அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…
BLACK HOLE – கருந்துளை மர்மங்கள்
S.ஹலரத் அலி, ஜித்தா
அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.
மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புக்கள் மீது சத்தியமிட்டு சொல்கிறான். படைப்புக்கள் மீது சத்தியம் செய்யும் வசனங்களை குர்ஆனில் பரவ லாகக் காணலாம். உதாரணமாக, காலத்தின் மீது சத்தியமாக 103:1 இரவு, பகல் மீது சத்தியமாக 92:1 வானத்தின் மீது 86:1 மறுமை நாள் மீது 75:1 என்று பல்வேறு இடங்களில் தன் படைப்புகளின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் சத்தியங்களிலேயே மிக மகத்தான சத்தியமாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறான்.
நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கின்றோம். (உங்களுக்கு) அறிவிருந்தால் இது ஒரு மகத்தான சத்தியம் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.அல்குர்ஆன் 56:75, 76
“”(ஒளி இழந்து) விழுந்து மறையும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!” அல்குர்ஆன் 53:1
“”நிச்சயமாக நாம் தாழ்வாக உள்ள வானத்தைச் சுடரிடும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்துள்ளோம்” என்று 37:6ல் அல்லாஹ் கூறுகிறான். இரவில் வானத்தைப் பார்த்தால் கோடானு கோடி நட்சத்திரங்கள் நம்மை பார்த்து கண்சிமிட்டுகின்றன. இதற்குக் காரணம் நட்சத்திரங்களில் ஏற்படும் அணுப் பிளவின் காரணமாக வெப்பமும் ஒளியும் உண் டாகிறது. நமது சூரியனும் ஒரு சிறிய நட்சத்திரமாகும். நமது சூரியனை விட கோடானு கோடி மடங்கு மிகப் பிரமாண்டமான நட்சத் திரங்கள் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி அதிகரிக்கும்; அத்துடன் அதன் உள் ஈர்ப்பு விசை ஆற்றல் பன்மடங்காக பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அழிந்து மறையும் நட்சத்திரம் கருந்துளையாக மாறுகிறது.
கருந்துளை எனும் மர்மக் குகை:
20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகள் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருந்துளைகள், மிகப் பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்கு கன அளவோ மேற் பரப்போ கிடையாது. கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது.
கருந்துளையின் எல்லைக்குச் செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. இவற்றின் ஈர்ப்பு ஆற்றலைக் கணக்கிட ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
பொதுவாக நமது பூமிக்கும் புவியீர்ப்பு ஆற்றல் உள்ளது. எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். இந்த புவியீர்ப்பு விசையை மீறிச் செல்ல வேண்டுமாயின் ஒரு வினாடிக்கு 11 கிலோ மீட்டர் வேகம் வேண்டும். (மணிக்கு 40,000வது-24000 மைல்) பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் செயற்கை கோள் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11வது வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகம்தான். ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் (3,00000km) செல்கிறது. நமது கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் 1,86000 மைல்/ வினாடியில் உள்ளது. எனவே கருந்துளைக்குள் செல்லும் ஒளி மீண்டு வருவதில்லை. கருந் துளை எனும் குகைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் புரியாத புதிர். நட்சத்திரங்கள் மறைந்து அழிந்து தோன்றும் கருந்துளையின் மீது அல்லாஹ் மகத்தான சத்தியம் செய்வதிலிருந்து இதன் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம்.
கடந்த 2008 மார்ச் 18ல், நமது பிரபஞ்சத்திலேயே மிகப் பிரமாண்டமான “”கலாக்ஸி கிளாசிக்” (Galaxy Classic)) எனும் கருந்துளையை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.
இந்த கருந்துளையின் பரிமாணம் மிகப் பிரமாண்டமானது. நமது சூரியன் விட்டம் 1,39,0000 வது. இதைவிட 1800 கோடி மடங்கு மிகப் பெரியது. நமது பூமியில் இருந்து 3.5 பில்லியன் அதாவது 350 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது, ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் தூரம் செல்லும் இந்த வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அதுவே ஒரு ஒளி ஆண்டு தூரம். சொற்ப அறிவு கொடுக்கப்பட்ட நமக்கு இதன் பிரமாண்டம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்று.
கருந்துளைகளை நம் கண்களால் காண முடியாது என்றாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon)அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.
வானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் ஏராளமான கருந்துளை உள்ளன. மற்ற நட்சத்திரங்கள், அல் லாஹ் கூறும் (கியாமத் நாள்) இறுதி நாளில் ஒளி இழந்து உதிரும். நமது சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே. அல்லாஹ் அறிந்தவன்!
“”நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது, மேலும் வானம் பிளக்கப்படும் போது, அன்றியும் மலைகள் (தூசுகளைப் போல்) பறக்கப் படும்போது” 77:8,9 (அந்நாளில்) சந்திரன் ஒளி மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும். அல்குர்ஆன் 75:4,9