அல்லாஹ்வின்மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) : ஹாகிம்
நபி(ஸல்) அவர்கள் ஒரு நேரான கோடு கிழித்து இதுவே இறைவனின் நேரான ஒரே வழியாகும் என்றார்கள். பின்பு அக்கோட்டின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் பல கோடுகள் கிழித்துவிட்டு “இவை பல வழிகளாகும். இவ்வனைத்து வழிகளிலும் ஷைத்தான் (இருந்து கொண்டு மக்களைத்) தன்பால் அழைப்பான்” என்று கூறிவிட்டு “நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்” ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்துவிடும். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றி பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான் என்று கூறி (6:153) என்ற வசனத்தையும் ஓதினார்கள்.
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (6:153)
அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) : அஹ்மது, நஸயீ, தாரமி”ஒருவன் நெருப்பு மூட்டுகிறான். அது சுற்றுப் புறங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. ஈசல்களும் வண்டுகளும் அந்நெருப்பில் விழ முனைகின்றன. இவனோ அவற்றை (நெருப்பில் விழாமல்) தடுத்துக் கொண்டிருக்கின்றான். எனினும் அவை அவனையும் மீறி நெருப்பில் விழுகின்றன. இம்மனிதன் எனக்கு உவமையாவான். நான் உங்களின் மடியைப் பிடித்து உங்களை நரகிற்குச் செல்ல விடாமல் தடுக்கிறேன். எனினும் நீங்கள் (எனது கட்டளைகளை மீறி) அதன் பக்கம் விழப்பார்க்கிறீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி) : புகாரி
ஒரு நாள் நடுப்பகலில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது இரு நபர்கள் ஓர் இறைவசனத்தின் கருத்து வேறுபாடு பற்றி மிகவும் சப்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோபமுகத்தோடு வெளிப்பட்ட நபி(ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் இறைவேதத்தில் கருத்துவேறுபாடு கொண்டதனால் தான் அழிக்கப்பட்டார்கள்” என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) : முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்து விட்டு அதைச் செய்யாமல் விட்டு விடவும் செய்யலாம் என அனுமதியும் அளித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அச்செயலை முழுமையாகவே விட்டு விட்டனர் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் பிரசங்கம் செய்யலானார்கள். அதில் இறைவனைப் புகழ்ந்து விட்டு “இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நிகழ்ந்து விட்டது! நான் செய்த செயலை விட்டும் முழுமையாகவே நீங்கி விட்டார்களே? அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களைவிட நானே இறைவனைப் பற்றி அதிகம் அறிந்தவனும் அவனுக்கு மிகவும் பயப்படுபவனுமாவேன்” என்று கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது நிலத்தில் விழுந்த பெரும் மழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர். (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர். விவசாயம் செய்தனர்.
அந்த பெருமழை இன்னொரு வகை நிலத்தில் விழுந்தது. அது(ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகள் முளைக்கவிடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதரை ஏறிட்டுப் பார்க்காமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவருக்கும் உவமையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூமூஸா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நிச்சயமாக பேச்சுகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நோவழியில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழியாகும். நிச்சயமாக மார்க்க விஷயங்களில் தீமையானது அவற்றில் புதிது புதிதாக உண்டாக்கப்பட்ட நவீன அனுஷ்டானங்களாகும். ஒவ்வொரு நவீன அனுஷ்டானங்களும் “வழிகேடாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஜாபிர்(ரலி) : முஸ்லிம், நஸயீ