விட ஷைத்தானின் மயக்கும் அறிவுரைதானே அழகாகவும், சரியாகவும் தெரிந்தது. அவரது சந்ததிகளான நாம் ஷைத்தானின் தோழர்களின் மயக்கும் பேச்சில் கட்டுண்டு கிடப்பது ஆச்சரியமா? மலர் பக்கம். 26 மெளதூதியைப் போன்ற திறமையான ஒரு சீர்திருத்தவாதியின் உரத்த குரல், சமுதாயத் தலைவர்களுக்கு முன் ஒரு காட்டுக் கூச்சலாகவே தென்பட்டது. இனவாத உணர்வுகளின் காரணமாக மெளதூதி எடுத்து வைத்த கொள்கை விளக்கம் அவர்களுக்கு உரைக்கவில்லை. இது அன்று மட்டுமா? இன்றும் அதே நிலை தான்.

குர்ஆன், நபிவழிக் கருத்துகளை முஸ்லிம்களில் அதிகமானோர் இனவாதம் காரணமாக ஏற்பதாக இல்லை. பக்கம் 24. இறைக்கட்டளைக்கு எதிரான எல்லாச் சட்டங்களும், சடங்குகளும், நடைமுறைகளும் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவையே. மேலும் பக்.33லிருந்து 38 வரையுள்ள மெளதூதியின் ”முழுமையான மார்க்கக் கண்ணோட்டம்” பலமுறைப் படித்து உணர்ந்து அதில் நிலைத்திருக்கிறோமா என மாநாடு நடத்தியவர்கள் சிந்தித்துணர கடமைப் பட்டிருக்கிறார்கள்.
பக்கம் 45. இஸ்லாத்தில் நபி(ஸல்) அவர்கள் தவிர வேறு எவருக்கும் மார்க்க ரீதியான அதிகாரபூர்வமான அந்தஸ்து இல்லை. மத்ஹபுகள், இயக்கங்கள், ஸலஃபி மார்க்கமாகுமா? பக்கம் 65. ஒரு கம்யூனிஸ்ட், ஒரு சோ­லிஸ்ட், ஒரு தேசியவாதி, ஒரு நாத்திகர் போன்றவர்கள் தம் கொள்கைகளை எவ்வித குற்ற உணர்வுமின்றி சற்றும் தயங்காமல் வெளிப்படையாக எடுத்துரைக்கின்றனர் எனில் ஒரு முஸ்லிம் சத்தியத்தின் அழைப்பைச் சமர்ப்பிக்க வெட்கப்படுவதும், தயங்குவதும், அதற்குச் சூழ்நிலையைக் காரணம் காட்டுவதும் மிக வியப்புக்குரிய ஒன்றாகும்.

ஆம்! அசத்திய கோணல் வழி முயற்சிகள் அனைத்திற்கும் ஷைத்தான் உறுதுணையாக இருந்து உற்சாகமூட்டுவதால் அவர்கள் எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுகிறார்கள். அதற்கு மாறாக சத்திய நேர்வழி முயற்சிக்கு ஷைத்தான் தனது அனைத்துப் படைகளையும் கொண்டு முட்டுக் கட்டை போடுவதால் முஸ்லிம்களுக்கு வெட்கம், தயக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டல் இவை அனைத்தும் ஏற்படுகின்றன. ஷைத்தானையும், அவனது படைகளையும் முறியடித்து 5:67ல் அல்லாஹ் சொல்வது போல், மக்களில் யாருக்கும் அஞ்சாமல் சத்தியத்தை எடுத்துச் சொல்பவர்களே உண்மையான தாவா பணி செய்கிறவர்கள். சூழ் நிலையைக் காரணம் காட்டி சத்தியத்தைச் சொல்லத் தயங்குகிறவர்கள் தாவா பணியைச் செய்யவில்லை. இதை ஜமாஅத்தே இஸ்லாமி அன்பர்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல விஷயங்களில் மக்களுக்கு அஞ்சி, குழப்பம் ஏற்படுகிறது என இவர்களாக கற்பனை செய்து கொண்டு சத்தியத்தை மூடி மறைக்கிறார்கள். அவற்றில் ஒன்று ஆங்கில மாதத்தின் முதல் தேதி போல், ஒரு கிழமை போல், வெள்ளி ஜும்ஆ போல் சந்திர மாதத்தின் முதல் தேதி அதாவது முதல் பிறை 24 மணி நேரம் மட்டுமே இருக்கும். இரண்டு நாள், மூன்று நாள் ஒருபோதும் வராது என்ற உண்மை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், தங்களின் இயக்கத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி, குழப்பம் ஏற்படும் என நொண்டிக் காரணம் சொல்லி சத்தியத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சத்தியத்தைச் சொல்வதால் குழப்பம் ஏற்படும்; குழப்பம் கொலையை விட கொடியது என்று சொல்லி 2:191 இறைவாக்கைப் படித்துக் காட்டுவதை விட ஒரு பெரிய மோசடி பிரிதொன்று இருக்க முடியாது. ஓரிறைவனுக்கு மட்டுமே அடி பணிய வேண்டும்; அல்லாஹ்வுக்கு அடியானுக்கு மிடையில் இடைத்தரகர் இல்லை என்று நபி (ஸல்) சத்தியத்தைச் சொன்னபோது ஏற்பட்ட குழப்பத்தை விட பெரியதொரு குழப்பம் ஏற்பட்ட வரலாற்றை யாரும் காட்ட முடியுமா? அன்று நபி(ஸல்) அவர்களுடைய சத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட குழப்பங்களோடு இவர்கள் சொல்லும் குழப்பம், குழப்பமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

2:191 எதைக் குழப்பம் கொலையை விட கொடியது என்கிறது? சத்தியத்தை அழித்து அசத்தியத்தை நிலை நாட்டப் போராடுகிறார்களே அது தான் குழப்பம்; குழப்பம் கொலையை விட கொடியது என்கிறது. இந்த உண்மையை 2:190லிருந்து 193 வரை படித்து விளங்குகிறவர்கள் உணர முடியும். “ஃபித்னா (குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்” என்ற 2:193 இறைவாக்கு இந்த உண்மையை குன்றிலிட்ட தீபமாக விளக்குகிறது.

சத்தியத்தை நிலைநாட்ட சத்தியத்தை எதிர்ப்பவர்களுடன் கடுமையாகப் போராடுங்கள் என்றே அல்லாஹ் கட்டளையிடுகிறான். இவர்களோ அதற்கு மாறாகக் கூறுகிறார்கள். அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்ற சத்தியத்தைச் சொல்வதால் குழப்பம் ஏற்படுகிறது; குழப்பம் கொலையை விட கொடியது எனக் க

Previous post:

Next post: