அபூஅல்-உம்ரா – ஓமன்
..அழைப்பீராக! என்று வல்ல ரஹ்மான் இந்த உலகத்தின் அருள்கொடை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து-சத்திய நெறிநூல் வழியாக என்ன சொல்கிறான் என்பதை கவனிப்போம், படிப்போம், இன்ஷா அல்லாஹ் செயல் படுவோம்.
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِه ِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
(நபியே! மக்களை) விவேகத்தைத் கொண்டும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் உம்முடைய இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! இன்னும் எது மிக அழகானதோ, அதன் மூலம் அவர்களிடம் தர்க்கம் செய்வீராக! நிச்சயமாக உம்முடைய இறைவன், அவனுடைய வழியை விட்டும் தவறியவரை மிக்க அறிந்தவன்; இன்னும் அவன் நேர்வழியில் செல்பவர்களையும் மிக்க அறிந்தவன். (அல்குர்ஆன்-16:125)
மக்களை அல்லாஹ்வின் பக்கமும், அவனின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பக்கமும் (அதாவது சத்திய இஸ்லாத்தின் பக்கம்) அழைத்து கொண்டே இருப்பது முஸ்லிம்களாகிய நம்மீது கட்டாயக் கடமையாகும் என்பதை மேலே உள்ள சத்திய நெறிநூலின் வார்த்தைகளில் இருந்து அறிய முடிகிறது. இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் விட்டுச் சென்ற அழைப்புப் பணியை, முஸ்லிம்களாகிய நாம் செய்தே ஆக வேண்டும் என்பதில்தான் பலவிதமான கருத்து மோதல்கள்.
இந்த மனித கற்பனையால் உருவான இயக்கங்களே கருத்து மோதல்கள் வர முழுக்க முழுக்க காரணம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லவே இல்லை என்று உரத்துச் சொல்லலாம். விபரம் தெரிந்த மாற்று மத சகோதரர்களை சந்திக்க நாம் அழைப்பு பணிக்காக செல்லும்போது அவர்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும், நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அனுபவபூர்வமான ஒரு செய்தியை நான் இங்கு எழுத விரும்புகிறேன்.
அதாவது கடந்த வருடம் (2006) ரமழான் மாதம் வருவதற்கு முந்திய இரண்டு மாதங்களுக்கு முன் என்று கருதுகிறேன். எனது ஊர் நெல்லை ஏர்வாடியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் உள்ள கள்ளிக்குளம் என்ற ஊருக்கு ஒரு கிருஸ்துவ பெந்தகோஸ்த் பாதிரியாரை சந்திப்பதற்காக, அதாவது சத்திய இஸ்லாத்தை எத்திவைக்கும் நோக்கத்தில், மூன்று சகோதரர்களுடன் சென்று இருந்தோம்.
பாதிரியார் எங்களை நல்லபடியாக உபசரித்து அமர வைத்தார். அமர்ந்தவுடன் அவருடைய முதல் கேள்வியே நீங்கள் எந்த அமைப்பு சார்பாக வந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அவரின் அந்த கேள்வி JAQH அமைப்பை ஆதரிக்கக்கூடிய இரண்டு சகோதரர்களை மட்டுமா பதம் பார்த்தது, எங்களின் உள்ளங்களையும் சேர்த்தே பதம் பார்த்தது.
பின்னர் நான்கு பேருமே நாங்கள் முஸ்லிமாகவே வந்து இருக்கிறோம் என்று சொன்னாலும், பாதிரி டக் என்று இல்லை நீங்கள் தவ்ஹீதா? த.மு.மு.காவா? T.N.T.J.யா? என்று கேட்டார். மீண்டும் நாங்கள் எந்த அமைப்பின் சார்பிலும் வரவில்லை, முஸ்லிமாகவே வந்து உள்ளோம் என்று சொன்ன போதிலும் பாதிரி உடன் சொன்னார், இப்படித்தான் சொல்வீர்கள். ஆனால் எதாவது ஒரு அமைப்பில்தான் நீங்கள் இருப்பீர்கள்…. என்று சொல்லி அந்த கிருஸ்தவ சகோதரர் பேச்சை தொடர்ந்தார்.
