ஏப்ரல் 2007 ஏகத்துவம் இதழில், தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் மறு ஆய்வு 2 என்று ஆஸிம்பின் குலைப் இடம் பெறும் சந்தேகத்திற்குரிய ஹதீஸை, தனது வார்த்தை ஜாலங்களைக் கொண்டு தூக்கி நிறுத்தி, தொழுகை இருப்பில் விரலாட்டுவதை நியாயப்படுத்தப்பட்டுள்ளதே? ஏற்றுக் கொள்ளலாமா?
S. அப்துல்லாஹ், திருச்சி A. முஹம்மது அஸ்லம், விழுப்புரம்.
எந்த மத்ஹபினராவது தொழுகையில் அவர்கள் கடைபிடித்து வரும் செயல்களைக் கூறும் ஹதீஸ் பலவீனமானது என உரிய ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியவுடன், அதை ஏற்றுக் கொண்டதாக வரலாறு உண்டா? இல்லையே! உதாரணமாக ஹனஃபி மத்ஹபில் தொப்புளுக்குக் கீழ் கைகளைக் கட்டுவதைக் கூறும் ஹதீஸில், அப்துர்ரஹ்மான் இப்னு இஷ்ஹாக் கூஃபி என்ற படு பொய்யன் இடம் பெற்றுள்ளான் என்று ஆதாரத்துடன் நிரூபித்த பின்னர், ஹனஃபி மத்ஹபினர் தொப்புளுக்குக்கீழ் கைகட்டுவதை விட்டு விட்டனரா? இல்லையே! அதற்கு மாறாக ஹனஃபி மவ்லவிகளின் தொழுகை நூலை படித்துப் பாருங்கள். இந்த பலவீனமான ஹதீஸை எப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்களைக் கொண்டு தூக்கி நிறுத்துகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
அதேபோல் விழுந்து போகும் இந்த விரலாட்டும் ஹதீஸை தூக்கி நிறுத்தி, சுய சிந்தனையை இவரிடம் அடகு வைத்துள்ள அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து, உசுப்பேற்றி தொழுகை இருப்பில், நீரிலிருந்து வெளியே எடுத்துப்போட்ட மீன்கள் துடிப்பது போல், படு வேகமாக விரலை ஆட்ட வைத்து பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி, சண்டை சச்சரவை உண்டாக்கி, அதே வேகத்தில் மஹல்லாக்களில் பிளவை ஏற்படுத்தி, தனிப்பள்ளிகள் கட்டி, தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியவர்கள், தங்களின் ஆதிக்கம் பறிபோன ஊர்களில் மீண்டும் இவர்கள் உண்டாக்கிய ஜமாஅத்துகளிலும் பிளவை உண்டாக்கி, இவர்கள் கட்டிய பள்ளிகளுக்குப் பக்கத்திலேயே போட்டிப் பள்ளிகள் கட்டி, தங்கள் ஆதிக்கத்தையும், தனக்கு ஆமாம்சாமி போடும் புரோகிதர்களுக்கு வாழ்வாதாரத்தையும் ஹராமான வழியில் ஏற்படுத்திக் கெண்டவர்கள், இப்போது, மறு ஆய்வில் விரலசைக்கும் ஹதீஸை தூக்கி நிறுத்தமுடியாது என்று ஒப்புக் கொண்டால், அவர் எத்தனை இடையூறுகளை சந்திக்க நேரிடும்?
எனவே மற்ற மத்ஹபினரைப்போல், இந்த புதிய விரலாட்டி மத்ஹபினரும் சத்தியத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எந்த மத்ஹபையும், இயக்கத்தையும் சாராமல், முஸ்லிம் என்று அல்லாஹ் சூட்டிய பெயரில் (22:78) செயல்படுகிறவர்கள் மட்டுமே, அவர்கள் செயல்படுத்தும் ஹதீஸ் பலவீனமானது என நிரூபிக்கப்பட்டவுடன், அதைத் தூக்கி எறிந்துவிட்டு, ஆதாரபூர்வமான ஹதீஸை எடுத்து நடக்க முன்வருவார்கள். மத்ஹபினரைப் போல் இயக்கத்தினரிடமும் அந்த தூய எண்ணத்தைப் பார்க்க முடியாது. எனவே தங்களின் வார்த்தை ஜாலங்களைக் கொண்டு, அதுவும் கிப்லாவை நோக்கி சமிக்கை செய்தார்கள் (இஷாரா) என்ற ஆதாரபூர்வமான பல ஹதீஸ்களைக் கண்டு கொள்ளாமல் அல்லது அதற்கும் வார்த்தை ஜாலங்களைக் கொண்டு சுய விளக்கம் கொடுத்து, சந்தேகத்திற்குரிய விரலாட்டும் ஹதீஸை தூக்கி நிறுத்துவதில் பிடிவாதமாக இருப்பார்கள் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.
தனது தம்பிமார்களை ஏமாற்ற “அவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணத்துடன்தான் மறு ஆய்வு செய்தோம்” என்று அழகாக மூளைச் சலவையும் செய்துள்ளார்.
“அரபி கற்ற மவ்லவிகளுக்குத்தான் மார்க்கம் சரியாக விளங்கும்” என்று, அவரது பக்தர்களின் மூளையில் குடிக்கொண்டுள்ள மூட நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த “அதை அப்படியே நம்பி(தனது பக்தர்களின் குருட்டு நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்) ‘அரபு மொழி அறிவு தேவையில்லை” என்று பிரச்சாரம் செய்யும், மார்க்க அறிவில்லாத ஒருவரும் இவ்வாறு கூறி வருகின்றார்” என்று கூறி, அசடு வழிவதோடு தான் ஒரு பொய்யன் என்பதையும் நிலைநாட்டுகிறார். 1986 மே அந்நஜாத் இதழில் எம்மோடு வந்து இணைந்த இரண்டாவது மாதத்திலேயே எமக்குத் தெரியாமல், எமது அனுமதி இல்லாமல், அன்று “அறிஞர் அபூ அப்துல்லாஹ்” என்று சுயமாக எழுதியவர், இன்று மார்க்க அறிவில்லாதவர் என்று எழுதினால், இந்த இரண்டில் ஒன்று பொய்யாகத்தானே இருக்க முடியும். அல்லது அன்று எமக்கு ‘ஐஸ்’ வைத்து ஆதாயம் அடைய வஞ்சகப் புகழ்ச்சியாகப் புகழ்ந்திருக்க வேண்டும்.
அடுத்து “அரபு மொழி அறிவு தேவையில்லை” என்று ஒரு போதும் நாம் கூறியதில்லை. இதிலும் அவர் பொய்யரே! அரபு மொழி கற்றவர்கள் மட்டும்தான் மார்க்கத்தை சரியாக விளங்க முடியும் என்ற ஆணவ, அபூ ஜஹீல் வாதம் கூடாது; அரபு மொழி கல்லாதவர்களும் முயன்றால் மார்க்கத்தைச் சரியாக விளங்க முடியும் என்றே கூறி வருகிறோம். கூலிக்காக அரபுமொழி கற்று கூலிக்கு மாரடிக்கும் புரோகிதர்கள், மார்க்கத்தை உள்ளது உள்ளபடி ஒதுபோதும் சொல்லமாட்டார்கள். உண்மையை திரித்து, வளைத்து, மறைத்து எஜமானன் அல்லாஹ் 2:159, 161, 162 இறைவாக்குகளில் கூறி இருப்பது போல் அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரது சாபத்திற்கும் ஆளாகிறார்கள் என்றே கூறி வருகிறோம். இதற்கு விரலாட்டும் இந்த ஹதீஸை தூக்கி நிறுத்த இந்த புரோகித மவ்லவி எடுத்து வைக்கும் வார்த்தை ஜாலங்களே போதிய ஆதாரமாகும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், ஆஸிம்பின் குலைப் என்பவர் பற்றி இவர் எடுத்து வைக்கும் கால்காசு பெறாத வாதமே போதுமானதாகும்; விரலசைக்கும் ஹதீஸ் சந்தேகத்திற்குரியது என்பதை விளங்க. ஹதீஸ் கலாவல்லுநர் இப்னுல் முதைனி, இந்த ஆஸிம்பின்குலைப் நிராகரிக்கப்பட வேண்டியவர்; அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கத்தக்கதல்ல என்றா கூறுகிறார்? அப்படிக் கூறவில்லையே? அப்படிக் கூறினாலாவது அதற்குரிய காரணம் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அவர் இடம்பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று முடிவெடுக்கலாம். ஆனால் அந்த ஹதீஸ் கலாவல்லுநர் மிகத் தெளிவாக, நேரடியாக, ஆஸிம்பின்குலைப் இடம் பெறும் அறிவிப்புத் தொடர் மட்டுமே இடம் பெற்று, வேறு அவர் இடம்பெறாத அறிவிப்புத் தொடர் இல்லை என்றால் அந்த ஹதீஸை எடுத்து நடக்கக் கூடாது என்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறியுள்ளார். அல்குர்ஆனும் சந்தேகமானதை எடுத்து நடக்காதே என்றுதானே கட்டளையிடுகிறது. (பார்க்க 17:36)
இந்த தவ்ஹீத் மவ்லவி உண்மையாளர், நேர்மையாளர் என்றால், ஆஸிம்பின்குலைப் இடம் பெறாத வேறு அறிவிப்புத் தொடரில் விரலாட்டும் ஹதீஸை எடுத்துக் காட்ட வேண்டும். அல்லது குறைந்தபட்சம் வேறு அறிவிப்புத் தொடர் இல்லாத நிலையில், ஆஸிம்பின்குலைப் இடம்பெறும் தொடர் மட்டும் உள்ள வேறொரு ஹதீஸ் புகாரீ போன்ற ஹதீஸ் நூல்களில் இடம் பெற்று, அதை தொழுகை போன்ற முக்கிய கடமைகளில் செயல்படுத்துவதை ஆதாரமாகக் காட்ட வேண்டும். இந்த இரண்டுக்கும் வக்கற்ற நிலையில், வேறு அறிவிப்பு, தொடர்கள் மூலம் நிலைநாட்டப்பட்ட ஹதீஸ்கள் ஆஸிம்பின்குலைப் இடம்பெறும் அறிவிப்புத் தொடர் மூலம் அறிவிக்கப்படுவதும் புகாரீயில் பதிவு செய்யப்பட்டதை எடுத்துக் காட்டுவதை, அவரைப்போல் முர்ஜியா கொள்கை உடையோர் இடம் பெறும் அறிவிப்புத் தொடர்களைக் கொண்ட ஹதீஸ்கள் புகாரீயில் இடம் பெற்றுள்ளதை பக்கம், பக்கமாக எடுத்து எழுதி பக்கங்களை நிரப்பி, அவரின் கண்மூடி பக்தர்களை ஏமாற்றுவதை, கூர்மையான புத்தியும், சுய சிந்தனையும் உடையவர்களும் அறியமாட்டார்கள் என்று இந்த தவ்ஹீத் மவ்லவி பகல் கனவு காண்கிறாரா?
தொழுகையில் நான்கு இடங்களில் கைகளை உயர்த்த வேண்டும்(ரஃபயல்யதைன்) என்ற ஆதாரபூர்வமான ஹதீஸுக்கு முரணாக, ஆரம்ப நிலை தவிர மற்ற மூன்று இடங்களில் கைகளை உயர்த்தக் கூடாது என்ற நிராகரிக்க வேண்டிய ஹதீஸிலும் இதே ஆஸிம்பின்குலைப் இடம் பெறுகிறார் என்பதை எப்படி சப்பைக் கட்டுக்கட்டி தனது பக்தர்களை ஏமாற்றுகிறார் என்று பாருங்கள்.
