“ஹிஜாப்” -“பர்தா”
அபூ அப்தில்லாஹ்
இஸ்லாம் பெண்களுக்கு “ஹிஜாப்” என்ற பர்தா முறையைக் கடமையாக்கியிருக்கிறது. அதன் மூலம் தங்களின் கற்பைக் காத்துக் கொள்ள ஏவுகிறது.
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முக்காட்டைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள்(யாரென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (33:59)
இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்றும் தெரிய வேண்டியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (24:31)
நபி(ஸல்) அவர்களுடன் ஆயிஸா(ரழி) இருக்கும் போது, அஸ்மா(ரழி) வருகிறார்கள். அப்போது அவர்களது ஆடை மிக மெல்லியதாக (உடல் தெரியும் நிலையில்) இருக்கிறது. அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் யா அஸ்மா ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளுடைய இந்த, இந்த பாகங்களைத் தவிர மற்றவை வெளியே தெரிவது நல்லதல்ல என்று கூறும் போது அவர்களின் முகத்தையும், மணிக்கட்டு வரையிலான கைகளையும் சுட்டிக் காட்டினார்கள்.
ஆயிஸா(ரழி) வாயிலாக, காலித் இப்னு தரீக், அபூதாவூது, அபூஹாத்தம்
மெய்யாகவே அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் முஸ்லிம் பெண்மணிகள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கும் வழிப்பட்டு நடப்பார்கள் என்பதில் ஐயமில்லை. மார்க்கக் கடமைகளில் பகுத்தறிவு ரீதியிலான ஆதாரங்களைத் தேடாமல் அல்குர்ஆனின் கட்டளைக்கு, நபி(ஸல்) அவர்களின் அறிவுரைக்கு அடிபணிவதே ஈமானின் (விசுவாசத்தின்) மிக உன்னத நிலையாகும். பகுத்தறிவு ஒப்புக் கொண்டு ஒன்றைச் செய்வதால் அது முழுக்க அல்லாஹ்வுக்கு வழிபட்டதாக ஆகாது.
இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்லும் இந்த பர்தா முறை மாற்று மதத்தவர்களால் தர்க்கத்திற்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. பெண்களின் உரிமையைப் பறித்து அவர்களை அடிமைகளாக்கும் நடைமுறை, காட்டு மிராண்டிச் செயல் என வர்ணிக்கப்பட்டு வருகிறது. முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்ல, படித்த முஸ்லிம் பெண்களில் சிலரும் இதற்கு அடிமையாகியுள்ளனர். சமீபத்தில் மதுரையில் ஒரு முஸ்லிம் பெண் பேராசிரியை “பர்தா” பற்றி மிக இழிவாகப் பேசி, அதனைத் தூக்கி எறிந்ததாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
இதற்கு அந்த முஸ்லிம் பெண் பேராசிரியையைக் குறை சொல்லிப் பயனில்லை. அவருக்கு முறையான மார்க்கக் கல்வியைப் புகட்டாத அவரது பெற்றோரையும், சமுதாயத் தையும் தான் குறை சொல்ல வேண்டும். “பர்தா’ பற்றி இப்படிப்பட்ட அநாகரீக மான கருத்துகள் பரப்பப்படுவதால், அதன் எதார்த்த நிலையை விளங்கும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இக்கட்டுரையின் முதல் பகுதியில் பர்தாவின் அவசியம் பற்றியும், இரண்டாம் பகுதியில் இன்று முஸ்லிம் பெண்மணிகள் கடைபிடிக்கும் “பர்தா’ முறை பற்றிய உண்மை நிலையையும், மூன்றாம் பகுதியில் எந்த வகையிலெல்லாம் ஆணும், பெண்ணும் சம உரிமை பெற்றுள்ளனர் என்ற விபரங்களையும், நான்காம் பகுதியில் படித்த முஸ்லிம் பெண்மணிகளுக்கு இன்று இஸ்லாத்தின் பெயரால் கடைபிடிக்கப்படும் சடங்கு, சம்பிரதாயங்களில் ஏற்படும் அதிருப்தி பற்றியும் விரிவாக ஆராய்வோம்.
முதல் பகுதி :
உடல் அமைப்பில் ஆண், பெண் சமமா?
பெண்ணை ஆணின் அடிமையாக, போகப் பொருளாக, பிள்ளை பெற்றுத் தரும் இயந்திரமாக, பீடையாக, சகல பாவங்களுக்கும் ஆணிவேராகக் கருதப்பட்ட காலங்கள் போய் இப்போது ஆணுக்குப் பெண் சமம், ஆணுக்குரிய அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்ற முழக்கம் பெரிதாகக் கிளப்பப்படுகிறது. அதே வரிசையில் இன்று ஆண் “பர்தா’ அணிவதில்லையே, பெண்ணை மட்டும் எப்படி “பர்தா’ அணிய வற்புறுத்த லாம்? ஆணுக்கு ஒரு நீதி; பெண்ணுக்கொரு நீதியா? எனவே முஸ்லிம் பெண்களும் “பர்தா’ வை தூக்கி எறிந்துவிட்டு, ஆணைப் போல் சகஜமாக, சர்வசாதாரணமாக நடமாடலாம் என பரவலாகப் பேசப்படுகிறது. அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்வோருக்கும் இது அறிவார்த்தமாகவே படுகிறது. ஆணைப் படைத்த இறைவன் அந்த ஆணிலிருந்து பெண்ணைப் படைத்துள்ளான். உடலமைப்பில் ஆணுக்கென்று சில தன்மைகளைக் கொடுத்துள்ளான்; பெண்களுக்கென்று சில தன்மைகளைக் கொடுத்துள்ளான்.
பெண்ணிலிருந்தே மனித உற்பத்தி!
உதாரணமாக மனித உற்பத்தியையே எடுத்துக் கொள்வோம். ஆண் அவனது விந்தை பெண்ணின் கர்ப்பப் பைக்குள் செலுத்துவ தோடு ஒரு சில நிமிடங்களில் அவனது வேலை முடிந்து விடுகிறது. ஆனால் பெண்ணோ அந்தக் கருவை 10 மாதங்கள் பல சிரமங்களுக்கிடையே சுமந்து பின் பெரும் வேதனைக்கிடையே பெற்றெடுக்கிறாள். அதோடு அவளது வேலை முடிந்து விடுவதில்லை. குறைந்தது 2 வருடங்களுக்கு அக்குழந்தைக்குப் பாலூட்டி வளர்க்கும் நிலையிலும் அவள் சிரமப்படுகிறாள். அதற்காகப் பல தியாகங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். ஆணுக்குப் பெண் சமம் என்று முழக்கமிடும் அறிவு ஜீவிகள், இது என்ன நியாயம்? பெறக்கூடிய குழந்தைகள் அத்தனையையும் பெண்கள் தான் பெற்றுத் தர வேண்டுமா? பிரசவ வேதனையைப் பெண்கள் மட்டுந்தான் அனுபவிக்க வேண்டுமா?ஒரு பிள்ளையைப் பெண் பெற்றெடுத்தால், அடுத்த பிள்ளையை ஆண் பெற்றெடுக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் பெண் பெற்றெடுத்தால், ஆண்கள் அக்குழந்தையைப் பாலூட்டி வளர்க்க வேண்டும் என்று முழக்க மிட வேண்டும். இவ்வாறெல்லாம் அவர்கள் முழக்கமிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அது பற்றி வாயே திறக்கமாட்டார்கள். காரணம் இது பற்றிய அவர்களது கையாலாகத்தனம் அவர்கள் அறிந்ததே. இங்கே மட்டும் இறை நியதிக்கு அவர்கள் அறியாமலேயே அடிபணிந்து போவார்கள். ஆம்! இறைவன் ஆணை ஒரு நிலையிலும், பெண்ணை ஒரு நிலையிலும் படைத்தது மட்டுமல்ல, பெண்ணை இயற்கையிலேயே பலவீனமானவளாகவும் படைத்துள்ளான். இந்த நிலையை மாற்றி அமைக்க மனித வர்க்கம் முழுமையாக ஒன்று சேர்ந்து கொண்டு பாடுபட்டாலும் ஆகப் போவது ஒன்றுமில்லை.
ஆண் -பெண் கற்பு :
பெண்ணின் பலகீனத்தை இன்னும் விரிவாகவே பார்ப்போம். கற்பு என்பது ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு. இஸ்லாம் ஆணையும், பெண்ணையும் ஆக இரு சாராரையும் கற்பைக் காத்துக் கொள்ள கட்டளை இடுகிறது (24:31). ஆனால் இன்று நடை முறையில் கற்பு பற்றி பெண்ணினத்திற்கு மட்டுமே பேசப்படுகிறது. ஆணும், பெண்ணும் சமம் என்று முழக்கமிடும் அறிவு ஜீவிகளும் இங்கு வாயடைத்துப் போய் விடுவார்கள். ஒரு ஆண் தன் மனைவி அல்லாத ஆயிரம் பெண்களிடம் போனாலும் அவன் கற்பை இழந்தவனாக மேற்படி அறிவு ஜீவிகளால் கருதப்படாது. ஆனால் ஒரு பெண் தன் கணவனல்லாத ஒரு ஆணிடம் போனாலும் அவள் கற்பிழந்தவளாக கூக்குரலிடுவார்கள் இந்த அறிவுஜீவிகள். இதற்குக் காரணம் என்ன? இறைவன் படைத்த இயற்கை நிலைக்கு அவர்கள் அறியாமல் அடிமைப்பட்டு, அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பே இது.
ஆம்! ஆண் ஆயிரம் பெண்ணிடம் போனாலும் அதன் சுமையைச் சுமப்பவன் ஆணல்ல; அந்தப் பெண்கள். எனவே அறிவு ஜீவிகளும் ஆண்களைக் கற்பிழந்தவர்களாகக் கருதுவதில்லை. சுமையை 10 மாதங்கள் சுமந்து ஊரெல்லாம் விளம்பரப்படுத்திப் பிள்ளையைப் பெற்றெடுத்து நீங்காத களங்கத்தைத் தேடிக் கொள்கிறாள் பெண். அப்பன் பெயர் தெரியாத பிள்ளைக்குத் தாய், விபச்சாரி என்ற பழிச் சொல்லுக்கு ஆளாகிறாள். அறிவு ஜீவிகள்! இப்போது சொல்லுங்கள்; இது விஷயத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்று உங்களால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. இறைவன் அமைத்துள்ள இயற்கை நியதியை அறிவு ஜீவிகளான உங்களால் மாற்றி அமைக்க முடிந்ததா?
பெண் இன்னும் பலகீனமானவள்!