இந்த பெந்தகோஸ்த் பாதிரியார் நம்மிடம் கேட்ட அந்த கேள்வி ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டிய விசையம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏன் என்றால் பிரசாரபணி புரிகிறவர்கள் மற்றும் மார்க்கப்பணி புரிகிறவர்கள் தங்கள் தங்கள் இயக்க பெயர்களில் செயல்படுவது, அல்லாஹ்வுடைய, அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்கு முற்றிலும் முரணானது. நாம் அல்லாஹ்வுடைய சத்திய நெறிநூல் அல்குர்ஆன் சொன்ன பிரகாரம் நமது பிரசார பணியை செய்தால், இப்படிப்பட்ட கேள்விகளை நிச்சயமாக மாற்றுமத சகோதரர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.
ஏன் என்றால் அல்லாஹ், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்கு நாம் கட்டுப்பட்டால் மட்டுமே நம்முடைய அழைப்புப் பணிகள் லேசாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைவதோடு, வெற்றிப்பணியாகவும் அழைப்புப்பணி அமையும். பிரசாரப் பணி செய்யபவர்கள், மார்க்கப்பணி செய்பவர்கள், தங்களை எப்படி அழைத்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ்வுடைய சத்திய வழிகாட்டல்நூல் என்ன சொல்கிறது என்பதை அறிவுள்ளவர்கள் சிந்திக்கவே செய்வார்கள். அல்லாஹ் சொல்கிறான்.
وَمَنْ أَحْسَنُ قَوْلا ً مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحا ً وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
அல்லாஹ்வின் பாதையில் (மக்களை) அழைத்து நற்செயலும் செய்து நிச்சயமாக நான் முஸலிம்களில் உள்ளவன்’ என்று கூறினானே அந்த ஒருவனைவிடச் சொல்லால் மிக அழகானவன் யார்? (அல்குர்ஆன் 41:33)
பிரசார பணிக்கும், மார்க்கப் பணிக்கும் செல்லக்கூடியவர்கள் தங்களை அல்லாஹ் சொல்லக்கூடிய “தன்னை முஸ்லிம்களில் உள்ளவன்” என்று யார் கூறுகிறார்களோ அந்த ஒருவனைவிடச் சொல்லால் மிக அழகானவன் யார்? என்று சத்திய நெறிநூல் வழியாக அல்லாஹ் நம்மை பார்த்து வினா தொடுப்பதில் பல படிப்பினைகள் உள்ளன. நாம் இந்த ஒரே சமுதாயத்தை கூறு போடாமல், மனித கற்பனையில் உருவான பல இயக்கங்களில் இருந்து செயல்படுவதால்தான் அந்த கிருஸ்தவ சகோதரரான பாதிரியார் இஸ்லாத்தில் இல்லாத பிரிவுப் பெயர்களை தெரிந்து வைத்துக் கொண்டு, நம்முடைய பலகீனத்தை புரிந்து கொண்டு நம்மிடமே வினா தொடுக்கிறார் என்றால் நம்முடைய பலகீனம் எங்கே உள்ளது? அல்லாஹ்வும் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் காட்டிச் சென்ற பிரகாரம் நாம் இஸ்லாம் என்ற மாபெரும் உலகளாவிய அமைப்பான முஸ்லிமீன் என்ற அமைப்பில் மட்டும் இருந்து இருந்தால் இப்படிப்பட்ட வினா?க்கள் நம்மை நோக்கி வருமா? என்பதை மார்க்கப்பணி, பிரசார பணி செய்யக்கூடிய முஸ்லிம் சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
பின்னர் அந்த கிருஸ்தவ பாதிரியார் உடன் அழகிய முறையில் பைபிளின் வசனங்களை வைத்தே சுமார் நான்கு மணி நேரம்-நம்மோடு வந்த சகோதரர்கள் விளக்கம் கொடுத்ததோடு, சத்திய நெறிநூல் திருகுர்ஆன், நபிமொழிகளில் இருந்தும் விளக்கங்களை கொடுத்தோம். ஆனால் பாதிரி குர்ஆனை ஒப்புக்கொள்ளவே இல்லை. அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனின் சத்திய நெறிநூலில் சொல்வதுபோல்
وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلاَ النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ
(நபியே!) யூதர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மைப் பற்றி ஒருபோதும் திருப்தி அடையமாட்டார்கள்…… (அல்குர்ஆன் 2:120)
என்பதுபோலவே அல்லாஹ்வையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஒப்புக்கொள்ளவில்லை.