“ஒரு தடவைதான் கையை உயர்த்த வேண்டும் என்ற ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மையே! நம்மைப்போல் இன்னும் ஏராளமான அறிஞர்களும் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் “ஆஸிம்பின்குலைப் அறிவிக்கிறார்” என்ற காரணத்திற்காக அந்த ஹதீஸை நாம் நிராகரிக்கவில்லை. அதற்கு மாறாக நான்கு இடங்களில் கைகளை உயர்த்தினார்கள் என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் இருப்பதால் இந்த ஹதீஸை நிராகரிக்கிறோம் என்று சப்பை கட்டு கட்டுகிறார்.
இவரது அகராதிப்படி “ஆஸிம்பின்குலைப்” நம்பகமானவராக, அவர் தனித்து அறிவித்தாலும் ஏற்கத்தக்கவராக இருந்தால், ஏராளமான அறிவிப்புகள்படி நான்கு இடங்களிலும் கைகளை உயர்த்தலாம். ஆஸிம்பின்குலைப் அறிவிப்பின்படி ஒரு இடத்தில் மட்டும் கைகளை உயர்த்தலாம். இரண்டுக்கும் ஆதாரம் உண்டு என்றல்லவா சொல்ல வேண்டும். உதாரணமாக இகாமத்து, பாங்கு சொல்வதுபோல் இரண்டு முறை இல்லாமல் ஒருமுறை சொல்வதற்கு பல ஹதீஸ்கள் இருக்கின்றன. பாங்குபோல் இரண்டு முறையும் இகாமத் சொல்லலாம் என்று ஒரு ஹதீஸும் இருக்கிறது. இங்கு பல ஹதீஸுகளுக்கு முரணாக இந்த ஒரு ஹதீஸ் இருக்கிறது. அதனால் அதை நிராகரிக்க வேண்டும் என்று சொல்வதில்லையே!
இகாமத் ஒரு முறை சொல்வது சிறப்பு, இரண்டு முறையும் சொல்ல அனுமதி இருக்கிறது என்றுதானே விளங்குகிறோம். கடைசி இருப்பில் இடது காலை வலது காலுக்குக் கீழ்ப்புறமாக வெளியாக்கி தரையில் அமர்வதற்கு பல ஹதீஸ்கள் இருக்கின்றன. அதற்கு மாறாக இடது காலை வெளியாக்காமல் அதிலேயே அமர்வதற்கும் ஒரு ஹதீஸ் இருக்கிறது. இரண்டு முறையும் செயல்படுத்தப்படுகிறதே! அதேபோல் கைகளை உயர்த்துவதிலும் நான்கு இடங்களில் உயர்த்துவது சிறப்பு; ஒரேயொரு இடத்திலும் உயர்த்த அனுமதி இருக்கிறது என்றுதானே சொல்ல முடியும்.
அதற்கு மாறாக ஒரே இடத்தில் மட்டும் கைகளை உயர்த்தும் ஹதீஸை நிராகரிப்பதின் மர்மம் என்ன? இங்கும் இப்னுல் முதைனி கூறும் ஆஸிம்பின்குலைப் மட்டும் இடம் பெற்று வேறு அறிவிப்புத் தொடர் இல்லை என்றால், அந்த ஹதீஸை எடுத்து நடக்கக் கூடாது; நிராகரிக்க வேண்டும் என்ற சொல்லே நிலை நாட்டப்படுகிறது. அதாவது அவருக்கே முரணான ஒரு வாதத்தை அவரே எடுத்து வைத்துள்ளதை அவரும், அவரது பக்தர்களும் உணராதது ஆச்சரியமே!
இங்கு ஆஸிம்பின்குலைப் இடம்பெறும் ஹதீஸை நிராகரிப்பவர், விரலசைக்கும் ஹதீஸை வம்பாக தூக்கி நிறுத்துவதின் இரகசியத்தை நாம் கூறவா? இவர்களின் புழக்கம் அதிகமாக ஹனஃபி மத்ஹபினரிடையே இருக்கிறது. அவர்களோடு வம்பு வளர்க்க வேண்டும். பள்ளிகளில் சண்டை, சச்சரவு, குழப்பம் ஏற்பட வேண்டும். அதைக் காரணம் காட்டி தனது பக்தர்களுக்கு வெறியேற்றி ஊரைப்பிளவுபடுத்தி தனிப்பள்ளி கட்ட வேண்டும். தங்கள் கட்டுப்பாட்டில் ஒரு கூட்டத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற உலக ஆசையே அல்லாமல் வேறில்லை.
அதனால் கைகளை உயர்த்துவதில் ஹனஃபிகளுக்கு மாறாகச் செயல்பட்டும், விரலசைப்பதில் அவர்களுக்கு மாறாகச் செயல்பட்டும் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்ற தீய நோக்கம் காரணமாகவே, விரலசைப்பதில் ஆஸிம்பின்குலைப் ஏற்கத்தக்கவராகவும், கைகளை உயர்த்துவதில், அதே ஆஸிம்பின்குலைப் நிராகரிக்கத்தக்கவராகவும் ஆகி விடுகிறார். இதேபோல், ஜகாத் வருடா வருடம் கொடுத்த பொருளுக்கும் மீண்டும், மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற விவாதத்திலும், ஆஸிம்பின் லமுரா எனபவரை மற்ற ஹதீஸ்களில் நம்பகமானவராக ஏற்கலாம்; ஆனால் ஜகாத் பற்றிய ஹதீஸில் அவரை நம்பகமானவராக ஏற்கமுடியாது என்று விதண்டாவாதமாக வாதிட்டு அதற்காகவே விவாத நேரத்தின் பெரும்பகுதியை விழுங்கிய இவரின் இரட்டை வேடத்தையும் நாடறியும். மற்றபடி பல அறிவிப்புகளுக்கு முரணாக இருப்பதால் நிராகரிக்கிறோம் என்பது அவரின் வீண் வாதமாகும்.