நாம் அன்றாடம் தினசரிகளைப் புரட்டும் போது, ஊடகங்களைப் பார்க்கும்போது நாம் அடிக்கடி பார்ப்பது பெண் கற்பழிக்கப் பட்டாள். பெண் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள் என்ற செய்திகளைத்தான். ஆண் கற்பழிக்கப்பட்டான் என்ற செய்தியைப் பார்ப்பதே இல்லை; இதற்குக் காரணம் என்ன? ஆண், பெண் இருசாரரின் உடற்கூறு அமைப்புகள் வெவ்வேறு விதமாக அமைக்கப் பட்டுள்ளன. ஒரு ஆணுடன் உறவு கொள்வதற்கு அவனது ஆண் உறுப்பில் மாறுதல் தேவைப்படுகிறது. (ஆணை கிளர்ச்சி அடையச் செய்வதன் மூலமே இந்த மாறுதல் நிகழும்; இந்த மாறுதல் இல்லாமல் அவனுடன் பெண் உடலுறவு கொள்ள முடியாது?) ஆனால், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கோ, அவளுடைய பெண் உறுப்பில் எந்த விதமான மாறுதலும் தேவைப்படுவது இல்லை. (அதாவது பெண்ணை கிளர்ச்சி அடையச் செய்யாமலே அவளை ஆண் கற்பழிக்க முடியும்)
பெண்ணின் உடற்கூறு அமைப்பில் மாறுதல் தேவையில்லாததால்தான், ஒருவளுடைய அழகிலோ அல்லது இன்ன பிற காரணங் களினாலோ கவரப்பட்ட ஆண், அவளை பலாத்காரமாக கற்பழித்தேனும் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள முடிகிறது. மேலும் பெண் உறுப்பு ஆண் பலாத்காரமாகக் கற்பழிக்கும் அமைப்பில் இருப்பதும் கற்பழிக்க எளிதில் வழி வகுக்கிறது. இந்த கற்பழிப்புக்கு அடிப்படைக் காரணம் அவளது அழகாக இருக்கலாம் அல்லது அவளது கவர்ச்சியான எடுப்பான உடல்வாகு காரணமாக இருக்கலாம். இன்னும் பிற காரணங்களாக இருக்கலாம். இந்த காரணங்களில் ஏதோ ஒன்றில் அவளிடம் மயங்கும் ஆண், அவள் இவனை விரும்பாத நிலையில் கூட பலாத்காரமாக அவளை அடைய எண்ணி கற்பழித்து விடுகிறான். பின்னர்தான் தான் தப்பிக்க அவளைக் கொலையும் செய்து விடுகிறான். காரணம் உடற்கூறு அமைப்பின்படி உடலுறவு கொள்ள பெண்ணிடம் மாறுதல் தேவை இல்லை என்பதேயாகும்.
கற்பை இழப்பதோடு விஷயம் முடிந்து விடுவதில்லை. அதற்கு மேலும் அவள் துன்பத்தைச் சுமக்க வேண்டியுள்ளது. ஆணின் விந்தைச் சுமந்த அவள் அதைப் பிள்ளையாகப் பெற்றெடுக்கும் கட்டாயத்திற்கும் ஆளாவதோடு சமுதாயத்தில் அவமானப்படும் நிலைக்கும் ஆளாகிறாள். ஆண் கற்பை இழந்தாலும் சுமையைச் சுமக்கும் கட்டாயம் அவனுக்கில்லை. சமுதாயத்தில் அவமானப்படும் நிலையும் இல்லை. அறிவு ஜீவிகளும் ஆண்கள் கற்பை இழப்பதில்லை; பெண்கள் தான் கற்பை இழக்கிறார்கள் என்று எண்ணுவதின் இரகசியம் புரிகிறதா? ஆம்! பெண் அந்த அளவு பலகீனமானவளாக இறைவனால் உடலமைப்பில் படைக்கப் பட்டிருக்கிறாள். முடிந்தால் அறிவு ஜீவி கள் அதனை மாற்றி அமைத்துவிட்டு ஆணுக்குப் பெண் சமம் என்ற உங்கள் முழக்கத்தைத் தொடருங்கள்.
நிலைமைக்கேற்ப பாதுகாப்பு:
ஒரு பொருளைத் திருடர்களிடமிருந்தும், வம்பர்களிடமிருந்தும் பாதுகாக்கும் நோக்கத்தோடு நிலைமைக்கேற்ற நடவடிக்கைகள் எடுப்பது மனித இயல்பு. இதனை அறிவு ஜீவிகளும் மறுக்கமாட்டார்கள். உதாரணமாக இரண்டு இலட்சம் பெறுமானமுள்ள ஒரு லாரியை தனது வீட்டிற்கு முன்னால் நிறுத்தி பாதுகாத்துக் கொள்ளும் ஒரு செல்வந்தன், அதே இரண்டு இலட்சம் பெறுமானமுள்ள கரன்ஸி நோட்டை, அல்லது தங்கக் கட்டியை, அல்லது மாணிக்கக் கல்லை, அல்லது முத்தை தனது வீட்டிற்கு முன்னால் போட்டு பாதுகாத்து விடலாம் என்று மூடத்தனமாக எண்ண மாட்டான். அதுவும் 2 லட்சம் பெறுமதியானது தான். இதுவும் 2 லட்சம் பெறுமதியானதுதான். இரண்டும் சமமானவை தான்; இரண்டினது பாதுகாப்பிற்கும் ஒரே நடைமுறை தான் என குருட்டு வாதம் செய்ய மாட்டான். லாரியை வீட்டு முன்னால் அலட்சியமாக நிறுத்துகிறான். இவற்றை வீட்டினுள்ளே கொண்டு சென்று, அதுவும் படுக்கை அறைக்குள் இரும்புப் பெட்டிக்குள் வைத்து பாதுகாக்க முற்படுகிறான். ஏன்?
ஆக 2 லட்சம் ரூபாய் பெறுமதியான லாரியை வீட்டின் வெளியே விட்டு பாதுகாக்கும் நிலையில், அதற்கேற்ற தோதுகள் உள்ள நிலையில் மேற்படி பொருட்களில் ஒன்றை வீட்டினுள் அதுவும் இரும்புப் பெட்டியினுள் வைத்து பாதுகாக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறான். இரண்டும் 2லட்சம் பெறுமதியானவைதான். இரண்டையும் சமநிலையில் பாதுகாக்க முடியும் என்று அறிவு ஜீவிகளும் முழக்க மிடுவதில்லை. காரணம் இங்கு அவர்களின் கையாளாகதத்தனம் தெளிவாகவே புரிகிறது. அதாவது திருடப்படுவதற்கு, அபகரிக்கப்படுவதற்கு இருக்கும் வாய்ப்பை உத்தேசித்து அதற்கேற்றவாறு அவற்றைப் பாதுகாக்கும் முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இது வியத்தில் அறிவு ஜீவிகளிலேயும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதே கண்ணோட்டத்தில் இப்போது சிந்தித்துப் பாருங்கள். பெண்களின் கற்பை அபகரிக்கும் வாய்ப்பு, ஆண்களின் கற்பை அபகரிக்கும் வாய்ப்பை விட மிக அதிகமாகவே இருக்கிறது என்பதை அறிவு ஜீவிகளும், மேல்நாட்டு கல்வி கற்ற முஸ்லிம் பெண்களும் மறுக்க முடியாது. அப்படி அவர்கள் மறுத்தால் அது அவர்களின் அறியாமையையும், விவேகமற்ற தன்மையையும்தான் வெளிப்படுத்தும். எனவே நம்மைப் படைத்த இறைவன் ஆண், பெண் உடலமைப்புக்கேற்றவாறு அவர்களின் உடைகளும், அவர்களது உடலை மறைக்கும் முறைகளும் அமையும் விதத்தில் கட்டளையிட்டுள்ளான். அதை விட அழகிய ஒரு திட்டத்தை மனித இனத்திலுள்ள அறிவு ஜீவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீட்டி னாலும் அது சிறந்ததாக அமையப் போவதில்லை. அது தோல்வியுறும் திட்டமே.
ஆயினும் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் “பர்தா’ முறையை மேற்கொள்ளும் பெண்களில் பெரும்பாலோர் கடைபிடிக்கும் “பர்தா’ முறை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலானதல்ல. முன்னோர்களின் மனித யூகங்களையும் கற்பனைகளையும் கொண்டு கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கம் தான் என்பதை மறுப்பதற்கில்லை. முஸ்லிம்கள் முன்னோர்களின் பெயரால் பல மூட பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதால் தான், அவற்றை ஆராயும் சிந்தனையாளர்கள் அவற்றை காட்டுமிராண்டிப் பழக்கம் எனக் குறை கூறி இஸ்லாத்தையும் குறை கூறுகின்றனர். இன்ஷா அல்லாஹ் அடுத்து குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான “பர்தா’ முறையை விரிவாகப் பார்ப்போம்.
இரண்டாம் பகுதி:
குர்ஆன்,ஹதீஸ் கட்டளையிடும் “பர்தா’ முறையை பார்க்கு முன் மாற்று மதத்தினரும், படித்த முஸ்லிம் பெண்களும்-ஆணுக்குப் பெண்சமம் என்று முழக்கமிடுகிறவர்களும் எப்படிப்பட்ட “பர்தா’ முறையை மறுக்கின்றனர்? எதைக் காட்டுமிராண்டிச் செயலெனக் கூறுகின்றனர் என்பதையும் உண்மை முஸ்லிம்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளக் கடமைப் பட்டுள்ளனர். அவர்கள் இவ்வாறு கூறினாலும் ஒரு சில வகைகளில் ஆண் மறைத்துக் கொள்ள கட்டாயமில்லாத உடல் பகுதிகளை, பெண் மறைத்தேயாக வேண்டும் என்பதில் அவர்களும் உறுதியாக இருக்கின்றனர். உதாரணமாக அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு உடலின் மற்றப் பகுதிகளளெல்லாம் வெளியில் தெரிந்த நிலையில் பல ஆண் கள் சகஜமாக வீட்டினுள்ளும், சமயங்களில் வெளியிலும் நடமாடுவதையும், உடலுழைப் பிலான பணிகள் பல புரிவதையும் சர்வ சாதாரணமாக நாம் பார்க்கலாம். ஆனால் ஒரு பெண் வீட்டினுள்ளும் சரி, வெளியிலும் சரி அவ்வாறு நடமாடுவதையோ, உடலுழைப்பிலான பணிகள் செய்யும் பெண்கள் அவசியத்தின் நிமித் தம் கூட அவ்வாறு அரைக்கால் சட்டையுடன் இருப்பதையோ எந்த இனத்து அல்லது மதத்து அல்லது இஸத்து ஆணும் ஒப்புக் கொள்ளமாட்டான். சில பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என மாற்று மதத்தவர்களால் அழைக்கப்படுபவர்கள் கூட ஒரு கீழாடையோடு (வேஷ்டி), அதையும் மடித்துக் கட்டிக் கொண்டு மட்டுமே தெருக்களில் நடமாட முடியும். மேலாடை (சட்டை) அணிவதற்கு அவர்களுக்கு உரிமை யில்லை. ஆண்களுக்கு சட்டை அணிவதற்கு உரிமை இல்லாதது போல், அவர்களின் பெண் களுக்கும் ஜாக்கெட் (சட்டை) அணியும் உரிமை இல்லை. ஆயினும் அப்பெண்கள் ஆண்கள் திரிவது போல் தங்கள் மார்புகளை வெளியில் காட்டிக் கொண்டு திரிய முடியாது. தங்கள் கீழா(சேலை)டையைக் கொண்டு மாராப்புப் போட்டு தங்கள் மார்பகங்களை அவர்கள் மறைத்துக் கொள்ள வேண்டும்.