நாம் கேட்டோம். கர்த்தர் என்றால் யார்? பாதிரி சொன்னார்.
கர்த்தர் என்றால் கர்த்தர், நாம் சொன்னோம், “நீங்கள் சொல்லக்கூடிய கர்த்தர்தான் அல்லாஹ்” என்று சொன்னோம்.
கர்த்தர்தான் அல்லாஹ் என்று நீங்கள் சொல்கிறீர்கள், நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்ன பாதிரியார், பேச்சை தொடர்ந்த போதும், நம்மோடு வந்த சகோதரர்களில் ஒருவர் பைபிள் மற்றும் திருகுர்ஆன் வசனங்களை சொல்லி விளக்கம் கொடுத்த போதும் பாதிரியார் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், அவருடைய உள்ளத்தை அல்லாஹுவே மிக மிக அறிந்தவன். அசத்தியத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் வாதமோ மிக பெரியது. அந்த அளவுக்கு ஷைத்தான் அசத்தியத்தை அழகு படுத்துகிறான்.
ஆனால், இயேசு தான் மனிதர் என்றும், இறைவனின் தூதர் என்றும் கூறினார். நான் கடவுளால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்றும் இறைவனின் அடிமை என்றும் இயேசு கூறினார். இயேசு ஒருபோதும் தன்னை கர்த்தர் என்று கூறியதும் இல்லை; தன்னை வணங்குமாறு சொல்லவும் இல்லை.
உங்களை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான் என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான். (மாத்தேயு : 10:40)
இப்படிப்பட்ட பைபிளின் வசனங்கள் ஏராளமாக இருந்தாலும், இதில் எழுதுவதற்கு சாத்தியமில்லை. காரணம் அதுபற்றி எழுத வேறு ஒரு தலைப்பில் ஆக்கம் தயார் செய்யப்பட வேண்டும். இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு கிடைத்தால் எழுதுவோம்.
மற்றொரு சம்பவத்தையும் இங்கே நான் எழுத விரும்புகிறேன். நான் ஊரில் இருந்து புறப்படுவதற்கு சுமார் 15 தினங்களுக்கு முன் என்று கருதுகிறேன். அழைப்பு பணியில் வேகமாக செயல்படக்கூடிய அந்த சகோதரர் மற்றொரு மாற்று மத சகோதரருடன் நம்மை சந்திக்க வருகிறார். அவருடன் பேச வேண்டும் வாருங்கள் என்று அழைத்தார்.
அந்த நேரத்தில் நான் ஒரு கடையில், அந்த கடையின் சொந்தக்காரர் பக்கத்து ஊருக்கு போய் வருகிறேன், அதுவரை கடையை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு சென்றதால், அந்தக் கடையில் இருந்து என்னால் அந்த சகோதரர் கூப்பிட்ட இடத்திற்கு செல்ல இயலவில்லை. இருந்தாலும் அந்த சகோதரரிடம் இங்கே கூப்பிட்டு வாங்க, நாம் கடையின் உள்பகுதியில் வைத்து பேசுவோம் என்று சொன்னேன். சகோதரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் வைத்து அந்த மாற்று மத சகோதரரிடம் பேசிவிட்டு என்னிடம் வந்தார்.