அவர் உண்மையாளராக இருந்தால், இஷாரா செய்தல், கிப்லாவை நோக்கி இஷாரா செய்தல் அதாவது கிப்லாவைச் சுட்டிக் காட்டுதல் என்று கூறும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிலைநாட்டப்பட்டுள்ள ஹதீஸ்கள் இப்னு உமர்(ரழி) ஜுபைர்(ரழி) போன்ற பிரசித்திபெற்ற நபிதோழர்கள் அறிவித்து முஸ்லிம், நஸயீ, அஹ்மத் போன்ற நூல்களில் காணப்படும் ஆதாரபூர்வமான பல ஹதீஸ்களைப் புறந்தள்ளிவிட்டு, சந்தேகத்திற்குரிய விரலசைக்கும் இந்த ஹதீஸை தூக்கி நிறுத்த இந்த அளவு வம்பாக விதண்டவாதம் செய்யமாட்டார்.
ஆஸிம்பின்குலைப் பற்றி இத்தகைய விமர்சனம் இருக்கும் நிலையில், அவரிடம் கேட்ட மாணவர்கள் சுஃப்யான் இப்னு உயைனா, காலிது இப்னு அப்துல்லாஹ், சுப்யானுத்ஃதவ்ரி, கைசு இப்னு அர்ரபீஉ, ஷுஃபா, அப்துல்லாஹ் இப்னு இத்ரீஸ், ஜுஹைர் இப்னு முஆவியா, அப்துல்வாஹித் இப்னு ஜியாதுல் அப்தீ, அபூஉவானா, பிஷ்ர் இப்னுல் முஃபழ்ல், ஜாயிதா ஆகிய பதினொரு பேரில் ஸாயிதா என்பவர் மட்டுமே விரலசைத்ததைக் கூறுகிறார். எஞ்சியுள்ள பத்துப்பேரில் எட்டுப்பேர் இஷாரா-சமிக்கை செய்தார்கள் என்றும், இருவர் ரஃபஅ-உயர்த்தினார்கள் என்றும் கூறுகின்றனர். உண்மையில் இந்த பத்து நபர்களின் கூற்றுக்கு முரணாக ஸாயிதா என்பவரின் கூற்று இருக்கிறது.
இந்த பத்து நபர்களின் கூற்றை மறுத்து ஸாயிதாவின் கூற்றை தூக்கி நிறுத்தி விரலாட்டுவதை செயல்படுத்த தவ்ஹீத் மவ்லவி எடுத்து வைக்கும் விதண்டாவாதத்தை அப்படியே எடுத்துத் தருகிறோம். சிந்தனையுடன் படியுங்கள்.
ஸாயிதா பற்றிய விமர்சனம்
ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்புபடுத்தி வேறு ஒரு விமர்சனத்தை இலங்கையைச் சேர்ந்த சில மவ்லவிகள் செய்து வருகின்றனர். அவர்கள் செய்யும் விமர்சனம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன், ஹதீஸ் துறை சம்பந்தமான ஒரு விதியைப்புரிந்து கொண்டால் விளங்குவதற்கு எளிதாக இருக்கும்.
ஒரு செய்தியை சலீம் என்பவரிடமிருந்து ஐந்து பேர் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐந்து பேரில் நால்வர் ஒரு விதமாக அறிவிக்கிறார்கள். ஒருவர் மட்டும் அந்தச் செய்தியை அதற்கு முரணாக அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் நால்வர் அறிவிப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நேர்முரணாக அறிவிப்பவர் நம்பகமானவராக இருந்தாலும் இவர் அறிவிப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் அறிவிப்பது ஷாத்-அரிதானது எனக் கூறப்படும். ஏனெனில் ஒருவரிடமிருந்து தவறு ஏற்படுவதைவிட நால்வரிடம் தவறு ஏற்படுவது அரிதாகும். எனவே தங்கள் ஆசிரியர் கூறியதாக ஒருவர் கூறுவதை மறுத்துவிட வேண்டும். விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸில் இந்த அம்சம் உள்ளது என்பதே இவர்களின் விமர்சனம்.
அதாவது நபி(ஸல்) தொழுத முறையை வாயில் பின் ஹுஜ்ர் அறிவிக்கிறார்.
வாயில்பின் ஹுஜ்ர் கூறியதாக குலைப் அறிவிக்கிறார். குலைப் கூறியதாக அவரது மகன் ஆஸிம் அறிவிக்கிறார். ஆஸிம் கூறியதாக
சுப்யான்
காலித்பின் அப்துல்லாஹ்
இப்னு இத்ரீஸ்
ஸாயிதா
ஆகிய நால்வர் அறிவிக்கின்றனர்.
(எஞ்சியுள்ள ஏழு நபர்களை இருட்டடிப்புச் செய்துள்ளார்)
இவர்களில் ஸாயிதா மட்டுமே விரல் அசைத்தலைப் பற்றிக் கூறுகின்றார். மற்ற மூவரின் அறிவிப்பில் விரல் அசைத்ததாகக் கூறவில்லை.
காலித்பின் அப்துல்லாஹ், சுஃப்யான் ஆகியோர் இதைப் பற்றிக் கூறும்போது இஷாரா(சைகை) செய்தார்கள் என்றே கூறுகின்றார்கள்.
இப்னு இத்ரீஸ் அறிவிக்கும்போது ‘விரலை உயர்த்தினார்கள்’ என்று கூறுகின்றார்.
ஆனால் ஸாயிதா மட்டும் விரலை அசைத்ததாகக் கூறுகிறார்
ஆஸிமுடைய நான்கு (உண்மையில் பதினொன்று) மாணவர்களில் மூவர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஸாயிதா அறிவிப்பதால் இது ஷாத் என்ற தரத்திற்கு இறங்கிவிடும். எனவே இது பலவீனமானதாகும் என்பது இவர்களின் விமர்சனம்.