வடநாட்டைச் சேர்ந்த சில இனத்துப் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் சேலை யைக் கொண்டு தங்கள் தலையில் முக்காடு போட்டு, தங்கள் முகம், மற்றும் மணிக்கட்டு வரையிலான கைகள் போக எஞ்சிய பகுதிகளை நன்கு மூடி மறைத்தவர்களாகவே வெளியில் நடமாடுகின்றனர். ஆக இப்படி இவற்றை எல்லாம் அறிவு ஜீவிகளோ, படித்த பெண்மணிகளோ ஆட்சேபிப்பதில்லை. பெண்ணுடைய உரிமைகள் பறிக்கப்படுவதாகச் சொல்லுவதில்லை. ஆனால் பெண்ணுடைய உடலமைப்புக்கு ஏற்றவாறு இவ்வாறு தான் உடையணிய வேண்டும் என்று அவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆக ஆணும், பெண்ணும் எல்லா வகையிலும் சரி நிகர் சமம் என்று அவர்கள் கூறுவதற்கு அவர்க¼ள முரண்படுகிறார்கள். ஆணுடைய உடலமைப்பிலும், பெண்ணுடைய உடலமைப்பிலும் வித்தியாசம் இருக்கிறது என்பதை அவர்கள் அறியாமலேயே ஒப்புக் கொள்கிறார்கள். மேலும் பெண்களுக்கு “பர்தா’ உண்டு என்பதையும் அவர்களும் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள்.
இப்போது அவர்கள் காட்டுமிராண்டிப் பழக்கம், பெண்களின் உரிமையைப் பறிப்பது என்றெல்லாம் ஆட்சேபிப்பது எப்படிப்பட்ட ‘”பர்தா’ முறையை என்று ஆராயும்போது, இன்று மவ்லவிகளால்(?) நடைமுறைப்படுத்த வற்புறுத்தப்படும் “புர்கா’ முறையேயாகும். அதாவது உள்ளே இருப்பது ஆணா? பெண்ணா? யார் என்றே அடையாளம் தெரியாமல் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை முகத்தையும் மறைத்த நிலையில் அணிந்து செல்லும் கருப்பு அங்கியையே. இப்படிப் பெண்கள் தங்கள் முகத்தையும் சேர்த்தே மறைக்க வேண்டும் என்பதற்கு மவ்லவிகள் கூறும் காரணம் வருமாறு:
பெண்களின் அழகே முகத்தில் தான் இருக்கிறது. எனவே பெண்களின் முகத்தைப் பார்க்கும் ஆண்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். அதனால் தவறுகள் நிகழக் காரணமாகிறது. பெண்கள் முகத்தையும் சேர்த்து மூடி மறைத்துக் கொள்வதால் அவர்களுக்கு அந்நிய ஆண்களிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது என்பதாகும். மேல் எழுந்த வாரியாகப் பார்க்கும்போது இந்த வாதம் நியாயமாகவே படு கின்றது. ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்போதே இதன் தீய விளைவை நம்மால் உணர முடியும்.
பெண்களின் முகத்தில்தான் அழகு அதிகமாக இருக்கிறது என்பது அல்லாஹ்வுக்கும் தெரியவில்லை; அவனது தூதருக்கும் தெரிய வில்லை; அது மவ்லவி(?)களாகிய எங்களுக்கே தெரிகிறது. பிளவுஸ், ஜாக்கெட் என இரண்டு மறைப்புகள் கொண்டு மறைக்கப்பட்ட மார்பகத்தை மீண்டும் முந்தானையால் மறைக்கக் கட்டளையிடும் அல்லாஹ், திறந்திருக்கும் முகத்தை மறைக்கக் கட்டளையிட மறந்து விட்டான் என்பதே இந்த மவ்லவி(?)களின் ஆணவப் பேச்சாகும். உண்மை என்ன? பெண்களின் முகத்திலுள்ள அழகு வெளியே தெரிவதின் காரணமாக ஏற்படும் சீர்கேடுகளை விட, ஒழுங்கீனங்களைவிட, பெண்களின் முகத்தை மறைத்து ஆள் மாறாட்டத்திற்கு வழிவகுப்பதால் ஏற்படும் சீர்கேடுகளும், ஒழுங்கீனங்களும் மிகமிக அதிகம் என்பதை நன்கு அறிந்துள்ள அல்லாஹ் பெண்கள் முகத்தை மறைக்கக் கட்டளையிடவில்லை என்பதே அந்த உண்மையாகும்! முகத்தை மறைக்க வேண்டும் என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ கட்டளையிட்டிருந்தால் இங்கு நமது பகுத்தறிவு ஆராய்ச்சிக்கு இடமே இல்லை. ஆனால் மார்க்கம் அவ்வாறு கட்டளையிடவில்லை. இதனைத் தெளிவாகப் பின்னால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்குவோம். முதலில் மனித அபிப்ராயத்தில்,-யூகத்தில் சரியாகப்படும் ஒரு விஷயம் உண்மையில் எவ்வளவு கேடு விளைவிப்பதாக இருக்கிறது என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இதனையே அல்லாஹ் நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம். ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம். ஆனால் அது உங்களுக்கு தீமை பயப்பதாக இருக்கும் (இவற்றையயல்லாம்) அல்லாஹ் அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள் (2:216) என்று எச்சரிக்கிறான்.
இப்போது பெண்களின் கற்பைக் காத்துக் கொள்ள அவர்களின் முகமும் மறைக்கப்பட வேண்டும் என்ற மனித அபிப்பிராயத்திலுள்ள கெடுதிகளை ஆராய்வோம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் இன்னார் என்று தெளிவாக அடையாளம் தெரிவது மனித வாழ்வில் அத்தியாவசியமான அம்சமாக இருக்கிறது. சமூக ஒற்றுமையை அல்லது ஒழுக்கத்தைக் குலைக்கும்போது அதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் இன்னார், இன்னார் என்று தெளிவாக அடையாளம் தெரிய வேண்டும். ஒரு பெண் “பர்தா’ மூலம் தன்னை முகம் உட்பட முழுமையாக மறைத்துக் கொண்டு ஒரு தவறான காரியத்தைச் செய்தால், அந்தப் பெண்ணை இன்னார் என்று எப்படி அடையாளம் கண்டு கொள்வது? ஒரு பெண் “புர்கா”’அணிந்து கொண்டு இன்று ஒரு ஆணுடன் சுற்றித் திரிகிறாள்; நாளை இன் னொரு ஆணுடன் சுற்றித் திரிகிறாள். அவள் முகத்தை மறைத்து “புர்கா”’ அணிந்திருப்பதால் பார்ப்பவர்களுக்கு நேற்று வேறு ஆணுடனிருந்த அதே பெண்தான் இன்று இன்னொரு ஆணுடனிருக்கிறாள் என்பதை அறிய முடியாது. தன்னை இனம் கண்டு கொள்ள முடியாது என்ற தைரியமே அந்தப் பெண்ணை தவறான வழிகளில் செல்லத் தூண்டும். ஆண்களால் பெண்களின் கற்புக்கு ஆபத்து வரக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு ஏற்படுத்தப்பட்ட “பர்தா” முறையில், மனித அபிப்ராயத்தால் திணிக்கப்பட்ட‘முகம் மறைத்தல்’ அந்தப் பெண்ணே துணிந்து தனது கற்பை இழக்கும் நிலைக்கு ஆளாக்கிறது என்பதை அறிவுடையவர்கள் மறுக்க முடியுமா?
மனித வர்க்கத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்கள் மிகமிக சொற்பமே. கணிசமான தொகையினர் அல்லாஹ்வுக்கு அஞ்சாவிட்டாலும், சமுதாயத்திற்கு அஞ்சி மானக்கேடான காரியங்களில் ஈடுபடுவதை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்கின்றனர். எந்த அளவு என்று பார்க்கும்போது, தங்கள் சுய அறிவுப்படி அல்லாஹ்வுக்கு உண்மையில் அஞ்சி நடப்பதென்றால், குர்ஆன், ஹதீஸ் நடை முறைகளை மட்டுமே எடுத்து நடக்க வேண்டும். முன் னோர்களை மூதாதையர்களை குருட்டுத் தனமாகப் பின்பற்றக் கூடாது என்று தெளிவாக விளங்கியுள்ள முஸ்லிம்களில் பலர், அதனை பகிரங்கமாக செயல்படுத்தவும், துணிந்து சொல்லவும் முன் வருவதில்லை. காரணம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் அவர்களைப் பயமுறுத்துகிறது. அவ்வாறு நடந்தால் தங்களை வஹ்ஹாபி, நஜாத் என்று முத்திரையிட்டுத் தங்களை ஒதுக்கி விடுவார்கள். புறக்கணித்து விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். சமுதாயம் அவர்களைப் புறக்கணிப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அல்லாஹ் தங்களைப் புறக்கணித்தாலும் பரவாயில்லை. சமுதாய மக்கள் தங்களைப் புறக்கணிக்கக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்களை நம்மால் பார்க்க முடிகிறது.
முஸ்லிம்களில் கணிசமான தொகையினர் இன்று நடைமுறையிலிருக்கும் கத்தம், ஃபாத்திஹா, மெளலூது, ராதிபு, மற்றும் சமாதிச் சடங்குகள் தவறானவை, அல்லாஹ்வி டத்தில் அவனது கோபத்தையும், தண்டணை யையும் பெற்றுத் தருபவை என்று தெளிவாக அறிந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூக மக்கள் இவற்றைச் செய்யாவிட்டால் தங்களை ஓரம் கட்டிவிடுவார்கள் என்று பயந்தே வேண்டா வெறுப்பாக இப்படிப்பட்ட மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விளக்கத்தை இங்கு ஏன் தந்தோம் என்றால், அல்லாஹ்வுக்கு அஞ்சாதவர்களும், சமூகத்திற்கு அஞ்சி நடக்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துக் காட்டத்தான். எனவே பெண்களை இன்னார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியாத நிலையில் முகம் உட்பட அனைத்தையும் மறைத்து “புர்கா” அணியும் பழக்கம் அவர்களை சமூகத்திற்கு அஞ்சியாவது மானக்கேடான காரியங்களில் ஈடுபடுவதை தடுத்துக் கொள்வதை விட்டும் அவர்களுக்கு அச்சமற்ற தன்மையைக் கொடுத்து விடுகிறது. அவர்கள் துணிந்து தவறுகளில் ஈடுபட வழி ஏற்பட்டு விடுகிறது. எனவே “பர்தா”வைக் கொண்டு எதிர்பார்த்த பலனை விட அதற்கு மாற்றமான தீமையே விளைய அந்த “புர்கா” காரணமாகி விடுகிறது. அதல்லாமல், ஒரு ஆண் தன்னை முழுமையாக முகம் உட்பட ஒரு “புர்கா”வைக் கொண்டு மறைத்துக் கொண்டு பெண் வேடத்தில் பெண்கள் புழங்கும் பகுதிகளுக்குச் சென்று கெடுதி விளைவிக்க முற்பட்டால் அதைத் தடுக்க முடியுமா? பெண்கள் தனியாக இருக்கும் வீட்டினுள் அவர்களின் விருப்பப்படியே ஒரு ஆண் பெண்ணைப் போல் “புர்கா” அணிந்து கொண்டு ஊர் மக்களின் கண்ணை மறைத்து வீட்டினுள் நுழைந்து தவறு செய்து விட்டு மீண்டும் அந்த “புர்கா”வினுள்ளே நுழைந்து வெளியேறினால் பார்ப்பவர்கள் அவனை அடையாளம் காண முடியுமா?