நான் கேட்டேன், அந்த மாற்றுமத சகோதரரிடம் பேசியாச்சா? பேசிவிட்டோம், அந்த மாற்றுமத சகோதரர் இஸ்லாத்தை தெளிவாகவே புரிந்து வைத்து உள்ளார். ஆனால் அந்த சகோதரர் கேட்ட கேள்விதான் வித்தியாசமானது. அப்படி என்ன கேட்டார்? அந்த மாற்று மத சகோதரரின் முதல் கேள்வியே இஸ்லாம் என்கின்ற பெயரில், பல அமைப்புகளாக, அதாவது சுன்னத்வல்ஜமாத், JAQH,TNTJ என்று செயல்படுகிறீர்களே இதற்கான விளக்கம் வேண்டும் என்று கேட்க, நம்முடைய சகோதரர் விளக்கம் சொல்ல, அதாவது எந்த அமைப்பின் சார்பாகவும் உங்களிடம் பேச வரவில்லை என்று சொல்ல, அந்த மாற்றுமத சகோதரர் ஏற்றுக் கொள்ளவில்லை.
நீங்கள் முதலில் இதற்கு விளக்கம் சொல்லிவிட்டு இஸ்லாத்தை பற்றி சொல்லுங்கள். அதே நேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி நான் தெளிவாகவே புரிந்து வைத்து உள்ளேன் என்று நெத்தியடியாக பதில் சொல்லி விட்டு, அந்த மாற்றுமத சகோதரர் உடனே சென்றுவிட்டார் என்று அந்த சகோதரர் எம்மிடம் சொன்னார். ஒரு சமயம் அந்த மாற்று மத சகோதரர் இஸ்லாம் என்கின்ற பெயரில் பல இயக்கங்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் அமைப்பு ரீதியாக சண்டை போட்டுக் கொள்வதை தெரிந்து வைத்து உள்ளாரோ என்னவோ அல்லாஹ் அறிந்தவன்.
இருந்தாலும் அந்த சகோதரரின் ஆக்கப்பூர்வமான கேள்விக்கு முஸ்லிம்களாகிய நாம், அதாவது கற்பனை இயக்கவாதிகளும், புரோகித மவ்லவிகளும் அவர்களுடைய திறமையான ஷைத்தானிய மொழியில் பதில் சொல்லி மழுப்பி விடுவார்கள். ஆனால் அல்லாஹ்வுக்கு பயந்த உண்மை முஸ்லிம்கள் மழுப்பல் பதில்களை ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பார்த்து அல்லாஹ் சத்திய நெறிநூல் வழியாக நபியே! நீர் மக்களைப் பார்த்து கூறுவீராக!
إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَذِهِ الْبَلْدَةِ الَّذِي حَرَّمَهَا وَلَه ُ كُلُّ شَيْء ٍ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ
“நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் (மக்காவாகிய) இந்த ஊரின் இறைவனை நான் வணங்குவதைத்தான், அவன் எத்தகையவனென்றால், இதை அவன் புனிதமாக்கி வைத்துள்ளான். ஒவ்வொரு பொருளும் அவனுக்கே உரியது; இன்னும் முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக!) (அல்குர்ஆன் : 27:91)
ஆக அல்லாஹ்வின் வழியில் அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லி பிரசாரம் பணி செய்பவர்களே, இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுச்சென்ற புனிதமான அழைப்புப்பணியை செய்தவர்கள் ஆவார்கள்! என்பதை சகோதரர்கள் குர்ஆன், ஹதீதை கொண்டு உணர வேண்டும். மனித கற்பனைகளில் உருவான, சுன்னத்வல் ஜமாத், JAQH, தவ்ஹீத் ஜமாத் TNTJ,மனித நீதி பாசறை மற்றும் இதுபோன்ற அமைப்புகள் சார்பாகவும், தனித் தனி பெயர்களில் செயல்படுவது சத்திய வழிகாட்டல் நூல் 41:33க்கு முற்றிலும் விரோதமானது என்பதை முஸ்லிம் சகோதரர்கள் உணர வேண்டும்.