ஹதீஸ் கலையை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டும். மேலோட்டமாக ஆராய்ந்தால் விபரீதமான முடிவுக்குத் தள்ளிவிடும் என்பதற்கு இவர்களின் இந்த விமர்சனம் சான்றாகும்.(இது அரபி மொழி கற்றவர்கள் மட்டுமே மார்க்கத்தை சரியாக விளங்கி, விளக்க முடியும் என்ற மூட நம்பிக்கையில் இருக்கும் அவரின் பக்தர்களை மேலும் மூடர்களாக்க எழுதப்பட்ட வாசகமாகும். அவர் நுணுக்கமாக ஆராய்ந்த லட்சணத்தையும், விபரீதமான முடிவுக்குத் தள்ளப்பட்டவர் யார்? என்பதையும் பின்னர் விளக்குவோம்)
ஒரு ஆசிரியரின் மாணவர்களில் பலர் அறிப்பதற்கு நேர்முரணாக ஒரு சிலர் அறிவிப்பதுதான் ஷாத் ஆகும்.
ஒரு ஆசிரியரின் பல மாணவர்கள் அறிவித்ததைவிட ஒரே ஒருவர் கூடுதலாக அறிவித்தால் அது ஷாத் என்ற தரத்திற்கு இறங்காது. முரணாக அறிவிப்பது வேறு! கூடுதலாக அறிவிப்பது வேறு! இந்த நுணுக்கமான வேறுபாட்டைக் கவகிக்காமல் நுனிப்புல் மேய்வதால் இவ்வாறு வாதிடுகின்றனர். (அவரே நுனிப்புல் மேய்ந்து விட்டு மற்றவர்களை நுனிப்புல் மேய்வதாகக் கூறுகிறார். உண்மையான மற்றவர்களை திருடன், திருடன் என கூறிக்கொண்டு தப்பித்து ஓடுவது போல்) ‘15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார்’ என்று ஐந்து பேர் கூறுகிறார்கள். ‘15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிடவில்லை’ என்று ஒருவர் மட்டும் கூறுகிறார். இவ்விரு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகும். இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். ஒன்று உண்மையானால் மற்றொன்று தானாகவே பொய்யாகி விடும். இதுதான் முரண்பாடு! இவ்வாறு வரும்போது அதிகமானவர்கள் கூறுவதை ஏற்கவேண்டும்.
15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார்’ என்று ஐந்துபேர் கூறுகிறார்கள். ஒருவர் மட்டும் ‘15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் சிக்கன்65 சாப்பிட்டார் என்று கூறுகிறார். இவ்விரு செய்திகளும் முரண்பட்டவை அல்ல. ஒன்றை ஒன்று மறுக்கும் வகையில் இது அமையவில்லை.
கோழிக்கறி என்று பொதுவாகச் சிலர் கூறுகின்றனர். ஒருவர் மட்டும் உன்னிப்பாகக் கவனித்து அந்தக் கோழிக்கறி எந்த வகை என்பதையும் சேர்த்துக் கூறுகிறார். ஒன்றை ஏற்றால் இன்னொன்றை மறுக்கும் நிலை இங்கே ஏற்படாது. சிக்கன்65 சாப்பிட்டதை ஏற்கும்போது கோழிக்கறி சாப்பிட்டதையும் சேர்த்தே ஏற்றுக் கொள்கிறோம்.
மூஸா இறந்துவிட்டார் என்பதும், மூஸா இறக்கவில்லை என்பதும் முரண்!
மூஸா இறந்துவிட்டார் என்பதும், கடலில் மூழ்கி இறந்தார் என்பதும் முரண் அல்ல!
இந்த அடிப்படையில் மேற்கண்ட அறிவிப்பைக் கவனித்தால் ஸாயிதா கூறுவதும், மற்றவர்கள் கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல!
அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் கூறும்போது ‘விரலை உயர்த்தினார்கள்’ என்று மட்டும் கூறுகிறார். ஸாயிதா கூறும்போது ‘விரலை உயர்த்தி அசைத்தார்கள்’ என்று கூறுகிறார். அந்த இரண்டுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.
இதுபோல் சுஃப்யான், காலித் ஆகியோர் அறிவிக்கும்போது ‘இஷாரா செய்தார்கள்’ என்கின்றனர். இவ்விரண்டும் முரண் அல்ல!
இஷாரா என்பது விரிந்த அர்த்தம் கொண்டது. வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைச் சொல்வதே இஷாரா எனப்படும். அசைவுகளைக் கொண்ட இஷாராவும் உள்ளது. அசைவுகள் இல்லாத இஷாராவும் உள்ளது.
ஒருவரை எச்சரிக்கும்போது ஆட்காட்டிவிரலை மேலும் கீழும் அசைத்துக் காட்டுவோம். இதுவும் இஷாராதான். இது அசைவுடன் கூடிய இஷாரா ஆகும்.
சிறுநீர் கழிக்கப் போவதைக் குறிப்பிட ஆட்காட்டிவிரலை அசைக்காமல் நிறுத்திக் காட்டுவோம். இதுவும் இஷாராதான். இது அசைவு இல்லாத இஷாரா ஆகும்.