பெண்கள் முகம் மறைத்து புர்கா அணிவதால் அவர்களே துணிந்து ஆள் மாறாட்டம் செய்து வங்கியிலுள்ள பிற பெண்களின் பணத்தை போலிக் கையயழுத்திட்டு அபகரித்துச் செல்லும் பல நிகழ்வுகளை பரவலாகக் கண்டு வருகிறோம். இப்படி எண்ணற்ற தவறுகளைப் பெண்கள் செய்வதற்கு முகம் மறைத்தல் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கிறது. திருடர்கள், கொலைகாரர்கள், கொள்ளையர்கள் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் தப்பிச் செல்வதற்காக பெண்ணைப் போல் “புர்கா” அணிந்து வேடமிட்டு தப்பிச் செல்ல முற்பட்டால், அவர்களை அடையாளம் கண்டு தப்பிச் செல்லாமல் பிடிக்க முடியுமா? இன்னும் இவை போல் எத்தனையோ சீர்கேடுகளுக்கு முகம் மறைக்கும் இந்த “புர்கா”முறை வழிவகுக்கும் என்பதை அறிவுடையோர் மறுக்க முடியாது.
சில நடிகைகளான விபச்சாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப் படும்போது “புர்கா” அணிந்து தங்களை மறைத்துக் கொள்ளும் வழக்கம் இன்று பிரபல்யமாகி வருகிறது. முன்பு விடுதலைப் புலிகள் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பெண்களைப் போல் புர்கா அணிந்து தப்பித்து வந்த செய்தியை பத்திரிகைகளில் பலர் பார்த்துள்ளனர். இதற்கு இந்த மூட முல்லாக்களின் “பெண்கள் முகத்தை மூட வேண்டும்” என்ற அறிவீன மான ஃபத்வாவே-(தீர்ப்பே) வழி வகுக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
அல்லாஹ் கட்டளையிட்டுள்ளபடி நடப்பதே உண்மையான முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய கடமையாகும். தங்கள் மனித அபிப்பிராயங்களைக் கொண்டு அதன் சாதக பாதகங்களையும் ஆராயப் போக வேண்டியதில்லை. ஆயினும் பெண்களின் முகத்தையும் மறைக்க வேண்டும் என்று மவ்லவி(?) களில் பெரும்பான்மையினர் கட்டாயப்படுத்தி அதற்கு ஆதாரமாக பல மனித யூகங்களை எடுத்து வைத்து பலமாக வாதித்து வருவதால் இந்த நீண்ட விளக்கம் கொடுப்பது நமது பொறுப்பாகிறது. மற்றபடி குர்ஆன், ஹதீஸ் தாராளமாகப் போதும்; குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் ஒத்த நிலையில் தான் நமது விளக்கத்தைத் தருகிறோமேயல்லாமல், முரண்பட்ட எந்த விளக்கத்தையும் நாம் தரவில்லை.
ஏற்கனவே ஆடைகள் மூலம் மறைக்கப் பட்டிருக்கும் பெண்ணின் மார்பகத்தின் கனபரிமானம் தெரியக்கூடாது என்பதற்காக, மறைத்ததையே மேலும் முன்றானை மூலம் மறைக்கக் கட்டளையிடும் அல்லாஹ், முகத்தை மறைக்கக் கட்டளையிடவில்லை. மாறாக வெளியில் தெரிய வேண்டிய பகுதிகளான முகம், கை நீங்கலாக மற்றப் பகுதிகளையே மறைக்கக் கட்டளையிடுகிறான். எனவே
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பெண்கள் அடையாளம் தெரிவதற்குரிய முகத்தை மறைப்பதானது கண்டித்துத் திருத்தப்பட வேண்டிய தவறு என்ற முடிவுக்கே வரமுடிகிறது. பெண்கள் அடையாளம் தெரியாமல் தங்கள் முகத்தை மறைப்பது குற்றமேயாகும். இந்த எமது கூற்றை உண்மைப்படுத்தும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையிலிருந்த “பர்தா”’முறையை எண்ணற்ற ஹதீஸ் ஆதாரங்களோடு அடுத்துப் பார்ப்போம்.
பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்பதற்கு ஆதாரமாக நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையிலிருந்த “பர்தா” முறையை அறிந்து கொள்ள உதவும் சில ஹதீஸ்களை இங்கு தருகிறோம்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன்; பிரசங்கத்திற்கு முன்னால் பாங்கும் இகாமத்தும் இன்றித் தொழுகையைத் துவக்கினார்கள். (தொழுத பின்) பிலால்(ரழி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு நின்றார்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்குமாறு கட்டளையிட்டார்கள். அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு தூண்டினார்கள். மக்களுக்கு மேலும் பல போதனைகள் புரிந்தார்கள். (பெண்களுக்குரிய உபதேசத்தில்) நீங்கள் (அதிகம்) தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களில் அதிகமானவர்கள் நரகின் விறகுகளாக இருக்கிறீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்டதும் பெண்கள் மத்தியில் இருந்த கறுப்புக் கன்னங்களையுடைய ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள் அதிகம் நரகிற்குச் செல்வார்கள் என்றீர்களே) ஏன்? என்று கேட்டார். “நீங்கள் உங்கள் கணவர்களோடு நன்றியுடன் நடப்பது இல்லை. நிறைய குறை கூறுகிறீர்கள்? (இது தான் காரணம்) என்று நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரழி). முஸ்லிம், 9; நஸயீ, தாரமீ,பைஹகீ, அஹ்மத்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் நபிதோழர் “கறுப்புக் கன்னங்களையுடைய பெண்மணி’ என்று”குறிப்பிடுவதாக இருந்தால் அதன் பொருள் என்ன? அந்தப் பெண்ணின் முகம் அடையாளம் தெரியும் வகையில் திறந்திருக்கப் போய்தானே அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
விடைபெறும் ஹஜ்ஜின் போது, நபி (ஸல்) அவர்கள் ஒட்டகையில் இருந்த போது, அவர்களுக்குப் பின்னால் ஃபழ்லு இப்னு அப்பாஸ்(ரழி) அதே ஒட்டகையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் ஏதோ மார்க்க விளக்கம் கேட்டார். அந்தப் பெண்மணி பேரழகியாக இருந்தார். அந்தப் பெண்ணை ஃபழ்லு இப்னு அப்பாஸ் (ரழி) திரும்பிப் பார்க்கலானார். நபி(ஸல்) அவர்கள் அவரது தாழ்வாக் கட்டையைப் பிடித்து வேறு பக்கம் அவரது முகத்தைத் திருப்பினார்கள். இப்னு அப்பாஸ் (ரழி), புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, முஅத்தா, இப்னு மாஜ்ஜா, பைஹகீ.
இதே நிகழ்ச்சியை அலீ(ரழி) அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டார்கள். அந்த பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டார். அப்போது ஃபழ்லு இப்னு அப்பாஸ் (ரழி) அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்க்கலானார். நபி(ஸல்) அவர்கள் அவரது முகத்தை வேறு பக்கமாகத் திருப்பினார்கள். அப்போது ஃபழ்லு அவர்களின் தந்தை அப்பாஸ்(ரழி) அவர்கள் உங்கள் பெரிய தகப்பனாரின் மகனுடைய கழுத்தை ஏன் வேறுபுறம் திருப்பினீர்கள்? என்று கேட்டார். (உங்கள் மகன்) இளைஞனாகவும், (அந்தப் பெண்) இளமங்கையாகவும் இருக்கக் கண்டேன். ஷைத்தான் அவ்விருவரிடமும் தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடுவானோ என்று அஞ்சுகிறேன் என்றார்கள். திர்மிதீ, அஹ்மத்.
இந்த இரண்டு ஹதீஸ்களும் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்ட பெண்ணின் முகம் அடையாளம் தெரியாதவாறு மறைக்கப்பட் டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் ஆண்கள் தீய நோக்குடன் பெண்களின் திறந்து காணப்படும் முகத்தை உற்று நோக்க முற்படக் கூடாது. தங்களின் பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும் என்ற உபதேசமும் அடங்கி இருக்கிறது.
விசுவாசிகளான பெண்கள் நபி(ஸல்) அவர்களுடன் (தொழுதிட) பஜ்ர் தொழுகைக்குத் தங்களின் ஆடைகளைப் போர்த்திக் கொண்டு வருவார்கள். தொழுகை முடிந்தபின் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்கள் (யாரென) அறிந்து கொள்ள முடியாது என்று அன்னை ஆயிஸா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்.
இந்த ஹதீஸில் இருள் காரணமாக அவர்களை யாரென அறிந்து கொள்ள முடியாது’என்று கூறுவதிலிருந்தே அவர்களது முகங்கள் திறந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது.இன்று முஸ்லிம்களிடையே நடைமுறை யிலிருக்கும் “புர்கா” முறை பட்டப் பகலிலும் பெண்களை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத வகையில் அவர்களது முகங்கள் மறைக்கப் பட்டிருக்கின்றன என்பதை யாரால் மறுக்க முடியும்?
“அபூயஃலா”வில் காணப்படும் இன்னொரு ஹதீஸில் “இருட்டின் காரணமாக அவர்களின் முகங்கள் தெரியாது’ என்று ஆயிஷா(ரழி) சந்தேகத்திற்கிடமின்றி கூறுகிறார்கள். எனவே பெண்கள் முகத்தை மறைப்பது நபி வழியல்ல என்பதே உறுதிப்படுகிறது.
ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “என்னை உங்களிடம் அர்ப்பணித்துக் கொள்ள வந்திருக்கிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணைப் பார்த்தார்கள். அவளை நன்கு கூர்ந்து பார்த்தார்கள். பின்பு தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். பெண்கள் எனக்குத் தேவையில்லை என்று கூறினார்கள். ஸஹல் இப்னு ஸஃது(ரழி) புகாரி, முஸ்லிம், நஸயீ, பைஹகீ.