சத்தியத்தை உணர்ந்து செயல்படவும் வேண்டும். அப்போதுதான் நாம் நமது இலக்கை அல்லாஹ்வின் மாபெரும் உதவியோடு அடைய முடியும், சத்தியம் இதுதான் என்பதை அறிந்த பின்னரும் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் புறக்கணிப்பவர்கள் பற்றி, சத்திய வழிகாட்டல் நூல் என்ன சொல்கிறது என்பதையும், நபிமொழி செய்திப்பேழை என்ன சொல்கிறது என்பதையும், பார்ப்போம்.
لَقَدْ جَاءَكُمْ رَسُول ٌ مِنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوف ٌ رَحِيم ٌ
(மனிதர்களே!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் திட்டமாக வந்துவிட்டார்; நீங்கள் வருத்தப்படுவது அவருக்கு கஷ்டமாயிருக்கும் (நீங்கள் நேர்வழி பெற்று நன்மையடைய வேண்டுமென்று) உங்களின் மீது பேராசை கொண்டவர்(அன்றியும்) (ஓரிறை} நம்பிக்கையாளர்களின் மீது அன்பும் கிருபையும் உள்ளவர். (அல்குர்ஆன்.9:128)
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமுதாயத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் எந்த அளவு கவலைபட்டுள்ளார்கள் என்பதை சத்திய நெறிநூல் வழியாக, இந்த உலக மக்களுக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீனால் அறிவிக்கப்படுவது, உண்மையான நம்பிக்கையாளர்களுக்கும், மனித சமுதாயத்திற்கும் படிப்பினையே.
அறிவுள்ளவர்கள் சத்தியத்தை உணர்ந்து, தெரிந்து, தெளிவு பெறுவார்களா? இந்த உலகத்தின் அருள்கொடை நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நீங்கள் சத்தியத்தை பின்பற்ற வேண்டும் என்பதில் உங்கள்மீது பேராசைக் கொண்டவர் என்ற அல்குர்ஆன் வார்த்தைக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் சொல்லும்போது கூறினார்கள்.
“எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதனின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார்; அவரைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும், இதரப் பூச்சிகளும் அந்த தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத் (தீயில் விழாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். (ஆனால்) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்(தில் விழுவ)திலிருந்து உங்களைத் தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன் (ஆனால்) நீங்களோ(என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்துக் கொண்டிருக்கிறீர்கள்” (நூல் புஹாரீ ஹதீஃத் எண். 6483)
ஆதலால் அல்லாஹ்வின் வழியில், அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியில் அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். மனித கற்பனையில் உருவான எல்லா இயக்கங்களையும் விட்டு, ஒதுங்கிவிடுவார்கள்! வழிகேட்டில் உள்ளவர்கள் மட்டுமே இஸ்லாம் (ஜமாஅத்துல்முஸ்லிமீன்) என்ற உலகளாவிய அமைப்பை புறக்கணித்துவிட்டு தங்கள் தங்கள் தலைவர்களுக்கும் மன இச்சைக்கும் கட்டுப்படுவார்கள். நல் உள்ளம் கொண்ட முஸ்லிம்கள் மேல்கண்ட நபிமொழியை பார்த்து படிப்பினை நிச்சயமாக பெறுவார்கள்.
அல்லாஹ்வும் அவனின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் காட்டித்தந்த சத்தியவழியில் மனத்தூய்மையுடன் அழைப்பும் பணிபுரிபவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ள மாபெரும் அருள்கொடைகளை பெரிதும் விரும்புவார்கள்.