எனவே இஷாரா என்பதில் அசைத்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. அசைக்காமல் சைகை செய்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு விரிந்த அர்த்தம் உள்ள சொல்லை இவ்விருவரும் பயன்படுத்துகிறார்கள். இவர்களது வார்த்தையிலிருந்து அந்த இஷாரா அசைவுடன் கூடியதா? அசைவு இல்லாததா? என்பது தெளிவில்லை. ஸாயிதா இதைத் தெளிவு படுத்துகிறார். (ஏகத்துவம், ஏப்ரல் 2007 பக்.13-17)
சுற்றி வளைத்து எதை எதையோ எழுதி தனது பக்தர்களை பெரும் சுற்றலில் விட்டுள்ளார். சிலவற்றை தவறாகவும் சொல்லியுள்ளார். சிலவற்றை தவறாகவும் சொல்லியுள்ளார். அவர் உதாரணத்துடன் விளக்கியுள்ளவை அனைத்தும் சரியே! ஆனால் பொருள் செரிந்த சமிக்கை – இஷாராவுக்கு பொருளற்ற வெற்று அசைவு அதிகப்படியான விளக்கம் என்று வாதிடுவதுதான் அறிவீனமாகும். இஷாராவுக்கு அவர் கொடுத்துள்ள சரியான விளக்கத்தைப் பார்க்கும்போது, நன்கு அறிந்த நிலையில்தான் அவர் தனது பக்தர்களை தவறான பாதையில் இட்டுச் செல்கிறார் என்றே விளங்க முடிகிறது. அல்லது பொருளற்ற அசைவான ‘ஹரக்கத்’ என்ற அரபி பதத்திற்கும் பொருள் செரிந்த – அர்த்தம் நிறைந்த சமிக்கை என்ற இஷாரா என்ற அரபி பதத்திற்குமுள்ள வேறுபாடு தெரியாத அறிவிலி என்றே சொல்ல முடியும். இத்தனைக்கும் அவர் தன்னை அரபி மொழி படித்த மேதை என்றுமே பீற்றிக்கொண்டும் எம்மை மார்க்க அறிவில்லாதவர் என்று இகழ்ந்து கொண்டும் மேற்படி மூடத்தனமான ஆய்வை செய்துள்ளார்.
அவர் நிலைநாட்டத் துடிக்கும் விரலசைக்கும் ஹதீஸில் வரும் “யுஹர்ரிக்குஹா யதுவூ பிஹா” என்ற அரபி வார்த்தையில் “போல்” என்பதற்கு அரபி பதம் இல்லை. ஆயினும் “யாரையோ அழைப்பது போல் அசைத்தார்கள்” என்று வலிந்து பொருள் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் “அசைத்து அழைத்தார்கள்” என்றே நேரடி பொருள் கொள்ள முடியும். அதாவது அதே ஏகத்தும் பக்கம் 17-ல் இருப்பில் விரலசைப்பதற்கு சம்பந்தமே இல்லாத (இதை அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்) இப்னு ஹுலைமா பாகம் 2. பக்.351-ல் காணப்படும் ஹதீஸில் நபி(ஸல்) தமது ஆட்காட்டி விரலால் அசைத்து சமிக்கை(இஷாரா) செய்தார்கள்” என்ற பகுதியை மட்டும் மொழி பெயர்த்துப் போட்டிருக்கிறாரே அந்த ஹதீஸில் இஷாரா – சமிக்கைக்குரிய பொருள் இருக்கிறது. இதில் கூட அது பொருளற்ற வெற்று அன்சவுதான் என்று அவர் விதண்டாவாதம் செய்தாலும் ஆச்சரியமில்லை.
தொழுகை இருப்பில் விரலசைப்பது பற்றிய சர்ச்சைக்குரிய ஹதீஸில் இவர்களாக “அழைப்பது போல்” அசைத்தார்கள் என்று பொருள் கொள்ளக் காரணம், அசைத்து அழைத்தார்கள் என்று பொருள் கொண்டால், அங்கு உண்மையிலே அழைக்கும் சம்பவம் இருக்க வேண்டும். தொழுகை இருப்பில் அப்படி யாரையும் அழைக்க முடியாது. அப்படியானால் “அழைப்பது போல்” என்ற அடிப்படையில் மேலும் கீழுமாக பொருளற்ற அசைவாக மட்டுமே அது இருக்க முடியும். இந்தப் பொருளற்ற அசைவான ஹரக்கத்தை, பொருள் நிறைந்த சமிக்கையான இஷாராவோடு சம்பந்தப்படுத்தி வாதிடுவது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது என்று சொல்வார்களே அது போன்றதொரு அறிவீனமான செயலாகும்.
இதை முதல் வகுப்பு மாணவனும் விளங்கும் வகையில் ஒரு உதாரணம் முன்னர் கூறி இருந்தோம். அதை அரபி படித்த மேதையால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதையே மீண்டும் இங்கு தருகிறோம்.
நான்கு வீதிகள் வந்து சேரும் ஒரு சந்திப்பு. அதன் மத்தியில் ஒரு காவலர் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் ஒரு கையை அசைக்காமல் நீட்டி வண்டிகளை போகாமல் நிற்கச் சொல்லியும், இன்னொரு பக்கம் மறு கையை முன்னும் பின்னும் அசைத்தும் அங்குள்ள வண்டிகளைப் போகச் சொல்லியும், சமிக்கை(இஷாரா) செய்து கொண்டிருக்கிறார். இப்படி ஓயாது மாறி மாறி கைகளை அசைத்தும், நீட்டியும் சமிக்கை செய்து போக்குவரத்தைத் திறம்பட ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று பாராட்டுவோம்.
இந்த நிலையில் ஒரு நேரத்தில் எந்தப் பக்கம் இருந்தும் எந்த வண்டியும் வரவில்லை. நான்கு வீதிகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இந்த நிலையில் அந்த காவலருக்கோ சும்மா நிற்க மனம் ஒப்பவில்லை. வண்டிகள் எந்தப் பக்கமிருந்தும் வராத நிலையில், ஒரு கையை அசைத்து(இஷாரா) வண்டியைப் போகச் சொல்கிறார். மற்ற கையை நீட்டி(இஷாரா) வண்டியை நிற்கச் சொல்கிறார். எந்த வண்டியும் வராத நிலையில் அந்தக் காவலர் அப்படி சமிக்கை(இஷாரா) செய்வதைப் பார்க்கும் பொது மக்கள் அவரை மென்ட்டல்-பைத்தியம் என்பார்களா? அல்லது கடமை உணர்வுடன் செயல்படுகிறார் என்று பாராட்டுவார்களா? அறிவில் குறைந்த மூடனும் அவர் மென்ட்டல்-பைத்தியம் என்றே சொல்வான்.