இந்த ஹதீஸ் குறிப்பிட்ட பெண் நபி (ஸல்) அவர்களும், அங்கிருந்தவர்களும் பார்க்கும் அளவிற்கு அவரது முகம் திறந்தே இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.
அபூபக்ரு(ரழி) அவர்கள் சுகயீனமாக இருந்தபோது அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்களுடன் இரு கைகளும் பச்சைக் குத்தப்பட்ட, வெண்மையான ஒரு பெண் இருந்தார். அவர் (அபூ பக்ரு(ரழி) அவர்களின் மனைவி) அஸ்மா பின்த் அமீஸ் என்பவராகும் என்று கைஸ் இப்னு அபீ ஹா´ம் அறிவிக்கும் ஹதீஸ் தப்ராணி என்ற நூலில் காணப்படுகிறது.
இந்த ஹதீஸில் வெண்மையான பெண் என்றும், பச்சை குத்தப்பட்ட கை என்றும் குறிப் பிடுவதிலிருந்தே அவரது முகமும், கைகளும் பிறர் பார்க்கும் வகையில் திறந்தே இருந்தன. மறைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை உணர்த்துகிறது. பச்சை குத்துவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லையென்பதை அறியவும். இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் பச்சை குத்தப்பட்டிருக்கலாம் என்று விளங்கிக் கொண்டால் இங்கு சந்தேகம் வராது.
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ்(ரழி) என்ற பெண் ஸஃது இப்னு கவ்லா என்பவரின் மனைவியாகும். விடைபெறும் ஹஜ்ஜின் போது அவர் மரணமடைந்து விட்டார். கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் “இத்தா’வின் காலம் முழுமையடையும்முன், குழந்தை பெற்றுவிட்டார்கள். பிரசவத் தீட்டிலிருந்து அந்தப் பெண் நீங்கியவுடன் அந்தப் பெண் சுருமா (கண்மை) தீட்டி, மருதாணியிட்டு அலங்கரித்துக் கொண்டார். அவரை அபுஸ்ஸனாபில் இப்னு பஃக் என்பவர் சந்தித்து “உன் கணவர் மரணம் அடைந்ததிலிருந்து நான்கு மாதம் பத்து நாட்கள் நீ அலங்காரங்கள் தவிர்க்க வேண்டும்’ என்று கூறினார். உடனே அந்தப் பெண் நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டபோது “உனது பிரசவத்துடன் உன் இத்தா முடிந்து விட்டது’ என்று கூறினார்கள். (கருத்து) முஸ்னத் அஹ்மத்.
இந்த ஹதீஸில், குறிப்பிட்ட பெண் கண்மை தீட்டியுள்ளதையும், கைக்கு மருதாணி இட்டிருந்ததையும் அன்னிய ஆண் பார்த்ததைக் குறிப்பிடுகிறது. இதிலிருந்து பெண்ணின் முக மும், கையும் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் அல்ல என்பது தெளிவாகிறதா? இல்லையா?
சுவனத்துப் பெண்மணியை நான் உனக்குக் காட்டட்டுமா? என்று இப்னு அப்பாஸ்(ரழி) என்னிடம் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். இதோ இந்தக் கறுப்புப் பெண்தான் என்று கூறி விட்டு, இந்தப் பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நான் அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன்; அந்த நேரத்தில் என் ஆடைகள் விலகி விடுகின்றன. எனவே எனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று கூறினார். நீ விரும்பினால் பொறுமையாக இதைச் சகித்துக் கொள்! உனக்கும் சொர்க்கம் உண்டு! நீ விரும்பினால் உனக்கு சுகம் அளிக்கும்படி அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி நான் இதைப் பொறுத்துக் கொள்கிறேன்; என் ஆடைகள் விலகிவிடாமல் இருக்க அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று கூறினார். நபி(ஸல்) அவர்களும் அவருக்காக துஆ செய்தார்கள். இப்னு அபீரபாஹ்(ரழி), புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
இங்கும் “இதோ இந்தக் கறுப்புப் பெண்’ என்று சுட்டிக் காட்டுவதாக இருந்தால் அந்தப் பெண்மணி யின் முகம் மறைக்கப்படாமல் திறந்திருந்தால் மட்டுமே அவரை அடையாளம் கண்டு சுட்டிக் காட்டியிருக்க முடியும். முகம் மறைக்கப்பட்டி ருந்தால் அடையாளம் கண்டு கொண்டிருக்க முடியாது.
இப்படி நபி(ஸல்) காலத்து பெண்கள் முகத்தை மறைக்கவில்லை. அடையாளம் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் முகங்கள் திறந்தே இருந்தன என்பதற்கு எண்ணற்ற ஹதீஸ் ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பாகவுள்ள சில ஹதீஸ்களை இங்கு எடுத்து எழுதியுள்ளோம்.
மேலும் இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஆயிஸா(ரழி) வாயிலாக ஒரு ஹதீஸ் காலித் இப்னு தரீக் என்பவரால் அறிவிக்கப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டிருந்தோம். அவர் ஆயிஸா(ரழி) அவர்களிடம் நேரடியாகக் கேட்டதற்குரிய ஆதாரமில்லை. அந்த வகையில் இந்த ஹதீஸ் முர்ஸலாகும் ஆயினும் பெண்களின் முகமும், கையும் மறைக்கப்பட வேண்டியதில்லை. அவை மற்றவர்கள் பார்க்கும் வகையில் வெளியில் தெரிய வேண்டும். பெண்களை அடையாளம் கண்டு கொள்வதும் அவசியமான ஒன்று என்பதை உறுதிப்படுத்தும் எண்ணற்ற ஹதீஸ்கள் காணப்படுவதால் அதை தெள்ளத் தெளிவாக நேரடியாகக் குறிப்பிடும் அந்த ஹதீஸை ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
இமாம் மாலிக்(ரஹ்) அவர்களால் அறிவிக் கப்படும் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் நெறிநூல் அல்குர்ஆன்; மற்றது எனது நடை முறை என்ற ஹதீஸும் இதே ரகத்தைச் சேர்ந்த முர்ஸலான ஹதீஸாகும். நேரடியாகத் தெளிவாக இந்த ஹதீஸ்கள் குறிப்பிடும் விஷயங்களை வேறு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உண்மைப்படுத்துவதால், இப்படிப்பட்ட ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்து வைப்பதில் தவறில்லை.
இங்கு நாம் எடுத்தெழுதியுள்ள ஹதீஸ்களின் ஆதாரங்களிலிருந்து பெண்கள் வெளியில் தெரிய வேண்டிய-அவசிய பாகங்களான முகம், கை மறைக்கப்படக் கூடாது. அவை வெளியில் கண்டிப்பாகத் தெரிய வேண்டும். மார்க்கம் கூறாத ஆனால் இன்று மவ்லவிகள்(?) வற்புறுத்தும் புர்கா முறை நிச்சயமாக அநாகரீகமான பழக்கம் தான். இதன் காரணமாகவே மாற்று மதத்தினர் பர்தா முறையை காட்டு மிராண்டித்தனம் என விமர்சிக்கிறார்கள். முகமூடி முறையை இஸ்லாம் வலியுறுத்தும் பழக்கமல்ல என்பதைத் தெள்ளத் தெளிவாக விளங்கி இருப்பீர்கள். 33:59, 24:31 குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் முறையாக நடுநிலையோடு ஆராயும் எவரும் இதை உணர முடியும்.
24:31 இறைவாக்கில் “தங்கள் அழகலங்காரத்தை அதினின்று தெரிய வேண்டியதைத் தவிர’ என்று அல்லாஹ் குறிப்பிடுவதிலிருந்தே முகமும், கையும் பெண்களின் அழகை, கவர்ச்சியை காட்டும் பாகங்கள் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆயினும் பெண்ணின் கவர்ச்சி முகத்தில் தேங்கி நின்றாலும், அவர்களை அடையாளம் கண்டு கொள்வது அதைவிட முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அவர்களது கற்பைக் காத்துக் கொள்ள அவர்கள் அடையாளம் காணப்படுவது மிக, மிக முக்கியம். எனவே அந்த முகம் குர்ஆன் கூறும் “தெரிய வேண்டியதில் தான்” அடங்கும் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. அதே போல் வெளியில் செல்லும் பெண்கள் கொடுக்கல், வாங்கல், பஸ் கம்பியை பிடித்தல் போன்ற முக்கிய வேலைகளுக்காக அவர்களது கைகளும் வெளியில் தெரிந்தேயாகவேண்டும். எனவே முகத்தையும், கைகளையும் மறைக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அநாகரீகமான காட்டுமிராண்டிச் செயல் என்று யாரும் சொன்னால் அதனை ஒரு முஸ்லிம் மறுக்க முடியாது. சத்தியம் எத்தரப் பிலிருந்து வந்தாலும். நமது எதிரியின் வாயிலிருந்து வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த பண்பாடுள்ளவர்களே உண்மை முஸ்லிம்களாகத் திகழ முடியும். மாற்றார் வாயிலிருந்து வருகிறது என்பதற்காக சத்தியத்தை மறுப்பவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.
எனவே முகம் மறைத்து அணியப்படும் புர்கா முறை இஸ்லாமிய முறையல்ல. திருகுர் ஆன் கூறும் வழியுமல்ல. நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்ததுமல்ல. மாறாக நம் நாட்டை பல்லாண்டுகள் ஆண்ட மொகலாயர்களின் வழியிலும், தப்லீஃக் வாலாக்களாலும், ஸலஃபி கொள்கையுடைய முல்லாக்களாலும் நடை முறைக்கு வந்த பழக்கமிது. மனித யூகத்தால் முஸ்லிம்களிடையே திணிக்கப்பட்ட ஒரு அநாகரீகச் செயலேயாகும். அடுத்து முகம் மறைக்காமல் திறந்த நிலையில் அணியப்படும் புர்கா முறையை பெண்கள் விரும்பி அணிந்தால் அதை மறுப்பதற்கில்லை. ஆயினும் அப்படித்தான் அணிய வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. அவர்கள் வழமையாக அணிந்து கொள்ளும் சாதாரண உடைகளைக் கொண்டே மறைக்க வேண்டிய பகுதிகளை முறையாக மறைத்துக் கொண்டாலும் போதுமானதே. 33:59, 24:31 இறைவாக்குகள் இதை உறுதிப் படுத்துகின்றன.