அலீ(ரழி) அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்; “அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதனுக்கு உம்மூலமாக அல்லாஹ்வின் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஓட்டகைகளைவிட மேலானதாகும்” (நூல். புகாரீ)
வழிதவறி திகைத்து நிற்கும் ஒரு மனிதனின் செவியில் “மனித கற்பனையில் உருவான இயக்கங்களை புறம் தள்ளிவிட்டு, அல்லாஹ் அவனின் தூதர் வழியில், சத்திய அழைப்பாளர் ஒரு நல்ல வார்த்தையை போடுவதன் மூலம், அவரது உள்ளத்தில் நேர்வழியின் விளக்கை ஏற்றுகிறார். அப்போது அவர் அரபுகளின் செல்வங்களில் மிக உயரியதாக கருதப்பட்ட செந்நிற ஒட்டகைகள் அவருக்கு கிடைப்பதைவிட பன்மடங்கு அதிகமான நன்மைகளை அடைந்து கொள்கிறார்.
அன்புள்ளம் கொண்ட முஸ்லிம் சகோதரர்களே, சகோதரிகளே பெரியவர்களே, தாய்மார்களே, இயக்கமாயயில் இருந்து விடுபட்டு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டிய சத்திய இஸ்லாத்தில் (ஜமாஅத்துல் முஸ்லிமீனில்) மட்டும் இருந்து, உண்மை முஸ்லிமாக – அல்லாஹ்வின் வழியில் அழைப்பு பணி செய்து அதிக அதிகமான நன்மைகளை அடைந்து கொள்ளுங்கள். அல்லாஹு ரப்புல் ஆலமீன் சத்திய நெறி நூல் வழியாக நபியை பார்த்து,
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدا ً وَمُبَشِّرا ً وَنَذِيرا ً
وَدَاعِيا ً إِلَى اللَّهِ بِإِذْنِه وَسِرَاجا ً مُنِيرا ً
“நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்துள்ளோம்.” இன்னும் அல்லாஹ்வின் பக்கம் (மனிதர்களை) அவன் அனுமதிபடி அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்) (அல்குர்ஆன். 33:45,46)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுச் சென்ற புனிதமான மார்க்க பணியையும், அழைப்புப் பணியையும், இஸ்லாம் என்னும் உலகளாவிய அமைப்பில் முஸ்லிமாக மட்டும் இருந்து செய்வோம், செய்து கொண்டே இருப்போம்.
யா அல்லாஹ்! இந்த மனித சமுதாயத்திற்காக உன்னால் அருளப்பட்ட நீ பொருந்திகொண்ட சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும் இருந்து, உண்மை முஸ்லிமாக அழைப்பு பணி செய்யும் பாக்கியத்தையும் உதவியையும் எங்களுக்கு அளிப்பாயாக! எங்களின் பாதங்களையும் உறுதிபடுத்துவாயாக!
யா அல்லாஹ்! நீ உனது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி மக்களை உன் வழியில் அழைத்தார்களோ, அதுபோல் எங்களையும் ஆக்கி, அவர்கள் விட்டுச்சென்ற பிரச்சாரப் பணியை, முஸ்லிம்களாகிய நாங்களும் தொடர்ந்து செய்து வரும்படியான பெரும் பாக்கியத்தையும், உனது மாபெரும் உதவியையும் எங்களுக்கு தொடர்ந்து செய்தருள்வாயாக! எங்களது இறைவனே! எங்களது இதயத்தை விரிவு படுத்தியருள்! மேலும் எங்களது அழைப்புப் பணியை எங்களுக்கு எளிதாக்கித்தந்தருள்!
உனது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நம்மிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டவாறே பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதரை அல்லாஹ் செழிப்பாக்குவானாக! அதுபோல் எங்களை! செழிப்பாக்கி வைப்பாயாக! ஆமீன்!