அப்படிப்பட்ட மென்ட்டலான – பைத்தியமான ஒரு செயலை தொழுகை இருப்பில் செய்யச் சொல்லித்தான் தனது பக்தர்களை ஏமாற்றி வருகிறார். நாம் என்னவோ, இஷாரா என்றால் அதில் அசைவே இருக்காது; வெறும் நீட்டுவது மட்டுமே இருக்கும் என்று சொல்வது போல் கற்பனை செய்து கொண்டு, மக்களை சிந்தனையற்ற மூடர்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறார். நாமோ சமிக்கை-இஷாரா என்பது அதில் அசைவு இருந்தாலும், அசைவு இல்லாமல் நீட்டலாக இருந்தாலும், அதில் கண்டிப்பாக ஒரு கருத்து நிலை நாட்டப்படும். பொருளற்ற – கருத்தற்ற ஒரு அசைவோ, ஒரு நீட்டலோ ஒருபோதும் இஷாராவாக – சமிக்கையாக ஆகாது என்றே உறுதிபடக் கூறுகிறோம். எனவே தொழுகை இருப்பில் ஒருவன் விரலை அசைத்தால் அது வெற்று அசைவாக மட்டுமே இருக்கும். அது ஒருபோதும் சமிக்கையாக – இஷாராவாக ஆகாது என்றே உறுதியாகக் கூறுகின்றோம்.
அதற்கு மாறாக தவ்ஹீத் மவ்லவி அது இஷாராதான்; அந்த இஷாரா அசைவாக இருந்தது என்பதைத்தான் இந்த “யுஹர்ரிக்குஹா” என்ற ஹதீஸ் மேல் விளக்கமாகத் தருகிறது என்று அடம் பிடிக்கிறார். அப்படியானால் அந்த இஷாரா – சமிக்கை, அவர் எழுதியுள்ளபடியே யாரையும் எச்சரிப்பதாக பொருள் தருகிறதா? அல்லது இமாமை அழைப்பதாக பொருள் தருகிறதா? அல்லது முன்னால் இருப்பவர்களை அழைப்பதாக பொருள் தருகிறதா? அல்லது கஃபதுல்லாஹ்வை அழைப்பதாக பொருள் தருகிறதா? அல்லது அல்லாஹ்வையே அழைப்பதாக பொருள் தருகிறதா? என்பதை தனது பக்தர்களுக்கு தெளிவாக விளக்கிவிட்டு, தொழுகை இருப்பில் விரலசைக்கச் சொல்லி தனது விதண்டாவாதத்தை நிலை நிறுத்தட்டும்.
அப்படி விளக்காமல், அது அசைவுடைய இஷாராதான்-பொருளற்ற இஷாராதான் என வம்பாக விரலாட்டச் சொன்னால் தனது பக்தர்களை மென்ட்டல்களாக – பைத்தியமாக நடிக்கச் சொல்கிறார் என்பதுதான் அதன் பொருள் ஆகும். கடமையான தொழுகையை பாழாக்கச் சொல்கிறார் என்பதுதான் அதன் பொருள்.
இப்போது சொல்லுங்கள்! ஹதீஸ் கலையை மிகவும் நுணுக்கமாக ஆராயாமல், மேலோட்டமாக ஆராய்ந்தது யார்? நுணுக்கமான வேறுபாட்டைக் கவனிக்காமல் நுனிப்புல் மேய்ந்துள்ளது யார்? விபரீதமான முடிவுக்குத் தள்ளப்பட்டது யார்? தன்னைக் குருட்டுத்தனமாக நம்பியுள்ள பக்தர்களை வழிகேட்டில் இட்டுச் சென்றுள்ளது யார்? அவரே தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளார்.
இப்படி, அவரே கூறியுள்ளபடி விரிந்த பொருளுள்ள சமிக்கை – இஷாராவுக்கும், எவ்வித பொருளுமே இல்லாத வெற்று அசைவு – ஹரக்கத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் தலைவரே தடுமாறுவதால்தான் அவரது சிஷ்யர் அப்துல் ஹமீது என்பவர், முன்னர் ஒரு சமயம், பெரம்பூர் கென்னடி சதுக்கம் பள்ளியில் வைத்து, இந்த விரலாட்டுவது பற்றி விவாதித்தபோது, தனது பேச்சுத்தான் இறுதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு (இப்படி நிபந்தனை இடுவது தலைவரின் வாடிக்கை; அதை அடியொற்றி சிஷ்யரும் நிபந்தனையிட்டார். காரணம் அப்படி அவர்களின் பேச்சுத்தான் இறுதியாக இருக்கும்போது, சுயசிந்தனையற்ற அவர்களின் பக்தர்கள் அவர்களின் அந்த இறுதிப் பேச்சையே வேதவாக்காகக் கொண்டு செயல் படுவார்கள்) துஆ-பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள் என்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக அழைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறி தங்களின் விரலாட்டும் மென்ட்டல் செயலை நிலைநாட்ட முற்பட்டார். அதன் பின்னர் நமக்கு பேசுவதற்கு அவகாசம் கொடுக்கப்படாததால், விளக்கம் கொடுக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
அவர்களது பக்தர்களும் அதையே பெரிய ஆதாரமாகக் கொண்டு விரலாட்டி வருகிறார்கள். அழைத்தார்கள், அழைப்பது போல் அசைத்தார்கள் இவ்விரண்டு சொற்றொடர்களுக்கும் உள்ள வேறுபாடு அரபி பண்டிதரான அவர்களுடைய தலைவருக்கே தெரியாதபோது, அவருடைய சிஷ்யர்களுக்கும், பக்தர்களுக்கும் எங்கே தெரியப்போகிறது? அழைத்துக் கொண்டிந்தார்கள் (இஷாரா) என்றால் உண்மையில் யாரையும் அழைக்கும் நிகழ்வு கண்டிப்பாக இருக்க வேண்டும். மென்ட்டல்தனமாக அழைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அழைப்பதுபோல் அசைத்துக் கொண்டிருந்தார்கள். (யுஹர்ரிக்குஹா எதுவூபிஹா) என்றால், அதில் உண்மையில் யாரையும் அழைக்கும் நிகழ்வு இருக்க வேண்டியதில்லை. அந்த ஹரக்கத்-அசைவு எதுபோல் இருந்தது என்பதைக் காட்டுவதற்காகவே “போல்” என்ற வாசகம் இடம் பெறுகிறது.