ஆனால் அப்படி மறைத்துக் கொள்ளும் போது வெளியில் நடமாடும் போதும், வாகனங்களில் ஏறி இறங்கும்போதும் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் வெளியில் தெரிந்தால் அது மறுப்புக்குரியதாகும். குறிப்பாக தென்னகத்தில் நடைமுறையிலிருக்கும் சேலை, ஜாக் கெட் பழக்கம் பெண்களின் வயிற்றுப் பகுதியும், முழங்கையிலிருந்து மணிக்கட்டுவரையுள்ள பகுதியும் வெளியில் தெரிவதாக அமைந் துள்ளது. இவர்கள் தங்கள் சேலையைக் கொண்டு மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்துக் கொண்டாலும் சமயங்களில் அவை வெளியே தெரியும் சூழ்நிலை ஏற்படத்தான் செய்கிறது. மேலும் சமயங்களில் சேலை முந்தானை நழுவி தலைமுடி, பின்னல், அவற்றில் அணிந்திருக்கும் மணம் வீசும் பூ இவையும் வெளியே தெரிந்து ஆண்களை கிருகிருக்கச் செய்கிறது. எனவே இவர்கள் முகம் தெரியும் நிலையில் புர்கா அணிவதே முறையாகும். அல்லது அவர்கள் தங்கள் ஜாக்கெட்டுகளை மாற்றி வயிற்றுப் பகுதியும், கைகள் மணிக்கட்டுகள் வரையிலும் மறையும் நிலையில் இறுக்கமில்லாத முழுக்கைச் சட்டை அணிய வேண்டும். தலை முடி, பின்னல் மற்றும் தலைப் பகுதியிலுள்ள அலங்காரங்களை முகத்தை நீக்கி துணியால் கட்டி மறைத்துக் கொள்ள வேண்டும். பின் தங்கள் சேலையால் தங்களை மூடி மறைத்துக் கொள்ளலாம். எப்படியும் வெளியில் அவசியம் தெரிய வேண்டிய பகுதிகளான முகம், முன் கை தவிர மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் எந்த நிலையிலும் (குனிவது, ஏறுவது, இறங்குவது, கை நீட்டி வாங்குவது, கொடுப்பது, பஸ் கம்பியைப் பிடிப்பது) மறைக்கப்பட்டே இருக்க வேண்டும். இதுவே இஸ்லாம் வலியுறுத்தும் “ஹிஜாப்- பர்தா”வாகும்.
முகத்தை மறைத்து “புர்கா” அணியும் பெண்கள் உட்பட தங்கள் “புர்கா”வை இறுக்கமாகத்தைத்து அணிந்து கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. அதனால் சில கவர்ச்சி யூட்டும் பகுதிகள் (மார்பகம், இடை, புட்டம் போன்றவை) துணிக்கு உள்ளே இருந்தாலும் அவை வெளியே துருத்திக் கொண்டும், அவற்றின் கனபரிமாணம் வெளியில் தெரியும் நிலையிலும் இருப்பதால் அவர்கள் நடந்து செல்லும் போது ஆண்களை கவர்ந்திழுப்பதாகவே உள்ளன. முகத்தை மறைக்க வேண்டும் என்று கண்டிப்புக் காட்டும் மவ்லவிகளில் பெரும்பாலோர் இவற்றைக் கண்டு கொள்வதாக இல்லை. மார்க்கம் வற்புறுத்தாத முகத்தை மறைப்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள்.
பெண்கள் தங்கள் முகம், முன்கைகள் தவிர எஞ்சியுள்ள உடல் பகுதிகள் எந்த நிலையிலும் அதாவது துணியால் மறைக்கப் படாமலோ அல்லது மறைக்கப்பட்டும் இறுக்கம் காரணமாகவோ, மெல்லிய ஆடையாலோ சில பகுதிகளின் கனபரிமாணங்கள் வெளியில் தெரியும் நிலையிலோ இல்லாமல் மறைத்துக் கொள்ளும் வகையில் “புர்கா” அணியவும் செய்யலாம். அல்லது தாங்கள் அணிந்திருக்கும் சேலையால், சுடிதாரால் நாம் முன்பு விளக்கியுள்ளது போல் உடைகள் அணிந்து மறைத்தும் கொள்ளலாம். இஸ்லாம் வலியுறுத்தும் “ஹிஜாப்-புர்கா” இதுவேயாகும். அடுத்து மூன்றாம் பகுதியான எந்த வகையிலெல்லாம் ஆணும், பெண்ணும் சம உரிமை பெற்றுள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
3வது பகுதி
எந்தெந்த வகையில் ஆணும், பெண்ணும் சம உரிமைகள் பெற்றுள்ளனர்.
பெண்களின் உடல் அமைப்பு காரணமாக, பலகீனம் காரணமாக அவர்கள் தங்கள் கற்பைக் காத்துக் கொள்ளும் நன்நோக்குடன் அவர்களை “பர்தா” கடைபிடிக்கச் சொல்லும் இஸ்லாமிய மார்க்கம், உரிமைகள், கடமைகள் சம்பந்தப் பட்டவற்றில் ஆணும், பெண்ணும் சரிசமம் என்றே வலியுறுத்துகிறது. மேலும் கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. ஆயினும் ஆண்களுக்கு அவர்கள் மீது ஒரு படி உயர்வுண்டு. (2:228) என்ற நெறிநூல் வாக்கு பெண் களின் உரிமைகள் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. பெண்ணின் பலகீனமான உடலமைப்பு காரணமாக அவளையும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பு ஆணையே சாருகிறது. இது காரணமாகவும், குடும்பம் என்ற நிர்வாகத்தைக் கொண்டு செல்ல இருவர் தலைமை தாங்க முடியாது. ஒரு நிர்வாகத்திற்கு ஒருவரே தலைமை தாங்க முடியும். அப்போதுதான் நிர் வாகம் சீராக அமையும் என்பதினாலும், ஆண் ஒருபடி உயர்வு பெற்றுத் தலைமை தாங்கும் உரிமையைப் பெறுகிறான். அதனால் பெண்ணை ஆட்டிப் படைக்கும் உரிமையை ஆண்கள் பெறுகின்றனர் என்று தவறாகக் கொள்ளக் கூடாது.
ஒரு பாடசாலையில் மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பலர் இருப்பர். அவர்களில் ஒருவர் மட்டுமே அப்பாடசாலையின் தலைமைப் பொறுப்பில் இருப்பார். அப்பாடசாலையின் நிர்வாகம் சீராக-செம்மையாக நடைபெற மட்டுமே அவருக்குத் தலை மைப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அந்த தலைமை ஆசிரியருக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் மற்ற சக ஆசிரியர்களுக் கும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் தலைமை ஆசிரியராக இருப்பதால், மற்ற ஆசிரியர்கள் அனைவரும் அவருக்கு அடிமைகள் என்று எந்த அறிவிலியும் சொல்ல மாட்டான். இது போன்றுதான் குடும்ப நிர்வாகப் பொறுப்பில் ஆண் தலைமை தாங்குகிறானேயல்லாமல், பெண் அவனுக்கு அடிமை என்பது பொருளல்ல. ஆணுக்கிருப்பது போல் பெண்ணுக்கும் “ஆன்மா’ உண்டு. அவளுக்கும் மறுமைப் பேறுகள் நிறைவாக உண்டு என்ற விபரங்கள் பற்றிய அல்லாஹ்வின் வாக்குகள் அதிகமாகவே உள்ளன.
ஆணாயினும், பெண்ணாயினும் யார் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார் களோ, அவர்கள் சுவர்க்கம் நுழைவார்கள்; அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (4:124) (மேலும் பார்க்க. 4:1, 7:189, 42:11, 16:72, 3:195, 16:97)
4வது பகுதி
படித்த முஸ்லிம் பெண்மணிகளுக்கு இன்று இஸ்லாத்தின் பெயரால் கடைபிடிக்கப்படும் சடங்கு சம்பிரதாயங்களில் ஏற்படும் அதிருப்தி. இது காலம் வரை முஸ்லிம் சமுதாயத்தின் காவலர்கள் என்று நம்பி வரப்பட்ட “மவ்லவி’(?) வர்க்கம், பெண்கள் படிப்பறிவு பெறக்கூடாது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றெல்லாம் கூறி முஸ்லிம் சமுதாயத்தின் சரி பாதியை அறியாமையிலும் மூட நம்பிக்கை களிலும் மூழ்கச் செய்துள்ளனர். ஆணும், பெண் ணும் கல்வி கற்றுக் கொள்வதை கடமையாக்கி இருக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் படிக்கக் கூடாது என்ற தீய திட்டத்தை திட்ட மிட்டே புரோகித மதம் நுழைத்திருக்கிது.
சமுதாயத்தின் ஆண்களையும் பெண்களையும் பெண்களே பெற்றெடுக்கிறார்கள். பெண்களே பாலூட்டி வளர்க்கிறார்கள். ஆண்களும், பெண்களும் அவர்களின் இளம் பிராயத்தில் பெண்களின் மடிகளிலேயே தவழ்ந்து வளர்கின்றனர். ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களுக்கு ஆரம்ப பாடசாலை அவர்களது தாய்மார்களோ. அவர்கள் அந்த பிஞ்சு உள்ளத்தில் ஊட்டுவதே பசுமரத்தாணி யாகப் பதிந்து அவர்களது வாலிப, வயோதிய காலத்திலும் அவை பிரதிபலிக்கின்றன. “தொட்டில் பழக்கம் இடுகாடு வரை’ என்ற கருத்தில மைந்த ஒரு பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. இதனை தெளிவாக உணர்ந்துள்ள முல்லா வர்க்கம்-புரோகித வர்க்கம் தந்திரமாக முஸ்லிம் சமுதாயப் பெண்களைப் படிப்பறி வற்றவர்களாக ஆக்கியுள்ளனர். அவர்களின் துர் போதனையை ஏற்ற முஸ்லிம் சமுதாயமும் தங்கள் பெண்ணினத்தைக் கல்வியறிவற்ற சுய சிந்தனையற்ற மக்கு மக்களாக ஆக்கி விட்டனர். அது குர்ஆனுக்கும் நபி நடைமுறைக்கும் மாற்றமாக மூட நம்பிக்கைகளையும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களையும் முன்னோர்களின் பெயரால் சமுதாயப் பெண்களின் உள்ளத்தில் பதிக்க அவர்களுக்கு தோதாக அமைந்து விட்டது.
நல்லதையும், கெட்டதையும் பகுத்துணரும், குர்ஆன், ஹதீஸோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சுயசிந்தனையில்லாத கல்வியறிவற்ற பெண்கள் இந்த முல்லாக்களின் கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்கின்றனர். அதனடிப்படையில் கத்தம், ஃபாத்திஹா, மெளலூது, கந்தூரி சடங்குகள், சமாதிச் சடங்குகள் இன்னும் இவை போன்ற நரகில் கொண்டு சேர்க்கும் “பித்அத்’களை மார்க்கமாக நம்பிச் செய்து மோசம் போகின்றனர். அது மட்டுமல்ல, தங்கள் மடியில் தவழும் ஆண், பெண் குழந்தை களின் பிஞ்சு உள்ளத்திலும் இவற்றையே மார்க்கமாக பக்தியோடு ஊட்டுகின்றனர். பிஞ்சு உள்ளத்தில் அவர்கள் அறியாமையால் நஞ்சைக் கலக்கின்றனர். அவையும் அந்த பிஞ்சு உள்ளங்களில் அப்படியே பதிந்து விடுகின்றன. இப்படிப்பட்ட மூடச் சடங்குகளில் கலந்து கொண்டு பெண்கள் தங்களது இடுப்பில், மடியில் தவழும் பிஞ்சு உள்ளங்களில் நரகில் கொண்டு சேர்க்கும் “பித்அத்’களை மார்க்கமாக பக்தியோடு ஊட்டுவதை நிதர்சனமாகப் பார்க்கலாம்.
இந்த மூடச் சடங்கு சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் சமுதாயத்தின் ஆணினதும், பெண்ணினதும் பிஞ்சு உள்ளத்திலேயே பசுமரத்தாணிபோல் ஆழப் பதிந்து விடுகிறது. பின்னர் பெண்ணினம் படிப்பறிவில்லாமலேயே அதில் மூழ்கி தான் பெற்றெடுக்கம் ஆண், பெண் குழந்தைகளை மீண்டும் அதில் மூழ்கச் செய்கிறது. இது சங்கிலித் தொடராகத் தொடர்கிறது. ஆணினம் சிறிது கல்வி கற்று சிந்திக்கும் திறன் பெற்றாலும், பிஞ்சு உள்ளத்திலேயே பதிக்கப்பட்டு விட்ட அந்த மூட நம்பிக்கைக ளிலிருந்து விடுபட முடிவதில்லை. அதனால் தான் பட்டதாரிகளாக, டாக்டர்களாக, என்ஜினியர்களாக திகழும் பலர் தங்கள் வாழ்நாள் முழுதும் சமாதிச் சடங்குகளில் மூழ்கி இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் போதனைகள் எடுத்துச் சொல்லப்பட் டாலும் அவர்கள் அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை.
அவர்கள் பச்சிளங் குழந்தைகளாக இருக் கும்போதே பக்தியாக இந்த மூடச் சடங்குகள் ஊட்டப்பட்டு விட்டதால் அவற்றை விட்டு விடுபட அவர்களால் முடியவில்லை. கல்லையும், மற்றும் படைப்புகளையும் தெய்வமாக நம்பி பூஜிக்கும் பட்டதாரிகள், டாக்டர்கள், என்ஜினியர்கள் மற்றும் உலகியல் கல்வியில் தேர்வு பெற்றுத் திறமையாக திகழும் பலர் இருக்கும்போது இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இதற்குக் காரணம் இவர்களைப் பெற்றெடுத்து வளர்த்த அவர்களது தாய்மார்கள் அவர்கள் அறியாமலேயே அவர்களின் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைக் கலந்த பரிதாபமேயாகும். புரோகித வர்க்கம் பெண் கல்வியை கடுமையாகத் தடுத்து வரும் இரகசியம் இப்போது புரிகிறதா? அதுவே அவர்களின் பெரும் மூலதனமாக இருக்கிறது.
இன்று குர்ஆன், ஹதீஸ் போதனை முஸ்லிம் சமுதாயத்தில் கடும் எதிர்ப்பையும், ஊர் விலக்குகளையும், அடிதடிகளையும் சந்திப்பதற்குக் காரணம், மூடச் சடங்கு சம்பிரதாயங்களும், கற்பனை கட்டுக்கதைகளும் சமுதாயத்தின் ஆண், பெண் உள்ளங்களில் பிஞ்சுப் பருவத்திலேயே பசுமரத்தாணியாக பதியப்பட்டுள்ளதேயாகும். இதற்கு அடிப்படைக் காரணம் பெண்ணினம் கல்வியறிவற்ற-சுய சிந்தனையற்ற ஜடமாக இருந்து வருவதேயாகும். இன்றைய சமூகச் சூழ்நிலைகளையும், பெண்ணினத்தின் சூது வாதற்ற- சுய சிந்தனையற்ற-அப்பாவித்தனமான மார்க்க முரணான செயல்பாடுகளையும் கூர்ந்து கவனிக்கும் எவரும் இந்த புரோகித வர்க்கம் இந்த சமுதாயத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் தீங்கை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
மேலும் அவர்கள் திட்டமிட்டே இந்தச் சதியைத் தீட்டியுள்ளனர் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இதில் அவர்கள் நிரபராதி என்றால்-குற்றமற்றவர்கள் என்றால் பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்ற சட்டத்தை குர்ஆனின் எந்த வசனத்திலிருந்து எடுத்தார் கள். அல்லது எந்த ஹதீஸ் ஆதாரத்தை வைத்து எடுத்தார்கள் என்பதை சமுதாயத்திற்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். அல்லது இது எங்களது போதனையில்லை. மாற்று மதத்தாரிடமிருந்து நம் சமூகத்தில் புகுந்து கொண்ட தவறான பழக்கம் என்றால், அதை எதிர்த்து அவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
ஆனால் இஸ்லாமிய மார்க்கம் ஆணையும், பெண்ணையும் எவ்வித பாகுபாடுமின்றி கல்வியைக் கற்றுக் கொள்ளவே தூண்டுகிறது. கல்வி எனும் போது அவர்கள் மார்க்கக் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும். உலகக் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்ற தவறான எண்ணம் இப்போது சிறிது சிறிதாக மாறி வருகிறது. அதற்குக் காரணம், உலகியல் மாற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சி, உலக நாடு களிடையே ஏற்பட்டு வரும் சர்வ சாதாரண தொடர்புகள் ஆகும்.
மார்க்கக் கல்வி-குர்ஆன், ஹதீஸ் போதனை உதாசீனம் செய்யப்பட்டாலும் உலகியல் கல் விக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. அப்படி உலகியல் கல்வி கற்றுப் பட்டதாரிகளாக, டாக்டர்களாக, என்ஜினியர்களாக திகழும் முஸ்லிம்கள் அவர்கள் பிஞ்சுகளாக இருக்கும் போது அவர்களது உள்ளங்களில் பதிக்கப் பட்ட மூடச் சடங்கு சம்பிரதாயங்களை மறுமை ஆதாயத்தைக் கவனத்தில் கொண்டு குருட்டு தனமாகச் செய்தாலும், இவ்வுலக வாழ்க்கை வசதிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் நம் பிக்கைகளைத் தகர்த்தெறிய முற்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் தங்கள் பெண் குழந்தைகளையும் அதிகமாகப் படிக்க வைக்கின்றனர். அவர்கள் உலக ஆதாயத்திற்காக உலகக் கல்வியை ஊட்டுகின்றனரே அல்லாமல், மார்க்கக் கல்வியை ஊட்ட வேண்டும், அதுவும் அவசியம் என்ற எண்ணம் அவர்களில் அதிகமானோருக்கு இன்னும் ஏற்படவில்லை. இதற்கு மறுமை பற்றிய ஏனோ தானோ என்ற நம்பிக்கையே அல்லாமல் வேறு காரணமில்லை. மறுமை வெற்றியை இந்த முல்லாக்கள் சொல்லும் கத்தம், ஃபாத்திஹா, கந்தூரி, சமாதிச் சடங்குகள் கொண்டு அடைந்து விடலாம் என்ற நப்பாசையில் மிதக்கிறார்கள். அவற்றின் எதார்த்த நிலையை இங்கு பார்க்க முடிவதில்லையே? அதனால் முல்லாக்கள் மீது நம்பிக்கை கொண்டு-நப்பாசை கொண்டு செயல்படுகின்றனர். ஆனால் உலகக் காரியங்களில் முல்லாக்களின் போதனைப்படி செயல்பட்டால் நஷ்டமேற்படுவதை நிதர்சனமாக கண்கூடாகக் கண்டு கொள்வதால், உலகக் காரியங்களில் முல்லாக்க ளின் போதனையை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
தங்கள் குழந்தைகளில் ஆண், பெண் பாகு பாடின்றி இரு சாராரையும் உலகக் கல்வி கற்கத் தூண்டுகின்றனர். அதற்காகப் பெரும் முயற்சிகள் எடுக்கின்றனர். செலவு செய்கின்றனர். எனவே முன்பிருந்ததைவிட இப்போது முஸ்லிம் பெண்களிலும் பட்டதாரிகள், பேராசிரியர்கள், டாக்டர்கள், என்ஜினியர்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அவர்களுக்கு உலகக் கல்வி கொடுக்கப்படுகிறதேயல்லாமல், மார்க்க கல்வி ஊட்டப் படுவதில்லை. அதன் அவசியத்தை முஸ்லிம் பெற்றோர்கள் இன்னும் உணராததே அதற்குக் காரணமாகும்.
எனவே மார்க்கக் கல்வி இல்லாமல் உலகக் கல்வி மட்டுமே பெறும் பெண்கள் ஓரளவு சுயமாக சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் நடை முறையிலிருக்கும் மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் பார்க் கிறார்களேயல்லாமல், உண்மையான மார்க்கத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். அவர்களிலும் பலர் படித்து பட்டதாரிகளானாலும், டாக்டர் என்ஜினியர் ஆனாலும், மூட நம்பிக்கைகள் அவர்களின் பிஞ்சு உள்ளத்திலேயே பதிந்து விட்டதால் சிந்தனையில்லாது அவற்றைக் கடைபிடிக்கின்றார்கள். அவர்களின் ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக சுயமாக சிந்திக்க முன் வருகின்றனர். அதிலும் குறிப்பாக, அவர்களது உலக நாகரீக வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் விஷயங்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் போதனை தெரியாததால், அவர்கள் பெற்றிருக்கும் உலகியல் கல்வியின் அடிப்படையில், முஸ்லிம் சமுதாயத்தில் நடைமுறையிலிருக்கும் மூட நம்பிக்கைகள் மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இவை போன்றவற்றை நோட்டமிடுகின்றனர். அவற்றில் பெருத்த முரண்பாடுகளைக் காண்கின்றனர். எனவே இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய பெருத்த அவநம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. அது நாத்திகத்திற்கும் இட்டுச் செல்கிறது.
எவை குர்ஆன், ஹதீஸ் போதனை? எவை புரோகிதர்கள் உண்டாக்கி வைத்துள்ள மூட நம்பிக்கைகள்? மூடச் சடங்குகள்? குர்ஆன், ஹதீஸ் போதனையின் சாராம்சம் என்ன? அவற்றின் முக்கியத்துவம் என்ன? இவை போன்ற வினாக்களுக்கு அவர்கள் பெற்றுள்ள உலகக் கல்வி விடை தருவதாக இல்லை. எனவே முற்றிலுமாக அவற்றை மறுக்கத் துணிந்து விடுகின்றனர். அவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் போதனை முறையாக, மறைக்கப்படாமல் கொடுக்கப்பட்டிருந்தால், இஸ்லாமிய மார்க்கம் மூடச் சடங்குகளைக் கொண்டோ, ஜபதபங்களைக் கொண்டோ, மந்திர உச்சாடனங்களைக் கொண்டோ, கத்தம், ஃபாத்திஹா, கந்தூரி, மெளலூது, சமாதிச் சடங்குகள் கொண்டோ மோட்சம் கிடைக்கும் என்று மூடத்தனமாக நம்பவைக்கும் ஒரு மதமல்ல, ஆணும், பெண்ணும் இவ்வுலகில் நீதியாக, நிம்மதியாக, நெறியுடன் வாழ வைக்கும் வாழ்க்கை நெறி அது; மனிதனின் இம்மையையும், மறுமையையும் செம்மைப்படுத்தும் தூய வழி; நம்மைப் படைத்த இறைவன் கொடுத்த வாழ்க்கைத் திட்டம் என்பதை அவர்கள் உணரும் வாய்ப்பு ஏற்படும். முன்னோர்களின் கற்பனைகளை விட்டு குர்ஆன், ஹதீஸ் போதனைகளை அவர்கள் நேரடியாகப் பார்க்க ஆரம்பித்து விட்டால், அவர்கள் உலகக் கல்வி மூலம் பெற்றுள்ள பகுத்தறிவுக்கு,-சுய சிந்தனைக்கு முரணான, எதையும் அவை சொல்லவில்லை-கற்பிக்க வில்லை என்பதையும் உணர்ந்து கொள்வார்கள். இறைவனின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து ஆணும், பெண்ணும் செயல்பட வழி பிறக்கும். இஸ்லாம் பெண்ணினத்திற்கு அநீதி இழைக்கிறது என்ற மேல் நாட்டாரின் குற்றச்சாட்டு பொய்த்துவிடும். அந்த மாயையில் மூழ்கி இருக்கும் படித்த முஸ்லிம் பெண்களின் அறியாமை அகலும்.