மேலும் யாரையோ அழைப்பது போல் அது வெற்று அசைவாக இருந்தால் மட்டுமே, இருப்பில் உட்கார்ந்ததிலிருந்து சலாம் கொடுக்கும் வரை அசைத்துக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி யாரையும் அழைப்பதாக – சமிக்கையாக – இஷாராவாக அது இருந்தால், நிச்சயமாக இருப்பில் அமர்ந்ததிலிருந்து சலாம் கொடுக்கும் வரை நீண்ட நேரம் சமிக்கை – இஷாரா செய்வதும் மென்ட்டல்தனமாகும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சந்தியில் நிற்கும் காவலர் வண்டிகளைப் போகச் சொல்லி சமிக்கை – இஷாரா செய்வது எத்தனை முறை – எவ்வளவு நேரம் என்பதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இந்த உண்மையையும் நேரடியாகக் கண்டு கொள்ள முடியும்.
இஷாரா என்பது விரிந்த அர்த்தம் கொண்டது. வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைச் சொல்வதே இஷாரா எனப்படும்” என்று அதே இதழ் பக்-16-ல் தெளிவாக எழுதியவர், பக்-17-ல் “இஷாரா என்பதில் அசைத்தார்கள் என்ற கருத்தும் உள்ளது; அசைக்காமல் சைகை செய்தார்கள் என்ற கருத்தும் உள்ளது” என்று எழுதி தனது பக்தர்களை ஏமாற்றி இருப்பது அவர் அறிந்து கொண்டு வேண்டுமென்றே செய்த செயலா? அல்லது அவரும் அதை உணராது தடுமாறுகிறாரா? அசைத்து சைகை செய்தார்கள் என்பதை அசைத்தார்கள் என்று எழுதி தனது பக்தர்களை ஏமாற்றி இருக்கிறார்.
“அசைக்காமல் சைகை செய்தார்கள்” என்று எழுதியதில் அசைக்காமல் சைகை – இஷாரா செய்து ஒரு கருத்தை உணர்த்தினார்கள் என்று பொருள் இருக்கிறது. அதற்கு மாறாக “இஷாரா என்பதில் அசைத்தார்கள் என்ற கருத்தும் உள்ளது” என்று எழுதியதன் மூலம் பொருளற்ற வெற்று அசைவையும் இஷாரா என்று கொள்ளலாம் என்று அறிவீனமாக எழுதி இருக்கிறாரே? இவர்தான் அரபி மொழி படித்த மெத்தப் படித்த மேதையா?
மெத்தப் படித்த மேதைகளுக்கு, அபுல் ஹிக்கம் என்ற அபூ ஜஹீலுக்கு இருந்த ஆணவமும், அகங்காரமும் இருப்பதால், சத்தியம்-நேர்வழி அவர்களுக்கு விளங்காமல் இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் அல்ல.
நான்கு மத்ஹபுகளில் ஒன்றான ஹன்பலி மத்ஹபில் இருப்பில் விரலசைப்பது கடந்த ஆயிரம் வருடங்களாக இருக்கிறது. சமீபத்தில் தோன்றிய ‘ஸலஃபி’ மத்ஹபும், ஹன்பலி மத்ஹபைச் சார்ந்து இருப்பதால் அரபு நாடுகளில் பெரும்பாலும் விரலசைக்கும் முறை இருந்து வருகிறது. அரபு நாடுகளில் பணிபுரியும் நம் நாட்டு சகோதரர்களிடமும் விரலசைப்பது தொற்றிக் கொண்டுள்ளது. இது அவர்களின் பிளஸ்பாயின்ட். ஆனால் தெளிவான நிலை இதுதான். ஹரக்கத்-வெற்று அசைவான பொருளற்ற-எதையும் உணர்த்தாத அசைவு என்பது வேறு. இஷாரா-அது அசைவுள்ளதாக இருந்தாலும், அசைவற்றதாக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு கருத்தைத் தெளிவாக – வெளிப்படையாக உணர்த்தும் சமிக்கையாகும். எனவே இஷாராவுக்கு மேலதிக விளக்கமாக ஹரக்கத் இருக்கிறது என்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் ஒரு அறிவீனமான வாதமாகும்.
ஆஸிம்பின்குலைபிடமிருந்து அறிவிக்கும் 11பேர்களில் 8 நபர்கள் கூறும் இஷாராவுக்கு மற்ற 2 பேர்கள் அறிவிக்கும் “ரஃபஅ” என்ற பதம் உயர்த்தி சுட்டிக் காட்டினார்கள் என்ற அடிப்படையில் மேல் விளக்கமாக இருக்கிறது, தனித்து ஸாயிதா அறிவிக்கும் ‘ஹரக்கத்’ என்ற பொருளற்ற எதையும் உணர்த்தாத பதம் 8+2=10 நபர்கள் கூறும் இஷாரா, ரஃபஅ பதங்களுக்கு நேர்முரணான பதம்-கருத்து என்ற உண்மையை அரபி படித்த மவ்லவிகள்தான் மார்க்கத்தைச் சரியா விளக்க முடியும் என்ற மூட நம்பிக்கை இல்லாமல், பக்க சார்பு இல்லாமல், பக்தியோடு கூடிய தனிமனித வழிபாட்டிற்குப் பலியாகாத நேர்வழியாளர்கள் கண்டிப்பாக உணரமுடியும்.