எனவே அன்பு சகோதர சகோதரிகளே புரோகிதர்களின் கற்பனைகளால் உதித்த மதம், மத்ஹபு, இயக்க மாயையிலிருந்து விலகி இறை கொடுத்த வாழ்க்கை நெறியைப் பேணிக்காக்க முன் வாருங்கள். மனித சிந்தனை கலப்பில்லாத மார்க்கத்தைக் கடைபிடிக்க முன்வாருங்கள். குர்ஆன், ஹதீஸை மட்டும் கடைபிடிக்கவும், மற்றவர்களுக்கு போதிக்கவும் முன் வாருங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக.
முகம் மறைப்பதால் இஸ்லாம் தப்பாக விளங் கப்படுகிறது!
முஸ்லிம் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் முகத்தையும் மறைக்க வேண்டும் என மூட முல்லாக்கள்(?) மார்க்கத்தின் பேரால் வலியுறுத்தி வருவதால், பல சீர்கேடுகளுக்கும், வழிகேடுகளுக்கும், ஒழுக்கச் சிதைவுக்கும் வழி வகுக்கும் இந்தக் காட்டுமிராண்டிச் சட்டத்தை எதிர்க்கும் மனநிலை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் சில, முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து புர்கா அணிந்து கொண்டு வெளியில் நடமாடக் கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளன. இதை இந்த முல்லாக்கள் கடுமையாக எதிர்த்து விமர்சிக்கின்றனர். முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக நாடுகள் தழுவிய ஆர்ப்பாட்டங்களில் சுயசிந்தனையற்ற அப்பாவிகளைத் தூண்டிவிடுகின்றனர். அதே சமயம் முகத்தைத் தவிர்த்து இதர உடல் பாகங்கள் அனைத்தையும் மறைத்து உடை அணியும் கிறித்தவ கன்னியாஸ்திரிகளின் உடையை அந்த ஆட்சியாளர்கள் தடைசெய்வதில்லையே ஏன்? என்றும் இந்த முல்லாக்கள் சிந்திப்பதில்லை. அப்படி முறையாகச் சிந்தித்தால், ஆணோ, பெண்ணோ ஆள் அடையாளம் மிகமிக அவசியம் தெரிய வேண்டும். எனவே முகத்தை மறைப்பது கண்டிப்பாகக் கூடாது என்பதை அவர்களும் உணர முடியும்.
பெண்கள் முகத்தை மறைத்த நிலை யிலேயே வெளியே வர வேண்டும் என்று மிகக் கடுமையாகச் சட்டம் விதித்திருக்கும் சவுதி அரசு, ஹஜ்ஜுக்குச் செல்லும் பெண்கள் முகத்தை மறைத்து நிழல்படம் எடுத்து விசாவுக்காக அனுப்பினால் அதை ஏற்று ஹஜ் ஜுக்கு அனுமதிப்பார்களா? நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். காதுகள் உட்பட முகம் தெரிய வேண்டும் எனச் சட்டம் போட்டிருக்கிறார்கள். ஏன் சவுதி பிரஜையே வெளிநாடு செல்ல முகம் மறைத்து நிழல் படம் எடுத்து பாஸ்போர்ட்டிற்காக அனுப்பினால் அதை ஏற்று பாஸ்போர்ட் கொடுப்பார்களா? நிச்சயம் கொடுக்க மாட்டார்கள். இதிலிருந்தே ஆள் அடையாளம் எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறதா? அப்படி என்றால் இந்த முல்லாக்கள் தங்கள் அறிவை யாரிடம் கடன் கொடுத்தார்கள்? அவர்கள் வழிகெடுக்கும் ஷைத்தான் பின்னால் செல்வது சுயசிந்தனையாளர்களுக்கு விளங்காமல் போகுமா?
வீடுகளில் திரைக்கப்பால் இருந்தே பிற ஆண்களிடம் பேச வேண்டும் என்ற மார்க்க விதியையும், பார்வையற்ற ஒரு நபி தோழர் நபி(ஸல்) அவர்களைக் காண வந்த இடத்தில் ஆயிஸா(ரழி) அவர்களை வீட்டினுள்ளே செல்ல நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்ட தையும், மற்றும் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள், நபிதோழர், தோழியர் போன்றோரின் கருத்துக்களான அஃதர்கள் இவற்றை ஆதாரமாகக் காட்டி முகத்தை மறைப்பதை நியாயப் படுத்துகின்றனர் முல்லாக்கள்(?). விவஸ்தை கெட்டவர்கள். எதற்கு என்ன சட்டம் என்பதை புரிய முடியாதவர்கள். வீட்டிலிருப்பவர் யார்? யாருடைய மனைவி என்பது திட்டமாகத் தெரிந்த நிலையில் தேவையில்லாமல் ஒரு அந்நிய ஆண் முன் வரத்தேவை என்ன? வெளியே வரும்போது இன்னார் எனக் கண்டிப்பாகத் தெரிய வேண்டிய நிலையில் முகத்தை குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக மறைப்பதற்கு இவற்றை ஆதாரமாகத் தருகிறார்களே இந்த முல்லாக்கள்(?); இவர்களை அறிஞர்களாக ஏற்பதா? அறிவீனர்களின் பட்டியலில் சேர்ப்பதா?
இறைதாசனாக மாறிய பெரியார் தாசன்!
கடந்த பத்து ஆண்டுகளாக அல்குர்ஆனைப் படித்து நேர்வழியை அறிந்து இஸ்லாத்தை முறைப்படி விளங்கித் தழுவி அப்துல்லாஹ்வாக மாறிய பெரியார்தாசன் பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்கச் சட்டமல்ல என்று கூறியதை மறுத்து, ஜமாஅத்துல் உலமா ஏப்ரல் மாத இதழ் பக்கம் 47ல் “பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாமைப் பொருத்தவரை அவர் ஒரு குழந்தை நிலையில் இருக்கிறார்” என்று விமர்சித்துள்ளனர். உண்மையில் அல்குர்ஆனை நேரடியாகப் படித்து இஸ்லாத்தை விளங்கி இறைதாசனாக மாறி அப்துல்லாஹ் என்று அழகிய பெயரையுடைய பேராசிரியர் இந்த மவ்லவிகளைவிட மார்க்கத்தை அறிந்த ஆலிம் என்பதை அவருடன் சில மணி நேரம் உரையாடி யதிலிருந்தே அறிந்து கொண்டோம்.
குர்ஆன், ஹதீஸைப் புறக்கணித்து மனிதக் கற்பனைகள் நிறைந்த ஃபிக்ஹு நூல்களைப் பல்லாண்டுகளாகப் படித்துப் போலி இஸ்லாமிய பட்டம் பெற்றுள்ள இந்த முல்லாக்கள்(?) தான் இஸ்லாமைப் பொறுத்தவரை குழந்தை நிலையில் இருக்கிறார்கள். அதனால் தான் குறைகுடமாக அரபி ஆணவம் பேசுகிறார்கள். அபூ ஜஹீலின் வாரிசுகளாகிறார்கள்.
24:31 இறைக் கட்டளைப்படி ஆள் அடையாளமான வெளியில் தெரிய வேண்டிய முக த்தை மூடுவதன் மூலம், இந்த இறைவாக்கை நிராகரித்து குஃப்ரிலாகும் பெருங்குற்றத்தைச் செய்யத் தூண்டும் இந்த மவ்லவிகள்(?) எந்த அளவு அறியாமையிலும், மவ்ட்டீகத்திலும் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த அந்நஜாத் 1993 ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் இதழ்களில் தொடராக வந்த “”ஹிஜாப் -பர்தா” கட்டுரையை முழுமையாக இந்த இத ழில் மீண்டும் இடம்பெறச் செய்துள்ளோம்.
ஆயினும் மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள, தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஹஜ்ரத்துகள், மார்க்க விற்பன்னர்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என ஆணவம் பேசும் புரோகிதர்கள் ஒருபோதும் சத்தியத்தை ஏற்கப்போவதில்லை. இதை நாம் கூறவில்லை. முக்காலமும் அறிந்த சர்வ வல்லமை மிக்க அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறான். (பார்க்க 2:42, 146, 6:20, 9:9,10,34, 31:6) யார் மவ்லவி, ஆலிம், அல்லாமா, ஷேக் எனப் பீற்றிக் கொண்டு மார்க் கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள புரோகிதக் கூட்டத்தினரை முற்றிலும் புறக் கணித்து, சுயசிந்தனையுடன் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பார்த்து சிந்தித்து விளங்குகிறார்களோ அவர்கள் மட்டுமே அல்லாஹ் 6:153ல் கூறியுள்ளபடி, புரோகிதர்கள் காட்டும் கோணல் வழிகளிலிருந்து முற்றிலும் விலகி நேர் வழியில் நடக்க முடியும். 25:30ல் நபி(ஸல்) நாளை மறுமையில் முறையிடுவது போல் அல்குர் ஆனைப் புறக்கணித்துவிட்டு இப்புரோகிதர்கள் பின்னால் செல்பவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கருகிக் கொண்டு இப்புரோகிதர்களைச் சபிப்பார்கள். இறைவனிடம் அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுக்கும்படியும் மகத்தான சாபத்தைக் கொண்டு சபிக்கும்படி வேண்டுவார்கள் என்பதை 33:66, 67,68 இறைவாக்குகள் எச்சரிக்கின்றன. ஆதத்தின் சந்ததிகளே, இறைவன் கொடுத்த இஸ்லாமிய மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள புரோகிதர் களின் வசீகர, மாய, உடம்புப் பிடியிலிருந்து விடுபட முன் வாருங்கள். இல்லையேல் நிரந்தர நரகமே! எச்சரிக்கை!!.